டி20 உலகக் கோப்பை -சூப்பர் 8 ஆட்டங்கள் – 24 ஜூன் 2024
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
சூப்பர் 8 இல் புள்ளிகள் அட்டவணை
குரூப் 1 | புள்ளி | குரூப் 2 | புள்ளி | |
A | இந்தியா | 6 | தென் ஆப்பிரிக்கா | 6 |
B | ஆஃப்கானிஸ்தான் | 4 | இங்கிலாந்து | 4 |
C | ஆஸ்திரேலியா | 2 | மேற்கு இந்தியத் தீவுகள் | 2 |
D | வங்கதேசம் | 0 | அமெரிக்கா | 0 |
சூப்பர் 8இல் முதல் அப்செட்
22.06.2024 அன்று கிங்க்ஸ்டனில் நடைபெற்ற ஆஃப்கானிஸ்தான் (148/6) ஆஸ்திரேலியா (19.2 ஓவரில் 127) அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வென்று, சூப்பர் 8இல் முதல் அப்செட்டை பதிவு செய்தது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதன்படி முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரஹ்மானுல்லா குர்பாஸ் 60 ரன்களும், இப்ராஹிம் ஜத்ரன் 51 ரன்களும் எடுத்தனர். பவுலிங்கைப் பொறுத்த வரையில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஆடம் ஜம்பா 2 விக்கெட்டும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். டிராவிஸ் ஹெட் 0 ரன்னிலும், டேவிட் வார்னர் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த கேப்டன் மிட்செல் மார்ஷ் 12 ரன்களில் வெளியேறினார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் 11, டிம் டேவிட் 2, மேத்யூ வேட் 5, பேட் கம்மின்ஸ் 3, அஷ்டன் அகர் 2, ஆடம் ஜம்பா 9 என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கிளென் மேக்ஸ்வெல் மட்டும் அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியாக ஆஸ்திரேலியா 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் தனது அரையிறுதி வாய்ப்பை அனேகமாக கேள்விக் குறி ஆக்கிக் கொண்டது ஆஸ்திரேலியா.
அமெரிக்கா vs இங்கிலாந்து
23.06.2024 அன்று அமெரிக்கா (18.5 ஓவரில் 115) இங்கிலாந்து (9.4 ஓவரில் 117/0) அணிகளுக்கு இடையேயான ஆட்டம் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்றது. அமெரிக்க அணியை இங்கிலாந்து அணி மிக எளிதாக 10 விக்கட் வித்தியாசத்தில் வெற்றிகண்டது.
அதேநாள் மேற்கு இந்தியத் தீவுகள் (135/8) தென் ஆப்பிரிக்கா 16.1 ஓவரில் 124/7) டக்வெர்த் லூயிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்கா 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் ஆடிய மேற்கு இந்தியத்தீவுகள் அணி 20 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடும்போது மழை குறுக்கிட்டது. இதனால் வெற்றி இலக்கு 123ஆகக் குறைக்கப்பட்டது. அச்சமயத்தில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டு விக்கட் இழப்பிற்கு 15 ரன் எடுத்திருந்தது. எனவே மீதமுள்ள 90 பந்துகளில் 108 ரன் எடுக்கவேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஈரமான பந்து, ஈரமான மைதானம் ஆகியவற்றோடு மிகவும் போராடி மேற்கு இந்தியத்தீவுகள் அணி தோல்வியைச் சந்தித்தது.
இந்தியா vs ஆஸ்திரேலியா
24.06.2024 கிரோஸ் ஐலட்டில் நடைபெற்ற இந்தியா (205/5) ஆஸ்திரேலியா (181/7) அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் இந்தியா 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெறுவது இரண்டு அணிகளுக்குமே முக்கியமானதாக இருந்தநிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை முதலில் மட்டையாடச் சொன்னது. விராட் கோலி இந்த முறையும் மிக மோசமாக அவுட் ஆணார். ஆனால் ரோஹித் ஷர்மா இன்று ஆடிய ஆட்டத்தைக் காண கண் கோடி வேண்டும். அவர் சந்தித்த 41 பந்துகளில் 11 பந்துகள் டாட் பால்கள்; மீதமுள்ள 30 பந்துகளில் 7 ஃபோர், 8 சிக்சர் (மொத்தம் 66 ரன்கள்) மீதமுள்ள 26 ரன்கள் ஒன்றாகவும் இரண்டாகவும் ஓடிச் சேர்த்தவை.
ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில், மிட்சல் ஸ்டார்க்கின் இரண்டாவது ஓவரில் 4 சிக்சர், ஒரு ஃபோர் அடித்து மொத்தம் 29 ரன்கள் அந்த ஓவரில் எடுத்தார். 19 பந்துகளில் 50 ரன். 11.2ஆவது ஓவரில் ஸ்டார்க் பந்தில் கிளீன் போல்ட் ஆனார்.
இன்று ரிஷப் பந்த் (15 ரன்) சரியாக விளையாடவில்லை. சூர்யகுமார் யாதவ் (31 ரன்), ஷிவம் துபே (28 ரன்), ஹார்திக் பாண்ட்யா (27 ரன்), ஜதேஜா (9 ரன்) ஆகியோரின் பங்களிப்பில் இந்திய அணி 5 விக்கட் இழப்பிற்கு 205 ரன் எடுத்தது.
இரண்டாவதால ஆஸ்திரேலிய அணி ஆடியபோது தொடக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் (76 ரன்) சிறப்பாக ஆடினார். ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள், குறிப்பாக குல்தீப் யாதவ் (4 ஓவர், 24 ரன், 2 விக்கட்) மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா (4 ஓவர், 29 ரன், 1 விக்கட்), அர்ஷ்தீப் சிங் (4 ஓவர், 37 ரன், 3 விக்கட்) ஆகியோர் முக்கியமான சமயங்களில் விக்கட் எடுத்து ரன் கொடுப்பதையும் கட்டுப்படுத்தினர். அதனால் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது.
ஆப்கானிஸ்தான் Vs வங்கதேசம்
இந்தப் பிரிவில் கடைசி ஆட்டமாக ஆஃப்கானிஸ்தான் வங்கதேச அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது இந்தப் போட்டி. இந்த ஆட்டத்தின் வெற்றி தோல்வியைப் பொறுத்து அரையிறுதிக்குள் நுழையப் போகும் மற்றொரு அணி ஆஸ்திரேலியாவா அல்லது ஆஃப்கானிஸ்தானா என முடிவாகும் என்ற சூழ்நிலை இருந்தது. காரணம், இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றால், ஆஸ்திரேலியா அரை இறுதிப் போட்டியில் இருந்து வெளியேற நேரிடும்.
பரபரப்பாக நடைபெற்ற வங்கதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டியில், முதலில் பேட் செய்த ஆப்கன் அணி 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்தது. 20 ஓவர் முழுதும் விளையாடி, அந்த அணியால் 115 ரன்களே எடுக்க முடிந்தது. குர்பாஸ் 55 பந்துகளை சந்தித்து 43 ரன் எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஷீத் கான் 10 பந்துகளில் 19 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வங்கதேச தரப்பில் ரிஷாத் ஹுசைன் 4ஓவர்கள் வீசி 26 ரன் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார்.
பின்னர் விளையாடிய வங்கதேச அணி,இடையிடையே மழை குறுகிட்டதால், விதிமுறைகளை உணர்ந்து தொடக்கம் முதலே அதிவிரைவாக ரன்களைக் குவித்திருக்க வேண்டும். ஆனால் அது கோட்டை விட்டது. இதனால் முதலில் 19 ஓவர்களில் 114 ரன் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும் அந்த அணி 17.5 ஓவர்களில் 105 ரன்களே எடுக்க முடிந்தது. வங்கதேச தரப்பில் லிதன் தான் 49 பந்துகள் விளையாடி 54 ரன் எடுத்தார். ஆப்கன் தரப்பில் ரஷீத் கான், நவீன் உல் ஹக் ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினர். இதை அடுத்து வங்க தேச டக்வொர்த் லூயிஸ் முறையில் 8 ரன்களில் ஆப்கன் அணியுடனான போட்டியில் தோல்வியைச் சந்தித்தது.
இந்தியாவுடான போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா விளையாடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றி இரண்டு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்துக்கு வந்தது. இதனால் அந்த அணி அரையிறுதிப் போட்டிக்குச் செல்ல முடியாமல் வெளியேறியது. வங்கதேசத்துடனான போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான், அது விளையாடிய 3 போட்டிகளில் ஒரு தோல்வி, இரண்டு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்துக்கு முன்னேறியது.
இதை அடுத்து, முதல் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதுகிறது.
இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் 27.06.2024 அன்று இந்திய அணி இங்கிலாந்து அணியை கயானாவில் ப்ராவிடன்ஸ் மைதானத்தில் சந்திக்கிறது.