இலங்கையில் பெய்து வரும் பருவகால மழைக்கு 10 பேர் பலியாகியுள்ளனர் என்றும், 27 ஆயிரத்து 621 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழை காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை 6,090-லிருந்து 27 ஆயிரத்து 621-ஆக உயர்ந்துள்ளது. மேலும் அரசின் 194 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழை இன்றும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கனமழை காரணமாக தெற்கு மற்றும் மேற்கு பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கையில் பெய்த மழை மற்றும் மோரா புயலில் சிக்கி 212 பேர் இறந்ததும், 79 பேர் காணமால் போனதும் குறிப்பிடத்தக்கது.



