
- ஆர் கே.
தினசரி மாலை நேர கங்கா ஆரத்தி எனும் இந்த உன்னதமான மரபு கங்கை பிரவாகமாக ஓடும் பாரதத்தின் பிற மாநிலங்களில் பரவியுள்ளது தெரிந்த விஷயம். உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் & உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய மாநிலங்களில் உருவான, பல புரோகிதர்கள் இணைந்து நடத்தும் நவீன மற்றும் ஒருங்கிணைந்த இந்த ஆரத்தி முறை சர்வதேச அளவில் ஏற்கனவே பெரும் புகழ் பெறத்தொடங்கி விட்டது.
பக்தி சாம்ராஜ்யத்தை விரிவாக்கும் சீரிய இந்த சீரிய நோக்கத்தை அறிந்த பிற மாநிலங்களும் ஆங்காங்கே பாயும் பிரபல நதிக்கரைகளில் இதே ஆரத்தி ப் பாணியை கடந்த சில வருடங்களாகப் பின்பற்றி வருகிறார்கள். இது ஆன்மீக பக்தியை வளர்ப்பதற்கும், நதிகளைப் பாதுகாப்பதற்கும், கலாச்சாரச் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கும் ஒரு கருவியாகச் செயல்படுகிறது.
கங்கை நதிக்கரையோரம் பிற மாநிலங்களில் நடைபெறும் கங்கா ஆரத்திகள்:
பீஹார் மாநில அரசு மற்றும் உள்ளூர் குழுக்கள் இணைந்து, பாட்னாவில் உள்ள காந்தி காட் மற்றும் என்.ஐ.டி (NIT) காட் ஆகிய இடங்களில் வாரணாசி பாணியிலான மாலை நேர கங்கா ஆரத்திகளை நடத்துகின்றன. தவிர, பகல்பூர், பக்சர் மற்றும் சுல்தான் கஞ்ச் ஆகிய இடங்களில் உள்ள காட்களிலும் இத்தகைய ஆரத்திகள் நடைபெறுகின்றன. வாரணாசி மற்றும் ஹரித்வார் மரபுகளின்படி இந்த புனிதமான சடங்குகளை மரபு மாறாமல் சரியாகச் செய்வதற்காக, பாட்னாவில் உள்ள பூசாரிகளுக்குச் சிறப்புப் பயிற்சிகள் எல்லாம் வழங்கியுள்ளனர்.
கங்கையின் கிளையாறான ஹூக்ளி நதிக்கரையில், கொல்கத்தா மற்றும் ஹவுராவில் தினசரி மாலை நேர கங்கா ஆரத்திகள் நடைபெறுகின்றன. குறிப்பாக பாபு காட் (பாஜே கதம்தலா காட்) மற்றும் ராமகிருஷ்ணாபூர் காட் ஆகிய இடங்களில் இந்த ஆரத்தி வெகு சிறப்பாக நடைபெறுகின்றன.
இந்தியா முழுவதும் நதி ஆரத்திகள்:
பல அடுக்கு வடிவமைப்பு கொண்ட பித்தளை விளக்குகள், சிங்கின் நாத முழக்கம் மற்றும் ஒருங்கிணைந்த புனித வேத மந்திரங்களுடன் கூடிய இந்த கூட்டு வழிபாட்டு முறை, பாரதத்தின் பிற மாநிலங்களிலும் நதிகள் மட்டுமின்றி கடல்களை வழிபடும் கலாச்சாரத்திற்கும் ஊக்கமளித்துள்ளது. நாம் தினசரி குளிக்கும் சமயத்தில் கூட “கங்கே ச யமுனை சைவ கோதாவரி சரஸ்வதி, நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு ..” என்று நம்மூர்களில் ஓடும் தண்ணீரைக் கூட கங்கையாக பாவித்து தலையில் ப்ரோக்ஷிக்கத்துக்கொண்டு நம்மை சுத்தப் படுத்திக்கொண்டு அன்றன்றைய பணிகளை தொடங்க ஊக்குவிக்கும் புனித கலாசாரம் நமது… நமதே.! இந்தக் கலாச்சாரம் சனாதனத்திறகே உரிய பிரத்யேக வடிவம் கொண்டிலங்குகிறது.
இத்தகைய கங்கா ஆரத்தி கலாச்சார சடங்கு காசி அல்லது ஹரித்வாருக்குச் செல்ல முடியாத பக்தர்களும், தங்கள் உள்ளூர் நதிக்கரைகளிலேயே ஒன்றிணைந்து மாலை நேர பிரார்த்தனைகளிலும் பக்தி இசையிலும் ஈடுபட வழிவகை செய்கிறது.
இவற்றில் கலந்து கொண்டு இறை வழிபாடு செய்ய வேண்டும் என்கிற திட சித்தம் நாம் செய்யும் பாபங்களைக் குறைக்க வழி செய்கிறது. ஆரத்தியில் தோன்றும் தீப ஒளி போல நமது சிந்தனை பிறர் நலம் பேணுதலில் விரிவடைந்து பிரகாசிக்கிறது.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு:
நதிகளை உயிருள்ள தெய்வங்களாகக் கருதும் இந்த வழிபாட்டு முறையைப் பயன்படுத்தி, நதிகளைத் தூய்மையாகவும் மாசுபடாமலும் வைத்திருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மதத் தலைவர்களும் உள்ளூர் அமைப்புகளும் மக்களிடையே ஏற்படுத்துகின்றனர்.
#ஆன்மீகச் சுற்றுலா: பீகார் மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களின் சுற்றுலாத் துறைகள், நதிக்கரைகளை மேம்படுத்தி, அங்கு வழக்கமான ஆரத்திகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், அந்த இடங்களுக்குப் புத்துயிர் அளித்து சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன.
இவ்வளவு ஏன்? நமது தேசத்தில் மிக உயர்ந்த புருஷனாக மதித்து வணங்கப்படும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அவதரித்த அயோத்தியில் சமீபத்தில் தீபாவளி அன்று ஊர் முழுவதும் லக்ஷக்கணக்கில் தீபங்கள் ஏற்றி உலகே வியக்கும் வண்ணம் நம்மூர் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடிய நிகழ்வுகளை நாம் பார்த்தோம்.
அதிசயங்கள் நிறைந்த இடங்கள் என்று இதுகாறும் சுற்றிக்களித்த/களைத்த உள்ளங்கள் பலவும் கங்கா ஆரத்தி / சமுத்திர நீர் ஆரத்தி என்று நீர்வழி தடங்கலுக்கு தங்கள் சுற்றுலா எண்ணங்களை திருப்பி விட்டிருப்பது ஆன்மிகம் தழைத்தோங்க நல்ல அறிகுறியே. சரித்திரம் திரும்புகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. குப்தர்களின் பொற்கால அடிச்சுவட்டில் நாம் பயணித்து வருகிறோம் என்கிற நல்ல எண்ணம் ஒவ்வொரு பாரதீயர்களின் உள்ளங்களிலும் இந்த தீபத்திருநாளிலிருந்து ஒளி விட வாழ்த்துக்கள்.
புதுச்சேரி திருக்கஞ்சியில் உள்ள சங்கராபரணி நதியின் (வராக நதி) தென்கரையில் அமைந்துள்ள கங்கவராக நாதீஸ்வரர் கோயில் வில்லியனூர் அருகே உள்ள திருக்காஞ்சி கிராமத்தில் உள்ள பழமையான சிவன் கோயிலாகும். இந்த வராக நதி கங்கையின் புனிதத்தன்மையைக் கொண்டதாக இந்து பாரம்பரியத்தில் நம்பப்படுகிறது.
இந்த நதி இங்கே வடக்கு நோக்கிப் பாய்வதால் உத்தர வாஹினி என்று அழைக்கப்படுகிறது. இந்த நதிக்கரையில், சனிக்கிழமை தோறும் மாலை 6:00 மணிக்கு அழகிய தீபாராதனை செய்யப்படுகிறது. உள்ளூர் மரபுகளின்படி, அகஸ்தியர் இந்த புனிதஸ்தலத்தில் சிவபெருமான் சிலையை நிறுவி, சிவனை வழிபட்டதாக ஐதீகம். இதனால் இக்கோயில் அகஸ்தீஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. தவிர, இக்கோயில் ஒன்பது சித்தர்களின் ஜீவ சமாதிகளுடன் தொடர்புடையது, இது பக்தர்களுக்கு ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அமைகிறது.
தேனீ வேதபுரீ ஆசிரமத்தில்
அதே போல, மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் தேனியிலிருந்து பத்து தூரத்தில் ஸ்ரீ சித்பவானந்த ஆசிரமம் உள்ளது. ஆசிரமத்தை ஒட்டி முல்லையாறு பிரவாகமாக ஓடுகிறது. மேட்டிலுருந்து பள்ளத்திற்கு வழிந்து வரும் அழகே தனி. ஆசிரமத்தின் பின் பகுதியிலிருந்து இந்த அழகான காட்சியைப் பார்த்ததுக்கு மகிழலாம். புவியியல் மற்றும் உள்ளூர் பெயர் அது. ஊருக்கு அருகில் நதி பாயும் பகுதிகளை வீரபாண்டி ஆறு,சுரபி சரஸ்வதி என்றெல்லாம் உள்ளூர்வாசிகள் குறிப்பிடுகின்றனர்
இந்நதிக்கரையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 5:30 மணிக்கு கங்கா ஆரத்தி மற்றும் பூஜை நடைபெறுகிறது. பூஜ்யஸ்ரீ சுவாமி ஓங்காரநந்த மகாசுவாமிகளால் நிறுவப்பட்ட இந்த ஆசிரமம் மேற்கொண்டிருக்கும் கங்கா ஆரத்தி வழிபாடு முறை . காசி மற்றும் ரிஷிகேஷ் ஆகிய புண்ணிய தலங்களில் கங்கை நதிக்குச் செய்யப்படுவதைப் போலவே, மிகுந்த பக்தியுடன் தீப ஆரத்தி காட்டப்படுகிறது. சங்கு முழங்க, சாம்பிராணி தூபம் மற்றும் அடுக்கு தீபங்களைக் கொண்டு வேத மந்திரங்கள் மற்றும் பஜனைப் பாடல்களுடன் இந்த வழிபாடு நடைபெறுகிறது.
நதிகளைத் தெய்வமாகப் போற்றி நன்றி செலுத்தும் விதமாகவும், மன அமைதி மற்றும் இறையருள் வேண்டியும் பக்தர்கள் இதில் திரளாகப் பங்கேற்கின்றனர். ஆசிரமத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் இந்த மாலை நேர வழிபாட்டில கலந்து கொண்டு இலவசமாக இந்த ஆரத்தி தரிசனம் செய்யலாம். இந்த ஆசிரமத்தின் மற்றோரு சிறப்பு: ஸ்ரீ குருமூர்த்தியான ஸ்ரீ ப்ரக்யா தக்ஷிணாமூர்த்திக்கான தினசரி வழிபாடு கொண்டிருக்கும் ஆன்மிக அம்சங்கள்.
கார்த்திகை தீபக் திருநாளோ அல்லது கங்கா ஆரத்தி நிகழ்வுகளோ இவை இரண்டுமே பல ஒற்றுமை புள்ளிகளைக் கொண்டு நமது கலாச்சார பாரம்பரியத்தை இணைக்கும் பாலமாக அமைந்து ஆன்மிக அலைகளால் நமது மனங்களை ஆனந்தப்படுத்துகின்றன என்பதை
அக்னி வழிபாடு: இரண்டிலுமே நெருப்பு (அக்னி) இறைவனின் வடிவமாகப் போற்றப்படுகிறது.
நேரம்: இரண்டு வழிபாடுகளுமே மாலை வேளையில் (சந்தி வேளை – சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு) மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.
ஆன்மீகத் தத்துவம்: அறியாமை எனும் இருளை நீக்கி, ஞானம் எனும் ஒளியை வாழ்வில் ஏற்படுத்துவதே இரண்டு வழிபாடுகளின் அடிப்படை நோக்கமாகும்.
பஞ்சபூதத் தொடர்பு: கார்த்திகை தீபம் ‘நெருப்பு’ தத்துவத்தையும் (திருவண்ணாமலை அக்னி ஸ்தலம்), கங்கை ஆரத்தி ‘நீர் மற்றும் நெருப்பு’ ஆகிய இரு தத்துவங்களின் சங்கமத்தையும் குறிக்கின்றன.


