
இந்தியா ஆஸ்திரேலியா இரண்டாவது டெஸ்ட், டில்லி, இரண்டாம் நாள், 18.02.2023
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸ் 263 (கவாஜா 82, ஹேண்ட்ஸ்கோம்ப் 72*, ஷமி 4-60, அஷ்வின் 3-57, ஜடேஜா 3-68). இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 261 ரன் (அக்சர் படேல் 74, கோலி 44, அஷ்வின் 37, ரோஹித் 32). ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்க்ஸில் ஒரு விக்கட் இழப்பிற்கு 61 ரன் (ஹெட் 39*, ஜதேஜா 1/23).
இன்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 62 ரன்கள் பின்தங்கியுள்ளது. சிக்கலான டெல்லி ஆடுகளத்தில் அக்சர் படேல் தலைமையிலான இந்தியாவின் வலிமையான கீழ் வரிசை மட்டையாளர்கள் மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஆஸ்திரேலிய அணியின் நாதன் லியான் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு இந்திய அணி மிகவும் பின்தங்கியிருந்தது. இருப்பினும் அஷ்வின், அக்சர் படேல் ஆட்டத்தால் பற்றாக்குறையை ஒரு ரன்னாகக் குறைத்தது. முதல் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 9 ஓவர்களில் விக்கட் இழப்பின்றி 21 ரன் எடுத்திருந்தது.
இரண்டு தொடக்கவீரர்களும் இன்று 10 ஓவர்கள் வரை ஆடினர். ராகுல் 18ஆவது ஓவரில் 17 ரன்னுக்கு ஆட்டமிழக்க, ரோஹித் ஷர்மா 20ஆவது ஓவரில் 32 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 100ஆவது டெஸ்ட் போட்டியை விளையாடும் புஜாரா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, கோலியும் ரவீந்தர் ஜதேஜாவும் இணைந்து அணியின் ஸ்கோரை மெதுவாக உயர்த்தினர்.
47ஆவது ஓவர் முதல் 51ஆவது ஓவருக்குள் கோலி (44 ரன்), ஜதேஜா (26 ரன்), பரத் (6 ரன்) மூவரும் ஆட்டமிழக்க இந்திய அணி 139 ரன்களுக்கு ஏழு விக்கட்டுகளை இழந்திருந்தது. அப்போது அஷ்வினும் அக்சர் படேலும் இணைந்து ஏறத்தாழ் 30 ஓவர்கள் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இன்னிங்க்ஸ் முடிவில் இந்திய அணி 261 ரன் எடுத்தது. அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்க்ஸில் 12 ஓவர் விளையாடியது. உஸ்மான் க்வாஜா 6 ரன்னுக்கு ஜதேஜா பந்தில் ஆட்டமிழந்தார். இருப்பினும் ட்ராவிஸ் ஹெட்டின் சுறுசுறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 61 ரன்கள் எடுத்துள்ளது.
இதுவரை இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. நாளை எவ்வளவு சீக்கிரம் ஆஸ்திரேலிய அணியை நமது பந்துவீச்சாளர்கள் ஆல் அவுட் செய்கிறார்களோ அதைப் பொறுத்து வெற்றி தோல்வி அமையும்.