யூனியன் பிரதேசமான ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார்.
அப்போது, ”10வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 2014ல், நான் ஐ.நா., சபையில் சர்வதேச யோகா தினத்தை முன்மொழிந்தேன். இந்தியாவின் இந்த முன்மொழிவை 177 நாடுகள் ஆதரித்தன; இதுவே சாதனையாக இருந்தது” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியபோது, யோகா மூலம் நாம் பெறும் ஆற்றலை இங்கே உணர முடியும். யோகா தினத்தில் நாட்டு மக்களுக்கும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் யோகா செய்து வரும் மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சர்வதேச யோகா தினம் 10 வருட வரலாற்று பயணத்தை நிறைவு செய்துள்ளது. 2014ல், நான் ஐ.நா., சபையில் சர்வதேச யோகா தினத்தை முன்மொழிந்தேன். இந்தியாவின் இந்த முன்மொழிவை 177 நாடுகள் ஆதரித்தன; இதுவே சாதனையாக இருந்தது.
அதன்பிறகு, யோகா தினம் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. இந்த ஆண்டு இந்தியாவில், பிரான்சை சேர்ந்த 101 வயது பெண் யோகா ஆசிரியைக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அவர் இந்தியாவுக்கு வரவில்லை, ஆனால் யோகா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார்.
இன்று, உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் யோகா பற்றிய ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன; ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன.. என்றார் அவர்.
ஸ்ரீநகரில் யோகா பயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோடி, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். அதைத் தன் சமூகத் தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.