
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும் போதெல்லாம் ட்விட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டு, அது உலக அளவில் டிரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது.
அண்மைக் காலமாக, டிவிட்டரில் இது போன்ற தீவிர பிரசாரங்கள் பிரதமர் மோடிக்கு எதிராக நடத்தப் பட்டு வருகின்றது. இது ஏதோ தேர்தலுக்காக நடத்தப் படும் பிரசாரம் என்றும், தமிழர்கள் மத்தியில் பிரதமர் மோடியின் பெயரை களங்கப் படுத்தவும், வெறுப்பு உணர்வைத் தூண்டவும் திமுக., சார்பு ஊடகங்கள், ஐ.டி. பிரிவினர் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளும் பிரசார உத்தி என்றும்தான் கூறப் பட்டு வந்தது.
ஆனால் தேர்தல் முடிந்த பின்னரும் கூட, தற்போதும் சீன அதிபரை சந்திக்க பிரதமர் மோடி தமிழகம் வந்த நிலையில், #GoBackModi ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டது. இது மீண்டும் டிரெண்டிங் ஆக்கப்பட்ட நிலையில், இந்த முறை உளவுத் துறை விழித்துக் கொண்டது. இதன் பின்னணி என்ன, இந்திய இறையாண்மைக்கு எதிரான இத்தகைய செயல்பாடுகளை மேற்கொள்வது யார் என்றெல்லாம் தீவிர விசாரணையைத் தொடங்கியது.
அதில், பாகிஸ்தானில் இருந்துதான் முக்கால்வாசி டிவிட்டர் பதிவுகள் உருவானதும், அவர்களின் தொடர்பு உள்ள சிலர் இதனை பயங்கரவாத குழுக்களுடன் இணைந்து உருவாக்கி, ஒவ்வொரு முறையும் டிரெண்டிங் ஆக்கி வருவதும் தெரிய வந்துள்ளது.
ஏற்கெனவே, கடந்த வருடம் வடநாட்டில் இருந்து கேரளம் வழியாக தமிழகத்தின் நெல்லை மாவட்டம் செங்கோட்டை எல்லையில் ராமராஜ்ய ரத யாத்திரை வந்த போது, சட்டமன்றத்தில் குதியோ குதி என்று குதித்து தன்னை யார் என்று அடையாளம் காட்டினார் சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி! அவரது ஆவேசமான ஆட்டத்தைக் கண்டு செய்வதறியாமல் பொம்மையைப் போல் நின்று கொண்டிருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். அப்போதே, திமுக., ஏதோ சில முரண்டபாடான இயக்கங்களின் கைப்பாவை ஆகிவிட்டதை வெளிப்படையாக செய்தி சேனல்களில் பார்த்து தமிழகத்தில் பலரும் அதிர்ந்து தான் போனார்கள். அப்போது அவரது ஆடியோ பதிவு ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில்,
“சோஷியல் மீடியாவில் இது சமுதாயத்தின் குரல், முஸ்லிம்களின் உணர்வு என்று எந்த வார்த்தையும் போடாம பாத்துக்கச் சொல்லுங்க.
எப்பிடி நீங்க கொண்டு போணும்னா…
சட்டசபையில் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய தமீமுன் அன்சாரி எமெல்யே…
சமூக நீதிக்காக ஆவேசக் குரல் எழுப்பிய தமிமுன் அன்சாரி எமெல்யே…
இப்படித்தான் வாசகங்கள் இருக்கணும்..
சமுதாயம் முஸ்லிம்னு வார்த்தை எங்கையும் வந்துடக் கூடாது… நம்ம ஊடகப் பிரிவுல சொல்லி வைங்க… அப்டியே யாராவது போட்டாலும் தனியா போய் கரெக்ட் பண்ணி போடச் சொல்லுங்க…” என்றார்.
இந்த ஒலிப்பதிவு, தமிழகத்தில் தமிழன் என்ற போர்வையில் பின்னணியில் இயங்கும் இயக்கங்கள், சக்திகள் குறித்து வெளிப்படையாக ஒரு செய்தியைச் சொன்னது.
இந்த நிலையில், தமிழ், தமிழன் என்ற போர்வையில், ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்ற அண்மைக் கால போராட்டங்கள், அதற்கு ஆதரவு கொடுத்து தூண்டிவிட்ட திமுக., இந்தப் போராட்டங்களை சமூகத் தளங்களில் எடுத்துச் சென்றவர்கள் என ஒரு பெரிய பட்டியலே அப்போது உளவுத் துறை வசம் தயாராக இருந்தது.
இந்த நிலையில், மீண்டும் தமிழ் மற்றும் தமிழகம் மீது அதீத பாசம் கொண்டிருப்பது போன்ற கருத்துக்களை பதியவிட்டு, அதில் பாகிஸ்தானின் குரலை ஒலிக்கும் வகையில் பிரிவினை வாதம் பேசும் கருத்துகளை சிலர் பரப்பி வந்தனர். இவற்றில் முக்கிய இடம் பிடித்தது, #GoBackModi என்ற ஹேஷ்டேக். இவர்களுக்கு ஆதரவாக, பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப் பட்ட பெருமளவு பணத்தைப் பெற்றுக் கொண்டு, கருப்பு பலூன் பறக்க விட்டு, தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் அரசியல் இயக்கங்கள் மற்றும் ஜனநாயகம் என்ற போர்வையில் தேசத் துரோகச் செயல்களைச் செய்ததாகவும் குற்றச்சாட்டுகளை பலர் தெரிவித்து வந்தார்கள்.
அவற்றில் ஒரு பகுதியாக, தற்போது பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு ஆதரவான ஹேஷ்டாக்குகளை உருவாக்கி, சீன அதிபரை வரவேற்பதாகவும், இந்தியப் பிரதமர் மோடியை எதிர்ப்பதாகவும் இந்த இயக்கங்களின் சார்புள்ளவர்கள் கடந்த இரு நாட்களில் டிவிட்டர் டிரெண்டிங் ஆக்கி வந்தனர். இவர்களில் பெரும்பாலும் உண்மையான பெயருள்ள கணக்கு இருக்காது என்பதும், மறைமுக பெயர்களில் ஒருவரே பல கணக்குகள் வைத்துக் கொண்டு, இதே வேலையாகச் செய்து வந்ததும் கண்டறியப் பட்டது.

மேலும், மோடி தமிழகம் வரும் போது மட்டும் இத்தகைய ஹேஷ்டாக்குகள் உருவாக்கப்பட்டு டிரெண்டிங் ஆக்கப்படுவதால், இதன் பின்னணியில் முதலில் திமுக., குறித்தே உளவுத்துறை சந்தேகப் பட்டது. அதற்கு ஏற்ப, தமிழன் என்ற பெயர்களில் ஒளிந்து கொண்டு, இந்தி எதிர்ப்பு, திராவிட கொள்கைகள், நாத்திக பிரசாரம், இந்து எதிர்ப்புக் கருத்துகள் என செயல்பாடுகள் தீவிரமடைந்திருந்தன. இதனால் திமுக.,வினர் இத்தகைய ஹேஷ்டாக்கை உருவாக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. ஆனால், உளவுத்துறையின் தீவிர விசாரணையில், இத்தகைய ஹேஷ்டேக்குகளின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது தெளிவாகத் தெரியவந்தது.
இது தொடர்பில் முன்னர் நாம் வெளியிட்ட செய்தி: அதிர்ச்சி அளிக்கும் செய்தி: கோபேக் மோடி டிவீட்களின் உண்மை என்ன தெரியுமா?
தற்போது, காஷ்மீர் விவகாரத்தில் இந்திய எதிர்ப்பு மன நிலையை தீவிரப் படுத்தவும், உலக அளவில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு இருப்பதாக தெரியப் படுத்தவும் மீண்டும் #GoBackModi ஹேஷ் டேக்கை பாகிஸ்தானில் இருந்து உருவாக்கி பிரபலப் படுத்தியது. அதனை நம்பி, தமிழகத்திலும் சிலர் வழக்கம் போல் பகிரத் தொடங்க, உளவுத் துறை விசாரணை குறித்த தகவல்கள் அவர்களுக்குத் தெரியவந்ததால், அதிர்ச்சி அடைந்த அவர்களில் பலர் ஒவ்வொன்றாக கோபேக்மோடி டிவீட்களை நீக்கத் தொடங்கினர்.
இந்த டிவீட்களில் 58 சதவீத ட்வீட்கள் பாகிஸ்தானில் இருந்து உருவானதும், 4 சத ட்வீட்கள் சென்னையிலும் இருந்து உருவானதாம். அதே போல், ஆங்கிலத்தில் தான் பெருமளவு கருத்துகள் இருந்ததும், அடுத்ததாக உருதுவில் 23% கருத்துகள் பகிரப் பட்டதும், தமிழில் வெறும் 2% கருத்துகள் தான் பகிரப் பட்டதும் பகீர் தகவலாக வெளிப்பட்டது.



