வேலூரில் பிரபல ஜவுளிக் கடையில் பின்பக்க வழியாக வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கி வியாபாரம் செய்து வந்த நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் அந்த கடைக்கு சீல் வைத்ததுடன், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்துள்ளனர்.
வேலூர் மாநகராட்சி பகுதியில் 3 ஆயிரம் சதுரஅடி கொண்ட துணி கடைகள் மற்றும் ஷோரூம்களை நேற்று முதல் தமிழக அரசு மூட உத்தரவிட்டது.
அதன்பேரில் மாநகராட்சி பகுதியில் மூன்று ஆயிரம் சதுர அடி கொண்ட 23 கடைகள் நேற்று மூடப்பட்டது.
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சர்வீஸ் சாலையில் உள்ள பிரபல ஜவுளிக் கடையான சென்னை சில்க்ஸ் இன்று முன்பக்க வழியை மூடிவிட்டு, பின் பக்க வழியில் வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதித்து வியாபாரம் நடத்தி வந்தனர்.
இதையடுத்து, தகவலறிந்த வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உடனே சென்று கடையை சீல் வைக்க உத்தரவிட்டார். மேலும், ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து, இதுபோன்று தவறு செய்தால் மூன்று மாதகாலம் கடையை மூடி விட வேண்டியிருக்கும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த சம்பவத்தின் போது 2 வது மண்டல கொரோனா கண்காணிப்பாளர் செந்தில்குமார், சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.