
என்னை பிணைய கைதியாக வைத்து, கொரோனாவுக்காக ஊரடங்கு போடாமல், சித்தா, ஆயுர்வேதம் வாயிலாக, சிகிச்சை தர வேண்டும்’என, நடிகர் மன்சூர் அலிகான், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பூசி குறித்து தவறாக பேசியதால், நடிகர்மன்சூர் அலிகான், நீதிமன்றத்தால் அபராத விதிப்புக்கு ஆளானார்.
தற்போது, தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து, அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் என்னை நீங்கள் பிணைய கைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.
ஆனால், ‘இன்று முதல் யாரும் முக கவசம் அணிய வேண்டாம்’ என, ஒரே ஒரு உத்தரவு மட்டும் போடுங்கள். மருந்து, ஊசி அனைத்தையும் மூட்டை கட்டி, எந்த நாட்டுக்காவது அனுப்பி விடுங்கள்.
‘இ- – பாஸ், எறும்பு பாஸ் தேவையில்லை’ என்றும் உத்தரவு போடுங்கள். கொரோனா குறித்த எந்த செய்தியும், பத்திரிகை மற்றும் ஊடகத்தில் போடாதீர்கள். கடந்த முறை கொரோனாவால் பாதித்தோர் பலர், வெறும் கபசுர குடிநீர், சித்தரத்தை, அதிமதுரம், திப்பிலி, இஞ்சி, சுக்கு, பனங்கற்கண்டுடன் காய்ச்சி குடித்து மீண்டனர்.
கருணாநிதி கொண்டு வந்த சித்த மருத்துவ துறையை பயன்படுத்துங்கள்; நாம் வெளிநாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யலாம்.
ஒரு மரணம் கூட நிகழாது. அப்படி நடந்தால், என்னை துாக்கிலிடுங்கள். மாமன்னன் அக்பர், 9 வயதில் அறியணை ஏறியவர், பல பேரிடம் ஆலோசனை கேட்பாராம். ஆனால், சரியாக சுய முடிவெடுப்பாராம்.
அதுபோன்று, தாங்கள் நிச்சயம் தமிழகத்தை, ஏன் உலகத்தையே காப்பீர்.மருந்து மாபியாக்களும், பல நாட்டு முக்கியஸ்தர்களும் சேர்ந்து திட்டமிட்ட சதியில், இந்தியா பிணக்காடாகிக் கொண்டிருக்கிறது.
இந்த மருந்துகளை பயன்படுத்திய பின் தான், கறும்பூஞ்சை நோய் மக்களை பிடித்திருக்கிறது. இதில் தவறிருந்தால், என்னை மன்னியுங்கள். அதுபோல, கோவில்களை பூட்டி வைக்காதீர்; கோவில் மணியோசை கேட்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.