
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் சகோதரத்துவ நல்லிணக்க விழா என, ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது.
ஆகஸ்ட் 24 வியாழக்கிழமை மாலை 7:30 க்கு அம்மா உணவகம் முன்பு நடைபெற்ற பொது நிகழ்ச்சியில், பணி நிறைவு பெற்ற காவல்துறை ஆய்வாளர் சுப்பையா தலைமையேற்று நடத்தினார். உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம் மாரியப்பன் முன்னிலை வகித்தார். ஆர்எஸ்எஸ்., மாவட்டத் தலைவர் எஸ் குருமூர்த்தி, குமரி கோட்டத் தலைவர் ஏ. காமராஜ் ஆகியோர் கலந்துகொள்ள, பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் பி தங்கராஜ் சிறப்புரையாற்றினார்.
பி.தங்கராஜ் தமது சிறப்புரையில், ரக்ஷா பந்தன் ஏன் கொண்டாடப் படுகிறது என்பதையும், சங்கத்தின் வார்தா முகாமில் காந்திஜி வந்து பார்த்துக் கூறிய கருத்தையும் பற்றிச் சொல்லி, வரலாற்றில் ரக்ஷா பந்தன் நிகழ்வுகள் எப்படி சகோதரத்துவத்தை வெளிப்படுத்தின, உயிர் காக்கும் பாதுகாப்பு அம்சமாக அது எவ்வாறு திகழ்ந்தது, எனவே, நம்மிடையே சகோதரத்துவம் வலுவாக வேண்டிது ஏன் என்பதன் அவசியத்தை எடுத்துக் கூறினார்.
செங்கோட்டை நகரின் இந்து சமுதாய ஒருங்கிணைப்புக் குழு மற்றும் சமுதாய நல்லிணக்கப் பேரவை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியில் அனைவருக்கும் ராக்கி கயிறு வழங்கப்பட்டது. ஒவ்வொருவரும் தங்கள் அருகில் இருந்தவர்களுக்கு ராக்கி கட்டி சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினார்கள்.
அனைத்து சமுதாயத் தலைவர்களையும் மேடையேற்றி, அவர்களுக்கு ஆர்எஸ்எஸ்., பொறுப்பாளர்கள் கௌரவம் செய்தார்கள். குழுப்பாடல் உடன் தொடங்கிய நிகழ்ச்சி, சங்க பிரார்த்தனாவுடன் நிறைவு பெற்றது.
நிகழ்ச்சி நிறைவுற்ற பிறகு, தென்காசி மாவட்ட சமுதாய நல்லிணக்கப் பேரவை அமைப்பாளர் ஜி.வரதராஜன் ஒருங்கிணைக்க, அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்களையும் அமர வைத்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும், சகோதரத்துவ சிந்தனை குறித்தும் பேசினார்கள்.
செங்கோட்டை ஆர்.எஸ்.எஸ்., நகரச் செயலாளர் அயோத்யா முருகேசன் நன்றியுரை கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்கோட்டை ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் முன்னின்று செய்திருந்தனர். நிகழ்ச்சியில் நூற்றுகும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.