பழிவாங்கி அரசியல் நடத்தவேண்டியதில்லை; தமிழிசை சவுந்தரராஜன்

 
 
பாரதீய ஜனதா கட்சிக்கு பழிவாங்கி அரசியல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 
பிரதமர் நரேந்திர மோடியை தரக்குறைவாக பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கண்டித்து தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
பா.ஜ.க. மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜெய்சங்கர், மாநில வர்த்தக அணி செயலாளர் இல.ராஜேந்திரன், உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
 
 
கண்டன ஆர்ப்பாட்டத்திக்கு பின் மருத்துவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
பா.ஜ.க. மற்ற கட்சிகளை விடவும் பலம் பொருந்திய கட்சி. சோனியா காந்தி, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை பழிவாங்கிதான் அரசியல் நடத்தவேண்டும் என்ற அவசியம் பா.ஜ.க.வுக்கு இல்லை. விளம்பரத்துக்காக நரேந்திர மோடியை தரக்குறைவாக எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன.
 
மோடி தமிழக மக்கள் மீது மிகுந்த அக்கறை வைத்துள்ளார். மக்கள் தலைவரை எந்தவொரு மக்கு தலைவர்களும் தரக்குறைவாக பேசுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது. காங்கிரஸ் சார்பில் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்துக்கும், மோடியை தரக்குறைவாக பேசியதற்கும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களின் பொருளாதார நிலையும், சிறு, குறு தொழில்கள் அடைந்துள்ள பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்து அவர்களுக்கு என்னென்ன உதவிகளை செய்யலாம் என்று மோடி உத்தரவின்பேரில் மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, கல்ராஜ் மிஸ்ரா ஆகியோர் இன்று (19-12-2015)பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.
 
ஆம்பூரில் பா.ஜ.க. தொண்டர்களை ஆம் ஆத்மி போர்வையில் மர்ம ஆசாமிகள் சிலர் தாக்கியுள்ளனர். அவர்கள் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களுக்கு ஒருதலைபட்சமாக காவல் துறையினர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறினார்