மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ்., பொறுப்பாளர் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தக்கலை பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்றது.
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள ஒரு கொடூரமான சம்பவத்தில், கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காலை ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் தங்கள் வீட்டில் அடையாளம் தெரியாத குற்றவாளிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
சம்பவத்தன்று முற்பகல் 11 மணி அளவில் பந்து பிரகாஷ் பால் (35), அவரது மனைவி பியூட்டி மொண்டல் பால் (30) மற்றும் அவர்களது ஆறு வயது மகன் அங்கன் பந்து பால் ஆகியோர் வெட்டிக் கொல்லப்பட்டனர். பியூட்டி மொண்டல் பால், எட்டு மாத கர்ப்பமாக இருந்துள்ளார். மிருகத்தனமான இந்தக் கொலை, அந்தப் பகுதியில் உள்ள அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
அப்பகுதி ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகியான பந்து பிரகாஷ், கோசைக்ராம் சஹாபாரா தொடக்கப்பள்ளியில் பணிபுரிந்த பள்ளி ஆசிரியர். மேலும், அப்பகுதியில் காப்பீட்டு முகவராகவும் இருந்துள்ளார்.
பாலின் வீட்டிலிருந்து அதிக அளவில் அலறல் சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். “அவர்களின் வீட்டில் இருந்து உரத்த அலறல் சத்தம் கேட்டது. நாங்கள் அங்கு விரைந்தபோது, சிலர் வீட்டை விட்டு வெளியே ஓடுவதைக் கண்டோம், ”என்று ஒரு பக்கத்து வீட்டுக்காரர் கூறியுள்ளார்.
அக்கம்பக்கத்தினர் பந்து பிரகாஷ் மற்றும் அவரது மகன் அங்கன் ஆகியோரின் உடலை ஒரே அறையில் தரையில் கண்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பியூட்டியின் உடல், மற்றொரு அறையில் கிடந்துள்ளது. இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் போது உள்ளூர் சந்தையில் இருந்து பந்து பிரகாஷ் அப்போதுதான் திரும்பியதாக போலீஸார் கூறியுள்ளனர்.
அவர்கள் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதாகவும் அவற்றை அங்கே கண்டு எடுத்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தப் படுகொலை சம்பவத்தில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
இந்த படுகொலைச் சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேற்கு வங்கத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது என்று ஆர்.எஸ்.எஸ். தலைமை கூறியது. இந்தப் படுகொலை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தப் பட்டு வருகின்றன.