சென்னை: விடுமுறை நாட்களிலும் விரைவு மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரி, தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே திங்கள் முதல் வெள்ளி வரை, புறநகர் மின்சார விரைவு ரயில்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் இயக்கப் படுகின்றன. திருமால்பூரில் இருந்து கடற்கரை வரை செல்லும் விரைவு ரயில், காலை நேரத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பெருங்களத்தூர், தாம்பரம், கிண்டி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இதனால், பணிக்குச் செல்வோர் உள்பட பலரும் விரைவில் சென்றுவிடலாம்.
பொதுவாக செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் விரைவு ரயில்கள், தாம்பரம் – கடற்கரை இடையேதான் விரைவு ரயில்களாகச் செல்லும். இந்த ரயில்கள், தாம்பரம், குரோம்பேட்டை, கிண்டி, மாம்பலம், எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.
இதனால் இந்த ரயிலில் பயணிப்பவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாக சென்று விட முடியும். இந்த விரைவு மின்சார ரயில்களை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சாதாரண மின்சார ரயில்களாக மாற்றி இயக்குகிறது ரயில்வே நிர்வாகம்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாம்பரத்தில், பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைவு மின்சார ரயிலை சாதாரண ரயிலாக இயக்குவதால் தாங்கள் அலுவலகம் செல்ல தாமதமாவதாகக் கூறி இரண்டு ரயில்களை அவர்கள் சிறை பிடித்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரயில் பாதையை மறித்து போராட்டம் நடத்தியதால் தாம்பரம் – கடற்கரை இடையிலான வழியில் மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதன் பின்னர் அங்கு வந்த ரயில்வே துறை உயரதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டு செங்கல்பட்டு – கடற்கரை இடையே மின்சார ரயில் போக்குவரத்து சீரானது.
Fight for everything
TN has become a violent place.Which leaders are instigating .