தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து 6 பேர் மீது பதிவு செய்யப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தொடரப்பட்ட 10 வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், துப்பாக்கிச்சூடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்றியது. மேலும் இது தொடர்பாக சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தி 4 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இதனிடையே தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததுடன், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை விடுத்தது.இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் மனு மீது வரும் 17 ம் தேதி விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.