Home Blog Page 189

ஆனி மாத அமாவாசை: சதுரகிரிமலையில் பக்தர்கள் கூட்டம்..

sathuragiri devotees - 2026
#image_title

ஆனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு கடந்த 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

அமாவாசை தினமான இன்று விருதுநகர், மதுரை ,திருச்சி , திண்டுக்கல் , சென்னை கேரளா கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் குவிந்தனர்.

பின்பு காலை 6 மணிக்கு மலைப்பாதையின் நுழைவு வாயில் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப் பட்டனர். பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

மலையில் எழுந்தருளிய சுந்தர மகாலிங்க சுவாமி கோயில் மற்றும் சந்தன மகாலிங்க சுவாமி கோயில் சுந்தரமூர்த்தி கோவில்களில் மாலை 4 மணி முதல் அமாவாசை வழிபாடு தொடங்கியது மூன்று கோவில்களிலும் சுவாமிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

சிறப்பு அலங்காரத்திற்கு பின் சங்கு ஒலி முழங்க சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது பக்தர்கள் இரவு முழுவதும் விடிய விடிய பூஜைகள் நடத்தி வழிபாடு செய்தனர்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

protest infront of sengottai union office - 2026

செங்கோட்டையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

செங்கோட்டையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சமூக தணிக்கை என்ற பெயரில் சத்துணவு ஊழியர்களை அரசு அலுவலர் அல்லாத நபர்களை வைத்து தணிக்கை செய்வதை கைவிட வேண்டும், சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என மூவரும் இல்லாத மையங்களுக்கு பணியாட்களை நியமிக்காமல் சத்துணவு ஊழியர்களுக்கு பணிச்சுமையை திணிப்பதை கண்டித்தும், காலியாக உள்ள சத்துணவு ஊழியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரியும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய தலைவர் வேலுச்சாமி தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நூர்ஜகான் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் செங்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பணி புரியும் சத்துணவு ஊழியர்கள் சுமார் 70 – க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.முடிவில் செயற்குழு உறுப்பினர் புஷ்பவல்லி நன்றி கூறினார்.

விருதுநகர் போச்சி… கோவில்பட்டி வந்துச்சி!

railway news - 2026
#image_title

விருதுநகர் சந்திப்பு ரயில் நிலையத்தை புறக்கணிக்கும்
வந்தே பாரத் ரயில் குறித்த அறிவிப்பால், விருதுநகர் மாவட்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கூடுதல் நெரிசலைக் குறைக்க வந்தேபாரத் சிறப்பு ரயில்கள் (வாரத்தில் 4 நாட்கள்) சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு திறக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கு, விருதுநகர் நிறுத்தம் நீக்கப்பட்டு கோவில்பட்டி சேர்க்கப்பட்டது. அதுபோல், மறு மார்க்கத்தில், நாகர்கோயில் – சென்னை எழும்பூர் இடையே இயங்க உள்ள வந்தே பாரத் அட்டவணையிலும் விருதுநகர் நீக்கப்பட்டது. கோவில்பட்டியைச் சேர்க்கவும் திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. இது விருதுநகர் மாவட்ட பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில் எண் 06067. மறு மார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து எழும்பூருக்கு 06068 இயக்கப்படும் என கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரயிலானது ஜூலை 11 வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்கும்; எழும்பூரில் அதிகாலை 5:00 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:50க்கு நாகர்கோவிலை சென்றடையும்!

மறுமார்க்கமாக மதியம் 2.20 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து புறப்பட்டு இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும். இந்த ரயிலானது சென்னை எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவிலுக்குச் செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலானது விருதுநகர் சந்திப்பில் நின்று செல்லாமல் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, திருத்தங்கல், சாத்தூர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, கமுதி, சாயல்குடி, டி.கல்லுப்பட்டி, விருதுநகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் வந்தே பாரத் சிறப்பு ரயிலை (06067, 06068) இயக்கியபோது, அந்த ரயிலானது, சென்னையிலிருந்து விருதுநகர் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு காலை 11.27க்கு வந்து 11.28க்கு புறப்படும் எனவும், மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு விருதுநகருக்கு மாலை 5.20க்கு வந்து 5.22க்கு புறப்படும் எனவும் கால அட்டவணை வெளியிடப்பட்டு அதன்படி சென்று வந்தது.

வர்த்தக நகரான சிவகாசி மற்றும், பஞ்சாலை அதிகமுள்ள ராஜபாளையம், ஆன்மீக நகரான திருவில்லிபுத்தூர் ஆகிய பகுதியைச் சேர்ந்த ரயில் பயணிகள் அதிக அளவில் வந்தே பாரத் ரயிலில் சென்று வந்தனர். மதியம் 12 மணிக்கு செங்கோட்டையிலிருந்து மதுரைக்குச் செல்லும் ரயிலில் வந்து வந்தேபாரத் ரயிலை இணைப்பு ரயிலாக அவர்கள் பயன்படுத்தினர்.

ஏற்கெனவே, திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 6 மணிக்குப் புறப்படும் வந்தேபாரத் ரயில் 7.11க்கு விருதுநகர் வந்து 7.13க்கு கிளம்புகிறது. அப்போது, பயணிகளுக்கான உணவுகள் அனைத்தும் ரயிலில் ஏற்றப்படுகிறது. மறு மார்க்கமாக இரவு 9 மணிக்கு விருதுநகரில் நின்று செல்கிறது.

ஆனால், தற்போது விருதுநகர் சந்திப்பு ரயில் நிலையத்தைப் புறக்கணித்து விட்டு கால அட்டவணையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதை அடுத்து, ஏற்கெனவே இருந்தது போல, வந்தே பாரத் சிறப்பு ரயிலை விருதுநகர் சந்திப்பு ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் கால அட்டவணையில் மாற்றம் செய்திட வேண்டும். மேலும் புதிதாக இயக்கப்படும் அனைத்து வந்தேபாரத் ரயில்களும் விருதுநகரில் நின்று செல்ல தெற்கு ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே அமைச்சகமும் மறுபரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும், நெல்லை சென்னை வந்தேபாரத் விருதுநகரில் நின்று செல்லும் நிலையில், கோவில்பட்டி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த வந்தே பாரத் ரயிலுக்கு கோவில்பட்டி நிறுத்தம் கொடுக்கப் பட்டிருப்பதாகவும், கோவில்பட்டி அல்லது விருதுநகர் என இரண்டில் ஒன்றுக்கு தான் நிறுத்தம் கொடுக்கலாம் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

ஓங்கோலுக்கு தெரியுமா செங்கோல் வாசனை?!

sengol adheenam - 2026

“கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை – பழமொழி
ஓங்கோலுக்கு தெரியுமா செங்கோல் வாசனை…?! – புதுமொழி!”

செங்கோல் பற்றி ….ஓங்கோல் பற்றி அல்ல….

தமிழகத்தில் ஆன்மீக சமய தொண்டாற்றி வரும் பழமையான சைவ ஆதீன மடங்கள் பல உள்ளன. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெருங்குளம் செங்கோல் ஆதீனம் பாண்டிய மன்னர்களுக்கு செங்கோல் வழங்கும் உரிமையை பெற்று விளங்கியதால் செங்கோல் ஆதீனம் என பெயர் பெற்றது.

ஆதி முனிவர் சத்தியஞான தரிசினி தில்லையில் மடம் நிறுவி, தனக்கு கடவுள் அருளால் கிடைத்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அவருக்கு பின் வழிவழியாக 18 மடாதிபதிகள் வந்தனர். 18-வது மடாதிபதி திகம்பர சித்தர்.

இவர் காலத்தில், கொற்கையை தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆண்டு வந்த மன்னர், சிதம்பரத்துக்கு நடராஜரை தரிசனம் செய்வதற்காக வருகிறார். அப்போது திகம்பர சித்தரையும் தரிசிக்கிறார். தன்னுடன் பாண்டிய நாட்டுக்கு வந்து தங்கி அருள்புரியுமாறு மன்னர் வேண்ட, சித்தரும் பாண்டிய நாடு வருகிறார்.

கல்லூர் எனும் ஊரில் பாண்டிய மன்னர் அமைத்துக் கொடுத்த திருமடத்தில் தங்கி தெய்வப் பணியும், சைவப் பணியும் ஆற்றினார்.

சில காலத்துக்கு பின் படையெடுப்பின் மூலம் பாண்டிய நாட்டின் தலைநகர் கொற்கையை சோழர்கள் கைப்பற்றினர். தோல்வியுற்ற பாண்டிய மன்னர், திகம்பர சித்தரை சந்தித்தார். சித்தரின் ஆசியால் பாண்டிய மன்னர் மீண்டும் போர்தொடுத்து வென்றார்.

வெற்றி பெற்ற மன்னர், பெருங்குளத்தில் சித்தருக்கு ஆதீனம் அமைத்துக் கொடுத்தார். சித்தரின் ஆசியோடு மீண்டும் ஆட்சியை தொடங்கிய பாண்டிய மன்னர், சித்தரின் திருக்கரங்களால் செங்கோலை பெற்றுக் கொண்டார்.

அப்போது முதல் கொற்கை பாண்டிய மன்னர்கள் முடிசூடும்போது பெருங்குளம் மடாதிபதிகளிடம் இருந்து செங்கோல் பெற்றுக்கொள்ளும் வழக்கம் உண்டாயிற்று. இதனால் ஆதீனத்துக்கும் செங்கோல் ஆதீனம், செங்கோல் மடம் என்ற பெயர் உண்டாயிற்று என வரலாறு கூறுகிறது.

எல்லா ஆதீனங்களும் அந்த அந்த ஊரின் பெயரில் அழைக்கப்பட இந்த ஆதீனம் மட்டும் செங்கோல் ஆதீனம் என்று அழைக்கப்படுகிறது…

பாண்டிய மன்னர்கள் செங்கோலை போற்றினர் கூன் பாண்டியனை நின்ற சீர் நெடுமாறன் ஆக்கி சரித்திர புகழ் பெற்ற மதுரையில் இருந்து சென்ற ஒருவன் தமிழர்களையும் தமிழ் மன்னர்களையும் அவமதித்து விட்டான்…

செந்தமிழுஞ் சைவமும் சிறப்புற்று வாழுமாறு சிவநெறி பேணி அரசாட்சி செய்த பாண்டிய மன்னர்களில் முதன்மை பெறுவர் நெடுமாற நாயனார்.

இப்படி ஆட்சி செய்த மன்னர்களை அந்தபுரம் போனார்கள் என்று சொல்லி பேசும் ஒருவனுக்கு தமிழ் மீதும் ஆன்மீகம் மீதும் எவ்வளவு வன்மம் இருக்கும்!

படித்தேன்….பகிர்ந்தேன்….
– பக்தன்ஜி

ஓ… இவையும் அந்தப்புர அடையாளங்களோ?!

sengo andl dmk - 2026

— கே.எஸ். ராதாகிருஷ்ணன் —

செங்கோல்

மதுரை சு வெங்கடேசன் எம்.பி யார்? அவர் எப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்?

மதுரை கீழடி அகழ்வாய்விற்கு மூல காரணமாக அமைந்தவர் வழக்கறிஞர் கனிமொழி மதி @kanimozhimathi
அவர்கள் கொடுத்த வழக்கு தான் இந்த அகழாய்வைத் தொடர்ந்து நடத்துவதற்கான அரசாணைக்கு வித்திட்டது. அதில் இந்த சு வெங்கடேசன் குறுக்கே புகுந்து ஏதோ தன்னால் தான் கீழடி ஆய்வே கண்டுபிடிக்கப்பட்டது என்பது மாதிரி பரப்புரை செய்து கொண்டார்.

கீழடி ஆய்வில் முக்கியப் பங்காற்றுகிறேன் என்று சொல்லிக்கொண்டு மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்ந்து கடந்த பத்து வருடத்திற்குள் எம்பி ஆகி இப்போது மறுபடியும் நாடாளுமன்ற எம்பி ஆகி குறுக்கு வழியான வாய்ப்புகளின் வழியே இடம் பெற்றிருக்கிறார்.

இந்த சு வெங்கடேசன் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் தானே! இவர் ஏன் முல்லைப் பெரியாறு அணைக்குத் தமிழகம் சார்பாக குரல் கொடுக்க மாட்டேன் என்கிறார்.
அதேபோல தேனி மாவட்டத்திற்கான கண்ணகி கோட்டத்திற்கு ஏன் குரல் கொடுக்க மாட்டேன் என்கிறார்?
எல்லாவற்றுக்கும் காரணம் நான்தான் நான்தான் என்று சொல்லிக்கொண்டு “ஊரில் கல்யாணம் மார்பில் சந்தனம்” என்று திரிகிறார்.

இந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காரர்கள் சித்தாந்தம் பேசுவார்கள் கோட்பாடு பேசுவார்கள். கூட்டணி வைப்பார்கள் நடைமுறை பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க மாட்டார்கள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் என்ற பெயரில் கலை இலக்கிய பேரவை நடத்தி வரும் இந்த அமைப்பில் இருந்தவர் தானே சு வெங்கடேசன். இவரை விட எத்தனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த முன்னோடிகள் இருக்கிறார்கள்? அவர்களெல்லாம் ஏன் இந்த நாடாளுமன்ற பதவிக்கு முன்மொழியப்படவில்லை. அதுதான் போகட்டும் இதே தமு எ க ச சங்கத்தில் அதை தொடர்ந்து நடத்தி வந்து கொண்டிருப்பவர் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் தானே! அவர் இப்போது எங்கு இருக்கிறார்! அவருக்கு ஏன் வாய்ப்பு தரப்படவில்லை?

இதற்கு மேலாக சு வெங்கடேசன் எல்லாம் தனக்குத்தான் தெரியும் என்பது மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார். ஒருமுறை ஓமந்தூரார் தென்னார்க்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது கூடத் தெரியாமல் தனது பேச்சினூடே ஒருமுறை ஓமந்தூரார் ஓசூர் பக்கத்தைச் சேர்ந்தவர் என்று உளறி கொட்டி இருக்கிறார் இவர் எல்லாம் நாடாளுமன்றத்திற்கு போய் என்ன செய்யப் போகிறார்.

கலை இலக்கிய மன்றங்களில் இருந்த
சு வெங்கடேசன் கட்சி மன்றத்திற்குள் குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சிக்குள் எப்போது வந்தார்? அவருடைய சீனியாரிட்டி என்ன?

எந்தக் கட்சிக்காரர்கள் நாடாளுமன்றத்திற்குப் போனாலும் அங்கே ஒரு கட்சிக்காரரும் உருப்படியாக இல்லை. எதோ எம்பிக்கள் ரெக்ரியேஷன் கிளப்பிற்குப் போய்விட்டு வருவது போல டெல்லிக்குப் போய்விட்டுத் திரும்புகிறார்கள்.

இந்த சு வெங்கடேசன் செங்கோலை பற்றி பேசுகிறார்! திருக்குறளில் திருவள்ளுவர் குறிப்பிட்டு இருப்பது செங்கோல் தானே!

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
– திருக்குறள்.

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி.

மழையை நம்பி இந்த உலகத்தின் ஜீவராசிகள் உள்ளதுபோல், மன்னவனின் செங்கோலை நம்பி குடிமக்கள் வாழ்கிறார்கள் என்கிறார் வள்ளுவர்!

செங்கோலை பற்றி பாராளுமன்றத்தில் இழிவாக பேசியவர் கையில் வைத்துள்ளது என்னவோ?!

‘அல்லல்உற்று ஆற்றாது அழுவாளைக் கண்டுஏங்கி மல்லல் மதுரையார் எல்லாரும் தாம்மயங்கிக் களையாத துன்பம்இக் காரிகைக்குக் காட்டி வளையாத செங்கோல் வளைந்தது இதுஎன்கொல்?’

மேலும், ‘வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது’ என வளைந்த செங்கோலை நிமிர்த்த தன் உயிரையே விட்ட பாண்டியன் ஆண்ட மதுரையின் நாடாளுமன்ற உறுப்பினர் இவர் என்பதுதான் காலக்கொடுமை!

செங்கோல் வைத்திருந்த அரசர்கள் பெண்களை அந்தப்புரத்தில் அடிமையாய் வைத்திருந்தனர் – என்பது அவர் விசனம்.

தமிழ் மரபில் செங்கோல் அறத்தின் அடையாளமே ஒழிய அந்தப்புரத்தின் அடையாளமோ அடிமைகளை ஆதிக்கம் செய்யும் அடையாளமோ இல்லை. மதுரை சேர்ந்த அவருக்கு, மதுரையிலேயே சிலப்பதிகாரம் நடந்ததா கூறும் நிகழ்வுகள் ல்லாம் மறந்து போய் இருக்கும் போல … இந்த ஜனநாயக ஆட்சியிலேயே மாநகர மேயர்களுக்கு அது வழங்கப்படுவது அவருக்கு தெரிலையோ – இல்ல மேயர்கள் எல்லாம் அந்தப்புரங்களில் அடிமைகள் வச்சி இருக்காங்கன்னு சொல்றாரா ? நீதிபதிகளிடம் இன்றும் குறியீடு போல உள்ளது.

செங்கோல் – சங்க காலத்திற்கு முன்பிருந்தே தமிழர்களின் வாழ்வியலுடன் இணைந்த பெருமைமிக்க அடையாளம்… செங்கோல் பற்றி பெருமைப்படுத்தி திருக்குறள் மற்றும் பல்வேறு சங்க இலக்கியங்களில் பாடல்கள் உள்ளன…

செங்கோல் என்பது தமிழர் அடையாளம் தானே! நேரு கூட தன் முதல் பிரதமர் பதவியை ஏற்கும் பொழுது செங்கோலை திருவாடுதுறை ஆதீன மடத்தில் வாங்கிக் கொண்டுதானே ஆட்சி கட்டிலில் அமர்ந்தார்.. ஒவ்வொரு நாடும் பலவித மாதிரிகளில் ஆட்சியின் சின்னமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த மரபையெல்லாம் கேள்வி கேட்பதற்கு இந்த மகா புத்திசாலி வந்திருக்கிறார் போல் இருக்கிறது. நெருக்கடி காலகட்டத்தில் இதே மார்க்சிஸ்ட்காரர்கள் காங்கிரஸை எத்தனை விதமாகத் திட்டினார்கள்!

இன்று காங்கிரசுக்கு கொடி பிடிக்கிறார்கள். கடந்து 50 வருடங்களாக இவர்கள் தான் காங்கிரஸுக்கு கொடி பிடித்து அதை த் தோளில் தூக்கி ஆடி அதன் மூலம் நாட்டை நாசமாக்கினார்கள். கேரள, மே வங்கம், திரிபுரா என்ற பகுதியில் வேறு நிலை….

வரலாறு தெரியாதவர்கள் வேண்டுமானால் இந்த இப்படிபட்ட இடதுசாரிகளைப் பற்றி கவர்ச்சிகரமாக யோசித்து கொண்டு இருக்கலாம்.

பிறகு இப்போது கேரளாவில் காங்கிரஸ் ஜெயிக்கவில்லையா பார்லிமென்ட்டில் மட்டும் தான் ராகுல் காந்தி ஜெயித்தாரா? என்ன பேசுகிறார்கள் இவர்கள்.பாம்பும் சாகக் கூடாது! தடியும் நோகக் கூடாது! என்ன ஒரு சந்தர்ப்பவாதம்!

கடந்த காலங்களில் இந்த மார்க்சிஸ்ட்டுகள் பெண்ணியப் பிரச்சனைகளையும் தலித் பிரச்சனைகளையும் மட்டுமே பேசி வருகிறார்கள். வர்க்க பேதம்,தொழிலாளர்கள் பிரச்சனை விவசாயக் கூலிகள் பிரச்சனை வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் பற்றி எந்த பேச்சும் பேசுவதில்லை.

தமிழ் நாட்டினுடைய தாவாக்கள் எல்லைகள் நதிநீர் மற்றும் சுற்றுச்சூழல் போன்றவற்றிலும் இவர்களுக்கு ஈடுபாடு இல்லை. அதற்காக அவர்கள் போராடுவதுமில்லை. சு வெங்கடேசனை முல்லைப் பெரியாறு பிரச்சனை பற்றி முதலில் பேசச் சொல்லுங்கள்! அதற்கு ஒரு போராட்டத்தை நடத்தச் சொல்லுங்கள்.

அங்கே சிபிஎம் ஆட்சி. அவர்களைப் பயன்படுத்தி தமிழ்நாட்டிற்கு ஏதாவது நல்லது செய்வார்களா இந்த மார்க்சிஸ்ட் காரர்கள் என்று நாமும் பார்க்கலாம். அதை விட்டுவிட்டு சு வெங்கடேசனை வைத்து எல்லாம் தெரிந்தது மாதிரி பேசிக் கொண்டிருக்க கூடாது. மீண்டும் கேட்கிறேன் இவர் எப்போது மார்க்சிஸ்ட் கட்சிக்குள் வந்தார். அதற்கு முன்பு இருந்த உ. வாசுகி போன்ற பல தகுதி வாய்ந்த முறையான நபர்கள் ஏன் தேர்தலில் போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. உங்களுடைய உள் கட்சிப் பிரச்சனை என்று எதையும் பூசி மெழுகி விட முடியாது?

முல்லைப் பெரியாறு தொட்டு 15 கேரள நதி நீர் பிரச்சனைகள் தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் இடையில் நெடுங்காலமாய் உண்டு. கேரள குப்பைகளை தமிழக எல்லையில் கொட்டல், அட்டப்பாடி தமிழர் சிக்கல் என பல…

இது குறித்து தமிழ்நாடு மார்க்சிஸ்ட்கள் சு.வெங்கடேசனைக் கொண்டு போராடி அவற்றையெல்லாம் தமிழக மக்களின் உரிமை நலத்திற்கு விவசாயத்திற்கு குடிநீருக்குப் போராட்டம் செய்து வாங்கி தர வேண்டும்.

கீழடியைக் காட்டி மேலடி வேலைகளை மறைக்கக் கூடாது.

# செங்கோல் #sengolcontroversy #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost

உண்டியல் பணத்தை அறநிலையத் துறை ஊழியர்களே திருடும் அவலம்! துணிச்சலுக்குக் காரணம் ‘திராவிட மாடல்’

kadeswara subramaniam hindu munnani - 2026

பக்தர்களின் காணிக்கையை, ஆலயங்களைக் காப்பதில் திமுக அரசு அலட்சியம் செய்கிறது; ஆலய சொத்துக்களை இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களே கொள்ளை அடிக்கிறார்கள், இதில் அரசு நடவடிக்கை என்ன என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:

இரண்டு நாட்களுக்கு முன் திருத்தணி முருகன் கோவில் உண்டியல் பணத்தை எண்ணிய ஊழியர்களே லட்சக்கணக்கில் அபேஸ் செய்து ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இந்த துணிச்சல் வருவதற்கு காரணம், திமுக அரசின் இந்து விரோத சிந்தனை தான் என்று பொதுமக்கள் கருதுகிறார்கள்.

ஒரு புறம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆலய சொத்துக்களை மீட்டோம், நிலங்களை மீட்டோம் என மிகைப்படுத்தி பேசிக்கொண்டிருக்கும் போதே, இன்னொரு புறம் அவரது துறை ஊழியர்கள் ஆலய சொத்துக்களை கொள்ளையடிக்கிறார்கள், உண்டியல் பணத்தை திருடுகிறார்கள் என்பது மிகவும் கேவலமான செயல்.

கோவில் சொத்துக்களை காக்க வக்கற்ற அரசு கோவில்களை ஆன்மிக பக்தர்களிடம், சமயப் பெரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்வது தான் நேர்மையான செயலாகும்.

கோவில் உண்டியல் பணத்தை எண்ணுவதற்கு சரியான நடைமுறை வகுக்கப்பட வேண்டும். உண்டியல் திறப்பு முன்கூட்டியே அறிவிப்பு பலகையில் பக்தர்கள் அறிய வைக்க வேண்டும். தக்க முன்னேற்பாடுகளைச் செய்யாமல் திருட்டு போனபிறகு நடவடிக்கை என்பது திருட்டுக்கு உடந்தையான செயல் என்றே கருதத் தோன்றுகிறது.

முறைகேடுகளில் ஈடுபடும், திருடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை மூடி மறைக்க அதிகாரிகள் துணை போகக்கூடாது. தொடர்ந்து உண்டியல் காணிக்கை திருட்டு சம்பவங்களுக்கு நடப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் துணை போகின்றனரா என்பதை காவல்துறை கண்காணிக்க வேண்டும்.

பக்தர்களின் பக்தியுடன் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்ற நோக்கத்துடன் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள், பணத்தை அலட்சியம் செய்யாமல் இனி இதுபோல் நடக்காமல் தடுக்க தக்க ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

BNS – சுதந்திரம் அடைந்து 75 ஆண்டில் புதிய சகாப்தம் படைக்கும் இந்தியா!

bharathiya nyaya sanhitha - 2026

சகாப்தம்- உருவாக்கும் தருணம்

— சிவ சூரிய நாராயணன் —

புதிதாக அமல்படுத்தப்பட்ட மூன்று குற்றவியல் சட்டத்திற்கு முன்புள்ள குற்றவியல் சட்டத்தை அன்றைய காங்கிரஸ் அரசால் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பே ரத்து செய்யத் திட்டமிடப்பட்டது.

இருப்பினும், இந்த மாற்றத்தைச் செயல்படுத்தும் தொலைநோக்கு அல்லது திறன் காங்கிரஸ் அரசுக்கு இல்லை. மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தற்போதைய NDA அரசாங்கத்தின் தலைமையில் இந்த வரலாற்று தருணம் இறுதியாக நிறைவேறியுள்ளது.

சட்டச் சீர்திருத்தங்கள் பாரதத்தில் 300 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் செயலாகும். 2024 ஆண்டு வரை, பாரதத்தில் மொத்தம் 1486 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நமது பாரதம் சுதந்திரம் அடைந்து சுமார் 75 ஆண்டுகளுக்குப் பிறகு, நமது குற்றவியல் நீதி அமைப்பு இம்மூன்று சட்டத்தினால் மெருகேறியுள்ளது.

அவை:
i) பாரதிய நியாய சன்ஹிதா (BNS)-2023
ii) பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) -2023
ii) பாரதிய சாக்ஷிய அதினியம் (BSA)-2023

இந்திய தண்டனைச் சட்டம் (IPC-1860), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC-1973), இந்திய சாட்சியங்கள் சட்டம் (IEA 1872) ஆகிய பழைய 3 சட்டங்களை ரத்து செய்வதன் மூலம், இத்தகைய புதிய சட்டங்கள் அடுத்த 100 ஆண்டுகளுக்கு காலனித்துவ முத்திரையை அகற்ற வடிவமைக்கப்பட்டுள்ளன.

BNSS 2023 இன் முக்கிய அம்சங்கள்:

  1. பிரிவு 43(3), இன் கீழ் காவல்துறை அதிகாரி, குற்றத்தின் தன்மை மற்றும் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, ஒருவரைக் கைது செய்யும் போது அல்லது நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தும் போது கைவிலங்கைப் பயன்படுத்தலாமே, தவிர குற்றம் சாட்டப்பட்ட அனைத்து நபர்களுக்கும் எதிராக கைவிலங்குகளைப் பயன்படுத்துவதைத் இச்சட்டம் தடுக்கிறது.
  2. பிரிவு 63(ii) படி மின்னணு முறையில் குற்றம் சாட்டப் பட்டுள்ள நபர்களுக்கு சம்மன் அனுப்ப இச்சட்டம் வழிவகை செய்கிறது. இதனால். நீதிமன்றம், காவல்துறை மற்றும் வழக்குரைஞர்களின் நேர விரையம் தடுக்கப் படுகிறது.
  3. பிரிவு 173 (1) இன் படி, அதிகார வரம்பை பொருட்படுத்தாமல் எந்த ஒரு நபரும் எந்த காவல் நிலையத்திலும் ஜீரோ எஃப்.ஐ.ஆர் (Zero FIR) பதிவு செய்ய இச்சட்டம் அனுமதி அளிக்கிறது.
  4. பிரிவு 173 (1)(ii) இன் கீழ், மின்னணு சாதனம் மூலம் சம்பவத்தைப் புகாரளிக்க மக்களை அனுமதிக்கிறது. இதனால் போலீஸ் நிலையத்திற்கு உடல் ரீதியாக செல்ல வேண்டிய அவசியமில்லை.
  5. பிரிவு 36-ன் கீழ், கைது நடவடிக்கையின் போது கைது செய்யப்படுபவர் தான் விரும்பும் ஒரு நபருக்கு தனது கைதுப் பற்றிய தகவலை அளிக்கலாம்.
  6. BNSS இன் பிரிவு 173(3)(i)என்பது பூர்வாங்க விசாரணையின் கருத்தைக் கையாளும் ஒரு புதிய விதியாகும். மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை மற்றும் ஏழு ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனையைப் பற்றிய தகவல் ஒரு காவல் நிலையத்திற்கு 14 நாட்களுக்குள் கிடைக்கப்பெற்றால், பொறுப்பான அதிகாரி, துணை காவல் கண்காணிப்பாளரின் அனுமதியுடன் ஆரம்ப விசாரணையை நடத்தலாம். 14 நாட்களுக்குள் நிரபராதி என்று நிரூபித்தால் வழக்கை தவிர்க்கலாம். இது நிரபராதிகளுக்கு எதிராக தேவையற்ற வழக்கை தடுக்கிறது.
  7. பிரிவு 174 (1)(i) இன் கீழ், விசாரணை அதிகாரியை அனைத்து பிடியாணை பெறத்தகு குற்ற (Non cognizable offence) வழக்குகளின் தினசரி நாட்குறிப்பு அறிக்கையை இரண்டு வாரங்களுக்கு மாஜிஸ்திரேட்டுக்கு அனுப்பும்படி கட்டாயப்படுத்துகிறது. இது சரியான திசையில் தான் விசாரணை நடக்கிறதா என்பதை கண்காணிக்கவும் மற்றும் மேற்பார்வை செய்யவும் மெஜிஸ்ட்ரேட்டுகள் அதிகாரம் வழங்கியுள்ளது.
  8. பிரிவு 175(1) உடன் இணைக்கப்பட்ட நிபந்தனை விதியின் கீழ், குற்றத்தின் தீவிர தன்மையைக் கருத்தில் கொண்டு காவல் கண்காணிப்பாளர் தனது துணை காவல் கண்காணிப்பாளரிடம் வழக்கை விசாரிக்க அதிகாரத்தை வழங்குகிறது. மேலும் துணை காவல் கண்காணிப்பாளர் தனது பொறுப்பை உணர்ந்து பாரபட்சமற்ற முறையில் விசாரணையை நடத்த வேண்டும் எனவும் இவ்விதி கூறுகிறது.
  9. பிரிவு 175(3) கீழ் மாஜிஸ்திரேட் முன் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம், பிரமாணப் பத்திரம் மூலம் ஆதிரிக்கப்படவேண்டும் என பிரிவு 173 (4) கூறுகிறது. பிரிவு 210ன் கீழ் அதிகாரம் பெற்ற எந்தவொரு மாஜிஸ்திரேட்டும், அவ்வாறு ஆதிரிக்கப்பட்ட விண்ணப்பத்தை பரிசீலித்து, அவர் தேவை என்று கருதும் விசாரணை செய்து, காவல்துறை அதிகாரியால் இது தொடர்பாக சமர்ப்பித்த பிறகு, உத்தரவிடலாம். இதன் மூலம் மாஜிஸ்திரேட் முன் தேவையற்ற மற்றும் பொய்யான குற்றச்சாட்டு விண்ணப்பம் தவிர்க்கப்படுகிறது. இந்த நடைமுறை மாஜிஸ்திரேட் விழிப்புடன் இருக்க உதவுகிறது.
  10. பிரிவு 175(4) இன் கீழ், ஒரு அரசு ஊழியர் அவரது பணியின் போது எழும் தேவையற்ற குற்றச்சாட்டு வழக்குகளிருந்து அவரை இது பாதுகாக்கிறது. மேலும் இக்குற்றச்சாட்டினை மெஜிஸ்ட்ரேட் விசாரணை செய்ய முன் மொழியாமலும் இருக்கலாம்.
  11. பிரிவு 175[4][a] இன் கீழ் சம்பவத்தின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள் அடங்கிய அறிக்கையை குற்றம் சட்டப் பெற்ற அரசு ஊழியரை விட உயரிய அதிகாரியிடமிருந்து அறிக்கையைப் மாஜிஸ்திரேட் பெறுதல்; மற்றும்
    (b) அவ்வாறு கூறப்பட்ட சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலை குறித்து அரசு ஊழியர் கூறிய கூற்றுகளை பரிசீலித்த பிறகு, விசாரணைக்கு உத்தரவுயிடுதல்.
    இந்த பிரிவு அரசு ஊழியர்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்குகிறது அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தால் தேவையற்ற வழக்கு.
    இந்த பிரிவு அரசு ஊழியர்களின் தங்கள் கடமை செய்யும் போது அவர்கள்மீது எழுப்படும் தேவையற்ற குற்றசாட்டிலிருந்து பாதுகாக்க வழி வகை செய்கிறது
  12. பிரிவு 176(3) இன் கீழ், ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனைக்குரிய குற்றத்தில் அறிவியல் பூர்வமான விசாரணையை வழங்குகிறது, மேலும் குற்றம் பற்றிய தகவலைப் பெற்றவுடன், காவல் நிலையத்தின் பொறுப்பாளர், தடயவியல் நிபுணர் குற்றம் நடந்த இடத்திற்குச் சென்று சாட்சியங்களைச் சேகரிப்பதையும், அந்தக் காட்சி விடியோவாக இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். மொபைல் போன்கள் அல்லது மின்னணு சாதனங்களைப் மூலம் பதிவு செய்யலாம். இப்பிரிவு உண்மையான அல்லது நிரூபணமான ஆதாரங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் விசாரணை துல்லியமான முறையில் நடப்பதையும் தவறான ஆதாரங்களை தவிர்ப்பதையும் காட்டுகிறது.
  13. பிரிவு 179[1] இரண்டாவது விதியின் உட்பிரிவு முதல் உட்பிரிவிலுள்ள நபர்கள் காவல் நிலையத்தில் ஆஜராக தயாராக இருப்பவர்களை அனுமதி யளிக்கிறது. இந்த பிரிவு காவல்துறைக்கு தேவையற்ற அலைச்சலையும் செலவுகளையும் தவிர்க்கிறது
  14. பிரிவு 183[6]a கீழ் பாலியல் குற்றங்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்ணின் அறிக்கையை மகளிர் மாஜிஸ்திரேட்டால் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும்.ஏனெனில் இது பாதிக்கப்பட்டவரின் சங்கடமான சூழ்நிலையை தவிர்க்கிறது..
  15. பிரிவு 183(6)(அ)(ii) கீழ், காவல்துறையினரால் நிரூபிக்கப்பட்ட சாட்சி மற்றும் அவரது வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் முன்னிலையில் பதிவு செய்ய வேண்டும் என்பதை இவ்விதி கட்டாயமாக்குகிறது மற்ற சாட்சிகளை பதிவு செய்யக்கூடாது.
    இதனால் தவறான வாதத்தை தவிர்த்து அந்நியர் வழக்கை திசை திருப்பாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குகிறது.
  16. பிரிவு 185(2) உடன் இணைக்கப்பட்ட உட்பிரிவின் கீழ், நடத்தப்படும் விசாரணை ஒரு விசாரணை அதிகாரியால் ஆடியோ-விடியோ மின்னணு வழிமுறைகள் குறிப்பாக செல்போன் மூலம் பதிவு செய்யப்பட வேண்டும்,ஏனெனில் குற்றவாளிக்கு முறையான நீதியை வழங்குவதற்கான வழி இதுவாகும். இந்த பிரிவு குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குடை.
  17. 187(2) பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர் யாரிடம் ஒப்படைக்கப்படுகிறாரோ. அந்த மாஜிஸ்திரேட், அந்த வழக்கை விசாரிக்க அவருக்கு அதிகார வரம்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவ்வப்போது, குற்றம் சாட்டப்பட்டவரை முதல் 40 நாட்கள் அல்லது 60 நாட்கள் பொருத்தமான காவலில் வைக்க அதிகாரம் அளிக்கிறது. மேலும் இப்பிரிவு நீதி மன்ற காவலில் இருந்து போலீஸ் காவலில் வைத்து விசாரணை செய்வது பற்றியும் குறிப்பிடுகிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்குவும் வழி வகை செய்கிறது.
  18. பிரிவு 187 இன் துணை உட்பிரிவு (5) உடன் இணைக்கப்பட்ட இரண்டாம் நிபந்தனை விதியின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர் சட்டவிரோத காவலில் இருந்து அவரை துன்புறுத்துவதையும் சித்திரவதை செய்வதையும் தவிர்க்கிறது, மேலும் இந்த விதி குற்றம் சாட்டப்பட்டவர்களை அங்கீகரிக்கப்படாத காவலில் வைப்பதிலிருந்து பாதுகாக்கிறது.
  19. பிரிவு 190, நிபந்தனை விதி, தேவையற்ற காவலைத் தவிர்க்க வழி வகை செய்கிறது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவரின் இயல்பு எதுவாக இருந்தாலும் மாஜிஸ்திரேட் உத்தரவின் பெயரில் அவர் பாதுகாப்பு பிணையில் விடுவிக்கப்பட வேண்டும்.
  20. 193(2) 8, P.O.C.S.O Act-2012 4,6,8 & 10 2 வரும் பெண்கள் மற்றும் குழந்தைக்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவருக்கு விரைவான நீதியை தரும்பொருட்டு, விசாரணையை விரைவாக செய்ய கட்டாயமாக்குகிறது.

BSA 2023 இன் முக்கிய அம்சங்கள்

இந்திய சான்றுகள் சட்டம்-1872 இல் காலாவதியான பிரிவுகள் அதாவது, 22(A), 82, 88, 113 & 166 இதில் நீக்கப்பட்டன.

இந்திய சாட்சியச் சட்டத்தில் உள்ள சில பிரிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு மற்றும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

Indian Evidence Act-1872 -> Bharatiya Sakshya Adhiniyam- 2023
Sections 24,28&29 -> Section 22
Sections 25,26&27 -> Sections 23
Section 45(A) -> Section 39(2)
Section 63(i-iv) -> Sections 58(i-vii)
Section 120 -> Section 126 with new marginal note
Section 127 -> Section 132(3)
Section 141, 142, 143 -> Section 146

BSA 2023 இன் பிரிவு 61, மின்னணு பதிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

பிரிவு 63 ல் உள்ள, சில நிபந்தனைக்குட்பட்டு, எந்த தடையும் இல்லாமல் மின்னணு பதிவுகள் சாட்சியாக ஒப்புக்கொள்ளப்படுகிறது.

இந்தப் புதிய சட்டங்கள் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு அதாவது 158 சந்திப்புக் கூட்டங்கள், 1000 பரிந்துரைகள் ஏற்று செயல்படுத்தப்பட்டுள்ளன.


கட்டுரையாளர்: மூத்த வழக்குரைஞர், திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர், திருநெல்வேலி மாவட்ட வழக்குரைஞர் சங்க முன்னாள் தலைவர்.


தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கல்!

certification prog in sengottai - 2026

செங்கோட்டையில் தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசு அமைச்சக திட்டத்தின் கீழ் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் முத்து தையல் பயிற்சி மையத்தில், மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 3 மாத இலவச ஆரி எம்பிராய்டரி பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் ஆரி எம்பிராய்டரி பயிற்சி முடித்தவா்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பயிற்சி மைய வளாகத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு பயிற்சி மைய நிா்வாகி தங்கம் தலைமை தாங்கினார். நூலகர் ராமசாமி, விநாயகா இன்ஸ்ட்டியூட் நிர்வாகி உஷாராணி, ஸ்டார் இன்ஸ்டிட்யூட் முதல்வர் வளர்மதி, ராயல் பப்ளிக் ஸ்கூல் முதல்வர் தாஹிரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியாளா் ஓவியா அனைவரையும் வரவேற்று பேசினார்.

இதனை தொடர்ந்து ஆரி எம்பிராய்டரி பயிற்சி முடித்தவர்களுக்கு தென்காசி உதவி காவல் ஆய்வாளர் ரத்னபால் சாந்தி, சார்பு ஆய்வாளர்கள் வசந்தி, கந்தமயில் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சான்றிதழ்கள் மற்றும் உபகரணங்களை வழங்கினர்.

ராகுலின் அரைவேக்காட்டு அரசியல்! மக்களவைப் பேச்சில் வெளிச்சம்!

1854358 rahulgandhi1 - 2026

— ஆர். வி. ஆர்

ராகுல் காந்தி எதை வேண்டுமானாலும் மற்றவரிடமிருந்து மறைக்கலாம் – தான் ஒரு அரைவேக்காடு என்பதைத் தவிர. சமீபத்தில் அவர் மக்களவையில் பேசும்போது அந்த விசேஷ அம்சம் அவரிடம் வெளிப்பட்டது.

தங்களை ஹிந்துக்கள் என்று அழைத்துக் கொள்பவர்கள் வெறுப்பிலும் வன்முறையிலும் ஈடுபடுகிறார்களா என்பது பற்றி மக்களவையில் ராகுல் காந்தி குழந்தைத்தனமாகப் பேசினார். பாஜக மற்றும் ஆர். எஸ். எஸ்-இல் உள்ளவர்கள், குறிப்பாக பிரதமர் மோடி, ஹிந்துக்களா என்பது பற்றியும் ராகுல் காந்தி அறிவீனமாகப் பேசினார். அவர்தான் இப்போது மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர்.

ராகுல் காந்தியின் பேச்சு பத்திரிகைகளில் வெளிவந்த பின், மக்களவை சபாநாயகர் அந்தப் பேச்சின் சில பகுதிகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்கிவிட்டார். அந்தப் பகுதிகளை இனி அப்படியே வெளியிடுவது சரியல்ல. இருந்தாலும் ராகுலின் பேச்சைப் பொதுவாகக் குறிப்பிட்டு யாரும் அவரை விமரிசிக்கலாம்.

இந்தியாவில் வாழும் ஒரு சிறுபான்மை மதத்தினரைக் குறிப்பிட்டு, “தங்களை இந்த மதத்தினர் என்று சொல்லிக் கொள்ளும் அவர்கள், நாள் முழுவதும் வெறுப்பிலும் வன்முறையிலும் ஈடுபடுகிறார்கள்” என்று ராகுல் காந்தி பாராளுமன்றத்திலோ பொதுவெளியிலோ பேச முடியுமா?

மேலே உள்ள கேள்விக்கு அர்த்தம் இது: நமது சிறுபான்மை மதத்தவர் பற்றி ராகுல் அப்படிப் பேசவேண்டாம், பேசக் கூடாது. அதே போல, தங்களை ‘ஹிந்துக்கள்’ என்று அழைத்துக் கொள்ளும் எவரையும் ராகுல் மரியாதையாகப் பேசவேண்டும், அவர்களைக் கீழ்த்தரமாக இகழக் கூடாது. ஆனால் அரைகுறை ராகுலுக்கு இது எப்போதும் புரிவதில்லை.

மக்களவை உறுப்பினர்களான பிரதமர் மோடி மற்றும் பல பாஜக-வினர் தாங்கள் ஹிந்துக்கள் என்பதில் பெருமை கொண்டவர்கள். பிற மதத்தவர்களுக்குத் தங்கள் மதம் பற்றியும் அப்படியான உணர்வு இருக்கும். அதுவும் புரிந்து கொள்ளக் கூடியது.

மோடியையும் பாஜக உறுப்பினர்கள் பலரையும் பார்த்து ராகுல் மக்களவையில் பேசிய சில வார்த்தைகள் அபாண்டமானவை, அவர்களின் மத உணர்வுகளைப் பெரிதும் காயப் படுத்துபவை. அந்தக் காட்சியை நேரலைத் தொலைக்காட்சியில் பார்த்தவர்களுக்கு, அவர் சொற்களைப் பத்திரிகைகளில் படித்தவர்களுக்கு, ஒரு குட்டிக் கதை ஞாபகத்துக்கு வரலாம்.

தாம் சிங்கம் என்று பெருமையுடன் அமர்ந்திருந்த பல சிங்கங்களுக்கு அருகில் வந்து நின்ற ஒரு கழுதைப்புலி, அவைகளை நோக்கிப் பேசியதாம்: “நீங்கள் எல்லாம் சிங்கங்களே இல்லை!”. அதைக் கேட்ட எல்லா சிங்கங்களும் கோபம் அடைவதை உணர்ந்த கழுதைப்புலி சொன்னதாம், “நான் உலகத்தில் உள்ள எல்லா சிங்கங்களையும் சொல்லவில்லை! என் முன்னால் உட்காரந்திருக்கும் சிலரைத்தான் சொல்கிறேன்! நீங்கள் மட்டுமே உலகத்தின் அனைத்து சிங்கங்களாக மாட்டீர்கள்!”

இந்தியாவில் ஹிந்து மதத்தவரை மட்டும், ஒரு ஹிந்துவே நேராகவும் மறைமுகமாகவும் கேலியும் கிண்டலும் செய்து பேசமுடியும். அப்படிப் பேசுபவர் ஒரு அரசியல் தலைவராக இருந்தால் அதனால் அவர் ஓட்டுக்களைப் பெரிதாக இழப்பதும் இல்லை. ராகுல் இதை உணர்ந்திருக்கிறார்.

ஹிந்துக்களை – அதுவும் அரசியல் தலைவர்களாக இருக்கும் பெருமிதமான ஹிந்துகளை – இகழ்ந்து பேசுவதால், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மை மதத் தலைவர்களின் மதிப்பை அதிகம் பெறலாம் என்று ராகுல் காந்தி நம்புகிறார். அந்த மதத் தலைவர்களின் கட்டளைகள் மூலம், அந்த அந்த சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த அப்பாவி மக்கள் பலரின் ஓட்டுக்கள் தனது கட்சிக்குக் கிடைக்கும், பிறகு அடுத்த பிரதம மந்திரி தான்தான் என்ற நினைப்பு ராகுலை எப்படியும் பேச வைக்கிறது. அவரது அரைவேக்காட்டுத் தனமும் அவரை விடுவதாக இல்லை.

ராகுல் காந்தி இப்போது ஹிந்துக்களுக்கு ஒரு விஷயத்தை அழுத்தமாக உணர்த்தி இருக்கிறார். இந்தியாவில் வசிக்கும் ஹிந்துக்கள் மற்ற மதத்தவர்களிடம் நட்பாக, சாத்வீகமாக இருந்தால் மட்டும் போதாது. தமது நாட்டில் ஹிந்துக்கள் தழைப்பவர்களாகவும், அதற்குத் தேவையான தற்காப்பு மிக்கவர்களாகவும் இருப்பது அவசியம்.

இங்குள்ள இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்களில் பெரும்பான்மை மக்கள் நல்ல தனி மனிதர்களாக, அப்பாவிகளாக இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களின் லகான் அந்த அந்த மதத் தலைவர்களின் கைகளில் இருக்கிறது. ஹிந்து மதத்தின் நிலைமை அப்படி இல்லை.

ஹிந்து மதத் தலைவர்கள், அரசியலில் யாரை எதிர்ப்பது, யாரை ஆதரிப்பது என்று ஹிந்துக்களுக்கு வழிகாட்டுவதில்லை, அதற்கான ரகசிய உத்தரவுகள் பிறப்பிப்பது இல்லை. அப்படியான வழிகாட்டுதலோ, உத்தரவோ வந்தாலும் ஹிந்துக்களிடம் அது செல்லுபடியாகாது. இதையும் ராகுல் உணர்ந்திருக்கிறார்.

நமது நாட்டில் ஹிந்து மதத்தைப் பெருமையுடன் பின்பற்றும் தலைவர்களைக் கொண்ட பாஜக-வுக்கு, அந்த இரண்டு மதங்களின் தலைவர்கள் பலர் எதிர்ப்பாக இருக்கிறார்கள். காரணம் ஊரறிந்தது. ஊழல் மற்றும் வாரிசு அரசியலில் திளைத்து, பாஜக-வை எதிர்த்து நிற்கும் பிற கட்சிகள் இயல்பாக அந்த சிறுபான்மை மதத் தலைவர்களின் தயவை நாடுகிறார்கள். இதில் இரு தரப்புக்கும் பரஸ்பரப் பலன்கள் இருக்கின்றன. ராகுல் காந்தியின் பேச்சுக்கு இதுவும் ஒரு பின்னணி.

ஹிந்துக்கள் சொந்த மண்ணில் தழைக்க, கௌரவத்துடன் நீடிக்க, அவர்கள் வழி தேடும் நாள் எப்போதோ வந்துவிட்டது. மு. க. ஸ்டாலின், ராகுல் காந்தி போன்றவர்கள் தங்கள் பேச்சில், செயலில், ஹிந்துக்களையும் மதித்து நடந்துகொண்டால் தான், சொந்த நாட்டில் ஹிந்துகளுக்கான அபாயம் மங்கியது என்று அர்த்தம். ராகுலின் ஆட்டத்தை மக்களவையில் பார்த்த பாஜக தலைவர்களுக்கு இது தெரியாமல் போகாது. அவர்களும் எல்லா விஷயத்தையும் இப்போது வெளியில் பேச முடியாது.

ஜைனம், புத்தம், சீக்கியம் போன்ற சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்கள் இந்தியாவில் இன்று ஹிந்துக்களோடு இணக்கமாக, மோதல்கள் மற்றும் மதமாற்ற சச்சரவுகள் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். ஹிந்து மதத் தலைவர்களால், அவர்களின் செயல்பாட்டால், ஜைனர்கள், புத்தர்கள் மற்றும் சீக்கியர்களுக்குப் பிரச்சனை ஒன்றுமில்லை. அந்த மதத் தலைவர்களால் ஹிந்து மக்களுக்கும் பிரச்சனை ஏற்படுவதில்லை. இரு தரப்பிலும் நிம்மதி நிலவுகிறது. இப்போது ஒரு கேள்வி வருகிறது.

நமது நாட்டிலுள்ள இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் பற்றி, அவர்களின் வெளிப்படையான மற்றும் மறைமுக செயல்பாடுகள் பற்றி, ஹிந்து மக்களும் ஹிந்து மதத் தலைவர்களும் அதே நிம்மதி உணர்வைப் பெற முடிகிறதா? தவிர்க்க முடியாத முக்கியக் கேள்வி அல்லவா இது?

இந்தியாவில் ஹிந்துக்களின் அமைதியான மகிழ்வான எதிர்காலத்தை நாம் கவலையுடன் பார்க்க வேண்டி இருக்கிறது. ராகுல் காந்தியின் மக்களவைப் பேச்சும் அந்தக் கவலைக்கு ஒரு புதிய காரணம். இருந்தாலும் நமக்கு ஒரு ஆறுதல் தென்படுகிறது.

தேச நலனைப் பிரதானமாகச் சிந்திப்பவர்கள், அபாரத் திறமைசாலிகள், மத்தியில் இப்போது கூட்டணியுடன் ஆட்சி செய்கிறார்கள். எந்த நிலையிலும் அவர்கள், அவர்களுக்குப் பின் வருகிறவர்கள், அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள் என்று நாம் நம்பலாம். ஆகையால் இந்தியாவில் ஹிந்துக்களின் எதிர்காலம் பற்றி நாம் நம்பிக்கை கொள்ள இடமுண்டு. அப்படித் தானே நாம் காத்திருக்க வேண்டும்?

Author: R Veera Raghavan, Advocate, Chennai
(veera.rvr@gmail.com)
https://rvr-india.blogspot.com

உலகக் கோப்பையுடன் பிரதமர் மோடியை சந்தித்த இந்திய அணியினர்!

t20 world cup indian team met with pm narendra modiji - 2026

அண்மையில் நடைபெற்ற டி20 போட்டிகளில் பங்கேற்று, உலகக் கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணி வீரர்கள், பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 2024ம் ஆண்டுக்கான ‘டி-20’ உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப் போட்டியில், இந்திய அணி, தென்ஆப்ரிக்க அணியை 7 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து, ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.

17 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். பிரதமர் மோடி, உடனடியாக இரவு வெகுநேரமென்றும் பாராமல், ஒரு வீடியோ வாழ்த்துச் செய்தி வெளியிட்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந்நிலையில், ஜூலை 4 இன்று காலை, வெற்றிக் கோப்பையுடன் தில்லி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் இந்திய அணி வீரர்கள் டி20 உலகக் கோப்பையுடன் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துவாழ்த்துப் பெற்றனர். வட்ட வடிவில் நாற்காலிகளைப் போட்டு அவர்கள் அனைவருடனும் பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் உரையாடி, அவர்களது அனுபவங்களையும் உணர்ச்சிகரமான தருணங்களையும் கேட்டு மகிழ்ந்தார். தொடர்ந்து வீரர்கள் அனைவரும் பிரதமர் மோடியுடன் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

முன்னதாக, உலகக் கோப்பை ஒருநாள் தொடரில் இறுதிப்போட்டியில் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையைப் பெறாமல் போனது. அப்போது நேரில் வந்திருந்து அணி வீரர்களை பிரதமர் மோடி ஆறுதல் படுத்தி, விரைவில் வெற்றி பெறுவீர்கள் என்று நம்பிக்கை அளித்துப் பேசினார். அதன் பின்னர் சுமார் ஏழு மாத இடைவெளியில், டி20 உலகக் கோப்பை வெற்றி வீரர்களாக இந்திய அணியினர் பிரதமர் மோடியைச் சந்தித்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதன் பின்னர் இன்று மதியம் மும்பை வரும் இந்திய அணி வீரர்கள், மாலையில் மரைன் டிரைவ் பகுதியில் இருந்து வான்கடே மைதானம் வரை, திறந்தவெளி பஸ்சில் ஊர்வலமாக (ரோடு ஷோ) செல்ல உள்ளனர். இது குறித்து ரோஹித் சர்மா தனது எக்ஸ் சமூகத் தளப் பக்கத்தில் செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.

இன்று இரவில் வீரர்களுக்கு வான்கடே மைதானத்தில், அணி வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. தொடர்ந்து, பி.சி.சி.ஐ., சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ. 125 கோடி பரிசுத் தொகை அணியினருக்கு வழங்கப்பட உள்ளது.