Home Blog Page 276

கட் அண்ட் ரைட்டு கோவிந்து: இன்னா பேசுற வேலு? இந்தியா துபாய் பக்கமான ஊர்னு நெனச்சியா?

avvelu minister speech - 2026

— ஆர். வி. ஆர்

எ. வ. வேலுன்னு தமிள்நாட்ல ஒரு ஆளைத் தெரிமா? ஆங், அவருதான்! இப்ப வர்மான வரி ரெய்டு போய்க்கினு இருக்கே, அது தொடர்பான மாநில அமிச்சர்தான். அவருக்கு இப்ப 72 வயசு.

வேலு பேர்ல இருக்குற இனிசியல் ‘எ.வ’ அப்பிடின்ற எளுத்து எதைக் குறிக்கிதுன்னு முதல் அமிச்சர் ஸ்டாலின் சொல்லிக்கிறாரு. ‘எதிலும் வல்லவர்’னு அர்த்தமாம். வெளக்கமா சொன்னா, வேலைல கிங்கா இருப்பாரு வேலுன்னு பாராட்டிக்கிறாரு ஸ்டாலின். அதுக்கு இன்னா அர்த்தம்னு நம்ம கரீக்டா ஊகிச்சிரலாம்.

எ. வ. வேலு இப்ப பொதுப்பணித்துறை, ஐவேஸ் அப்பிடின்னு பால் சுரக்கற துறைங்களுக்கு மந்திரி. வல்லவருக்கு ஏத்த துறைங்களை கைல வெச்சிக்கினு வல்லமைய காட்டிக்கினு இருப்பாரு. இப்ப அவரு மேல வந்துக்குதே ரெய்டு, அத்தைக் காட்டியும் அவரு இன்னொரு விசயத்துல ஆல் இந்தியா பேமஸ் ஆயிக்கினாரு. அத்தைக் கொஞ்சம் பேசுவோம்.

கொஞ்ச நாள் மின்னாடி வேலு மைக்கைப் புடிச்சி ஒரு விசயம் பேசினாரு. கை தட்றதுக்கு வந்த ஆளுங்க டப டபன்னு கை தட்னானுங்க. வேலுவும் சிரிச்சிக்கினே அந்த விசயத்தை ரண்டு நிமிசம் நீட்டி பேசிக்கினாரு. கைதட்டல் கூடுச்சு. வேலுவும் கெத்தா மூஞ்சை வெச்சிக்கினாரு.

வேலு பேசுனது வரிக்கு வரி சுருக்கமா இதான்.

ஒரு காலத்துல இந்தியா என்பது கூட நமக்கு எப்பொழுதும் பெரிய தாக்கம் இருப்பதில்லை இந்தியா என்ற வார்த்தைக்கு எந்தக் காலத்துல நமக்கெல்லாம் தாக்கம் இருந்திருக்கிறது? ஒரு காலத்துல எங்க இருந்தது நமக்கெல்லாம்? இந்தியான்னா ஏதோ வடக்கே இருக்கற ஊரு! நம்ம ஊரு தமிழ் நாடுதான்! முடிஞ்சா திராவிட நாடுன்னு யோசிப்போம். நம்முடைய எண்ணங்கள் இப்படித்தான போய்க் கொண்டிருந்தது?

வெக்கம், மானம் இருந்து நாட்டை மதிக்கிற எந்தத் தலிவரும், எந்த அமிச்சரும், பொது மேடைல பேச ஆவாத ஒரு விசயத்தை வேலு தெனாவெட்டா பேசிக்கினாரு.

‘நம்ம, நமக்கு, நமக்கெல்லாம்’ அப்பிடின்னு வேலு பேசினது யாரை? திராவிடர் களகத்து ஆளுங்க, ஒட்டு மொத்த திராவிட அரசியல் தலிவருங்க, அதுல குறிப்பா முந்தின தலைமுறை மனுசங்க – இவுங்க இந்தியாவை முன்ன எப்பிடி நேசிக்காம இருந்தாங்கன்னு வேலு பேசிக்கினாரு. அந்த டைப்பு ஆளுங்கள்ள வேலுவும் ஒருத்தரு.

‘முன்ன அப்பிடி இருந்துக்கினோம்’னு ஒரு பளைய தகவலை மட்டும் சொன்னாரா வேலு – இல்லை ‘இப்பவும் அப்பிடி இருக்க எங்களுக்கு ஆசையா இருக்கு’ன்னு சைடால சொல்ல வந்தாரான்னு தெர்ல. கேக்குறவன் அப்பிடி கன்பியூஸ் ஆவுற மாதிரி பேசிக்கினாரு வேலு. அவர் பூரிச்சிப் போய் பேசுனதை நீ வீடியோவுல பாத்தின்னா நா சொல்றது டக்குனு புரியும்.

“முன்னதான் அப்பிடி தெரியாத் தனமா இருந்தோம், இப்ப திருந்தி ஊறுகா போட்ட கணக்கா தேச பக்தில ஊறிக்கினு இருக்கோம்” அப்பிடின்னும் வேலு பேசிக்கலை, மறைமுகமாவும் காட்டிக்கலை. அப்பிடிலாம் நெனச்சி பாக்குற ஆளா வல்லவர் வேலு?

இன்னா வேலு? நீ பொறந்ததே 1951, சுதந்திரத்துக்கு அப்பால. இந்தியா ஒரு நாடுன்னு உனக்கு தெரியாமவே இருந்திச்சா? இந்தியான்றது வடக்கையோ துபாய்க்குப் பக்கமோ எங்கியோ இருந்த ஊர் அப்பிடின்னு நெனச்சியா? யார் உனக்கு அப்பிடி சொன்னது? இஸ்கோல் போயி ஒண்ணு ரண்டு கிளாஸ் படிச்ச எவனும் – இல்லை அரசியல்ல பூந்த எவனும் – உன்னை மாதிரி நெனச்சிருக்க மாட்டானே?

‘இந்தியா ஒரு நாடு இல்லை, அது வடக்கே இருக்கற ஊருதான்’, அப்பிடின்னு நீயும் உன் ஆளுங்களும் நெனச்சிருந்தா, நீ பொறந்த ஊரு, பக்கத்து ஊரு, அதெல்லாம் எந்த நாடுன்னு நெனச்சீங்க?

‘முடிஞ்சா திராவிட நாடுன்னு’னு முன்ன யோசிச்சதா பேசினியே, அதுக்கு இன்னாபா அர்த்தம்? ஏற்கனவே உன் ஊரு ஒரு நாட்டுல அதோட பகுதியா இருக்குது, அந்த நாட்டுலேர்ந்து உன் ஊரு, அடுத்த ஊருன்னு கூட்டா பிரிஞ்சு திராவிட நாடுன்னு தனிநாடு அமைக்கணும்னு தானப்பா அர்த்தம்? எந்த நாட்லேர்ந்து நீ வெட்டிக்க நெனச்சியோ, அந்த நாடுதான் இந்தியா அப்பிடின்னு தெரியாத மண்ணாங்கட்டியா இருந்திச்சா ஒரு கட்சி, ஒரு கூட்டம்? இன்னா வேலு பேசுற?

நீ பையனா இருந்த நாள் தொட்டு தேசிய கீதம் கேட்ருப்பேல்ல? அது என்ன சொல்லுது? இந்திய நிலப் பரப்புல பஞ்சாப், திராவிடப் பிராந்தியம், வங்கம், குஜராத்னு நாலு திசைல இருக்கற பகுதிகள் பேரும் தேசிய கீதத்துல வர்தே, தெரிமா? இன்னும் மலைகள், நதிகள் பேரையும் சொல்லி இதெல்லாம் உள்ளடக்கியது ‘பாரதம்’னு அர்த்தம் தேசிய கீதத்துல இருக்கே? உன் 11வது வயசுல இருந்து – அதான் 1962ல இருந்து – எல்லா சினிமா தியேட்டரும் வருசக் கணக்கா தேசிய கீதம் போட்டுச்சே, தெரியும்ல? அது எந்த நாட்டுக்காரனுக்கு? திராவிடப் பகுதில இருக்கற தமிள் நாட்டு மக்களுக்கும் அதுதான் தேசிய கீதம்னு அப்ப புரிஞ்சிச்சா இல்லியா, வேலு?

இந்தியா பத்தி வேலு மேடைல பெனாத்தி மூணு மாசம் ஆச்சு. அதை முதல் அமிச்சர் ஸ்டாலின் கண்டுக்கலை, கண்டிக்கலை. அப்பறம் ஒரு மாசம் களிச்சு, ‘மலேரியா, டெங்கு மாதிரி சனாதனத்தை ஒளிக்கணும்’னு இன்னொரு அமிச்சர் பேசிக்கினாரு. அவருதான் ஸ்டாலின் பையன் உதயநிதி. சனாதனம் இந்தியா பூரா இந்துக்கள் மதிக்கிற, கடைப்பிடிக்கிற வாள்வு முறை. அதை ஒளிக்கணும்னு உதயநிதி பேசுனா ஸ்டாலின் அதுக்கும் சப்போர்ட் குட்துகினாரு. சனாதன எதிர்ப்பு பேச்சு மேல, ஏன் போலீஸ் ஆக்சன் எடுக்காம கைய கட்டிக்கினு இருந்திச்சுன்னு இப்ப நம்ம ஹை கோர்ட்டே கேக்குது.

இந்திய தேசம் பத்தி பெருமையா உணர்வு இல்லை. இந்துக்கள் பெர்சா மதிக்கற சனாதனம் பத்தி அளிக்கணும் ஒளிக்கணும்னு திமிருப் பேச்சு. இந்த மாதிரி ஆளுங்களுக்கு என்னதான்பா வேணும் இந்தியாவுல? மணல் கொள்ளை, கனிமவளக் கொள்ளை சுளுவா நடக்க இந்த மண்ணு வேணும். மாய்மாலமா பேசி ஓட்டு வாங்க ஜனங்க வேணும். மத்திய ஆட்சில பங்கு கெடிக்கிறா மாதிரி இருந்தா, விடக் கூடாது. அந்தப் பங்குதான் டாப்பு – அது சுளையா கெடச்சிட்டா, வேலு கூட இந்தியாவை ஒஸ்த்தியா பேசிப்பாரு.

தமிள்நாட்டு அரசியல் உருப்புட்டு, ஆட்சில நீதி நாயம் ஏற்பட்டா என்ன ஆவும்? அப்ப எல்லாப் பெரிய கட்சித் தலிவருங்களும் மேடைல இப்பிடித்தான் பேசுவாங்க: “திராவிடம்னா இப்ப நமக்கு ஒரு தாக்கமும் இல்லை. எங்க இருக்கு நமக்குலாம்? திராவிட நாடு, திராவிட மாடல்னு ஏதோ பளைய காலத்துல, தலிவருங்க ராங்கா பேசிக்கினாங்க. இப்ப நமக்கு உயிர் மூச்சு எது? அதான் பாரதம். ஜெய் ஹிந்த்!”

தமிள்நாடு உருப்புடணும், தலிவருங்க இப்பிடி மாத்திப் பேசற காலம் வர்ட்டும்னு வேண்டிக்கினு கோவிலுக்குப் போ, அங்கப் பிரதட்சிணம் பண்ணு. வெரதம் இரு, காவடி எடு. ஆண்டவன்தான் இப்ப தமிள் நாட்டு மானம், மருவாதை, மக்கள் அல்லாத்தையும் காப்பாத்தணும். இன்னான்ற?

 Author: R. Veera Raghavan, Advocate, Chennai 
Blog: https://rvr-india.blogspot.com

WC 2023: ஒற்றை மனிதராய் மேக்ஸ்வெல் Vs ஆப்கானிஸ்தான் ஆட்டம்!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
34ஆம் நாள் – ஆப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா
மும்பை – 07.11.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          ஆப்கானிஸ்தான் அணியை (291, இப்ராஹிம் சத்ரன் 129*, ரஷீத் கான் 35*, ரஹ்மத் ஷா 30, ஷஹீதி 26, ஹேசல்வுட் 2/39) ஆஸ்திரேலிய அணி (46.5 ஓவர்களில் 293/7, கிளன் மேக்ஸ்வெல் 201*, நவீன் உல் ஹக் 2/40, ஒமர்ஜாய் 2/37, ரஷீத் கான் 2/40) 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் (21 ரன்) 8 ஓவர்கள் வரை விளையாடி ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் இப்ராஹிம் சத்ரன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி 129 ரன் அடித்தார். ரஹ்மத் ஷா (30 ரன்), ஷஹீதி (26 ரன்), ஒமர்ஜாய் (22 ரன்), நபி (12 ரன்), ரஷீத் கான் (ஆட்டமிழக்கமல் 35 ரன்) என சத்ரனுக்கு துணைநின்றனர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 291 ரன் அடித்தது.

          பதிலுக்கு ஆடவந்து ஆஸ்திரேலிய அணியின் விக்கட்டுகள் தொடக்கம் முதல் மளமளவெனச் சரிந்தன. 18.3 ஓவரில் ஏழு விக்கட் இழப்பிற்கு 91 ரன் அடுத்து வெற்றிக்கு வாய்ப்பில்லை என்ற நிலைக்கு ஆஸ்திரேலிய அணி வந்தது. அதன் பின்னர் கிளன் மேக்ஸ்வெல் பேயாட்டம் ஆடினார்; 128 பந்துகளில் 201 ரன்; 10 சிக்சர், 21 ஃபோர். அவருடன் பேட் கம்மின்ஸ் (68 பந்துகளில் 12 ரன்) துணைநின்றார். மேக்ஸ்வெல் முதல் 51 பந்துகளில் 50 ரன் அடித்தார்; அடுத்த 25 பந்துகளில் சத்தத்தை நிறைவு செய்தார்; அடுத்த 28 பந்துகளில் 150 ரன்; அடுத்த 24 பந்துகளில் 200 ரன். மேக்ஸ்வெல் 27 ரன்னில் இருக்கும்போது எல்.பி. டபில்யூ கேட்கப்பட்டது; மேக்ஸ்வெல் ரிவ்யூ செய்தார்: மூன்றாவது அம்பயர் அவுட் இல்லை எனச் சொல்லிவிட்டார். இறுதியில் 46.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 293 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது. மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

          12 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது. அரையிறுதிக்கு அந்த அணி தகுதிபெற்றுவிட்டது. இப்போது நாலாவது இடத்திற்கான அணி எது என்பது இனி முடிவாகும். நாளை புனேயில் இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகளின் ஆட்டம் நடைபெறும்.

மீதமுள்ள ஆட்டங்கள்

  1. 09 நவம்பர் – நியூசிலாந்து vs இலங்கை;
  2. 10 நவம்பர் – ஆப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா;
  3. 11 நவம்பர் – இங்கிலாந்து vs பாகிஸ்தான்;
  4. 12 நவம்பர் – இந்தியா vs நெதர்லாந்து.   

2024க்கான இளநிலை நீட் தேர்வு தேதி அறிவிப்பு!

1752877 neet - 2026

2024-ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

அடுத்த கல்வியாண்டுக்கு பல்கலைக்கழகங்கள், மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகளை தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வ அறிவிப்பை செவ்வாய்க்கிழமை காலை வெளியிட்டுள்ளது.

NEET UG

அதன்படி, இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு (நீட்) மே 5, 2024 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

JEE main (2 sessions)

மேலும், ஜேஇஇ முதல் தேர்வு ஜனவரி 24, 2024 முதல் பிப்ரவரி 1, 2024 வரையும், ஜேஇஇ இரண்டாம் தேர்வு ஏப்ரல் 1, 2024 முதல் ஏப்ரல் 15, 2024 வரையும் நடைபெறவுள்ளது.

CUET

அதேபோல், க்யூட் இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு மே 15, 2024 முதல் மே 31, 2024 வரையும், முதுநிலை படிப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 11, 2024 முதல் மார்ச் 28, 2024 வரையும் நடைபெறவுள்ளது.

UGC-NET

யுஜிசி-நெட் முதல் தேர்வுகள் ஜூன் 10, 2024 முதல் ஜூன் 21, 2024 வரையும் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

ஊரெல்லாம் தீபாவளி சிறப்பு ரயில்! ஆனா தென்காசி செங்கோட்டை பயணிகளுக்கு ஏமாற்றம்!

train - 2026
#image_title

திருநெல்வேலிக்கு கூடுதல் வந்தே பாரத் தீபாவளி சிறப்பு ரயில்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலிக்கு கூடுதலாக ஒரு வந்தே பாரத் ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. வழக்கமான வந்தே பாரத் ரயில் திருநெல்வேலியில் இருந்து பயணத்தை துவக்கி திருநெல்வேலியில் முடிக்கும் ஆனால் இந்த சிறப்பு ரயில் சென்னை எழும்பூரில் பயணத்தை தொடங்கி சென்னை எழும்பூரில் பயணத்தை முடிக்கிறது.

இதன்படி நவம்பர் 9 அன்று சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத் சிறப்பு ரயில் (06067) சென்னை எழும்பூரில் இருந்து காலை 06.00 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.15 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் ரயில் (06068) மாலை 03.00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த சிறப்பு ரயில் வழக்கம் போல தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தாம்பரம் – நாகர்கோவில் ஒரு வழி தீபாவளி சிறப்பு ரயில்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம் – நாகர்கோவில் ரயில் நிலையங்கள் இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் (06061) நவம்பர் 10, 17, 24 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.10 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும்

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் இணைக்கப்படும்.

நாகர்கோவில் – பெங்களூரு – நாகர்கோவில் சிறப்பு ரயில்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க நாகர்கோவில் – பெங்களூர் ரயில் நிலையங்கள் இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவில் – பெங்களூரு சிறப்பு ரயில் (06083) நவம்பர் 7, 14, 21 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு 07.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு பெங்களூரு சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் பெங்களூரு – நாகர்கோவில் சிறப்பு ரயில் (06084) நவம்பர் 8, 15, 22 ஆகிய புதன்கிழமைகளில் பெங்களூரிலிருந்து மதியம் 02.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.10 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும் இந்த ரயில்கள் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், மொரப்பூர், திருப்பத்தூர், பங்கார பேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு கன்ட்டோண்மென்ட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்படும்.

நெல்லை நாகர்கோயில் பெங்களூர் மங்களூரு என பல்வேறு பகுதிகளிலும் தீபாவளி சிறப்பு ரயில் வசதி செய்து தரப்பட்டுள்ள நிலையில் அதிக மக்கள் பயணிகள் பயணம் செய்யும் சிவகாசி ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரன்கோவில் தென்காசி செங்கோட்டை க்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்படாததால் தென்காசி விருதுநகர் மாவட்டம் மற்றும் கேரள பயணிகள் ஏமாற்ற மடைந்துள்ளனர்.

ஊரெல்லாம் தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படும் நிலையில் ஏமாற்ற மடைந்த தென்காசி செங்கோட்டை பயணிகளை கவனத்தில் கொண்டு சென்னை செங்கோட்டை இடையே தீபாவளி சிறப்பு ரயில் இயக்குவது அவசியமாகும்.

மேலும் கூடுதல் தீபாவளி ஸ்பெஷல் ரயில் சென்னை எக்மோர் To திருநெல்வேலி வரை ரயில் எண் 06069_06070 விழுப்புரம் மாயவரம் திருவாரூர் காரைக்குடி மானாமதுரை வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருத்துறைபூண்டி முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை போராவூரணி அறந்தாங்கி காரைக்குடி நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது

கிழக்கு கடற்கரை இரயில் நிலைய பயணிகள் இந்த ரயிலில் முன்பதிவு செய்தும் முன்பதிவு செய்யாமலும் பயணம் செய்யலாம்.

சென்னை எக்மோர் புறப்படும் தேதி நவம்பர் 10–17 — 24 நேரம் மதியம் 3.00 மணி திருநெல்வேலியிலிருந்து புறப்படும் தேதி நவம்பர்-9–16 —.23 நேரம் மாலை 6.45 மணியாகும்

ஏ.ஐ. தொழில்நுட்ப விபரீதம்: போலி வீடியோ பற்றி ராஷ்மிகா வேதனை!

rashmika mandana deep fake video - 2026
#image_title

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, அரை குறை ஆபாச ஆடையுடன் இருப்பது போன்ற போலியாக சித்திரிக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

பிரபலங்களின் முகத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எனும் ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் – ஏ.ஐ., தொழில்நுட்ப உதவியுடன் மாற்றி பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்தனர். ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் போலி வீடியோ குறித்து ராஷ்மிகா, தனது ‛எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஆன்லைனில் என்னை போலியாக சித்திரித்து பரபரப்படும் வீடியோவை பற்றி மிகவும் வேதனையுடன் இதனை பகிர்கிறேன்.

தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவதை பார்க்கையில், எனக்கு மட்டுமல்ல, ஒவ்வொருவரும் பயப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு பெண்ணாகவும், நடிகையாகவும் இருக்கும் எனக்கு ஆதரவாக இருக்கும் எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இது என்னுடைய பள்ளி, கல்லூரி காலங்களில் நடந்திருந்தால், இதனை எப்படி சமாளித்திருப்பேன் என என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இதனால் பலர் பாதிக்கப்படுவதற்கு முன்பு, இது குறித்து தெரியப்படுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவுக்கு பதில் கொடுத்திருந்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், அரசு இந்த விவகாரத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும், நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்திருக்கிறார்.

அயோத்திக்கு பாஜக., செலவில் 60 நாட்களுக்கு தமிழகத்தில் இருந்து இலவச பயணம்: அண்ணாமலை அறிவிப்பு!

annamalai in pudukkotai - 2026
#image_title

அயோத்திக்கு தமிழக பாஜக., செலவில் ராமர் கோவில் குடமுழுக்கு கழிந்த 60 நாட்களுக்கு இலவச பயணம் செய்ய ஏற்பாடு செய்யப் போவதாக தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட 2020 ஆக., 5ல் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மூன்று தளங்களாக உருவாகி வரும் இந்தக் கோவிலின் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

கோவிலைச் சுற்றி 70 ஏக்கரில் ஸ்ரீராமகுண்டம், அனுமன் சிலை, ராமாயண நூலகம், மகரிஷி வால்மீகி ஆராய்ச்சி நிலையம், மூலவர் மண்டபம் உள்ளிட்ட பலவும் அமைய உள்ளன. மூலவர் சந்நிதி விமானம், 161 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

கோவிலின் கும்பாபிஷேகம் வரும் 2024 ஜனவரி 22ல் நடைபெறும் என கட்டுமானக் குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், கும்பாபிஷேகம் முடிந்த பின் அடுத்த 60 நாட்களுக்கு தமிழக மக்கள் இலவசமாக ரயிலில் அயோத்தி சென்று ராமரை தரிசித்து வரலாம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். இதற்கான முழு செலவையும் தமிழக பாஜக., ஏற்கும் என்றும் புதுக்கோட்டையில் என் மண், என் மக்கள் பயணத்தின் போது தெரிவித்துள்ளார்.

தனது பயணக் குறிப்புகளை அண்ணாமலை பதிவு செய்திருப்பதில் இருந்து…

இன்றைய #EnMannEnMakkal பயணம், ஆபத்சகாயேஸ்வரர் அருள் புரியும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 36 கிராம பகுதிகளின் மையப் பகுதியான கந்தர்வகோட்டை மண்ணில், மக்கள் ஆரவாரத்துடன் சிறப்பாக நடைபெற்றது. சோழ தேசத்தின் மாபெரும் அடையாளமாகவும், காவல் நகரமாகவும், சோழர்கள் மாபெரும் சனாதன சைவர்களாக இருக்கக் காரணமான ராஜமாதா செம்பியன் மகாதேவியின் கணவர் சிவனருட்செல்வர் கண்டராதித்த சோழனின் பெயரில் அமைந்த கோட்டையே பின்பு கண்டராதித்த சோழ கந்தர்வகோட்டை என்று பரிணமித்தது.

கண்டராதித்த சோழனால் ஸ்ரீராமசந்திர மூர்த்திக்கு கட்டப்பட்ட ஆலயம் கந்தர்வகோட்டையில் உள்ளது. ஆனால், எங்களுக்கு ராமர் யாரென்றே தெரியாது, நாங்கள் ராமரை வணங்கமாட்டோம் என்று கூறுகிறார் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்கள்.

தொழில்வளர்ச்சி இல்லாத காரணத்தால், புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் சிங்கப்பூர் மற்றும் மலேஷியா போன்ற வெளிநாடுகளில் பணிபுரிந்து அந்த நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். ஒருபுறம் இது பெருமையாகவும் மறுபுறம் கவலையாகவும் இருக்கிறது. 70 ஆண்டுகளாக ஒரு சில பகுதிகளைத் தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளை இங்கிருந்த ஆட்சியாளர்கள் உதாசீனப்படுத்தியதன் வெளிப்பாடே இது. திமுக ஆட்சியால் தமிழகத்திற்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்திலிருந்து நம்மை ஆபத்சகாயேஸ்வரர் தான் காப்பாற்றவேண்டும்.

கந்தர்வகோட்டை உட்பட புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 15 ஆயிரம் ஏக்கருக்கு முந்திரி சாகுபடி நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது இங்கு முந்திரி தொழிற்சாலை அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்தது. காவிரி வைகை குண்டாறு இணைப்பு என எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

இந்தியாவையே உலுக்கிய வேங்கைவயல் குடி தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் இந்த தொகுதியில் தான் நடைபெற்றது. 300 நாட்கள் ஆகிவிட்டது ஆனால் இன்னுமும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. தமிழ்நாட்டில், 38 மாவட்டங்களில் 37 மாவட்டங்களில் உள்ள 345 கிராமங்களில் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கு எதிரான குற்றங்களுக்காக ‘கொடுமைக்கு ஆளாகக்கூடியவை’ என அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே, தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு ‘அட்டூழியங்கள்’ அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. சமூகநீதி என்று வாய் கிழிய பேசிவிட்டு சமூக அநீதி புரிந்தவர்களுக்கு துணை செல்வது தான் திராவிடமாடல்.

புதுக்கோட்டை உட்பட தமிழகத்தில் 8 மாவட்டங்களில் நிலக்கரி எடுத்தால் விவசாயம் பாதிக்கப்படும் என்று இந்த பகுதி விவசாயிகள் தெரிவிக்க, தமிழக பாஜக மத்திய அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி அவர்களிடம் கோரிக்கை வைத்து இரண்டே நாட்களில் டெல்டா பகுதியில் விடப்பட்ட நிலக்கரி டெண்டர் ரத்து செய்யப்பட்டது. விவசாயிகளுக்கு பக்கபலமாக பாஜக என்றும் துணை நிற்கும் என்பதற்கு இந்த நிலக்கரி டெண்டர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஆனால் கடந்த திமுக ஆட்சியில் மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டு, மூன்று வருடத்திற்குப் பிறகு நாடகம் ஆடினர்.

கந்தர்வகோட்டை மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளான, தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்ல புதிய இருப்புப்பாதை வழி, தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் இருந்து கந்தர்வக்கோட்டைக்கு காவிரி நதியில் இருந்து துணை வாய்க்கால் வெட்டி, சுற்றுவட்டாரத்தில் இருக்கும் 30 கிராம மக்களின் விவசாய நிலங்களுக்குப் பாசன வசதி, தாலுகா மருத்துவமனையை தரம் உயர்த்துதல் வேண்டும் என்ற கோரிக்கைகள் ஒன்றையும் திமுக நிறைவேற்றவில்லை. இவற்றை நிறைவேற்ற தமிழக பாஜக மக்களுடன் இணைந்து போராடும்.

வரும் பாராளுமன்ற தேர்தலில், மக்கள் விரோத திமுக கூட்டணியை மொத்தமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சி தொடர, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம்.

நேற்றைய மாலை #EnMannEnMakkal பயணம், புற நானூற்றில் ஒல்லையூர் என்றழைக்கப்பட்ட, பிரகதாம்பாள் அம்மன் குடி கொண்டிருக்கும் புதுக்கோட்டை மண்ணில், மாபெரும் மக்கள் திரள் சூழ சிறப்பாக நடந்தேறியது.

நமது நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், மாண்புமிகு புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான் அவர்கள், தமது சொத்துக்கள் முழுவதையும் அரசிடம் ஒப்படைத்தார். 100 ஏக்கர் நிலம் கொண்ட மன்னரின் அரண்மனையும், புதுக்கோட்டை மாவட்டமாக உருவாக்கப்பட்ட போது, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியிடம், புதுக்கோட்டை மன்னர் ராஜகோபாலத் தொண்டைமான் ஒப்படைத்தார். 100 ஏக்கர் நிலம் கொடுத்த அவருக்கு மணிமண்டபம் மற்றும் அருங்காட்சியகம் கட்ட 2 ஏக்கர் நிலம் கொடுக்க திமுக அரசு யோசிக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி அன்று தமிழக பாஜக சார்பில் இதைப் பற்றி ஒரு அறிக்கையை நான் வெளியிட்டிருந்தேன். இதுவரை திமுக பதிலளிக்கவில்லை.

தமிழகத்தின் மொத்த மாநில உற்பத்தியில் (GSDP) புதுக்கோட்டை மாவட்டத்தின் பங்களிப்பு வெறும் 1.5 சதவீதம் மட்டுமே. இந்த மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்து அந்த நாடுகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். ஆனால் தொழில்வளர்ச்சி இல்லாத காரணத்தால், புதுக்கோட்டை வளர்ச்சியடையாமல் இருக்கிறது.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், மீனவர் நலனுக்காக முதல் முறையாக மத்திய அரசில் புதிய துறையை 2019 ஆம் ஆண்டு உருவாக்கினார். தமிழகத்துக்கு 2021 முதல் 2023 வரை ரூ 617 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மீனவ உள்கட்டமைப்பு நிதி மற்றும் மத்சய சம்பதா திட்டங்கள் மூலம் 1356 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,84,457 மீனவர்கள் பயன் அடைந்துள்ளனர். தமிழகத்தில் மீன்பிடி துறைமுகங்கள் உருவாக்கிட 1464 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,42,458 மீனவர்கள், மீன் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படவுள்ளது. 47,594 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 1,64,506 வீடுகளில் குழாயில் குடிநீர், 1,43,184 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,64,792 பேருக்கு ரூபாய் 300 மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 75,667 பேருக்கு பிரதமரின் 5 லட்ச ரூபாய் மருத்துவ காப்பீடு, 1,28,995 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 2556 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என, மத்திய அரசு செய்துள்ள நலத்திட்டங்கள் ஏராளம். பாஜக இந்த சாதனைகளை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்கும்.

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்று புதுக்கோட்டை. இதை சரி செய்து, வேலைவாய்ப்புகள் வழங்க இந்த மாவட்டத்தின் இரண்டு திமுக அமைச்சர்கள் ஒன்றுமே செய்யவில்லை. திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான புதுக்கோட்டை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும், விராலிமலை, கீரனூர், கந்தர்வகோட்டையில் உழவர் சந்தை அமைக்கப்படும், அறந்தாங்கியில் பொறியியல் கல்லூரி தொடங்கப்படும், புதுக்கோட்டை நகராட்சிக்குப் புதிய கட்டடம் கட்டப்படும், கரம்பக்குடியில் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்படும், கொள்ளிடம் உபரிநீர் திட்டம் குன்றாண்டார் கோயில் வரை நீட்டிக்கப்படும், ஆலங்குடி கீரமங்கலத்தில் நறுமணத் தொழிற்சாலைகள் அமைக்கப்படும், பொன்னமராவதி, ஆலங்குடி, பேரூராட்சிகள், நகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் கரம்பகுடிக்கு விரிவுபடுத்தப்படும் என்றுக்கூறி ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை.

இப்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று பொய் சொல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

வரும் பாராளுமன்ற தேர்தலில், கொடுத்த எந்த தேர்தல் வாக்குறுதிகளையுமே நிறைவேற்றாத திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நலத்திட்டங்கள் தொடர, பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுப்போம்.

வயலூர் முருகனும் வாரியார் சுவாமிகளும்!

kirubananda variar - 2026

திருமுருக கிருபானந்த வாரியார் (25.8.1906 – 7.11.1993)

  • கே.ஜி. ராமலிங்கம்

முருகனிடம் இருந்து தான் பெற்ற கிருபையை ஆனந்தமாக வாரி வாரி மக்களுக்கு மனமுவந்து வழங்குவதை கடமையென செய்ததால் “கிருபா அனந்த வாரியார்” (கிருபானந்த வாரியார்) என்று அழைக்கப்படுகிறார்.

மனித வாழ்க்கையில் எக்காலத்திலும் நினைத்துப் போற்றக்கூடியவர்களாக வாழ்பவர்கள் ஒரு சிலரே. அந்த மிகச் சிலருள் ஒருவர் தான் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.

மல்லையதாசர், கனகவல்லி தம்பதிக்கு நான்காவது பிள்ளையாகப் 25.8.1906ல் பிறந்தார். தந்தையே இவரின் கல்வி குரு. 8 வயதில் கவி பாடி, பன்னிரு வயதில் பதினாயிரம் பண்களை மனப் பாடம் செய்து, பதினெட்டு வயதில் சொற்பொழிவு வித்தகராக உருவானார், அவையறிதலில் பரமஞானி. யாருக்குத் தகுந்தபடி என்ன சொல்ல வேண்டும், எப்படிச் சொல்ல வேண்டும் என நொடியில் கணித்துவிடும் திறமை இயற்கையாகவே இவருக்கு அமையப் பெற்றது இறைவனின் அருள் என்றே சொல்லலாம்.

அவரின் நகைச்சுவை சொல்லாடலுக்கு மயங்காத ஆளே அந்தக் காலத்தில் இல்லை. இப்போது நாம் சொல்லுகிற டைமிங்' என்பதன் மொழி வடிவம் தான் வாரியார் சுவாமிகள். நகைச்சுவையை தேவைப்படும் இடங்களில் மட்டும் நறுக்காகப் பயன்படுத்துவதில் வல்லவர்,சைவ சித்தாந்தம்’, பக்தி நெறி',இறையருள்’ பற்றி மணிக்கணக்கில் பிரசங்கம் நிகழ்த்தி எப்பேர்ப்பட்டவரையும் ஈர்த்துவிடும் திறன்கொண்டவர்.

இசைப் பேரறிஞர் என்பதால், தேவாரம், திருமந்திரம், திருப்புகழ் என பக்திச்சுவை சொட்டும் பதிகங்கள் பாடியும், அவற்றை விளக்கியும் மெய்யன்பர்களுக்கு ஆசியுரை வழங்குவதில் இவருக்கு நிகர் இவரே.

அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். அவரது “ஆன்மிக மொழி” பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும் சிந்தாந்தக் கருத்துகளையும் கூறியது. சுவாமிகள் தமிழுடன் சைவ சித்தாந்தத்திலும் பெரும்புலமை பெற்றவர். அவரது சொற்பொழிவுகள் அநேகமாக நாடக பாணியில் இருக்கும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும்.

கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஆன்மீகம் தமிழகத்தில் தழைக்க வேண்டி கணக்கிடமுடியாத தொண்டுகள் உழவாரப்பணிகள் போன்ற பலவகை நற்காரியங்களை செய்துள்ளது எல்லோரும் அறிந்ததே. அவருடைய ஆன்மீக சொற்பொழிவுகளில் மேடைக்கு முன்பகுதியில் குழந்தைகளையும் மாணவர்களையும் அமரச் சொல்லி அவர்களிடம் ஆன்மீக கேள்விகள் கேட்பதுண்டு, அதில் நானும் ஒருவன். அவருக்கு பிறகு பள்ளி கல்லூரி மாணவச் செல்வங்களிடத்தில் அன்பும் பாசமும் மிக்கவர் அப்துல் கலாம் ஐயா அவர்கள்.

வாரியாரின் சொற்பொழிவை கேட்டுக் கொண்டு இருப்பவர்கள் பாதியிலேயே எழுந்து சென்றதாக சரித்திரமே இல்லை. அவ்வளவு விஸ்தாரமாக கதைகளை மேற்கோள்காட்டி விளக்குவார், சில கேள்விகளை முன்னால் அமர்ந்திருக்கும் குழந்தைகளிடம் கேட்பார், பதில் அளித்ததும் தன் கையில் வைத்துள்ள சிறிய அளவிலான கைப்புத்தகத்தை அந்த குழந்தையிடம் கொடுத்து மகிழ்விப்பார். ஒரு தரம் இப்படி சொற்பொழிவாற்றிக்கொண்டு இருக்கும் போது 12-B பஸ்ல ஏறினால் எங்க போகலாம் என்று முன்னாடியில் உள்ள பையனிடம் கேட்டார், அவன் பதில் சொல்ல முடியாமல் விழிக்கவே, உடனே அவர் அந்த பஸ்ல ஏறினால் தேனாம்பேட்டை போகலாம், ஆனால் அந்த பஸ் நம்ம மேல ஏறினால் கிருஷ்ணாம்பேட்டை போகலாம் என்று சொல்ல ஒரே சிரிப்புதான்.

மக்கள் திலகமும் மல்லையதாசர் வாரியாரும் – ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்தாலும் இயல், இசை, நாடகம் என்று மூன்று துறைகளிலும் தனித்திறமையைக் காட்டியவர், யானைக்கவுனியில் உள்ள பிரம்மஸ்ரீ வரதாச்சாரியாரிடம் வீணைப் பயிற்சி பெற்றார், இவரது சொற்பொழிவுக்கு நாத்திகர்களும் கூட ரசிகர்களே.

வாரியார் சுவாமிகள் கந்தலங்காரம்/ கந்தபுராணம் சொற்பொழிவாற்றும் போது நம்மை செந்தூருக்கே கொண்டு சென்று விடுவார்.

பொன்னை (தங்கம்) உருக்கி அடித்து நகைகள் செய்யும் போது ஒரு மனம் வரும் அந்த மனம் என்றும் மாறாத குணம் கொண்டது, அது போலத்தான் மக்கள் திலகம் எம் ஜி ஆரின் மனமும் வள்ளல் தன்மையும், வாரியார் மக்கள் திலகத்திற்கு அளித்த பட்டம் தான் அந்த “பொன்மனச்செம்மல்” என்ற பட்டம்.

வாரியார் எழுத்துத் துறையில் மட்டும் அல்லாமல், தமிழ்த் திரைப்படத் துறையிலும் தன்னைச் சேர்த்துக் கொண்டார். தியாகராஜ பாகவதர் நடித்த ‘சிவகவி’ படத்துக்கு வசனங்கள் எழுதினார். முதலில் மறுத்தாலும் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் வேண்டுகோளுக்கு ஏற்றுக் கொண்டு ‘துணைவன்’, ‘திருவருள்’, ‘தெய்வம்’, போன்ற சில தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்தார்.

வாரியார், வாழ்நாள் முழுவதும் கோயில், பூஜை, சொற்பொழிவு என ஆன்மிக வழியில் சென்று கொண்டிருந்தார். ஒருநாள் கூட முருகனுக்குப் பூஜை செய்யாமல் இருந்ததில்லை. இவரின் மூச்சுக் காற்றுகூட‘முருகா! முருகா!!’ என்றுதான் இருந்தது. வயலூர் முருகன் மீது அவருக்குத் தனி ஈடுபாடு. “வயலூர் எம்பெருமான்” என்று கூறித்தான் அவர் தன் சொற்பொழிவைத் துவங்குவது வழக்கம். ஏராளமான கோயில்களுக்குத் திருப்பணி செய்து கொடுத்த பெருமையும் இவருக்கு உண்டு. இவர் திருப்பணி செய்ய உதவி புரிந்த கோயில்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதவை.

ஒரு தரம் திருச்சியில் வாரியார் சொற்பொழிவில் பேசுகிற போது எம். கே. தியாகராஜ பாகவதர் (புகழின் உச்சியில் இருந்து வந்த சமயத்தில்) சொற்பொழிவை கேட்க வந்த சமயம் ஒரே பெருங்கூட்டம். முன் வரிசையில் பாகவதர் எழுந்து கிளம்புவதற்கு எத்தனிக்கவே, அவரை வாரியார் நிறுத்தி இன்னும் பத்து நிமிடங்களில் முடித்து கொள்கிறேன் என்று சொல்லவும் பாகவதரும் ஒப்புக் கொண்டார். சொற்பொழிவு முடிந்ததும் பாகவதர் கிளம்பியதும் தான் தாமதம் கூட்டம் முழுவதும் காலி, பக்கவாத்தியக் காரர்களும், கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் தான் மிச்சம்.

கடவுள் என்று சொன்னால் கடவுளுக்குச் சில இலக்கணங்கள் உண்டு. என்ன இலக்கணம்? முதல் இலக்கணம் இறப்பும் பிறப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். நான் சொல்வதையெல்லாம் எப்பொழுதும் நினைவிலே வைத்துக் கொள்ள வேண்டும். எத்தனையோ காலமாக எத்தனையோ நூல்களைப் படித்து அனுபவத்தில் சொல்கிறேன். பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல. நம்மைப் போல பெரிய ஆத்மா என்றுதான் அர்த்தம். சிவபெருமானுக்கு இறப்பும் பிறப்பும் கிடையாது. சிவனே முருகன்; முருகனே சிவன். ஆகவே முருகனுக்கும் இறப்பும் பிறப்பும் கிடையாது.

“செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்”

என்கிறார் அருணகிரியார் கூறியுள்ளார் கந்தரனுபூதியில்.

பிறப்பு இறப்பு இல்லாதவன் இறைவன். அதுதான் இறைவனுடைய லட்சணம். இந்தப் பாட்டில் வருகிறது:

“ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி
வேதமும் கடந்து நின்ற விமலஓர் குமரன் தன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க என்றார்”

நீ தர வேண்டும். ஆண்டவனே குழந்தையை நீரே தர வேண்டும். “நீ தர” – அது தங்களிடத்திலிருந்து வர வேண்டும். “நின்னையே நிகர்க்க” என்றார்.

1993-ம் ஆண்டு லண்டன் பயணம் முடித்து தமிழகம் திரும்பும்போது சென்னையை அடையுமுன்னரே விமானம் திருத்தணிகை மலையின் மேல் பகுதியில் பறந்து வந்து கொண்டிருந்த நேரத்தில் பரமனின் மைந்தன் பதத்தை ஆவரது ஆத்மா சென்றடைந்தது. அவருடைய பூதவுடல் தான் சென்னையில் இறங்கியது புகழுடல் தணிகாசலம் மூர்த்தியுடன் இரண்டற கலந்துவிட்டது.

என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்
என்னால் துதிக்கவும் கண்களாலே
என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்
என்னா லிருக்கவும் பெண்டிர்வீடு
என்னால் சுகிக்கவும் என்னால் புசிக்கவும்
என்னால் சலிக்கவும் தொந்தநோயை
என்னா லெரிக்கவும் என்னால்
நினைக்கவும்
என்னால் தரிக்கவும் இங்குநானார்
கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல்
கர்ணா மிர்தப்பதம் தந்தகோவே
கல்லார் மனத்துட னில்லா மனத்தவ
கண்ணா டியிற்றடம் கண்டவேலா
மன்னா னதக்கனை முன்னாள் முடித்தலை
வன்வா ளியிற்கொளும் தங்கரூபன்
மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
மன்னா முவர்கொரு தம்பிரானே…

என்ற வயலூர் திருப்புகழில் அருணகிரிநாதர் முருகனிடம் வேண்டுகிறார். அவர் வாழ்ந்த காலத்தில் அவரோடு வாழ்ந்தோம். வாரியார் சுவாமிகளின் பரத்யட்சமான தெய்வமாய் வழிபட்ட அந்த வயலூர் முருகனை நாமும் வேண்டுவோம்.

WC 2023: பந்துவீச்சில் சொதப்பிய இலங்கை! வங்கதேசம் வெற்றி!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
33ஆம் நாள் – இலங்கை vs வங்கதேசம்
டெல்லி – 06.11.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          இலங்கை அணியை (49.3 ஓவரில் 279, சரித் அசலங்கா 108, பதுன் நிசாங்கா 41, சமரவிக்ரமா 41, தனஞ்சயா டி சில்வா 34, சாகிப் 3/80, ஷகிப் அல் ஹசன் 2/57, ஷோரிஃபுல் இஸ்லாம் 2/51) வங்கதேச அணி (41.1 ஓவர்களில் ஏழு விக்கட் இழப்பிற்கு 282, ஷண்டோ 90, ஷாகிப் அல் ஹசன் 82, லிட்டன் தாஸ் 23, மகமத்துல்லா 22, திஷன் மதுஷங்கா 3/69, மஹீஷ் தீக்ஷணா 2/44, ஆஞ்சலோ மேத்யூஸ் 2/39) 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற வங்கதேச அணி இலங்கை அணியை மட்டையாடச் சொன்னது. தொடக்க வீரர்களில் ஒருவரான குசல் பெரேரா முதல் ஓவரில் 4 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அவருக்குப் பதிலாக ஆடவந்த, அணித்தலைவர் குசல் மெண்டிஸ் 12ஆவது ஓவரில் 19 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதுவரை சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த பதுன் நிசாங்கா அடுத்த ஓவரில் 41 ரன்னுக்கு அவுட் ஆனார். பின்னர் சதீர சமரவிக்ரமா மற்றும் சரித் அசலங்கா இருவரும் நிலைத்து ஆடினர். 25ஆவது ஓவரில் சமரவிக்ரமா ஆட்டமிழக்க, ஒரு பந்து கூட ஆடாமல் ஆஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழந்தார்.

‘டைம் அவுட்’ முறையில் ஆட்டமிழந்த முதல் வீரர்

          கிரிக்கட் விளையாட்டில் விநோதமான முறையில் ஆட்டமிழலஆட்டமிழப்பவர்கள் உண்டு. முக்கியமாக பந்தை கையால் தடுத்தல் (இந்தியாவின் மொஹிந்தர் அமர்நாத் இம்முறையில் ஆட்டமிழந்தவர்), ஆட்டமிழக்காமல் இருப்பதற்காக ஃபீல்டரைத் தடுத்தல், பந்தினை இரண்டு முறை அடித்தல் ஆகியவாற்றைச் சொல்லலாம். இன்று மேத்யூஸ் தாமதமாக விளையாடியதால் ‘டைம் அவுட்’ முறையில் ஆட்டமிழந்தார்.

மேத்யூஸ் சமரவிக்ரமா ஆட்டமிழந்ததும் மைதானத்திற்குள் வந்துவிட்டார். கீரிஸில் நின்று பந்தைச் சந்திக்கும் முன் தனது ஹெல்மெட் சரியில்லாமல் இருப்பதைக் கண்டார். புது ஹெல்மெட்டைக் கொண்டுவரச் சொன்னார். அதற்குள் டைம் ஆகிவிட்டது. ஒரு பேட்டர் ஆட்டமிழந்து அடுத்த 2 நிமிடத்திற்குள் புதிய பேட்டர் அடுத்த பந்தைச் சந்திக்க வேண்டும். மேத்யூஸிற்கு அதற்கு மேல் நேரம் ஆகிவிட்டது.

வந்ததேச அணியின் அணித்தலைவர் அவுட் கேட்டார். அம்பயர் கொடுத்துவிட்டார். விதிப்படி எல்லாம் சரி. ஆனால் மேத்யூஸிற்கு அதிக கோபம் வந்துவிட்டது. மைதான எல்லைக் கோட்டைத் தாண்டும்போது அவர் தனது ஹெல்மட்டைத் தூக்கிப்போட்டார்.

          அதன் பிறகு சரித் அசலங்கா, டி சில்வா, தீக்ஷணா ஆகியோரின் ஆட்டத்தால் இலங்கை அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 279 ரன் எடுத்தது.  

          தொடர்ந்து ஆடவந்த வங்கதேச அணியில் ஷண்டோ (90 ரன்), ஷாகிப் அல் ஹசன் (82 ரன்) இருவரும் சிறப்பாக ஆடியதால் அணியின் ஸ்கோர் 33.3 ஓவரில் 211/4 என்ற நிலைக்கு வந்தது. ஷாகிப் அல் ஹசன் விக்கட்டை ஆஞ்சலோ மேத்யூஸ் எடுத்தார். அவர் மைதானத்தை விட்டு வெளியேறும்போது மேத்யூஸ் டைம் அவுட் என்பது போல தன் வாட்சைக் காண்பித்தார்.

இதற்காக மேத்யூஸுக்கு அபராதம் விதிக்க வாய்ப்பிருக்கிறது. அதற்குப் பிறகு மூன்று விக்கட்டுகள் விழுந்த போதும் வங்கதேச அணி நல்ல ரன் ரேட் பராமரித்து வந்ததால் 41.1 ஓவர்களில் ஏழு விக்கட்டு இழப்பிற்கு 282 ரன் அடித்து வெற்றிபெற்றது. ஷாகிப் அல் ஹசன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

          இந்த ஆட்டத்திற்குப் பின்னர் வங்கதேச அணி (வெற்றி பெற்றிருந்தபோதும்) இலங்கை அணி இரண்டும் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்துவிட்டன. வங்கதேச அணி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிக்குத் (முதல் ஏழு அணிகள் தகுதி பெறும் என்பதால்) தகுதி பெற்றிருக்கிறது.

விமான நிலைய ஆணையத்தில் வேலை! நல்ல சம்பளம்! விண்ணப்பியுங்க!

spicejet aircraft - 2026

விமான நிலைய ஆணையத்தில் வேலை.. 496 பணியிடங்கள்.. லட்சத்தில் சம்பளம்..

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள 496 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் துவங்கியுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்கள்….

மத்திய அரசின் விமான போக்குவரத்துத் துறையின் கட்டுப்பாட்டின் இந்திய விமான நிலைய ஆணையம் செயல்பட்டு வருகிறது. விமான போக்குவரத்து கட்டுப்பாடு முதல் விமான போக்குவரத்து சார்ந்த பணிகளில் காலியாகும் பணியிடங்களை இந்த ஆணையம் அவ்வப்போது நிரப்பி வருகிறது. தற்போது காலியாக உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (விமான போக்குவரத்து கட்டுப்பாடு -Air Traffic Control) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலிப்பணியிடங்கள் விவரம்:

ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (விமான போக்குவரத்து கட்டுப்பாடு) பணிக்கு 496 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பொது பிரிவில் 199 பேரும், பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினர் பிரிவில் 49 பேரும் ஒபிசி பிரிவில் 140 பேரும் எஸ்.சி பிரிவில் 75 பேரும் எஸ்.டி பிரிவில் 33 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வித்தகுதி:

இந்த பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து இயற்பியல் மற்றும் கணக்கு பாடங்களுடன் கூடிய பி.எஸ்.சி (சயின்ஸ்) பட்டம் முடித்து இருக்க வேண்டும். ஆங்கிலம் எழுதவும் பேசவும் தெரிந்து இருக்க வேண்டும். பி.இ/ பி.டெக், / பி.எஸ்.சி . (Engg.) ஆகிய பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி குறித்த முழுமையான விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு:

ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் போதுமான கல்வி தகுதியுடன் 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகளும் உண்டு. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

சம்பளம் எவ்வளவு?:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 40,000 முதல் 1,40,000- வரை கிடைக்கும். ஆண்டுக்கு தோராயமாக ரூ.13 லட்சம் வரை சம்பளமாக கிடைக்கும். மத்திய அரசு விதிகளின் படி இதர சலுகைகளும் உண்டு.

விண்ணப்பிப்பது எப்படி?:

இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை கொடுத்து, ஆவணங்களை அப்லோடு செய்ய வேண்டும். கணிணி வழியில் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க 30.11.2023 கடைசி நாள் ஆகும்.

கல்வி தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.aai.aero/en/recruitment/release/383257 என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

சிவகாசியில் மொய்க்கும் கூட்டம்; பட்டாசு வாங்க ஆர்வம்!

sivakasi crackers stall - 2026
#image_title

இந்துக்கள் கொண்டாடும் புனித பண்டிகை தீபாவளி க்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் சிவகாசியில், தீபாவளி பட்டாசுகள் வாங்குவதற்காக பட்டாசு பிரியர்கள்‌ ஆயிரக்கணக்கில் கொளுத்தி எடுக்கும் வெயில் கொட்டும் மழையிலும் வந்து செல்கின்றனர்.

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவதற்கு தயாராகி வருகிறது. தீபாவளி கொண்டாட்டங்களில் பட்டாசு ரகங்கள் தான் முதன்மையாக இருந்து வருகிறது.

நாடு முழுவதும் பட்டாசுகள் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசுகள் விற்பனை களைகட்டியுள்ளது. பட்டாசுகள் தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் சிவகாசி, பட்டாசு விற்பனையிலும் முதலிடத்தில் இருந்து வருகிறது. சிவகாசி – சாத்தூர் சாலை, சிவகாசி – விருதுநகர் சாலை, சிவகாசி – சங்கரன்கோவில் சாலைகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனை கடைகள் உள்ளன.

சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் பட்டாசுகள் வாங்கினால் விலை குறைவாக கிடைக்கும் என்பதாலும், விதவிதமான பட்டாசு ரகங்கள் மற்றும் வாணவெடிகளை நேரில் பார்த்து வாங்கலாம் என்பதாலும், பட்டாசு பிரியர்கள் சிவகாசிக்கு வருவார்கள். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால், தங்களது தேவைக்கான பட்டாசுகளை வாங்குவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பட்டாசு பிரியர்கள் சிவகாசியில் குவிந்து வருகின்றனர்.

குறிப்பாக சென்னை, கடலூர், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பட்டாசு பிரியர்கள் குவிந்துள்ளனர். இன்று வேலை நாளாக இருந்தாலும் பட்டாசுகள் வாங்குவதற்காக ஏராளமானோர் வந்தனர். இதனால் சிவகாசி பகுதியில் உள்ள அனைத்து பட்டாசு விற்பனை கடைகளிலும் கூட்டம் அலை மோதுகிறது.

தீபாவளி பண்டிகைக்கு ஒரு நாள் முன்பு வரை, சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு விற்பனை கடைகளில் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வரும். பட்டாசுகள் விற்பனை களைகட்டியிருப்பதால் பட்டாசு விற்பனையாளர்களும், பட்டாசு உற்பத்தியாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பட்டாசு கடைகளுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை. கள்ள சாராயம் விற்பனை நடக்கிறது என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் விருச்சிக மரம் போல வளர்ந்து உள்ளது.அம்மா மறைவுக்கு பின்னர் அதிமுக உறுப்பினர் எண்ணிக்கை 2 கோடி 1 லட்சமாக உயர்தியவர் . எடப்பாடியை கண்டு திமுக அஞ்சுகிறது.வெற்றி நம்மை நோக்கி வந்துள்ளது. நம்முடைய இலக்கு டெல்லி.அடுத்தது தமிழ்நாடு.

பட்டாசு கடைகளுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை. கள்ள சாராயம் விற்பனை நடக்கிறது. இந்த அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. இந்த அரசுக்கு ஆப்பு வைக்க வேண்டும். தற்போது வரை பட்டாசு கடைகளுக்கு விற்பனை உரிமம் கொடுக்கவில்லை அதிமுக ஆட்சிக்காலத்தில் 15 நாட்களுக்கு முன்னர் உரிமம் வழங்க பட்டது.நாளை உரிமம் கிடைக்க படவில்லை எனில் அதிமுக சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் போராட்டம் நடத்தப்படும். இந்த ஆட்சியினுடைய கதவுகள் தட்டப்படும். இந்தப் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகள் கலந்து கொள்ளும்.

இந்தத் தொழில் 10 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். உரிமம் கிடைப்பதற்கு விற்பனையாளர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். திமுக ஆட்சியில் எந்த தொழிலும் முன்னேற்றம் இல்லை. அனைத்தும் அழிந்து வருகிறது. திமுக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு எந்த விமோசனமும் கிடையாது . இந்த விடிய அரசை வீட்டுக்கு அனுப்பும் பணியை நாம் செய்ய வேண்டும்.

நமது உழைப்பு எடப்பாடியை மீண்டும் முதல்வராக அமர வைப்பது. நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் கைப்பற்ற வேண்டும். எடப்பாடி அடையாளம் காட்டுபவர் பிரதமராக வரவேண்டும் அல்லது அவரே பிரதமராக வரவேண்டும்.

பட்டாசு தொழிலாளர்களும் பட்டாசு தொழிலதிபர்களும் இந்த அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். ஏன் பட்டாசு தொழிலை தடுக்கிறீர்கள் இந்த தொழிலை ஒழிக்க நினைக்கிறீர்கள். பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கின்ற பணியை திமுக செய்தால் அதை தடுக்கின்ற பணியை அதிமுக செய்யும்.

சாலையில் விபத்து நடக்கிறது அதற்காக சாலையை மூடி விடுகிறோமா. வெடி விபத்து நடப்பது என்பதற்காக தொழிலையும் முடக்க நினைப்பதால் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளார்