Home Blog Page 340

‘பெருந்தலைவரும் நானும்’: திருப்பூர் கிருஷ்ணன்!

kamarajar birthday - 2026

ஜூலை 15: காமராஜ் பிறந்த தினம்

திருப்பூர் கிருஷ்ணன் —

பெருந்தலைவர் காமராஜரை நான் முதன்முதலில் பார்த்தது, திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் நான் தமிழ் இளங்கலை படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்….

தேர்தல் பிரசாரத்திற்காக, திருப்பூருக்கு காமராஜ் வருகை புரிந்தார். திருப்பூர் ராயபுரம் முக்கோணப் பூங்கா அருகே கிருஷ்ணன் கோயிலை ஒட்டியிருந்த மைதானத்தில் பொதுக்கூட்டம்.

கூட்டம் தொடங்கிவிட்டது. பெருந்தலைவர் வந்துகொண்டிருக்கிறார்! என்ற அறிவிப்பு மட்டும் அடிக்கடி ஒலிபெருக்கியில் சொல்லப்பட்டுக் கொண்டிருந்தது.

அப்போது காமராஜ் பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தவர் மிகச் சிறந்த பேச்சாளரான குமரி அனந்தன்.

(ஏற்கெனவே முன்னொரு முறை கல்லூரி முத்தமிழ் மன்றத்திற்காக குமரி அனந்தனைப் பேசக் கூப்பிட்டிருந்தோம். திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி அரங்கிற்குக் குமரன் கூடம் என்று பெயர். குமரன் கூடத்தில் இந்தக் குமரி பேசுவது பொருத்தம்தானே? என்று பேச ஆரம்பித்து மாணவர்களைக் கவர்ந்தவர் அவர்.)

அவர் பேசப் பேச காமராஜ் மேடைக்கு வந்துசேர்ந்தார்.

ஏழைகளின் இல்லம் நோக்கி நடக்கும் கால்கள் எவருடைய கால்கள்? அவை பெருந்தலைவரின் கால்கள். ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கும் கைகள் எவருடைய கைகள்? அவை பெருந்தலைவரின் கைகள்! என்றெல்லாம் உணர்ச்சி வசப்பட்டுக் குமரி அனந்தன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, அந்தப் புகழ்ச்சியை விரும்பாத பெருந்தலைவரிடமிருந்து போதும்ணேன்! என்று ஒரு குரல் வந்தது. அடுத்த கணம் சடக்கென்று தன் பேச்சை முடித்துக் கொண்டு குமரி அனந்தன் உட்கார்ந்துவிட்டார்.

தன் புகழ்ச்சியை விரும்பாத காமராஜையும் இன்றைக்கு ஆள்வைத்துத் தங்களைப் புகழ்ந்துகொள்ளும் சில தலைவர்களையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், மனத்தில் கடந்த பொற்காலத்தை எண்ணி ஏக்கப் பெருமூச்சு எழுகிறது.

காமராஜ் பேச எழுந்தார். நல்ல உயரம். கறுப்பு நிறம். விழிகளில் ஓர் இனந்தெரியாத ஒளி. முழங்கால் வரை நீண்ட கரங்கள். கிராமியப் பேச்சு.

ஸ்தாபன காங்கிரசுக்கு வாக்களியுங்கள்! என்று அவர் ஒருபோதும் கேட்கவில்லை.

இந்தக் கட்சியின் அறிக்கை இவற்றையெல்லாம் வாக்குறுதியாகத் தருகிறது. எதிர்க்கட்சிகளும் வேறு சிலவற்றைச் சொல்கின்றன. மக்கள் சீர்தூக்கிப் பார்த்து நல்ல கட்சி என்று தோன்றும் கட்சிக்கு அவரவர் மனச்சாட்சிப்படி வாக்களியுங்கள்! இப்படித்தான் அவர் பேசினார்.

அடுக்குமொழி இல்லை. ஆரவாரம் இல்லை. நகைச்சுவை இல்லை. இலக்கணத் தமிழைக் கூடப் பயன்படுத்தவில்லை.

ஆனால் நெஞ்சைத் தொடும் பனியன்களைத் தயாரிக்கும் திருப்பூர் நகர மக்களின் நெஞ்சைத் தொட்ட பேச்சு அது.

காரணம் அவர் பேச்சில் சத்தியம் இருந்தது. நான் உங்களில் ஒருவன் என்கிற தொனி இருந்தது. உதட்டிலிருந்து பேசாமல் உள்ளத்திலிருந்து பேசினார் அவர். அன்றுமுதல் நான் காமராஜின் தீவிர ரசிகனானேன்.

(சிறிதுகாலம் முன்னர் சென்னையில் என் இல்லத்திற்குக் குமரி அனந்தன் வருகை தந்தபோது அவரிடம் இந்த நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தினேன். காமராஜ் பற்றிய தூய நினைவுகளில் தோய்ந்த குமரி அனந்தன் உண்மையிலேயே விம்மி விம்மி அழலானார்.

என் மனைவி தானும் கலங்கியவாறே அவரை மோர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி ஆறுதல் கூறியது அண்மைக்காலச் சம்பவம்.)…..

*திருப்பூரில் தாயம்மாள் என்ற சகோதரி, ஸ்தாபன காங்கிரஸ் தலைவியாக இருந்தார். அவர் கல்லூரி மாணவர்களுக்காக காமராஜ் பிறந்த தினத்தை ஒட்டி தேச பக்தி என்ற தலைப்பில் ஒரு கவிதைப் போட்டி நடத்தினார்.

நான் அந்தப் போட்டியில் கலந்துகொண்டு என் கவிதைக்காக முதல் பரிசு பெற்றேன். வாணிஜெயராம் பாடிய காமராஜ் குறித்த பாடல்கள் அடங்கிய இசைத் தட்டுத் தான் பரிசு.

(அந்த இசைத்தட்டில் ஒலித்த இருக்க இடமும் வரும் எல்லோருக்கும் வாழ்வு வரும்! காமராஜ் ஆளவந்தால் கட்டாயம் வாழ்வு வரும்! காலம் வரும் கண்ணே! நீ கண்துயில்வாய் முன்னே! என்ற தாலாட்டுப் பாடல் அக்காலத்தில் புகழ்பெற்றிருந்தது.)

அப்படி நான் பரிசுபெற்றதில் என் தாயாருக்கு மிகுந்த மகிழ்ச்சி. காரணம் காமராஜ் என் குடும்பத்தினர் அனைவராலும் மதிக்கப்படும் தலைவராக இருந்தார். சுதந்திரப் போராட்டச் சிந்தனைகளைத் தாங்கிய குடும்பம் என் குடும்பம்.

கதர் மட்டுமே கட்டியவர்களும் கட்டுபவர்களும் என் குடும்பத்தில் பலர் உண்டு. என் தந்தை பி.எஸ். சுப்பிரமணியம், கோழிக்கோட்டில் இருந்தபோது, காந்தி அங்கு வருகை தந்து வழங்கிய ஆங்கில உரையை காந்தி பேசப் பேச மலையாளத்தில் மொழிபெயர்த்தவர்….

*நான் சென்னை வந்ததும், பெருந்தலைவரின் அணியில் பேச்சாளராக இயங்கிக் கொண்டிருந்த தீபம் நா. பார்த்தசாரதியின் சீடனாக தீபத்திலேயே பணிக்குச் சேர்ந்ததும் என் வாழ்வில் பின்னர் நடந்தவை.

நா.பா. அந்தக் காலகட்டத்தில் கல்கியில் சத்திய வெள்ளம் என்ற தலைப்பில் ஒரு தொடர்கதை எழுதினார். அதில் பெருந்தலைவர் காமராஜே ராமராஜ் என்ற தலைப்பில் ஒரு பாத்திரமாக வருவார்.

கல்லூரிப் பின்புலத்தை வைத்து எழுதப்பட்ட முற்றிலும் அரசியல் சார்ந்த ஒரு துணிச்சலான நாவல் அது. காமராஜின் பெருமையைப் பேசும் நாவல்.

காமராஜ் அணியில் இணைந்து ஸ்தாபன காங்கிரஸ் பேச்சாளர்களாக நா.பா., ஜெயகாந்தன், சோ, கண்ணதாசன் போன்றோரெல்லாம் இயங்கிக் கொண்டிருந்த காலகட்டம் அது.

ஒருமுறை காமராஜைப் பார்க்க நா.பா. சென்றபோது நானும் உடன்சென்றேன். தம்பியும் எழுத்தாளரா? என்று நா.பா.விடம் கேட்டார் காமராஜ். ஆமாம், தீபத்தில்தான் பணிபுரிகிறார் என்றார் நா.பா.

தம்பீ. இவரு மாதிரி நாட்டுக்கு நல்லது செய்யற சங்கதிகளைத் தான் எழுதணும். தெரியுதா?

காமராஜுக்கு மிக அருகில் நான் அமர்ந்திருந்தேன். அன்பு மயமாக என் கரங்களைப் பற்றிக் கொண்டு ஒளிவீசும் விழிகளால் கூர்மையாக என்னைப் பார்த்தவாறு இதைச் சொன்னார் அவர்.

நயன தீட்சையும் ஸ்பரிச தீட்சையும் ஒருங்கே நடந்த மாதிரி எனக்கு இனந்தெரியாத பரவசம்.

ஆன்மீகத் துறவிகள்தான் துறவிகளா! தேசத்திற்காக சகலத்தையும் துறந்த இவர் தேசத் துறவி அல்லவோ! சொந்தத் தாய்க்குக் கூடத் தன் அரசியல் அந்தஸ்து காரணமாக ஒரு சலுகையும் காட்டாத மாமனிதர். சொத்தே சேர்க்காத அரசியல்வாதி….

*நா.பா. விறுவிறுவென்று அரசியல் பேச்சுத் துறையில் பெரும்புகழ் பெற்றுக் கொண்டிருந்தார். ஸ்தாபன காங்கிரசின் ஆஸ்தான பேச்சாளராக மாறினார். தொடர்ந்து வெளியூர்க் கூட்டங்கள்.

ஒருமுறை என்னிடம் அந்தரங்கமாகப் பேசும்போது நா.பா. சொன்னார்:

`என்னுடைய பொருளாதாரப் பிரச்னைகள் பிறர் அதிகம் அறியாதவை. ஐந்து குழந்தைகளைக் கொண்ட குடும்பம். நான் ஒருவன்தான் சம்பாதிக்கும் நபர். அரசியல் மேடைகளில் பேசுவதன் மூலம் கிடைக்கும் வருவாய் ஓரளவு பிரச்னையை சமாளிக்க உதவுகிறது. என்றாலும் தீபம் இதழுக்கும் அளவு கடந்து செலவாகிறது.

என்ன செய்வது! அரசியல் பேச்சுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக சன்மானம் கிடைத்தால் நன்றாயிருக்கும். ஆனால் பெருந்தலைவரிடம் இதை நேரில் எப்படிச் சொல்வது?`

நான் தயக்கத்தோடு என் ஆலோசனையைச் சொன்னேன்:

பெருந்தலைவருக்கும் உங்களுக்கும் ஒருசேர நெருக்கமான ஒரு நண்பர் மூலமாக இந்த விஷயத்தை அவர் காதுக்கு எட்டச் செய்யலாமே?

அதுவும் சரிதான் என்ற நா.பா., காதல் தூங்குகிறது நாவலை எழுதிய எழுத்தாளரும் காமராஜுக்கு நெருக்கமானவருமான கு. ராஜவேலுவிடம் சென்று தன் வேண்டுகோளைச் சொன்னார்.

சில நாட்களில் நா.பா.வின் பேச்சுக்கான தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது. அந்தத் தகவலை என்னிடம் பகிர்ந்து கொண்ட நா.பா. மகிழ்ச்சியிலும் மனநிறைவிலும் ஆழ்ந்தார்.

பின்னொரு சந்தர்ப்பத்தில் எனக்கும் நன்கு அறிமுகமான கு. ராஜவேலுவை நான் தனியே சந்தித்தபோது ராஜவேலு என்னிடம் சொன்னார்:

“நா.பா.வின் பொருளாதாரப் பிரச்னையையும் தீபம் இதழின் சிரமங்களையும் பெருந்தலைவரிடம் சொன்னேன். உடனே நா.பா.வின் மேடைப் பேச்சுக்கு எவ்வளவு தொகை கொடுக்கிறார்கள் என்று உதவியாளரை அழைத்து விசாரித்தார்.

என்னய்யா, இவ்வளவு குறைவான தொகையா? நமக்காக மேடைல பேசறவங்களுக்குக் குழந்தை குட்டி எல்லாம் இல்லையா? அந்தக் குழந்தைகளுக்குப் படிப்புச் செலவு இல்லையா? உடனே அந்தத் தொகையை இரண்டு மடங்கு ஆக்குங்கள்! என்று உத்தரவு போட்டார்.

உதவியாளர் அப்படியானால் அவருக்கு இணையான மற்ற பேச்சாளர்களுக்கும் உயர்த்த வேண்டியிருக்கும் என்று சொல்லித் தயங்கினார்.

எல்லோருக்குமே உயர்த்துங்கள். எல்லோரும் குடும்பம் உடையவர்கள் இல்லையா? என்னை மாதிரித் தனிக்கட்டையா என்ன? அப்படி நமக்காக உழைப்பவர்களுக்குக் கொடுக்கப் பணம் இல்லையென்றால் கட்சி எதற்கு? என்று சத்தம் போட்டார் காமராஜ்!`

இதைச் சொல்லிவிட்டு ராஜவேலு நெகிழ்ந்தபோது என் கண்களும் பனித்தன. திருமணமே செய்துகொள்ளாத ஒருவர், குடும்பஸ்தர்களின் சிரமங்களை எப்படிப் புரிந்து வைத்திருக்கிறார் என எண்ணி நான் வியந்தேன்……

*மறக்க முடியாத அந்த அக்டோபர் இரண்டாம் தேதிக்குச் சில நாட்கள் முன்பு என் தாயாரைக் காணச் சென்னையிலிருந்து திருப்பூர் சென்றேன்.

ஏதோ ஒரு பொருளை அலமாரியிலிருந்து எடுத்தேன். அப்போது, என் அம்மா பத்திரமாகப் பாதுகாத்து வைத்துக் கொண்டிருந்ததும் காமராஜ் பிறந்த நாள் கவிதைப் போட்டியில் எனக்குப் பரிசாகக் கிடைத்ததுமான அந்த வாணிஜெயராம் பாடிய இசைத்தட்டு தற்செயலாகக் கீழே விழுந்து இரண்டாக உடைந்துவிட்டது.

ஓடி வந்த என் தாயார் திடீரென அளவற்ற சோகத்தில் ஆழ்ந்தார்.

அதே இசைத்தட்டு வேறு ஒன்று வாங்கிக் கொள்ளலாம்! இது உடைந்ததைப் பற்றிக் கவலைப் படவேண்டாம்! என்று என் அம்மாவிடம் ஆறுதல் சொன்னேன்.

ஆனால் சகுனங்களில் தீவிர நம்பிக்கை கொண்டிருந்த என் அம்மாவை என்னால் சரிவர ஆறுதல் படுத்த இயலவில்லை. உடைந்தது இசைத்தட்டு மட்டுமல்ல, என் அம்மாவின் மனமும்தான்.

இது ஏதோ கெட்டது நடக்கப்போவதன் முன்கூட்டிய சூசகம் என்று சொல்லிக் கவலையில் ஆழ்ந்தார் அவர்.

அந்தக் கெட்டது நடந்தே விட்டது. பெருந்தலைவர் காலமான விவரமும் விளக்கை அணைத்துவிடு! என்று அவர் இறுதியாகப் பேசிய வாசகங்களும் நாளிதழ்களில் மிகச் சில நாட்களில் செய்தியாக வந்தன.

தன்னலம் கருதாத அந்தக் காந்தியவாதி, காந்தி பிறந்த அக்டோபர் இரண்டாம் நாள் காற்றில் கலந்துவிட்டார்….

*காமராஜ் என்ற அந்தத் தியாக தீபத்தின் மறைவு குறித்து மீளாத் துயரில் ஆழ்ந்த நா.பா., தீபம் இதழில் அட்டைப்படத்தில் காமராஜ் திருவுருவை வெளியிட்டு அஞ்சலி செலுத்தினார்.

காமராஜ் குறித்த அட்டைப்படக் கவிதை ஒன்றை நான் அதே தீபத்தில் எழுதினேன்.

அப்போது நா.பா.விடம் ஒரு வாசகர் கேள்வி கேட்டார், இலக்கியப் பத்திரிகையான தீபத்தில் காமராஜ் படத்தை எப்படி அட்டையில் வெளியிடலாம்? என்று. அதற்கு நா.பா. சொன்ன பதில்:

ஏனென்றால் காமராஜே ஓர் இலக்கியம்தான்!

க்யூட் யுஜி முடிவுகள் வரும் 17ல் அறிவிப்பு!

cuet ug result - 2026

இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக தகுதித் தோ்வு (க்யூட் – யுஜி) முடிவுகள் வரும் 17-ஆம் தேதி அறிவிக்கப்படும்’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தலைவா் ஜகதீஷ் குமாா் கூறினாா்.

முன்னதாக, இந்த தோ்வு முடிவுகள் வரும் 15-ஆம் தேதி வெளியாகும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பை அவா் வெளியிட்டாா்.

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் இளநிலை மற்றும் முதுநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் க்யூட்-யுஜி, க்யூட்-பிஜி தகுதி தோ்வுகள் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது மத்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி, மேலும் பல உயா் கல்வி நிறுவனங்களும் இந்த தோ்வு முடிவின் அடிப்படையில் மாணவா் சோ்க்கையை நடத்தி வருகின்றன. சுமாா் 200 உயா் கல்வி நிறுவனங்கள் இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றன.

இந்த நிலையில், அண்மையில் நடத்தப்பட்ட நிகழாண்டுக்கான க்யூட்-யுஜி தோ்வு முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட உள்ளன.

யானைகள் ஊருக்குள் வருவது சகஜமாகி விட்டது!

elephant in dindukkal - 2026

திண்டுக்கல்: பிராணிகள் கடும் வெப்பம் காரணமாக தண்ணீரை தேடி ஊருக்குள் வருவது சகஜமாகி வருகிறது. மலைப் பகுதியில் கடும் வெப்பம் நிலவுவதாகவும், மரங்கள் வெட்டப்படுவதாலும், போதிய மழை இன்றி கடுமையான குடிநீர் தட்டுபாடு நிலவுகிறது.

இதனால், மலைப் பகுதியில் வசிக்கும் பிராணிகளின் மான், யாணை, காட்டெருமைகள் ஆகியவை உணவு மற்றும் குடிநீருக்காக, கிராமத்தில் உள்ள வயல்வெளிகளுக்கு தொடர்ந்து படையெடுத்து வருகிறது. இதனால், விவசாயிகள் வயலுக்கு செல்ல முடியாதபடி உள்ளதாம்.

கொடைக்கானல் புலியூர் பகுதியில், குட்டிகளுடன் காட்டு யானைகள் வலம் வருவதால் மலைக்கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். பழனி வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், கொடைக்கானல், வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட புலியூர் கிராமத்துக்கு படையெடுத்துள்ளன.

தற்போது இந்த யானைகள், புலியூர் பகுதியில் உள்ள வருவாய்த்துறை மற்றும் விவசாய நிலங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த 2 நாட்களாக யானைகள் முகாமிட்டு இருப்பதால் விளை நிலங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். பொதுமக்களும் பீதி அடைந்துள்ளனர்.

ஆசிய தடகளம்: இந்தியா 5 தங்கத்துடன் பட்டியலில் மூன்றாமிடம்!

asian athlet - 2026

ஆசிய தடகளத்தில் மூன்றாம் நாள் முடிவில், இந்தியா, 5 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கம் பெற்று பட்டியலில் 3ஆம் இடத்தில் உள்ளது.

தாய்லாந்தில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் 28 வீரர்கள், 26 வீராங்கனைகள் என மொத்தம் 54 பேர் பங்கேற்கின்றனர்.

பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டத்தின் பைனல் நடந்தது. இந்தியா சார்பில் ஜோதி, நித்யா களமிறங்கினர். மழை காரணமாக மைதானம் ஈரமாக இருந்தது. இருப்பினும் அபாரமாக ஓடிய ஜோதி(13.09 வினாடி) முதலிடம் பிடித்து, இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் பெற்று தந்தார். நித்யா (13.55) நான்காவது இடம் பெற்றார்.

ஆண்களுக்கான ‘டிரிபிள் ஜம்ப்’ போட்டியில் இந்தியாவின் அப்துல்லா அபூபக்கர் களமிறங்கினார். அதிகபட்சம் 16.92 மீ., துாரம் தாண்டிய இவர், தங்கப்பதக்கம் வசப்படுத்தினார்.

ஆண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தில் இந்திய வீரர் அஜய் குமார் சிரோஜ் 26, 3 நிமிடம் 41.51 வினாடி நேரத்தில் ஓடி, தங்கம் கைப்பற்றினார்.

ஆசிய சாம்பியன்ஷிப்பில் 2017 (தங்கம்), 2019 (வெள்ளி), தற்போது தங்கம் என இவர் வென்ற மூன்றாவது பதக்கம் இது.

ஆண்களுக்கான ‘டெகாத்லான்’ போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் ஷங்கர் பங்கேற்றார். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 100, 400, 1500 மீ., ஓட்டம் உட்பட 10 போட்டியில் பங்கேற்று 7,527 புள்ளி பெற்று வெண்கலம் கைப்பற்றினார்.

பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் ஐஸ்வர்யா, 53.07 வினாடி நேரத்தில் வந்து, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

ஆண்கள் 400 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் அஜ்மல் (45.36 வினாடி) 4வது, ராஜேஷ் (45.67 வினாடி) 6வது இடம் பிடித்தனர். பெண்களுக்கான 10,000 மீ., நடை பந்தயத்தில் சஞ்ஜீவனி (34 நிமிடம், 04.47 வினாடி) 4வது இடம் பெற்றார்.

இதுவரை இந்தியா 3 தங்கம், 3 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கம் வென்றுள்ளது.

asian athlet list - 2026

ஹோண்டா டியோ 125 அசத்தல் அறிமுகம்!

honda dio 125 - 2026

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது புதிய டியோ 125 ஸ்கூட்டரை ரூ.83,400 விலையில் அறிமுகம் செய்துள்ளது.

இதற்கு முன்பு டியோ ஸ்கூட்டரில் 110சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. தற்போது மேம்பட்ட பவர் ஸ்மார்ட் அம்சத்துடன் கூடிய புதிய 125 சிசி எஞ்சினுடன் புதிய வெர்ஷனை ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது.

டியோ 125 ஸ்கூட்டரில் ஐடிலிங்கில் ஸ்டாப் சிஸ்டம், என்ஜின் இன்ஹிபிட்டர் கொண்ட சைட் ஸ்டாண்ட் இண்டிகேட்டர், இருக்கையைத் திறப்பதற்கும் வெளிப்புற எரிபொருள் மூடியைத் திறப்பதற்கும் மல்டி-ஃபங்ஷன் ஸ்விட்ச், 171 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று ஹோண்டா ஸ்கூட்டர் இந்தியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிர்வாக இயக்குநர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான சுட்சுமு ஒடானி கூறுகையில், “ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டர் இளம் இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப் பட்டுள்ளது” என்றார்.

ஸ்டாண்டர்ட் மற்றும் ஸ்மார்ட் என இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும் டியோ 125 ஸ்கூட்டரின் விலை ரூ.83,400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்லர்; அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம்!

chennai highcourt - 2026

செந்தில் பாலாஜி சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்லர்; அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் இன்று தீர்ப்பளித்தார். 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். செந்தில் பாலாஜி கைது நடவடிக்கைக்கு எதிராக அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது இரண்டு நீதிபதிகள் முரண்பட்ட தீர்ப்பை அளித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு ஏற்றார்  நீதிபதி நிஷா பானு! ஆனால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல, நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை, மருத்துவமனையில் உள்ள நாட்கள் நீதிமன்ற காவல் காலமாக கருதப்படாது. மருத்துவ ரீதியாக தகுதி பெற்ற பின் உரிய நீதிமன்ற அனுமதி பெற்று செந்தில் பாலாஜியிடம் விசாரிக்கலாம் என நீதிபதி பரத சக்கரவர்த்தி கூறினார்.

இப்படி இரண்டு விதமான தீர்ப்பு வந்ததால், மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப் பட்டது. இதனால் மூன்றாவது நீதிபதியாக சி.வி. கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். கடந்த 11ம் தேதி முதல் 3வது நீதிபதி முன்பு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. 3வது நாளாக இன்று வாதம் நடைபெற்றது. அப்போது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கூறியதாவது:-

நீதிமன்றத்தில் புகார் தாக்கல் செய்யும் வரை புலன் விசாரணை தொடரலாம். அமர்வு நீதிமன்றம் அனைத்து தரப்பு வாதங்களை கேட்டபின் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பில் உடன்படுகிறேன். அமலாக்கத்துறைக்கு காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது. கைது, நீதிமன்ற காவல் சட்டப்படியானது, ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல என்று கூறினார். 

முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று 2-வது நாளாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக நடந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தனது வாதத்தில், “சட்டவிரோத பணப்பரிமாற்றங்களால் நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்பதால் ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்பந்தத்தின் பேரில் கொண்டு வரப்பட்டதுதான் இந்த சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டம். இந்த சட்டத்தின் கீழ் புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டியது அமலாக்கத் துறையின் கடமை. செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுப்பது புலன் விசாரணையை பாதிக்கும் என்றார். 

500x300 1897893 senthil1 - 2026
#image_title

மேலும், இந்த வழக்கில் ஆதாரங்களை சேகரிக்கும் அமலாக்கத் துறையின் அனைத்து நடவடிக்கைகளும் புலன் விசாரணைதான். அமலாக்கத் துறைக்கு புலன் விசாரணை செய்ய அதிகாரம் கிடையாது எனக் கூற முடியாது. உரிய காரணங்கள் இல்லாமல் கைது நடவடிக்கையி்ல் ஈடுபடும் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. 2005ம் ஆண்டு முதல் தற்போது வரை சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் 350 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். அமலாக்கத் துறையின் புலன் விசாரணையால் வங்கி மோசடி வழக்குகளில் மட்டும் இதுவரை ரூ.19 ஆயிரம் கோடி மீட்கப் பட்டுள்ளது. சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்குகளில் கைதுக்கு முன்பாக சேகரிக்கப்படும் ஆதாரங்கள் ஆரம்ப கட்ட முகாந்திரம் தான். அந்த ஆதாரங்கள் மூலம் வழக்கில் தீர்வு காண முடியாது என்று வாதிட்டார். 

மேலும், செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அமலாக்கத் துறைக்கு எல்லா அதிகாரங்களும் உள்ளது. இந்தச் சட்டத்தில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்க முடியும் என்பதாலும், ஜாமீனில் விட முடியாது என்பதாலும் அமலாக்க துறைக்கு காவல் துறையினருக்கான அதிகாரம் வழங்கப்படவில்லை. ஆனால் சுங்கவரி சட்டம் போன்ற பிற சட்டங்களின் கீழ் ஓராண்டு முதல் தண்டனை என்பதால் கைது செய்த அதிகாரிகளே ஜாமீனில் விட முடியும். அந்தச் சட்டங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு காவல்துறையினருக்கான அதிகாரம் உள்ளது… என்று குறிப்பிட்டார்.

 செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்படவில்லை. அவர் மீதான கைது நடவடிக்கை சரியானதுதானா? என்பதை நிரூபிக்க அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்பதால் காவல் கோரியது, நீதிமன்ற உத்தரவை மீறிய செயல் அல்ல” என்று திட்டவட்டமாகத் தன் வாதத்தை முன் வைத்தார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கார்த்திகேயன், “செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்ற நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த துஷார் மேத்தா, “உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் வைத்தே அவரிடம் விசாரணை நடத்த வேண்டுமென அமர்வு நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. அந்த நிபந்தனையை எதிர்த்து உடனடியாக உச்ச நீதிமன்றத்தை நாடினோம். அதேநேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு மருத்துவமனையில் உள்ள அவரை காவலில் எடுத்து விசாரிப்பதன் மூலம் அவருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது? எனவே அவர் மருத்துவமனையில் உள்ள நாட்களை நீதிமன்றக் காவலில் உள்ள நாட்களாகக் கருதக் கூடாது. அதேபோல தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள செந்தில் பாலாஜி, சட்டவிரோதக் காவலில் இல்லை என்பதால் ஆட்கொணர்வுமனு விசாரணைக்கு உகந்ததல்ல. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரியதில் இருந்தே அவர் நீதிமன்றக் காவலில் இருப்பதை அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பது தெளிவாகிறது. 

முக்கியமாக, செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளதை நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி உறுதி செய்துள்ளார். ஆனால் நீதிபதி ஜெ.நிஷாபானுவின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டால், இதுபோன்ற வழக்குகளில் இனி யாரும் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்ய வேண்டாம், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தாலே போதும் என்ற மனநிலைஉருவாகி விடும். பொதுவாக அனைவருடைய இதயத்திலும் 40 சதவீத அடைப்பு இருக்கும்” எனக் கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார். இதன் பின்னர் நேற்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த மேகலா தரப்பு  பதில் வாதத்துக்காக  விசாணையை இன்று ஒத்தி வைத்தார். 

அதன் அடிப்படையில் இன்று விவாதம் நடந்தது. இன்றைய விவாதத்தில் ஒரு சுவாரஸ்யமும் நடந்தது. மேகலா தரப்பில் ஆஜரான கபில் சிபல்  அடுத்த விஷயத்துக்குப் போகும் முன்பு… மன்னிக்கவும் எனக்குக் கொஞ்சம் உடல் நலன் சரியில்லை என்று கூற, அதற்கு நீதிபதி கார்த்திகேயன்,  பரவாயில்லை கொஞ்சம் ஓய்வு எடுங்கள். நான் என்ன ஸ்கூலா நடத்துகிறேன். ஓய்வு  எடுத்துவிட்டு 12.15க்கு வாருங்கள் என்றார். 

இந்த விவகாரம் சமூகத் தளங்களில் பெரிதாக நகைச்சுவையுடன் பகிரப்பட்டது. நெஞ்சு வலி பேஷண்டுக்கு வாதாடுகிற வக்கீலுக்கே நெஞ்சு வலி வந்தா அவர் எந்த நெஞ்சு வலி மருத்துவமனையில் சேர்ந்து தனக்காக வாதாட ஒரு நெஞ்சு வலி வக்கீலை நியமிப்பார்? என்று கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

ஸ்ரீவிலி ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்..

IMG 20230714 WA0090 - 2026

தமிழகத்தில் சிறப்பு மிக்க வைணவ ஸ்தலங்களிவல் முக்கிய ஸ்தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழா இன்று பக்தர்கள் கோவிந்தா கோபாலா கோஷம் முழங்க வேதபாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் துவங்கியது.

முன்னதாக இன்று ஜூலை 14 காலை 9:30 மணிக்கு மாடவீதிகள் சுற்றி கொடிபட்டம் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. கொடிமரம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்து வேத மந்திரங்கள் முழங்க வேதபாராயண முறைப்படி கொடியேற்றம் நடைபெற்றது.தொடர்ந்து ஆண்டாள் ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் மணவாள மாமுனிகள் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமி, மற்றும் அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

IMG 20230714 114158 - 2026

இதனையடுத்து தினமும் காலை 10 மணிக்கு மேல் ஆண்டாள், ரங்க மன்னார் மண்டபம் எழுந்தருளிலும், இரவு வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா நடக்கிறது. ஜூலை 18 காலை 10 மணிக்கு கோயில் ஆடிப்பூர பந்தலில் பெரியாழ்வார் மங்கல சாசனமும், இரவு 10 மணிக்கு 5 கருட சேவையும் நடக்கிறது. ஜூலை 20 அன்று இரவு 7 மணிக்கு மேல் கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள் ரங்கமன்னார் சயனசேவை உற்சவம் நடக்கிறது. ஜூலை 22 காலை 8;05 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

IMG 20230714 WA0087 - 2026

தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேரோட்ட திருவிழாவையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கல்யாண மண்டபங்கள். தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சபரிநாதன் தலைமையில் போலீசார் செய்து வருகின்றனர்.

விழாவையொட்டி ஆண்டாள் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான பந்தலில் தினமும் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டிய நிகழ்ச்சிகள், பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் தக்கார் ரவிச்சந்திரன் ஆகியோர் செய்து வருகின்றனர். சுகாதார ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

திமுக.,வின் மூன்றாம் தலைமுறைக்கும், அரசியலில் அடியெடுத்து வைத்த முதல் தலைமுறைக்கும் இடையேயான யுத்தம்!

annamalai press meet in saidapet - 2026

திமுக., முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு குடும்பத்தினர் 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளனர். அவர்கள் அனைவரையும் நீதிமன்றக் கூண்டில் ஏற்றுவோம்; இது திமுக.,வின் மூன்றாம் தலைமுறை மற்றும் முதல் தலைமுறை என தலைமுறையினருக்கு இடையேயான யுத்தம் என தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறினார்.

அப்போது அவர், ஊழலுக்கு எதிரான பாஜகவின் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. டி.ஆர்.பாலு மீது நாங்கள் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் 2014-ம் ஆண்டு கலைஞரின் மகன் அழகிரி மதுரையில் தெரிவித்திருக்கிறார். அவர் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை. டி.ஆர் பாலு மட்டுமல்ல, அவரது குடும்ப உறுப்பினர்களும் சொத்து குவித்திருக்கிறார்கள். அதனால் அவரின் குடும்பத்தினர் அனைவரும் நீதிமன்றம் வரவேண்டும் என சம்மன் அனுப்ப முடிவு செய்திருக்கிறோம்..

தமிழ்நாட்டில் முதல் தலைமுறைக்கும் மூன்றாம் தலைமுறைக்கும் இடையே நடக்கும் போர் இது. மூன்றாம் தலைமுறையிடம் அதிகார பலம், பண பலம், படைபலம் என எல்லாம் இருக்கிறது. அதனால் முதல் தலைமுறை கொஞ்சம் தட்டுத் தடுமாறிதான் வெல்லும்.. – என்று கூறினார்.

கடந்த ஏப்.14ல் ‛டிஎம்கே பைல்ஸ்’ என்ற பெயரில் திமுக.,வினரின் சொத்துப் பட்டியல் ஒன்றை வெளியிட்டார். அதில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக., எம்.பி.யுமான டி.ஆர்.பாலு குறித்த தகவலும் இருந்தது. இதனையடுத்து டி.ஆர்., பாலு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு ஜூலை 14 இன்று விசாரணைக்கு வந்த போது, விசாரணைக்கு பாஜக., தலைவர் அண்ணாமலை ஆஜரானார். விசாரணைக்கு பிறகு வழக்கு ஆகஸ்டு மாதம் மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

திமுக., எம்பி., டிஆர் பாலு மற்றும் அவரது குடும்பத்தினர் குவித்துள்ள சொத்துக்களைக் குறித்து, #DMKFiles பகுதி 1 மூலம் அம்பலப்படுத்தியதற்காக அவர் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக, சைதாப்பேட்டை பெருநகர 17வது மாஜிஸ்திரேட் முன்பு இன்று ஆஜரானார் அண்ணாமலை.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, நமது நீதித்துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த வழக்கின் போது, ஏற்கெனவே அம்பலப்படுத்தப் பட்டதையும் தாண்டிய உண்மைகள் வெளிப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றார்.

‛டிஎம்கே பைல்ஸ்’வெளியிட்ட பிறகு ஆளுங்கட்சியினர் கோபத்தில் உள்ளனர். முதல்வர் உட்பட அமைச்சர்கள் அனைவரும் பல அவதூறு வழக்குகளை தொடர்ந்தனர். பாஜக.,வின் ஊழலுக்கு எதிரான போராட்டம அடுத்த கட்டத்தை நோக்கி சென்றுள்ளது. வாய்ப்பேச்சு, அறிக்கை என்று இல்லாமல் நீதிமன்றத்தில் நேரில் சந்திக்கிறோம்… என்று குறிப்பிட்டார்.

டி.ஆர்.பாலு தாக்கல் செய்த மனுவில் அவரது சொத்துகள் தொடர்பான பல உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளன. பாலு 2004 -2009 ல் ஊழல் செய்ததால் தான், அதற்கு பிறகு மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை. கருணாநிதி மகன் அழகிரி 2014 ஏப்ரலில் மதுரையில் பேட்டியளித்த போது, பாலு ஊழல் செய்தது குறித்து பேட்டி அளித்தார். அதில் நான் சொன்னதை தான் அவரும் கூறியிருந்தார். ஆனால் அழகிரி மீது பாலு அவதூறு வழக்கு தொடரவில்லை. என் மீது மட்டும் தொடர்ந்துள்ளார். அதில் அவர் சொன்ன அதே குற்றச்சாட்டை நாமும் முன்வைத்துள்ளோம்… என்று குறிப்பிட்டார் அண்ணாமலை.

மேலும், நீதிமன்றத்தில் டி.ஆர்.பாலு தாக்கல் செய்த சத்திய பிரமாணத்தில் 3 நிறுவனங்களில் பங்கு தாரராக உள்ளேன் எனக் கூறியுள்ளார். ஆனால், ‛டிஎம்கே பைல்சில்’ அவரது குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி சொத்து உள்ளது தெளிவாக கூறப்பட்டு உள்ளது. பாலு, அவரது மகன் ராஜா, மற்றொரு மகன் ராஜ்குமார் ஆகியோர் எந்தெந்த நிறுவனங்களின் பங்குதாரர்களாக உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளோம். ஆனால் டி.ஆர்.பாலு அளித்துள்ள சத்திய பிரமாணத்திலேயே தவறான தகவலை தெரிவித்துள்ளார்.

நமக்கு எந்தக் குடும்பத்தையும் அரசியலில் இழுக்க வேண்டும் என்பது நோக்கமல்ல. ஆனால், எங்களின் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க டி.ஆர்.பாலு குடும்பத்தினர் அனைவரையும் நீதிமன்றக் கூண்டில் ஏற்ற வேண்டும். இதனை நீதிபதியிடம் வலியுறுத்துவோம்.

நாங்கள் நெஞ்சவலி எனக் கூறி மருத்துவமனையில் போய் நாடகம் ஆட மாட்டோம். அவர்களிடம் நாங்கள் கேள்வி கேட்க வேண்டும். எங்களிடம் அவர்கள் கேள்வி கேட்கலாம். நாங்கள் எப்போதும் இங்கு இருப்போம்… என்றார்.

தொடர்ந்து, வாரிசு அரசியலால் உருவான 3ம் தலைமுறையினருக்கும், அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள முதல் தலைமுறையினருக்கும் இடையே நடக்கும் யுத்தம் இது. ஊழலுக்கு எதிரானவர்கள் எங்களுடன் இணைய வேண்டும். இந்த யுத்தம் ஓரிரு நாட்கள் நடப்பது கிடையாது. நீண்ட யுத்தம். அவர்களிடம் அதிகார பலம், பண பலம் எல்லாம் உள்ளது. நம்மிடம் மக்கள் ஆதரவு உள்ளது.

‛டிஎம்கே பைல்ஸ்’ 2வது பாகம் தயாராக உள்ளது. இது 300 நபர்களின் பினாமி சொத்து பற்றியது. இதனை மக்கள் நீதிமன்றத்தில் வெளியிடுவதா அல்லது ஆளுநரிடம் அளிப்பதா அல்லது சிபிஐ.,யிடம் கொடுப்பதா என யோசித்து வருகிறோம். எப்படியும் எனது பாத யாத்திரைக்கு முன்பு இதனை வெளியிட ஆலோசித்து வருகிறோம். பாத யாத்திரையின் போது அடுத்தடுத்த பாகங்கள் வெளியே வரும் என்றார் அண்ணாமலை.

சந்திரயான் 3 வெற்றிகரமான ஏவுதலின் பின்னே… தமிழர் வீர முத்துவேல்!

veera muthuvel isro project director - 2026

டாக்டர் வீர முத்துவேல், சந்திரயான்-3 திட்ட இயக்குனராகப் பணியாற்றியுள்ளார்.

சந்திரயான்-3′ சந்திரனுக்கு ஜூலை 14ஆம் தேதி (இன்று) ஜிஎஸ்எல்வி எம்கே3 ராக்கெட் மூலம் பிற்பகல் 2.35 மணிக்கு ஏவப்பட்டது. பேலோடில் பிரக்யான் ரோவருடன் விக்ரம்- மூன்லேண்டர் உள்ளது. சென்னையில் வசிப்பவர்கள் இந்த ராக்கெட் ஏவுதலைப் பார்த்து மகிழ்ந்தார்கள்.

ஜிஎஸ்எல்வி என்பது இஸ்ரோவின் அதிக எடை கொண்ட ஏவுகணை. சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜூலை 14, 2023 இன்று பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட சந்திரயான்-3ன் வளர்ச்சியில் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் பி.வீர முத்துவேல் முக்கியப் பங்காற்றியுள்ளார். ஸ்ரீஹரிகோட்டாவில், சந்திரயான் 3 விண்கலத்தின் திட்ட இயக்குநராக பணியாற்றியவர் இவர்.

சந்திரயான்- 3-க்குப் பின்னால் உள்ள தமிழ் ‘மாஸ்டர் மைண்ட்’ பற்றிய சில சுவாரஸ்யங்கள்…

விழுப்புரத்தில் உள்ள ரயில்வே பள்ளியில் படித்து வந்தார். பின்னர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தார். ஆனால் விண்வெளியில் அவருக்கு இருந்த ஆர்வமும், அந்தத் துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அவரை அந்த வேலையில் பிடித்துத் தள்ளியது என்றுதான் சொல்ல வேண்டும்.

பொறியியல் படிப்பை முடிப்பதற்காக தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்ந்த அவர், மேல் படிப்புக்காக சென்னை ஐஐடியில் சேர்ந்து விண்வெளி துறையில் முக்கிய ஆராய்ச்சி செய்தார்.

சிக்கலான ஹார்டுவேர் வேலைகளில் அதிக ஆர்வம் கொண்ட வீர முத்துவேல், 1989ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) விஞ்ஞானியாகும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் இஸ்ரோவில் சேர்ந்த முத்துவேல், நாடு, வெளிநாடு என பல நிறுவனங்களில் இருந்து வந்த வாய்ப்புகளை திரும்பிப் பார்க்காமல், இஸ்ரோவில் பணியாற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டார்.

2016 ஆம் ஆண்டில், விண்கலத்தின் எலக்ட்ரானிக் தொகுப்பில் அதிர்வு கட்டுப்பாட்டு அமைப்பு பற்றிய ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது மற்றும் அது தொடர்பான பரிசோதனைகள் பெங்களூருவில் உள்ள யு ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் நடத்தப்பட்டது. அவரது ஆய்வு விண்கலத்தின் லேண்டரை நிலவில் தரையிறக்க உதவுவதோடு விண்கலத்தின் ரோவர் பகுதியை இயக்கவும் உதவும்.

இந்த ஆய்வுக் கட்டுரையைப் பார்த்து வியந்த இஸ்ரோ அவரைப் பாராட்டு மழையில் மூழ்கடித்தது. சந்திரயான் 3 திட்ட இயக்குநராக அதுதான் வாய்ப்பும் கொடுத்தது.

30 ஆண்டுகள் பல திட்டங்கள் மற்றும் இஸ்ரோவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவத்திற்குப் பிறகு, விஞ்ஞானி வீர முத்துவேல், 2019 ஆம் ஆண்டில் விஞ்ஞானி கவிதாவுக்குப் பதிலாக சந்திரயான் 3 ன் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

இன்று சந்திரயான் 3 வெற்றிகரமாக ஏவப்பட்ட பின்னர் அவர் மகிழ்ச்சி வெள்ளத்தில் பேசியது..

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3

chandrayaan3 launched - 2026

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, ‘சந்திரயான்- 3’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

chandrayaan3 launched1 - 2026

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, இந்தியாவின் மதிப்பு மிக்க சந்திரயான் 3 ராக்கெட்டை இன்று பிற்பகல் 2.35 மணி அளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திரனில் ஆய்வு மேற்கொள்ள அனுப்பப் பட்ட சந்திரயான்-3 தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.

சந்திரயான் 3 வெற்றிகரமாக LVM3-M4 ராக்கெட்டில் இருந்து பிரிக்கப்பட்டது. ஏவுகணையில் இருந்து செயற்கைக்கோள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

நிலவை நோக்கிய பயணத்தைத் தொடங்க, செயற்கைக்கோள் இப்போது அதன் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டுள்ளது.