Home Blog Page 369

திமுகவிடம் நிதி பெற்று கட்சி நடத்தும் கம்யூனிஸ்ட் & கூட்டணி கட்சிகள் கோவில் பாதுகாப்பு மாநாடு நடத்துவது கேலிக்கூத்து!

hindumunnani - 2026

திமுகவிடம் நிதி பெற்று கட்சி நடத்தும் கம்யூனிஸ்ட் கட்சி & கூட்டணி கட்சிகள் கோவில் பாதுகாப்பு மாநாடு நடத்துவது கேலிக்கூத்து – இவர்களை நோக்கி மக்கள் கேட்கும் கேள்விகளை இந்து முன்னணி முன் வைக்கிறது என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

மதுரை திருப்பரங்குன்றத்தில் அறநிலையத்துறை கண்காணிப்பில் ஆலயங்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் ஒரு கூட்டத்தை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்ற குழு ஏற்பாடு செய்துள்ளது. இத்தகைய கூட்டத்தை பார்த்து பக்தர்கள் கேட்கும் கேள்விகளை இந்து முன்னணி மக்கள் முன் வைக்கிறது.

  1. வருமானம் உள்ள கோவில்களை விதவிதமாக திட்டம் போட்டு சுரண்டுவதைதான் இதுவரை இந்து சமய அறநிலையத்துறை செய்து வந்துள்ளது. சிதிலமடைந்த கோவில்களை பற்றி சிறிதும் கவலைப் பட்டது உண்டா?
  2. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆயிரக்கணக்கான சுவாமி விக்கிரகங்கள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. பல நூறு சம்பவங்களில் சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் காவல்துறையில் புகார் பதிவு செய்யக்கூட இல்லையே ஏன்?
  3. விக்கிரகங்கள், தங்க கவசம் முறைகேடு முதலிய பல வழக்குகளில் சம்பந்தப்பட்டதால் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால் ஆட்சி மாறியவுடன் காட்சி மாறியது. குற்றத்தில் ஈடுபட்ட இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் இன்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருடன் வலம் வருகின்றனர். சிலை திருட்டு, சிலை கடத்தல், தங்க ரதம், தங்க கவசம் முறைகேடுகள் முதலிய வழக்குகள் என்னவாயிற்று?
  4. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து கோவிலில் உள்ள விக்ரகங்கள் சமூகவிரோதிகளால் திட்டமிட்டு சேதப்படுத்துவது நடைபெறுகிறது. காவல்துறை ஒவ்வொரு முறையும் பிடிபடும் சந்தேகத்திற்கு இடமான நபர்கள்மனநிலை சரியில்லாதவர் என வழக்கு முடிக்கப்படுகிறது. ஆனால் இதுவரை கோவில் பாதுகாப்பு குறித்து எந்த நடவடிக்கையும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எடுக்கவில்லை ஏன்?
  5. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் விக்கிரகம் உடைக்கப்பட்ட போதும் அந்த இடங்களை பார்வை இடுவதற்குக்கூட வரவில்லை. காரணம் வருமானம், விளம்பரம், திமுகவின் சுய தம்பட்டம் மட்டுமே இத்துறை அமைச்சரின் நிர்வாகம் என கருதுகிறாரா?
  6. இந்துக்களின் நம்பிக்கைகளை கொச்சை படுத்தும் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை ஏன்?
  7. ஏராளமான கோவில் நிலங்கள் சட்டவிரோதமாக தனியாருக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தினசரி செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்ததாக எந்த தகவலும் இல்லை. இந்த சட்டவிரோத செயலுக்கு துணை போவது இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் என்பதற்கு முகாந்திரம் உள்ளதா?
  8. கோவில் தரிசனகட்டண முறைகேடு குறித்து ஏராளமான புகார்கள் வருகின்றன. சூரசம்காரம், திருவண்ணாமலை கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி போன்ற விசேஷ நாட்களில் ஏராளமாக பக்தர்கள் வருகையை பயன்படுத்தி சினிமா தியேட்டர் போல ஆயிரக்கணக்கில் கட்டணத்தை உயர்த்தியும், போலி டிக்கெட்கள் மூலம் பிளாக் டிக்கெட் விற்ற முறைகேடுகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பின்பும் வெட்கமில்லாமல் இந்து சமய அறநிலையத் துறை அமைதியாக இருந்தது ஏன்? இந்த தில்லுமுல்லு செய்வதே அந்த துறை அதிகாரிகள் என்பதாலா?
  9. திருக்கோவில் கணக்கு நிர்வாகம் செய்ய மட்டுமே உரிமை உடைய இந்து சமய அறநிலையத் துறை, கோவில் வழிபாடு, பூஜை முறைகள், திருவிழாக்களில் போன்ற எல்லா ஆகம முறைகளை ஏன் சிதைக்க முற்படுகிறது? கோவிலை அழிப்பது திராவிட அரசியல் என்ற கொள்கையின்படியா?
  10. கோவில் நிதியில் திருமண திட்டம் என்ற பெயரில் நடத்தப்பட்ட திருமண நிகழ்விலும், கோவில் நிதியில் நடத்தப்படும் எந்த துவக்க விழாவிலும் கோவிலுக்கு வந்து முதல்வர் நடத்தவில்லை? ஆன்மிக நம்பிக்கை இல்லை என்றால் இதில் முதல்வரின் பெயர் ஏன் கோவில் கல்வெட்டில் இடம்பெற வேண்டும்? அதற்கு சொந்த நிதி கொடுத்தாரா? இல்லை அரசின் நிதியை வாரிக் கொடுத்தாரா? இந்து சமய அறநிலையத் துறையின் பெயரால் திமுக விளம்பரம் தேடுகிறது என்பதுதானே உண்மை?
  11. பிரபல கோவில் உள்ள ஊர்களில் பக்தர்களின் வாகனங்கள் நுழைய நகராட்சி கட்டணம் வசூலிக்கிறது. ஆனால் நாகூர், வேளாங்கண்ணி போன்ற வேற்று மதத்தினர் இடங்களில் எந்த வசூலும் இல்லை. இந்துக்கள் இந்துக்களாக இருக்க வரியா? இதனை இந்து சமய அறநிலையத்துறை தட்டி கேட்டுள்ளதா?
  12. கோவில் நகைகள் உருக்கி தங்க பிஸ்கெட்களாக வங்கியில் வைப்பு வைக்கும் திட்டம் குறித்து முழு வெள்ளை அறிக்கை ஏன் சமர்ப்பிக்க மறுக்கிறது? நகைகளில் இருந்த செம்பு, முத்து, பவழம், வைரம், வைடூரியம் போன்றவை என்ன செய்தது?
  13. கோவில் நகைகள், சுவாமி விக்கிரகங்கள், கோவிலில் உள்ள வெள்ளி, செம்பு போன்ற அசையா சொத்து விவரம் எங்கே?
  14. உற்சவர் சுவாமி திருமேனிகளை பத்திரப்படுத்துகிறோம் என பாதுகாப்பு பெட்டகம் வைக்கப்படுகிறது. மாதந்தோறும் விழாக்கள் நடைபெற்றன. அதற்கு ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் தயவை நாடி நிற்கும் நிலையை ஏற்படுத்தவே இந்த நடைமுறையை கொண்டு வந்துள்ளதா?
  15. வக்ஃப் வாரிய ஊழியர்களுக்கு அரசின் நிதி செலவு செய்யப்படுகிறது. மசூதி வருவாயிலிருந்து எந்த வருமானமும் அரசுக்கு இல்லை‌. ஆனால் கோவில் நிதியில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு சம்பளம், வாகனம், ஏ.சி. அறை, காபி ஸ்நாக்ஸ் செலவு வரை செய்யப்படுவது ஏன்? கோயில் வருமானத்தில் பெரும்பகுதி இதற்கே செலவு செய்யப்படுகிறது. இது மத பாரபட்சம் இல்லையா?
  16. ஆலயங்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வருவதற்கு முன்பும் நிர்வாகம் சீராக நடைபெற்று தான் வந்தது. இங்கு ஒன்றும் அங்கொன்றும் புகார் இருந்தது உண்மை தான். ஆனால் அரசு துறையில் பெரிய ஊழல் துறை என்ற நிலையை இந்து சமய அறநிலையத் துறை தொடர்ந்து தக்க வைத்துள்ளது என்பது உண்மை தானே?
  17. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல நூறு கோவில்களை காணவில்லை, ஆயிரக்கணக்கான ஏக்கர் கோவில் நிலங்களை காணவில்லை என்பதை அந்த துறையே ஒப்புக்கொண்டு உள்ளது. இந்நிலையில் கோவில் பாதுகாப்பு என்பது இந்து சமய அறநிலையத் துறையால் எப்படி சாத்தியம்?

அரசியலும் இந்து விரோத போக்கும் இந்து கோவில்களில் ஆமை புகுந்த வீடுபோல இந்து சமய அறநிலையத் துறை நுழைந்த பின்னர் கோலோச்சி நிற்கிறது. இப்படி ஆயிரக்கணக்கான முறைகேடுகளை ஆதாரத்துடன் எடுத்துக்காட்ட முடியும். எனவே இந்து சமய அறநிலையத்துறையை கலைத்து விட்டு சுதந்திரமான சட்டபூர்வமான அதிகாரம் கொண்ட வாரியம் அமைத்து அதன் கட்டுப்பாட்டில் கோவில்கள், கோவில் சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதே இந்து முன்னணி கோரிக்கை. கோவிலை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதல்ல. கோவில் சிறப்பாக நிர்வகிக்கப்பட வேண்டும். கோவில் அரசு அதிகாரிகள் என்ற போர்வையில் கொள்ளைக்காரர்களின் வேட்டை காடாகக் கூடாது.

திமுகவிடம் நிதி பெற்று கட்சி நடத்தும் அதன் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி கோவில் பாதுகாப்பு மாநாடு நடத்துவது, பிரச்சினையில் இருந்து மக்களை திசை திருப்ப தான். இந்துக்கள் ஏமாளிகள் அல்ல. சிலரை பலகாலம் ஏமாற்றலாம். பலரை சிலகாலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது என்பதை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். இறைவனின் தண்டனையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்பதை கவனத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று இந்து முன்னனி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

உதயசங்கர், ராம் தங்கத்துக்கு சாஹித்ய அகாதமி விருதுகள்: ஆளுநர் பாராட்டு!

sahitya academy awards - 2026

2023 ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. எழுத்தாளர் உதயசங்கருக்கு பால சாகித்ய புரஸ்கார் விருதும், எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு யுவ புரஸ்கார் விருதும் வழங்கப்பட உள்ளன. அவர்களுக்கு தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி வழங்கும் பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் சிறந்து விளங்கிய சிறுகதை, கவிதை, கட்டுரைகளுக்கான இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் கீழடி அகழாய்வை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட ‛ஆதனின் பொம்மை’ என்ற நாவலுக்காக அதனை எழுதிய உதயசங்கருக்கு பால சாகித்ய புரஸ்கார் விருதும், திருக்கார்த்தியல் சிறுகதை ஆசிரியர் ராம் தங்கத்திற்கு யுவ புரஸ்கார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாஹித்ய அகாதெமியின் விருது பெற்றவர்களுக்கு ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி தமது டிவிட்டர் பதிவில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இந்திய இணையதளங்கள் பெயரில் தகவல்களைத் திருடும் சீனா!

china websites - 2026

இந்திய இணையதளங்களை பதிவு செய்து அவற்றின் மூலம் ஊடுருவும் சீனர்கள்,  இப்போது இந்தியர்களின் தகவல்களை திருடுவது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது. 

சீன செயலிகள் மூலம் இப்படி வாடிக்கையாளர் விவரங்கள் சேகரிப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், பல செயலிகள் இந்திய அரசால் தடை செய்யப்பட்டன.. அந்த செயலிகளின் சர்வர் சீனாவில் இருப்பதும், சீன அரசின் கொள்கைப்படி தாங்கள் கேட்கும் நேரத்தில் வாடிக்கையாளரின் அனைத்துத் தரவுகளையும் பார்க்கும் உரிமை அரசுக்கு உண்டு என்றும் இருப்பதால், மத்திய அரசு அவற்றை அப்போது  தடைசெய்தது.

சீன இணையதளங்கள், செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த வருடம் தடை விதித்தது. இதனால்  சீனாவைச் சேர்ந்த, ‘சைபர்’ மோசடி பேர்வழிகள், ‘டாட் இன்’ என்ற இந்திய இணையதளங்களை வாங்கி, அதன் வாயிலாக நம் தகவல்களை திருடும் விஷயம் அம்பலமாகி உள்ளது. 

சீனாவைச் சேர்ந்த இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதை அடுத்து அவற்றுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த தகவல் திருட்டு வாயிலாக பல்வேறு பொருளாதார மோசடிகளும் அரங்கேறின. இதையடுத்து, சீன இணையதளங்கள் மற்றும் செயலிகளுக்கு பல்வேறு கட்ட ஆய்வுகள் மற்றும் தொடர் கண்காணிப்புகளுக்கு பிறகே அனுமதி அளிக்கப்படுகின்றன. இந்த நடைமுறையால் அதிக கால தாமதமாவதை தடுக்க சீனாவைச் சேர்ந்த சைபர் மோசடி பேர்வழிகள் குறுக்கு வழியில் ஊடுருவி வருகின்றனர்.

தேசிய சைபர் குற்ற அச்சுறுத்தல் பகுப்பாய்வு பிரிவு, கடந்த மே மாதம் தங்கள் வழக்கமான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்ட போது, சந்தேகத்துக்குரிய சில சீன சைபர் மோசடி நிறுவனங்கள் நான்கு நாட்களில் 2,000 இணையதளங்களை நம் நாட்டில் பதிவு செய்தது தெரியவந்தது.

இந்தியாவில் பதிவு பெறும் இணைய தளங்கள் ‘டாட் இன்’ என்ற அடையாளத்தைக் கொண்டுள்ளன. இந்த டாட் இன் இணையதளங்களைப் பதிவு செய்வதன் வாயிலாக, தங்களை இந்திய நிறுவனங்களைப் போல அவர்கள் வெளிப்படுத்திக் கொள்கின்றனர். இவை பெரும்பாலும் போர்னோகிராபி எனப்படும் பாலியல் இச்சைகளை துாண்டும் இணையதளங்கள் மற்றும் சூதாட்டத் தளங்களாக இந்தியாவில் செயல்பட்டு, இந்தியர்களின் பணத்தைச் சுருட்டும் தளங்களாக மாறியுள்ளன.  

இந்த இணையதளங்களை கணினிகளிலோ, மொபைல் போன் செயலி வாயிலாகவோ பயன்படுத்தும் போது, பயனாளரின் தனிப்பட்ட தகவல்களை அந்நிறுவனம் திருடுகிறது. அதன் வாயிலாக, பொருளாதார குற்றங்கள் உள்ளிட்ட முறைகேடுகளில் சீன நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்., மொபைல் போன்களில் இந்த திருட்டுகள்  நடந்துள்ளன.  இதையடுத்து, வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள், நம் இணையதளங்களை சட்டவிரோதமாக வாங்குவதை தடுக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. 

கடலுக்குள் கருணாநிதிக்கான பேனா நினைவுச் சின்னம்: நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி!

Pen Memorial for Karunanidhi

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்காக சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்படும் நினைவகத்தின் தொடர்ச்சியாக கடலில் ரூ.81 கோடி செலவில் 137 அடி உயரத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க திமுக., அரசு முடிவு செய்தது. அரசின் இந்த முடிவுக்கு பொது மக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதை அடுத்து கருத்துக் கேட்புக் கூட்டம் என்ற பெயரில் ஒரு கூட்டத்தை நடத்தி அதில் மக்கள் ஆதரவாகக் கருத்து தெரிவித்ததாகச் சொல்லி பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தீர்மானமானது.

எனினும் இதற்கு மத்திய அரசின் துறைகளில் அனுமதி பெறப்பட வேண்டியிருந்தது. இதற்காக, ஒரு நிபுணர் மதிப்பீட்டுக்குழு, தமிழக கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஆகியவை ஆய்வு செய்து, மத்திய அரசிடம் சில பரிந்துரைகள் அளித்தன. இந்நிலையில் 15 நிபந்தனைகளுடன் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தமிழக அரசின் பொதுப்பணித்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘நிபுணர் மதிப்பீட்டுக் குழு மற்றும் தமிழக கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் சென்னை திருவல்லிக்கேணி அருகே கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க கடலோர ஒழுங்குமுறை மண்டலம் அனுமதி அளிக்கிறது. இந்த அனுமதி நிபந்தனைகளுக்கு உட்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் விதித்த நிபந்தனைகள்:

கட்டுமானம் தொடங்குவதற்கு முன், சின்னம் அமைய உள்ள இடத்தில் இருந்து 800 மீட்டர் தொலைவில் உள்ள ஐ.என்.எஸ் அடையாறு கடற்படைத் தளத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

கட்டுமான பணிகளுக்காக எந்தவொரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது.

மண் அரிப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதனை நிர்வகிப்பதற்கான திட்ட அறிக்கை வழங்க வேண்டும்.

அவசரகால வெளியேற்றத்துக்கான திட்ட அறிக்கை மண்டல சுற்றுச்சூழல் அலுவலகத்துக்கு வழங்க வேண்டும்.

தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒவ்வோர் ஆண்டும் சுற்றுச்சூழல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்த தகவல்களை பொதுப்பணித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயத்தின் எந்த உத்தரவும் அல்லது வழிகாட்டுதலையும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதிக் கடிதம் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது.

ஆமை இனப்பெருக்க காலத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது.

நிபந்தனைகள் முழுமையாக ஏற்கப்படாதது கண்டறியப்பட்டால் அனுமதி திரும்பப் பெறப்படும் – என்று அந்த அனுமதிக் கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சிகிச்சையின் போது அலட்சியமாக இருந்து நோயாளி மரணித்தால் … டாக்டரை கைது செய்ய தடை!

sylencrababu - 2026

சிகிச்சையின் போது அலட்சியம் காரணமாக நோயாளி இறந்து விட்டார் என்ற குற்றச்சாட்டில் டாக்டரை கைது செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

டிஜிபி., சைலேந்திரபாபு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிகிச்சையின் போது நோயாளி மரணம் அடைந்து விட்டார். இதற்கு டாக்டரின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவே காரணம். டாக்டரை இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என குடும்ப உறுப்பினர்கள் காவல் நிலையங்களில் புகார் அளிப்பர். அப்போது, காவல் நிலைய பொறுப்பில் இருக்கும் அதிகாரி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அத்தகைய சூழ்நிலையில், விசாரணை அதிகாரி வழக்குப்பதிவு செய்யும் முன், முழுமையான விசாரணை நடத்தி, வாய்மொழி மற்றும் ஆவண ஆதாரங்களை திரட்ட வேண்டும்

மூத்த அரசு டாக்டரிடம் குறிப்பாக, அரசு மருத்துவக் கல்லுாரி டாக்டர்களிடம் வல்லுனர் கருத்தை பெற வேண்டும்

குற்றச் செயல் உறுதி செய்யப்பட்டால் மேல் நடவடிக்கைக்கு முன் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சட்ட ஆலோசனை பெற வேண்டும்

சிகிச்சையின் போது அலட்சியமாக நடந்து கொண்டதாக டாக்டர் மீது குற்றம் சாட்டப்பட்டால் மற்ற வழக்குகளைப் போல கைது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை

வழக்குப் பதிவு செய்வதற்கு முன் வழக்கில் தொடர்புடைய அனைத்து சாட்சிகளையும் சம்பந்தப்பட்ட கமிஷனர்கள் மாவட்ட எஸ்.பி.,க்கள் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்

வழக்கின் விவரங்கள், ஆதாரங்கள், சாட்சியங்கள் மற்றும் குற்றம் நடைபெற்ற சூழ்நிலை ஆகியவை தொடர்பான விரைவு அறிக்கையை 24 மணி நேரத்திற்குள் டிஜிபி.,க்கு அனுப்ப வேண்டும் – என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அண்மைக் காலமாக மருத்துவமனை குறித்த செய்திகள், குறிப்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட சூழலில் திடீர் நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ள சூழலில் திடீரென வெளியிடப்பட்ட டிஜிபி.,யின் செய்திக் குறிப்பினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன், சமூகத்தளங்களில் விவாதப் பொருளும் ஆகியுள்ளது.

கலை அறிவியல் கல்லூரிகளில் சேர 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு: பொன்முடி அறிவிப்பு 

ponmudi - 2026
#image_title

தமிழ்நாட்டில்  கலை அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 30 ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

மேலும் கூடுதலாக 20 சதவீத மாணவர் சேர்க்கையிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

அரசு கலைமற்றும்  அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்க்கு இதுவரை   2, லட்சத்து 46 ஆயிரத்து 295 மாணவ மாணவியர் விண்ணப்பம் செய்துள்ளனர். 

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்  உள்ள 1 லட்சத்து 7,ஆயிரத்து 299.மாணவர் சேர்க்கையிடங்களில் இதுவரை 80,804 இடங்கள் நிரப்ப பட்டுள்ளன. தற்போது 27 ஆயிரத்து 215 மாணவர் சேர்க்கையிடங்கள் காலியாக உள்ளன

கலை அறிவியல் கல்லூரிகளில் சேர அதிகளவில் மாணவர்கள் முன் வருவதால் மாணவர் சேர்க்கை தேதியை 30 ம் தேதிவரை நீட்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தற்போது அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்  மாணவர் சேர்க்கையிடங்களை  20 சதவீதம் கூடுதலாக  அதிகரிக்கவும், அரசு  உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதமும்,  சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீதமும் என மாணவர் சேர்க்கை  அதிகரித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 3 ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்.

இட ஒதுக்கீடுகளுக்கு அடிப்படையிலேயே   கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படாது.மாநில கல்விக் கொள்கையே கடைபிடிக்கப்படும் . தமிழக முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக குழு அமைத்துள்ளார்.

பெங்களத்தூர் – பரனூர் உயர்மட்ட சாலைப் பணிகள் விரைவில் தொடங்கும்!

perungalathur paranur elevated corrdor - 2026

சென்னை: மாநிலத்தின் மத்திய மற்றும் தென்தமிழகப் பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், தாம்பரம்-செங்கல்பட்டு உயர்மட்ட வழித்தடத்தை அடுத்த சில மாதங்களில் ரூ.3,523 கோடியில் NHAI தொடங்க உள்ளது.

பெருங்களத்தூரில் தொடங்கி பரனூர் சுங்கச்சாவடியைத் தாண்டி முடிவடையும் வகையில் 6 வழி உயர்மட்டச் சாலை அமைப்பதன் மூலம் பரபரப்பான சாலையில் காணப்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்று நம்புகிறார்கள்.

கடும் போக்குவரத்து நெரிசல்

NHAI அதிகாரிகளின் கூற்றுப்படி, கிராண்ட் சதர்ன் டிரங்க் (ஜிஎஸ்டி) சாலையின் 94 கிமீ தாம்பரம்-திண்டிவனம் வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) நிறைவடைந்துள்ளது.

தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயான 27 கிமீ நீளமுள்ள உயர்மட்ட வழித்தடத்தின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும் என்று அந்த அதிகாரி தெளிவுபடுத்தினார்.

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே வர்த்தகம், தொழில் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளதால், நாள் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பகலில் எந்த நேரத்திலும், சுமார் 1.53 லட்சம் வாகனங்கள் இந்த சாலையில் செல்கின்றன.

தற்போதுள்ள இந்தச் சாலையில் விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்களாக 12 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. பேருந்துகள், லாரிகள் மற்றும் கார்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் உயர்மட்ட சாலையில் செல்ல முடியும் என்பதால், உயரமான நடைபாதை விபத்துகளைக் குறைக்க உதவும், இதனால் தற்போதுள்ள பாதையில் நெரிசல் குறையும்.

DPR இன் படி, 2030 ஆம் ஆண்டில் உயர்த்தப்பட்ட பாதையில் திட்டமிடப்பட்ட போக்குவரத்து 63,605 பயணிகள் கார் அலகுகளாக (PCUs) இருக்கும், அதே நேரத்தில் கீழ்மட்டச் சாலையில் 82,100 PCU களுக்கு மேல் இருக்கும்.

இந்த உயர்த்தப்பட்ட பாதையானது கிளம்பாக்கம் பேருந்து நிலையம், பொத்தேரி எஸ்ஆர்எம் கல்லூரி மற்றும் மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி ஆகிய இடங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகளைக் கொண்டிருக்கும். DPR இன் படி, உயர்மட்டச் சாலையின் நீளம் 25.29 கி.மீ ஆக இருக்கும், இதில் தற்போதுள்ள கிரேடு பிரிப்பான்கள் மற்றும் மேம்பாலங்களை விட இரண்டாம் நிலையில் 5.05 கி.மீ. தொலைவுக்கு இருக்கும்.

செங்கல்பட்டு-திண்டிவனம் பாதை (67.1 கிமீ)

ஜிஎஸ்டி சாலையில் 67.1 கிமீ நீளம் கொண்ட செங்கல்பட்டு-திண்டிவனம் சாலை, தற்போதுள்ள 4 வழிச்சாலையில் இருந்து இருபுறமும் சர்வீஸ் சாலைகளுடன் 8 வழிச்சாலையாக மேம்படுத்தப்படும். அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, 3,458 கோடி ரூபாய் செலவில் இந்தச் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

DPR அறிக்கையின் படி, மாமண்டூர் – படாளம் சந்திப்பு, கருங்குழி சந்திப்பு, மதுராந்தகம் நகர் மற்றும் சாரம் கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்ட பகுதிகளில் 6 வழிச்சாலை உயர்த்தப்பட்ட தாழ்வாரம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது 67.1 கிமீ நீளத்தில் இரண்டாவது மட்டத்தில் 1.86 கிமீ நீளம் உட்பட 13.13 கிமீ நீளம் கொண்டது.

மேல்மருவத்தூர் மற்றும் அச்சரப்பாக்கத்தில், NHAI ஆனது தற்போதுள்ள வாகன சுரங்கப்பாதைக்கு (VUPs) மேல் இரண்டாம் நிலையில் ஒரு உயர்த்தப்பட்ட சாலையை அமைக்கும். மேலும், செங்கல்பட்டு-திண்டிவனம் இடையே 20 ப்ளாக் ஸ்பாட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் (MoRTH) படி, விபத்துகளுக்கான ப்ளாக் ஸ்பாட் என்பது, சுமார் 500 மீட்டர் சாலை வழித்தடத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் 5 சாலை விபத்துக்கள், இறப்புகள் மற்றும் கடுமையான காயங்கள், அல்லது 10 இறப்புகள் பதிவாகியுள்ளன என்பதுதான்.

“எட்டு-வழி தர பிரிப்பான் (VUPs/flyovers) முக்கிய சந்திப்புகள் மற்றும் அனைத்து ப்ளாக் ஸ்பாட் சந்திப்புகளிலும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது” என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தற்போதுள்ள பாலாறு பாலத்தின் இருபுறமும் வாகனங்களின் போக்குவரத்தை எளிதாக்கவும், அதன் மூலம் நெரிசலைக் குறைக்கவும் NHAI இருவழிப் பாலங்களை அமைக்கும். DPR இன் படி, 2040 ஆம் ஆண்டில் 57,300 வாகனங்களில் இருந்து (PCU) 1.26 லட்சம் PCUகள் என இது திட்டமிடப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி சாலையில் உயர்மட்ட சாலை மற்றும் கீழ்மட்ட சாலைத் திட்டங்களுக்கான மாநிலத்தின் தரப்பு குறித்து அளிக்கப்பட்ட கோரிக்கையில் மாநில அரசின் முடிவை தெரிவிக்குமாறு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு MoRTH கடிதம் எழுதியுள்ளது.

சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையில் மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் பிரிவு (23.2 கிமீ), சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் மாதவரம் சந்திப்பு (10.4 கிமீ) முதல் வெளிவட்ட சாலை வரை, தாம்பரம்-செங்கல்பட்டு பிரிவு (27 கிமீ) மற்றும் திருச்சி தஞ்சாவூர் நெடுஞ்சாலையின் திருச்சி-துவாக்குடி (14 கி.மீ.) ஆகிய 4 உயர்த்தப்பட்ட சாலைகளைக் கட்டமைக்க NHAI பரிந்துரைத்துள்ளது.

NHAI இன் கோரிக்கையின் பேரில் கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்படும் சரளை மற்றும் திரள் போன்ற கனிமங்களில் வசூலிக்கும் வரிகளை மாநில அரசு ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளதாக மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

“ஜிஎஸ்டி விலக்கு குறித்து மாநில அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை. என்ஹெச்ஏஐ எப்படியும் திட்டச் செலவை மீட்பதற்காக கட்டணத்தை வசூலித்து வருகிறது,” என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

அண்ணாமலை ஒரு நேர்மையான அதிகாரி-சீமான்..

IMG 20230622 WA0041 - 2026

தம்பி அண்ணாமலை ஒரு நேர்மையான அதிகாரி;இரண்டு கட்சிக்கு ஒரே திருடன் செந்தில் பாலாஜி என விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

அருப்புக்கோட்டை காந்தி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு முன் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது பேசிய அவர்

தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு

எங்களுடைய கருத்து அனைத்து மதுபான கடைகளையும் மூட வேண்டும் என்பதுதான் நான் விசாரித்த வரையில் சரியாக வியாபாரம் ஆகாத கடைகளை மூடுவதாக கூறுகிறார்கள் என பேசினார்

எங்களுடைய கருத்துக்கும் சீமான் கருத்துக்கும் ஒத்துப் போகிறது ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம் என இருவரும் கூறுகிறோம் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு

தமிழகத்தில் இதுவரை பாஜக ஆட்சி அமையவில்லை ஆனால் மற்ற மாநிலங்களில் பாஜக ஆட்சி உள்ளது அங்கு ஊழல் இல்லை என கூற முடியாது தம்பி அண்ணாமலை ஒரு நேர்மையான அதிகாரி ஆனால் அவர் இருக்கும் கட்சி ஊழல் அற்ற கட்சியா நேர்மையான கட்சியா என்றால் அது கிடையாது அதிகாரத்துக்கு வந்த பிறகு நேர்மையாக இருப்பது தான் சாதனை என பேசினார்

விஜய் அரசியலுக்கு வந்தால் ஆண்ட கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் பாதிப்பு இருக்குமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு

ஆண்ட கட்சியும் ஆளுகின்ற கட்சியும் பணம் கொடுக்காமல் வாக்கு வாங்க முடியாது திமுகவுக்கு வாக்களிப்பவர்களின் மனநிலையும் அதிமுகவிற்கு வாக்களிப்பவர்களின் மனநிலையும் மாற்ற முடியாது புதிதாக வாக்களிப்பவர்கள் அவருக்கு வாய்ப்பு தரலாம் என நினைக்கலாம் இருந்த இரண்டு கட்சியும் பிடிக்காதவர்கள் எங்களுக்கு வாய்ப்பு தரலாம் யாரும் யாரையும் பாதிக்க முடியாது என பேசினார்

செந்தில் பாலாஜி மீதான விசாரணையும் அதேபோல் பொன்முடி மீதான விசாரணைக்கு தடை கூற முடியாது என உயர்நீதிமன்றம் கூறியிருந்தது குறித்தும் இதில் பாஜகவின் செயல் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு

இது வரவேற்கத்தக்க விஷயம் என்றாலும் காலம் கடந்த செயல் ஒரு அரசியல் நெருக்கடி ஒரு பழிவாங்கும் செயலாக தான் பார்க்க முடிகிறது செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க இவ்வளவு காலம் எங்கே சென்றார்கள் கேட்டால் நீதிமன்றம் இப்போதுதான் உத்தரவிட்டது எனக் கூறுகிறார்கள் நீதிமன்றத்தையும் சேர்த்து தான் சொல்கிறேன் தேவையானபோது நடவடிக்கை என்றால் அது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தான் என பேசினார்

திருப்பூர் மாநகராட்சியில் ஒரு விளக்குமாறு ரூ 440 வாங்கப்பட்டுள்ளது முறைகேடு என புகார் எழுந்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு

மிகவும் மதிப்புமிக்க விளக்குமாறாக இருக்கும் போல ஏதாவது ஒரு கணக்கு எழுதி பணத்தை திருடும் வேலைதான் இது செங்கிப்பட்டியில் பாலம் இடிந்து விடக்கூடாது என்பதற்காக டேப்பை வைத்து ஒட்டி வைத்திருக்கிறார்கள் என பேசினார்

திருமாவளவன் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டிற்கு ஒரு சாபக்கேடு என பேசியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு

நான் கூறிய கருத்தை தான் அவர் திரும்ப கூறியிருக்கிறார் உண்மையான நேர்மையான அரசியல்வாதி நல்லகண்ணு ஒரு வார்டு கவுன்சிலர் ஆக கூட ஆக முடியவில்லை திரை புகழ் வெளிச்சம் மட்டுமே நாட்டை ஆள தகுதியை தந்து விடுகிறது என்பதை ஏற்க முடியாது நானே படேகர், சல்மான் கான் உள்ளிட்ட நடிகர்கள் வாங்கும் சம்பளத்தில் சரிபாதியை மக்களுக்கு கொடுத்து விடுகிறார்கள் அது மிகையாகத் தெரியாது எம்ஜிஆரும் அதே போல தான் படிப்படியாக தான் உயர்ந்து வந்தார் என பேசினார்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் விஷயத்தில் முதலமைச்சர் அமைச்சரைக் காக்கா நடவடிக்கை மேற்கொள்கிறாரா இல்லை அவரை ஏதேனும் வாய் விட்டால் மாட்டிக் கொள்வோம் என அவர் செயல்பாடு உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு

மொத்தமாகவே இது அனைவரையும் காப்பாற்றிக் கொள்ளும் நடவடிக்கையாக தான் உள்ளது செந்தில் பாலாஜி தான் அனைத்து கட்சி காரர்களுக்கும் சம்பளம் கொடுக்கிறார்கள் எனக் கூறுகிறார்கள் அவரது கட்டுப்பாட்டில் 60 எம்எல்ஏக்கள் உள்ளதாக கூறுகிறார்கள் இந்த குற்றச்சாட்டு அதிமுக ஆட்சியில் நடந்தது வேறு வழி இல்லை இரண்டு கட்சிக்கும் ஒரே திருடனாக செந்தில் பாலாஜி இருந்து விட்டார் என பேசினார்

2000 தனியார் மதுக்கடை திறக்க, 500 அரசு மதுக்கடை மூட… எல்லாம் நாடகம்: டாக்டர் கிருஷ்ணசாமி!

Dr Krishnasamy pudiyathamizagam

தனியார் மதுக் கூடங்களுக்கு லைசன்ஸ் வழங்கிவிட்டு அந்த தனியார் கடைகளுக்கு பாதிப்பு வரக்கூடிய 500 அரசு மது கடைகளை மட்டும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.! என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் – டாக்டர் கிருஷ்ணசாமி @DrKrishnasamy கூறியுள்ளார்.

2000 தனியார் கடைகளுக்கு அனுமதி கொடுத்து விட்டு, அந்தக் கடைகளால் பாதிப்பு வரக்கூடிய 500 அரசின் கடைகளை மூடுகிறார்கள். மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் தனியார் கடைகள் மூலம் லாபம் செழிக்க வைத்து, அவற்றால் பாதிப்பு வரக்கூடிய அரசின் டாஸ்மாக் கடைகள் மற்றும் லாபம் இல்லாத அரசின் கடைகளை மூடுகிறார்கள் என்று செய்தியாளர்களிடம் பேசியபோது டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

தமிழகம் முழுதும் இன்று முதல் முதல்வரின் உத்தரவுப்படி 500 மதுக்கடைகள் மூடப்படுகின்றன. கடந்த சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் உள்துறை சார்பில் இதற்கான அரசாணை கடந்த ஏப்ரல் 20ம் தேதி வெளியிடப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகளைக் கண்டறிந்து, அவற்றை ஜூன் 22ஆம் தேதி முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் பட்டியலும் வெளியிடப்பட்டது. மண்டல மேலாளர்கள் பரிந்துரைப்படி குறைந்த வருவாய், குறைந்த இடைவெளி, வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில், நீதிமன்ற உத்தரவு, நீண்ட நாளாக பொதுமக்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள் என 500 கடைகள் தேர்வு செய்யப்பட்டது. இந்தக் கடைகள் அனைத்தும் ஜூன் 22ம் தேதி இன்று முதல் மூடப்படுகிறது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையை புதிய தமிழகம் கட்சி விமர்சனம் செய்துள்ளது. தமிழக அரசின் நடவடிக்கை உள்நோக்கம் வாய்ந்தது என்று கூறினார் அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் விமர்சனம் செய்துள்ள டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி, “இரண்டாயிரம் மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி அளித்துவிட்டு, நிதிநிலை அறிக்கையில் 43,000 கோடியாக இருந்த மது விற்பனை லாபம் அடுத்த ஆண்டு 52,000 கோடியாக உயரும் என அறிவித்துவிட்டு, 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக நாடகமாடுறிது திமுக!” என விமர்சித்துள்ளார்.

அஞ்சலியின் 50வது படம் ‘ஈகை’: சென்னையில் படப்பிடிப்பு தொடக்கம்!

eegai anjali - 2026

நடிகை அஞ்சலி நடிக்கும் ஐம்பதாவது படம்  “ஈகை” சென்னையில் படப்பிடிப்போடு துவங்கப்பட்டது .

பாரதிராஜா , புஷ்பா பட வில்லன் சுனில் ,இளவரசு ,  புகழ் , அறிமுக நடிகர் ஹரி, அபி நட்சத்திரா,நிஷாந்த் ரகு , கிருஷ்ண சந்தர் ,  காஷ்யப் பார்பயா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். கிரீன் அமூசிமெண்ட் மற்றும்
D3 புரொடக்சன்ஸ்  தயாரிக்கும் இந்தப் படத்தின் துவக்கவிழா சென்னையில் நடைபெற்றது விழாவில் பாரதிராஜா , தயாரிப்பாளர் சங்கத்தலைவர்  முரளிதரன் முன்னிலையில் துவங்கப்பட்டது.

தமிழ் , தெலுங்கு, கன்னடம் , மலையாளம் , இந்தி ஐந்து  மொழிகளில்  தயாராகும் இந்தப்படம் சென்னை, மற்றும் ஐதராபாத், மும்பையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

சஸ்பென்ஸ் நிறந்த சமூக கருத்துள்ள படமாக உருவாகிறது, ஈகைக்குணம் குறைந்த இன்றைய நாட்களில் சமூகத்தில் நிலவும் வன்முறைகளும், மனிதாபிமானமற்ற வாழ்வியலும் நிறைந்த மனிதர்களுக்கு மத்தியில் அறம் நிறைந்த ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு இந்த “ஈகை” என்கிறார் அறிமுக இயக்குனர் அசோக் வேலாயுதம். படத்திற்கு தரன்குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு ஸ்ரீதர்,   எடிட்டர் பிரவீன் KL, கலை – த .இராமலிங்கம். நடனம் – ஸ்ரீதர் பாடல்கள் – விவேகா, அறிவு
சண்டை- கணேஷ். தயாரிப்பு – தங்கராஜ் லட்சுமி நாராயணன், ஜெ. தினகர்!