Home Blog Page 5621

இன்று விண்ணில் பாய்கிறது கனரக ஜிஎஸ்எல்வி ஜிசாட்-19!

1 5thefullyintegratedgslv mkiii d1carryinggsat 19atthesecondlaunchpad frontview - 2026

சென்னை:

இந்திய விண்வெளி ஆய்வு மையம் – இஸ்ரோ, கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் செயல்படும் ஜிஎஸ்எல்வி., மார்க் 3 ராக்கெட்டை இஸ்ரோ உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது. இந்த ராக்கெட்டின் முதல் பயணம் திங்கட் கிழமை இன்று தொடங்குகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.சாட்-19 தகவல்தொடர்பு செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருக்கிறது. மாலை 5:28க்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது.

இந்தியாவிலேயே முற்றிலுமாகத் தயாரிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத்துக்கான அதிநவீன ஜிசாட்- 19 செயற்கைக்கோள் இது. ஜூன் 5 திங்கள்கிழமை இன்று இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டாவின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து புறப்படத் தயாராகவுள்ள ஜிசாட்-19க்கான கவுன்ட்டவுன் நேன்று துவங்கியது.

நான்காயிரம் கிலோ எடையுள்ள செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் திறனுடன் ஜிசாட்-19 வடிவமைக்கப்பட்டுள்ளது. கிரயோஜெனிக் இன்ஜின் மூலம் உருவான இந்தச் செயற்கைக்கோள் முற்றிலும் இந்தியத் தயாரிப்புகளால் உருவாக்கப்பட்டதாகும். இந்தச் செயற்கைக்கோளின் மொத்த எடை 3,136 கிலோ, இதில் 4,500 வாட்ஸ் திறன் கொண்ட சோலார் பேனல்கள், 2.0 மற்றும் 1.4 மீட்டரில் 2 வகையான ஆன்டனாக்கள், அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பத்து ஆண்டுகள் ஆயுள்காலம் கொண்ட ஜிசாட்-19 தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக ஜிஎஸ்எல்வி எம்கே 3 – டி1 ரக ராக்கெட் உடன் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் கிரண்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, மனிதனை விண்வெளிக்கு சுமந்து செல்லும் திறன் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் இன்று திங்கட்கிழமை மாலை 5.28 மணி அளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும். இதற்கான அனைத்து ஆயத்த பணிகளும் முடிக்கப்பட்டு உள்ளன. ராக்கெட் புறப்பட தயார் நிலையில் உள்ளது. இது தகவல் தொலை தொடர்புக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இந்தியாவுக்கு அவசியமானதாகவும் இருக்கும் என்றார்.

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 12)

varadharajaperumal - 2026
எம்பெருமான் வேள்வியினால் மகிழ்ச்சியடைகிறான் ! யஜ்ஞம் என்றால் அவனுக்கு அத்தனை இட்டமாம் ! அவ்வளவு ஏன் ?! அவனுக்கே ” யஜ்ஞ : ” என்று திருநாமம் உண்டு !! – தானே யஜ்ஞமாயுள்ளவன் என்பது பொருள் ..

” அஹம் க்ரதுரஹம் யஜ்ஞ : ஸ்வதாஹம் அஹமௌஷதம் |

மந்த்ரோஹம் அஹமேவாஜ்யம் அஹமக்நிரஹம் ஹுதம் || ” ( கீதை 9-16 )

யாகம் நான்..மஹாயஜ்ஞம் நான்; பித்ருக்களுக்கு வலுவளிக்கும் ஸ்வதா என்கிற பிண்டம் மற்றும் சப்தம் நான், நானே ஹவிஸ்ஸு , மந்த்ரம் நானே, நெய் நானே, அக்னி நானே, செய்யப்படும் ஹோமமும் நானே என்கிறான் கண்ணன் !!

ஸஹஸ்ரநாமத்தில் யஜ்ஞ : என்கிற திருநாமம் தொடங்கி யஜ்ஞகுஹ்யம் என்கிற திருநாமம் வரை , மேற்கண்ட கீதா ச்லோகத்தை விவரிக்குமாப் போலே அமைந்திருக்குமழகு காணத் தக்கது !!

” செய்கின்ற கிதியெல்லாம் யானே ” என்றார் ஆழ்வாரும் !

“வேள்வியும் தானாய் நின்ற எம்பெருமான்” என்றார் கலியன் !

மறை ,வேள்வி , தக்ஷிணை யாவும் அவனே !

எனவே தான் பிரமன் அச்சங்கொள்ளவில்லை !
உண்மையான நம்பிக்கை அச்சத்தினை துணைக்குக் கூப்பிடாது !

ப்ரஹ்லாதன் சொன்னதும் அது தானே ! சிறுபிள்ளை தான் அவன்..பள்ளியிலோதி வரும் பருவம் தான் !ஆனால் ஸாதுக்களின் தலைவனாகப் பார்க்கப்படுகின்றான்.காரணம் இது தான்.. அவன் அஞ்சியதில்லை !

இரணியனுக்கே வியப்பு ! மகனைப் பார்த்து கேட்கிறான்.. பிள்ளாய் உனக்குப் பயமே இல்லையா ?! சிரித்த படி அக்குழந்தை சொன்ன காரணம் இது தான் !

எவனைக் கண்டால் / நினைத்தால் பயமும் பயங்கொள்ளுமோ ; அவன் என்னோடுளன் ! இனியென் குறையெனக்கு !! இது தான்..இந்த நம்பிக்கை தான் அப்பாலகனை இறுதி வரை காத்தது !!

நாம் கொள்ள வேண்டியதும் அதுவே ! ஆம் !! நம்பிக்கை !! இறை நம்பிக்கை !!! அவன் நம்மிடம் எதிர்பார்ப்பதும் அதனையே !!

மஹாவிச்வாஸம் !! பிரமனிடத்து அது இருந்தது !! ஸரஸ்வதியின் தாக்குதல் குறித்து அவன் விசனப்படவில்லை!

ஸரஸ்வதி தான் தப்புக் கணக்கு போட்டிருந்தாள் ! போதாக் குறைக்கு அஸுரர்களின் துர்போதனை வேறு ! அஸுரர்களின் கோபத்துக்குக் காரணங்கள் பல !! இயற்கையாகவே நல்லவர்களைக் கண்டால் ஆகாது. தவிரவும் பிரமனுடைய வேள்வியில் தேவதைகளுக்கு அதிக மதிப்பும் அஸுரர்களான தங்களுக்குப் போதிய முக்கியத்துவம் தரப்படவில்லை போன்ற புகார்கள் வேறு !

ஸரஸ்வதியைக் கொண்டு வஞ்சம் தீர்த்துக் கொள்ள முற்பட்டதன் விளைவே ; வேள்வியைக் குலைக்கும் செயல்கள் !!

அஸுரர்கள் ஸரஸ்வதியைக் கொண்டே தங்கள் ( நாச ) காரியத்தை முடித்துக் கொள்ள எண்ணினர். அவளும் இசைந்தாள் ! தான் தவஞ்செய்யும் இடத்திலிருந்து புறப்பட்டு தெற்கு நோக்கி வந்து சேர்ந்தவள் ; ஒரு மஹாநதியாயப் பெருகி பிரமனின் வேள்வியை அழிக்க வந்தாள் !!

ஸரஸ்வதி ” வேகவதி ” ஆனாள் ! கண்ணில் பட்டவற்றை எல்லாம் அழித்துக் கொண்டு அந்நதி பாய்ந்து வருவதே, அவள் சீற்றத்தினை அனைவருக்கும் உணர்த்தியது ! வேள்வியில் கலந்து கொள்ள வந்தவர்கள் தங்களையும் தங்கள் உடைமைகளையும் வேகவதிக் காட்டாற்றிலிருந்து காத்துக் கொள்ள , உயரமான இடங்களைத் தேடத் தொடங்கினார்கள் ! கடல் எழுந்து நின்றாற்போல் அச்சமூட்டியபடி அலையெறிந்த வண்ணம் வேகமாக யாக சாலையை நெருங்கிக் கொண்டிருந்தாள் வேகவதி !

மநோ வேகம் , வாயு வேகம் போன்றவைகள் வேகவதியின் வேகத்திற்கு முன்னே தோற்றுப் போமளவு அந்நதியின் பாய்ச்சல் இருந்தது !!

இன்று இருந்த சுவடே தெரியாமல் , நம்மால் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்ட வேகவதி நதி , ஏழு கிளைப் பிரிவுகளுடன் பெருகிப் பாய்ந்த பெருமையுடையது என்று சொன்னால் உங்களுக்கு அது பொய்யாகத் தான் தோன்றும் !

ஆக்கிரமிப்புகளினால் கிளைப்பிரிவுகளுடன் சேர்த்து வேகவதியையும் மொத்தமாக அழித்த பெருமை நம்மையே சாரும் !

( புராண ) ஹஸ்திகிரி மாஹாத்ம்யமும் , தேசிகனின் ஹம்ஸ ஸந்தேசமும் , வேகவதியின் மஹிமையை ; அதில் நீராடினால் வரும் நன்மைகளை நமக்கு எடுத்துரைக்கின்றது !

நம்முடைய பாபங்களைப் போக்கப் பிறந்த வேகவதியையே அழித்து நாம் நம் பாபச் சுமையைக் கூட்டினவர்களானோம் !

ஆப ஏவ ஹி ஸுமநஸ : என்றும் இனிதென்பர் தண்ணீர் என்றும் பிரமாணங்கள் சொல்லும் நாம் தான் ; நீரின்றி அமையாது உலகு என்று சொல்லும் நாம் தான் நீர் நிலைகளை, நதிகளை அழித்தோம்.

எத்தனையோ பாபங்களை நாம் செய்பவர்களாயினும் ; அவைகளுக்குக் கழுவாய் ( பிராயச்சித்தம் ) இருப்பினும், பெருத்த பாபமான நீர் நிலைகளை அழித்த பாபத்திற்கு விமோசனமிருப்பதாகத் தெரியவில்லை !

கோபத்தோடு பெருகி வந்த ஸரஸ்வதியாம் வேகவதியை, இறைவன் கூட ,அழித்திடாது அணையாய்க் ( அவள் வேகத்தைக் கட்டுப்படுத்திக் )காத்தான் !

ஆனால் நாம் !!

வேகவதியின் ஏழு கிளைப் பிரிவுகளையுமன்றோ அழித்தொழித்தோம்.

அவைகளின் பெயர்களாவது தெரிந்து கொள்வோமே என்கிறீர்களா ?!

வரதன் வந்த கதை ( பகுதி 12-2 )

பிரமனுடைய வேள்வியைக் குலைத்திட , ஸரஸ்வதி வேகவதியாய் உருமாறி , கடுங்கோபத்துடன் விரைந்து வந்து கொண்டிருந்தாள் !

சுக்திகா, கநகா, ஸ்ருப்ரா, கம்பா, பேயா, மஞ்சுளா, சண்டவேகா என்கிற ஏழு ப்ரவாஹங்களுடன் ( பெருக்குகளுடன் ) அந்நதி பாய்ந்து வந்தது ! கங்கையை விட வேகமாகப் பெருகினபடியால் ” வேகவதி ” என்று இந்நதி பெயர் பெற்றதாம் !

அனைவரும் கலக்கமுற்று என்ன செய்வதென்றறியாது அஞ்சி நின்றிருந்த அவ்வேளையில் , அடுத்து என்ன நடக்குமோ என்கிற அச்சம் , அனைவருடைய கண்களிலும் தெரிந்தது !!

“மணிமாடங்கள் சூழ்ந்தழகாய கச்சி ” கணப்பொழுதில் வேகவதியால் கபளீகரம் செய்யப்பட்டு விடும் என்று நினைத்தபடி பலரும் கையைப் பிசைந்தபடி , திக்கற்றவர்களைப் போல் நின்றிருந்தனர் !

பிரமன் தன்னைச் சேர்ந்தவர்களிடம் , ஸரஸ்வதி தேவி , எவ்வளவு தூரத்தில் வந்து கொண்டிருக்கிறாள் ; மற்றும் அவளுடைய வேகத்தின் தன்மை என்ன ? போன்றவற்றை வினவிக் கொண்டிருந்தான் ..

நதியினுடைய பாய்ச்சல் துல்லியமாகக் கணக்கிடப்பட்டு பிரமனுக்கு விடை சொல்லப்பட்டது..

பத்து யோஜனை தூரத்தில் சீற்றத்துடன் வேகவதி வந்து கொண்டிருக்கிறாள் ! ( சுமார் 90 மைல் கற்கள் ) ..

சிரித்தார் பிரமன் .. இதோ நீங்கள் கணக்கிட்டுச் சொல்லும் பொழுதே, அந்நதி நான்கு யோஜனை தூரத்தினைக் கடந்து நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது !

பீஜகிரிக்குக் கீழே அவள் வந்து கொண்டிருக்கும் வேகம் நாம் கணிக்கக் கூடியதல்ல என்றார் !

அஸுரர்களாலே ப்ரேரிதையாய் ( தூண்டப்பட்டவளாய் ) ,
“ஸயஜ்ஞசாலம் ஸபுரம்ஸநாகாசல காநநம் |
ஸதேவ ரிஷி கந்தர்வம் க்ஷேத்ரம் ஸத்யவ்ரதாபிதம் | வேகேந ஸ்ரோதஸோ க்ருஹ்ய பூர்வாப்திம் ப்ரவிசாம்யஹம் ” ||

இந்த யாக சாலை , ஊர் , நகரம், மலை , காடு , தேவர்கள், ரிஷிகள் , கந்தர்வர்களுடன் அனைத்தையும் மூழ்கடித்து , கிழக்குக் கடலுக்கு அடித்துச் செல்வேன் என்றபடி வேகவதி பெருகி வந்து கொண்டிருந்தது !!

அயன் அரியை இறைஞ்சினான் ! பக்தர்களுக்கு இஷ்டத்தை அருளுமவனான எம்பெருமான் ( மீண்டும் ) வேள்வியைக் காப்பதென்று முடிவெடுத்தான்..

ஹஸ்திகிரிக்கு மேற்கே , பீஜகிரிக்குக் கீழே தெற்கு வடக்காய் , இறைவன் துயில் கொண்ட கோலத்தில் நதியைத் தடுத்திட , அணையாய்த் தோன்றினான் !

சயனேசன் என்று அவனுக்குத் திருநாமம் ! சயனேசன் = பள்ளி கொண்ட பெருமான் என்று பொருள் !

என்ன ஆச்சரியம் ! ஊருக்கும் அதுவே பெயராயிற்று !! ஆம் ! இன்றும் பீஜகிரிக்குக் கீழுள்ள அவ்வூர் ” பள்ளி கொண்டா(ன்) ” என்றே வழங்கப்படுகின்றது !!

காட்டாறு போல் பாய்ந்து வரும் வேகவதி , இறைவனே அணையாய்க் கிடந்தும் அசரவில்லை ! ஆனால் ஸரஸ்வதியின் கோபமும் ஆணவமும் குறைந்திருந்தது என்று தான் சொல்ல வேண்டும் !!

அணை போல் குறுக்கே கிடப்பவனான பெருமானைக் கண்டதும் அவள் சற்றே குளிர்ந்ததென்னவோ உண்மை தான் !

“தாய் நாடு கன்றே போல் ” ( தாய்ப்பசுவினைத் தேடியோடும் கன்று போல் ) தண்துழாயான் அடியிணையைத் தொட்டுவிட வேண்டும் என்கிற பாரிப்புடன் பாய்ந்தாள் வேகவதி !

“க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மிந் த்ருஷ்டே பராவரே ” ( முண்டக உபநிஷத் )

அனைவருக்கும் அந்தர்யாமியான பெருமானைக் கண்டவுடன் ( அறிந்தவுடன் ) நம்முடைய பாபங்களும் , தீய குணங்களும் அழியுமன்றோ !

ஸரஸ்வதியும் சற்றே சீற்றம் தணிந்தாள் ! தன்னைத் தடுக்க அணையாய்க் கிடக்கும் பரமன் அடியிணையை மட்டுமன்று ; அவனை மொத்தமாக தொட்டுவிட வேண்டும் என்று விரும்பி; தன் வேகத்தைக் கூட்டினாள் !

புன்முறுவல் பூத்தபடி அவள் தன்னை நெருங்கிடக் காத்திருந்தான் பள்ளி கொண்டவன் !!

பள்ளி கொண்டா(ன்) !

இன்றும் ஸ்ரீ ரங்கநாதனாய் நமக்கு அவன் காக்ஷி தரும் தலம் !! பாதிரி மரத்தினை ஸ்தல வ்ருக்ஷமாய்க் கொண்டு அவன் அருள்பாலிக்கும் அத்புதத் தலமிது !!

அம்பரீஷனுக்கு , பகவான் ப்ரத்யக்ஷமான க்ஷேத்ரமிது !! வ்யாஸ புஷ்கரிணி என்று இங்குள்ள திருக்குளம் வழங்கப்படுகிறது !!

சாளக்ராமத் திருமேனியுடன் ” கிடந்ததோர் கிடக்கை ” என்று நாம் மயங்கும்படி சயனித்திருக்கிறான் இறைவன் !!

ஸரஸ்வதி ( வேகவதி ) அணையாய்க் கிடந்த எம்பெருமானை துரிதமாகக் கடந்து சென்றாள் ! தானே அணையாய்க் கிடந்தும் , தன்னை மதியாது, தனக்குக் கட்டுப்படாது அவள் தன்னை மீறி, தன்னை நனைத்துக் கொண்டு ,சீறிப் பாய்ந்தோடுவது கண்டு பெருமான் கோபம் கொள்ளவில்லை !

மாறாக அவள் விருப்பமறிந்து மெல்லப் புன்னகைத்தான் ! ஆம் ! கங்கையை விடத் தான் சிறந்தவள் என்று பட்டம் பெறத்தானே அவள் முயல்கின்றாள் ..அவன் திருவடிகளை மட்டுமே தீண்டப் பெற்று ” தெய்வ நதி ” என்றன்றோ கங்கை போற்றப்படுகின்றாள் !!

நானோ அவனை முழுவதுமாகத் திருமஞ்சனம் செய்துள்ளேன்.. இனிமேல் நானே சிறந்தவள் என்று பூரித்தபடி , பின்னே கிடக்கும் பெருமானை தரிசித்தாள்..

தன்னுடைய வேகப் பெருக்கின் காரணமாக , எம்பெருமான் திருமேனியில் ஆபரணங்களும் , மாலைகளும் , கலைந்தும் சேவையாகாமல் இருப்பதும் கூட அழகாய்த் தான் இருந்தது !

மீண்டுமொரு முறை அவனைத் தீண்டிட எண்ணினாள் நாவுக்கரசி !

சற்று முன்பு தானே கங்கை கூட அவன் திருவடிகளைத் தொடும் பேறு தான் பெற்றது ! நாமோ அவனை நீராட்டும் பேறு பெற்றோம் என்று உளமகிழ்ந்திருந்தாள் .. பின்பு மீண்டும் அவனைத் தொட்டுவிடத் துடிப்பானேன் ?!

நியாயமான கேள்வி ! ஸரஸ்வதியின் உள்ளத்துறையும் செய்தி இது தான் ! முன்பு கங்கையுடன் போட்டி, பொறாமை இருந்தது உண்மை தான்.. அவனைத் தொட்டுவிடத் துடித்ததும் அதற்குத் தான் ! ஆனால் ஒரு முறை அவனைத் தொழுதிடவும் , மீண்டுமவனைத் தொழ வேண்டும் என்கிற பேரவா உந்த , ஒரு பயனை விரும்பித் தொழுதிடாது / தொடாது , தொழுவதே / தொடுவதே பயன் என்கிற பேரறிவினால் அங்ஙனம் ஆசைப்பட்டாள் !!

மீண்டும் ( இன்றைய காவேரிப்பாக்கத்துக்கு அருகில் ) திருப்பாற்கடல் என்கிற ஊரில் அணையாய்க் கிழக்கே கிடந்தான் இறைவன் !

( இன்றும் அங்கே சயனித்த நிலையில் நாம் அவனை தரிசிக்கலாம்.. புண்டரீக மஹர்ஷிக்கு ப்ரத்யக்ஷம் – புண்டரீக புஷ்கரிணியும் உண்டு அங்கே )

வேகவதி இங்கும் இறைவனை ஸ்பர்சிக்கும் பாக்கியம் பெற்றாள் ! பின்பு வேகமும் சற்றே குறைந்தது !! தன் பேற்றினை எண்ணிப் பூரித்தவள் அப்பொழுது தான் ஒரு விஷயம் நினைவிற்கு வந்தவளாய், தன்னை நொந்து கொண்டாள் !!

இரண்டிடத்திலும் ( பள்ளி கொண்டா(ன்) , திருப்பாற்கடல் ) அவனை சேவித்திருந்தும் , அவனைத் துதிக்காமல் போனோமே என்று பொருமினாள் !

யாஸ்யாமி சாலாம் தேவேச தத்ர மே தேஹி தர்சனம் என்று மீண்டும் தரிசனம் தர வேண்டினாள்.. அவள் மனதை அறிந்த பகவானும் , அவ்விதமே அருளத் திருவுள்ளமானான் !!

எங்கு ???

காத்திருப்போம் !!

அடுத்த பகுதிக்குக் காத்திருங்கள் .

எழுத்து: ஸ்ரீ உ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி

குறிப்பு: இந்தத் தொகுப்பு விரைவில் நூலாக்கம் பெறுவதால், இதனை அச்சுக்கு எடுத்துக் கையாள வேண்டாமே!

Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami With his Thiruttagappanaar (in the framed photo )
Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami
With his Thiruttagappanaar (in the framed photo )

“ஜான்மன்னரை நேரடியாக சுவாமி நாதனின் நடிப்பில் கண்டேன் “-பிஷப்

10991144 10203986140276638 1513698117885524633 n - 2026

“ஜான்மன்னரை நேரடியாக சுவாமி நாதனின் நடிப்பில் கண்டேன் “-பிஷப்

(முதல்பரிசை தட்டிச் சென்ற பெரியவா)

(பெரியவா ஜெயந்தி-08-06-2017-இளமைப்பருவம்
சில நாட்கள் தொடரும்) இன்று போனஸ் இரு கவிதைகள்.

[தினமலர் கட்டுரையில் ஒரு பகுதி-25-12-2012)-“பைபிளும் பரமாச்சார்யாரும்”

சுவாமிநாதன் எட்டுவயது வரை தந்தையிடமே கல்வி கற்றார். பின் திண்டிவனம் ஆற்காடு
அமெரிக்க மிஷன் உயர் நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பில் சேர்ந்தார்.
இப்பள்ளியில் கண்டிப்பும் ஒழுங்கும் நல்ல முறையில் இருந்தன.
அறிவுக்கூர்மையுடன் நன்கு ஆர்வத்துடன் படித்து வந்தார். ஆண்டு தோறும் பைபிள்
ஒப்புவித்தல் போட்டி நடப்பது வழக்கம். இப்போட்டியில் எப்படியும் பரிசு பெற்று
விடுவது என்ற உறுதியுடன் சுவாமிநாதன் படித்து முதல்பரிசும் பெற்றார்.இவர்
வெற்றி பெற்றது அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்தது. எல்லா ஆசிரியர்களும்
சுவாமிநாதனைப் பாராட்டி மகிழ்ந்தனர்.

ஒருசமயம் அப்பள்ளியை ஆய்வு செய்ய உதவிக்கல்வி அதிகாரி மஞ்சக்குப்பம்
சிங்காரவேலு முதலியார் வந்திருந்தார். கண்டிப்பு மிக்க அவர், மாணவர்களின்
கல்வித்திறனை அறிய சிக்கலான பல கேள்விகளைக் கேட்டார். சுவாமிநாதனின் தெளிவான
பேச்சு அதிகாரியின் கவனத்தை ஈர்த்தது. நிச்சயம் இந்த மாணவர் எதிர்காலத்தில்
உயர்ந்தநிலையை அடைவார் என்று பாராட்டிச் சென்றார்.

சுவாமிநாதன் அப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியின் ஆண்டு
விழாவில் ஷேக்ஸ்பியர் எழுதிய ஜான்மன்னர் என்ற நாடகத்தை நடத்த பள்ளி நிர்வாகம்
ஏற்பாடு செய்திருந்தது. நாடகத்தின் முக்கிய கதாபாத்திரமான ஆர்தர் இளவரசர்
வேடத்தில் நடிப்பதற்கு சுவாமிநாதனைத் தேர்ந்தெடுத்தார்

தலைமையாசிரியர். நாடகத்தில் நடிப்பதற்கு தன்னைத் தேர்ந்தெடுத்ததை அறிந்து
சுவாமி நாதன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. சுவாமிநாதனின் பெற்றோருக்கோ
இதில் உடன்பாடில்லை. ஆனாலும், தன் பெற்றோரைச் சம்மதிக்க வைத்தார் சுவாமிநாதன்.
அவரது விருப்பப்படியே பெற்றோர் நாடகஉடைகளை தைக்க ஏற்பாடு செய்தனர். இரண்டே
நாட்களில் ஜான் மன்னருக்குரிய வசனங்களை மனப்பாடம் செய்து, அருமையாக நடித்தார்.
நாடகத்தைக் கண்ட தலைமை விருந்தினர் பிஷப், சுவாமிநாதனைப் பாராட்டி
மகிழ்ந்தார். இன்று ஜான்மன்னரை நேரடியாக சுவாமி நாதனின் நடிப்பில் கண்டேன்
என்று சொல்லி முதல்பரிசை வழங்கினார். அந்த சுவாமிநாதனே காஞ்சி காமகோடி 68வது
பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சுவாமிகளாகி நமக்கு அருள்பாலித்தார்.

மெம்பர்களுக்கு ஒரு போனஸ்–சுப்பு ஆறுமுகம் எழுதிய இரு கவிதைகள்

(தாலாட்டுப் பாடல்-பெரியவா மீது)

ஓங்காரம் குழந்தை என்றே உன்னுருவில் வந்ததுவோ!

ஆங்கார சக்தியதே ஆசிமொழி தந்தனளோ!

காமதேனு பாலூட்ட கலைமகளே தாலாட்ட

ஆகமங்கள் சீராட்ட அன்னையின் கை தொட்டில் ஆட்ட

காமாட்சி காதில் வந்து கதைகள் ரசிக்கச் சொல்லினளோ!

கலகல சிரிப்பினில் அன்னை கானமழை பொழிந்தனளோ!

உதைக்கும் பாதங்களை உலகமே வணங்குமல்லோ!

காத்திருக்கும் நாளை அல்லோ காமகோடி பீடமல்லோ!

அனுஷம் நட்சத்திரமோ! அவதாரம் சரித்திரமோ!

ஆடல் அரசன் – திரு ஆடல்களில் நீயும்ஒன்றோ!

ஆதி சங்கரர் அருளின் சேதியென்ன கொணர்ந்தாயோ!

ஆராரோ! ஆரிரரோ! ஆரிரரோ! ஆராரோ!

தட்சிணா மூர்த்தியோ! சனாதனக் கீர்த்தியோ!

தருமத்தின் குறைகள் கண்டு தான் எடுத்த அவதாரமோ!

ஆராரோ! ஆரிரரோ! ஆரிரரோ! ஆராரோ!”

இப்படியாக குழந்தை சுவாமி நாதன் (மஹா பெரியவாளின் பூர்வாசிரமப் பெயர்)
தொட்டிலில் துயில் கொள்ளும் அழகுக்கு ஒரு தாலாட்டுப் பாட்டுப் போட்டிருந்தேன்.
இதைக் கேட்டதும், மஹா பெரியவாள், என்னைத் தொட்டிலில் போட்டு, தாலாட் டுப் பாடி
தூங்கப் பண்ணிட்டியே! ” என்று சொல்லிச் சிரித்தார்.

பெரியவாளின் பால பருவத்தைப் பற்றிச் சொல்லும்போது,

நடித்தாரே! நாடகம் தனில் அவர் நடித்தாரே!

உலக நாடகம் நடத்திட வந்தவர் நடித்தாரே!

என்று பல்லவியும், சரணமாக

கடவுள் கொடுத்தது மானிட வேடம்!

கல்விக்கூடத்தில் ‘கிங் ஜான்’ வேடம்!

இன்றிவர் படித்தது இங்கிலீஷ் பாடம்!

எதிர்பார்த்திருக்குது காமகோடி பீடம்!

(நடித்தார்)

என்று சொன்னேன். உடனே மஹா பெரியவா, இதெல்லாம் நோக்கு எங்க கெடச்சுது?” என்று
கேட்டார். பெரியவா பத்தின புஸ்தகத்தை படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்” என்று
சொன்னேன்.-சுப்பு ஆறுமுகம்

ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம்

IMG 20170604 WA0034 1 - 2026

நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள திப்பணம்பட்டி கிராமத்தில் உள்ள
மதுக்கடையை அகற்ற கோரி 4-வது நாள் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது
. இன்று மது குடிக்கின்ற ஆண் மகனுக்கு எதிர்காலத்தில் பெண் கிடைக்காத சுழல்
உருவாகும் . அதை கருத்தில் கொண்டு தூதனமுறையில்ஆணுக்கு ஆண் திருமணம் செய்யும்
நூதன போராட்டத்தை நடத்தினர்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர் காங்கிரஸில் இருந்து ஏன் வெளியேறினார்?

periyar rajaji - 2026

பத்திரிகைத் துறைக்கு வந்த புதிதில்… நேரம் கிடைக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் வயதானவர்கள், மூத்தவர்கள், சுதந்திரப் போர் வீரர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என… அவர்களின் இல்லங்களுக்குச் சென்று சற்று நேரம் அமர்ந்து பேசி விட்டு வருவது ஒரு வழக்கமாயிருந்தது. அவர்களின் அனுபவங்கள், கதைகள், இலக்கிய உலகு, அந்நாளைய அரசியல் சூழல் என்று பலவும் அசை போடப்படும்! இவ்வாறு எத்தனையோ பேர் வீடுகளுக்குச் சென்று கதைத்திருந்தாலும், சிலர் இன்னும் என் மனசில் தங்கியிருக்கிறார்கள். அவர்களில் கு.ராஜவேலு, தேவநாராயணன், பி.சி.கணேசன் என சிலர் மிக முக்கியமானவர்கள்!

2003 என்று நினைக்கிறேன். ஒரு ஞாயிறு!

அன்றும் அப்படித்தான்! விருகம்பாக்கம் பக்கம் போவோம் வா… என்றார் நண்பர். வழக்கம்போல் என் வண்டியில் அவரின் வீட்டுக்குச் சென்றோம்.

விருகம்பாக்கம் ரெட்டி தெருவில் இருந்த அவரின் வீட்டுக்குச் சென்று பேசிக் கொண்டிருந்தபோது, நண்பர்தான் அறிமுகப் படுத்தி வைத்தார். சீராம்.. இவர்தான் பி.சி.கணேசன். நெறய்ய புத்தகங்கள் எழுதியிருக்கார். திமுக., காங்கிரஸ், கம்யூனிஸ்ட்னு அந்தக் கால வரலாறுலேர்ந்து எல்லாம் அத்துபடி. நிறைய எழுதுவார். சுய முன்னேற்றப் புத்தகங்கள் எழுதியிருக்கார் என்று அவரைப் பற்றிச் சொல்லிவிட்டு, என்னைப் பற்றியும் அவரிடம் அறிமுகப் படுத்தினார்.

அப்போது எனக்கு வயது 27. மஞ்சரி டைஜஸ்ட் இதழாசிரியப் பணியில் இருந்தேன். துறுதுறு வயது. துடுக்குத்தனமுள்ள பேச்சு. வயதுக்கு மரியாதை கொடுப்பேன் என்றாலும், தயக்கமற்ற கலகல பேர்வழி! அப்போதுதான் உலகத்தை உற்று நோக்க ஆரம்பித்திருந்தேன். எனவே கேள்விகள் நிறைய கேட்பேன்.

என் துடுக்குத்தனத்தை ரசித்தவர், உள்ளே வாங்க பேசுவோம் என்று உள்ளறையில் அமர்ந்து பேசத் தொடங்கினார். ஒரு புத்தகத்தை எடுத்து எனக்குப் பரிசளித்தார். அது அவர் எழுதிய ‘பேசும் கலை’ என்ற புத்தகம். உடனிருந்த நண்பரிடம் ரகசியங்கள் போல் சில பேசினார். அது எனக்குப் புரியவில்லை என்றாலும் ஏதோ கேட்டுக் கொண்டேன். அப்படியே பேச்சு, திமுக.,வின் தொடக்கம், அதற்கும் முன் திக.,வின் தொடக்கம் என, ஊழல், லஞ்சம், முறைகேடுகளின் தோற்றுவாய் குறித்த சங்கதிகளாகச் சென்றது…

அப்போது அவர் தெரிவித்த ஒரு செய்தி… ஆழமாகவே பதிந்து விட்டது.

பெரியார் ஏன் காங்கிரஸில் இருந்து வெளியில் வந்தார் தெரியுமா? – கேட்டார்.

ம்.. சொல்லுங்க – என்றேன்.

அவருடனான பேச்சில், அவர் சொன்ன சுதந்திரப் போராட்ட வரலாற்றுத் தகவல்களை சற்றே கோ(ர்)வையாக்கி இங்கே தருகிறேன்.

எல்லாம் 1925ஆம் ஆண்டில் நிகழ்ந்த சம்பவங்கள்தான்! இந்திய வரலாற்றில் அந்த வருடம் பல நிகழ்வுகளுக்குச் சாட்சியாய் அமைந்துவிட்ட வருடம்தான்!

1915ல் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்திறங்கினார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் காந்தியின் போராட்டச் செய்திகள் இந்தியாவில் முன்னரே பரவியிருந்தது. இந்தியா வந்த அவருக்கு கோகலே போன்றோருடன் தொடர்பு ஏற்பட்டு, காங்கிரஸ் பேரியக்கத்தில் காந்தி தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். வந்த குறுகிய காலத்தில் அவரின் புகழ் நாடு முழுதும் பரவியது. அவர் வந்து சேர்ந்து தீவிரம் காட்டிய அந்த 1919ம் வருடத்தில்தான் ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் சம்பவம் என அடுத்தடுத்து நிகழ்வுகள். எனவே அப்போது போராட்டம் காந்தி தலைமையில் மாறியது.

இந்த நேரத்தில்தான், ஈவேரா., (1919 – 20) தானும் காந்தி, காங்கிரஸ் கொள்கை என ஈடுபாடு காட்டி காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தார். தாமும் பெரிய பொறுப்புகளுக்கு வருவோம் என்ற ஆசையுடன் காங்கிரஸ் இயக்கத்தின் போராட்டங்களில் பங்கெடுத்தார்.

1921ல் ஒரு போராட்டம் வந்தது. அன்னிய நாட்டு துணி பகிஷ்கரிப்பு போராட்டம். வெளிநாட்டு துணிகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல் போராட்டம். அதில் ஈவேரா., நாயக்கர் பங்கேற்றார். அடுத்த சில நாட்களில், கள்ளுக்கடை மூடல் போராட்டம் வந்தது. தொடர்ந்து 1921-22ல் ஒத்துழையாமை இயக்கம், அடுத்து மது அருந்துதல் சட்டம் போன்றவற்றுக்கு எதிராக போராட்டங்கள். இவற்றில் எல்லாம் அவர் கைதாகி சிறை சென்று மீண்டார். அந்த நேரத்தில்தான் அவர் (1922ல்) சென்னை மாகாண காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நேரம்… 1924ல் டி.கே.மாதவன் தலைமையில் வைக்கம் பகுதியில் ஆலய நுழைவுப் போராட்டம் ஏற்பாடானது. அங்கே ஹரிஜன மக்கள் (தலித், ஈழவர்) கோயில் இருக்கும் வீதிகளில் நடக்கவும், கோயிலுக்குள் நுழையவும் தடை இருந்தது. இப்போராட்டத்தில் நாடு முழுதுமிருந்து காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கலந்துகொண்டனர். தமிழகத்தின் சார்பில், இயக்கப் பொறுப்பில் இருந்த ஈவேரா., நாயக்கரும் கலந்து கொண்டார். அவர் உடனே கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டார். இருந்தபோதிலும், அவருடன் வந்த தொண்டர்கள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நேரம், அப் போராட்டத்துக்கு வெற்றியும் கிடைத்தது. இதை வைத்து, தமிழகத்தில் அவருக்கு ‘வைக்கம் வீரர்’ என்ற பெயரை அங்கங்கே கூட்டங்களில் இட்டு அழைத்து, பரப்பினார்கள்! எல்லாம் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்ததால் சாத்தியமானது.

சிறை சென்று, காங்கிரஸ் இயக்கத் தொண்டர்கள் ஆதரவுடன், பெரிதாக வளர்ந்து வந்த ஈவேரா., நாயக்கருக்கு இந்த நிலையில்தான் ஒரு சிக்கல் எழுந்தது. ஒரு விதத்தில் மன சலிப்பும் ஏற்பட்டது. சில முறை சிறை சென்று வந்ததில், அந்த அனுபவம், அவருக்குள் ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நேரத்தில், காங்கிரஸ் இயக்கத்தை மீறி வேறு சில நட்புகளும், வேறு விதமான மன விகார எண்ணங்களும் அவருக்குள் தலைதூக்கின. ஈவேரா நாயக்கருக்கும், வரதராஜுலு நாயுடு போன்றோருக்கும் தொடர்புகள் வலுப்பெற்றன. ஏற்கெனவே, சிறு வயதில் ஒரு முறை தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், துறவறம் பூண்டுவிடலாம் என்ற எண்ணத்துடன் காசி சென்றவருக்கு சில கசப்பான சம்பவங்கள்! (அந்தணரல்லாத) ஒரு தென்னிந்தியக் குழு மடத்தில் பசியோடு சென்ற போது உணவு கொடுக்காமல் விரட்டப்பட்டதில், விரக்தி; வெறுப்பு! அது ஏற்படுத்திய அடி மன ஆழ நினைவு, சாதியக் கண்ணோட்டம் என்ற பார்வையிலேயே காங்கிரஸ் இயக்கத்தின் நிகழ்வுகளையும் பார்க்கத் தூண்டியது.

இந்த நேரத்தில், அங்கே இன்னொரு நிகழ்வு பலமாகக் குறுக்கிட்டது. அது… வ.வே.சு. ஐயருக்கு விளைவித்த கொடூர நெருக்கடிகள்! அது என்ன?

அந்தணராகப் பிறந்திருந்த போதும், தீவிர ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருந்தார்கள் பாரதமாதா சங்கத்தினர். வ.வேசு. ஐயர், சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன், பாரதி என ஒரு கூட்டம்! ஆங்கிலேயர்களால் துரத்தல்களுக்கும் கொடுமைச் சித்ரவதைகளுக்கும் ஆளான வ.வே.சு. ஐயர், 1922ல் சிறையிலிருந்து விடுதலையாகியிருந்தார். வருடங்கள் பல ஓடி ஓடிக் களைத்து, வேறு வகையில் போராட்டத்தில் ஈடுபடலாம் என்ற எண்ணத்தில், வ.வே.சு. ஐயர் திருநெல்வேலி ஜில்லா சேரன்மகாதேவியில் தாமிரபரணிக் கரையில் ஆசிரமம் ஒன்றை நிறுவினார். அதற்கு ‘பாரத்வாஜ ஆசிரமம்’ என்று பெயர் வைத்து, அடுத்த தலைமுறையைத் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். மிக நன்றாக நடந்து வந்த இந்த ஆசிரமத்துக்கு அப்போதைய ஈவேரா., குழுவின் அரசியல் விளையாட்டால் ஒரு கெட்ட பெயர் வந்தது.

ஆசிரமத்தில் அனைத்து ஜாதி குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான உணவும் சமபந்தி போஜனமும் கொடுக்கப்பட்டது. என்றாலும், புதிதாகச் சேர்ந்த சில பிராமணக் குழந்தைகளின் பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்குத் தனியாக உணவு பரிமாற வேண்டும் என்றனர். வேறு வழியின்றி, அவர்களுக்குத் தனியாக உணவளிக்க ஐயர் ஏற்பாடு செய்தார். இருப்பினும், ஐயரும், அவர் பெண், மற்ற பிராமணக் குழந்தைகளும், மற்ற எல்லாக் குழந்தைகளோடும்தான் உணவு அருந்தினார். ஆனால் அவரைப் பிடித்த துரதிர்ஷ்டம், சில பிராமணப் பிள்ளைகளுக்கு தனியாக உணவு அளித்தது ஜாதிப் பிரச்னையாக உருவெடுத்து பிரமாண்டமாக வளர்ந்தது. வ.வே.சு., ஐயர் மீது ஜாதி வெறியன் என்ற முலாம் பூசப்பட்டது. பூசியவர்கள் ஈ.வே.ராமசாமி நாயக்கர், டாக்டர் வரதராஜுலு நாயுடு போன்றவர்கள். இந்தப் பிரச்னை மகாத்மா காந்தி வரையில் எடுத்துச் செல்லப்பட்டது. இவற்றைக் கேட்டதும், வ.வே.சு., பெரிதும் மனம் உடைந்து, நொந்தே போனார்.

இப்படியான சூழலில், அன்னியத் துணி பகிஷ்கரிப்பைத் தொடர்ந்து, அந்த நேரம் கதர் விற்பனை, கைத்தறி துணிகள் விற்பனைக்கு ஏற்பாடானது. தலைவர் என்பதால், சுதேசி பண்டார் பொறுப்பு ஈவேரா., நாயக்கரிடம் இருந்தது. சென்னை மாகாணம் முழுதும் அப்போது எவ்வளவு விற்பனை, எவ்வளவு நன்கொடை வசூலானது, எவ்வளவு கைவசம் என்பனவற்றை எல்லாம் நாயக்கர்தான் சொல்ல வேண்டும். அனைத்தும் அவர் வசம் இருந்தது.

அந்த நேரத்தில், திருப்பூரில் சென்னை மாகாண காங்கிரஸ் இயக்கத்தின் கூட்டம் ஏற்பாடானது. கூட்டத்துக்கு சில நாட்களே இருந்தபோது, கமிட்டியிடம் கணக்கு வழக்குகளை ஒப்படைக்க வேண்டிய நிலையில், ஈவேரா.,வுக்கு பெரிய குழப்பம்! பெற்ற பணம், பொருள் எல்லாம் எப்படியோ, யாருக்கோ, எங்கேயோ சென்று விட, முறையான கணக்கு நாயக்கரிடம் இல்லை. அந்த நேரத்தில், சுய தேவைக்கு எடுத்துக் கொண்ட பணத்துக்கு ஈடாக, உடனே அங்கு இங்கு வாங்கியோ பெற்றோ சரிக்கட்ட வாய்ப்பும் அமையவில்லை. கையைப் பிசைந்தார் நாயக்கர். எப்போதும் கைகொடுக்கும் உயிர் நண்பர் ராஜாஜியிடம் ஓடினார்.

ராஜாஜி, பதற்றத்துடன் விவரங்களை விளக்கிக் கொண்டிருந்த ராமசாமி நாயக்கரை ஆசுவாசப் படுத்தினார். பதட்டப்படாமல் அமைதியாகச் சொல்லுமாறு கூறினார். ராமசாமி நாயக்கர், தன் தவறுகளைச் சொன்னார். எப்படி இந்த இக்கட்டில் இருந்து தப்புவது? என்று ராஜாஜியிடம் யோசனை கேட்டார்.

அப்போது ராஜாஜி சொன்னார்… நீ இயக்கத்தில் இருந்தால்தானே கணக்கு கொடுக்கணும்?
பொறி தட்டியது ராமசாமி நாயக்கருக்கு! என்ன சொல்கிறீர்? – கேட்டார்.
ஏதாவது காரணத்தைச் சொல்லி இயக்கத்தில் இருந்து வெளியேறினால், நீ ஏன் கணக்கு கொடுக்கணும்!? – என்றார்.

கெட்டியாகப் பிடித்துக் கொண்ட நாயக்கருக்கு, இயக்கத்தில் இருந்து வெளியேறுவதற்கான காரணங்களை விளக்குவதற்கு அப்படி ஒன்றும் பஞ்சம் ஏற்படவில்லை! வ.வே.சு., வகையாய் மாட்டினார். அடுத்தது, இருக்கவே இருக்கிறது இட ஒதுக்கீடு!

திருப்பூரில் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில், அரசுப் பணிகளிலும் கல்வியிலும் இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வலியுறுத்தினார். ஆனால் இது இன வேற்றுமையை பிரதிபலிப்பதாக அமைகிறது என்று, காங்கிரஸ் அமைப்பில் இருந்தவர்கள் ஏற்க மறுத்தனர். வ.வே.சு உதாரணர் ஆக்கப்பட்டார். தொடர்ந்து, சாதீயத் தாக்குதல்கள், பிரிவினை அரசியல் அலசப் பட்டன. ராஜாஜி என்ன நினைத்தாரோ அது நடந்தது.

காங்கிரஸில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து அங்கிருந்து உடனடியாக அகன்றுவிட்டார் ஈ.வே.ரா. நாயக்கர்.

இவ்வாறு, காங்கிரஸில் இருந்த அந்த 1925 வரை தன் பெயரில் நாயக்கர் எனும் சாதிப் பெயரை வைத்திருந்தார். அந்த 46 வயது வரை அவர் கடவுள் பக்தி கொண்டவர்தான். அவரின் குடும்பமும் கடவுள் பக்தி கொண்ட குடும்பம்தான். அதனால்தான், தம் இரு மகன்களுக்கும் ராமசாமி, கிருஷ்ணசாமி என்று அவர் பெற்றோர் பெயர் சூட்டியிருந்தார்கள்.

தொடர்ந்து, 1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இப்போது நாயக்கர் மறைந்து பெரியார் ஆகிவிட்டார். தன் கொள்கைகளைப் பரப்ப 1925 மே மாதம் குடியரசு நாளிதழைத் தொடங்கினார்.

V.V.S.Iyer - 2026இந்த நேரம் இங்கே நெல்லை மாவட்டத்தில்… 1925 ஜுன் மாதம் 4ம் நாள், குருகுலக் குழந்தைகளுடன் பாபநாசம் அருவிக்குச் சென்றிருந்த போது, அவரது மகள் சுபத்ரா அருவியைக் கடக்கத் தாண்டியபோது, சிறுமி அணிந்திருந்த தாவணி நீரில் பட்டு அருவித் தண்ணீர் விழும் தடாகத்துக்குள் அவளை இழுத்துக் கொண்டது. மகளைக் காப்பதற்காக தடாகத்தில் பாய்ந்த வ.வே.சு.வும் தடாகத்துள் போய்விட்டார். இருவரின் உடலும் கிடைக்கவில்லை. இப்படியாக ஒரு சுதந்திரப் போர் வீரரின் இறுதி அவலச்சுவையுடன் முடிந்தது. ஜூன் 4… மகனைத் தனியே தவிக்க விட்டு அருவியில் கரைந்த ஐயரின் நினைவு நாள் இன்று!

ஆனால், குடியரசு இதழில் வ.வே.சு. ஐயர் மறைவு குறித்து எழுதிய பெரியார், ‘‘அவரது ஒரே புதல்வன் நிலை கண்டு எமதுள்ளம் நடுக்கமெய்துகிறது; எல்லாம் ஆண்டவன் செயல்’’ என்று எழுதினார். (குடியரசு 07-06-1925)

பின் குறிப்பு:

பி.சி. கணேசன் சொன்ன தகவல்களில்… ராஜாஜி, ஈ.வே.ராமசாமி நாயக்கரைப் பார்த்து, “கட்சியில் இருந்தால் கணக்கு கொடுத்துதானே ஆகணும்?!” என்று சொல்லியிருக்கலாம். அது, சொல்பவர்களின் பேச்சு வழியே, பின்னாளில், “கட்சியில் இருந்தால்தானே கணக்கு கொடுத்தாகணும்!” எனும் விதமாய் திரிந்து வந்திருக்கலாம்.  

இதில் சில விஷயங்களை நுணுகிப் பார்க்க வேண்டியுள்ளது

ராஜாஜி – தவறுகளுக்குத் துணை போகும் குணம் கொண்டவர் அல்லர். ஆனால் அவர் பெயரை நட்பு எனும் பலவீனத்தைப் பயன்படுத்தி, ஈவேரா கையாண்டார் என்று சில சூழல்கள் தெளிவாக்குகின்றன.

மேலும், ஒரு நண்பர் எனும் வகையில் ஈவேரா.,வுக்கு உடனடியான யோசனை சொல்லப் போகும்போது, அவர் மனதை நோகடிக்காத வகையில் ஒன்றைச் சொல்ல வேண்டும் என்று யோசித்திருக்கலாம். அதனால், நாசூக்காக இப்படி ஒரு வழியைச் சொல்லி விட்டு, பின்னர் கணக்கு வழக்குகளைப் பார்த்து ஈவேரா.,விடம் இருந்து ஒரு பகுதி திரும்பப் பெறப்பட்டு கட்சிக் கணக்கில் சேர்க்கப்பட்டது என்று கூறுவார்கள்…

அந்த வகையில், ராஜாஜி ஊழலை மறைப்பதற்காகச் செய்தார் என்று இந்த விஷயத்தைக் கொள்ள முடியாது. ஈவேரா.,வுக்கு புரியும் விதத்தில் அவர் பாணியில் சொல்லியிருக்கக் கூடும்…!
காரணம், ராஜாஜி சுய வாழ்க்கையில் ஒழுங்கைக் கடைப்பிடித்தவர். தன் விவகாரத்தில் ஒழுக்கமாக இருப்பவர் அடுத்தவருக்கு தவறான வழி காட்டியிருக்க மாட்டார்! என்பது என் கருத்து! 

 

– செங்கோட்டை ஸ்ரீராம்

டிரம்ப்-ஐ விமர்சித்து பேஸ்புக் டிவிட்டர்ல கருத்து போட்டீங்களா?: அப்டின்னா அமெரிக்க விசா கிடைக்காது!

Pakistan Could Be Put On Donald Trumps Immigration Ban - 2026

அமெரிக்கா செல்வதற்கு விசா வாங்கச் செல்வோருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறது அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம்! அதில் ஒரு பகுதிதான், சமூக வலைத்தள விவரங்களை, விசா விண்ணப்பத்தில் இணைப்பது! இவ்வாறு விண்ணப்பதாரர்களின் சமூக வலைதள பக்க விவரங்களை இணைக்கும் கேள்விகளைக் கண்டு பலரும் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து அதிரடியாக பல முடிவுகளை எடுத்து வருகிறார். அதற்கான சட்டங்களும் அவ்வப்போது நிறைவேற்றப் படுகின்றன. குறிப்பாக, 6 முக்கிய இஸ்லாமிய நாடுகளுக்கான விசாவை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விசா விண்ணப்பதாரர்கள் அவர்களின் சமூக ஊடகக் கணக்குகளை கட்டாயம் ஒப்படைக்க வேண்டும் என புதிய விதிமுறையைக் கொண்டுவந்துள்ளது அமெரிக்க நிர்வாகம். இது பயங்கரவாதிகளின் கடுமையான சோதனையின் ஒரு பகுதி என விளக்கமளித்துள்ளது நிர்வாகம். விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் சமூக ஊடகக் கையாளுதல் தகவல்களை ஒப்படைத்தால் மட்டுமே நாட்டினுள் நுழைய அனுமதிக்கப்படுவராம்!

விசா வேண்டுமென்றால் கடந்த 15 ஆண்டுகளில் மேற்கொண்ட பயண தகவல்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் பயன்படுத்தப்படும் சமூக வலைதள பக்கங்களின் அடையாளங்கள் ஆகியவை முக்கியம். விண்ணப்பதாரர்கள் இதற்கு முன் செய்த பயணங்களுக்கு செய்த செலவுகளுக்கான நிதி ஆதாரம் குறித்த விவரங்களையும் இனி தெரிவிக்க வேண்டும்.

விசா விண்ணப்பதாரர்களிடமிருந்து கூடுதல் தகவல்களைச் சேகரிப்பதன் மூலம், அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த உதவும் எனப்படுகிறது. மேலும், சமூக ஊடக செயல்பாடுகளைக் கண்காணிப்பதன் மூலம், பயங்கரவாத தொடர்பு, பயங்கரவாதக் குழுக்களுடனான பரிமாறல்கள் ஆகியவற்றைக் கண்டுப்பிடிக்க பயன்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு எதிரான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பியிருந்தாலோ, கருத்து தெரிவித்திருந்தாலோ, அவர்களுக்கு விசா வழங்கப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

லண்டனில் பயங்கரவாத தாக்குதல்: 6 பேர் பலி; பாலம் மூடல்!

london bridge borough market - 2026

லண்டன்:

லண்டனில் உள்ள பாலத்தில் வெள்ளை வேன் ஒன்றை தாறுமாறாக ஓட்டி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியல், 6 பேர் பலியாகியுள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

புகழ்பெற்ற லண்டன் பாலத்தில் சென்று கொண்டிருந்த வெள்ளை வேன் ஒன்று, நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் பாலத்தில் தாறுமாறாக ஓடி அதில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதனால் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்த வர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்தையடுத்து போலீசார் தாற்காலிகமாக லண்டன் பாலத்தை மூடியுள்ளனர்.

வெள்ளை வேனில் 3 பேர் இருந்தனர். உணவுவிடுதிகள், மதுபான பார்கள் அதிகம் கொண்ட பரோஹ் மார்க்கெட் பகுதியில் மக்களை மிரட்டி கத்தியல குத்தினர் என்றும் அவர்கள் ஆயுதங்களுடன் இருக்கலாம் எனவும் லண்டன் போலீசார் கூறினர். இந்தச் சம்பவத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். பயங்கரவாதிகள் மூவரும் அடுத்த 8 நிமிடங்களில் ஆயுத போலீஸாரால் சுடப்பட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்துக் கூறிய காவல் துணை ஆணையர் மார்க் ரௌவ்லி, “சந்தேகப்படும்படி வந்த அந்த நபர்கள், தங்களிடம் தற்கொலைப் படையினர் போன்ற ஆயுதங்களை உடையில் கட்டியிருந்தனர். அதனால் சற்று பின்வாங்க நேர்ந்தது. அவர்கள் சுடப்பட்ட பின்னர்தான் அவை போலியானவை என்று தெரியவந்தது” என்றார்.

இந்தத் தாக்குதலில் காயம் பட்ட 30க்கும் மேற்பட்டோரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்றதாக, ஆம்புலன்ஸ் சர்வீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயங்கரவாதிகள் மிரட்டியபோது, எதிர்ப்பு தெரிவித்த போக்குவரத்து நடத்துனர் ஒருவருக்கு கத்திக் குத்து விழுந்தது. ஆனால் அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என்று போக்குவரத்து போலீஸார் ஒருவர் கூறினார்.

இது பயங்கரவாதிகளின் தாக்குதல் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர் தெரசா மே, இது ஒரு கோழைத்தனமான தாக்குதல் என்று கூறி, மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த அவசர கூட்டத்தைக் கூட்டினார்.

இதனிடையே லண்டன் சம்பவம் பெரும் வருத்தமளிக்கிறது. அவர்களுக்கு வேண்டிய உதவியை அமெரிக்கா செய்யும். இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க வெளிநாட்டு பயணிகளுக்கான தீவிர கட்டுப்பாடு தேவை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

பேருந்துகள் நின்று செல்ல கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. ஏற்பாடு

3pcmbus - 2026

கீழப்பாவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சிவகாமிபுரம்விலக்கு நிறுத்தத்தில்
எஸ்.எப்.எஸ். பஸ்கள் நின்று செல்ல கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி.யின் கோரிக்கையை
ஏற்று ஆணை கீழப்பாவூர் அருகேயுள்ள சிவகாமிபுரம் விலக்கு பகுதியில் தனியார்
பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரி மாணவர், மாணவியர்கள் மற்றும்
சிவகாமிபுரம் ஊர் பொதுமக்கள் இங்குள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி
வருகின்றனர். ஆனால் நெல்லை-தென்காசிக்கு இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள்
இங்கு நிற்காததால் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை
ஏற்பட்டு வந்தது. எனவே இங்கு அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல ஏற்பாடு
செய்துத்தரக்கோரி சிவகாமிபுரம் பூ வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும்
மாணவர்,மாணவிகள் திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுக செயலரும், மக்களவை
உறுப்பினருமான கே.ஆர்.பி.பிரபாகரனிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அவர் போக்குவரத்து துறை அதிகாரிகள் பேசி, அனைத்து பேருந்துகளும்
நின்று செல்ல ஏற்பாடு செய்தார். அப்பகுதியில்
நடைபெற்ற விழாவில் எஸ்.எப்.எஸ். பேருந்துகள் நிறுத்த ஆணையை பெற்றுக்கொண்ட
கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி., பேருந்துகள் நின்று செல்லும் நிகழ்ச்சியையும்
தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர்
செல்வகோமதிகுமார், வணிக மேலாளர் சுப்பிரமணியன், கிளை மேலாளர்கள் தென்காசி
பழனியப்பன், புளியங்குடி கோபாலகிருஷ்ணன், செங்கோட்டை முருகன் மற்றும் ஒன்றிய
அதிமுக செயலாளர் நடராஜன், பேரூர் செயலாளர் பாஸ்கர், மாநில பேச்சாளர் தீப்பொறி
அப்பாத்துரை, நிர்வாகிகள் கணபதி, , மதியழகன், தியாகராஜன், ஆண்டபெருமாள், உள்பட
பலர் கலந்து கொண்டனர்.

அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல ஏற்பாடு செய்து தந்த கே.ஆர்.பி.பிரபாகரன்
எம்.பிக்கு பூ வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர், மாணவியர்கள் நன்றி
தெரிவித்துள்ளனர்.

பெரும்பான்மை பலமிருந்தால் எதுவேண்டுமானாலும் செய்வீர்களா?: பாஜக.,வை வையிற விழாவில் ஸ்டாலின் காட்டம்!

MK Stalin warns BJP - 2026

சென்னை:

பெரும்பான்மை பலம் இருந்தால் நீங்கள் எது வேண்டுமானாலும் செய்துவிடுவீர்களா? நாட்டு மக்களிடம் இன்னொரு சுதந்திரப் போராட்டத்தை ஏற்படுத்தி விடாதீர்கள் என்று, பா.ஜ.க.வை வையிற விழாவான கருணாநிதி வைர விழாவில் மு.க.ஸ்டாலின் காட்டத்துடன் பேசினார்.

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் சட்டமன்ற நுழைவு வைரவிழா மற்றும் கருணாநிதியின் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. கருணாநிதி வைரவிழா என்ற பெயரில் விழா நடத்தினாலும், அதனை மோடி, மற்றும் பாஜக.,வை வையிற விழாவாக மாற்றிக் காட்டிய ஸ்டாலின், விழாவில் நிறைவுரையாற்றினார். இந்த விழாவில் பங்கேற்ற தலைவர்களை வரவேற்றும் நன்றி தெரிவித்தும் பேசிய அவர், பாஜக.,வுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.

அவர் பேசியவை…
குளித்தலை தொகுதியில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து 12 சட்ட மன்றத் தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்றவர் கலைஞர். 48 ஆண்டு காலம் இந்த இயக்கத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். தமிழகத்தின் முதலமைச்சராக 19 ஆண்டு காலம் பணியாற்றி சாதனை படைத்திருக்கிறார். திராவிட இயக்கம் நூற்றாண்டு கண்டிருக்கிறது. அதில், 80 வருடம் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர் கலைஞர். அப்படிப்பட்ட தலைவருக்கு எடுக்கப்பட்டுள்ள இந்த விழாவிற்கு வந்திருக்கும் அனைத்து தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த விழாவை மையப்படுத்தி, ஊடகங்களில் கூட்டணிக்கு அச்சாரம் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் நான் அதைப் பற்றி பேச விரும்பவில்லை. இந்த விழா நமக்கெல்லாம் பூரிப்பு தருவதுதான். ஆனால் ஒரு ஏக்கத்துடனே இருக்கிறோம். கலைஞர் இங்கு வந்து அமரவில்லையே என்ற ஏக்கம்தான். தலைவர் இங்கு ஏன் வரவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். உடல்நிலை தேறி வந்தது. ஆனால், உடல்நிலை தேறி வரும் நிலையில், தொற்று ஏற்படும் என்பதால் கூட்டத்திற்கு அழைத்துச் செல்லக்கூடாது என்று மருத்துவர்கள் அனைவரும் தெரிவித்து விட்டார்கள். அதனால்தான் அவரை அழைத்து வரவில்லை.

இந்திய அரசியலுடன் ஒன்றிணைந்த இயக்கம் திமுக. மாநில உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடும் இயக்கம் திமுக. சமூக நீதி, விவசாயிகள் பிரச்னை, தொழிலாளர் உரிமை, பெண்ணுரிமை என தொடர்ந்து போராடும் இயக்கம் திமுக. தேசிய ஒருமைப்பாட்டிலும் நாட்டின் பன்முகத் தன்மை மீதும் நம்பிக்கை கொண்டிருக்கும் இயக்கம் திமுக. அப்படிப்பட்ட இயக்கத்தின் தலைவரின் பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்ற வைர விழாவை இங்கே கொண்டாடுகிறோம். தலைவர் கலைஞர் எண்ணற்ற பிரதமர்களை உருவாக்கியவர், உருவாகக் காரணமாக இருந்தவர்.

தற்போது மத்தியில் இருக்கும் இந்த ஆட்சி மூன்றாண்டு காலம் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இந்த ஆட்சியாளர்கள் மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறினார். பெரும்பான்மை பலம் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா? மாநிலங்களின் முதலமைச்சர்களை ஒருங்கிணைத்து டீம் இந்தியாவை உருவாக்குவோம் என்று சொன்னார்கள்.

உருவாக்கப்பட்டதா? வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவோம் என்ற உறுதி மொழி என்ன ஆயிற்று? விவசாயிகள் வருமானத்தை ஒன்றரை மடங்கு உயர்த்தி தருவோம் என்றார்கள். செய்தார்களா? வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவோம், அதன்மூலம் இந்தியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வோம் என்றார்களே, 15 ஆயிரமாவது போட்டார்களா? லோக்பால் உருவாக்கப்படும் என்றார்கள். உருவானதா? இல்லையே. ஆக, மூன்றாண்டுகாலமாக எதையும் செய்யவில்லை. எதைப்பற்றியும் கவலைப்படவில்லை.

அதையொல்லாம் மூடி மறைக்க, ராகுல் காந்தி சொன்னதுபோல் ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்தார்கள். இப்போது மாட்டிறைச்சிக்கு தடை விதித்துள்ளார்கள். இந்த நிலையில்தான் மத்தியில் பாஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. அத்துடன், இந்தியாவை மதச்சார்புள்ள நாடாக மாற்ற படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். கலைஞர் மட்டும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்திருந்தால் மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கையை எதிர்த்து முதல் நபராகக் குரல் கொடுத்திருப்பார்.

திமுக., மத்திய அரசு சொல்வதற்கு எல்லாம் ஆடக் கூடிய பொம்மை அல்ல. எங்களுக்கு ஆட்சி பெரிதல்ல, ஆட்சி பெரிதென்று கருதியிருந்தால் நெருக்கடி நேரத்தில் ஆட்சியை காப்பற்றியிருக்க முடியாதா? ஆட்சியைப் பற்றி கவலைப்படவில்லையே. இலங்கைத் தமிழர்களுக்காக ஆட்சி பறிபோனதே, கலைஞர் கவலைப்பட்டாரா? கொள்கை, லட்சியத்தில் இருந்து நாம் என்றைக்கும் பின்வாங்கியது கிடையாது.

பா.ஜ.க. ஆட்சிக்கு இன்று பெரும்பான்மை இருக்கலாம். அதன்மூலம் எதிர்க் கட்சிகளை அழிக்க காய் நகர்த்திக் கொண்டிருக்கலாம். இந்தச் சூழலில்தான் நாம் இந்த மேடையில் கூடியிருக்கிறோம். இதேபோல் மதச்சார்பற்ற ஆட்சியை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.

இப்போது மத்திய ஆட்சியாளர்கள் மாட்டிறைச்சிக்கு தடைவிதித்து குழப்பதை ஏற்படுத்துகிறார்கள். அவர்களிடம் கேட்க விரும்புகிறேன், இன்னொரு சுதந்திர போராட்டத்தை இந்தியாவில் ஏற்படுத்திவிடாதீர்கள். அதை சந்திக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். நாமும் தயாராக இருக்கிறோம். .. என்று பேசினார் மு.க.ஸ்டாலின்.

நான்கு நாடுகள் பயணத்தை முடித்து நாடு திரும்பினார் மோடி

modi france - 2026

புது தில்லி:

அரசு முறைப் பயணமாக நான்கு ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.

ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நான்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஆறு நாள் அரசு முறைப் பயணமாக மே மாதம் 29 ஆம் தேதி புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இன்று பிரான்ஸ் நாட்டில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.

அவரது இந்த பயணத்தில், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுடன் சில வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ரஷ்ய பயணத்தில் கூடங்குளத்தில் மேலும், இரு அணு உலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ரஷ்ய பயணத்தின்போது, மங்கோலிய அதிபர், ஐ.நா பொதுச் செயலாளர் ஆகியோரையும் மோடி சந்தித்து பேசினார். பிரான்ஸ் நாட்டில் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள இம்மானுவேல் மாக்ரோனை சந்தித்துப் பேசினார். அப்போது, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்குவது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முன்னதாக, அரசு முறைப் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து தனது நன்றியை அவர் டிவிட்டரில் தெரிவித்துக் கொண்டார். மேலும், பிரான்ஸ் பயணம் குறித்து குறிப்பிட்டபோது, இந்தியாவுடனான முக்கிய நட்பு நாடு பிரான்ஸ், அதனுடன் உறவை மேம்படுத்துவதற்காக வந்துள்ளேன் என தனது டிவிட்டர் பதிவில் மோடி தெரிவித்தார்.