
சென்னை:
வானொலியில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றும் மனதின் குரல் நிகழ்ச்சியில், ஆரோக்கியமான விமர்சனம் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்று கூறினார்.
அவர் ஆற்றிய உரையின் முழு வடிவம் : (மனதின் குரல் – 28.5.17)
எனதருமை நாட்டு மக்களே, வணக்கம்.
இந்த ஆண்டு கோடையின் வெப்பம் மறக்க முடியாத அனுபவமாக அமைந்திருக்கிறது. அதே வேளையில் நாம் மழையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நான் இன்று உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் வேளையிலே, ரமலான் புனித மாதம் தொடங்கி விட்டது. ரமலானின் புனிதமான மாதம் பிறந்திருக்கும் இந்த வேளையில், நான் பாரதத்திலும் உலகெங்கிலும் வாழும் மக்களுக்கு, குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு, என் மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரமலான் மாதத்தில் பிரார்த்தனை, ஆன்மீகம், அறப்பணி ஆகியவற்றிற்கு கணிசமான மகத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. உலகில் உள்ள அனைத்து சமயங்களும் பாரத நாட்டில் இருக்கின்றன என்பது நமது நாட்டின் 125 கோடி மக்களும் பெருமிதம் கொள்ள வேண்டிய விஷயம்; இந்த மகத்தான பாரம்பரியத்தை நமக்கு நமது முன்னோர்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை நாம் நமது பாக்கியமாகக் கருத வேண்டும்.
இறைவனை நம்புபவர்களும் இருக்கிறார்கள், இந்த தேசத்தில் இறைவனை மறுப்பவர்களும் இருக்கிறார்கள், விக்ரஹ ஆராதனை செய்பவர்களும் உண்டு, விக்ரஹ ஆராதனையை எதிர்ப்பவர்களும் உண்டு – இப்படி பலவகைப் பட்டவர்கள் நிறைந்திருப்பது நம் தேசம். பலவகையான எண்ணப்பாடுகள், பலவகையான வழிபாட்டு முறைகள், பலவகையான பாரம்பரியங்கள் என ஒன்றிணைந்து வாழும் கலை நம் உணர்வோடு கலந்து விட்டது. சமயங்கள் ஆகட்டும், வழிமுறைகள் ஆகட்டும், தத்துவங்கள் ஆகட்டும், பாரம்பரியங்கள் ஆகட்டும் – இவை அனைத்தும் நமக்கு அளிக்கும் ஒரே செய்தி – அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம், என்பவை தாம். இந்த புனிதமான ரமலான் மாதம் அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் என்ற பாதையில் நாம் முன்னேறிச் செல்ல நமக்கு துணை இருக்கும்.
நான் மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த முறை நான் மனதின் குரலை வெளிப்படுத்திய போது, நான் ஒரு சொல்லைப் பயன்படுத்தி இருந்தேன், இதைக் குறிப்பாக இளைஞர்கள் குறித்து கையாண்டிருந்தேன்; ஏதாவது ஒன்றைப் புதிதாகச் செய்யுங்கள், comfort zone என்ற சொகுசு வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள், புதிய அனுபவங்களைப் பெறுங்கள், இந்த வயதில் தான் உங்களால் வாழ்க்கையை இப்படி வாழ முடியும், சற்று அபாயங்களை எதிர்கொள்ளுங்கள், இடர்ப்பாடுகளை சந்தியுங்கள் என்று கூறியிருந்தேன். ஏராளமானவர்கள் தங்கள் பின்னூட்டங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
தனிப்பட்ட முறையில் தங்கள் அனுபவங்களைப் பற்றி என்னிடம் உற்சாகத்தோடு பகிர்ந்து கொள்ள அனைவருமே விரும்பியிருக்கிறார்கள். என்னால் ஒவ்வொரு விஷயத்தையும் படிக்க முடியவில்லை, ஒவ்வொருவர் அனுப்பியிருக்கும் செய்தியையும் என்னால் கேட்க முடியவில்லை, ஏனென்றால் அந்த அளவுக்கு வந்து குவிந்திருக்கிறன. ஆனால் தோராயமாக நோக்கும் போது, சிலர் சங்கீதம் பயில முயன்றிருக்கிறார்கள், சிலர் புதியதொரு வாத்தியத்தைக் கற்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள், சிலர் யூ ட்யூபைப் பயன்படுத்தி புதிய விஷயம் ஒன்றைக் கற்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள், புதிய மொழியைக் கற்றுக் கொள்ளும் முயற்சி செய்திருக்கிறார்கள், சிலர் சமையல் கலையில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள், சிலர் நாடகத்தில், சிலர் கவிதை இயற்றுவதில் என பலவகையான முயற்சிகளில் இவர்கள் ஆக்கபூர்வமாக ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அவரவர் இயல்புகளை அறிந்து கொள்வது, வாழ்வது, புரிந்து கொள்வது என்ற முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தொலைபேசி அழைப்பில் ஒலித்த உணர்வை நீங்கள் கேட்டே ஆக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
தீக்ஷா காத்யால் பேசுகிறேன். படிக்கும் பழக்கம் என்பது கிட்டத்தட்ட என்னிடமிருந்து விடுபட்டுவிட்ட நிலையில் நான் விடுமுறை நாட்களில் படிக்க முடிவெடுத்தேன். விடுதலைப் போராட்டம் பற்றி நான் படிக்கத் தொடங்கிய போது, பாரதம் சுதந்திரம் பெற எத்தனை தியாகங்களையும் போராட்டங்களையும் செயல்படுத்த வேண்டியிருந்தது, எத்தனை போராட்டத் தியாகிகள் சிறைக் கொடுமைகளை அனுபவித்தார்கள் என்பதை உணர்ந்தேன். மிகச் சிறிய வயதிலேயே மிகப் பெரிய சாதனை நிகழ்த்திக் காட்டிய பகத் சிங் அவர்களின் வாழ்க்கை எனக்கு உத்வேகம் அளித்தது, ஆகையால் இந்த விஷயம் குறித்து நீங்கள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு செய்தி விடுக்க வேண்டும் என்று நான் உங்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
இளைய சமுதாயம் நமது வரலாறு பற்றி, நமது சுதந்திரப் போராட்ட மாவீரர்கள் பற்றி, இந்த தேசத்துக்காக உடல், பொருள், ஆவி துறந்த தியாகிகள் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது எனக்கு ஆனந்தம் அளிக்கிறது. எண்ணற்ற மாமனிதர்கள் தங்கள் இளமையைச் சிறைகளில் இழந்திருக்கிறார்கள். பல இளைஞர்கள் தூக்குக் கயிறுகளை இன்முகத்தோடு முத்தமிட்டிருக்கிறார்கள். அவர்கள் சொல்லொண்ணாத் துயரத்தை எல்லாம் அனுபவித்ததால் தான், நம்மால் இன்று சுதந்திர இந்தியாவின் சுவாஸக் காற்றை சுவாசிக்க முடிகிறது. விடுதலைப் போரில் எந்த மாமனிதர்கள் எல்லாம் காலம் கழித்தார்களோ, அவர்கள் எல்லாம் புத்தகம் எழுதினார்கள், படித்தார்கள், மிகப்பெரிய பணிகள் எல்லாம் புரிந்தார்கள், அவர்களின் எழுத்தும் கூட பாரதத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தருவதில் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறது.
பல ஆண்டுகள் முன்பாக நான் அந்தமான் நிக்கோபாரில் இருக்கும் செல்லுலர் சிறைச்சாலையைக் காணச் சென்றிருந்தேன்.. இன்று வீர சாவர்கர் அவர்களின் பிறந்த நாள். வீர சாவர்க்கர் அவர்கள் சிறையில் மாஜீ ஜன்மடே – माज़ी जन्मठे என்ற புத்தகத்தை எழுதினார்கள். சிறைச் சுவர்களில் அவர் கவிதைகளை எழுதினார். ஒரு சின்ன அறையில் அவரை அடைத்து வைத்திருந்தார்கள். விடுதலைப்பற்று மிக்கவர்கள் என்னென்ன கொடுமைகளை எல்லாம் தாங்கினார்கள் தெரியுமா? சாவர்க்கர் அவர்கள் எழுதிய மாஜீ ஜன்மடே – माज़ी जन्मठे புத்தகத்தை நான் படிக்க நேர்ந்த பிறகு தான், செல்லுலர் சிறைச்சாலையைக் காண வேண்டும் என்ற ஆவல் எனக்குள் எழுந்தது. அங்கே ஒரு ஒலி-ஒளிக் காட்சிக்கு ஏற்பாடு செய்கிறார்கள், அது மிகவும் உத்வேகம் அளிப்பதாய் இருக்கிறது. காலாபானி என்று அழைக்கப்படும் இந்த அந்தமான் நிக்கோபார் தனிமைச் சிறைச்சாலையில் தங்கள் இளமையை தியாகம் செய்தவர்களில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், பாரதத்தின் அனைத்து மொழி பேசுபவர்கள் இருந்தார்கள், பல துயரங்களைச் சந்தித்தார்கள்.
இன்று வீர சாவர்க்கர் அவர்களின் பிறந்த நாள். நான் தேசத்தின் இளைய சமுதாயத்தினரிடம் கூறுவது என்னவென்றால், நமக்கு கிடைத்திருக்கும் சுதந்திரத்தின் பொருட்டு என்னவெல்லாம் கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்திருக்கிறது, எத்தனை வலிகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டியிருந்தது என்பதையெல்லாம் நீங்கள் தனிமை சிறைச்சாலைக்குச் சென்று பாருங்கள், அதை ஏன் கொடுஞ்சிறை என்று அழைக்கிறார்கள் என்பது உங்களுக்கு அங்கே சென்ற பிறகு விளங்கும். உங்களுக்கும் வாய்ப்பு எப்போதாவது கிடைத்தால், கண்டிப்பாகச் சென்று வாருங்கள், அது ஒருவகையில் சுதந்திரப் போராட்டத்தின் புனிதத் தலம்.