கரூர் மாவட்டத்தில் பத்திரிக்கையாளர்களை புறக்கணித்து விட்டு உறுதிமொழி ஏற்ற தேர்தல் துறையினர், அமைச்சர் வருகிறார் என்றால் ஆயிரம் போன் அடிக்கும் செய்தி மக்கள் தொடர்பு துறை தேர்தலில் மட்டும் உப்புக்கு சேர்த்து கொள்வது போல் ஏன், இந்த நாடகத்தை பார்த்தால் அனைத்து துறைகளிலும், உறுதி மொழி எடுப்பதில் மெத்தனம் தான், ஏனென்றால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு பானை பதம் நடவடிக்கை எடுக்குமா ? தேர்தல் ஆணையம்
தமிழ் உள்பட 7 மொழிகளிலும் மருத்துவ நுழைவுத் தேர்வு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை
தமிழ், தெலுங்கு உள்பட ஏழு மொழிகளில் தேசிய தகுதி, நுழைவுத் தேர்வு (என்இஇடி) நடத்த அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த கோரிக்கையைப் பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி அனில் ஆர். தவே கூறியுள்ளார்.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர சீரான முறையில் தேசிய தகுதி, நுழைவுத் தேர்வு நடத்துவது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தெளிவுபடுத்தி உத்தரவிட்டது. இது தொடர்பாக கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும் என்று தனியார் கல்லூரிகள், பல்வேறு மாநில அரசுகள் விடுத்த கோரிக்கைகளையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இதுவரை பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு கலந்தாய்வு (கவுன்சிலிங்) மூலம் நடைபெற்ற சேர்க்கை முறை முடிவுக்கு வந்துள்ளது.
மாணவர்கள் பாதிப்பு: இதனால், மாநில மொழி வழிக் கல்வியில் இதுவரை மருத்துவப் பட்டப் படிப்பில் சேர கிராமப்புற மாணவர்கள் உள்ளிட்டோருக்கு கிடைத்து வந்த வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல, ஆந்திரம், குஜராத், மகாராஷ்டிரம் உள்பட சில மாநிலங்களில் மொழி வழிக் கல்வியில் பயின்ற மாணவர்கள், மருத்துவப் படிப்புகளில் சேர மாநில அரசே நடத்தி வந்த தேர்வு முறையும் இனி நடத்தப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் “மாநில மொழி’ மூலம் தேர்வு எழுத முடியாத மாணவர்கள் என்இஇடி எழுத எந்த மொழியில் தேர்வு எழுத வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றத்தின் செவ்வாய்க்கிழமை உத்தரவு தெளிவுபடுத்தவில்லை.
மத்திய அரசு கோரிக்கை: இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி அனில் ஆர். தவே தலைமையிலான அமர்வு முன் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ஆஜராகி, “என்இஇடி, ஆங்கில மொழியில் நடத்தப்படும். இதனால், பல மாநிலங்களில் மொழி வழிக் கல்வியில் படித்த மாணவர்கள் என்இஇடி எழுத முடியாமல் பாதிக்கப்படுவர். தமிழ், தெலுங்கு, அசாமீஸ், பெங்காளி, குஜராத்தி, மராத்தி, உருது ஆகிய ஏழு மொழிகளிலும் என்இஇடி தேர்வு நடத்த அனுமதித்தால் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு சம வாய்ப்பும் உரிமையும் கிடைக்கும்’ என்று கூறினார்.
இதையடுத்து, நீதிபதி அனில் ஆர். தவே, “இந்த கோரிக்கையை நீதிபதிகள் அமர்வு பரிசீலிக்கும்’ என்றார். இருப்பினும், இந்த பரிசீலனை எப்போது நடைபெறும் என்பதை நீதிபதி அனில் ஆர்.தவே தெளிவுபடுத்தவில்லை.
முடிவு எப்போது?: மருத்துவ பொது நுழைவுத் தேர்வு விவகாரத்தில் ஏற்கெனவே ஏப்ரல் 28ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (மே 9) உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவிலும் மாறுதல் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தால் அது வழக்கமான நீதிமன்ற நடைமுறையில் விசாரிக்கப்படுமா அல்லது நீதிபதிகள் அறையில் விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்ற குழப்பம் நிலவுகிறது. நீதிபதி அனில் ஆர். தவே தலைமையிலான அமர்வில் இடம் பெற்றுள்ள மற்ற நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஏ.கே. கோயல் ஆகியோர் இந்த வாரத்தில் ஒன்றாகக் கூடி வழக்கை விசாரிப்பதற்கான அலுவல் ஏதும் இல்லை. இந்நிலையில், இந்த விவகாரத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, நீதிபதிகள் அறையில் மத்திய அரசின் கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்றும் அதன் முடிவில் நீதிபதிகள் அறிவிக்கும் முடிவு உச்ச நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இயற்கையாக எனக்கு ஏதாவது நேர்ந்தால்தான் ஸ்டாலின் முதல்வர்: கருணாநிதி பேட்டி
“இயற்கையாக எனக்கு ஏதாவது நேர்ந்தால்தான் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார்’ என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்கு கருணாநிதி, செவ்வாய்க்கிழமை பேட்டி அளித்தார். அப்போது, “திமுகவில் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற விருப்பம் உள்ளதே?’ என்று கேள்விக்கு கருணாநிதி அளித்த பதில்:
முதல்வராக வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை. திமுக தலைவரான நான்தான் முதல்வராக வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
1957-இல் தொடங்கி இதுவரை நான் போட்டியிட்ட எந்தத் தேர்தலிலும் தோற்றது இல்லை. இந்த முறை வென்றால் 6-வது முறையாக முதல்வராவேன்.
அப்படி 6-ஆவது முறையாக நான் முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறவர்களில் முதல் ஆள் மு.க. ஸ்டாலின்தான் என்றார் கருணாநிதி.
அதைத் தொடர்ந்து, “மு.க. ஸ்டாலின் முதல்வராக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பவர்களுக்கு என்ன சொல்வீர்கள்?’ என்ற கேள்விக்கு, “அவர் முதல்வராவதற்கு வாய்ப்பு வரவேண்டுமானால் எனக்கு இயற்கையாக ஏதேனும் நேர்ந்தால்தான்’ என்றார் கருணாநிதி.
அவர் மேலும் கூறியதாவது:
இலவசம் பயன் அளிக்காது: அதிமுக தேர்தல் அறிக்கையின் இலவச திட்ட அறிவிப்பு பயனற்றது. இது மக்களை ஏமாற்றும் செயலாகும். திமுகவின் தேர்தல் அறிக்கையை அதிமுக நகலெடுத்து வெளியிட்டுள்ளது. பண பலத்தால் வெற்றி பெற அதிமுக திட்டமிட்டுள்ளது. அந்தக் கனவு பலிக்காது. தமிழகத்தில் 3-ஆவது அணியை நம்புவது எந்த விதத்திலும் பலனளிக்காது. 3-ஆவது அணிக்கு மக்கள் வாய்ப்பு அளித்தனர். ஆனால் அது தற்போது பல துண்டுகளாகிவிட்டன.
ஜெயலலிதா பொய் பிரசாரம் செய்து வருகிறார். தமிழன்னைக்கு ரூ.100 கோடி செலவில் சிலை அமைக்கப்படும் எனக் கூறினார். ஆனால், அது அமைக்கப்படவில்லை. ஊழல் தலைவர்களை தமிழக மக்கள் எப்போதும் ஏற்க மாட்டார்கள். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்று வந்தவர். அவருக்கு எதிரான திமுகவின் பிரசாரம் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது என்றார் அவர்.
பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் மகன் மீட்பு
பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுஃப் ரஸா கிலானியின் மகன் அலி ஹைதர் கிலானி, 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் மீட்கப்பட்டார்.
அமெரிக்கா மற்றும் ஆப்கன் படையினர் கூட்டாக மேற்கொண்ட நடவடிக்கையில் அவர் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆப்கானிஸ்தானின் கஜினி மாகாணத்தில் அந்த நாட்டுப் படையினரும், அமெரிக்க வீரர்களும் இணைந்து மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுஃப் ரஸா கிலானியின் மகன் அலி ஹைதர் கிலானி மீட்கப்பட்டார்.
ஆப்கன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் முகமது ஹனீஃப் அத்மர், வெளிவிவகாரங்களில் பாகிஸ்தான் பிரதமருக்கான ஆலோசகர் சர்தாஜ் அஜீஸிடம் இந்தத் தகவலை தொலைபேசி மூலம் தெரிவித்தார்.
தேவையான மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, அலி ஹைதர் கிலானியை பாகிஸ்தான் அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மிதவாதியான பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த யூசுஃப் ரஸா கிலானி, தனது பதவிக் காலத்தின்போது தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இந்த நிலையில், 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவரது மகன் அலி ஹைதர் கிலானி போட்டியிட்டார்.
அந்தத் தேர்தலையொட்டி, பஞ்சாப் மாகாணம், முல்தான் நகரில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த அலி ஹைதரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.
அந்தக் கடத்தல் சம்பவத்தின்போது அலி ஹைதருடன் இருந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் அல்-காய்தா பயங்கரவாதிகளிடமிருந்து அவர் மீட்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட பஞ்சாப் மாகாண ஆளுநர் சல்மான் தஸீரின் மகன் ஷாபாஸ் தஸீர் பாகிஸ்தான் படையினரால் மீட்கப்பட்ட இரு மாதங்களுக்குப் பிறகு, அலி ஹைதர் கிலானியும் மீட்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் மத நிந்தனை தடைச் சட்டத்துக்கு எதிராகப் பேசி வந்த பஞ்சாப் ஆளுநர் சல்மான் தஸீரை, மும்தாஜ் காத்ரி என்ற காவலர் சுடடுக் கொன்றதும், அந்தக் குற்றத்துக்காக காத்ரி அண்மையில் தூக்கிலிடப்பட்டதும் நினைவுகூரத் தக்கது.
பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்ய அவசர சட்டம்: மருத்துவர்கள் சங்கம்
மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கு அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெளியிட்ட அறிக்கை:
தேசிய தகுதிகாண் தேர்வின் மூலம்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது.
நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கான சட்டம் 2006-இல் இயற்றப்பட்டு, குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கியுள்ளார். ஆனால்,அந்தச் சட்டத்தை கணக்கில் கொள்ளாது, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கும் தேசிய தகுதிகாண் தேர்வை திணிப்பது அரசியல் சட்ட நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சட்டம் குறித்து உச்சநீதிமன்றம் மெளனம் சாதிப்பது முறையல்ல.
மாநில அரசுகளின் உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசு உடனடியாக அவசரச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்.
தமிழக மாணவர்களின் நலன்களைக் காத்திட உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டேன்: பரிக்கல் கோயிலில் விஜயகாந்த் வாக்குறுதி
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை தொகுதி வேட்பாளரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், அப்பகுதி கோயிலில் வழிபாடு செய்து வாக்குக்காக பொதுமக்களுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
உளுந்தூர்பேட்டை வட்டம், உளுந்தாண்டார் கோயில் மற்றும் பரிக்கல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு தேமுதிக தலைவரும், முதலமைச்சர் வேட்பாளருமான விஜயகாந்த், மனைவி பிரேமலதாவுடன் செவ்வாய்க்கிழமை வந்தார்.
தேர்தலில் வெற்றி பெற வேண்டி சிறப்பு வழிபாடு செய்தார். பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோயிலில் வழிபாடு நடத்திய பிறகு, வாக்குக்காக பொதுமக்களுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று விஜயகாந்த் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
அதிமுக., திமுக., இரண்டு விளம்பரத்திலும் நடித்து வெளியில் தலைகாட்ட முடியாமல் தவிக்கும் பாட்டி!
சென்னை:
இணையத்திலும் பொது இடங்களிலும் சரி… இப்போதைய தேர்தல் களத்திலும் இன்றைய பேச்சு கஸ்தூரி பாட்டியைப் பற்றிதான்.
அதிமுக, திமுக இரண்டு கட்சிகளின் தேர்தல் பிரச்சார விளம்பரங்களிலும் நடித்தவர் இந்த கஸ்தூரிப் பாட்டி. தொலைக்காட்சிகளிலும் இணையத்திலும் ‘பெத்த புள்ள சோறு போடல, எனக்கு சோறு போட்ட தெய்வம், புரட்சித் தலைவி அம்மா தான்’ என்று சொன்னபடி அதிமுக விளம்பரத்தில் தோன்றும் இந்தப் பாட்டி, அடுத்த சில நிமிடங்களில், ‘வானத்துல பறக்குறவங்களுக்கு நம்மளுடைய பிரச்னை எப்படி தெரியும்? மக்களைப் பற்றியே கவலைப்படாத ஆட்சி இனி எதுக்குங்க? போதும்மா போதும்…!’ என்று திமுக விளம்பரத்திலும் தோன்றுகிறார்.
ஒரே பாட்டியை ஆள் வித்தியாசம் கூடத் தெரியாமல் இரண்டு கட்சிகளும் தங்கள் விளம்பரங்களில் நடிக்க வச்சிருக்காங்களே… என்று ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் இணையவாசிகள்.
இன்னும் சிலரோ.. “அந்தப் பாட்டி ஒரு அன்றாடங் காய்ச்சி. சாதாரண துணை நடிகை. வாங்கிய பணத்துக்கு நடிச்சுக் கொடுத்திருக்கு.. இதில் தப்பென்ன?’ என்று ஆதரிக்கிறார்கள்.
சரி, இந்தப் பாட்டி எப்படி இந்த வித்தியாசம் தெரியாமல் இந்த இரண்டு வெவ்வேறு துருவங்களான கட்சிகளின் விளம்பரங்களிலும் நடித்தார்?
கஸ்தூரிப் பாட்டியோ நடந்த குளறுபடிகளால் ரொம்பவே பயந்து போயிருக்கிறார். இந்த விளம்பரங்களால் தனக்குப் பிரச்னை வந்துவிடுமோ என்ற பயத்துடனேயே அவர் வெளியில் பேசுகிறார். அவர் கோபமெல்லாம் தன்னை திமுக விளம்பரத்தில் நடிக்க வைத்த ஏஜென்ட்டின் மீதுதான்.
“இது எந்தக் கட்சி விளம்பரம்னெல்லாம் சொல்லல… காசு தர்றோம்.. ஒரு விளம்பரத்துல நடிக்கணும்.. அரை நாள்தான்னு கூப்பிட்டாருங்க. நானும் அவங்க சொல்லிக் கொடுத்தத அப்படியே பேசிட்டு வந்துட்டேன்,” என்கிறார் கஸ்தூரிப் பாட்டி.
இவர் முதலில் நடித்தது அதிமுக விளம்பரத்தில்தான். ஆனால் ஒளிபரப்பில் திமுக முந்திக் கொண்டது. இதனால், பாட்டி பலிகடா ஆகிவிட்டார்.
“இந்த திமுக விளம்பரம் வந்த பிறகு வெளிய தல காட்ட முடியல… எல்லாரும் கேலி பண்றாங்க. சின்னப் பசங்க கூட போதும்மா போதும்…னு சொல்லிக் காட்டுதுங்க. என்ன பண்றதுன்னு தெரியல… திமுக விளம்பரம்னு சொல்லியிருந்தா நான் நடிச்சிருக்கவே மாட்டேன். இதனால எனக்கு ஏதாச்சும் பிரச்னை வருமா தெரியல… என் பேர்ல எந்தத் தப்புமே இல்ல…. ஏற்கெனவே நான் அம்மா விளம்பரத்தில் நடித்ததை அந்த நபரிடம் கூறினேன். ‘அதனால் என்ன பரவாயில்லை’ எனக்கூறி, ரூபாய் கொடுத்து அனுப்பினர். நான், எந்தக் கட்சியிலும் கிடையாது; யாரையும் ஆதரிக்கவும் இல்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும், எங்களைப் போன்ற வயதானவர்களுக்கு நல்லது செய்தால் போதும்…” என்று பரிதாபத்துடன் சொல்கிறார்.
கஸ்தூரி பாட்டி வெகுகாலமாக ஒரு துணை நடிகையாக நடித்து வந்தாலும், இந்த இரண்டு கட்சி விளம்பரங்களும் இப்போது அவரை பிரபலமாக்கிவிட்டது. துணை நடிகையாக சொற்ப சம்பளமே பெற்றுக் கொண்டு நடித்துக் கொடுத்தவர், இந்த இரு விளம்பரங்களிலும் அதனினும் சொற்பமாக பணம் பெற்றுக் கொண்டுள்ளார். அதிமுக விளம்பரம் மூலம் கிடைத்தது ரூ 1500. திமுக விளம்பரம் மூலம் கிடைத்ததோ ரூ 1000 மட்டுமே!
நன்மையே நாடும் ஸ்ரீராமானுஜரின் தெய்வீக ஆணை
வைணவ மார்க்கம் தழைத்தோங்கச் செய்த குருவாக விளங்குபவர் ஸ்ரீராமானுஜர். அவரை நினைக்காது வைணவர்கள் எவரும் தம் அன்றைய காலைப் பொழுதைத் தொடங்குவதில்லை.
வைணவர்கள் தாங்கள் மேற்கொள்ளும் பூஜைகளில் ராமானுஜரின் தெய்வீக ஆணை தழைத்தோங்கட்டும் என்று வாழ்த்துப் பாடி நிறைவு செய்வது வழக்கம். ஆயிரம் வருட காலமாய் இதுநாள் வரை சாதி பேதம் அறுத்த இந்த எளிய மார்க்கத்தை அழைத்துக் கொண்டு வந்திருப்பது எதிராஜரான அவரின் அருள் அன்றோ!
ஸர்வ தேச தசா காலே ஷ்வ வ்யாஹத பராக்ரமா |
ராமானுஜார்ய திவ்யாஜ்ஞா வர்த்ததாம் அபிவர்த்ததாம் ||
ராமானுஜார்ய திவ்யாஜ்ஞா ப்ரதி வாஸரமுஜ் ஜ்வலா |
திகந்தவ்யாபினீ பூயாத் ஸô ஹி லோக ஹிதைஷிணீ ||
“இதன் பொருளாவது… எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளிலும், எல்லாக் காலங்களிலும் தடையற்ற பேராற்றல் பொருந்திய பகவத் ராமானுஜரின் தெய்வீக ஆணை வளரட்டும். மேன்மேலும் வளரட்டும். ராமானுஜரின் தெய்வீக ஆணை நாள்தோறும் மிகுந்த ஒளி வீசி, திசைகளின் கோடிகளில் சென்று பரவட்டும். ஏனென்றால் அந்த தெய்வீக ஆணை மக்களுக்கு என்றும் நன்மையையே நாடுவது…” என்பதே. இதனை ஒவ்வொரு வைணவரும் தங்கள் இல்லங்களிலும், ஆலயங்களிலும் உணர்வு பூர்வமாகச் சொல்லி, தங்கள் குருவின் மீதான பற்றை வெளிப்படுத்துகிறார்கள்.
காரணம், அவர் காட்டிய மார்க்கம் மன வேற்றுமை அறுத்து அனைவரையும் ஒன்றிணைத்தது என்பதே. அவர் வாழ்வின் ஓர் உதாரண வெளிப்பாடு…
உறையூர்ச் சோழனிடம் மெய்காப்பாளனாக இருந்த, பிள்ளை உறங்காவில்லியின் மனைவி பொன்னாச்சியார். மிகுந்த அழகுள்ளவர். அவர் கண்ணழகில் மயங்கிய பிள்ளை உறங்காவில்லி, வெளியே ஊழியத்துக்குப் போகும் போதும் பிரிய மனமின்றி உடனழைத்துச் செல்வார். அதுவும் வெயிலில் மேனி கறுக்கக் கூடாதென்பதால் குடைபிடித்துப் போவார். மனையாளின் அழகு அவரை அப்படி மயக்கியிருந்தது. அதனால் இவரை ஊரார் கேலி பேசியதில் வியப்பில்லையே
ஒரு நாள் நண்பகல். காவிரிக் கரையில் மகான் ராமானுஜர் தம் சீடர்களுடன் இருக்கும் போது பொன்னாச்சியார் பின்னே சென்ற உறங்காவில்லியின் செயல் கண்டார். “இப்படியோர் பித்தரோ’ என்று வியந்து, அவரைத் திருத்திப் பணிகொள்ள எண்ணினார். தம் சீடர்களிடம் அவரை அழைத்து வரச் சொன்னார். வந்தவரோ, “மனையாளின் கண்ணழகில் ஈடுபட்டு இப்படிச் செய்கிறேன்’ என்றார். ஸ்ரீராமானுஜர் பிள்ளை உறங்காவில்லியிடம் சொன்னார்… “இதுவோ அழிந்துவிடும் அழகு. நிலையில்லாதது. நிலையான, இதைக் காட்டிலும் பேரழகை உமக்குக் காட்டுகிறேன்… கண்டால் நீர் இனி இச்செயலை விட்டுவிடுவீரோ’ என்றார்.
சொல்லிவிட்டு, அரங்கனின் சந்நிதிக்கு அழைத்துச் சென்றார். அரவுப் படுக்கையில் துயிலும் அரங்கனின் பேரழகை, அவன் கண்ணழகைக் காட்டி, அதை அனுபவித்து ரசிக்கும் உணர்வையும் ஆனந்தத்தையும் அவருக்கு ஊட்டினார். அரங்கன் காட்சி கண்ட அக்கணமே பிள்ளை உறங்காவில்லி, எம்பெருமானார் அடிபணிந்து தாசரானார். அவருக்கு ஞான பக்தி வைராக்கியங்கள் வளர்ந்தன.
பங்குனி பிரம்மோற்ஸவ தீர்த்தவாரி நேரம், நீராடப் போகும் போது, முதலியாண்டான் என்ற சீடர் கரம் பற்றி நீராடப் புகுவார் ராமானுஜர். நீராடி முடித்து கரையேறும்போது பிள்ளை உறங்காவில்லி தாசரின் கரம் பற்றி எழுவார். இது வர்ணாசிரம தர்மத்திற்கு விரோதமானது. பிராமணன், தாழ்குலத்தோனைத் தொடுவதாவது என்று கூறி, சீடர்கள் ராமானுஜரின் செயலுக்கான காரணத்தைக் கேட்டனர். அதற்கு அவர், “எத்தனைதான் ஞானம் பெற்றாலும் உயர்குலத்தில் பிறந்தோம் என்ற எண்ணமே ஆணவமாக நின்று, இறைவனை அடையும் நிலையான அடியார்க்கு அடிமை என்ற நைச்யம் (தாழ்ந்த நிலை) பெற முடியாமல் போய் விடும். எனவே பிறவியால் உண்டான ஆணவத்தை, ஆணவம் சிறிதுமற்ற இந்த அடியவரைத் தீண்டி உடல் சுத்தி செய்து கொள்கிறேன்…’ என்றார்.
பிறப்பின் பெருமையால் ஒருவன் அகங்காரம் கொள்வதோ, அல்லது மனத்தாழ்ச்சி கொள்வதோ தகாது. இறைவனை அடைய விரும்பும் ஒவ்வொரு ஆன்மிக உள்ளமும் மகான் ராமானுஜரின் இந்த உபதேசத்தை மனத்தில் கொள்ள வேண்டும்.
உறங்காவில்லி மனையாளின் பின்னே மோகத்தால் சுற்றினார். அவர் அரங்கனிடம் ஆற்றுப்படுத்தப்பட்ட பின்னர், சோழனிடம் செய்த சேவையை விட்டு, அரங்கன் மீது அன்பு கொண்டு கையில் வாளேந்தி பெருமாளின் விக்கிரகத்துக்குப் பாதுகாவலாய் செல்லத் தொடங்கினார். உறங்காவில்லி பரமபதித்தபோது, பொன்னாச்சியார் கண்ணீர் உகுக்கவில்லை. இறுதிச் சடங்குகளை உடனிருந்து ஆற்றினார். அத்திருமேனி கொண்டு செல்லப்பட்டு அவர் பார்வையிலிருந்து மறையும் வரை இருந்து, மறைந்ததும் தன் உடலை விட்டு உயிர் பிரியப் பெற்றார். இந்த ஆச்சர்யத்தை அறிந்து இரு திருமேனிகளையும் ஒன்றாய்த் தகனம் செய்தார்கள். இருவரும் கொண்ட அன்பின் ஆழம் அத்தகையது. பிள்ளையுறங்காவில்லி மனைவி தாசராய் இருந்தபோது மனைவியின் பின்னே இவர் சென்றார். அவரே அரங்கன் தாசனாய் ஆனபின்போ, பொன்னாச்சியார் இவர் பின்னே சென்றார். பக்தியின் பெருமை அத்தகையது. காரணமாக இருந்தது, ஸ்ரீராமானுஜரின் திருவுள்ளம்.
கி.பி.1017 இல் அவதரித்த ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த நாள் உற்ஸவம் இன்று துவங்கும் நிலையில், அவரின் சமூகக் கருத்துகள் அனைவர் மனத்தையும் எட்ட வேண்டும்.
ஏ தெய்வமே! உனக்கு இதயம் இருக்கா?
“ஏலே, மண்டையில உனக்கு அறிவிருக்கா…? ”
– ஏதோ சிறு தவறு செய்துவிட்ட சிறுவனைப் பார்த்துக் கேட்டார் ஒருவர்.
இந்தக் காலப் பையனில்லையா அவன்… “உங்கள்ட்ட இருந்தா கொஞ்சூண்டு குடுங்க…!”
– வெடுக்கெனச் சொல்லி விட்டான். இவர் முகம் பரிதாபமாக “ஙே’ வென்று தொங்கிப் போனது.
ஆமாம்… ஒருவரிடம் இல்லாததைத் தானே அவர் மற்றவரிடம் இருக்கிறதா என்று கேட்பார். இப்படி அர்த்தம் எடுத்துக் கொள்ளும் காலம் இது.
இது இந்தக் காலத்தில் மட்டும்தானா? ஏன் அந்தக் காலத்தில் இல்லையா என்ன? இருக்கிறதே! இப்படி ஒரு எண்ணத்தை நாசூக்காக வெளிப்படுத்தியிருக்கிறார் ஒரு கவிஞர். ஆனால் வெளிப்படுத்திய விதமும், இட வகையும் நம்மை நெளிய வைக்காமல், ஆனந்தத்தைத் தருகிறது.
***
நாம் இறைவனிடம் என்னவெல்லாமோ பிரார்த்திக்கிறோம். நமக்குத்தான் எத்தனை எத்தனை ஆசைகள். ஆசைப்படுவதை எல்லாம் பகவான் பகவான் என்று அவன் முன்னால் வைத்து, அது உடனே நடந்துவிடும் என்ற நம்பிக்கையில் பிரார்த்தனையைச் செய்கிறோம். நாம் நினைப்பது எல்லாம் நடந்து விடுகிறதா என்ன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மனக் கஷ்டங்கள். இந்தக் கஷ்டங்களுக்கான மூல காரணம் அதீத ஆசை என்று நமக்கே தெரியும். இருந்தாலும் தெய்வம் எதற்கு இருக்கிறது? நாம் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றி வைக்கத்தானே…! இது நம் சாதாரண மன இயல்பு.
நாம் நினைத்தது நடக்கவில்லை என்றால், உடனே நம் கோபம் திரும்புவது அதே இறைவன் மீதுதான்!
உன்னைத்தானே மலை போல நம்பியிருந்தேன்… நீ இப்படி காலை வாரிவிட்டுட்டியே! என்று குறை சொல்லிப் புலம்புவதும் அதே இறைவனிடம்தான்! அடுத்து நம் கோப வார்த்தைகள் அவனைப் பார்த்துத் திரும்பும்… சே! நீ என்ன கல்லா? உனக்கு இதயமே கிடையாதா?
– இப்படித்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை… வேறு விதமாகவும் சொல்லலாம். எப்படி? அதற்குத்தான் ஒரு சம்ஸ்க்ருதக் கவிஞர் நமக்கு ஒரு வழியைக் காட்டியிருக்கிறார்… இதையே இப்படியும் சொல்லலாமென்று!
***
பக்தர் ஒருவர். திருவீதியில் எழுந்தருளும் பெருமானுக்கு எதையாவது சமர்ப்பிப்பது அவர் வழக்கம். அன்றும் அப்படித்தான். பெருமான் திருவீதியுலா வந்தார். இவரது வீட்டு வாசலிலும் பெருமாள் எழுந்தருளிவிட்டார். இவரோ அன்று பார்த்து நைவேத்யத்துக்கு என்றும் ஒன்றுமே தயார் செய்து வைக்கவில்லை. வெறுங்கையோடு பெருமாள் முன் போய் நின்றார். பொன்னை வைக்கும் இடத்தில் பூவை வைப்பது போல், உண்ணக் கொடுக்க வேண்டிய இடத்தில் கவிதையைப் படைத்துப் பாடினார்.
ரத்நாகரஸ் தவ க்ருஹம் க்ருஹிணீ ச லக்ஷ்மி:
கிம் தேய மஸ்தி பவதே புருஷோத்தமாய |
ஆபீரவாம நயநா ஹ்ருதமாநஸாய
துப்யம் ப்ரதத்தம் இதமஸ்து மநோ மதீயம் ||
பெருமாளே! மாகடல் நீருள்ளான் என்றபடி, உன் வாசஸ்தலம் ரத்நாகரம். உன் மனைவியோ மகாலட்சுமி. நீயோ புருஷோத்தமன் என்று பெயர் பெற்றவன். இப்படிப்பட்ட உனக்கு நீசனான நான் என்ன சமர்ப்பிக்கப் போகிறேன். எதையாவது கொடுக்க வேணும் என்றாலும், உன்னிடம் இல்லாத ஒன்றைத்தானே நான் சமர்ப்பிக்க வேணும்? உன்னிடமோ எல்லாமே இருக்கிறது. இருந்தாலும் யோசித்துப் பார்த்ததில் உன்னிடம் ஒன்று மட்டும் இல்லாமல் இருக்கிறது எனக்குத் தெரிகிறது. அது எதுவென்றால், உன் நெஞ்சு. அதைத்தான் அந்தத் திரு ஆய்ப்பாடி மங்கைகள் கொள்ளை கொண்டு போய்விட்டார்களே. அதனால் இப்போது உன்னிடம் இல்லாமல் இருக்கும் அந்நெஞ்சை இதோ அடியேன் இப்போதே சமர்ப்பிக்கிறேன். இதனைப் பெற்றுக் கொண்டு, நீ நெஞ்சமும் பெற்று நிறை உள்ளவனாய்த் திகழ்வாய்…!!!
***
இல்லாத கண்ணை கண்ணப்பன் கொடுத்தான். அவனிடம் இல்லாத நெஞ்சை இதோ அடியேனும் சமர்ப்பிக்கிறேன்!!!
சக்தி மிகுந்த ஸ்ரீஹனுமான் மந்திரம்

ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீஹனுமத் மந்திரம்
ஓம் நமோ ஹனுமதே ஸோபிதாந நாய|
யசோல க்ருதாய|
அஞ்சநீ கர்ப்ப ஸம்பூதாய| ராம லக்ஷ்மணா நந்தகாய|
கபிஸைன்ய ப்ரகாசந| பருவதோ த்பாடநாய|
ஸுக்ரீவ சாஹ்யகரண ப்ரோச்சாடந|
குமார ப்ரம்ஹசர்ய கம்பீர ஸ்ப்தோதயா|
ஓம் ஹ்ரீம் சர்வதுஷ்ட க்ரஹ நிவாரணாய ஸ்வாஹா|
ஓம் நமோ ஹனுமதே ஏஹி ஏஹி ஏஹி
சர்வ க்ரஹ ப்பூதாநாம்|
ஸாகிநீ டாகிநீநாம்|
விஷம துஷ்டாநாம்| ஸர்வேஷா மாகர்ஷ யாகர்ஷய|
மர்த்தய மர்த்தய| ச்சேதயச் சேதய|
மர்த்தியா ந்மாரய மாரய|
சோஷய சோஷய| ப்ரஜ்வல ப்ரஜ்வல|
ப்பூத மண்டல பிஸாச மண்டல நிரஸநாய|
ப்பூதஜ்வர ப்ரேதஜ்வர| சாதுர்த்திகஜ்வர|
ப்ரஹ்ம்ம ராக்ஷச பிசாச ச்சேதநக்ரியா| விஷ்ணுஜ்வர மஹேஸ்வர ஜ்வரான்|
ச்சிந்தி ச்சிந்தி ச்சிந்தி க்சிந்தி|
அக்ஷீஸூலே ஸிரோப்பியந்தரே|
ஹட்சி ஸூலே குன்மஸூலே|
பித்த ஸூலே ப்ரஹ்ம்ம ராக்ஷஸ குல ப்ரபல நாககுல விநிர்விஷ ஜுடிதி ஜுடிதி |
ஓம் ஹ்ரீம் ப்பட் க்கே க்கே ஸ்வாஹா|
ஓம் நமோ ஹனுமதே பவன புத்ர வைஸ்வாநகமுக
பாபத்துருஷ்டி ஷோடாத்ருஷ்டி ஹனுமதேகா
ஆங்ஞாபுரே ஸ்வாஹா|
என்னுடைய பாட்டனார் வீரகேரளம்புதூர் ராம ஐயங்கார் ஹனூமத் உபாசகராகத் திகழ்ந்தவர். அப்பாவும் அதைப் பின் தொடர்ந்தார். ஆனால் நானோ தடம் மாறி சுதர்ஸன உபாஸனையை கைக் கொண்ட்டேன்.
எங்கள் இல்லத்தில் இந்த ஹனூமத் மந்திரம் அச்சடிக்கப்பட்டு, கண்ணாடி பிரேம் போட்டு வீட்டின் இரண்டாவது கட்டு நிலைப்படியில் மாட்டப் பட்டிருக்கும். தாத்தாவின் சேகரிப்பில் இருந்த ஒரு ச்லோகம் இது. இந்த மந்திரத்தை எழுதியோ அச்சடித்தோ கண்ணாடி பிரேம் போட்டு வீட்டின் வாசல் நிலைப்படியில் தொங்கவிட்டால், வீட்டுக்கு எந்த தோஷமும் வராது என்றும், திருஷ்டி ஏற்படாது; பேய் பிசாசு பில்லி சூனிய தொந்தரவுகள் வராது என்றும் இந்த ச்லோகத்தின் அடிக்குறிப்பில் இருந்தது.
பொது நன்மை கருதி அதனை இங்கே அடியேன் அப்படியே தருகிறேன். ஹனுமான் அருளால் அனைவருக்கும் சகல நலன்களும் கிடைக்கட்டும்.

