Home Blog Page 5972

சீக்கியர் புனித நூல் அவமதிப்பு: கொல்லப்பட்டவர் குடும்பத்தை சந்தித்து ராகுல் ஆறுதல்

images india ragul - 2026

சீக்கியர்களின் புனித நூல் அவமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.

பஞ்சாபில் 7 கிராமங்களில் சீக்கியர்களின் புனித நூல் அவமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானதையடுத்து, சீக்கியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். பேபால் கலன் கிராமத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 2 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் பலியான கோட்காபுராவைச் சேர்ந்த குர்ஜீத் சிங் குடும்பத்தினரை ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், பஞ்சாபில் நெருக்கடியான சூழல் நிலவுகிறது, விவசாயிகள் பெரும் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். போதைப் பொருள் புழக்கமும் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது என்று கூறினார்.

நீங்கதான் ஒரு தடவை எங்களைத் தேடி வாங்களேன்: கருணாநிதிக்கு விஜயகாந்த் அழைப்பு

நாமக்கல்:

திமுக தலைவர் கருணாநிதி, கடைசி நிமிடத்தில் தேமுதிகவும் மதிமுகவும் மாறினாலும் மாறும் என்று கூறியுள்ளார். எல்லாக் கட்சிகளும் அவரைத் தேடித்தான் செல்ல வேண்டுமா? ஏன்… நீங்களுந்தான் ஒரு தடவை எங்களைத் தேடி வாருங்கள்…. என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

நாமக்கல் மாவட்டத்தில் ‘மக்களுக்காக மக்கள் பணி’ என்ற பெயரில் மதுவால் சீரழிந்த குடும்பங்கள் மற்றும் கணவரை இழந்த தாய்மார்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம், தேமுதிக சார்பில் பரமத்திவேலூர் அருகே நடந்தது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டு, ரூ.25 லட்சம் மதிப்பிலான நல உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர், திமுக தலைவர் கருணாநிதி, கடைசி நிமிடத்தில் தேமுதிகவும் மதிமுகவும் மாறினாலும் மாறும் என்று கூறி உள்ளார். நீங்கள் ஒரு தடவை எங்களைத் தேடி வாருங்கள். எல்லா கட்சிகளும் அவரைத் தேடித்தான் செல்ல வேண்டுமா? நீங்கள் வாங்களேன்” என்று பேசினார்.

நாமக்கல்ன்னாலே திமுக., அதிமுக., வுக்கு நாமம் போட்டு அனுப்பும்னு அர்த்தம்: விஜயகாந்த்

நாமக்கல்:
நாமக்கல்ன்னாலே திமுக., அதிமுக., வுக்கு நாமம் போட்டு அனுப்ப வேண்டும்னு அர்த்தம் என்று தேமுதிக., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
நாமக்கல்லில் நடைபெற்ற தேமுதிக.,வின் மக்களுக்காக மக்கள் பணி என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசிய விஜயகாந்த் இவ்வாறு கூறினார்.
அப்போது அவர், இங்குக் கூடியிருக்கும் தொண்டர்களை பார்க்கும் போது உள்ளபடியே மனமகிழ்ச்சி அடைகிறேன். இந்தக் கூட்டத்தை காசு கொடுத்து கூட்டியதாகக் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் கூறினார். அதற்கு அவரிடம், ‘அப்படி கூட்டி வந்திருந்தால் ஆட்சியைப் பிடித்து இருப்போம்’ என்றேன்.

நாமக்கல் என்றால் ஆளுங்கட்சி மற்றும் திமுகவுக்கு நாமம் போட்டு வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று அர்த்தம். வருகிற சட்டமன்ற தேர்தலில் இங்குள்ள 6 தொகுதிகளிலும் அவர்களுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும். எப்பாடு பட்டாவது அதிமுக, திமுகவை ஆட்சியில் அமரவிடமாட்டேன்… என்று பேசினார்.

இளங்கோவனை மேலிடம் மாற்றாது; இப்போதுதான் கட்சி சரியான திசையில் செல்கிறது: குஷ்பு

சென்னை:

இப்போதுதான் தமிழக காங்கிரஸ் கட்சி சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. இளங்கோவனை மேலிடம் மாற்றாது என்று கூறியுள்ளார் குஷ்பு.

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை பதவியில் இருந்து விலக்கக் கோரி மூத்த தலைவர்கள் பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்கள் அண்மையில் தில்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசினார்கள். அப்போது அவர்கள் இளங்கோவன் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறினார்கள்.

இதைத் தொடர்ந்து இளங்கோவனை தில்லிக்கு அழைத்து சோனியா பேசினார். இதனால் இளங்கோவன் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், திருநாவுக்கரசர், குஷ்பு ஆகியோர் இளங்கோவனுக்கு ஆதரவளித்துள்ளனர். அவர்கள் சோனியா மற்றும் ராகுலை சந்தித்து இளங்கோவனை மாற்றக்கூடாது என்று வலியுறுத்தினர். இந்தச் சந்திப்புக்கு பிறகு குஷ்பு செய்தியாளர்களிடம் பேசியபோது,

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து இளங்கோவனை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் எதுவும் மேலிடத்தில் இல்லை. எனவே இளங்கோவன் தலைவர் பதவியில் நீடிப்பார். நிச்சயமாக அவர் மாற்றப்பட மாட்டார். தமிழக காங்கிரஸ் கட்சி இப்போதுதான் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. அதற்கு இளங்கோவனின் கடும் உழைப்பும், ஆற்றலுமே காரணமாகும். அவர் வழிகாட்டுதலில் காங்கிரஸ் சிறப்பாக செயல்படுகிறது.

முன்பெல்லாம் தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் வெறிச்சோடி காணப்படும். ஆனால் இப்போது சத்தியமூர்த்தி பவனுக்கு தினமும் 300, 400 பேர் வருகிறார்கள். கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த மறுமலர்ச்சிக்கு இளங்கோவனே காரணம்.

காங்கிரஸ் கட்சி இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் மூத்த கட்சி. மிகப் பழமையான கட்சி. ஜனநாயக ரீதியில் கட்சி செயல்படுகிறது. பாரம்பரியம் மிக்க இந்தக் கட்சி தனிநபரை நம்பி இல்லை. லட்சோப லட்சம் தொண்டர்களையும், மக்களையும் சார்ந்தே காங்கிரஸ் கட்சி உள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், காங்கிரஸ்தான் அதிக அளவில் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது… என்று கூறினார்.

தன்னிச்சையாக இயங்கும் தலைவர் காங்கிரஸுக்கு தேவையில்லை: கார்த்திக் சிதம்பரம்

கோவை:
தன்னிச்சையாக இயங்கக் கூடிய தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்குத் தேவையில்லை என்று கூறியுள்ளார் கார்த்திக் சிதம்பரம்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

காங்கிரஸ் தன் நிலையை தாண்டி சிந்திக்கக் கூடாது. தன் எல்லைக்குள் சிந்தனை, எதிர்பார்ப்புகளை வைக்க வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு பெரிய அளவில் வாக்குகளை வாங்கவில்லை. கன்னியாகுமரி, சிவகங்கையில் தான் லட்சம் வாக்குகளையே தாண்டினோம். எனவே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என எண்ணுவது பொருத்தமாக இருக்காது. ஆட்சியில் பங்களிப்பு இருக்கும் என நம்புகிறேன். தற்போது உள்ளதைவிட கூடுதலாக பிரதிநிதித்துவம் பெற்று, நிச்சயம் தொழிலுக்காக, தொழில் வளர்ச்சிக்காக காங்கிரஸ் கட்சி குரல் கொடுக்கும்.

தமிழகத்தில் தி.மு.க. அ.தி.மு.க. இரண்டும் கூட்டணி அமைத்ததில்லை. காங்கிரஸ், பாஜக., இரண்டும் அணி சேர்ந்ததில்லை. இந்தக் கட்சிகளைத் தவிர எல்லாக் கட்சியும் எல்லோருடனும் கூட்டணி அமைத்துள்ளார்கள். கொள்கை ரீதியிலான கூட்டணி என்பதெல்லாம் இங்கு இல்லை. எல்லோருடைய கதவும் எல்லோருக்கும் திறந்திருக்கும். அதேபோல் எங்கள் கதவும் எல்லோருக்கும் திறந்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியில் மட்டும் கோஷ்டி பூசல் இருப்பதாகச் சொல்வதை ஏற்க முடியாது. எல்லா கட்சிக்குள்ளும் கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்யும். அதனால் வெற்றி, தோல்வி பாதிக்காது. எந்தக் கட்சியில் கருத்து வேறுபாடு இல்லை. தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சியிலும் கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. இது கட்சிக்கு நல்லதுதான். போட்டி, கூட்டம் எல்லாம் நடக்கும். இது கட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும்.

தமிழகத்தில் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது கூட்டணி மட்டும்தான். கொள்கை என எதுவும் வெற்றியைத் தீர்மானிப்பதில்லை. பெரிய கூட்டணி வெற்றி பெறும் அவ்வளவுதான். காங்கிரஸ் துடிப்பான கட்சியாக இருக்கவேண்டும். அதற்கு அனைவரையும் அரவணைத்துச் செல்பவர் தலைவராக இருக்க வேண்டும். தன்னிச்சையாகச் செயல்படுபவர் தேவை இல்லை. மூத்த தலைவர்களைக் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். தன்னிச்சையாக இயங்கும் தலைவர்கள் காங்கிரசுக்கு தேவை இல்லை… என்று கூறினார்.

குஷ்புவை பற்றி நான் விமர்சிக்கவில்லை: கார்த்தி சிதம்பரம்

images politics karthi%20chidambaram - 2026

கோவை :

குஷ்புவை பற்றி நான் எதுவும் விமர்சிக்கவில்லை. எந்தத் தனிநபரைப் பற்றியும் விமர்சிக்கவும் இல்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

அண்மையில் குஷ்பு குறித்து அவர் விமர்சித்ததாகவும், அதற்கு பதிலடியாக குஷ்பு பேட்டி அளித்தும் அண்மைக் காலத்தில் ஊடகங்களில் பரபரப்பு தொற்றிக் கொண்டிருந்தது. இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கார்த்தி சிதம்பரம்…

“குஷ்புவை பற்றி நான் எதுவும் விமர்சிக்கவில்லை. எந்தத் தனிநபரை பற்றியும் நான் விமர்சிக்கவில்லை. விமர்சிக்க விரும்பவும் இல்லை. என்னிடம் நடிகைகளை நம்பி காங்கிரஸ் கட்சி இருக்கிறதா என கேட்டார்கள். அதற்கு நடிகைகளை நம்பி காங்கிரஸ் கட்சி இல்லை என்று தான் சொன்னேன். மற்றபடி நான் யாரைப் பற்றியும் நான் விமர்சிக்கவில்லை” என்று கூறினார்.

மேலும் அவர், “மதுவிலக்கை தவிர்த்து கோவன் சொன்ன மற்ற கருத்துகளை ஏற்க முடியாது. ராஜீவ்காந்தி கொலையையும், மன்மோகன்சிங் பற்றி விமர்சித்ததையும் ஏற்க முடியாது. டாஸ்மாக்கை மூட வேண்டும் என்பதைத் தாண்டி கோவனின் எந்தக் கருத்தையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. தமிழகத்தில் 7 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் உள்ளன. பள்ளிகளை விட டாஸ்மாக் கடைகள் தான் அதிகம் உள்ளன. கல்வியில் முன்னிலையில் உள்ள தமிழகத்தில் டாஸ்மாக் வருமானத்தை வைத்து அரசு நடக்கிறது என்பது கொச்சைத்தனமான விஷயம். தொழில்துறையை மையப்படுத்தி பொருளாதாரம் இருக்க வேண்டும். டாஸ்மாக்கை வைத்து இருப்பது மோசமானது… என்றார்.

விஜய். ஷங்கர், AR.முருகதாஸ், கெளதம் மேனன் ஆகியோருடன் பணியாற்றிய ஆண்டனியின் புதிய அவதாரம்!

இயக்குனர் விஜய்யின் திங் பிக் ஸ்டுடியோஸ் மற்றும் பால்சன்ஸ் மீடியா பிரைவேட் லிமிடட் இணைந்து தயாரித்து, ஆண்டனி இயக்கத்தில், சத்யராஜ், அணு மோல், யூகி சேது, வருண் (அறிமுகம்) மற்றும் பலர் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் “ஒரு நாள் இரவில்”.

“நைட் ஷோ” என்று முதலில் பெயரிடப்பட்ட இப்படத்தை பார்ந்த பிரபலங்கள், படம் ஜனரஞ்சகமான முறையில் விருவிருப்பு சற்றும் குறையாமல் எடுக்கபட்டிருப்பதால், இன்னும் ஏதுவான பெயர் படத்திற்கு வைத்தால் நன்றாக இருக்கும் என்று கூற, மிகுந்த யோசனைக்கு பிறகு படத்திற்கு “ஒரு நாள் இரவில்” என்று பெயர் மாற்றத்தை செய்திருக்கிறார்கள்.

இந்த பெயர் கதைக்கு ஏற்றாற் போல் சிறப்பாக அமைந்துள்ளதாக அனைவரும் பாரட்டினர்.

மலையாளத்தில் விமர்சன ரீதியாக பாராட்டப் பட்ட ”ஷட்டர்” என்னும் திரைப்படத்தின் தமிழாக்கம் தான் “ஒரு நாள் இரவில்” என்பது குறிப்படத்தக்கது.

இயக்குனர்கள் ஷங்கர், AR.முருகதாஸ், கெளதம் மேனன், விஜய், லிங்குசாமி மற்றும் கே.வி.ஆனந்த் ஆகியோருக்கு தொடர்ந்து படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ள ஆண்டனி, தற்போது “ஒரு நாள் இரவில்” படம் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.

படத்தை பார்த்த தணிக்கை குழு, படக்குழுவினரை வெகுவாக பாராட்டி, படத்திற்கு “U” சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

ஏற்கனவே படத்தின் முன்னோட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்க, தற்போது “ஒரு நாள் இரவில்” திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பெற்றுள்ளது என்பது குறிப்படத்தக்கது.

தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட சிசுவை வாயால் கவ்வி சென்று காப்பாற்றிய நாய்

வீதியில் வீசப்பட்ட சிசுவொன்றை நாயொன்று வாயால் கௌவிச் செல்லும் இரண்டு புகைப்படங்கள் வாட்ஸ் ஆப்பில் வெளியாகி வைரலாக பரவிவருகிறது .
 
மேலும் இது சம்பந்தமாக வாட்ஸ் ஆப்பில் கூறப்படும் தகவல் :-
 
வீதியில் வீசப்பட்ட சிசுவொன்றை நாயொன்று வாயால் கௌவ்விச் செல்லும் படமொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் சவுதி பத்திரிக்கையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
ஓமானில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீதியில் யாரோ ஒருவரால் வீசப்பட்டிருந்த,தொப்புள் கொடியுடன் காணப்பட்டசிசுவொன்றை நாயொன்று தூக்கிச்சென்று அருகில் இருந்த வீட்டு வாசலில் போட்டுள்ளது. மேலும் வாசலில் நின்றுகுரைத்துமுள்ளது. வீட்டில் உள்ளோர்வெளியே வந்து பார்த்த தும் சிசுவொன்று வாசலில் இருப்பதைக் கண்டுஅதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
அவ்வீட்டிலிருந்தோர் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் குழந்தை உயிரோடு இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும்குழந்தைக்கு காயமேதும்ஏற்பட்டிருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. நாயின் புத்திக் கூர்மையான செயற்பாட்டால் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
என வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவிவரும் புகைப்படத்துடன் தகவல் கூறப்படுகிறது .

தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் எம்.கே. நாராயணன் மீது செருப்புகள் வீசி தாக்குதல் நடத்தியவர் கைது

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பங்கேற்று உரையாற்றிய தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது செருப்புகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
 
சென்னை மியூசிக் அகாடமியில் இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளின் எதிர்காலம்’ குறித்த கருத்தரங்கம் நடை பெற்றது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக நாராயணனுக்கு எதிராக சில அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
நாராயணன் இலங்கைப் போரின் போது தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து புறப்படும் நேரத்தில் எம்.கே.நாராயணன் மீது செருப்புகள் வீசி தாக்கப்பட்டார். காவல் துறையினர் சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்ததாலும் அரங்கில் முன்கூட்டியே பதிவு செய்தவர்கள் வரிசையில், போலியான பெயரில் பதிவு செய்து அமர்ந்திருந்த நபர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார். இந்த நபரின் உண்மையான பெயர் பிரபாகரன் என்றும் தெரிகிறது.
 
எம்.கே.நாராயணன் மீது செருப்புகள் வீசி தாக்குதல் நடத்தப் பட்ட போதிலும், எவ்விதசலன மும் இன்றி, இயல்பான மன நிலையிலேயே நாராயணன் காணப்பட்டார். பிறகு புன்முறுவலுடன் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.தாக்குதலில் ஈடுபட்ட நபரை ராயப்பேட்டை காவல் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
இவரது அரசியல் கட்சியை சேர்ந்தவரா என்றும் அவரை குறித்தான முழு விபரங்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக மேலும், 15 பேரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

மது குடிக்க பணம் தராததால் மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த கொடூர கணவன்

 
மது குடிக்க பணம் தர மறுத்த மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த வெறிச்செயல் சம்பவம் ஆம்பூரில் நடைபெற்றுள்ளது. ஆடு வளர்த்து விற்கும் தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
 
காவல் துறை தரப்பில் நடைபெற்ற சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:–
 
ஆம்பூர் அருகே உள்ள பொன்னப்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் மல்லப்பன் (வயது 40). அவரது மனைவி சரிதா (35).
கணவன்–மனைவியும் ஆடு, மாடுகளை வளர்த்தி விற்பனை செய்யும் வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். மது குடிப்பழக்கம் மல்லப்பன் குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி மனைவியிடம் சண்டை போடுவது வழக்கம்.
 
கடந்த மாதம் 29–ந் தேதி கணவன்– மனைவி இருவரும் ஆடு மேய்க்க சென்றனர். அப்போது மனைவியிடம் மல்லப்பன் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்தார்.அதனால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் ஆத்திரம் அடைந்த மல்லப்பன், தனது மனைவி சரிதாவை கல்லால் தலையில் தாக்கி கொலைஅடித்து உதைத்து கீழே தள்ளினார். அதில் படுகாயம் அடைந்த சரிதா ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை சரிதாவுக்கு அளிக்கபட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து உமராபாத் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து, மல்லப்பனை வலைவீசி தேடி வருகின்றனர்.