Home Blog Page 6002

படகில் குண்டு வெடிப்பு: மாலத்தீவு அதிபர் உயிர்தப்பினார்

மாலி:

மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் பயணித்த படகில் திடீரென குண்டு வெடித்தது. இதில் அவர் காயமின்றி உயிர் தப்பினார்.

சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகரில் ஹஜ் புனித பயணத்தை மேற்கொண்டு விட்டு மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன், தனது மனைவி பாதிமாத் இப்ராகிம்முடன் திரும்பினார். அவர் கடலில் ஸ்பீடு படகில் வந்தபோது எதிர்பாராத விதமாக குண்டு வெடித்தது. இதில் அப்துல்லா யாமீன் மற்றும் அவருடைய மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் காயம் இல்லாமல் உயிர் தப்பினார் என்றும் அவருடைய மனைவிக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இருப்பினும் படகில் குண்டு வெடித்ததற்கான காரணம் குறித்து இதுவரை தகவல் எதுவும் தெரியவரவில்லை.

தில்லியில் உள்ள இந்தியாவுக்கான மாலத்தீவு தூதர் அகமத் முகமது இது குறித்துத் தெரிவித்த போது, “அதிபர் அப்துல்லா யாமீன், அவருடைய மனைவியுடன் மாலி விமான நிலையத்தில் இருந்து சென்றபோது குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. அதிபருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அவருடைய மனைவி காயம் அடைந்துள்ளார். அவர் மாலியில் உள்ள இந்திரா காந்தி நினைவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.” என்று கூறினார்.

இதை அடுத்து அதிபர் மற்றும் அவருடன் வந்தவர்கள் போலீஸ் இயந்திரப் படகுக்கு மாற்றப்பட்டு மாலிக்கு அழைத்து வரப்பட்டனர்.

அஜித், ரஜினிக்கு எந்த விதத்திலும் குறைந்தவரில்லை… பரபரப்பை ஏற்படுத்திய தயாரிப்பாளர்!

வீரம் படத்தையடுத்து சிவா-அஜித் மீண்டும் இணைந்திருக்கும் படம் வேதாளம். தீபாவளிக்கு இப்படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காக படக்குழு ஜெட் வேகத்தில் பறந்து வருகிறது.

அஜித்தின் ஓபனிங் பாடல் காட்சி மட்டும்தான் மீதம் இருக்கிறதாம். படத்தின் வியாபாரமும் சூடுபிடுத்துள்ளது. இந்நிலையில் கன்னட தயாரிப்பாளர் மஞ்சு ஒரு பேட்டியில் பேசும் போது ‘அஜித் எந்த விதத்திலும் ரஜினிக்கு குறைந்தவர் இல்லை.

கர்நாடகாவில் ரஜினி படங்களுக்கு நிகராக அஜித் படங்களுக்கும் நல்ல ஓப்பனிங் உள்ளன’ என கூறியுள்ளார். ஏற்கனவே அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று ரசிகர்கள் மோதி வருகின்றனர். இந்நேரத்தில் மஞ்சுவின் இந்த பேச்சு கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாயை நினைத்து கண்கலங்கிய மோடி: பேஸ்புக் தலைமையகத்தில் உணர்ச்சிப் பெருக்கு

தாயைக் குறித்து தனது பேச்சில் நினைவுகூர்ந்த மோடி, தாம் பேசும்போது உணர்ச்சிப் பெருக்கால் கண் கலங்கினார். அந்த ஓரிரு நிமிடங்கள் பேஸ்புக் தலைமையகத்தில் நிசப்தம் நிலவியது.

நியூயார்க் பயணத்தை முடித்துக்கொண்டு கலிபோர்னியா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கே மென்லோ பார்கில் உள்ள பேஸ்புக் தலைமையகத்தில், பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸுக்கர்பெர்க் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று அங்கிருந்தவர்களுடன் உரையாடினார். அப்போது அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு ஹிந்தியில் பதில் அளித்தார் மோடி.

அவருடைய பேச்சின் நடுவே சிரிப்பு, நகைச்சுவை, யதார்த்தமான உரையாடல் என எல்லாவற்றையும் காண முடிந்தது.

நாட்டின் வளர்ச்சி, மேக் இன் இந்தியா திட்டம், டிஜிட்டல் இந்தியா திட்டம், கிராமங்களை இணைப்பது, நாட்டின் வெளிப்படையான நிர்வாகம் இவை குறித்தெல்லாம் தனது பேச்சில் குறிப்பிட்டார் மோடி.

குறிப்பாக, சமூக வலைத்தளங்கள் மூலம், தம்மால் மக்களுடன் உடனுக்குடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடிவதாகவும், மிகப் பெரும் ஜனநாயக நாட்டில் இது அவசியம் என்றும், மக்களின் கருத்துகளை தம்மால் உடனுக்குடன் அறிந்து செயலாற்ற முடிவதாகவும் குறிப்பிட்டார்.

பெண்கள் , குழந்தைகள் குறித்த ஒரு பெண்மணியின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, எல்லா நாட்டிலும் கடவுளை ஆணாக வைத்திருக்கும் போது, நம் நாட்டில் மட்டுமே பெண் தெய்வங்களை வைத்திருக்கிறார்கள். துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி மா என்று தெய்வம் பெண்ணாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

தனது பெற்றோர், குறிப்பாக அம்மாவும் மோடியின் இந்த உரையாடலைக் கேட்க பேஸ்புக் தலைமையகமான இங்கே வந்திருப்பதாக மார்க் குறிப்பிட்டார். உடனே அவர்களை எழுந்து எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைக்கும்படியாக கேட்டுக் கொண்டார் மோடி. அவர்கள் எழுந்து நின்று வணக்கம் சொன்ன பின்னர், மோடியின் தாயார் பற்றி ஓரிரு வார்த்தைகள் கூறுமாறு மார்க் கேட்டுக்கொண்டார்.

அப்போது, 95 வயதாகும் தனது தாயார் ஹீராபென்னை நினைவுகூர்ந்த மோடி, தனது தாய் தன்னை வளர்த்த விதம், அவர் பட்ட கஷ்டங்களைப் பற்றி கூறும் போதே உணர்ச்சிப் பெருக்கால் கண்கலங்கினார். தான் சிறு வயதாக இருந்த போது, தாயார் வீட்டு வேலைகளைச் செய்து தன்னை வளர்த்ததாகக் குறிப்பிட்டார். அவ்வாறு பேசும் போது கண்கலங்கிய மோடி, மேற்கொண்டு சில நொடிகள் எதுவும் பேச முடியாமல், சிறிது நேரம் மவுனமாக இருந்தார். தொடர்ந்து, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு பேசிய மோடி, இது நரேந்திரமோடிக்கு மட்டுமானதல்ல, இந்தியாவில் பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக, அவர்களின் கனவுகளை நனவாக்க,  தங்களின் முழு வாழ்வையும் அர்ப்பணம் செய்கின்றனர் என்றார் மோடி.

மோடியின் உணர்ச்சிப் பெருக்கான உரையால், பேஸ்புக் அலுவலகத்தில் ஒரு சில நிமிடங்கள் அமைதி நிலவியது.

நான் நாட்டுக்காக உழைக்கிறேன். நாட்டு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறேன். இன்று உலகமே இந்தியாவை நம்பிக்கையுடனும் உறுதியுடனும்  உற்று நோக்குகிறது என்று கூறி  விடைபெற்றார் மோடி.

 

வறுமை ஒழிப்புக்கு முதலிடம்: கலிபோர்னியாவில் மோடி உரை

சிலிகான் வேலி:

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது சிலிகான் வேலி பயணத்தின் ஒரு கட்டமாக சாப் மையத்தில் கூடியிருந்த இந்தியர்களிடையே உரை ஆற்றினார். குட்ஈவ்னிங் கலிபோர்னியா என்று சொல்லி, தனது பேச்சைத் தொடங்கிய மோடி, 80 கோடி இந்திய இளைஞர்களால் சாதிக்க முடியவில்லை என்றால் வேறு யாராம் முடியும் என்று வினவினார்.

அவரின் உரையிலிருந்து…

குட் ஈவ்னிங் கலிபோர்னியா. உங்களது ஆர்வம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. இன்று இங்கு செப்டம்பர் 27ம் தேதி மாலை. இந்தியாவில் செப்டம்பர் 28ம் தேதி காலை நேரம். இன்று இந்தியாவின் தீரப் புதல்வன் மாவீரன் பகத் சிங்கின் பிறந்த நாள். அவருக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். அவர் என்றென்றும் நினைவுகூரப்படுவார்.

கலிபோர்னியாவுக்கு நான் 25 வருடங்களுக்குப் பின்னர் வந்துள்ளேன். இப்போது பல்வேறு மாற்றங்களையும் பல புதுமுகங்களையும் இங்கே பார்க்கிறேன். வலிமை வாய்ந்த இந்தியாவின் மாற்றத்தை கலிபோர்னியாவில் பார்க்கிறேன். அமெரிக்கர்கள் இங்கே இந்திய வம்சாவளியினரைப் பார்த்து பெருமை கொள்கிறார்கள். இதற்காக உங்களைப் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.

19ஆவது நூற்றாண்டில் எனது சீக்கிய சகோதரர்கள் அமெரிக்கா வந்தனர். விவசாயிகளாக வந்த அவர்கள் இந்தியாவின் விடுதலைக்காக ஏங்கிக் கொண்டிருந்தனர். இப்போது 21வது நூற்றாண்டு. இப்போது எனது மக்கள் வறுமையை ஒழிக்க போராடிக் கொண்டிருக்கின்றனர். தனது இளமைக் காலத்தை சுதந்திரத்திற்காக காவு கொடுத்த ஒருவர் எனது நாட்டில் இருந்தார். காந்தி கூறிய கோட்பாடுகளின்படி அவர் வாழ்ந்து காட்டினார். 1975இல் நெருக்கடி நிலைக் காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜெயப் பிரகாஷ் நாராயண். படிப்பதற்காக கலிபோர்னியாவுக்கு வந்தவர் ஜெயப் பிரகாஷ் நாராயண்.

இந்தியாவுக்கும் கலிபோர்னியாவுக்குமான உறவு தொன்று தொட்டு வருகிறது. இந்த நூற்றாண்டு ஆசியாவுக்கானது என்று எல்லோரும் ஒத்துக் கொள்வார்கள். ஆனால் இந்த நூற்றாண்டு இந்தியாவுக்கானது. இது மோடியால் ஏற்பட்டதல்ல… 120 கோடி இந்தியர்களால் சாத்தியமான மாற்றம். மோடி வந்து 16 மாதமாகி விட்டது. உங்களது சான்றிதழை எதிர்பார்க்கிறேன். நான் சரியாக வேலை செய்துள்ளேனா? வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும், உடலின் ஒவ்வொரு அணுவையும் நாட்டுக்காக பணியாற்ற அர்ப்பணித்துள்ளேன். நான் இந்தியாவுக்காக வாழ்வேன். இந்தியாவுக்காக சாவேன்.

முன்பு உபநிஷத்துகள்தான் இந்தியாவின் அடையாளமாக இருந்தன. இன்று அறிவியல் துறையில் இந்தியா புதிய அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை தொட்ட முதல் நாடு இந்தியாதான். முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பினோம். நான் பிரதமராகப் பதவியேற்க தில்லி வந்தபோது 50 சதவீத இந்தியர்களிடம் வங்கிக் கணக்கே இல்லை. இன்று 18 கோடி இந்தியர்களுக்கு வங்கியில் கணக்கு திறக்கப்பட்டுள்ளது. மின்னணு நிர்வாகம் என்பது எளிதான நிர்வாகம்.. செலவு குறைந்த நிர்வாகமும்கூட!

காஸ் மானியத்தை விட்டுக் கொடுங்கள் என்று நான் வெகு சாதாரணமாகக் கூறியதை ஏற்று 30 லட்சம் இந்தியர்கள் அதை விட்டுக் கொடுத்தனர். அனைவருக்காகவும் நாங்கள் உருவாக்கியதுதான் “ஜாம்” (JAM). இதில் ஜே என்பது ஜன் தன் திட்டம். ஏ என்பது ஆதார் திட்டம். எம் என்பது மொபைல் கவர்னென்ஸ்.

உலகம் முழுவதும் இன்று பயங்கரவாதம் பரவிக் கிடக்கிறது. ஒவ்வொரு நாடும் பயங்கரவாதத்திற்கு எதிராகக் கை கோத்து வருகின்றன. ஒவ்வொரு இந்தியரின் கனவும் நனவாக வேண்டும். 125 கோடி இந்தியர்களின் கனவும் நனவாக வேண்டும். என்னை இங்கு அழைத்த கலிபோர்னியா மாகாண ஆளுநருக்கும், காங்கிரஸ் எம்.பிக்களுக்கும் என் நன்றி.
– என்று தனது  உரையை நிறைவு செய்தார் மோடி.

தனது உரையை முடிக்கும் முன்பு, தனது வழக்கமான பாணியில் “பாரத் மாதா கி ஜே”, “ஜெய் வீர் பகத் சிங்” என்று கோஷமிடுமாறு கூட்டத்தினரைக் கேட்டுக் கொண்டார். அங்கே கூடியிருந்த அனைவரும் திருப்பிச் சொல்ல சாப் மையமே இந்த முழக்கத்தால் அதிர்ந்தது

சுமார் ஒருமணி நேரம் பேசிய பின்னர், முடிவில் மைக்கைத் திருப்பிய மோடி, “நான் ஒரு நல்ல தகவலைப் பகிர்ந்து கொள்ள மறந்து விட்டேன்…
டிசம்பர் 2ஆம் தேதி முதல் தில்லி- சான்பிரான்சிஸ்கோ இடையே வாரத்துக்கு 3 நாட்கள் ‘நான்-ஸ்டாப்’ நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளது.  மேலும் தொடர்ச்சியாக 14 மணி நேரம் இது பறக்கும். எனவே உலகிலேயே நீண்ட நேரம் தொடர்ந்து பறக்கும் முதல் விமான சேவை என்ற பெயரும் இதற்குக் கிடைக்கும்.. என்றார்.

அமெரிக்காவில் இதுவரை நியூயார்க், நெவார்க், சிகாகோ ஆகிய நகரங்களுக்கு ஏர் இந்தியா தனது சேவையை இயக்கி வருகிறது. தற்போது சான்பிரான்சிஸ்கோவும் இதில் இணைகிறது. சிலிக்கான் வேலியில் பணியாற்றி வரும் இந்தியர்களின் நீண்டகாலக் கோரிக்கை தற்போது மோடி பயணத்தை முன்னிட்டு நனவாக்கியுள்ளது.

 

எம்.எல்.ஏ.வுக்கு சரணடைய கெடு விதித்த உச்ச நீதிமன்றம்

 

ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.வான சோம்நாத் பாரதி மீது அவரது மனைவி லீபிகா புகார் அளித்திருந்தார். அதில், தன்னை தன் கணவர் சோம்நாத் பாரதி அடித்து கொடுமைப்படுத்தி வருவதாகவும் ஒருமுறை கொல்ல முயன்றதாகவும் அந்த புகாரில் லீபிகா குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில் சோம்நாத் பாரதி முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடியானதால் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவும் தள்ளுபடியானது. எனவே, எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டது.

அதன் பிறகும் விசாரணைக்கு ஆஜராகாததால், அவருக்கு எதிராக, ஜாமினில் வெளிவர முடியாத வகையில் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சோம்நாத் பாரதி தலைமறைவாகி விட்டார்

இதற்கிடையில், தன் மீது மனைவி அளித்த புகார் தொடர்பான விசாரணையை குடும்ப சமரச மையத்துக்கு மாற்ற வேண்டும் என்றும், இவ்வழக்கில் போலீசார் தன் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் சோம்நாத் பாரதி மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவின் மீது இன்று விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் இன்று மாலைக்குள் போலீசாரிடம் சரணடையும்படி சோம்நாத் பாரதிக்கு உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில் முதலில் நீங்கள் சரணடையுங்கள். உங்கள் மனைவியின் புகார் தொடர்பாக குடும்ப சமரச மையத்துக்கு பரிந்துரைப்பது பற்றி பின்னர் முடிவு செய்யலாம் என தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் , இம்மனு மீதான மறுவிசாரணையை வரும் அக்டோபர் முதல் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

 

 

 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் லஞ்ச ஊழல் தலைவிரித்தாடியது : மோடி கடும் தாக்கு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சான்ஜோஸ் நகரில் இந்தியர்களை சந்தித்த பிரதமர் மோடி அவர்களிடம் பேசிய போது காங்கிரஸ் கட்சியையும், சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேராவையும் மறைமுகமாக கடுமையாக தாக்கினார். அவர் பேசியதாவது:–

காங்கிரஸ் தலைமையிலான கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் லஞ்ச ஊழல் தலைவிரித்தாடியது. அது மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. நமது நாட்டில் அரசியல் வாதிகளுக்கு எதிராக பெரிய அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஒருவர் மீது ரூ.50 கோடியும், ஒருவரது மகன் மீது 250 கோடியும், வேறு ஒருவர் மகள் மீது 500 கோடியும், ஒருவரது மருமகன் மீது 1000 கோடியும், ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன’’ என்றார்.

பேச்சின் இடையே கூட்டத்தினரை பார்த்து கேள்வி எழுப்பி அதற்கு பதிலும் பெற்றார். நாடு ஏமாற்றம் அளிக்க வில்லையா? என அவர் கேட்டதற்கு கூட்டத்தினர் ‘ஆமாம்’ என பதில் அளித்தனர். அதைத் தொடர்ந்து ஊழலுக்கு எதிராக கோபம் வரவில்லையா? என கேட்டார். அதற்கும் ஆமாம் என மக்கள் பதில் அளித்தனர்.

அதைத்தொடர்ந்து மக்களை பார்த்து ‘‘நான் உங்கள் முன்பு நிற்கிறேன். என் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதா? பதில் சொல்லுங்கள் என்றார்.

அதற்கு மக்கள் இல்லை என பலத்த சத்தத்துடன் கூறினர். அதன் பின்னர் அவர் கூட்டத்தினரை பா ர்த்து எனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் நாட்டுக்காக உழைக்கிறேன். நாட்டுக்காகவே வாழ்ந்து உயிர் துறப்பேன் என்று கூறினார் பிரதமர் மோடி.

மத்திய அமைச்சர்களை மாற்ற பிரதமர் மோடி திட்டம்

 

பாரதீய ஜனதா அரசு கடந்த ஆண்டு மே மாதம் 26–ந்தேதி மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசை அமைத்தது.மோடி மந்திரி சபையில் மிக குறைவான அமைச்சர்களே இடம் பெற்றுள்ளனர். சில மூத்த அமைச்சர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இலாகாக்களை கவனித்து வருகிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி தன் அமைச்சர்களை அழைத்து பேசி, அவர்களது துறையின் திட்டப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். கடந்த 16 மாதங்களில் அனைத்து துறை செயல் பாடுகளையும் அவர் மேம்படுத்தி வருகிறார்.இந்த நிலையில் சில துறைகளில் அமைச்சர்கள் செயல்பாடு, பிரதமர் மோடிக்கு அதிருப்தியைக் கொடுத்துள்ளது. சில துறைகளை வேறு அமைச்சர்களுக்கு வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

மூத்தஅமைச்சர்ககளில் அருண்ஜெட்லி, வெங்கய்யா நாயுடு, ரவிசங்கர் பிரசாத் உள்பட சில அமைச்சர்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட இலாகாக்கள் உள்ளதால் சில துறைகளின் நிர்வாகத்தில் தாமதம் ஏற்படுகிறது. எனவே நிதி, வெளியுறவுத்துறை, பாதுகாப்பு ஆகிய இலாகாக்களை வேறு இலாகாகளுடன் சேர்க்காமல் தனியாக நிர்வகிக்க பிரதமர் மோடி ஆலோசித்து வருகிறார்.

அதற்கு வசதியாக மத்திய மந்திரிசபையில் மாற்றம் ஏற்படுத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் மந்திரிகளின் செயல்பாடுகளை மேலும் ஆய்வு செய்யத் தொடங்கி உள்ளார்.அந்த ஆய்வுப்படி மந்திரிகளின் திறமைக்கு ஏற்ப பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. அதை அடிப்படையாக வைத்து மத்திய மந்திரி சபையில் பிரதமர் மோடி மாற்றம் செய்வார் என்று தெரிகிறது.

பீகார் மாநில சட்டசபை தேர்தல் முடிவு நவம்பர் மாதம் 8–ந்தேதி வெளியாக உள்ளது. தீபாவளி சமயத்தில் பீகார் சட்டசபை தேர்தல் நடவடிக்கை அனைத்தும் முடிந்து விடும்.அதன் பிறகு மத்திய மந்திரி சபையை பிரதமர் மோடி மாற்றி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை டிசம்பர் மாதம் மந்திரிசபையை மாற்ற இயலாவிட்டால் ஜனவரி முதல் வாரம் மத்திய அமைச்சர்கள் சபை உறுதியாக மாற்றி அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரை சிறப்பாக நடத்துவதற்கு ஏற்ற வகையில் மந்திரி சபை மாற்றம் இருக்கும் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.மந்திரிசபை மாற்றத்தின் போது, திறமையான அமைச்சர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்களுக்கு முக்கிய இலாகாக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இலாகாக்கள் பிரிக்கப்படுவதால் 4 அல்லது 5 புதிய கேபினட் அந்தஸ்து அமைச்சர்கள் கூடுதலாக மந்திரி சபையில் இடம் பிடிப்பார்கள்.

குறிப்பாக இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதனால் பா.ஜ.க.வில் உள்ள இளம் எம்.பி.க்களிடம் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.ராஜாங்க அமைச்சர்கள் கூடுதலாக வாய்ப்புள்ளது. இந்த மந்திரி பதவிகள் இதுவரை பிரதிநிதித்துவம் பெறாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

அதுபோல பா.ஜ.க. கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம், சிவசேனா கட்சிகளுக்கும் கூடுதல் மந்திரி பதவி கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாக விரைவில் உடைகிறது ஸ்பெயின் நாடு – கடலோனியா புதிய நாடாக உருவாகிறது

ஐரோப்பா கண்டத்தில் கடலோனியா என்ற புதிய நாடு உருவாகிறது. இது ஸ்பெயினின் வளம் மிகுந்த பகுதி.

தொழிற்சாலைகளும, வர்த்தக நிறுவனங்களும் அதிக அளவில் உள்ளன. இங்குள்ள பார்சிலோனாவில் ஸ்பெயினின் 2–வது பரபரப்பு மிக்க விமான நிலையம் உள்ளது. துறைமுகம் 3–வது பெரிய தலமாகும் .

ஸ்பெயின் நாட்டில் வடகிழக்கு மாகாணமாக கடலோனியா இருந்து வருகிறது. இது தன்னாட்சி உரிமை பெற்றது. 75 லட்சம் மக்கள் இங்கு வாழ்கின்றனர். இப்பகுதி மக்கள் தாங்கள் ஸ்பெயினில் இருந்து சுதந்திரம் பெற்று தனிநாடு ஆக செயல்பட விருப்பம் தெரிவித்து வந்தனர்.

இதனால் அங்கு பல கட்ட போராட்டங்கள் நடந்தன. அதை தொடர்ந்து அங்கு வாழும் மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கான ஓட்டு பதிவு நேற்று நடந்தது.

அதன் பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், ஸ்பெயினில் இருந்து பிரிவது என்று கருதுபவர்களே அதிக அளவில் வாக்களித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து கருத்து வாக்கெடுப்பில் பிரிவினைவாதிகள் வெற்றி பெற்றதாக அப்பகுதி ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்தர்மாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் 2017–ம் ஆண்டு முதல் கடலோனியா பகுதி சுதந்திர நாடாக பிரகனடம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதனால் ஸ்பெயின் 2 ஆக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

கழிவறை கட்ட ரூ.100 கோடி: கேரளத்துக்கு வழங்குகிறார் அமிர்தானந்த மயி

கொல்லம்:
கேரளத்தில் கழிவறை வசதிகளை பரவலாக்க, கழிவறைகளைக் கட்ட ரூ.100 கோடி அளிப்பதாக அமிர்தானந்த மயி அறிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே வள்ளிக்காவு என்ற இடத்தில் மாதா அமிர்தானந்த மயி மடம் உள்ளது. இங்கே வைத்து அமிர்தானந்த மயி தனது 62-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் மாநில முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், மாநிலம் முழுவதும் கழிவறைகளைக் கட்டுவது மற்றும் சுகாதாரத் திட்டங்களுக்காக ரூ.100 கோடி வழங்கப்படும் என அமிர்தானந்த மயி அறிவித்தார். அத்துடன் அதற்கான உத்தரவாதத்தை முதல்வர் சாண்டியிடம் வழங்கினார்.

இது குறித்து அமிர்தானந்த மயி குறிப்பிட்ட போது, “வளர்ச்சி, வறுமை என இந்தியாவுக்கு இரண்டு முகங்கள் உள்ளன. ஒரு முகம் அறிவியல், தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது. மற்றொரு முகம் வறுமை, கல்லாமை, உடல்நலக் குறைவு, பெண்களுக்கு எதிரான குற்றம், சுகாதாரமின்மை உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்து வருகிறது. நம் நாடு வல்லரசாக வேண்டுமானால் இந்த இரண்டு முகங்களையும் அழகான முகமாக இணைக்க வேண்டும்” என்றார்.

முதல்வர் உம்மன் சாண்டி இதுகுறித்துப் பேசும் போது, “மாதா அமிர்தானந்த மயி மடம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சேவை செய்து வருவது பாராட்டுக்குரியது. இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பயனடைந்து வருகின்றனர்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக தலைவர் அமித் ஷா, “மாதா அமிர்தானந்த மயி மடத்தின் சேவையால் சாதி, மத, இன, பாலின பேதமின்றி அனைத்து மக்களும் பயனடைந்து வருகின்றனர்” என்றார்.

மத்திய அரசின் தூய்மை இந்தியா மற்றும் கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டங்களுக்கு அமிர்தானந்த மயி மடம் ஏற்கெனவே ரூ.100 கோடி நிதியுதவி வழங்கி உள்ளது குறிப்பிடத் தக்கது.

வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடம் இல்லை – இலங்கை பிரதமர்

இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய உள்நாட்டு விசாரணை நடத்தலாம் என்று அமெரிக்க வரைவு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நிருபர்களிடம் நேற்று தெரிவித்ததாவது:-

எனது அரசு இலங்கை அரசியல் சாசனத்துக்கு உட்பட்டுத்தான் செயல்பட முடியும். வெளிநாட்டு நீதிபதிகள், இங்கு செயல்படுவதை அரசியல் சாசனம் அனுமதிக்காது. எனவே, உள்நாட்டு விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை இடம்பெறச் செய்ய முடியாது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலிடம் இலங்கை வெளியுறவுதுறை அமைச்சர் எடுத்துக் கூறுவார்.

அதேசமயத்தில், சர்வதேச நிபுணர்களின் உதவியை ஏற்றுக்கொள்வோம். அதற்கு கூட இலங்கை நீதித்துறை ஒப்புதல் அளிக்க வேண்டும். ராஜபக்சேவின் தவறால்தான், சர்வதேச விசாரணையை சந்திக்கும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. ஆனால், நாங்கள் இப்பிரச்சினையை சரியாக கையாண்டு, போர்க்குற்ற விசாரணையை சந்திப்பதில் இருந்து ராஜபக்சேவை காப்பாற்றி உள்ளோம் என ரனில் விக்ரமசிங்கே தெரிவித்தார்.