Home Blog Page 6210

பெண்களின் நிறம் குறித்த கருத்து: சரத் யாதவ் வருத்தம்

புது தில்லி: பெண்களின் நிறம் குறித்த தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார் சரத் யாதவ். மேலும், அமைச்சர் ஸ்மிருதி இரானி தொடர்பாகத் தான் தெரிவித்த கருத்துக்கும் நேற்று மாநிலங்களவையில் வருத்தம் தெரிவித்தார் சரத் யாதவ். காப்பீடு மசோதா தொடர்பான விவாதத்தின் போது, ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், தென் இந்தியாவில் வாழும் பெண்கள் கறுப்பு நிறத்தவர்கள். ஆயினும் அழகானவர்கள். எனினும் ஆண்களுக்கு வெள்ளைத் தோலின்மீது ஏக்கம் உண்டு என்று குறிப்பிட்டார். இதற்கு, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கும் சரத் யாதவ் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்பிரச்சினை குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அவையில் எழுப்பினார். அவர் பேசும்போது, “சரத் யாதவின் கருத்துகள் அவைக்குறிப்பில் இடம்பெறாத நிலையிலும், ஊடகங்களில் பல்வேறு விதமாக வெளியாகின்றன. இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் விளக்கமளிக்க வேண்டும்” என்றார். அதற்கு பதிலளித்த சரத் யாதவ், “இதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். நான் தாய் வழிச் சமூகமான கோண்டு பழங்குடியின பின்புலத்திலிருந்து வந்தவன். பெண்களை மதிக்கிறேன். நமது வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் மிகச் சிறந்தவர். ஸ்மிருதி இரானியை மதிக்கிறேன். அவரின் கல்வித் தகுதி குறித்த கேள்வி எழுந்த போது முதலில் ஆதரவுக் குரல் எழுப்பியவன் நான்தான். அவரை நான் மதிக்கிறேன்” என்றார்.

அரையிறுதியில் ஆஸ்திரேலிய – இந்திய அணிகள் மோதும் போட்டியைக் காண ஆவல்: மைக் ஹசி

இந்த உலகக் கோப்பையின் அரை இறுதிப் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டியைக் காண மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹசி தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சூழ்நிலையை வைத்துப் பார்த்தால் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள் வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழையும் என்று தெரிகிறது. பரபரப்பான அந்த அரை இறுதிப் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆட்டத்தைக் காண மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறேன். இம்முறை ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையை வென்று 5 ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார் மைக் ஹசி. அவரது ஆசைப்படி, நடக்கவும் வாய்ப்புகள் கூடியுள்ளன. நாளை அடிலெய்டில் நடக்கும் போட்டியில் பாகிஸ்தானுடன் ஆஸ்திரேலியா வெல்லும் பட்சத்தில் இந்த ஆசை நிறைவேற வாய்ப்புள்ளதாம்.

மார்புப் பகுதி தெரியும்படி செல்ஃபி கூடாது: பெண்களுக்கு தாய்லாந்தில் கட்டுப்பாடு

பாங்காக்: பெண்கள் தங்கள் மார்புப் பகுதி தெரியும் படி செல்ஃபி எடுக்கக் கூடாது என தாய்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மீறினால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. செல்ஃபிக்களில் சிலர் தங்களை ஆபாசமாக எடுத்து, அவை சமூக வலைதளங்கள் மூலமாக பரப்பப்படும் போது, அவற்றை சிலர் மேலும் மோசமாக்கி விடுகின்றனர். இதனால் பெண்கள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். எனவே, தாய்லாந்து அரசு இந்தப் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. செல்ஃபி எடுப்பதற்கு தனது நாட்டு பெண்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது. இதன்படி, செல்ஃபியில் தாய்லாந்து பெண்கள் மார்பு பகுதியில் இறக்கமாக போட்டோ எடுக்கக்கூடாது. அதை மீறுபவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும், நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டின் கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தேர்தலுக்குப் பிறகே 13வது சட்டத் திருத்த நடவடிக்கை: அதிபர் சிறிசேன

கொழும்பு: இலங்கையில், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் 13வது சட்டத் திருத்தம் தொடர்பான நடவடிக்கை நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் என்று அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் அதிபர் மாளிகையில், பத்திரிகை செய்தி ஆசிரியர்கள் மற்றும் ஊடகப் பிரிவுத் தலைவர்கள் மத்தியில் பேசிய சிறிசேன, தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண தமது அரசு முன்னுரிமை அளிக்கும் என்று கூறினார். அண்மையில் இலங்கை சென்ற நரேந்திர மோடி, 13வது சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில், சிறிசேன இவ்வாறு கூறியுள்ளார். 19 ஆவது சட்டத் திருத்தம் அடுத்த வாரம், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று குறிப்பிட்ட சிறிசேன, அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்றார். இந்த சட்டத் திருத்தம் அதிபரின் பதவிக்காலம், அதிகாரம் தொடர்புடையது. மேலும் இலங்கைக்கு எதிராக செயல்பட்டு வந்த தமிழ் அமைப்புகள் தற்போது, இலங்கையின் புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிராமப்புற அஞ்சல் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்:  ராமதாஸ்

சென்னை: கிராமப்புற அஞ்சல் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவுனர்  ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தியா முழுவதும் உள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற பகுதி நேர அஞ்சல் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 10 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று பத்தாவது நாளை எட்டியிருக்கிறது. பல ஆண்டுகளாக பகுதி நேர தொழிலாளர்களாக பணியாற்றி வரும் தங்களை பணி நிலைப்பு செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; பணி நிலைப்பு செய்யப்பட்ட பிறகு தங்களுக்கான பணித் தன்மை மற்றும் ஊதிய விகிதம் பற்றி பரிந்துரைக்க நீதிபதி தலைமையிலான குழு அமைக்கப்பட வேண்டும்; அஞ்சல் துறையை பிரித்து தனி நிறுவனமாக மாற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்பவை தான் அரசிடம் இவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் ஆகும். ஊரக பகுதி நேர அஞ்சல் தொழிலாளர்களுக்கான பணி 4 மணி நேரம் மட்டுமே என்ற போதிலும், எல்லா நாட்களிலும் இவர்கள் எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இதற்காக இவர்களுக்கு தரப்படும் ஊதியம் மிகமிகக் குறைவு. 25 ஆண்டுகளாக பணியாற்றுவோருக்குக் கூட ரூ.8,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. இத்தகைய சூழலில் பணியாற்றும் கிராமப்புற பகுதி நேர அஞ்சல் தொழிலாளர்கள் தங்களை பணி நிலைப்பு செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று கோருவது மிகவும் நியாயமானதாகும். இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதால் மத்திய அரசுக்கு பெரிய செலவு ஏற்படாது. பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 ஆண்டுகளில் 3 முறை இவர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். அப்போதெல்லாம் இவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக வாக்குறுதி அளிக்கும் மத்திய அரசு, வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு தங்களின் வாக்குறுதியை காற்றில் பறக்க விடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. இவர்களின் கோரிக்கைகள் குறித்து ஆராய இதுவரை 6 குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் முந்தைய வாஜ்பாய் ஆட்சியில் அமைக்கப்பட்ட நீதிபதி தல்வார் குழு இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. ஆனால், அப்போதைய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அதை நிறைவேற்றவில்லை. கிராமப்புற பகுதி நேர அஞ்சல் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பான வழக்கை கடந்த 2013 ஆம் ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், அவர்களும் மற்ற அரசு ஊழியர்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தது. அதன்பின் 2014 ஆம் ஆண்டு அரசுக்கும், இவர்களுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து ஆராய நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போதிருந்த காங்கிரஸ் கட்சி பதவி இழந்த நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட நரேந்திரமோடி அரசு அந்த அறிவிப்பை செயல்படுத்த மறுத்துவிட்டது. அஞ்சல் துறை தொழிலாளர்களின் போராட்டத்தால் கிராமப்புறங்களில் அஞ்சல் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள அஞ்சல் நிலையங்களில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானவை மூடப்பட்டிருக்கின்றன. பண விடைகள் (Money Orders) வழங்கப்படாததால் முதியோர் உதவித் தொகை பெறுவோரும், ஆதரவற்றோர் உதவித்தொகை பெறுவோரும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த பாதிப்புகள் அனைத்தும் கிராமப்புறங்களில் தான் என்பதால் இதுகுறித்த செய்திகள் வெளியில் வரவில்லை; இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து பேச்சு நடத்த மத்திய அரசும் முன்வரவில்லை. அடிமட்ட தொழிலாளர்களின் உணர்வுகளை மதிக்காத இப்போக்கு கண்டிக்கத்தக்கது. பகுதி நேர அஞ்சல் துறை ஊழியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதாலும், இவர்களின் போராட்டத்தால் கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை அழைத்து மத்திய அரசு பேச வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

கர்நாடகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மர்ம மரணம்: சிபிஐ விசாரணைக்கு பாஜக கோரிக்கை

பெங்களூரு: கர்நாடகாவில் மணல் கொள்ளை மாபியாவிற்கு எதிராக செயல்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி ரவிக்குமாரின் மர்ம மரணம் தொடர்பான விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்த மாநில பாஜக மக்களவை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அம்மாநில பாஜக மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ரவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களவை உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில், ரவியின் மரணம் குறித்த சர்ச்சை கர்நாடக சட்டப் பேரவையிலும் எதிரொலித்தது. சிபிஐ விசாரணை கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், அவை வரும் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

ரயில் நிலைய நடைமேடைக் கட்டண உயர்வை திரும்பப் பெற சரத்குமார் வலியுறுத்தல்

சென்னை; ரயில் நிலைய நடைமேடைக் கட்டணம் பத்து ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளதற்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ரயில் நிலையங்களுக்கு பொதுமக்கள் தங்களது உறவினர்களையும், நண்பர்களையும் வரவேற்கவும், வழியனுப்பவும் மட்டுமே குடும்பத்தோடு நடைமேடைச் சீட்டு வாங்குகின்றனர். ரயில்சேவையை அவர்கள் நேரடியாக பயன்படுத்தவில்லை. மேலும் சென்னை எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு வரை ரயில் பயணம் செய்வதற்கு ஏறத்தாழ ரூ.15 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ரூ.10 கட்டணத்தில் தாம்பரம் வரை பயணம் செய்ய வழி உள்ளது. இவ்வாறு பயணக் கட்டணங்களே குறைவாக இருக்கும்போது, நடைமேடைக் கட்டணத்தை திடீரென உயர்த்தியிருப்பதை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.

நிதியமைச்சரிடம் கத்தி முனையில் கொள்ளை அடித்த ரயில் கொள்ளையர்கள்

மத்தியப் பிரதேச நிதி அமைச்சரிடமே கத்தி முனையில் ரயில் கொள்ளையர்கள் கொள்ளை அடித்துள்ளனர். தில்லி செல்லும் ஜபல்புர் – நிஸாமுதீன் விரைவு ரயிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள், முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்த மத்தியப் பிரதேச நிதியமைச்சர் ஜெயந்த் மல்லையா, அவரது மனைவி சுதா மல்லையாவை கத்தி முனையில் மிரட்டி நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர். இந்தத் தகவலை உறுதி செய்துள்ள சுதா மல்லையா, இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளோம். ரயிலின் ஒவ்வொரு பெட்டிக்கும் காவல்துறை பாதுகாப்பு போடுவது என்பது நடைமுறைக்கு வராது என்றாலும், ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தில், ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கட்சியிலிருந்து நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் குட்டி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்… கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், காஞ்சீபுரம் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் குட்டி என்கிற எம்.சி. வெங்கடேசன், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன் பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத்தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார்.

டுனீஷியா அருங்காட்சியகத் தாக்குதல்: பிரணாப் முகர்ஜி கண்டனம்

புது தில்லி: டுனீஷியாவின் பர்டோ அருங்காட்சியகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இது போன்ற மனிதத் தன்மையற்ற செயல்களை உலக சமூகம் அனைத்தும் ஒன்று இனைந்து எதிர்க்க வேண்டும். இந்த தீவிரவாத நடவடிக்கையை எதிர்த்து நிற்கும் டுனீஷியா நாட்டுக்கும் மக்களுக்கும் இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்று குடியரசுத் தலைவர் கூறியுள்ளார். மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தனது பிரார்த்தனைகளைத் தெரிவித்தும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செய்தி வெளியிட்டுள்ளார்.