Home Blog Page 6211

303 ரன்களை வெற்றி இலக்காக வங்கதேசத்துக்கு நிர்ணயித்தது இந்தியா

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று மெல்பர்னில் நடைபெறும் காலிறுதிப் போட்டியில், இந்திய வங்க தேச அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி, 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 302 ரன் எடுத்தது. துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 126 பந்துகளில் 3 சிக்ஸர், 14 பவுண்டரிகள் அடித்து 137 ரன் குவித்தார். ஷிகர் தவன் 30 ரன்னும் கோலி 3 ரன்னும் ரஹானே 19 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். சுரேஷ் ரெய்னா மிக அழகாக ஆடி 1 சிக்ஸர் 7 பவுண்டரிகளுடன் 57 பந்துகளில் 65 ரன் எடுத்தார். கடைசிக் கட்டத்தில் ஜடேஜா 10 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 23 ரன் எடுத்தார். இறுதியில் வங்க தேச அணிக்கு வெற்றி இலக்காக 303 ரன் நிர்ணயித்தது இந்தியா.

கன்னியாஸ்திரி பலாத்கார சம்பவம்: சிபிஐ வசம் ஒப்படைக்க மம்தா முடிவு

மேற்கு வங்கத்தில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்த விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். இதுகுறித்து, முகநூல் பதிவில் அவர் கூறியிருப்பது: இது உணர்வு ரீதியான பிரச்னை ஆகும். மேற்கு வங்க மாநிலத்தின் எல்லைப் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளதால், இதனை மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியுள்ளது. இந்த சம்பவத்தின் தீவிரத் தன்மையைக் கருத்தில்கொண்டு, இந்த வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன் என அந்தப் பதிவில் மம்தா கூறியுள்ளார்.

ரயில் நடைமேடைக் கட்டண உயர்வை திரும்பப் பெறவேண்டும்: கம்யூனிஸ்ட்

ரயில் நடைமேடைக் கட்டண உயர்வு அதிர்ச்சியளிக்கிறது என கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: இரயில் நிலைய நடைமேடை கட்டணம் தற்போதுள்ள 5.ரூபாய் என்பதனை பத்து ரூபாயாக வசூலிக்கப்படும் என இரயிலவே நிர்வாகம் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இரயில் நிலையங்களுக்கு தங்களது உறவினர்களை, நண்பர்களை வரவேற்கவும், வழியனுப்பவும், தினசரி ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்களிடம் நடைமேடை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நடைமேடை கட்டணம் வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து ரூபாய் பத்து என்று உயர்த்தியிருப்பதும் பண்டிகை காலங்களில் மேலும் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள மண்டல மேலாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதும் கண்டிக்கத்தக்கது. இரயில்வே நிர்வாகம் வரம்பற்ற முறையில் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்க முயற்சிப்பதை கைவிட்டு நடைமேடை கட்டண உயர்வை திரும்ப பெறுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

பத்ம விருதுகளை ஏற்க சல்மான் தந்தை உள்பட 5 பேர் மறுப்பு

  ஹிந்தி நடிகர் சல்மான் கானின் தந்தையும், பிரபல திரைப்படக் கதாசிரியருமான சலீம் கான் உள்ளிட்ட 5 பேர், 2015ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை ஏற்க மறுத்து விட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. இதுதொடர்பாக மாநிலங்களவையில், மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் பத்ம விருதுகளை வழங்குவதற்கு முன்பு, அந்த விருதுகளை ஏற்பது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்துக் கேட்கும் நடைமுறை இருந்து வருகிறது. அதன்படி, விருதை ஏற்க சம்மதிப்பவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்படும். 2015ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை சலீம் கான் உள்ளிட்ட 5 பேர் ஏற்க மறுத்து விட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணம் குடிநீர் வரி பாக்கி வைத்துள்ள 300 எம்.பி.க்கள்: மாநகராட்சி அறிவிப்பு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட 300-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மின் கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்தாதோர் பட்டியலில் உள்ளதாக புது தில்லி மாநகராட்சி தெரிவித்தது. சோனியா காந்தி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவ கெளடா, மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, நஜ்மா ஹெப்துல்லா, ராம்விலாஸ் பாஸ்வான், மத்திய முன்னாள் அமைச்சர் ஜெய் நாராயண் பிரசாத் நிஷாத், எல்.கே.அத்வானி, திக்விஜய் சிங், ஜெகதீஷ் டைட்லர் உள்பட 166 மக்களவை உறுப்பினர்களும், 151 மாநிலங்களவை உறுப்பினர்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை குடிநீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களைச் செலுத்தாமல் உள்ளனர். நிஷாத் ரூ.18.47 லட்சமும், தேவ கெளடா ரூ.1.49 லட்சமும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ரூ.1.27 லட்சமும் வரி பாக்கி செலுத்தாமல் உள்ளனர். மன்மோகன் சிங் ரூ.22,934-ம், அத்வானி ரூ.3,311-ம், ஸ்மிருதி இரானி ரூ.12,934-ம், நஜ்மா ஹெப்துல்லா ரூ.1,627-ம் வரி பாக்கி வைத்துள்ளனர். சோனியா மற்றும் ஜெய்ராம் ரமேஷ் முறையே ரூ.193, ரூ.206 வரி பாக்கி வைத்துள்ளனர்.

ராமநாதபுரம் அருகே பஸ் வேன் மோதல்: 5 பேர் பலி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே தனியார் பஸ்ஸுடன் வேன் மோதியதில் 5 பேர் பலியாயினர். ராமநாதபுரத்தில் இருந்து இன்று காலை ஒரு தனியார் பஸ் பரமக்குடிக்கு புறப்பட்டுச் சென்றது. காலை 9 மணி அளவில் ராமநாதபுரம்–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடி அருகே உள்ள கீழக்கோட்டை பகுதியில் பஸ் சென்றபோது எதிரே பரமக்குடியில் இருந்து கோழிகளை ஏற்றிக்கொண்டு சத்திரக்குடிக்கு வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. வேனுடன் மோதிய வேகத்தில் பஸ் கவிழ்ந்தது. பஸ் பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி கூச்சலிட்டனர். இதை அடுத்து, அந்தப் பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் இறங்கினர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினரும், போலீசாரும் விரைந்து சென்றனர். இந்த விபத்தில் விரகனூரைச் சேர்ந்த லட்சுமி (19), கவுசல்யா (19), ராமநாதபுரத்தை சேர்ந்த வினோதினி (19) முருகன் (28) ஆகியோர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பலியான 3 பெண்களும் கல்லூரி மாணவிகள். இந்த விபத்தில் வேன் டிரைவர் பரமக்குடி புதுநகரிச் சேர்ந்த முகமது அப்துல்லா (42) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் காயம் அடைந்த 30–க்கும் மேற்பட்டோரை தீயணைப்பு துறையினரும், போலீசாரும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

நடிகர் ரஜினிக்கு கண்டனம்: ‘லிங்கா’ நஷ்ட விவகாரத்தில் வினியோகஸ்தர்கள் !

லிங்கா திரைப்பட நஷ்ட விவகாரத்தில் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை தீர்க்காமல் அமைதியாக இருந்துவரும் ராக்லைன் வெங்கடேஷ், நடிகர் ரஜினி ஆகியோருக்கு தங்கள் கண்டனத்தை தெரிவிப்பதாக தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு… ‘லிங்கா’ திரைப்படத்தில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய வலியுறுத்தி பல கட்டப் போராட்டங்கள் நடத்திய பிறகு எங்களை அழைத்த திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அவர்களும் 10 கோடி ரூபாய் மட்டுமே திருப்பித் தர நடிகர் ரஜினிகாந்த் அவர்களும், படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் அவர்களும் ஒப்புக் கொண்டதாகத் தெரிவித்தனர். அந்தத் தொகையில் எங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் வேறு வழியின்றி இசைவு தெரிவித்த பிறகும், வினியோகஸ்தர்களை அழைத்து பிரச்சனையை தீர்க்காமல் கண்ணாமூச்சி காட்டி வரும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களையும், ராக்லைன் வெங்கடேஷ் அவர்களையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டே எங்களின் பேச்சுரிமைக்கு எதிராக நீதிமன்றத் தடை பெற்ற ராக்லைன் வெங்கடேஷைக் கண்டிக்காத சங்கங்களை நினைத்து வருந்துகிறோம். எங்களின் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தி தராத நடிகர் ரஜினிகாந்தைக் கண்டித்து எதிர்வரும் மார்ச் 22ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணி அளவில் சென்னை, போயஸ் கார்டனில் அமைந்துள்ள அவரின் இல்லத்துக்கு எதிரே முன்னர் அறிவித்தபடி ‘மெகா பிச்சை’ எடுக்கும் போராட்டத்தை நடத்துவது என்று தீர்மானித்துள்ளோம். அதற்கு முன்னதாக மார்ச் 21ம் தேதி, சனிக்கிழமை, காலை 11 மணிக்கு ‘லிங்கா’ படத்தைத் திரையிட்டதில் நஷ்டமடைந்த அனைத்துத் திரையரங்க உரிமையாளர்களின் கூட்டம் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க இணைச் செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் நடைபெற இருக்கிறது. எங்கள் போராட்டத்தை திசை திருப்பும் வகையிலும், தடை ஏற்படுத்தும் வகையில் பிரச்சனை முடிந்து விட்டது என்று இந்தப் பிரச்சனை பற்றி சிறிதும் தெரியாத சிலர், எஸ்எம்எஸ் மூலமும், வாட்ஸ்அப் மூலமும் தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். அவர்களை வன்மையாக்க் கண்டிக்கிறோம். ‘லிங்கா’ நஷ்ட ஈட்டுப் பிரச்சனை தொடர்பாக நாங்கள் அறிவிக்கும் முடிவே இறுதியானது. அதுவரை யார் சொல்வதையும் நம்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அகிம்சை முறையில் நடைபெற இருக்கும் இந்தப் போராட்டத்தில் உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். நன்றி. லிங்கா திரைப்பட அனைத்து வினியோகஸ்தர்கள். தமிழ்நாடு.

இந்தியா 38 ஓவரில் 186/3: மழை குறுக்கீடு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்துடனான காலிறுதிப் போட்டியில் இந்திய அணி 38.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 186 ரன் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது. அப்போது களத்தில் ரோஹித் சர்மா 83 ரன்களுடனும் சுரேஷ் ரெய்னா 38 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

கருப்புப் பணத்தை வெளிக்கொண்டுவரும் புதிய திட்டம்: மத்திய அரசு அறிமுகம்?

கருப்புப் பணத்தை வெளிக் கொண்டு வருவதற்காக மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. அதன்படி, வருமான வரி செலுத்துவோர், கணக்கில் காட்டப்படாத தங்களது வருமானம், வெளிநாட்டு சொத்துகள் ஆகியவற்றைத் தெரிவிப்பதற்கு மத்திய அரசு கூடுதலாக சில மாதங்கள் அவகாசம் அளிக்க உள்ளது. கருப்புப் பணத்தை பதுக்குதல் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கு மத்திய அரசு கொண்டு வரவுள்ள “கணக்கில் வராத வெளிநாட்டு வருமானம், சொத்துகள் (புதிய வரி விதிப்பு) மசோதா-2015’ன் படி, சிறைத் தண்டனை பெறாமல் இருக்க மத்திய அரசு இந்த அவகாசத்தை அளிக்கவுள்ளது. இந்த மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு, வெளிநாட்டு வருமானம், சொத்துகள் ஆகியவை பற்றிய விவரங்களை அரசுக்கு தெரிவிப்பதற்கான தேதிகள் அறிவிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தமிழ் அமைப்புகள் மீது ராஜபட்சே விதித்த தடைகள் நீக்கப்படும்: சமரவீர

கொழும்பு: வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களால் தொடங்கப்பட்ட தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் மீதான தடையை நீக்குவது குறித்து இலங்கை அரசு ஆராய்ந்து வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மங்கள சமரவீர அறிக்கை அளித்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருங்கிணைய முயற்சிப்பதாக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி, விடுதலைப் புலிகளையும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களையும் தொடர்புபடுத்தி அந்த அமைப்புக்களை முந்தைய ராஜபட்ச அரசு தடை செய்து உத்தரவிட்டது. ஆனால் அவர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நேரடி தொடர்பு இருப்பதற்கான எவ்வித உறுதியான ஆதாரங்களும் கொடுக்கப்படவில்லை. அதே நேரம் தடை செய்யப்பட்டுள்ள அமைப்புகளின் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள சில தமிழர்கள் இப்போது உயிருடன் இல்லை. இந்நிலையில் நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கு இடையே ஒற்றுமையை நிலை நாட்டும் வகையில் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன, வெளிநாடுகளில் உள்ள அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவெடுத்துள்ளார்.