Home Blog Page 6212

தமிழக மீனவர் பிரச்னை: இலங்கையில் மோடி எழுப்பியதாக சுஷ்மா ஸ்வராஜ் தகவல்

புது தில்லி: தனது இலங்கைப் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி மீனவர் பிரச்னை குறித்து அவர்களுடன் விவாதித்தார் என்று அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாடுகள் பயணம் குறித்து மக்களவையில் தாமாக முன்வந்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சில தகவல்களைக் கூறினார். அப்போது, பிரதமர் மோடியின் இலங்கைப் பயணத்தின்போது அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா மற்றும் அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தப் பிரச்னையை எழுப்பிய மோடி, “இது இருநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் மனிதாபிமானம் தொடர்புடைய சிக்கலான பிரச்னை. எனவே இதற்கு இருநாடுகளும் நீண்ட கால அடிப்படையில் தீர்வு காண வேண்டியது அவசியம். இந்தப் பிரச்னை தொடர்பாக இரு நாட்டு மீனவ சங்கங்களும் உடனடியாக சந்தித்து இருதரப்புக்கும் ஏற்ற உடன்பாட்டை செய்துகொள்ள முன்வர வேண்டும்” என்றும் வலியுறுத்தி உள்ளார். மேலும், இலங்கைத் தமிழர் உட்பட அனைத்து இன மக்களின் மேம்பாட்டுக்காகவும், சமத்துவ வாழ்க்கை, சம நீதி, அமைதி ஆகியவற்றை நிலைநாட்டும் இலங்கை அரசின் முயற்சிக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக நிற்கும். தமிழர்களுக்கு சம அதிகாரம் வழங்க வகை செய்யும் 13-வது சட்டத் திருத்தம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று தான் நம்புவதாகவும் மோடி கூறினார் என சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

விராட் கோலியைக் காதலிக்கிறாராம் ராக்கி சாவந்த்: அனுஷ்கா சர்மா என்ன செய்வார்?

rakhi-sawant1மும்பை: தான் விராட் கோலியைக் காதலிப்பதாக நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, ஏற்கெனவே கிரிக்கெட் வீரர் கோலியை தீவிரமாகக் காதலித்து வருகிறார். இந்த நிலையில், மற்றொரு நடிகையான ராக்கி சாவந்த், தானும் கோலியை காதலிப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருகின்றனர். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், வெளிநாடுகளிலும் ஒன்றாக ஊர் சுற்றி வருகின்றனர். இந்நிலையில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து அதன் மூலம் பிரபலமான இந்தி நடிகை ராக்கி சாவந்த், மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, கிரிக்கெட் வீரர் விராட் கோலியை எனக்கு மிகவும் பிடிக்கும். இன்னும் கூற வேண்டுமானால், அவரை நான் காதலிக்கிறேன். அனுஷ்கா சர்மாவும், கோலியை காதலிப்பதாகத் தெரிகிறது. ஆனாலும், அனுஷ்கா, தன் காதலை, கோலியிடம் பகிரங்கமாக இன்னும் சொல்லவில்லை. நான், கோலி மீதான காதலை தற்போது வெளிப்படையாகத் தெரிவித்து விட்டேன். என் காதலை, கோலி ஏற்பார் என நம்புகிறேன் என்று கூறினார். ராக்கி சாவந்தின் இந்த அறிவிப்பால் கிரிக்கெட் வட்டாரத்திலும் இந்தி சினிமா வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது.

10-ஆம் வகுப்பு தேர்வுகள் தொடக்கம்

exam-studentsசென்னை: 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் இன்று தொடங்கின. தமிழகம், புதுவையில் 11 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தத் தேர்வினை எழுதுகின்றனர். இந்தத் தேர்வு ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 3,298 தேர்வு மையங்களில் 10.72 லட்சம் பேர் எழுத உள்ளனர். தனித்தேர்வர்களாக 50,429 பேர் எழுதுகின்றனர். தேர்வுகள் காலை 9.15 மணிக்கே தொடங்குகின்றன. 9.30 மணிக்குத் துவங்கி, முதல் 15 நிமிடங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், விடைத்தாள் விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும். நண்பகல் 12 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வுப் பணிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். 5,200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொண்ட பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 578 பள்ளிகளிலிருந்து 57,344 பேரும், புதுச்சேரியில் 291 பள்ளிகளிலிருந்து 19,559 பேரும் 10-ஆம் வகுப்புத் தேர்வை எழுதுகின்றனர்.

நியூட்ரினோ திட்டம் பெயரில் அணுக்கழிவுகளைக் கொட்ட மறைமுக இடம் இது: வைகோ

மதுரை: நியூட்ரினோ திட்டம் என்ற பெயரில் அணுக்கழிவுகளைக் கொட்ட மறைமுக இடமாக இது திகழ்கிறது என்றார் வைகோ. நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் வைகோவுடன் இணைந்து பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, நியூட்ரினோ திட்டம் என்ற பெயரில் அணுக் கழிவுகளை கொட்ட மறைமுகமாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ஒரு நாளைக்கு 35 லட்சம் லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்த உள்ளார்கள். அந்த தண்ணீர் வெளியேறும்போது விஷத்தன்மையுடன் இருக்கும். இதனால், எந்தப் பயிரும் விளையாது. கட்டடங்கள் இடியும். பயிர் நிலங்கள் பாழாகும். இப்படிப்பட்ட பேராபத்தை தமிழகம் ஏன் சுமக்க வேண்டும்? இப்படிப்பட்ட விபரீத ஆராய்ச்சிக்கு தமிழகம் பலியாடு ஆக முடியாது. இத்திட்டத்தை நிறைவேற்றினால் முல்லைப் பெரியாறு அணை, இடுக்கி அணை ஆகியவற்றிற்கு ஆபத்து ஏற்படும். இதுகுறித்து கேரள முதலமைச்சரிடம் நேரில் பேசியிருக்கிறேன். தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் விளைநிலங்களை தரிசாக்கும் நியூட்ரினோ திட்டத்தை நிறைவேற்ற ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார் வைகோ.

வங்கிகளுக்கு 3 நாள் மட்டுமே தொடர் விடுமுறை: அதிகாரிகள் விளக்கம்

புது தில்லி: வங்கிகளுக்கு 3 நாட்கள் மட்டுமே தொடர் விடுமுறை வருகிறது என வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். சில தினங்களாக ‘வாட்ஸ் அப்’ உள்பட சமூக வலைதளங்களில் வங்கிகளுக்கு 7 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது எனவே முன் கூட்டியே உங்கள் வேலைகளை முடித்துக் கொள்ளுங்கள் என ஒரு தகவல் பரவி வருகிறது. வரும் மார்ச் 28 சனிக்கிழமை ராமநவமி என்பதால் அன்று வங்கிகளுக்கு விடுமுறை. 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை தினம். 30-ம் தேதி திங்கள்கிழமை வங்கிகள் செயல்படும். 31-ம் தேதி செவ்வாய்க்கிழமை நிதியாண்டுக்கான இறுதி நாள் என்பதாலும், ஏப்ரல் 1-ம் தேதி புதன்கிழமை அடுத்த நிதியாண்டுக்கான முதல் நாள் என்பதாலும் கணக்கு வழக்குகளை முடிப்பதற்காக இரு தினங்களும் விடுமுறை. ஏப்ரல் 2-ம் தேதி வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 3-ம் தேதி வெள்ளிக்கிழமை புனித வெள்ளி என்பதாலும் அவ்விரு தினங்களுக்கும் விடுமுறை. அடுத்த நாள் ஏப்ரல் 4-ம் சனிக்கிழமை வங்கி அரைநாள் மட்டுமே செயல்படும். அதற்கு அடுத்த நாள் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை தினம் என அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பரவிய இந்த தகவலால் வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. வங்கிகளுக்கு தொடர்ச்சியாக ஏழு நாட்கள் விடுமுறை விடப்பட்டால் தங்களால் பணப் பரிவர்த்தனை உள்பட எவ்வித வங்கி நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாது என அச்சம் ஏற்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்த போது, மார்ச் 28-ம் தேதி ராமநவமியில் தமிழகத்தில் வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது. மார்ச் 30-ம் தேதி வங்கிகள் வழக்கம்போல் செயல்படும். மார்ச் 31-ம் தேதி நிதியாண்டின் இறுதி நாள் என்றாலும்கூட அன்று வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது. வங்கிகள் வழக்கம்போல் செயல்படும். எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. ஏப்ரல் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை 3 நாட்களுக்கு மட்டுமே வங்கிகளுக்கு தொடர் விடுமுறை. எனினும் ஏ.டி.எம். மையங்களில் போதிய பணம் இருக்கும் என்பதால் பணத்தை எடுப்பதில் பிரச்னையும் ஏற்படாது என்று கூறினர்.

அங்கீகாரம் ரத்தாகும் என ஆம் ஆத்மி உள்பட 6 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை நோட்டீஸ்

புது தில்லி: தேர்தல் செலவைத் தாக்கல் செய்யாத ஆம் ஆத்மி கட்சி உள்பட 6 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவ்வாறு செய்யாவிடில் கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி, அருணாச்சல் மக்கள் கட்சி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.), கேரள காங்கிரஸ் (எம்), மணிப்பூர் தேசிய மக்கள் கட்சி, அரியானா ஜன்ஹித் காங்கிரஸ்(பி.எல்.) ஆகிய 6 கட்சிகளும் தங்களுடைய தேர்தல் செலவுக் கணக்கை தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் இன்னும் தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையம், இந்த 6 கட்சிகளுக்கும் தேர்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்யும்படியும் அடுத்த 20 நாட்களுக்குள் தாக்கல் செய்யவில்லை என்றால் கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளது.

ராஜபட்சவுக்காக தொழிலாளர் கட்சி சின்னத்தை மாற்றக் கோரிக்கை!

  வரும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு முன்னாள் அதிபர் ராஜபட்ச போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியான நிலையில், இலங்கை தொழிலாளர் கட்சியின் சின்னத்தை மாற்றித் தருமாறு கட்சியின் தலைவர் எஸ்.எஸ்.பீ.லியனகே தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவரின் இந்தக் கோரிக்கை, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்சவுக்காக முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தற்போது இலங்கைத் தொழிலாளர் கட்சியின் சின்னம் கங்காரு. அக்கட்சியின் தலைவர் எஸ்.எஸ்.பீ.லியனகே கட்சி சின்னத்தை மாற்றித் தருமாறு கோரி தேர்தல் ஆணையர் மகிந்த தேசப்பிரியவை சந்தித்தார். அப்போது, மயில் அல்லது புறா சின்னத்தை தற்போது பயன்படுத்திக் கொள்ள முடியும் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். இருப்பினும், கட்சியின் சின்னத்தை மாற்றிக்கொள்ள தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒரு வார கால அவகாசம் தேவைப்படும் என தேர்தல் ஆணையர் அக்கட்சித் தலைவரிடம் தெரிவித்துள்ளார்.

பின்லேடனை காட்டிக் கொடுத்தவரின் வழக்குரைஞர் அப்ரிதி சுட்டுக் கொலை

binladen_lawyer அல்காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை காட்டிக் கொடுத்த நபரின் வழக்குரைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் மறைந்திருந்த அல்காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனைக் கண்டுபிடிக்க அமெரிக்காவுக்கு உதவியவர், பாகிஸ்தானைச் சேர்ந்த மருத்துவர் ஷகீல் அப்ரிதியின் முன்னாள் வழக்குரைஞர் சமியுல்லா அப்ரிதி. அவர் ஷகீலுக்காக வாதாடியதால் சமியுல்லாவுக்கு பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்திருந்தனர். ஒசாமாவை கண்டுபிடிக்க உதவிய மருத்துவர், பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்று கூறி அவருக்கு 2012ம் ஆண்டு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் தண்டனை 23 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. இதை அடுத்து ஷகீலுக்கு சட்ட உதவி செய்வதால் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது என்றும், அதனால் அவரது வழக்கில் இருந்து விலகுகிறேன் எனவும் சமியுல்லா அப்ரிதி கடந்த ஆண்டு கூறியிருந்தார். இந்நிலையில் சமியுல்லா, மத்ரா என்ற கிராமத்துகுச் சென்றுவிட்டு தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் அவர் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பியோடினர். இச்சம்பவத்தில் சமியுல்லா உயிரிழந்தார். இந்தக் கொலைக்கு ஜன்துல்லா மற்றும் தெஹ்ரிக் இ தாலிபான் ஆகிய இரு அமைப்புகள் பொறுப்பேற்றுள்ளன.

போராட்டம் வாபஸ்: பார்வையற்ற பட்டதாரிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

talks-end-visual சென்னை: தமிழக அமைச்சர்கள், பார்வையற்ற பட்டதாரிகள் தரப்புக்கு இடையே நடத்தப் பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், அவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் பணி நியமனம், வேலைக்காகக் காத்திருக்கும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கவேண்டும் ஆகியவை உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் சென்னை, திருச்சியில் 10வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகம் முன்பு பார்வையற்ற பட்டதாரிகள் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜேம்ஸ், ரகு ஆகிய இரு பட்டதாரிகளும் முதல்வரின் வாகன அணிவகுப்பு வருவதற்கு சற்று முன்னதாக தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் விரைந்து வந்து அவர்கள் இருவர் மீதும் தண்ணீரை ஊற்றினர். பின்னர் இருவரையும் கைது செய்தனர். அப்போது போலீஸாருக்கும் பார்வையற்ற பட்டதாரிகளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில், பார்வையற்ற பட்டதாரிகளுடன் வீரமணி, பழனியப்பன், வளர்மதி ஆகிய மூன்று தமிழக அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களின் 9 கோரிக்கைகளில் பள்ளி, கல்லூரிகளில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது, வேலையில்லா பார்வையற்ற பட்டதாரிகளுக்கு உதவித்தொகையை அதிகரிப்பது உள்ளிட்ட 4 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர்கள் உறுதி அளித்தனர். இதை அடுத்து, பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

எட்டு விரைவு ரயில்களில் நிரந்தரமாக கூடுதல் ரயில் பெட்டி ஒன்று: ரயில்வே

சென்னை: எட்டு விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்த விவரம்: கோயம்புத்தூர்-ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே இரு மார்க்கமாகவும் இயக்கப்படும் கொங்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்.12647/12648) கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி (ஸ்லீப்பர் கிளாஸ்) பெட்டி நிரந்தரமாக இணைக்கப்பட உள்ளது. இந்த சேவை கோயம்புத்தூரிலிருந்து வருகிற 22-ந் தேதியும், ஹஸ்ரத் நிஜாமுதீனிலிருந்து 25-ந்தேதியும் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. திருச்சி-ஹவுரா இடையே இரு மார்க்கமாகவும் இயக்கப்படும் திருச்சி வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12664/12663) கூடுதலாக ஒரு மூன்றடுக்கு ஏ.சி. பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இந்த சேவை திருச்சியிலிருந்து நாளை முதலும், ஹவுராவிலிருந்து வருகிற 22-ந்தேதியும் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. கோயம்புத்தூர்-சென்னை சென்டிரல் இடையே இரு மார்க்கமாகவும் இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12682/12681) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி நிரந்தரமாக இணைக்கப்பட உள்ளது. இந்த சேவை கோயம்புத்தூரிலிருந்து நாளை முதலும் சென்னை சென்டிரலிருந்து வருகிற 21-ந்தேதியும் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. சென்னை சென்டிரல்-நாகர்கோவில் இடையே இரு மார்க்கமாகவும் இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12682/12681) கூடுதலாக 2 படுக்கை வசதி பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட இருக்கிறது. இந்த சேவை கோயம்புத்தூரிலிருந்து நாளை முதலும், சென்னை சென்டிரலிருந்து வருகிற 21-ந்தேதியும் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. சென்னை சென்டிரல்-ஜம்மு தாவி இடையே இரு மார்க்கமாகவும் (வாரம் மூன்று முறை) இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16031/16032) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இந்த சேவை சென்னை சென்டிரலிருந்து நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. ஜம்முதாவியிலிருந்து நாளை முதல் செயல்பட இருக்கிறது. சென்னை சென்டிரல்-லக்னோ இடையே இருமார்க்கமாகவும் இயக்கப்படும் வார இருமுறை எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16093/16094) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இந்த சேவை சென்னையில் 21-ந்தேதியும், லக்னோவிலிருந்து 23-ந்தேதியும் செயல்பாட்டுக்கு வரஇருக்கிறது. ராமேசுவரம்-குஜராத் மாநிலம் ஒகா இடையே இருமார்க்கமாகவும் இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16733/16094) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இந்த சேவை ராமேசுவரத்திலிருந்து நாளை முதலும், ஒகாவிலிருந்து வருகிற 24-ந்தேதியும் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. சென்னை சென்டிரல்-பழனி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22651/22652) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. இந்த சேவை சென்னையில் நேற்று தொடங்கப்பட்டது. பழனியில் இருந்து இன்று முதல் செயல்படுத்தப்பட இருக்கிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.