Home Blog Page 85

ரயில்களில் முதல் முன்பதிவு அட்டவணை வெளியீடு செய்வதில் மாற்றம்..

1000812132 - 2026

முன் பதிவு ரயில்களில் முதல் முன்பதிவு அட்டவணை வெளியீடு செய்வதில்(passenger shorts preparation)இந்திய ரயில்வே பயணிகள் நலன் கருதி தற்போது மாற்றம் செய்துள்ளது.

முன்பதிவு ரயில்களில் முதல் முன்பதிவு அட்டவணை இதற்கு முன்னர் இரயில் தொடங்கும் இடத்தில் புறப்படும் நேரத்தில் இருந்து 4 மணி நேரத்திற்கு முன்பு ‌முதல் முன்பதிவு அட்டவணையை தயாரித்து வந்த நிலையில் தற்போது இந்த முன்பதிவு அட்டவணை விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது

அதன்படி காலை 5 மணி முதல் மதியம் 2 மணி நேரத்திற்குள் புறப்படும் இரயில்களுக்கு முதல் முன்பதிவு அட்டவணை, இரயில் புறப்படுவதற்கு முதல் நாள் இரவு 9 மணியளவில் முதல் முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும்

மதியம் 2 மணி முதல் காலை 5 மணி நேரத்திற்குள் புறப்படும் இரயில்களுக்கு முதல் முன்பதிவு அட்டவணை, இரயில் புறப்படுவதற்கு 8‌ மணி நேரத்திற்கு முன்பு முதல் முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும்

முதல் முன்பதிவு அட்டவணையில் தான் ஒரு பயணியின் இருக்கை எங்கே என்பது உறுதி செய்யப்படும்.

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய நடைமுறையால் Current Availability எனப்படும் முதல் முன்பதிவு அட்டவணை தயாரித்த பிறகு மீதமுள்ள இருக்கைகள் இரயில் புறப்படுவதற்கு முன்பு வரை மீதமுள்ள இருக்கைகள் தற்சமயம் முன்பதிவு இனிமேல் முதல் நாள் இரவு 9 மணி அல்லது இரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பே தற்சமயம் முன்பதிவு தொடங்கப்படும்

இது இரண்டாவது அட்டவணை அல்லது Remote Location முன்பதிவு இடங்களில் தயாரிக்கப்படும் இடத்திற்கும் பொருந்தும், இரண்டாவது அட்டவணை அல்லது Remote Location முன்பதிவு தயாரிக்கப்படும் இடம் நெருங்கும் வரை இந்த தற்சமயம் முன்பதிவு Current Availability முன்பதிவு இருக்கும்

காத்திருப்போர் பட்டியல் 25% சதவீதத்தை தாண்டினால் முன்பதிவை நிறுத்தப்படும் என்று இரயில்வே துறை தெரிவித்துள்ளது இதனால் Current Availability முன்பதிவில் அதிக இருக்கைகள் கிடைக்க வாய்ப்புள்ளது என தென்னக இரயில்வே தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் பிரிக்ஸ் பயணமும் அரசியல் பின்னணியும்!

modi in brics - 2026

நா நயத்தின் நாணயம்!

இன்று உலகின் சக்தி வாய்ந்த கரன்சி என்றால் அது டாலர் என்பதாக புரிந்து வைத்திருக்கிறோம். காரணம் அதன் நிகர மதிப்பில் தங்கம் இருப்பதாக பலருக்கும் ஒரு நினைப்பு. ஆனால் அது தவறு.

இதனை ஆனானப்பட்ட அமெரிக்காவே வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள், 1971 ஆம் ஆண்டில்.

அப்போதைய அதிபராக ரிச்சர்டு நிக்சன் டாலருக்கு நிகரான தங்கம் என்பது இனி கிடையாது எனவும் ஏற்கனவே 44 நாடுகள் ஒன்று சேர்ந்து 1941 ஆம் ஆண்டில் பிரேட்டன் உட்ஸ் (bretton woods) என ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தில் இருந்து வெளியே வருவதாக வெளிப்படையாக அறிவித்தார்.

உலக வரலாற்றில் இது மிக மிக முக்கியமான ஒரு விஷயம். இது புரிந்தால் தான் இன்றுள்ள உலக பொருளாதார மூலதனச் சந்தையை புரிந்து கொள்ள முடியும்.இன்று உள்ள நிலையில் இது அத்தியாவசிய அவசியம் கூட.

சரி…..அது என்ன பிரேட்டன் உட்ஸ் ஒப்பந்தம்…?!?!?!

முதல் உலக போர் காலக்கட்டத்தில் அமெரிக்கா இப்போரில் பங்கேற்கவில்லை….‌ ஆனால் ஆயுத தளவாட வழங்கலில் ஈடுபட்டது.1925ஆம் ஆண்டிற்கு பிறகு உலகம் பொருளாதார மந்தநிலை நோக்கி சரிந்த சமயத்தில்…. அது வரையில் உலக அளவிலான வணிக சந்தையில் பிரிட்டனின் ஸ்டெர்லிங் என்கிற கரன்சி தான் கோலோச்சியது
இது தங்கத்தை கட்டுப்படுத்த….. தங்கத்தின் மதிப்பை அனு தினமும் லண்டனில் மதிப்பீடு செய்ய ஆரம்பித்தனர்.

இது இன்றளவும் தொடர்கிறது என்பது தனிக் கதை.

ஆனால் அன்று…. உலக நாடுகளில் தங்கள் வசம்… அல்லது தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த தங்கத்தை பிரிட்டனை தாண்டி பொதுவான தேசத்தின் பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைக்க அவர்கள் தேர்ந்தெடுத்த நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா மற்றும் கனடாவாக இருந்தது.

ஏன் இப்படி…????

அமெரிக்காவில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்தும் பிரிட்டனில் இருந்து குடியேறியவர்கள் அதிகம். கனடா பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த தேசம்.

ஆக இந்த இரண்டு இடங்களில் தங்கள் நாட்டின் தங்கத்தை பாதுகாத்து வைத்து அதன் நிகர மதிப்பிலான கரன்சியை உலக சந்தையில் புழக்கத்தில் விட…. இதில் ஏதேனும் ஒரு நாட்டில் அவர்களின் கரன்சிக்கு பாதிப்பு என்றாலும் நேரிடையாக மேற்சொன்ன நாடுகளில் இருந்து கைவசம் உள்ள கரன்சியை மாற்றம் செய்து அதற்கீடான தங்கத்தை பெற்று கொண்டு விட முடியும் என்கிற நிலை இருந்தது.

போர், ஆசிய ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற தருணம் அது. யார் ஜெயித்தார்கள்… தோற்றார்கள்… என்பது மாறி மாறி வந்த காரணத்தால் மேற்சொன்ன ஏற்பாடு. இந்த ஏற்பாட்டால் உலக வணிக சந்தையில் ஒரு பிடிமானம் வந்தது.

இது 1944ஆம் ஆண்டில் ஐரோப்பா திவால் நிலையில் இருந்த காலத்தில் 44 நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவின் பிரேட்டின் உட்ஸ் என்கிற இடத்தில் ஒன்று கூடி… ஒரு ஹவுன்ஸ் தங்கத்திற்கான விலை 35 அமெரிக்க டாலர்கள் என்பதாக நிகர மதிப்பில் மதிப்பீடு செய்து நிலைநிறுத்தி வைத்து கொண்டார்கள்.

நன்கு கவனியுங்கள்…. இங்கு ஹவுன்ஸ் என்பதே பிரிட்டிஷ் அளவீட்டு முறை தான். அதுபோலவே ஐரோப்பா திவால் நிலையில் இருந்த காரணத்தால்…. அதாவது பெரும்பாலான தங்கம் அமெரிக்கா மற்றும் கனடாவில் குவிந்திருந்த காரணத்தால் அங்கு வைத்து பேசி முடிவு செய்து இருக்கிறார்கள்.

இதனோடு சேர்த்து உலக அளவில் புழக்கத்தில் இருந்த கரன்சியை… அதாவது அந்தந்த தேசங்களில் புழங்கிய கரன்சியை… தங்கத்தின் மதிப்பில் மாற்றி அதனை நேரிடையாக அமெரிக்க டாலருக்கு நிகர மதிப்பில் மாற்றீடு செய்து கொண்டனர்.

இப்படி செய்த சமயத்தில் பிரிட்டனில் ஸ்டெர்லிங் அமெரிக்க டாலர்களை விட அதிக மதிப்பில் இருந்தது…. தவிர தங்கத்தின் அளவீடும் அவர்களுடைய ஹவுன்ஸ் முறையில் இருந்ததால் உடனடியாக ஏற்றுக் கொண்டனர். ஆதனால் மற்றவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை.

இதன் தாக்கம் பூதாகரமாக வளர்ச்சி கண்டது அமெரிக்க டாலர். இந்த டாலர் என்கிற கரன்சிக்கு உண்டான சொல்லில் பல நாடுகளில் இன்றும் புழக்கத்தில் இருக்கிறது…. உதாரணத்திற்கு சிங்கப்பூர் டாலர்., ஆஸ்திரேலியா டாலர் கேமன் தீவுகள் டாலர் என பலதரப்பட்ட டாலர்கள் புழக்கத்தில் வருகிறது….. வெவ்வேறான மதிப்பில்.

இப்படி பட்ட பிரேட்டின் உட்ஸ் ஒப்பந்தத்தில் இருந்து தான் நிக்சன் வெளியே வந்ததாக அறிவித்தார்.

அப்படி என்றால். தங்கத்தின் நிகர மதிப்பில் அமெரிக்க டாலர்கள் இல்லை என்றால்…. உலக அளவிலான கரன்சி யாக அமெரிக்கா டாலர் வழக்கொழிந்து போய் இருக்க வேண்டுமே என்றால்….. அது தான் நடக்கவில்லை.காரணம் மத்திய கிழக்கு நாடுகளில் அபரிதமாக கிடைத்த கச்சா எண்ணெய்…… அதனாலேயே அதற்கு கருப்பு தங்கம் என்று பெயர் கிடைத்தது.

கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு அமெரிக்கா டாலர்கள் மதிப்பீடு செய்யும் முறையை ஏற்படுத்தி….. அதாவது கட்டாயப் படுத்தி… அமெரிக்கா ஆட்டம் காட்ட… சவூதி அரேபியா உடனடியாக அமெரிக்கா பக்கம் நின்றது. உடனடியாக அமெரிக்க ராணுவம் அவருக்கு வேண்டியதை செய்வதாக வாக்குறுதி கொடுத்தது.காபந்து செய்தது. மிக மிக முக்கியமான நுணுக்கமான நகர்வு இது.

அமெரிக்கா, ஏக வல்லரசு நோக்கி பீடு நடை போட்டு நகர்ந்தது. மத்திய கிழக்கில் அதுவரையில் கோலோச்சி வந்த ஈரானிய பெர்சிய மன்னர் ஆட்சி காணாமல் ஆக்கப்பட்டது. உலகின் மிக நீண்ட கால குடியிருப்பை கொண்டு ஈராக் சின்னாபின்னமாக்கபட்டது.

இந்திய ரூபாய் மதிப்பு மிகப்பெரிய சரிவை சந்தித்தது என ஏகப்பட்ட அழிச்சாட்டியங்களை முன்னெடுக்க ஆரம்பித்தது… வெற்றியும் கண்டது அமெரிக்க ராஜாங்கம். எல்லாம் சில காலம் என்பது போல், அமெரிக்க அழிச்சாட்டியங்களால் உண்டாக்கப்பட்ட ஒரு துணுக்கு…. ஒசாமா பின் லேடன் அதே அமெரிக்காவின் சரிவுக்கும் பிரதான காரணம் ஆனார் பின்னாட்களில்!

அவையெல்லாம் வேறு சமாச்சாரங்கள். இன்றைய தேதியில் டாலர் மிகப்பெரிய சரிவை சந்திக்க இருக்கிறது. அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு உலக நாடுகளின் தலையில் விடிந்திருக்கிறது.

உதாரணத்திற்கு நம் இந்திய கரன்சிக்கு நிகரான அமெரிக்க டாலர் ஒன்றுக்கு ரூபாய் 87 அல்ல, வெறும் 23ரூபாய்.50 பைசா மட்டுமே என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்க டாலர்களின் மதிப்பு சரிந்துக் கொண்டே இருப்பதால் அதற்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவை சந்தித்து வருகிறதே தவிர நிஜத்தில் நம் இந்திய ரூபாய் அதன் மதிப்பை இழக்கவில்லை. வளர்ச்சி கண்டு வருகிறது.

இதை நேர் செய்ய எந்த ஒரு அமெரிக்க அதிபரும் இன்றளவும் முன்வரவில்லை…. மாறாக தற்போது உள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து உலக வணிகம் அமெரிக்க டாலர்களில் இருக்க வேண்டும் என பம்மாத்து பண்ணிக் கொண்டு நிற்கிறார். தவறினால் பொருளாதார தடை என புருடா விட்டு கொண்டு இருக்கிறார்.

பத்து சதவீத வரி விதிப்பை செய்திருக்கிறார் அமெரிக்க இறக்குமதிகளின் மீது. இது அமெரிக்க மக்கள் தலையில் விடிந்திருக்கிறது. அது பற்றி கவலை ஏதும் அவருக்கு இருந்ததாக தெரியவில்லை… கஜானாவுக்கு கரன்சி வந்தால் சரி என்கிற நோக்கில் செய்யப்பட ஆரம்பித்து விட்டார்.

அடுத்ததாக பிக் ப்யூட்டிபுல் பில் பாஸ் செய்து விட்டார், அது அடுத்த ஆண்டில் இருந்து அமலுக்கு வந்துவிடும். இவற்றுக்கெல்லாம் நம்மவர்களின் எதிர்வினை? மிகப் பெரிய பாய்ச்சலுக்கு தயாரான புலி போல் நம்மவர் செயல்பட்டு வருகிறார்.

ரியோடி ஜெனிரோ வில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க செல்லும் வழியில் ஐந்து நாடுகளில் பயணம் மேற்கொண்டு வந்ததும் இதன் பொருட்டே. இந்த மாநாட்டில் சீனா…. அதாவது பிரிக்ஸ் BRICS வரும் C சீனா கலந்து கொள்ள வில்லை என அறிவித்திருக்கிறார்கள்.

ஏன்?

அமெரிக்க கரன்சி டாலரை தாங்கிப் பிடிக்கும் கட்டாயத்தில் அது இருக்கிறது. உலக நாடுகளில் உள்ள அமெரிக்க டாலர்களின் கையிருப்பு அமெரிக்கா தவிர்த்து சீனாவிடம் தான் அதிக அளவில் தேங்கி நிற்கிறது. இது அத்தனையும் தங்கமாக மாற்றீடு செய்து கொள்ளலாம் என பார்த்தால் செயற்கையாக தங்கத்தின் விலை ஏகத்திற்கும் உயர்த்து நிற்கிறது. கைவசம் உள்ள அமெரிக்க டாலர்கள் வேறு மதிப்பும் சரிவை சந்தித்து வருகிறது. இடியாப்ப சிக்கலுக்குள் சிக்கியிருக்கிறது பெய்ஜிங்.

அதனால் தற்போது உள்ள நிலையில் அமெரிக்க டாலர்களை விட அதனால் முடியவில்லை. நம்மவர்களோ மிக சாதூர்யமாக காய் நகர்த்தி வருகிறார்கள்.

உலகின் கரன்சியாக தங்கத்தை பிரிட்டனின் ஸ்டெர்லிங்க்கு மாற்றி இங்கிலாந்து கோலோச்சியதோ.. அதனை எப்படி அமெரிக்க அப்படியே டாலருக்கு கொண்டு சென்றதோ.அதுபோலான விஷயத்தை கையில் எடுத்து இயங்கி வருகிறார்கள்.

1944 ஒப்பந்தத்தின் படி அமெரிக்க மக்களிடம் இருந்த தங்கத்தை எல்லாம் விலை கொடுத்து வாங்கி தனது அரசாங்க கஜானாவில் இருப்பு வைத்து அமெரிக்க டாலரை உலக கரன்சி யாக மாற்றீடு செய்தது. அதை.. மிக மிக நுட்பமாக…, கச்சா எண்ணெயோடு மாற்றீடு செய்து கொண்டது. இன்று அது அந்தரத்தில் தொங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

நம்மவர்களோ இந்த இடத்தில் மிகவும் நுணுக்கமான விஷயங்களை திட்டமிட்டு துல்லியமாக காய் நகர்த்தி வருகிறார்கள். அது தான் டிஜிட்டல் கரன்சி. இதற்கு தான் பிரிக்ஸ் மற்றும் பிரிக்ஸ் ப்ளஸ் மாநாடு எல்லாம்! அது எப்படி வேலை செய்யும்?

ஏற்கனவே அமெரிக்காவுக்கு எதிரான திட்டமிடலின் ஓர் பகுதியாக ரஷ்யா மற்றும் வட கொரியா தளமாக கொண்டு இயங்கும்…. இயங்கிய… பிட்காயின் தான் இதன் ஆதாரசுருதி. அதன் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி தான் நம் இந்திய UPI பரிவர்த்தனை முன்னெடுப்புகள். இன்று அது அசூர வளர்ச்சி பெற்று மிக பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது.

இன்றைய தேதியில் உலக அளவில் 800 பில்லியன் டாலர்கள் அளவிற்கான பரிவர்த்தனை செய்து அசாத்தியமான பரிணாம வளர்ச்சி கண்டு இருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் கூட BHIM UPI அட்டகாசமாக செயல்பாட்டில் கொண்டு வந்து இருக்கிறார்கள் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்…..

சரி…. இதற்கும் டாலருக்கும் என்ன சம்பந்தம்? விஷயம் இருக்கிறது. அமெரிக்க டாலர்களின் மதிப்பு புழக்கத்தில் இருந்தே சரிய தொடங்கி விட்டால்…… அதற்கீடாக டிஜிட்டல் கரன்சி செயல்பாட்டில் கொண்டு வந்து விட்டால்…. பொருளாதார குற்றங்களும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த முடியும் என்கிறார்கள்.

டாலரை டிஜிட்டலைஸ் செய்கிறார்கள். அதாவது அமெரிக்க டாலர்களை கணக்கில் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். இது நடந்தால் டாலர் மண்ணை கவ்வும். ஏகப்பட்ட தில்லாலங்கடி வேலைகளில் ஈடுபட்டு கணக்கு வழக்கு இல்லாமல் அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளனர். இனி அதன் பச்சா பலிக்காது போகலாம் என்கிறார்கள் உலக பொருளாதார வல்லுனர்கள்.

ஆனானப்பட்ட அமெரிக்கா, கடைத் தேங்காய் எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்து ஊரை ஏமாற்றிய விஷயம் எல்லாம் இனி ஒவ்வொன்றாக ஊரறிய தெரிய வரும் போலிருக்கிறது.

அதற்கு அச்சாரம் தான் நம்மவர் செயல்பாடு. செயற்கரிய செயல்களில் இதுவும் ஒன்றாக நாளைய சரித்திரம் பேசும். ஊர் ஊராகச் சென்று பட்டங்களையும் பதக்கங்களைரும் வேண்டி விரும்பி பெற்று வரவில்லை…. மாறாக அந்தந்த தேசங்களில் உள்ள பட்டங்களுக்கு இவரால் மதிப்பு உண்டாக்கி கொடுத்து வருகிறார். இவையெல்லாம் போகப் போக நாளைய உலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எழுதப்படும்… நம் கண் முன்னே நடக்கும் நிதர்சனமான நிஜங்கள். புரிந்தவர்கள் பாக்கியவான்கள்.

  • ‘ஜெய் ஹிந்த்’ ஸ்ரீராம்

தலாய் லாமாவின் 90வது பிறந்த நாளில்! அவரது ஆன்மீக வீடு!

dalai lama - 2026

அவரது ஆன்மீக வீடு

– ராம் மாதவ்

இந்த வாரம் மகான் தலாய் லாமாவுக்கு 90 வயதாக போகிறது. (6 ஜூலை) அவரது 23வது வயதில் இந்தியாவுக்கு வந்தார். ஹிமாச்சல மாநிலத்தில் உள்ள தர்மசாலா என்ற இடத்தில் கடந்த 66 ஆண்டுகளாக இருக்கிறார். அவர் வந்த சில நாட்களிலேயே அங்கு திபெத்திய மத்திய நிர்வாகம் நிறுவப்பட்டது. அது இந்தியாவிலுள்ள திபெத்தியர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து ஒழுங்குப்படுத்தி வருகிறது.

விதிவசத்தால், 1959 மார்ச் 31 தேதி, தலாய் லாமா தன் குழுவினருடன் இந்திய எல்லை பகுதியில் உள்ள கின்செமனே என்ற கிராமத்துக்கு வந்தார். அந்த கிராமம் வடகிழக்கு எல்லை பகுதியில் தவாங்குக்கு அருகே உள்ளது. 1978 அது அருணாச்சல பிரதேச மாநிலமானது.

புனிதர் தலாய் லாமா இந்தியா வரும்போது மிகவும் நோய்வாய்பட்டிருந்தார். திபெத்திய தலைநகரான லாசாவிலிருந்து இரண்டு வாரங்கள் தொடர்ந்து பயணப்பட்டு இருந்ததால் உடல் ரீதியாக பலவீனமாக இருந்தார். அவருடன் வந்த எண்பது பேர்களையும் இந்திய எல்லையில் ராணுவ அதிகாரிகள் வரவேற்றனர். லாசாவில் முன்பு பணியிலிருந்து இந்திய அயலகத்துறை அதிகாரியான பி என் மேனன் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் செய்தியுடன் அந்த வரவேற்பு குழுவில் இருந்தார்.

‘ நானும் என் சகாக்களும் உங்களை வரவேற்கிறோம். உங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது’ என்று இந்திய மண்ணில் தங்க வந்த வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நேரு தன் கடிதத்தில் எழுதியிருந்தார். ‘ இந்திய மக்கள் உங்களை மிகவும் மதிக்கிறார்கள். அவர்களது மரபுப்படி, சந்தேகத்திற்கு இடமின்றி, உங்களுக்கு மரியாதை செலுத்துகிறார்கள்’, என்று அந்த கடிதத்தில் நேரு குறிப்பிட்டு இருந்தார். இதன் மூலம் தலாய் லாமாவை வரவேற்றதில் எந்தவிதமான அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று சீனாவுக்கு செய்தி சொல்லி இருந்தார் நேரு.

அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 2500 ஆண்டு புத்த ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள 1956 நவம்பரில், புத்தகயாவுக்கு தலாய் லாமா வந்தார். அதுதான் அவர் முதல் முறையாக இந்தியாவுக்கு வந்தது. அப்போது நேரு இவ்வளவு தாராள மனதுடன் நடந்து கொள்ளவில்லை. சீன அதிபராக இருந்த அவரது நண்பர் சூயென் லாய் இந்தியாவிலிருந்து தலாய்லாமா திபெத்துக்கு திரும்பி வரமாட்டார் என்று சொன்னதாக தெரிகிறது. அதனால் திபெத்திய தலைவரிடம், இந்தியா உங்களை ஆதரிக்காது. நீங்கள் உங்கள் நாட்டுக்கு திரும்பி போக வேண்டும். சீன அரசுடன் பிரச்சனையை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள், என்று நேரு உறுதியாக கூறிவிட்டார்.

1959 இல் தலாய் லாமா இந்தியாவில் நுழைய நேரு அனுமதித்தது மட்டுமன்றி ஆயிரக்கணக்கான திபெத்தியர்களுக்கும் தஞ்சமளித்தார். ஆயிரக்கணக்கில் திபெத்தியர்கள் இந்தியாவுக்குள் வந்தனர். இமாச்சலப் பிரதேசத்தில் தர்மசாலா, டேராடூன், டார்ஜிலிங், மேற்கு வங்கத்தில் உள்ள களிம்போங், சத்தீஸ்கரில் உள்ள மெயின்பட் , கர்நாடகத்தில் உள்ள பைலகுப்பே, முண்டக்காரு என நாடு முழுவதும் பரவலாக அவர்களுக்கு குடியிருப்புகள் அமைக்கப்பட்டன.

இந்தியாவில் திபெத்திய அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஒரு கட்டத்தில் அது ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது . ஆனால் காலப்போக்கில் அது குறைய தொடங்கியது. திபெத்திய இளைஞர்கள் இங்கிருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு நகரத் தொடங்கினர். 1922 இல் திபெத்திய மத்திய நிர்வாகத்தின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 66 ஆயிரம் திபெத்தியர்கள் இருக்கிறார்கள்.

இந்திய அரசுக்கு தலாய் லாமா கொடுக்க உறுதியின்படி அவரும் அவரைச் சார்ந்தவர்களும் இந்தியாவில் அமைதியாகவும் கௌரவமாகவும் வாழ்ந்து வருகின்றனர் . இந்திய மண்ணில் இருந்து எந்த வெளிநாடுகளுக்கும் எதிரான நடவடிக்கைகளில் திபெத்தியர்கள் ஈடுபடாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

மகாயான மரபை பின்பற்றும் திபெத்திய புத்த மதத்தின் புகழ் மிக்க தலைவராக தலாய்லாமா இருப்பதால் இந்தியாவிலும் வெளிநாடுகளிலிருந்தும் அவருக்கு சீடர்களும் ஆதரவாளர்களும் அதிகரித்தனர். இந்திய மக்கள் மட்டுமன்றி அடுத்தடுத்து வந்த இந்திய அரசுகளும் ஆன்மீக குருவான தலாய் லாமாவை மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்தின.

தன் நாட்டில் இருந்து வெளியேறி பல பத்தாண்டுகள் இந்தியாவில் வாழ்ந்ததால் தலாய் லாமாவுக்கு இந்த மண்ணுடனும் மக்களுடனும் நெருங்கிய பிணைப்பு ஏற்பட்டு விட்டது. அவருடன் பழக எனக்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அப்போதெல்லாம் அவரது அறிவாற்றலும் அவர் தன்னுடைய ஆன்மீக பூமியாக கருதும் இந்தியாவுடன் அவருக்குள்ள உணர்வுபூர்வமான பிணைப்பும் வெளிப் பட்டுள்ளன.

அவர் சிறந்த ஞானி மாத்திரமல்ல நகைச்சுவை உணர்வும் கொண்டவர். ஒரு முறை, என்னுடன் பேசும் போது, ‘நான் திபெத்தியனாக இருக்கலாம். ஆனால் என்னுள் ஓடுவது இந்திய இரத்தம் தான்’, என்றார். அடுத்து, ‘அறுபது ஆண்டு காலம் இந்த நாட்டு அரிசியையும் பருப்பையும் சாப்பிட்டதால் அதிலிருந்து உருவானது எனது இரத்தம்’, என்றார்.

ஒரு ஆழமான உரையாடலின் போது மொரார்ஜி தேசாய் உடனான சந்திப்பை நினைவு கூர்ந்தார் . முன்னாள் பிரதமர் தலாய் லாமாவிடம் இந்து மதமும் புத்த மதமும் ஒரே மரத்தின் இரு கிளைகள் என குறிப்பிட்டாராம். ” ஆனால் நான் பணிவுடன் மொரார்ஜி தேசாயின் கூற்றை திருத்தினேன். நான் அவரிடம் சொன்னேன், நீங்கள் மரம் நாங்கள் கிளை.” இதை அவர் என்னிடம் சொன்னார்.

அவரது மனிதநேயம், இந்திய ஆன்மீகத்தின் மீது அவருக்குள்ள ஆழ்ந்த மதிப்பும் மரியாதையும் அவரது ஆளுமையின் அடையாளமாக இருக்கின்றன.

‘ என்னை இந்தியாவின் மகன் என்றுதான் அடையாளப்படுத்த முடியும். என் உடம்பு இந்திய அரிசியாலும் பருப்புகளாலும் வளர்க்கப்பட்டது. என் மனமோ சிறப்பான இந்திய தத்துவ மரபால் செழிப்புற்றது. இந்தியா மனித குலத்துக்கு வழங்கிய இரண்டு மகத்தான கொடைகளான அஹிம்சை மற்றும் சமய பன்முகத்தன்மையின் தூதுவனாக நான் இருக்கிறேன்’, என்று குரலற்றவர்களின் குரல் என்ற நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலாய் லாமாவுக்கும் சீன அரசுக்குமான பேச்சு வார்த்தை 1979 ம் ஆண்டு இறுதியில் தொடங்கியது. சீன அதிபர் டெங் ஜிப்பியாங் தலாய் லாமா வின் சகோதரரான கைலோ தோன்டங் – ஐ பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ‘சுதந்திரத்தை தவிர வேறு எதைப் பற்றி வேண்டுமானாலும் பேச தயார்’ என்ற டெங்கின் செய்தியுடன் அவர் திரும்பி வந்தார்.

இரு தரப்புக்கும் இடையே பல சுற்று பேச்சு வார்த்தைகள் பல ஆண்டுகாலம் நடந்தன. 1988 ல் ஸ்ட்ரோஸ்பேர்க் (பிரான்ஸ்) ல் நடந்த ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய தலாய் லாமா, ‘சீன குடியரசின் அங்கமாக இருப்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் முழுமையான தன்னாட்சிக்கு உத்தரவாதம் வேண்டும்’, என்று வெளிப்படையாக குறிப்பிட்டார்.

அதுதான் இன்று வரை திபெத்தியர்களின் நிலைப்பாடாக இருக்கிறது. இரு தரப்புகள் இடையே பேச்சுவார்த்தை நடந்த போதிலும் ஒருவர் மற்றவரை நம்பாத நிலை அவர்களிடையே நிலவுவதால், எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இருக்கிறது.

திபெத்தின் அரசியல் விஷயம் தலாய் லாமா வுக்கும் சீன தலைமைக்கும் இடையே (இருதரப்பால்) தீர்க்கப்பட வேண்டியது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு.

வயதால் தலாய் லாமா மூப்படைந்து வருவதால் அவருக்கு அடுத்து யார் என்ற கேள்வி விவாதமாகி உள்ளது. இது தொடர்பாக அவர் அண்மையில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 2011 செப்டம்பரில் நடந்த திபெத்திய சமய தலைவர்கள் மாநாட்டில் எடுத்த முடிவின்படி திபெத்திய மரபு பின்பற்றப்படும். அத்துடன் எதிர்கால தலாய்லாமாவை கண்டுபிடிக்கும் பொறுப்பு கோடன் போட்ராங் அறக்கட்டளைக்கு (தலாய்லாமாவின் அலுவலகம் ) தான் உண்டு, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன அரசு அதை ஏற்க மறுத்து தன்னுடைய மேற்பார்வையில் தான் அது நடக்க வேண்டும் என்று கூறியுள்ளது எதிர்பாராத விஷயம் அல்ல.

தலாய் லாமாவின் மறுபிறப்பு விஷயம் சீனாவுக்கும் திபெத்தியர்களுக்கும் இடையே முக்கிய மோதலாக இருக்கும் என்றாலும் ‘புதிய தலாய்லாமா சுதந்திர மண்ணில்தான் பிறப்பார்’ என்று அவருடைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயம் தான் மோதலுக்கு உண்மையான காரணம்.

தமிழில் – ரவிக்குமார்

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
(5.7.2025 இதழில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்)

திருச்செந்தூர் கும்பாபிஷேகம் நெல்லை வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்

railway news - 2026
#image_title

சென்னை – செங்கோட்டை இடையே நெல்லை, தென்காசி வழியாக திருச்செந்தூர் கும்பாபிஷேகம் விழாவையொட்டி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக
தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வரும் 06.07.25 ஞாயிற்றுக்கிழமை அன்று வண்டி எண் 06089 சென்னை எழும்பூர் – செங்கோட்டை இரவு 09.55 க்கு எழும்பூரில் புறப்பட்டு திங்கள் கிழமை காலை 11 30 க்கு செங்கோட்டையை சென்றடையும்.

மறு மார்க்கத்தில் 07.07.25 திங்கள் கிழமை அன்று வண்டி எண் 06090 செங்கோட்டை – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் செங்கோட்டையில் இரவு 07.45 க்கு புறப்பட்டு செவ்வாய் கிழமை காலை 09.05 க்கு செங்கோட்டையை சென்றடையும்.

தற்போது நடைமேடை நீளம் பற்றாக்குறை காரணமாக பாவூர்சத்திரம் கடையம் அம்பை கல்லிடை சேரன்மகாதேவியில் இந்த சிறப்பு ரயில் நின்று செல்லாது.

நெல்லை – தென்காசி ரயில் வழித்தட பயணிகள் நெல்லையில் இறங்கி அதன் பின்னால் 9. 45 மணிக்கு நெல்லையில் புறப்படும் நெல்லை செங்கோட்டை பயணிகள் ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம்

‘விஸ்வகுரு பாரதம்’ என்ற உயர் லட்சியம்!

hindu
ohm

சாந்தி சாந்தி சாந்தி:

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

சில காலமாக நம் தேசத்திலும், உலகத்திலும் நேர்ந்து வரும் விபத்துகள் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன. அகமதாபாத்தில் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம் திடீரென்று விபத்துக்குள்ளாகி நூற்றுக் கணக்கானவர்கள் ஒரு கணத்தில் எரிந்து சாம்பலான செய்தி இடி போல விழுந்து இதயத்தைத் துயரத்திற்குள்ளாக்கியது. அவர்கள் அனைவருக்கும் நற்கதி கிடைக்க வேண்டும் என்று பரமேஸ்வரனைப் பிரார்த்தனை செய்வோம்.

அது விபத்து அல்ல என்றும் நம் தேசத்தை கலவரத்திற்கு உள்ளாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பகை நாடுகளும், அவர்களுக்கு உதவும் நம் நாட்டு தேச துரோகிகளும் செய்த சதியின் ஒரு பகுதி என்றும் அறிஞர்கள் தெளிவாக்கி வருகிறார்கள். இதற்குச் சிறுது காலம் முன்பு பஹல்காம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு நம் தேசம் திருப்பியடித்த ‘சிந்தூர பதில்’ உலகையே வியப்பில் ஆழ்த்தியது. பாரததேசம் விரைவாக முன்னேற்றப் பாதையில் பயணித்து, முன்னேறிய நாடுகளின் சார்போ, தேவையோ இல்லாமல் தன்னாட்சி அதிகாரத்தோடு உயர்ந்த நிலையைப் பெறும் என்பது உறுதியாகி உள்ளது. இதனைச் சகிக்க இயலாமல், ஒவ்வொரு நிலையிலும் தென்படும் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், நிகழும் புதுப் புது தாக்குதல்களைப் பார்க்கிறோம்.

மறுபுறம், சில தேசங்களின் இடையே கடுமையான முறையில் போர் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில ஜோதிட வல்லுனர்களும் இறையியலாளர்களும் தேசத்திலும் உலகத்திலும் இதுபோல் இன்னும் பல விபத்துகள் நடக்கலாம் என்றும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் வலியுறுத்துகிறார்கள். மக்களிடம் பரபரப்பை தூண்டும் செய்திகளைப் பரப்பி பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

இவ்வாறு எதிர்காலத்தைக் கணித்துக் கூறுபவர்களில் உண்மையான, நிர்மலமான உள்ளம் கொண்ட சில அறிஞர்களும் மகாத்மாக்களும் இருகிறார்கள் என்பதில் ஐயமில்லை. அவர்கள் எச்சரிக்கை அளிக்கையில், ‘கவனமாக இருக்க வேண்டும் என்றும், தர்மத்தைக் கடைப்பிடித்து உலக நலனுக்காக தெய்வ பிரார்த்தனையில் ஈடுபடுமாறும்’ சிறந்த செய்தியை அளிக்கிறார்கள்.

அனைத்தையும் கவனித்த பின், இந்தச் சூழ்நிலையில் நம்முடைய கடமை என்ன என்று சிந்தித்துப் பார்க்கும் போது, நம் சாஸ்திரங்கள் இப்படிப்பட்ட விபரீதங்களுக்குப் பரிகாரமாக நாம் செய்ய வேண்டிய உபாயங்களைக் குறிப்பிட்டுள்ளதை அறிய முடிகிறது.

தேவி மகாத்மியத்தில் (சண்டி/சப்தசதி) இத்தகு சூழலுக்கான சுலோகங்கள் உள்ளன.

தேவி, பிரபன்னார்த்தி ஹரே, ப்ரஸீத |
ப்ரஸீத விஸ்வேஸ்வரி பாஹி விஸ்வம் ||
சர்வ பாதா ப்ரஸமனம் த்ரைலோக்யஸ்யாகிலேஸ்வரி |
ஏமவேவ த்வயா கார்யமஸ்மத்வைரி விநாஸனம்
||

இப்படிப்பட்ட அற்புதமான கருத்துகள், மகிமை பொருந்திய நூல்களில் உள்ளன. மூவுலகங்களிலும் இப்படிப்பட்ட பேரிடர்களோ, பேரழிவுகளோ நடவாமல் காக்கும்படியும், நெருப்பு, காற்று, நீர் இவற்றால் விபத்துகள் ஏற்படாமல் பாதுக்காக்கும்படியும் உலக நலனை விரும்பி, லோக க்ஷேமத்தை நிலைகுலையச் செய்யும் அசுரர்கள் அழிக்கப்பட வேண்டும் என்றும் ரிஷி, முனிவர்களும், தேவதைகளும் பராசக்தியை பிரார்த்தனை செய்யும் சுலோகங்கள் இவற்றில் உள்ளன. இந்த நூலை முழுவதுமாகவோ அல்லது சப்தஸ்லோகி போன்ற முக்கியமான சுலோகங்களையோ நித்தியம் பாராயணம் செய்ய வேண்டும். ஸ்ரீ துர்காதேவியின் நாமங்களை நிரந்தரம் படிக்க வேண்டும். தேச நலனை விரும்பிச் செய்ய முடிந்தவர்கள் சாஸ்த்ர விதிப்படி தேவி ஹோமங்களை நடத்த வேண்டும்.

விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திரம், புருஷ சூக்தம், ஸ்ரீ சூக்தம் ஆகியவற்றின் பாராயணம், மகாசுதர்சன ஹோமங்கள் போன்றவை நடைபெற வேண்டும். அத்தனை பெரிய விதிகளைச் செய்ய இயலாதவர்கள் இறை நாமங்களை நிரந்தரம் நினைக்க வேண்டும். ஸ்ரீ ராம நாமம், ஒரு மகா ரக்ஷா கவசமாக வேலை செய்யும். முடிந்தவரை ஒவ்வொருவரும் இந்த ‘லிகித’ ஜபத்தைத் தொடர்ச்சியாக எழுதி வர வேண்டும்.

ருத்ராபிஷேகம், ருத்ர ஹோமங்கள் சாஸ்திர சம்பிரதாய முறையில் நடக்க வேண்டும். அதேபோல், சிவ நாமங்களை ஜபம் செய்து, பக்தியோடு இயற்கையின் நலனுக்கும் தேசத்தின் சௌபாக்கியத்திற்கும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு ஆலயத்திலும் தேச நலனுக்காகவும், சகல மானுட ரட்சணைக்காகவும் பிரத்தியேக பூஜைகள் நடத்த வேண்டும்.

‘தெய்வ பலம்’ இல்லாவிட்டால் எதையும் சாதிக்க முடியாது. சமுதாய பாவங்களின் பலனாக நெருக்கடிகளும், ஆபத்துக்களும் தலைவிரித்து ஆடுகின்றன. ஆஸ்திகர்கள் அனைவரும் தரம்த்தைக் கடைப்படித்து, தூய்மையாக இருந்து, பரமாத்மாவை பிரார்த்தனை செய்தால் இவற்றின் கடுமையைக் குறைப்பது சாத்தியமாகும்.

எது எப்படியானாலும், இறுதி வெற்றி பாரத தேசத்துடையதே. நம் தேசம் மிக உயாரந்த நிலையில் ‘விஸ்வகுரு’ என்ற ஸ்தானத்தை திடமாக அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்குள் நிலமை மோசமாகாமல் நாமனைவரும் நம் பங்குப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.

(தலையங்கம், ருஷிபீடம் மாத இதழ், ஜூலை, 2025)

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் (53): குண்டதாரோபாஸ்தி ந்யாய:

samskrita nyaya - 2026

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் – 53

தெலுங்கில்: பி.எஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

  1. குண்டதாரோபாஸ்தி ந்யாய:

குண்டதாரா- ஒரு யக்ஷனின் பெயர் (குட்டிச் சாத்தான்)
உபாஸ்தி – உபாசனை

பூவுலகில் மனிதர்கள் இருப்பது போல, பிரமமண்டமான விஸ்வத்தில் பல உலகங்களில் யட்சர், கின்னரர், கிம்புருஷர், வித்தியாதரர் போன்ற திவ்ய மனிதர்கள் இருப்பார்கள். இவர்கள் அனைவரும் மனித இனத்தை விட மேம்பட்ட சக்திகளை பெற்றிருப்பார்கள்.

இவர்களுள் குண்டதாரன், இந்தீவராக்ஷன், கண்டாகர்ணன், மணி பத்ரகன், ஜ்ரும்பகன் போன்ற யட்சர்கள் பிரசித்தமானவர்கள். இவர்கள் எளிதில் மகிழ்ச்சியடைவார்கள். ஆர்த்தி, அர்த்தார்த்தி, ஜிஞ்ஜாசி ஆகியோர் குருமார்களின் மூலம் யக்ஷ மந்திரத்தை பெறுவார்கள். தவத்தின் பலனாலும், தாந்திரிக விதானங்கள் மூலமும் இந்த யக்ஷ தேவதைகளை சந்தோஷப்படுத்தி, வசம் செய்து கொண்டு, தம் கோரிக்கைகளை தீர்த்துக் கொள்வதோடு பரோபகாரமும் செய்துவரும் சமூகநல விரும்பிகள் நிகழ்காலத்திலும் இருக்கிறார்கள்.

இந்த நியாயத்தில் குண்டதாரன் என்ற யட்சனின் சிறப்பு கூறப்படுகிறது. ஒரு மனிதன் குரு உபதேசத்தின் மூலம் பெற்ற யக்ஷ மந்திரத்தை சாஸ்த்திரத்தின்படி ஜபம் செய்து குண்டதாரன் என்ற யட்சனை மகிழ்வுரச் செய்து கொண்டான் என்றால், அந்த யக்ஷன் தன் எல்லைக்குட்பட்டு சின்னச் சின்ன வேலைகளைச் செய்து தருவான். தன் பக்தன் கேட்ட பெரிய கோரிக்கைகளைத் தன்னை விட பெரிய தேவதைகளின் உதவியோடு நிறைவேற்றுவான். மொத்ததத்தில் குண்டதாரன் என்ற யக்ஷன் நம் வேலைகைளை முழுவதுமாக வெற்றி பெறச் செய்வான். இந்த நியாயம் கூறும் செய்தி இதுவே.

நம் நண்பர்களுள் குண்டதாரன் போன்ற பலர் இருப்பதை நாம் காண முடியும். இது பலருக்கும் அனுபவமே. பிறருக்கு உபகாரம் செய்வதற்கும், தன் உயிர் நண்பர்களுக்கு உதவுவதற்கும், திறமையான நண்பரைக் கொண்டோ, பெரிய அதிகாரிகளின் உதவி பெற்றோ, வேலையை முடித்துக் கொடுப்பார்கள். இதுவே ‘குண்டதாரோபாஸ்தி’ நியாயத்திற்கு எடுத்துக்காட்டு.

பிறருக்கு உதவி செய்யும் நல்ல மனம் கொண்டிருக்க வேண்டுமென்றும், தன்னிடம் உதவி வேண்டியவர்களையும், தன் மீது கௌரவ மரியாதை கொண்டவர்களையும் ஆதரிக்க வேண்டும் என்றும், தன்னால் இயலாவிட்டால் தன் நண்பர்களின் மூலமோ, சமர்த்தர்களின் மூலமோ அந்த வேலைகளைச் செய்து தரும்படியும் ‘குண்டதார நியாயம்’ நமக்கு உபதேசிக்கிறது.

‘மனமிருந்தால் மார்க்கமுண்டு’ “Where there is a will, there is a way” போன்ற கூற்றுகள் இதையே தெரிவிக்கின்றன. உதவி செய்வதாக வாக்களித்தால் அதை நிறைவேற்ற வேண்டும் என்ற உபதேசத்தையும் இந்த நியாயம் தெரிவிக்கிறது. நல்ல மனிதர்களின் இயல்பை பற்றிக் கூறுகையில் பர்த்ருஹரி, பிறருக்கு உதவும் குணத்தை வர்ணிக்கிறார். கேட்டாலும் கேட்காவிட்டாலும் பரோபகாரத்தில் ஈடுபடவேண்டும் என்பது சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், இயற்கை போன்றவை கற்பிக்கும் பாடம்.

மேகம், கோடிக்கணக்கான மக்கள் அனைவருக்கும் வேறுபாடின்றி தண்ணீரைப் பொழிகிறது. சமுத்திரம் சூரியனின் உதவியோடு உலகிற்கு நீரை அளித்தாலும், மேகம் நீரளிக்கும் கொடையாளியாகப் பெயர் 8பெறுகிறான் என்று சமத்காரமாக சுபாஷிகம் பாடினார் கவி. ‘குண்டதார’ நியாயத்திற்கு இதுவும் ஒரு உதாரணம்.

ரகுவம்சத்தில் ஒரு காட்சி. ‘விஸ்வஜித்’ என்ற யாகம் செய்த ரகுமஹாராஜா தன்னிடமிருந்த செல்வமனைத்தையும் தானம் செய்துவிட்டார். செல்வமற்று இருந்த ரகு மகாராஜாவிடம் வந்த ‘பரதந்து’ ரிஷியின் சீடரான ‘கௌத்ச’ ரிஷி செல்வத்தை யாசித்தார். தன்னை வரவேற்று, மண் பாத்திரத்தால் அர்க்கியம், பாத்தியம் அளித்த ரகுமஹாராஜாவின் பொருளதார நிலையைக் கவனித்த கௌத்ச ரிஷி, ரகு மஹாரஜாவால் தன்னுடைய கோரிக்கையைத் தீர்க்க முடியாதென்று எண்ணி, வேறு கொடையாளியிடம் செல்ல நினைத்தார். ஆனால், ரகுமஹாராஜா, கௌத்சரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக குபேரன் மீது போர் தொடுக்க முடிவு செய்தார். ரதத்தில் அஸ்திரங்களையும் சஸ்திரங்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்த போது ஆச்சர்யமாக அரசாங்கக் கருவூலத்தில் பொன் மழை பொழிந்தது.

‘பரதந்த’ருக்குக் கொடுக்க வேண்டிய குரு தட்சணை ‘கௌத்ச’ருக்குக் கிடைத்தது. “பூமியானது விருப்பமான திரவியங்களை அளிப்பது அதன் இயல்பு. ஆனால் ரகு மகாராஜா, உனக்கு ஆகாயம் கூட விரும்பியவற்றைப் பொழிந்தது” என்று கௌத்சர் ரகுமஹாராஜாவைப் புகழ்ந்து ஆசீர்வதித்தார். தன்னைச் சரணடைந்தவருக்கு எவ்விதத்திலாவது உதவ எண்ணிய ரகுமஹாராஜா இந்த ‘குண்டதாரோபாஸ்தி’ நியாயத்திற்கு உதாரணம்.

புராண காலத்தில் அற்புதமான மருத்துவ முறைகள் இருந்தன. தொடுதல் மூலமும், எண்ண அலைகள் மூலமும் நோயைக் குணப்படுத்தும் செயல்முறை, மந்திரங்களின் மூலம் தேள், பாம்பு கடித்த விஷத்தை நீங்கும் செயல்முறை போன்றவை பரோபகார சிகிச்சை முறைகள். சித்தர்களும் முனிவர்களும் தம்முடைய தவ சக்தியால் சிகிச்சை செய்த பரோபகார செயல்முறைகள் பல இருந்தன. உலக அளவில் புகழ்பெற்ற ‘ரேக்கி’ சிகிச்சை முறையும் இதற்கு எடுத்துக்காட்டு.

தன்னிடம் பிரார்த்தனை செய்த பக்தனுக்கு வரமளிக்கும் சக்தி தனக்குப் போதாததால் ‘குண்டதாரன்’ என்ற யக்ஷன் தன்னை விட சக்தி அதிகம் கொண்ட தேவதைகளைக் கொண்டு வரமளிக்கச் செய்வது இந்த நியாயத்தின் சிறுப்பு. நல்ல மனிதர்கள் தமக்கு சக்தி இல்லாவிட்டாலும் பிறரைக் கேட்டாவது தேவையானவருக்கு உதவி புரிவர்.

தொற்றுநோய்கள், இயற்கைப் பேரிடர், விபத்துகள் போன்றவை நேரும் போது பாதிக்கப்பட்டவருக்கு உதவும் சேவாபாரதி, ராமகிருஷ்ண மிஷின் போன்ற அமைப்புகள் பல உள்ளன. அவர்கள் செய்யும் சுயநலமற்ற சேவைகளை உற்சாகப்படுத்தி வள்ளல்கள் பொருளாதார உதவி புரிகிறார்கள். அந்த செல்வத்தைப் பெற்று அந்த அமைப்புகள் சமூக சேவை செய்து வருகின்றன. இயல்பாகவே உலக நன்மைக்காக உதவும் அமைப்புகளும், வள்ளல்களும் குபேரனைப் போன்றவர்கள்.

“நீ கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் கொடுப்பவர்களைக் காட்டு” என்றொரு முதுமொழி உள்ளது. “பரோபகரமே உயர்ந்த நிலை. சுயநலம் அல்ல. பிறருக்காகவே வாழ வேண்டும்” போன்ற சிறந்த வாக்கியங்களுக்கு ஊக்கம் இந்த குண்டதாரனின் கதை.

ஜனநாயக ஆட்சியா, குடும்ப ஆட்சியா?

emergency period - 2026

ஜனநாயக ஆட்சியா குடும்ப ஆட்சியா?

  • தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்

நெருக்கடி நிலை அறிவிப்பு வெறும் நிர்வாக தவறு அல்ல. மாறாக ஜனநாயக ஆட்சியை விட குடும்ப ஆட்சி உயர்வானதென்று நிறுவுவது ஆகும். காங்கிரஸ் இன்றும் அதை தொடர்கிறது.

இந்திய தேர்தல் ஆணையம் பக்கசாய்வுடன் செயல்படுவதாக எந்த அடிப்படை ஆதாரமுமின்றி இன்று குற்றம் சாட்டும் காங்கிரஸ் கட்சி தான் ஆளும் தெலுங்கானா , கர்நாடகாவில் செய்தியாளர்களையும் சமூக ஊடகவியலாளர்களையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளது. சில முக்கிய செய்தியாளர்களை பகிஷ்கரிக்கிறது . சிலரை கைது செய்துள்ளது. இவையெல்லாம் வரலாற்றில் அவர்கள் இழைத்த குற்றங்களால் எந்த விதமான குற்ற உணர்வும் அவர்களுக்கு ஏற்படவில்லை என்று தெரிவிப்பதும் மறுப்பதும் மட்டுமன்றி அரசமைப்பு சட்டத்தை மதிக்காமையையும் காட்டுகிறது. அவர்கள் மதிப்பு காட்டுவது உயர்ந்த மாண்புகளின் மீது அவர்களுக்கு இருக்கும் மரியாதை காட்டுவதில்லை. மாறாக அவர்களது நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே மதிப்பார்கள் என்பதை காட்டுகிறது.

வென்றால் சரி, தோற்றால் ‘மேட்ச் பிக்சிங்’

தெலுங்கானாவிலும் கர்நாடகாவிலும் காங்கிரஸ் வெற்றி பெறும்போது தேர்தல் ஆணையம் சரியாக செயல்படுகிறது. மகாராஷ்டிராத்திலும் அரியானாவிலும் தோற்கும் போது தேர்தல் ஆணையம் மேட்ச் பிக்சிங் செய்கிறது என்று குற்றம் சாட்டுவது.

குறுக்கு வழியில்

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் இருண்ட கால வாரிசு என்பதிலிருந்து தப்ப முடியாது. 356 சட்டப்பிரிவை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது அவர்களுக்கு சட்ட அரசமைப்பு சட்டத்தின் மீதுள்ள வெறுப்பையே காட்டுகிறது. குறுக்கு வழியில் அதிகாரத்தை கைப்பற்றும் வெறியை காட்டுகிறது.

காங்கிரஸூம் 370 வது சட்டப்பிரிவும்

அம்பேத்கர் இயற்றிய அரசமைப்பு சட்டத்தை ஜம்மு காஷ்மீரில் பல பத்தாண்டுகள் நடைமுறைப்படுத்தப்பட முடியாமல் தடுத்த , மற்றும் எஸ் சி , எஸ் டி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த விடாமல் தடுத்த 370 மற்றும் 35 ஏ சட்டப்பிரிவை நீக்கியதை காங்கிரஸ்காரர்கள் ஏன் எதிர்த்தார்கள் ?

இட ஒதுக்கீடு மத அடிப்படையிலா

அரசமைப்பு சட்டத்திற்கு முற்றிலும் எதிரான மதரீதியான இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கொடுக்க தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களில் துடிப்பது ஏன் ? பாஜக அரசமைப்பு சட்டத்தை மாற்ற முனைவதாக ராகுல் குற்றம் சாட்டுகிறார். ஆனால், உண்மையில், அவரது குடும்பமும் கட்சியும் தான் அதை மிதிக்கின்றனர்.

இந்திய ஜனநாயகத்தை நசுக்கிய நெருக்கடி கால அறிவிப்புதான் உண்மையில் மேட்ச் பிக்சிங். அது விதிவிலக்காக இல்லாமல் , காங்கிரஸ் ஆட்சி முறையை வரையறை செய்வதாக பல பத்தாண்டுகளாக நீடித்து வருகிறது.

வருத்தமல்ல நியாயப்படுத்துவது

காங்கிரஸ் அந்த இருண்ட காலம் பற்றி உண்மையில் வருத்தம் படுவதாக தெரியவில்லை. மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கொடுமைக்குள்ளானவர்களுக்கு மாத ஓய்வுதியும் வழங்க பாஜக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. அந்த அரசு ஆணையை பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் அரசு திரும்ப பெற்றுக் கொண்டு, தியாகிகளை ஓய்வூதியத்தை நிறுத்தியது. அதன் மூலம் இருண்ட நெருக்கடி காலகட்டத்தை நியாயப்படுத்தியது.

கண்ணாடியில் காங்கிரஸ் முகம்

அரசமைப்பு சட்ட பாதுகாப்பு தினத்தின் பொன் விழா ஆண்டு அரசமைப்பை பாதுகாக்க வேண்டும் என்று ஒவ்வொரு குடிமகனுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த மட்டுமல்லாமல் , அதை கொலை செய்துவிட்டு இன்று அதை காப்பதாக நாடகமாடுபவர்களுக்கு உண்மையை எடுத்து அவர்கள் முகத்தெதிரே காட்டுவதாகவும் அமையட்டும்.

(இந்தியன் எக்ஸ்பிரஸ் 1-7-25ல் வெளியானதன் தமிழாக்கம்)

ஜனநாயகத்தைப் பற்றி காங்கிரஸ் பேசலாமா?

emergency period - 2026

சாத்தான் வேதம் ஓதலாமா?

ஷெசாத் பூனாவல்லா

தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்

ஜூன் 25 தேதியை அரசமைப்பு பாதுகாப்பு தினமாக நரேந்திர மோடி அரசு அறிவித்தது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் 25 ஆம் தேதியன்று அப்போதைய பிரதமர் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். அது நம் நாட்டின் ஜனநாயக வரலாற்றில் கருப்பு தினமாகும்.

நாடகம்

இந்திரா காந்தி அரசமைப்பு சாசனத்தை அவமதித்தார். எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெறித்தார். சர்வாதிகார இருளில் இந்தியாவை மூழ்கடித்தார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அரசு அமைப்பை அடித்து நொறுக்கிய கட்சி இன்று அரசமைப்பை பாதுகாப்ப போவதாக வேடமிடுகிறது.

தலைச்சுற்றல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் இந்த நாளிதழில் (மேட்ச் பிக்சிங் – மகாராஷ்டிரா . இந்திய எக்ஸ்பிரஸ் , ஜூன் 7 தேதி) எழுதிய கட்டுரையில் இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநில தேர்தலின் போது மேட்ச் பிக்சிங்கில் (தேர்தல் முடிவை முன்கூட்டியே தீர்மானித்தல்) ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். அவரது பிற்போக்குதனம் தலை சுற்ற வைப்பதாக இருக்கிறது.

ஆன்மாவை நசுக்கியவர்கள்

தற்போதுள்ள ஜனநாயக வழிமுறைகளின் மீது எந்தவிதமான ஆதார மும் இன்றி குற்றம் சாட்டும் ராகுல் காந்தி , தன் சொந்த குடும்பம் மற்றும் குடும்பப் கட்சி நெருக்கடி நிலையின் போது ஜனநாயகத்தின் ஆன்மாவை நெரித்து கொன்றதை கருத்தில் கொள்ளாமல் வசதியாக மறந்துவிட்டார்.அரசமைப்பின் அடிப்படை பண்புகளின் மீது நடந்த கொடூர தாக்குதல் நெருக்கடி நிலை அறிவிப்பு. அரசமைப்பு உறுதி கூறும் ஜனநாயக குடியரசு என்பதை இந்திரா காந்தி ஒழித்த கட்டினார். அவரது வார்த்தைகள் சட்டமாகின. அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன.

நீதியின் வாய் பூட்டப் பட்டது

கேசவானந்த பாரதி வழக்கின் மூலம் நீதித்துறை நிலைநாட்டிய அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பு நாடாளுமன்றத் தீர்மானங்கள் மூலம் பொருளற்றுப் போகும்படி செய்யப்பட்டன. இந்திராவின் சொல் சட்டமானது.

42 ஆவது சட்ட திருத்தம் மூலமாக அரசு நிர்வாகம் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை என்றானது. நீதிமன்றத்தின் அதிகாரம் அலட்சியப் படுத்தப்பட்டன. அரசு நிர்வாகம் நீதிமன்றத்துக்கு பதில் அளிக்க தேவையில்லை என்றானது.

ஊடக அடக்குமுறை

356 சட்ட பிரிவை பயன்படுத்தி மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. பணி மூப்பு அடிப்படையில் என்றில்லாமல் தன் துதிபாடுகளை உயர்மட்ட நீதிபதிகளாக நியமித்து நீதித்துறையின் சுதந்திர முடக்கப்பட்டது. ஊடகங்களின் வாய் கட்டப்பட்டது. செய்தித்தாள்கள் அரசின் புகழை பாடும்படி கட்டாயப் படுத்தப்பட்டன. மறுக்கும் செய்தியாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். செய்தி ஊடகங்களின் தணிக்கைக்கு எதிராக ராம்நாத் கோயங்காவின் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் தலையங்கம் பகுதியை காலியாக விட்டு (வெற்றிடமாக விட்டு) வெற்று தலையங்கத்தின் மூலம் தன் எதிர்ப்பை தெரிவித்தது.

காங்கிரஸ் செய்தது மேட்ச் பிக்சிங் அல்ல கொலை

மேற் சொன்னவை எல்லாம் மேட்ச் பிக்சிங் இல்லை மாறாக ஜனநாயக அமைப்புகளை கொலை செய்வதுதான் என்று ராகுல் காந்தி சொல்வாரா ? இந்திரா ஆட்சியின் வரம்பு மீறல் யாரையும் விட்டு வைக்கவில்லை. கலைஞர்களும் கவிஞர்களும் இலக்கியவாதிகளும் ஒடுக்கப்பட்டார்கள்.பிரபல பாடகர் கிஷோர் குமார் நெருக்கடி நிலையை ஆதரிக்க மறுப்பதற்காக அவரது பாடல்கள் அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனிலும் தடை செய்யப்பட்டன.

வேட்டையாடப்பட்டவர்கள்

சாதாரண மக்கள், குறிப்பாக முஸ்லிம்கள், சஞ்சய் காந்தியின் மக்கள் தொகை கட்டுப்பாட்டு இயக்கம் என்ற பெயரின் கட்டாய கருத்தடை செய்யப்பட்டனர் . அரசியல் எதிர்ப்பாளர்கள் வேட்டையாடப்பட்டனர். அரசியல் ஆர்வலர்கள், செய்தியாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் எந்த விசாரணையும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நெருக்கடி காலகட்டத்தில் சிறையில் இருந்த போது தனது தாயாரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள கூட அனுமதி மறுக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார்.

ஜெ பி இயக்கம்

காங்கிரசின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான இயக்கத்தை நடத்திய காந்திய சோஷலிஸ்டான ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்ற உயர்ந்த தலைவர்கள் குறிவைக்கப் பட்டனர் . ஜே பி இயக்கத்தில் முன்னணி தலைவர்களாக இருந்து காங்கிரஸ் ஆட்சிக்கு , கட்சிக்கு எதிராக செயல்பட்ட முலாயம் சிங் , லாலு பிரசாத் போன்ற சோசியலிஸ்ட் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். *

U டர்ன்

இந்த தலைவர்கள் காங்கிரஸின் சர்வாதிகாரத்துக்கு எதிராக செயல்பட்டார்கள். ஆனால் இன்று அந்த தலைவர்களும் அவர்களது கட்சிகளும் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துக்கொண்டு சொகுசாக இருப்பது ஒரு வரலாற்று சோகம் தான்.

துரோகம்

ஆயிரக்கணக்கானோர் எந்த விசாரணையும் இன்றி மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது நினைவாக லாலு பிரசாத் தன் மகளுக்கு மிசா என்று பெயரிட்டார். இன்று அப்படியே திரும்பி காங்கிரசுடன் கைகோத்திருப்பது தங்களது கொள்கைகளுக்கு மட்டுமல்ல இவர்கள் பேச்சைக் கேட்டு காங்கிரசின் அடக்கு முறையை எதிர்த்து தியாகம் செய்த எண்ணற்ற இந்தியர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

(இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்)

ஜூலையிலும் தடம் மாறும் செங்கோட்டை – மயிலாடுதுறை ரயில்..

மதுரை: மதுரைக் கோட்டத்தில் வாடிப்பட்டி – சோழவந்தான் இடையே நடைபெறும் பொறியியல் பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இன்றும் (ஜூலை 1), நாளையும் கோவை – நாகர்கோவில் ரயில் (16322) திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும்.

ஜூலை 4, 5, 7, 8, 9, 11, 12, 14, 15, 16, 30ல் செங்கோட்டை – மயிலாடுதுறை மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.

பயணிகள் வசதிக்காக புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.

செங்கோட்டையில் இருந்து ராஜபாளையம், விருதுநகர் வழியாக மதுரை வரை சிறப்பாக இயங்கி வந்த ரயில், மயிலாடுதுறை வரை நீட்டிப்பு செய்யப்பட்ட பிறகு இட நெருக்கடியால் பயணிகள் தவிக்கின்றனர். எனவே மயிலாடுதுறை வரை வேண்டாம், மதுரை வரையே போதும் என பயணிகள் கூறுகின்றனர்.

செங்கோட்டை- – விருதுநகர் அகல ரயில் பாதையாக்கப்பட்ட பின் 2004 முதல் இந்த வழித்தடத்தில் தினமும் 3 தடவை பயணிகள் ரயில் மதுரைக்கு இயக்கப்பட்டது. இதனால் திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்ட மக்கள் பயனடைந்து வந்தனர்.

2022 முதல் மயிலாடுதுறை – -திண்டுக்கல் ரயிலையும், செங்கோட்டை- – மதுரை ரயிலையும் இணைத்து செங்கோட்டை- – மயிலாடுதுறை ரயிலாக இயக்கினர். தென் மாவட்ட மக்கள் திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு ஒரே ரயிலில் செல்வதற்கு வசதியாக இருந்தது.

ஆனால் நீட்டிப்பு செய்யப்பட்ட பிறகு கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படாமல் 10 பெட்டிகளாக குறைத்து இயக்கினர். கடும் இட நெருக்கடியில் மக்கள் உயிரை பணயம் வைத்து படிகளில் தொங்கிக் கொண்டு பயணிக்கின்றனர்

சில மாதங்களாக இந்த ரயில் பராமரிப்பு பணி என்ற பெயரில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக அடிக்கடி வழித்தடம் மாற்றி இயக்கப்படுகிறது. தென் மாவட்ட பணிகள் மதுரை வந்து, செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

இதனால் முன்பு போல் தங்களுக்கு மதுரை வரையே பயணிகள் ரயில் போதும், மயிலாடுதுறைக்கு வேண்டாம்.

தற்போது செங்கோட்டையில் மதியம் 12:45 மணிக்கு புறப்பட்டு மாலை 4:00 மணிக்கு மதுரை வரும் ரயிலை மீண்டும் 5:15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு செங்கோட்டை சென்று திரும்பும் வகையில் இயக்க வேண்டும்.

மயிலாடுதுறையில் மதியம் 12:10 மணிக்கு புறப்படும் செங்கோட்டை ரயிலை, மதியம் 2:30 மணிக்கு புறப்பட்டு 7:30 மணிக்கு மதுரை வந்து பின் செங்கோட்டை வரை செல்லும் கூடுதல் ரயிலாக இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரதட்சிணைப் பேய்! மனதை உலுக்கும் ரிதன்யாவின் மரணம்!

write thoughts - 2026
#image_title

💔 மனதை உலுக்கியெடுக்கும் ரிதன்யாவின் வாழ்வும் மரணமும்…

ரிதன்யா என்பது மிக அழகான தனித்துவமான பெயர். விஜய் டிவி ‘புகழின்’ மகள் பெயரும் இது தான் ! இன்று நவீனமாக இருக்கும் பெயரை 27 வருடங்களுக்கு முன்பு 90 களில் ஒரு பெற்றோர் தனது குழந்தைக்கு வைத்துள்ளார்கள் என்பதே அவர்களது பேரன்பிற்கு சான்று.

நல்ல வசதியுடன் வளர்த்த தனது செல்ல மகளை, பெரிய இடத்தில் கட்டித்தர வேண்டும் என்று தான் எந்த தகப்பனும் நினைப்பான். அரசியல் பின்புலமிக்க பாரம்பரிய குடும்பம் ! மாப்பிள்ளைக்கு எந்த வித கெட்ட பழக்கமும் இல்லை, 20 நிமிடப் பயணத்தில் சென்று பார்த்து விடக் கூடிய தூரம். இதை விட என்ன வேண்டும் என்று தான் அவர் நினைத்திருப்பார். ஆகவே தான் சுமார் ஐந்து கோடி செலவில் ஊரே பார்த்து வியக்கும்படி திருமணத்தை நடத்தியுள்ளார் தந்தை ! வால்வோ காரா, தர்றேன் ! மாப்பிள்ளைக்கு பிசினஸ் வைத்து தர வேண்டுமா ! பண்ணிக்கலாம் சாமி ! என அனைத்திற்கும் ஆமோதித்துள்ளார்,

ரிதன்யாவின் திருமண வீடியோவை யூடியூபில் பார்த்தேன் ! இப்போது அது நீக்கப்பட்டிருக்கிறது. கோவிலில் மணமகள் கிளம்புவது முதல் பல இடங்களில் ரிதன்யாவின் கண்கள் தந்தையைத் தான் தேடுகிறது. ஆனால் அப்படியான பாசக்கார மகள் இன்று இல்லை. காரணம் ஒரு பொன் குஞ்சன்.

கொங்குப் பகுதியை பொறுத்த வரை ஆண் குழந்தை அதிகாரம், வாரிசு, உரிமை. — பெண் குழந்தை என்றால் பாசம், கௌரவம். ஆண் வாடையே படாமல் நல்லபடியாக மகளிர் பள்ளியில் படிக்க வைத்து, மகளிர் கல்லூரிக்கு அனுப்பி ஒரு நல்ல குடும்பத்தில் கொடுத்து விட்டால் கடமை முடிந்தது. “மேற்படிப்பு, வெளிநாடெல்லாம் மாப்பிளையோட சேர்ந்து போ கண்ணு” என்பது தான் எழுதப்படாத விதி.

கொங்கு பகுதியில் பல காதல்கள் “எங்க அய்யங்கிட்ட சொல்லிப் போடுவேன் பாத்துக்க ” என்ற ஒற்றை வரியில் முடித்து போகும். அப்படியே தொடர்ந்தாலும், சாதி, குலம், கூட்டம் எல்லாம் சரியாக இருக்கிறதா எனப் பார்த்த பிறகே காதல் மலரும். காரணம், எந்த சூழ்நிலையிலும் தன்னால் தன் தந்தை தலை குனிந்து விடக்கூடாது என யோசிக்கும் அப்பா செல்லங்கள் கொங்கு மகள்கள். சொத்தில் பத்துப் பைசா தரவில்லை எனினும் உரிமை வேண்டாம் என கையெளித்திடுவார்கள். கணவனே என்றாலும் அப்பாவிற்கு பிறகு தான் எவனும் !

ஆனால் ஆண் குழந்தையை ஓரளவிற்கு வசதி உள்ள குடும்பங்கள் கூட பொன் குஞ்சனாய் தான் வளர்ப்பார்கள். தாத்தா, அப்பா சொத்தில் வளர்ந்து, கல்யாணமண்டபம், வட்டிக்கு விடுதல், வாடகை வாங்குதல், விதம் விதமான ஸ்கேம்களில் சிக்கி ஏமாறுதல் தான் இந்த பொன் குஞ்சன்களின் வேலை. ஏழு தலைமுறைக்கு சொத்து இருப்பதால் மறந்தும் வேலைக்கு செல்ல மாட்டார்கள்.

தோல்வி, காதல், சண்டை, சமஉரிமை, ஏமாற்றம், புத்தகம், காத்திருத்தல், விட்டுக்கொடுத்தல் என எந்த அடிப்படை அனுபவமும் இருக்காது. அம்மா திட்டினாலே கோபித்துக் கொள்ளும் அமுல் பேபிகள். அம்மச்சிகளின் சின்ன ஜமீன்கள். வீட்டிலேயே பிரசவம், மூலிகைப் பண்ணை, லில்லிபுட் தேடுதல், பாரம்பரிய உணவு, இயற்கை வைத்தியம், திருமணமான மூன்று மாதத்தில் கருத்தரிக்க வைத்து விட வேண்டும் என இவர்களது எண்ண ஓட்டமே தூர்தர்சன் லெவலில் இருக்கும். 24 மணி நேரமும் வீட்டிலேயே இருக்கும் இவர்களுக்கு சமைத்துப் போடுதல், இல்லறத்தை இன்பமயமாக்குதல் தான் இவர்களுக்கு வாக்கப்படும் பெண்களின் நிலை.

கவினுக்கு மாத வாடகை மட்டும் 20 லட்சம் வருகிறது. திருமணமான மூன்றாவது வாரமே சிக்கல் வருகிறது, ரிதன்யா அப்பா வீட்டிற்கு வந்து, கவினின் அம்மாவை அழைத்துப் பேசியிருக்கிறார். எம்புள்ளையா இப்படி என பொய்யாய் அதிர்ந்து ரிதன்யாவை அழைத்து சென்றிருக்கிருக்கிறார். உன் பாதுகாப்புக்கு தான் என சொல்லி வீட்டின் கேட்டை பூட்டி ரிதன்யாவை உள்ளே அடைத்திருக்கிறார்கள்.

இதில் நாம் கவனிக்க வேண்டியவை.

1) எவ்வளவு வசதி இருந்தாலும் , உங்கள் மகன் மற்றும் மகளை கல்லூரிப் படிப்பு முடிந்ததும் ஒரு சில வருடங்களாவது வெளியூர்களுக்கு வேலைக்கு அனுப்புங்கள். புதிய ஊர், வேலை, நண்பர்கள் என கிடைக்கும் அனுபவம் அவர்கள் மனதை திடமாக்கும், அறிவை விசாலமாக்கும்.

2) வாழ்வின் எந்த சூழ்நிலையிலும், என்ன தவறு செய்திருந்தாலும் நீ எங்களிடம் வரலாம், ‘நாங்கள் இருக்கிறோம்’ என்ற நம்பிக்கையை தொடர்ந்து தாருங்கள்.

3) லட்சத்தில் பீஸ் கட்டினாலும், நீ பெயில் ஆகும் வாய்ப்பு இருக்கிறது, கோடியில் திருமணம் செய்தாலும் அது முறியும் வாய்ப்பும் இருக்கிறது, ஆனால் இது முடிவல்ல ! எதற்கும் ஒரு மாற்று உண்டு என்பதை சொல்லுங்கள்.

4) ஒரு காதல், ஒருவனுக்கு ஒருத்தி, நூறு மார்க், தங்கமான பிள்ளை, ஒழுக்கமான வளர்ப்பு என சம்பிரதாயங்கள் அனைத்தும் போலி, நீயும் உலகத்தில் உனது இருப்பு மட்டுமே நிஜம் ! எதுவும் கடந்து போகும், எல்லாவற்றையும் கடந்தும் நீ வாழலாம் என்ற திடம் தாருங்கள்.

5)மகன் என்றால் உழைப்பின் அருமை நிச்சயம் போதிக்கப்பட வேண்டும் ! பிறரிடம் கை கட்டி நின்று வேலை நுணுக்கம் பழகிட வேண்டும் ! வரிசையில் நின்று வாங்கத் தெரிய வேண்டும். வசதியும் திறமையும் வேறு வேறு ! இந்த உலகில் இருக்கும் ஏதோ ஒரு சிறிய தேவையாவது உனது திறமை சரி செய்ய வேண்டும், அதுவே மனித இருப்பின் அடிப்படைகளில் ஒன்று என்பதை சொல்லுங்கள்.

6) மனைவியே என்றாலும் பெண்ணின் விருப்பம் இன்றி தொடக்கூடாது என்பதை மண்டையில் உரைக்கும் படி சொல்லி வளருங்கள்.

7) திருமணத்திற்கு பிறகு படிப்பு, வேலை, சுயதொழில் என பெண்ணின் விருப்பம் எது என்றாலும் அதை நிறைவேற்றி தருவது தான் ஆணின் கம்பீரம் என சொல்லுங்கள்.

8 ) மகளோ, மனைவியோ பெண்ணை நம்புங்கள், தனியான பயணங்களை அனுமதியுங்கள், பெண்ணிற்கும் சிறகுகள் உண்டு, சார்ந்திருக்கும் வரை அது விரியாது. சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் பொழுது தான் அதன் பயணம் துவங்கும், எங்கு பறந்தாலும் அது கூடு வந்தே சேரும் எனப் போதியுங்கள்.

பிறகு ஒரு முக்கிய விஷயம்,

ஒருவேளை திருமண வயதில், உங்கள் வீட்டில் ஒரு பொன் குஞ்சனை மகனாக வளர்ந்திருந்தால், அவனுக்கு தேவை திருமணம் அல்ல, ஒரு வாழ்நாள் ஆயா ! மீறி திருமணம் செய்து வைத்தால் உங்களையும் சிறைக்கும் அழைத்து செல்லும் அற்புதங்களை நிகழ்த்துவார்கள் இந்த பொன் குஞ்சன்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

  • ஹரிஹரசுதன் தங்கவேலு, எழுத்தாளர்