Home Blog Page 89

பயணிகள் வசதிக்காக சிலம்பு ரயிலில் கூடுதல் பெட்டி!

railway news - 2026
#image_title

தாம்பரம் – செங்கோட்டை, தாம்பரம் – நாகர்கோவில் விரைவு ரயில்களில் ஏற்கனவே கோடை விடுமுறை கூட்டத்தை கருத்தில் கொண்டு 6பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு பெட்டி இணைக்கப்பட்டு, தலா ஏழு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு நாளை ஜூன் 20முதல் வரும் ஆக 28 வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது வாரம் மூன்று முறை இயங்கும் சிலம்பு அதிவு விரைவு ரயிலை தினசரி ரயிலாக இயக்கவும் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்

தென்மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் ரயில்களில் அதிக கூட்ட நெரிசல் இருந்து வருகிறது. இதனை குறைக்கும் வகையில் தெற்கு ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பயணிகளின் வசதிக்காக தாம்பரம் – செங்கோட்டை இரு மார்க்கத்திலும் சிலம்பு (20681/20682) மற்றும் தாம்பரம் – நாகர்கோவில் இரு மார்க்கத்திலும் (22657/22658) ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

இதன்படி இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் இந்த வசதி சிலம்பு ரயிலில் தாம்பரத்தில் இருந்து ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 27 வரையும், செங்கோட்டையில் இருந்து ஜூன் 21 முதல் ஆகஸ்ட் 28 வரையும் செயல்பாட்டில் இருக்கும்.

இதேபோல நாகர்கோவில் ரயிலில் தாம்பரத்தில் இருந்து ஜூன் 18 முதல் ஆகஸ்ட் 27 வரையும் நாகர்கோவிலில் இருந்து ஜூன் 19 முதல் ஆகஸ்ட் 28 வரையும் செயல்பாட்டில் இருக்கும்.

இதன் மூலம் இந்த ரயில்கள் தற்காலிகமாக ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு மற்றும் இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டிகள் ஆகியவற்றுடன் இயக்கப்படும்.சென்ட்ரல் – திருவனந்தபுரம் விரைவு ரயிலில், இரண்டாம் வகுப்பில் ஒரு ‘ஏசி’ பெட்டி, வரும் 27 முதல் ஆகஸ்ட் 27 வரை இணைத்து இயக்கப்படுகிறது

சென்ட்ரல் – ஆலப்புழா விரைவு ரயிலில், இரண்டாம் வகுப்பில் ஒரு ‘ஏசி’ பெட்டி, வரும் 25 முதல் ஆக., 26 வரை இணைத்து இயக்கப்படும்.
என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது வாரம் மூன்று முறை இயங்கும் சிலம்பு அதிவு விரைவு ரயிலை தினசரி ரயிலாக இயக்கவும் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்

வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சி சிலை அமைக்க கோரிக்கை!

nellai desiya chinthanai peravai - 2026

வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவருக்கு நினைவுச் சின்னமாக சிலை வைக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது.

ஜூன் 17ம் தேதி, செவ்வாய்க்கிழமை மாலை, திருநெல்வேலி  வண்ணார்ப்பேட்டையில் உள்ள பாலபாக்யா அரங்கில் தேசிய சிந்தனைப் பேரவையின் நிகழ்ச்சி நடைபெற்றது. காலையில் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் சென்று, வாஞ்சி படத்துக்கு மரியாதை செய்து, அருகே உள்ள நினைவு மண்டபத்தில் வாஞ்சிக்கான புகழஞ்சலிக் கூட்டம் நடத்தப்பட்டது. 

தொடர்ந்து மாலையில் நெல்லை, வண்ணார்ப்பேட்டையில் படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமம் மற்றும் தேசிய சிந்தனைப் பேரவையின் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜூன் 17 வாஞ்சி நினைவு நாளில் வாஞ்சியைக் குறித்தும், ஆபரேஷன் சிந்தூரில் நம் ராணுவத்தினரின் புத்திசாலித்தனமான செயல்பாடுகளுக்கு பாராட்டும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 

பாளையங்கோட்டை தமிழ் முழக்கப் பேரவையின் தலைவர் சு.செல்லப்பா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பிரக்ஞா பிரவாஹ் தென்பாரத அமைப்பாளர் சு.விஸ்வநாதன் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கி, பாரத அரசின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். மூத்த பத்திரிகையாளர் செங்கோட்டை ஸ்ரீராம், சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன் குறித்து உலவும் அவதூறுகளுக்கு மறுப்பினைச் சொல்லி, வாஞ்சியின் தியாகத்தை நினைவு கூர்ந்தார். மேலும், தென்னகத்தில் உள்ள செங்கோட்டையில் ஏற்றப்படும் இந்த பாரத மாதாவின் சுதந்திரக் கொடி, விரைவில் வடக்கே உள்ள தில்லி செங்கோட்டையில் ஏறும் என்று பாரதமாதா சங்க உறுப்பினர்கள் மத்தியில் வாஞ்சி உரையாற்றியதைக் குறிப்பிட்டு, வாஞ்சியின் நினைவாக செங்கோட்டை முதல் தில்லி வரை வாஞ்சி எக்ஸ்பிரஸ் என்ற ரயில் சேவை ஏற்படுத்தப் பட வேண்டும் என்றும், செங்கோட்டை நகராட்சி பேருந்து நிலையத்துக்கு வாஞ்சி பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, நெல்லை ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் குறித்துக் குறிப்பிட்டு, நெல்லை மண்ணின் நாகரிகப் பழைமை கொண்டாடப்பட வேண்டும் என்ற தன் கருத்தைச் சொல்லி, ஆபரேஷன் சிந்தூர் வீரர்களுக்கு புகழ்மாலை சூட்டினார். கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன் தேசியமும் படைப்பாளர்களும் என்ற தலைப்பில் பேசினார். 

முன்னதாக, வாஞ்சியின் தம்பி மகன் கோ ஹரிஹர சுப்பிரமணியன், மற்றும் அவர் மகன் வாஞ்சி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வாஞ்சிநாதனின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். சமூக சேவைகர் பி.வெங்கட்ராமன் முன்னிலை வகிக்க, தேசிய சிந்தனைப் பேரவை தென் தமிழக அமைப்பாளர் வெங்கடாசலபதி நிகழ்ச்சியை தொகுத்துரைத்தார். நிகழ்ச்சியின் நோக்கத்தை எடுத்துரைத்து அறிமுக உரை நிகழ்த்திய தேசிய சிந்தனைப் பேரவை தமிழக அமைப்பாளர் வ.மு. முரளி, இக்கூட்டத்தின் தீர்மானங்களை வாசித்தார். நிகழ்ச்சியில் நெல்லை வாழ் படைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

படைவீரர்களைப் பாராட்டும் நெல்லை படைப்பாளர்கள் சங்கமம் நிகழ்ச்சியில் முக்கியமான இரு தீர்மானங்களுடன், நெல்லைக்கான ஒரு தீர்மானமாக, வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிக்கு நினைவுச் சிலை மத்திய அரசின் ரயில்வே துறை இடமளித்து அங்கே நிறுவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து நிறைவேற்றப்பட்டது. இது குறித்த விவரம்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் அனைவரும், ‘நெல்லை படைப்பாளர்கள் சங்கமம்’ என்ற பெயரில் 17.06.2025 அன்று நெல்லையில் கூடி, ஒருமித்த குரலில் வெளியிடும் பிரகடனம் இது…

தீர்மானம்- 1:  முப்படைகளுக்கு வீரவணக்கம்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடத்திய மனிதத்தன்மையற்ற துப்பாக்கிச்சூட்டில் சுற்றுலாவுக்கு வந்த 26 அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்டனர். அதையடுத்து, பயங்கரவாதிகளை பின்னணியில் இருந்து இயக்கும் பாகிஸ்தானுக்குப் படிப்பினை அளிக்கும் வகையில், துல்லியத் தாக்குதல் நடத்த ராணுவத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அந்தத் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ (நெற்றித் திலக நடவடிக்கை) என்ற பெயரும் சூட்டப்பட்டது.

அதன்படி, பாகிஸ்தானுக்கு நமது ராணுவம் தகுந்த பதிலடியை கடந்த மே 7 முதல் மே 10 வரை,  4 நாட்களில்  அளித்தது. மே 7ஆம் தேதி அதிகாலையில், பாகிஸ்தான் வான் எல்லைக்குள் ஊடுருவிய நமது விமானப்படை விமானங்கள் நடத்திய துல்லியத் தாக்குதலில், பயங்கரவாதிகளின் 11 பயிற்சி முகாம்கள் நிர்மூலமாயின.  அதேசமயம், பாகிஸ்தான் ராணுவம் ஏவிய ஏவுகணைகள் அனைத்தையும் வானிலேயே தடுத்து நிறுத்தி நமது ராணுவம் சாதனை படைத்தது. அடுத்த நாட்களில் நமது ராணுவம் தொடர்ந்து நடத்திய வான் தாக்குதல்களில் பாகிஸ்தானின் படைத்தளங்கள் பலத்த சேதமடைந்தன. இறுதியில் அந்த நாட்டின் வேண்டுகோளை ஏற்று  நமது அரசு ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை நிறுத்தி வைத்துள்ளது.

உண்மையில், இந்தியாவுக்கு அண்டைநாடு மீது போர் தொடுக்க விருப்பமில்லை. அதேசமயம், அந்நாட்டின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை உலகுக்கு வெளிப்படுத்தவும், அந்நாடு திருந்த ஒரு வாய்ப்பளிக்கவும் தான், அந்நாட்டின்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது போர் அல்ல. நமது ராணுவத்தின் துல்லியத் தாக்குதல் மட்டுமே. இந்த நடவடிக்கையில் பாக். ஆதரவு பெற்ற சுமார் 300 பயங்கரவாதிகள், நூற்றுக்கணக்கான பாக். படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இத்தருணத்தில், இந்தியா மீதான பகையைக் கைவிட்டு, சொந்த நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கான செயல்பாடுகளில் கவனம் செலுத்துமாறு நமது அண்டை நாட்டுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இந்திய ஒருமைப்பாட்டைக் குலைக்கும் சதிகள் எதுவும் எக்காலத்திலும் நிறைவேறாது என்பதை  அந்நாட்டுக்கு உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பஹல்காமிலும்,  ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போதும், எதிரி நாட்டின் பீரங்கித் தாக்குதலிலும் வீரமரணம் அடைந்த நமது பாதுகாப்புப் படையினர், குடிமக்கள் உள்ளிட்ட அனைவரின் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திக்கிறோம்.

மிகவும் குறைந்த உயிர்ச்சேதத்துடன், அதிநவீனப் போர் முறையில், நான்கே நாட்களில் பாகிஸ்தானின் ராணுவக் கட்டமைப்பை நமது வீரர்கள் அழித்துள்ளனர். இந்தப் பதிலடி  நடவடிக்கை இந்திய ராணுவத்தின் வெற்றித் திலகமாக மிளிர்கிறது. நமது முப்படைகளின் நிகரற்ற வீரத்துக்கும், மக்களாட்சியின் மாண்புக்குக் கட்டுப்பட்ட அதன் சீரிய செயல்திறனுக்கும் எமது சிரம் தாழ்ந்த வணக்கங்களைக் காணிக்கை ஆக்குகிறோம்.

தீர்மானம்- 2: மத்திய அரசுக்கு வேண்டுகோள்

ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலுக்கு நமது அரசு  ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலமாக தகுந்த பதிலடி கொடுத்திருப்பதைப் பாராட்டுகிறோம்.  நாட்டுக்குச் சவாலான இந்தக் காலகட்டத்தில் நமது அரசியல் வேற்றுமைகளை மறந்து, அரசுக்கும் ராணுவத்துக்கும் உறுதுணையாக நிற்பது குடிமக்கள் அனைவரின் பொறுப்பாகும்.

படைப்பாளர்கள் சமூகத்தின் மனசாட்சியாகத் திகழ்பவர்கள். எனவே, நெல்லையில் இயங்கும் படைப்பாளர்கள் அனைவரும், நமது அரசின் செயல்பாட்டையும், முப்படை வீரர்களின்  தீரத்தையும் மனமாரப் பாராட்டுகிறோம்.

அதேசமயம், சித்தாந்தரீதியாக இந்திய அரசை எதிர்க்கும் சிலர், பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு எடுத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். வெளியிலிருந்து தாக்கும் பகைவர்களை விட துரோகிகளின் உட்பகை மோசமானது. எனவே, அவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று வலியுறுத்துகிறோம்.

தேசிய ஒருமைப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் விதமாக, காசி சங்கமம், சௌராஷ்டிர சங்கமம் நிகழ்வுகள் போல  ‘காஷ்மீர் சங்கமம்’ நிகழ்வை ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 22ஆம் தேதி நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அதேபோல, ஏப்ரல் 22ஆம் தேதியை தேசிய சுற்றுலா தினமாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திருநாடு!வந்தேமாதரம்!

ஏப்.22ஐ தேசிய சுற்றுலா தினம் என அறிவிக்க வேண்டும்!

chennai padaiveerargalai program - 2026

படைவீரர்களைப் பாராட்டி மகிழ்ந்த சென்னை படைப்பாளர்கள்

அண்மையில் சாதனை படைத்த இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையைப் பாராட்டும் வகையில், ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமம்’ நிகழ்ச்சி சென்னையில் ஜுன் 15 ஆம் தேதி மாலை நடைபெற்றது,

இந்நிகழ்வில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சார்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

கர்நாடக இசைப்பாடகர் டாக்டர் ஆர்.கணேஷ் குழுவினரின் தேசபக்திப் பாடல்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

அதையடுத்து, மகளிர் படைப்பாளர்கள் ஐவர், குத்துவிளக்கேற்றி வைத்து நிகழ்ச்சியை மங்களகரமாகத் தொடங்கிவைத்தனர்.

படைப்பாளர்கள் சங்கமத்தில் முதல் நிகழ்ச்சி, இறைவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. மகாகவி பாரதியின் திருவுருவப் படத்திற்கு சிறப்பு விருந்தினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்வின் ஆரம்பத்திலேயே, காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் யுத்த நடவடிக்கை ஆகியவற்றிலும் அண்மையில் நிகழ்ந்த விமான விபத்திலும் உயிரிழந்த அனைவருக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடக்க நிகழ்வுக்கு, தொழிலதிபரும் எழுத்தாளருமான நல்லி குப்புசாமி செட்டி தலைமை வகித்தார். திரைப்பட இயக்குநர் மோகன் ஜி ஷத்ரியன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் பாஸ்கர் சுப்பிரமணியம் வரவேற்றார்.

படைப்பாளர்கள் சங்கமம் ஏன் நடத்தப்படுகிறது என்பது குறித்து ஒரே நாடு பத்திரிகை ஆசிரியர் நம்பி நாராயணன் எடுத்துரைத்தார். பஹல்காம் படுகொலைக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியவுடன், உள்நாட்டில் எழுத்தாளர்கள் என்ற போர்வையில் தேசவிரோதமாக சிலர் தமிழகத்தில் அறிக்கை வெளியிட்டதை சுட்டிக் காட்டிய அவர், அந்தக் களங்கத்தைப் போக்கவே, கோவையைத் தொடர்ந்து சென்னையில் ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமம்’ நடத்தப்படுகிறது என்றார்.

தலைமையுரை ஆற்றிய நல்லி குப்புசாமி செட்டி, படைவீரர்கள் எல்லையில் கண் துஞ்சாது காவல் காப்பதால் தான் நாம் நிம்மதியாக வாழ முடிகிறது என்றார்.

வாழ்த்துரை வழங்கிய கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனர் பத்ரி சேஷாத்ரி, ஆபரேஷன் சிந்தூர் சிறப்பாக வெற்றி பெற, கடந்த பத்தாண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட ஆத்ம நிர்பர் செயல்பாடுகளே காரணம்; இந்தியாவில் தயாரான ஆயுதங்களின் வலிமையை உலகம் இப்போது உணர்ந்து கொண்டுவிட்டது என்றார்.

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியும் சுயமுன்னேற்றப் பயிற்சியாளருமான மேஜர் மதன்குமார் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில், ஆபரேஷன் சிந்தூர் எவ்வாறு துல்லியமாக வடிவமைக்கப்பட்டு, பாகிஸ்தான் குடிமக்கள் பாதிக்கப்படாமல், பயங்கரவாதிகளின் முகாம்கள் மட்டும் நிர்மூலம் செய்யப்பட்டன என்பதை விளக்கமாக எடுத்துரைத்தார்.

அடுத்து படைப்பாளர்கள் சங்கமம் சார்பில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றை பத்திரிகையாளரும் தேசிய சிந்தனைப் பேரவையின் மாநில அமைப்பாளருமான வமு.முரளி முன்மொழிந்தார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பாராட்டுவதாகவும், இதற்காக இன்னுயிர் ஈந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் முதல் தீர்மானம் குறிப்பிட்டது. பஹல்காம் படுகொலை நிகழ்ந்த ஏப்ரல் 22ஆம் தேதியை தேசிய சுற்றுலா தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்; அந்த நாளில் காஷ்மீர் சங்கமம் நிகழ்வை மத்திய அரசு பஹல்காமில் நடத்த வேண்டும் – என்று இரண்டாவது தீர்மானம் வேண்டுகோள் விடுத்தது.

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஓய்வுபெற்ற முப்படை வீரர்கள் 6 பேருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

அதையடுத்து ‘வீரர்களுக்கு துணை நிற்கும் பேனா முனை’ என்ற பெயரில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் எழுத்தாளர்கள் துக்ளக் ரமேஷ், என்.சி.மோகன்தாஸ், பா.பிரபாகரன், சௌகத் அலி, கோதை ஜோதிலட்சுமி, டாக்டர் காயத்ரி சுரேஷ், தேவப்பிரியா, ஆனந்த் பிரசாத், முனைவர் ஜெயஸ்ரீ சாரநாதன், கணேஷ்குமார், ஓமாம்புலியூர் ஜெயராமன் ஆகியோர் உரையாற்றினர்.

அடுத்து, வெற்றிச் சிந்தூரம் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் கவிஞர்கள் சுவாதி, விவேக்பாரதி, சுரேஜமீ, சுராகி, பத்மன், புதுகை பாரதி, நந்தலாலா, ராகவேந்திரா ஆகியோர் கவிதை வாசித்தனர்.

இறுதியில் படைப்பாளர்கள் சங்கம விழாக் குழுவின் தலைவர் திராவிட மாயை சுப்பு தலைமையில் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.

பதிப்பாளர் அல்லயன்ஸ் ஸ்ரீநிவாசன் முன்னிலை வகித்தார். ஆவணப்பட இயக்குநரும் எழுத்தாளருமான கவிஞர் ரவி சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார்.

மூத்த பத்திரிகையாளரும் கவிஞருமான இசைக்கவி ரமணன் நிறைவுரையாற்றினார். அவர் தனது உரையில், தேசிய உணர்வோடு வீரர்களுக்கு நன்றி சொல்லும் படைப்பாளர்களின் விழாவைப் பாராட்டினார்.
அன்று அவுணர்களிடமிருந்து காத்தது செந்தூர் என்றால்,
இன்று அன்னியர்களிடம் இருந்து காத்தது சிந்தூர் என்றார் அவர். படைவீரர்களைப் பாராட்டி அவர் இன்னிசைக் கவிதையும் பாடினார்.

மூத்த பத்திரிகையாளர் பத்மன் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். தொழிலதிபர் ஜவஹர் நன்றி கூறினார். தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெற்றது.

கரூர் மாவட்ட பாரதீய வரலாற்றுத் தொகுப்புப் பேரவை புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு

 தில்லி 'பாரதீய வரலாற்றுத் தொகுப்புப் பேரவை' கரூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் தலைமை உரை ஆற்றுகிறார் கரூர் மாவட்ட கௌரவ தலைவர் வள்ளுவர் செங்குட்டுவன். அருகில் பேரவையின் மாநில பொதுச் செயலாளர் முனைவர் ராமசுப்பிரமணியன், மாநில அமைப்புச் செயலாளர் கதிரவன், திருப்பூர் கோட்ட செயலாளர் பேராசிரியர் மாரிமுத்து, கரூர் மாவட்ட பொதுச் செயலாளர் மருத்துவர் இன்ப பிரபஞ்சன், துணைத் தலைவர் முனைவர். ஸ்ரீ பாலசுப்பிரமணியன், இணைச் செயலாளர்கள் மைதிலி, குளித்தலை சுந்தர் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள்.

புது தில்லி ‘பாரதீய வரலாற்றுத் தொகுப்புப் பேரவை’ இந்திய அரசின் வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து வரலாற்று ஆராய்ச்சி தொடர்பாக அறிவியல்பூர்வமான பல்வேறு முக்கிய பணிகளை நாடு முழுவதும் செய்து வருகிறது. இதன் கரூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு, பயிற்சி பட்டறை கரூர் வள்ளுவர் ஹோட்டல் வாசுகி மகாலில் இன்று நடைபெற்றது.

பாரதீய வரலாற்றுத் தொகுப்புப் பேரவை கரூர் மாவட்ட கௌரவ தலைவராக வள்ளுவர் குழும தாளாளர் செங்குட்டுவன், பொதுச் செயலாளராக எழுத்தாளர் மருத்துவர் இன்ப பிரபஞ்சன், துணைத் தலைவராக முனைவர். ஸ்ரீ பாலசுப்பிரமணியன், இணைச் செயலாளர்களாக கல்வெட்டியல் ஆய்வாளர் மைதிலி, குளித்தலை சுந்தர், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களாக கல்லூரிப் பேராசிரியர்கள் சுப்பிரமணியன், ரமேஷ், முனைவர் வெங்கடேஷ், கரூர் கல்வெட்டியல் ஆய்வாளர் மணி, வரலாற்று ஆர்வலர்கள் சரவணன், தீபா, ரமேஷ் பொறுப்பேற்றனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு புதுச்சேரி மாநில அமைப்புச் செயலாளர் கதிரவன் மறக்கப்பட்ட வரலாறும் மறைக்கப்பட்ட வரலாறும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மாநில பொதுச் செயலாளர் முனைவர் ராமசுப்பிரமணியன் நிர்வாகிகள் பயிற்சி பட்டறையை ஒருங்கிணைத்தார். கௌரவ தலைவர் வள்ளுவர் செங்குட்டுவன் அடுத்த ஆண்டிற்கான மாவட்ட செயல் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றுவது குறித்து தலைமை உரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் திருப்பூர் கோட்ட செயலாளர் பேராசிரியர் மாரிமுத்து, திருப்பூர் மாவட்டச் செயலாளர் தினேஷ், கரூர் வரலாற்று பாதுகாப்பு சங்கம் பரமசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிப்பதே பிரச்னைகளுக்கு தீர்வு!

Dr Krishnasamy pudiyathamizagam

‘மதசார்பின்மை’ என்பது குறிப்பிட்ட சில மதங்களை சார்ந்து நிற்பதல்ல; எந்த மதத்தையும் சாராது நிற்பது இந்தியாவை ‘இந்து’ நாடாக அறிவிப்பதே’ அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு. என்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

அவரது அறிக்கை:

140 கோடி இந்திய மக்களின் உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடும் அதுவே!

இந்திய அரசியல் சாசனம் இந்தியாவின் அனைத்துத் தரப்பு மக்களின் அபிலாசைகளையும் உள்ளடக்கிய பொக்கிஷம். 200 ஆண்டுகால ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து இந்தியாவை விடுதலை செய்வதே அன்று சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களின் பிரதான லட்சியமாக இருந்ததுள்ளது. அதனால் தான் ”வெள்ளையனே வெளியேறு” என்பது அவர்களின் முக்கிய கோசமாக இருந்தது.

சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு, இந்தியாவை எப்படிப்பட்ட சமூகமாக உருவாக்க வேண்டும் என்பதில் போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் சுபாஷ் சந்திர போஸ் போன்ற ஒரு சிலரைத் தவிர, எவருக்கும் பரந்துபட்ட சிந்தனை இல்லை. பெரும்பாலும் அமெரிக்கா, பிரிட்டிஷ் உள்ளிட்ட மேற்கத்திய முதலாளித்துவச் சிந்தனை வயப்பட்டவர்களாகத்தான் இருந்துள்ளனர். நேரு போன்றவர்கள் சோசலிச சிந்தனை உடையவர்களாக இருந்துள்ளனர். எனினும், இந்திய அரசியல் சாசனத்தில் அதற்கான பிரதிபலிப்பு வெளிப்படவில்லை. காந்தி ராம ராஜ்ஜியம் பேசியும், ராமும் ரஹீமும் ஒன்று என்றும் குழப்பமான கருத்தை கொண்டிருந்துள்ளார். காங்கிரஸ்காரர்கள் தீவிர மற்றும் மிதவாத சிந்தனையாளர்களாகவே அன்று இருந்துள்ளனர்.

அரசியல் சாசனத்தில் காஷ்மீரைத் தவிர, இந்தியாவில் எவரும் சொத்து வாங்கலாம் என்ற சரத்தும் இருந்ததுள்ளது; ஆனால் அனைவரும் சொத்து வாங்குவதற்கான வழிமுறைகள் அதில் சொல்லப்படவில்லை. இன்று வரை அதற்கு வழியும் இல்லை. தனியுடமையே இந்தியச் சமூகத்தின் தவிர்க்க முடியாத அங்கம் ஆகிவிட்டது. எனவே இந்தியச் சமூகம் சமத்துவத்தை நோக்கிப் பயணிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டது.

சுதந்திரம் உச்சக்கட்டமாக இருந்த பொழுது துருக்கியை மையமாக வைத்துச் செயல்பட்ட ’கிலாபத் இயக்கம்’ சுந்தரப் போராட்டத்தில் கலந்து கொண்டது. ஆனால் அதன் நோக்கம் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. திடீரென 1946 இல் ஜின்னா பிரிட்டிஷின் பிரித்தாலும் சூழ்ச்சிக்குப் பலியாகி, தனிநாடு கோரிக்கையை முன்வைத்தார். ஆனால் அதற்கு முன்பாகவே இந்தியாவில் 246 உறுப்பினர்கள் கொண்ட அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டது. அந்த நிர்ணய சபை பரந்துபட்ட இந்திய மக்களின் கருத்துக்களை முன்வைத்தது. ஆனால் பாகிஸ்தான் பிரிவினைக் கருத்துக்கள் மேலோங்கிய பின்னர் அரசியல் நிர்ணய சபையால் அதன் போக்கில் பயணிக்க முடியவில்லை. எனவே அரை குறையாக இந்திய அளவில் நிர்ணய சபை செயல்பட்டது. அதனால் முழுமை பெறாத இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது. உலக அளவில் பெரும்பாலான நாடுகளில் கூறியுள்ள பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை இந்திய அரசியல் சாசனத்திலும் புகுப்பட்டுள்ளது மட்டுமே மகிழ்ச்சிகரமானது.

ஒரு மிகப்பெரிய பிரதேசம் மத ரீதியாகப் பிளவு பட்ட பிறகு, அதே மத ரீதியான மக்களையும் உள்ளடக்கி எப்படி மதச்சார்பற்ற தேசமாக விளங்க முடியும் என்பதைப் பற்றி சிறிதும் சிந்தித்துப் பார்த்து அரசியல் வடிவம் கொடுக்கப்படவில்லை. பிரிவினைக்குப் பின்னர் இந்தியா ‘இந்து’ நாடாகத்தான் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தியாவில் ’சாதி’ பிரிவினைகள் உண்டு என்பதை அனைவரும் அறிவர். மொழி ரீதியான மாநிலப் பிரிவினைகளால் இந்தியாவின் பிரதானப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இயலவில்லை. மேலும், மொழிவாரி மாநில பிரச்சனைகளே இந்தியாவின் இன்றைய பெரும்பாலான பிரச்சனைகளுக்குக் காரணமாக உள்ளது.

மதச்சார்பின்மை என்பது ஒரு சில குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் கோஷமே தவிர, 140 கோடி இந்திய மக்களின் உள்ளக் கிடங்கை வெளிப்படுத்தக் கூடியது அல்ல.! குறிப்பிட்ட ஒரு சில நபர்கள், அரசியல் கட்சிகள் சில மதங்களின் மடிகளில் சாய்ந்து கொண்டு பேசுகின்ற போலித்தத்துவமாக மதச்சார்பின்மை இருக்கக் கூடாது. எந்த மதத்தையும் உண்மையில் சாராமல் நின்று பேசுவதாக இருக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சாதியும் ஒரு தேசிய இனம்; எனவே, ’சாதிகளை’ தேசிய இனமாக அங்கீகரித்துவிட்டு, ’இந்தியாவை – இந்து தேசமாக’ அறிவிப்பதே இந்தியாவிற்கும் பாதுகாப்பு! இந்திய மக்களுக்கும் பாதுகாப்பு.!

மதுரை – செங்கோட்டை இடையே இரவு நேர ரயில் தேவை!

railway news - 2026
#image_title

மதுரை -தென்காசி-செங்கோட்டை மதுரை இடையே இரவு நேரத்தில் ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்

இந்த வழியில் இரவு நேர ரயில் இயக்கினால்
மூன்று ரயில்களுக்கு இணைப்பாக இருக்கும்.

மதுரையிலிருந்து இரவு 9:30 மணிக்கு கிளம்பி இரவு 12 மணிக்கு தென்காசி செல்லும் வகையில் இருந்தால் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையிலிருந்து மதுரை வரும் பயணிகளுக்கு இணைப்பு ரயிலாக இருக்கும்.

விருதுநகருக்கு 10 மணிபோல் இந்த ரயில் வந்தால் திருச்சி காரைக்குடி வழியாக விருதுநகர் வரும் மெமு ரயிலுக்கு ஒரு இணைப்பு ரயிலாக இருக்கும்.

பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் – தூத்துக்குடியில் இருந்து தென்காசி வழியாக பாலக்காடு செல்லும் ரயிலுக்கும் இது ஒரு இணைப்பு ரயிலாக இருக்கும்.

தென்காசியில் இந்த ரயிலை பிடித்து கொல்லம் கோட்டயம் திருச்சூர் பாலக்காடு செல்லும் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மறு மார்க்கமாக அதிகாலை 3.30 மணிக்கு செங்கோட்டை தென்காசியில் இருந்து கிளம்பி மதுரைக்கு காலை 6:15 மணிக்கு சென்றால்

பாலக்காட்டில் இருந்து தென்காசி வழியாக தூத்துக்குடி செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் தென்காசியில் மாறி பயணிப்பதற்கு வசதியாக இருக்கும்.

இந்த பயணிகள் மதுரை சென்று, சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ஐ பிடிப்பதற்கு வாய்ப்பு இருக்கும்.

விருதுநகரில் இருந்து – காரைக்குடி, திருச்சி பயணிகள் மெமு ரயிலை பிடிக்க வசதியாக இருக்கும்.

இந்த மாதிரியாக 3 ரயில்களுக்கு (வைகை எக்ஸ்பிரஸ், திருச்சி- காரைக்குடி- விருதுநகர் பயணிகள் ரயிலுக்கும், பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும் ஒரு இணைப்பு ரயிலாக இருக்கும்.

மேலும் விருதுநகர்- காரைக்குடி- திருச்சி-காரைக்குடி-திருச்சி- விருதுநகர் ரயிலில் மானாமதுரையில் இறங்கினால் ராமேஸ்வரம் செல்வதற்கும் இந்த ரயில் இணைப்பு ரயிலாக இருக்கும்.

அதே போல தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டம் மக்களும் பாலருவி ரயிலில் பயணித்து தென்காசியில் இறங்கி அங்கிருந்து சென்னை வைகை ரயில் பிடிப்பதற்கும்,

காரைக்குடி, திருச்சி ரயிலில் விருதுநகரில் இருந்து பயணிக்கவும், மானாமதுரையில் இறங்கி ராமேஸ்வரம் செல்லவும் வசதியாக இருக்கும்.

மேலும் இது மதுரையில் இருந்து இரவில் கிளம்பி அதிகாலையில் மதுரைக்கு திரும்பிவிடும் என்பதால் இந்த குற்றால சீசன் டைமில் சென்று வருவதற்கு ஏதுவாக இருக்கும்.

இரவிலே சென்று இரவிலேயே திரும்பி விடலாம்.

மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்ற விருதுநகர் மாவட்டம் மக்களுக்கு இந்த ரயிலானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் குற்றால சீசனில் ஒரே இரவில் சென்று திரும்புவதற்கும் வசதியாக இருக்கும்.

எனவே இந்த புதிய (மதுரை- தென்காசி -மதுரை) இரவு நேர ரயில் இயக்கினால் நல்லது.

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

sabarimala panguni uthiram - 2026

கேரள மாநிலம் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் தவிர, மாதாந்திர வழிபாட்டுக்காக ஒவ்வொரு மாதமும் திறக்கப்படுவது வழக்கம். இது தவிர ஓணம், விஷு, பிரதிஷ்டை உள்ளிட்ட சிறப்பு தினங்களிலும் நடை திறக்கப்படும்.

மேலும் மாத துவக்கத்தில் ஐந்து நாட்கள் பூஜை நடைபெறும். அந்த வகையில் ஆனி மாத பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டது. முன்னதாக தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபமேற்றி பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.

அதன்பின் கற்பூர ஆழியில் தீ மூட்டப்பட்டது. இன்று தினம் சிறப்பு பூஜைகள் நடைபெறாத நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆனி மாதத்தில் காலை முதல் 19ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து அன்று இரவு ஹரிவராசனம் பாடி நடை சாத்தப்படுகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு சாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

சபரிமலை வனப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. பம்பை நதியில் தண்ணீர் அதிகம் செல்கிறது

புட்டின் நீங்களுமா?

202203051105313944 Tamil News Tamil news Russian President Putin says No attack on MEDVPF 1 - 2026

ஈரானை பங்கம் செய்துவருகிறது இஸ்ரேல். இஸ்ரேலின் 200 போர் விமானங்கள் ஈரானின் 300க்கும் மேற்பட்ட இடங்களை தகர்த்தெறிந்திருக்கிறது. அதோடு, இராணுவ தலைவர்களை போட்டுத் தள்ளியிருக்கிறது. இப்போது தளபதிகள் இல்லாத படைப் பிரிவுகளோடு திணறிவருகிறது ஈரான்.

ஈரானிலிருந்து அணுப்பப் பட்ட டுரோன்கள் அத்தனையும் இஸ்ரேலைச் சென்றடையும் முன்னே சுட்டு வீழ்த்தப் பட்டிருக்கின்றன – ஈராக் உள்ளிட்ட பல நாடுகளால்.

இஸ்ரேலை கடுமையாக எதிர்க்கும் ஃபிரான்ஸின் மாக்ரோன் உட்பட பல நாடுகள், “இஸ்ரேலுக்கு தற்காப்பு உரிமை உண்டு. ஈரான் அணு ஆயுதத்தை கைவிட வேண்டும்” என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள்.

சமீபகாலமாக இஸ்ரேலை புறக்கணித்தும் ஈரானுக்கு நெருக்கம் காட்டியும் வந்த டிரம்ப் இன்று சொல்லியிருக்கிறார், “இஸ்ரேல் ஈரானைத் தாக்குவதை எங்களிடம் சொல்லிவிட்டுத் தான் செய்தது. ஈரான் அடங்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

மத்திய கிழக்கின் சவுதி, ஐக்கிய எமிரேட் உள்ளிட்ட நாடுகள் வழக்கம் போல ‘இஸ்ரேலை கண்டித்’திருக்கின்றன. ஹமாஸை இஸ்ரேல் துவம்சம் செய்த போதும் இதே போலத் தான் இந்த நாடுகள் ‘இஸ்ரேலை கண்டித்’தன… எல்லாம் புருடா!!

இரு நாடுகளும் நட்பு என்பதால் பாரதம் வழக்கம் போல, ‘ரெண்டு பேரும் சண்டை போடாதீங்கப்பா. அமைதியா இருங்க’ என்று அறிக்கை விட்டிருக்கிறது. சீனா திணறி வருகிறது. அதன் சீன ஊழியர்கள் பலரும் ஈரானில் சிக்கியிருப்பதால் அவர்களை எப்படி வெளியே கொண்டு வருவது என்று திணறுகிறது சீனா….

இப்படி சீனா தவிர அத்தனை நாடுகளும் ஈரானைக் கை கழுவி விட்டிருக்கின்றன. என்றாலும்… இதில் ஹைலைட் ரஷ்யா தான்!!

சென்ற வாரம் ரஷ்யா அறிக்கை விட்டிருந்தது, “ஈரான் மீது கை வைத்தால் விபரீத விளைவுகளை சந்திப்பீர்கள்” என்று. என்றாலும், இன்று ஈரானை புரட்டி எடுக்கும் போது, ஒன்றுமே தெரியாதது போல இருக்கிறது ரஷ்யா.

இதே போலத் தான் சிரியாவில் ஆளும் ரஷ்ய ஆதரவு அஸ்ஸாத் ஆட்சியை பயங்கரவாதிகள் வீழ்த்திய போதும் ரஷ்யா ஒன்றும் சொல்லவில்லை. சத்தம் போடாமல் சிரியாவில் இருந்த ரஷ்ய துருப்புகளை திரும்பப் பெற்றது ரஷ்யா. பயங்கரவாதிகள் ரஷ்ய துருப்புகளை தாக்காததையும் கவனிக்கவும்.

“எதனால் ரஷ்யா அமைதி காக்கிறது?” என்ற கேள்விக்கு சிலர், “யுக்ரைனின் கிழக்குப் பகுதியை ரஷ்யா எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படும். அதற்கு ஈடாக ஈரான், சிரியா போன்ற நாடுகளுக்கு ஆதரவு தருவதை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று டீல் பேசப்பட்டு, அதை ரஷ்யா ஒப்புக் கொண்டதால் தான் இன்று ரஷ்யா மௌனம் காக்கிறது” என்கிறார்கள்.

சிரியா, ஈரான், ஹமாஸ், ஹெஸ்புல்லா எல்லாம் வழிக்குக் கொண்டு வரப்பட்டால், பயங்கரவாதம் பெருமளவில் ஒழியும். (பாக் மட்டும் பயங்கரவாதத்தை தொடரும்).

ஈரானில் அணு ஆயுதம் இருக்கிறது என்று 80களிலிருந்தே குற்றம் சாட்டி வருகிறது அமெரிக்கா. நேற்று சர்வதேச அணு (International Atomic Energy Agency – IAEA) அமைப்பு, “ஈரானில் அணு ஆயுதம் இருக்க வாய்ப்பு” என்று சொன்னது. இன்று அதே IAEA, “இஸ்ரேல் தாக்குதலுக்குப் பின் கதிரியக்க கசிவு ஏதும் ஏற்படவில்லை” என்று சொல்லியிருக்கிறது.

ஈரானில் உண்மையில் அணு ஆயுதம் இருந்ததா என்பது கேள்விக்குறி. இதே போலத் தான் சதாம் ஹுசைனையும் போட்டுத் தள்ளினார்கள்.

  • செல்வநாயகம்

திருக்கூடல் மலையும் தென்பழனியும்

FB IMG 1749875359864 - 2026

Dr. B.R.J. கண்ணன்

கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பரங்குன்றத்தில் ஒரு கல்யாணத்தில் கலந்து கொள்ள நானும் என் துணைவியாரும் சென்றோம். அதற்கு முன்பு முருகனின் முதல் படைவீட்டை தரிசித்துவிடலாம் என்று திட்டமிட்டோம். பசுமலையைத் தாண்டி இரயில்த்தடத்திற்கு மேல் செல்லும் பாலத்தில் ஏறி இறங்கியவுடன் கோவிலின் தோரண வளைவைச் சென்றடைந்த பொழுது காலை 8:00 மணி. அப்பொழுதே நல்ல கூட்டம். வண்டிகள் உள்ளே செல்ல அனுமதி இல்லை. போலீசார் மைக்கில் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்திய வண்ணம் இருந்தனர்.

“இங்கே திரும்பாதீங்க. நேராப் போயி தெப்பக்குளம் பார்க்கிங்குப் போங்க.”

நாங்கள் அப்படியே கிரிவலப் பாதையைச் சுற்றி வந்து சரவணப் பொய்கை அருகில் இருக்கும் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் வண்டியை அமர்த்தினோம். அங்கிருந்து நடந்து கோவிலுக்கு சென்றடைந்த எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கூட்டமோ கூட்டம்.‌

“ஏங்க. உள்ள போனா பிழிஞ்சிருவாங்க போலயே.”

பொதுவாகவே கோயிலுக்குச் செல்ல வேண்டுமென்றால் விசேஷம் ஏதும் இல்லாத சாதாரண நாளைத் தேர்ந்தெடுத்து அமைதியாகக் கடவுளைக் கண்டு தியானித்து வரவேண்டும் எனும் கொள்கை உடையவன் நான். இத்தனை மக்களின் இரைச்சலில், உடன் கோவில் பணியாளர்களின் அதட்டல்கள் சேர நாடி வந்த மன அமைதி கிடைக்குமா என்ன?

“ஆமாமாம். கல்யாணம் பத்தரை மணிக்குத்தான். இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கு. என்ன செய்யலாம்?”

“இங்கே பக்கத்தில சோமப்பர் ஜீவசமாதி ஒன்னு இருக்கு. ரொம்ப அழகான இடம். நாம அங்கே போய் அமைதியா தியானம் செஞ்சுட்டு வரலாம்.”

சித்தர்கள் தங்கள் உயிர் பிரிவதை முன்கூட்டியே அறிந்து கொள்வார்கள், அறிவித்தும் விடுவார்கள். அவர்களுக்கு சமாதி கட்டப்படும். அதில் அமர்ந்தபடியே உயிர் துறப்பார்கள். அதன் மேல் கோவில் கட்டி ஏதேனும் ஒரு மூர்த்தியை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம். அங்கு வரும் பக்தர்களுக்கு சித்தர்கள் சூட்சுமமாய் அருள் பாலிப்பதாக நம்பப்படுகிறது. இது போன்ற இடத்திற்குச் செல்லும்பொழுது
நேர்மறையான சிந்தனைகள் ஏற்படுவதாகவும், பிரச்சனைகளுக்குத் தீர்வும் கிடைப்பதாகவும் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அலைபேசியை உயிர்ப்பித்தேன். Mapplsல் தேடினேன். உடனே அது காண்பித்து விட்டது. வண்டியில் சென்றால் 8 நிமிடங்கள் ஆகும் என்றும் நடந்து சென்றால் 22 நிமிடங்கள் ஆகும் என்றும் சொல்லியது.

“நமக்குத்தான் நேரம் இருக்குல்ல. நடந்தே போவோம்.”

“கொஞ்சம் மலையில ஏறணும். அக்சுவலா கோவில் வாசல் வரை வண்டி போறதுக்கு தார் ரோடே இருக்கு.”

“பரவால்ல நடந்து போவோம். வா. “

“இன்னைக்கு பண்ண வேண்டிய நடைப் பயிற்சியை முடிச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டீங்க. இனி நான் உங்களை மாத்த முடியாது. வாங்க நடப்போம்” என்றாள் மனைவி சிரித்துக் கொண்டே.

தோரண வளைவில் நுழையாமல், பாலத்தை ஒட்டி இடது புறத்தில் பயணித்தால் அருள்மிகு சோமப்ப சுவாமிகள் ஜீவசமாதியை அடைந்து விடலாம்.

இந்த இடம் திருக்கூடல் மலை எனப்படுகிறது. அடிவாரத்தில் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. அங்கிருந்து மேலே செல்ல வண்டிகளுக்கான தார் சாலையும் நடந்து செல்ல மற்றொரு பாதையும் இருந்தன. இருசக்கர வாகனத்தில் தன் மகனுடன் திரும்பி வந்துகொண்டிருந்த பக்தர் ஒருவர் என்னைக் கண்டதும் வண்டியை நிறுத்தினார்.

“வணக்கம் சார்.”

தான் ஒரு மருந்துக் கம்பெனியின் பிரதிநிதி என்றும் என்னை முன்பு சந்தித்துள்ளதாகவும் அறிமுகம் செய்து கொண்டார். (மன்னிக்கவும், பெயரை மறந்து விட்டேன்)

“நான் அடிக்கடி வருவேன் சார். உங்களுக்கும் கண்டிப்பா பிடிக்கும். மேலே முருகன் கோவிலும் பெருமாள் கோயிலும்கூட இருக்கு. “

இந்த விஷயத்தை என் மனைவி அறிந்திருக்கவில்லை.

நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். வழியில் ஒரு பிரமாண்ட அனுமாரைக் கண்டோம். வெகு விரைவில் கோவிலையும் அடைந்து விட்டோம். எங்களைத் தவிர்த்து இரண்டே பேர் இருந்தனர்.

சோமப்ப சித்தரின் உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது அவர் எல்லோரையும் ‘சோமப்பா சோமப்பா’ என்று அழைத்ததால் அவரை சோமப்பசுவாமி என்று மக்கள் அழைக்க ஆரம்பித்தனராம். இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் பக்தர்களின் நோய் நொடிகளுக்கு சோமப்பர் நல்ல தீர்வுகளைத் தருவதாக நம்பிக்கை.

அங்கிருந்த லிங்கத்தை வழிபட்டு, கோவிலைச் சுற்றி விட்டு, சிறிது நேரம் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டோம்.

பின்னர் கோவிலின் பின்புறமாக அமைந்துள்ள படிகளில் ஏற ஆரம்பித்தோம். சரிவுப் பாதை மற்றும் படிகளான பாதை என்று இரு பிரிவுகளாகவும் இடையில் பிடித்து நடந்து செல்ல இரும்புக் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. தூரம் சிறிது என்றாலும் பாதை செங்குத்தாக மேல் ஏறியதால் சற்று மூச்சு வாங்கியது. மூட்டு வலி உள்ளவர்களுக்கும் வயதானவர்களுக்கும் சற்று சிரமம்தான். ஏற ஏற சுற்றிலும் நம் மதுரை நகரை நாம் பார்க்கும் விட்டம் விரிய விரிய, காட்சிகளை ரசித்துக்கொண்டே நடந்தோம். அப்பாடா கோவில்கள் தெரிந்துவிட்டன. அந்த குன்றின் உச்சியில் ஒருபுறம் முருகன் கோவிலும் மறுபுறம் பெருமாள் மற்றும் சிவன் கோவிலும் உள்ளன. சமீபத்தில் வண்ணம் தீட்டப்பட்டிருந்ததால் கோபுரங்கள் பளபளவென பிரகாசமாக இருந்தன.

படிகளில் சில நிமிடங்கள் அமர்ந்து ஓய்வெடுத்துவிட்டு கோவிலுக்குள் நுழைந்தோம்.

ஆஹா என்ன ஒரு அமைதியான அழகான இடம். நான்கு பக்கங்களிலும் திறந்த வெளியான செவ்வக வடிவிலான ஒரு மண்டபம் அது. ஒரு பக்கத்தில் முருகனின் கருவறை. சிலு சிலுவென காற்றடிக்க கீழே வீடுகள், வயல்வெளிகள், பாலங்கள், ஏரி, தூரத்தில் யானைமலை என்று எல்லாமும் கண்முன் விரியப் பரவசமாக இருந்தது.

அழகான நீண்ட மயிலைக் கண்டுவிட்டு எதிரே இருந்த முருகனை தரிசிக்கலானோம். பழனியில் நாம் காணும் அதே உருவம். நெஞ்சுப் பகுதியும் முகமும் திருநீறால் நிறைந்திருந்தது. அதை மீறி எங்களைக் கண்டு புன்னகைத்தான் முருகன். பதிகம் பாடி பூசாரி தீபத்தைக் காட்ட சிலிர்த்துடன் வணங்கினோம். பின்னர் அவர் சொன்னார்,

“இந்த இடம் போகர் தவம் செய்த இடம். இந்த மூர்த்தி 100 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு இருக்கிறது. இதனை ஏற்பாடு செய்தவர் மாயாண்டிச் சித்தர். இந்த இடத்தைத் தென்பழனி என்று சொல்வார்கள்.”

மனசஞ்சலம் உள்ளவர்கள் இங்கு வந்து அமைதியாகத் திருப்புகழ் அல்லது கந்தர் சஷ்டி கவசம் பாடிவிட்டு இந்த அழகனை தரிசித்துவிட்டுச் சென்றால் மனம் அமைதியடையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இரண்டு கோயில்களுக்கும் அவரே பொறுப்பாளர். ஆகையால் எங்களை அழைத்துக் கொண்டு அடுத்த கோவிலுக்குச் சென்றார். அங்கு வடக்குநோக்கியிருந்த சயனப்பெருமாளைத் தரிசித்தோம். பெரும்பாலான இடங்களில் பெருமாள் நின்று கொண்டோ அமர்ந்துகொண்டோதான் இருப்பார். பள்ளிகொண்ட கோலத்தில் பெருமாளைப் பார்த்தவுடன் மறுபடியும் சிலிர்ப்பு ஏற்பட்டது.

“இங்கே பெருமாள் படுத்திருக்கார். கண் மூடலை. மேல ஆகாசத்தப் பார்த்தபடி இருக்கார். திருவனந்தபுரத்தில இருக்கிற பத்மநாபசுவாமியின் சிறிய வடிவம் தான் இது”

அங்கேயே மற்றொரு கருவறையில் சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார்கள்.

“மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சிவனும் இவரும் ஒரே நேர் கோட்டில் இணையும் படி அமைக்கப்பட்டுள்ளது” என்றார் பூசாரி.

இந்தக் கருவறையின் பின்புறம் சென்றால் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு இடையில் திருப்பரங்குன்ற கோவிலின் பிரதான கோபுரம் தெரிகிறது. செப்பனிடும் பணி நடைபெறுவதால் அது பச்சை ஆடை போர்த்தப்பட்டு இருந்தது.

திரும்பி இறக்கத்தில் நடப்பது எளிதாக இருந்தது. ஆனால் பாதை வளைந்து வளைந்து செல்வதால் கவனம் தேவை. குழந்தைகளுடன் சென்றால் அவர்களைத் தனியாக விடாமல் கைகளைப் பிடித்துக் கொண்டு இறங்குவது பாதுகாப்பானது.

“ஏங்க. நம்மள மதுரைக்காரங்கன்னு சொல்லிக்கிறோம். இப்படி ஒன்னு இருக்குன்னு இது வர தெரியாமலேயே இருந்துட்டோமே. “

“இப்பத் தெரிஞ்சுகிட்டோம்ல. சந்தோஷப்படுவோம்.”

ஆக ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்ற நாங்கள் மனம் நிறைந்துத் திரும்பினோம்.

பி.கு. இந்த இடத்தைப் பற்றி நான் வலைதளத்தில் தேடிய பொழுது, ஹலோ எஃப்எம் டைரி செல்வா அவர்கள் ஏற்கனவே பதிவிட்டிருந்த ஒரு காணொளியைக் காண நேரிட்டது

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி!

madurai anusham foundation prayer - 2026

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் சிறப்பு பிரார்த்தனை -தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.

அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட விமானம் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.

அகமதாபாத் விமானம் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்து பற்றி ஏர் இந்தியா வெளியிட்ட செய்தியில், அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.38 மணிக்குப் புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர் என்றும், பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்ச்சுக்கல் நாட்டினர் என்றும் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய மதுரை எஸ்.எஸ்.
காலனியில் உள்ள ஶ்ரீ மஹாபெரியவர் கோவிலில் அனுஷத்தின் அனுக்கிரஹம் அமைப்பு நிறுவனர் நெல்லை பாலு தலைமையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் தீப அஞ்சலி செலுத்தப்பட்டது. சிறுவர் சிறுமியர் பெண்கள் முதியோர் மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட பலர் பங்கேற்று தங்களது அஞ்சலிகளை செலுத்தினர்
இந்த நிகழ்வில், திரளானோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.