Home Blog Page 92

திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

thiruvananthapuram ananthapadmanabhaswamy temple - 2026

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குடமுழுக்கு கோலாகலம்!275 ஆண்டுக்கு பின் தற்போது 2025ல் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது.

கடந்த 1750ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது 275 ஆண்டுகளுக்குப் பின், கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குடமுழுக்கு இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

கேரளா தலைநகர் திருவனந்தபுரம் மையப் பகுதியில் கிழக்கு கோட்டையில் அனந்த பத்மநாபசுவாமி கோயிலில், 275 ஆண்டுகளுக்குப் பின்னா் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

இதில், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்கள் மீது கலச நீர் தெளிக்கப்பட்டது.

திருவனந்தபுரத்தின் அடையாளமாக விளங்குகிறது பத்மநாபசுவாமி கோயில். இது உலகப் புகழ்பெற்ற கோயிலும் ஆகும். இந்தக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) காலை 7.40 முதல் 8.40 மணிக்குள் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 2 ஆம் தேதி பிரசாதசுத்தி, 3 ஆம் தேதி பிராயசித்த ஹோம கலசம், 5 ஆம் தேதி சாந்தி ஹோம கலசம், 6 ஆம் தேதி திரவிய திவ்ய கலசமும் நடைபெற்றது.

இன்று அதிகாலை பிரதிஷ்டா பூதபலி நடைபெற்றது. தொடா்ந்து, குடமுழுக்கு வில்வமங்கலம் சாமியாா் மற்றும் மூத்த போற்றிமாா் தலைமையில் நடைபெற்றது.

கொல்லம் – கோவை ரயில்! பயணிகளுக்கு ‘இனிப்பு’ அளித்த அமைச்சர்!

railway news - 2026
#image_title

கேரளா தமிழகத்தில் ஆன்மீக சுற்றுலா பயணிகள் நலன் கருதி ரயில் பயண வசதிகளை அதிகரிக்கும் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் -கொல்லம்- கோயம்புத்தூர் புதிய ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்ததால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாக உறுதிப்படுத்தியதால், இந்த வழித்தடத்தில் பயணிப்பவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

கொல்லத்திலிருந்து கோயம்புத்தூருக்கு புனலூர், மதுரை மற்றும் பழனி வழியாக இந்த ரயில் சேவையை நடத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் கீழ் நடைபெற்ற எம்.பி.க்கள் கூட்டத்தில், மாவேலிக்கரை எம்.பி. கொடிக்குனில் சுரேஷ் இந்த ரயில் சேவையின் தேவையை கடுமையாக எழுப்பினார்.

அதைத் தொடர்ந்து, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வுக்கு அவர் ஒரு கடிதம் கொடுத்தார், மேலும் இந்த கோரிக்கை தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும் என்று அமைச்சர் பதிலளித்தார்.

இந்த பதிலில், கொல்லம்-பழனி-கோயம்புத்தூரு வழித்தடத்தில் புதிய ரயில் சேவையைத் தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரிவான ஆய்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

இந்த ரயில் சேவை யதார்த்தமாக மாறுவதால், கொல்லம், புனலூர், தென்காசி, மதுரை, பழனி, கோயம்புத்தூர் போன்ற பகுதிகளுக்கு இடையிலான பயண உறவு வலுவடையும்.

இந்த ரயில் சேவை நிஜமாகும்போது, ​​மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் பழனி முருகன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு இது ஒரு பெரிய நிம்மதியாக இருக்கும். கேரளாவிலிருந்து வரும் பக்தர்களுக்கு, குறிப்பாக கொல்லம், ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களிலிருந்து வரும் பக்தர்களுக்கு இந்த பாதை மிகவும் முக்கியமானது, ஏனெனில் தற்போது இந்த திசையில் நேரடி ரயில் சேவைகள் குறைவாகவே உள்ளன.

இந்த பாதையில் ரயில்கள் கிடைப்பதால், தமிழ்நாட்டின் முக்கிய புனிதத் தலங்களுக்கு பயணம் செய்வது எளிதாகவும் வசதியாகவும் மாறும். மேலும், இது கேரளாவை கோயம்புத்தூர் போன்ற வர்த்தக-தொழில்துறை மையத்துடன் இணைப்பதால், இந்த ரயில் வணிக பயணிகள் மற்றும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஜி7 மாநாடு: பொருளாதாரத்தில் மீண்டு வரும் பாரதத்தின் பங்கேற்பு!

pm modi in rajastan pikaneer - 2026

கனடாவில் ஜி7 மாநாடு. இது இப்போது பேசு பொருளாகியிருக்கிறது இந்தியாவில். காரணம், இதனுள்ளே பொதிந்திருக்கும் அரசியல். முக்கியமாக காங்கிரஸ் செய்த அரசியல்.

இந்த ஆண்டு ஜி7 கூட்டத்தை நடத்தும் கனடா, பாரதப் பிரதமர் மோடிக்கு அழைப்பு கொடுக்காமல் அசிங்கப்படுத்தியது” என்று காங்கிரஸ் ஒரு புறம் புரளி கிளப்பியது. மறுபுறம் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், “இந்த ஆண்டு ஜி7 கூட்டத்தை கனடா நடத்துவதால் அதை பாரதப் பிரதமர் மோதிஜி புறக்கணித்துள்ளார்” என்று பாஜக., சமூகத் தளங்களில் பகிர்ந்து வர, ஜி7 கூட்டத்தை வைத்து ஓர் அரசியல் இந்தியாவில் பரபரப்பானது.

காங்கிரஸ் இவ்வாறு இந்த விஷயத்தைப் பேசிய போதே, அதில் சர்வதேச அரசியல் பொதிந்திருப்பதை இந்தியாவில் பலரும் புரிந்து கொண்டனர். காரணம், டீப் ஸ்டேட். அதற்கேற்ப, திடீரென கனடா பிரதமர், பாரதப் பிரதமரை தொலைபேசியில் அழைத்து, அவரது மறுமொழிக்காகக் காத்திருந்து, ஜி7 மாநாட்டுக்கான அழைப்பை விடுத்ததற்கு கனடாவின் இடதுசாரி ஊடகங்கள் டீப் ஸ்டேட் வகையறாவின் குரலை எதிரொலித்தன.

கனடாவில் இடதுசாரி ஊடகங்கள், டீப் ஸ்டேட்டின் கையாளாக கனடாவின் புது பிரதமராக அமர்த்தப் பட்டிருக்கும் கார்னேயிடம், “மோடி இங்கே நிஜ்ஜர் உள்ளிட்டோரை இவ்வுலகில் இருந்து அனுப்பி வைத்த குற்றச்சாட்டு இருக்கும் போது அவரை ஏன் அழைக்கிறீர்கள்?” என்று கேட்டன.

அதற்கு கனடா பிரதமர், “சட்டப்படி விசாரணை நடந்து கொண்டிருப்பதால் அது பற்றி நான் பேச மாட்டேன். மேலும் பாரதம் உலகின் நான்காவது பெரிய பொருளாதாரம். அதைப் புறக்கணித்து ஜி7 நடத்த முடியாது” என்றார். தொடர்ந்து கேள்விகள் எழுந்ததால், “இது என் முடிவில்லை. இது ஜி7இன் பிற உறுப்பு நாடுகளின் முடிவு” என்று பதிலளித்து, பத்திரிக்கையாளர் சந்திப்பை ஒருவாறு முடித்துக் கொண்டார்.

இதனிடையே, நேற்று பாரதப் பிரதமர் மோடி தன் எக்ஸ் தளப் பக்கத்தில், “கனடா பிரதமர் அழைப்பை ஏற்று ஜி7ல் கலந்து கொள்கிறேன்” என பதிவு செய்தார். உண்மையில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதால் பாரதத்துக்கு ஏதேனும் பலன் விளையாது என்று நினைத்திருந்தால், நிச்சயம் பிரதமர் மோடியே இந்த அழைப்பை நிராகரித்திருப்பார்.

இந்தப் பின்னணியில், இதனுள்ளே பொதிருந்திருக்கும் அரசியலைச் சற்றே பார்க்கலாம். 2025ல் கனடாவில் நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டுக்கு இந்திய பிரதமர் மோடியை அழைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. தொடக்கத்தில் அமைதியாக இருந்துவிட்டு, திடீரென இந்த அழைப்பு வருவது போல் தோன்றினாலும், இதன் பின் அரசியல், ராஜதந்திர, புவிசார் அரசியல் காரணங்கள் இருப்பதை உணர முடிகிறது. கனடா பிரதமரே சொன்னது போல, இதை பிற உறுப்பு நாடுகள் வலியுறுத்துகின்றன என்று பார்க்கும் போது, மோடியின் வருகையை முக்கியத்துவம் வாய்ந்ததாக அந்நாடுகள் கருத சில காரணங்கள் உள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

கனடாவில் காலிஸ்தானி பிரிவினைவாத இயங்களின் வளர்ச்சி, அவற்றைக் கட்டுப்படுத்த இந்தியா எத்தனையோ முறை கேட்டுக் கொண்டும் கண்டு கொள்ளாமல் உள்ளூர் அரசியலை கருத்தில் கொண்டு கனடா செயல்பட்டதும், 2023ல் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றங்களும் இரு நாட்டு உறவுகளில் பின்னடைவை ஏற்படுத்தியது.

எனவே கனடாவில் நடக்கும் இந்த ஜி7 மாநாட்டுக்கு இந்தியாவிற்கு கனடா அழைப்பு விடுக்கவில்லை என்ற ரீதியில் சொல்லப்பட்டாலும், திடீரென கனடா பிரதமர் மார்க் கார்னி தொலைபேசி மூலம் மோடியைத் தொடர்பு கொண்டு ஜி7 மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார். இது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவதற்கு ஒரு முயற்சியாகக் கருதப்படுகிறது. இந்த அழைப்பு, கனடாவின் புதிய தலைமையின் கீழ் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மீட்டெடுக்கும் முயற்சியாக இருக்கலாம் என்றே கருத்து நிலவுகிறது.

இந்தியா ஜி7 உறுப்பு நாடாக இல்லாவிட்டாலும், 2019 முதல் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக ஜி7 மாநாடுகளில் பங்கேற்று வருகிறது. இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம், உலகளாவிய தெற்கு நாடுகளின் (Global South) தலைமைத்துவம், புவிசார் அரசியல் செல்வாக்கு ஆகியவை இந்த அழைப்பிற்கு முக்கிய காரணங்களாக உள்ளதாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் காங்கிரஸ் மேற்கொண்ட விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் இந்த அழைப்பு இருந்ததால், பிரதமர் நரேந்திர மோடி மீது வைக்கப்படுவது போல் தோற்றம் அளித்தாலும், நாட்டின் நற்பெயர் மீதே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வைத்துள்ள எதிர்மறை விமர்சனம் முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, பிரதமர் மோடிக்கு உள்ள உலகளாவிய செல்வாக்கு, அவரைப் புறக்கணித்து விட்டு இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்த இயலாது என்ற நிலைமையைக் கொண்டுவந்துள்ளது. 2024ல் நடைபெற்ற ஜி7 மாநாட்டில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, மற்றும் பிற தலைவர்களுடன் பிரதமர் மோடி இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். மேலும், பிரதமர் மோடி உலக அரங்கில் காலநிலை மாற்றம், டிஜிட்டல் தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளில் இந்தியாவின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தி வருவதால், உலக அளவிலான செல்வாக்கு அவருக்கு இருப்பதை மறுக்க முடியாது.

ஜி7 மாநாடுகள் பெரும்பாலும் உறுப்பு நாடுகள் மட்டுமின்றி, உலகளாவிய தெற்கு நாடுகளையும் சிறப்பு அழைப்பாளர்களாகக் கொண்டிருக்கின்றன. இது உலகளாவிய பிரச்னைகளுக்கு ஒரு பரந்த கண்ணோட்டத்தை அளிக்கின்றது.

உலகம் எதிர்நோக்கும் பிரச்னைகளான பருவநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும், ஜனநாயக மதிப்புகள் போன்ற முக்கிய விவாதங்கள் ஜி7 மாநாட்டில் மேற்கொள்ளப்படும். இவற்றில் இந்தியா தனது தனித்துவமான அனுபவங்களையும், தீர்வுகளையும் பகிர்ந்து கொள்ள முடியும்.

மோடி இந்த மாநாட்டில் பங்கேற்பதன் மூலம், இந்தியா-கனடா உறவுகளை மேம்படுத்துவதற்கும், இந்தியாவின் உலகளாவிய அந்தஸ்தை உயர்த்துவதற்கும் உதவக்கூடும். மேலும், உலகளாவிய தெற்கு நாடுகளின் கருத்துகளை ஜி7 மாநாட்டில் முன்னிலைப்படுத்த மோடியின் வருகை முக்கியம் என்பதை பிற உறுப்பு நாடுகள் எண்ணியிருக்கின்றன.

சுதந்திரத்துக்குப் பின் மீண்டு வரும் இந்தியாவின் பொருளாதாரம், மற்றும் ஜி7 நாடுகளுடனான வர்த்தக உறவுகள், மோடியின் பங்கேற்பை முக்கியமானதாக மாற்றியிருப்பதை அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர். இந்தியா வளர்ந்து வரும் நாடல்ல, பொருளாதாரத்தில் மீண்டு வரும் நாடு என்பதை உலகம் உணர்ந்து கொள்ள பிரதமர் மோடியே தனித்துவ அடையாளமாகத் திகழ்கிறார் என்பது, நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதே!

ஆன்மிக மாநாட்டை கொச்சைப் படுத்தும் ‘அரசியல்வாதி’ சேகர்பாபு!

kadeswara subramaniam hindu munnani - 2026

அமைச்சர் சேகர் பாபுவின் பொறுப்பற்ற பேச்சை வன்மையாக கண்டிப்பதாக இந்து முன்னணி தெரிவித்துள்ளது. இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது…

கடந்த சில நாட்களாக அமைச்சர் சேகர் பாபு இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் புலம்பித் தள்ளுகிறார். அத்துடன் அவர் கோவில் நிதியில் இருந்து நடத்திய முத்தமிழ் முருகன் மாநாட்டை இதனுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்.

இது சங்கிகள் மாநாடு, அரசியல் மாநாடு, மக்களை பிளவுபடுத்தும் மாநாடு என்று விதவிதமாகக் கூறி உண்மையான முருக பக்தர்கள் இதற்கு போக மாட்டார்கள் என அவர் பேசுகிறார்.

இவர் பேசுவதைப் பார்த்தால் இந்து முன்னணி மாநாடு வெற்றிகரமாக நடக்கும்போது இவரது அமைச்சர் பதவி ஆட்டம் கண்டுவிடும் என அவர் அச்சப்படுவதாகத் தெரிகிறது.

இந்து முன்னணி அரசியல் கட்சி இல்லை. இந்து முன்னணி எந்தத் தேர்தலிலும் போட்டியிடாது. எனவே நாம் நடத்துவது ஆன்மிக மாநாடு என்ற புரிதல் கூட அவருக்கு இல்லை.

அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நேரில் அழைப்பு விடுத்துள்ளோம். குறிப்பாக திமுகவில் இருக்கும் மூத்த அமைச்சர்கள் பலரையும் சந்தித்து அழைப்பு விடுத்தோம் என்பதை சேகர் பாபு அறிவாரா? தமிழக முதல்வர் அவர்களிடமும் அழைப்பிதழ் அளித்து வரவேற்க நேரம் கேட்டுள்ளோம்.

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல் சீமான் வரையிலான அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நேரில் அழைப்பிதழ் தந்து அழைத்துள்ளோம். அந்தப் பட்டியலை முருக பக்தர்கள் மாநாடு முகநூலில் அனைவரும் காணலாம்.

முருக பக்தர்கள் மாநாட்டுக் குழு சார்பாக அரசியல் தலைவர்கள், ஆன்மிகப் பெரியோர்கள், சமுதாயத் தலைவர்கள், ஊடக அதிபர்கள், காவடி, பால்குட, பாதயாத்திரை முருக பக்தர்கள் குழுவினர் ஆகியோரையும் சந்தித்து மாநாட்டுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளோம். தமிழகத்தில் ஒரு கோடி குடும்பங்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

கோவில் நிதியில் நடத்திய முத்தமிழ் முருகன் மாநாட்டை நாம் விமர்சிக்க விரும்பவில்லை. அதேசமயம் அதில் தமிழக முதல்வர்கூட கலந்து கொள்ளவில்லையே ஏன்? அது எவ்வாறு நடந்தது என்ற விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் இப்போதும் வைரலாகி வருகிறது. ஆனால் அதனை திமுக ஆட்சியின் சாதனையாக சேகர் பாபு பில்டப் செய்து விளம்பரப்படுத்தி வருவதுதான் வேடிக்கையாக உள்ளது.

இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடக்கும்போது நாம் நடத்திய மாநாட்டை ஒப்பிட்டு விமர்சனம் எழுந்தால், முதல்வர் தன்மீது கோபப்படலாம் என இப்போதே சேகர்பாபுவுக்கு அச்சம் வந்துவிட்டது. இதனாலேயே அவர் போகும் இடமெல்லாம் முருக பக்தர்கள் மாநாட்டை பற்றி குறைகூறி வருகிறார்.

அதேசமயம் கோவில் நிர்வாகத்தை தன் கையில் வைத்திருக்கும் அமைச்சர் சேகர் பாபு சென்னிமலை மற்றும் திருப்பரங்குன்றத்தில் வேற்று மதத்தினர் பிரச்சினை ஏற்படுத்திய போது செயலற்று இருந்தார் என்பதையும் மக்கள் நன்கு அறிவார்கள்.

இந்துக்கள் தங்களது உரிமையை, உணர்வுகளை வெளிப்படுத்தினால் அது அரசியலாக இவருக்குத் தெரிகிறது. அதுவே வேற்று மதத்தினரின் பேச்சை ஜனநாயகத்தின் குரலாக இவர் பாராட்டுகிறார். இவ்வாறு பேசுவது அவரது மனக் கோளாறை வெளிக்காட்டுவதாகவே தெரிகிறது.

மதுரையில் ஜூன் 22ஆம் தேதி நடக்க இருக்கிற முருக பக்தர்கள் மாநாடு முழுக்க முழுக்க ஆன்மிக, இந்து உணர்வு மாநாடு. இதில் அனைத்து ஆன்மிக பக்தர்களும் கலந்து கொள்வார்கள். அரசியல் முதலான அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டு அனைவரும் கலந்து கொள்ள மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர்.

சுமார் ஐந்து லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வதன் மூலம் தமிழகத்தின் ஆன்மிக சாதனை மாநாடாக முருகன் அருளால் இந்த முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

இந்த அறிக்கையின் மூலம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். எல்லா வகையிலும் அனைவரும் இம்மாநாட்டிற்கு ஒத்துழைப்பு நல்கி முருகனின் பேரருளைப் பெற வேண்டுகிறோம்.

மஸ்க் Vs ட்ரம்ப்; அடித்து ஆடும் இந்தியா!

elon musk vs trump - 2026

‘ஜெய்ஹிந்த்’ ஸ்ரீராம்

கொழுந்து விட்டு எரியும் அமெரிக்க மோதல்., பின்னணியில் யார் என்பதே பூதாகரமான கேள்வி.!

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் மிக சிக்கலான காலத்தில் சிக்க ஆரம்பித்து இருக்கிறார். எந்த ஒரு அமெரிக்க அதிபருக்கும் ஏற்படாத நிகழ்வு அவருக்கு ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. அவர் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை செய்கிறது. அவர் எடுக்கும் முடிவுகளை செனட் சபையில் வைத்து கிழித்து எடுக்கிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக உலகம் முழுவதும் டாலடிக்கும் டாலர் தனது மதிப்பை இழந்து வருகிறது.

உலகம் முழுவதும் கவனிக்கும் உக்ரைன் ரஷ்யா மோதலை அடுத்து கட்டத்திற்கு நகர்ந்து விட்டது….. ஆனால் இது டொனால்ட் ட்ரம்ப்க்கு தெரிவிக்கவில்லை உக்ரைன்… அவருக்கு தெரியவும் இல்லை. தற்சமயம் கேட்டால் அடித்துக் கொண்டு சாகட்டும் என்கிறார் அவர். இது பலரையும் முகம் சுழிக்க வைத்து இருக்கின்றது.

இரண்டாம் ஆட்சி கால நிர்வாகத்தின் தொடக்கத்தில் எலான் மஸ்க்கை ஆஹா ஓஹோ என்றார் ட்ரம்ப். அவருக்கு என்றே ஒரு தனித்துறையை ஏற்படுத்தி அதற்கு டாஜ் கமிட்டி எனப் பெயர் கொடுத்து அதற்கு வானளாவிய அதிகாரமும் கொடுத்தார்.

ஆனால் அவரோ…… போய் வா ராசா என்கிற கதையாக கிளம்பி விட்டார். போதாக்குறைக்கு ஓர் தனிக் கட்சியே உண்டாக்க முடிவு செய்து வாக்கெடுப்பை தனது எக்ஸ் தளத்தில் இது பற்றி கருத்து கணிப்பு நடத்த…… யாரும் எதிர்பாராத வண்ணம் 83% பேர் ஆதரவு தெரிவித்து இருப்பது ட்ரம்ப் நிர்வாகத்தை அதிர வைத்திருக்கிறது. உடனடியாக ட்ரம்ப்… எலான் மஸ்க் நிறுவனங்களுக்கு செல்லும் அமெரிக்க நிதியை ஏன் பைடன் நிர்வாகம் தடை செய்யவில்லை…. இவரது காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்யப்போவதாக பொது வெளியில் அறிவித்து அதிரடி காட்டினார் ட்ரம்ப்.

ஆக இத்தனை நாட்கள் அமெரிக்க சமூகவலைத்தளங்களில் கொளுத்தி போட்டு வந்த இந்த இருவருக்குமான புகைச்சல் இன்று ஊரறிய அனைவருக்கும் உறுதி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

இத்தோடு மஸ்க்கும் விடவில்லை.

பிக் ப்யூட்டிபுல் பில் என்கிற ட்ரம்ப்பின் அறிவிப்பை பகிரங்கமாக கேலி செய்ய ஆரம்பித்தார்….அது பிக் ப்யூட்டிபுல் ப்ரோக்கன் என்றார். கூடவே தற்போது அதிபர் பதவியில் உள்ள ட்ரம்ப்பை நீக்கிவிட்டு ஜேடி வான்ஸ் ஐ அந்த பதவிக்கு கொண்டு வர வேண்டும் என டுவிட் செய்து இருக்கிறார்…… இது அமெரிக்கா முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்திருக்கிறது. பலரும் இதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை….. ட்ரம்பிற்கு பெசோஸ் எப்ஸ்டீன் என்கிற நாடறிந்த பாலியல் குற்றவாளியோடு தொடர்பு இருப்பதாக கொளுத்தி போட்டு இருக்கிறார். இது தான் பலரையும் பதைபதைக்க வைத்திருக்கிறது.

ஆறு மாதத்தில் ஏன் இத்தனை புகைச்சல்….. என்னவாயிற்று டொனால்ட் ட்ரம்ப்க்கு என்கிற கேள்வி உலகம் முழுவதும் எழுந்திருக்கிறது.

இதில் விஷயம் இல்லாமல் இல்லை. ஓர் விதமான உரசல் போக்கை நம் இந்தியாவோடு கொண்டிருந்த ட்ரம்ப் ஏனோ அதை பெரிது படுத்தி விட்டார். அதிலும் குறிப்பாக ஆப்ரேஷன் ஸிந்தூருக்கு பின்னர் இது வெளிப்படையாகவே தொடர்கிறது. ஏதோ அமெரிக்க அதிபர் முறுக்கில் முரண்டு பிடிக்கிறார் போலும் என்று பார்த்தால்……. விதண்டாவாதமாகவே சிலவற்றை இந்த சமயத்தில் செய்ய ஆரம்பித்து விட்டார். ஸ்டூடண்ட் விசாவில் கை வைத்தவர்…. தொடர்ந்து இந்தியாவில் தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு தடைவிதிக்க…. இந்தியர்கள் அனுப்பும் பணத்திற்கு வரி என ஏகப்பட்ட அழிச்சாட்டியங்களை முன்னெடுக்க…. நம்மவர்களும் பதிலுக்கு திருப்பி சாத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

வரலாற்றில் இது முதல் முறை.

இந்திய வெளியுறவுத் துறை மூலமாக சுமுகமான உறவை மேம்படுத்த எடுத்த நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாமல்.. அண்டை நாடான பாகிஸ்தானுக்கு IMF மூலமாக நிதி வழங்க ஏற்பாடுகளை செய்தது ட்ரம்ப் நிர்வாகம். இதனை நம்மவர்கள் ரசிக்கவில்லை. இதனை ட்ரம்ப் முன்னின்று செய்திருப்பது தெரிந்ததும் கொதித்துப் போனார்கள். இதில் ஒரு திரி சமன் வேலை பார்த்து இருக்கிறார் ட்ரம்ப். கீதா கோபிநாத், கேரளத்துக்காரர்., இவர் தான் தற்போதைய IMF தலைவர்., இவரை விட்டு தான் பாகிஸ்தானுக்கான நிதியுதவி அளிக்கும் அறிவிப்பை ஆப்ரேஷன் ஸிந்தூர் சமயத்தில் அறிவிக்க செய்தார் ட்ரம்ப் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்…..

அந்த சமயத்தில் ஏற்கனவே இந்த போர் நிறுத்தத்திற்கு தான் தான் காரணம் என்று அவர் சொல்ல…. அதை இந்தியா மறுத்திருந்த காலம் அது.

கூடவே இந்தியா மீதான சமச்சீர் வரிவிதிப்பு முறையில் மாற்றம் இல்லை என முரண்டு பிடிக்க ஆரம்பித்திருந்த காலமும் அதுவே. இரு தரப்பினரும் உடன்பாடு எட்டும் முன்பே பிக் ப்யூட்டிபுல் பில் என்பதை கொண்டு வந்தார் ட்ரம்ப்.

தனது நான்கு ஆண்டு ஆட்சிக் காலத்தில் முதல் ஆறு மாதத்திலேயே பலத்த அடி வாங்கி வருகிறார் ட்ரம்ப். தனது தனிப்பட்ட ஐநூறு பில்லியன் டாலர்கள் ரஷ்யா உடனான ஒப்பந்தத்தை குறித்து செனட் சபையில் வைத்து கேள்வி கேட்க ஆயத்தமாகி வருகிறார்கள் அவருக்கு எதிரான செனட்டர்கள். சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க ஆயத்தமாகி வருகிறார்கள்.

இதனிடையே கனடா தேசத்திற்கு புதிய பிரதமராக மார்க் கார்ணி வந்திருக்கிறார். மருந்துக்கும் இவரை மதிப்பதில்லை அவர். இத்தனைக்கும் கனடா மீது வரி விதிப்பை ஓசைப்படாமல் முழுமையாக அகற்றி இருக்கிறது ட்ரம்ப் நிர்வாகம்.

இது ஒரு புறம் இருக்க….. கனடாவின் ஒட்டாவாவில் இருந்து….. பிரதமர் மார்க் கார்ணி நம் இந்திய பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பிரதமரோடு பேச விருப்பம் தெரிவித்து காத்திருந்து பேசியிருக்கிறார். இது உளவு தகவலாக ட்ரம்ப்பின் காதுகளுக்கு சென்று அவரை அசைத்து பார்த்து இருக்கிறது. ஏனெனில் அவர் இவரை தொடர்பு கொண்ட போது காத்திருக்க நேர்ந்ததாக தகவல் சொல்கிறார்கள்.

கனட பிரதமர் மார்க் கார்ணி சுமார் இருபது நிமிடங்கள் பேசியதாகவும்…. இந்த மாதத்தில் அங்கு நடைபெறவுள்ள G7 வருடாந்திர மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு மோடிக்கு விடுத்ததாகவும் தகவல் சொல்கிறார்கள்.

இரு தரப்பு உறவை ….கனடா இந்தியா நட்புறவை…..சீர் செய்ய மார்க் கார்ணி பெரும் முயற்சி செய்து வருகிறார் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்….

பேசாமல் இருந்திருக்கலாம் ட்ரம்ப், உடனடியாக பெய்ஜிங்கை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார் இதன் பிறகு. ஜிங் பிங் இதில் ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள்.இந்த சமயத்தில் தான் எலான் மஸ்க்கின் வாரிசு நம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்து திரும்பிய செய்தி ட்ரம்ப்பிற்கு சொல்லப் பட்டது என்கிறார்கள்.

ட்ரம்பிற்கு ஏகப்பட்ட இடத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்ப ஆரம்பித்து விட்டது. இது அத்தனையும் அவரோடு பயணித்த ….. தேர்தல் பிரச்சாரத்தில் பங்கு கொண்ட….. தேர்தல் நிதி அளித்த எலான் மஸ்க்கை கொண்டே ஒருங்கிணைத்து அவருக்கு எதிராக திருப்பி இருக்கிறார்கள். ட்ரம்பிற்கு எதிராக மிகப் பெரிய முன்னெடுப்பை எலான் மஸ்க் செய்ய……. அவரை நம்மவர்கள் பின்னணியில் இருந்து இயக்குவதாக தகவல் பரவி வருகிறது.

சொல்லி வைத்தார் போலே….. இத்தனை நாள் இழுபறி நிலையில் இருந்த ஸ்டார் லிங்கிற்கு இந்திய அனுமதி கிடைத்து விட்டது. அதுபோலவே டொனால்ட் ட்ரம்ப்க்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர் தென்னாப்பிரிக்கா தலைவரை அமெரிக்க ஓவல் அலுவலகத்தில் வைத்து அவமானப்படுத்தியதாக ….. நிறவெறி தொடர்பாக அவமதிப்பு செய்ததாக வழக்கு பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் களமாட இந்திய வம்சாவளி வக்கீல் ஒருவர் ஆயத்தமாகி வருகிறார் என்கிறார்கள்.

இது அமெரிக்க அதிபர் ஒருவரை அவரது நாட்டில் வைத்து எதிர்க்க முடிவு செய்து காய் நகர்த்தி அதில் சாதித்தும் காட்டியிருக்கிறார் நம்மவர்கள் என்பதாகவே பார்க்க வேண்டும்.சரிப்பட்டு இறங்கி வந்தால் ட்ரம்ப் தலை தப்பும்……. இல்லை என்றால் பதவி இறக்கம் செய்த முதல் அதிபராக அவர் மாறக்கூடும். இதில் அவர் என்னவாக போகிறார் என்பதை பொறுத்தே டாலரின் வாழ்வு இருக்கும். ஆம் அப்படி ஒரு சங்கதி இதில் பிண்ணிப் பிணைந்து நிற்கிறது.

இந்தியா முதல் முறையாக செக் மேட் செய்திருக்கிறது.

வளர்ச்சி, சுற்றுலா, முன்னேற்றம் இதுவே நம் அடையாளம்!

pm modi inaugurate chenab river bridge in kashmir - 2026

பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை இன்று, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான ரயில்வே பாலத்தை திறந்து வைத்தார். பின்னர் கூட்டத்தில் பேசிய அவர், திட்டங்கள் வெறும் பெயர்கள் அல்ல; புதிய பாலங்கள் காஷ்மீரின் புதிய அடையாளங்கள்; நாட்டின் புதிய சக்தியின் பிரகடனங்கள் புதிய பாலங்கள் சுற்றுலாவை அதிகரிப்பதுடன் பொருளாதாரத்தின் பிற துறைகளுக்கு பயன் தரும் என்று கூறினார்.

பிரதமர் மோடி இந்தப் பாலம் மற்றும் காஷ்மீரின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், காஷ்மீரின் வளர்ச்சிக்கு எது தடையாக இருக்கிறது என்பது குறித்தும் தெளிவாக எடுத்துக் கூறினார். மேலும் பயங்கரவாதத்தால் மனித குலம் எத்தகைய சிறப்பான வாழ்வை இழக்கிறது என்பதையும் எடுத்துக் கூறினார். அவர் பேசுகையில், “செனாப் மற்றும் அஞ்சி பாலங்கள் இந்தியாவின் முன்னேற்றத்தின் சக்தி வாய்ந்த சின்னங்கள். நமது இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம். 

“சுற்றுலாத் துறையில் பல்வேறு வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. துரதிர்ஷ்டவசமாக, நமது அண்டை நாடு மனிதகுலத்திற்கு மட்டுமல்ல, சுற்றுலாவுக்கும் எதிராக செயல்படுகிறது. ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கு எதிராக தீவிரமாக செயல்படும் ஒரு நாடு பாகிஸ்தான். இதற்கு ஏப்ரல் 22ம் தேதி பெஹல்காமில் நடந்த சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு.  பெஹல்காம் சம்பவம் இந்தியாவில் கலவரங்களைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டது. அதனால்தான் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

“பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் காஷ்மீரிகளின் வருமானத்தைத் தடுக்க பாகிஸ்தான் செய்த சதி செயலாகும். செனாப், அஞ்சி பாலங்கள் காஷ்மீரில் செழிப்புகளை கொண்டு வரும். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ரயிலில் பயணம் தற்போது நிஜமாகிவிட்டது.

“மாதா வைஷ்ணவி தேவியின் ஆசிர்வாதத்துடன், காஷ்மீர் பள்ளத்தாக்கில் ரயில் சேவை கொண்டு வரப்பட்டுள்ளது. சிறிது நேரத்திற்கு முன்பு, செனாப் பாலம் மற்றும் அஞ்சி பாலத்தைத் திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இன்று, ஜம்மு-காஷ்மீர் இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்களைப் பெற்றுள்ளது. ஜம்முவில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி திறக்கப்பட்டுள்ளது.

“ரூ.46,000 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்கள் ஜம்மு-காஷ்மீரின் முன்னேற்றத்திற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். இந்த புதிய வளர்ச்சிக்கு உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பேசினார்.

pm modi inauguratechenab rail bridge - 2026

முன்னதாக, ரயில் பாதையில் கட்டப்பட்டிருந்த ரிப்பனை கையால் முடிச்சுகளை அவிழ்த்து திறந்து வைத்தார். பொதுவாக ஒரு திறப்பு விழா என்றால் நீளமான ரிப்பன் கட்டப்பட்டிருக்கும். ஒரு தட்டில் ஒருவர் கத்தரிக்கோல் எடுத்து வருவார். அதனால் ரிப்பனை வெட்டி திறப்புவிழா நடக்கும். ஆனால் மோடி ஆட்சியில் எந்தத் திறப்பு விழாவிற்கும் ரிப்பன் கத்தரிக்கோல் கொண்டு வெட்டப்படுவதில்லை. மாறாக இரண்டு நீளமான துணிகள் நடுவில் முடிச்சுப் போடப்பட்டிருக்கும். பிரதமர் துணியை வீணாக்காமல் முடிச்சை மட்டும் அவிழ்த்து திறப்புவிழா நடத்துவார். அதாவது உள்ளே நுழையத் தடையாக இருக்கும் எதையும் வெட்டுவதில்லை, மாறாக அந்த முடிச்சுகளை அவிழ்த்து, தடைகளைத் தகர்த்து உள்ளே நுழைவது போன்ற மன உணர்வை ஏற்படுத்தி வருகிறார். அப்படித்தான் இங்கும் மிக நீளமான ரிப்பனைத் தன் கைகளால் பிடித்துத் தூக்கி முடிச்சுகளை அவிழ்த்து, தடைகள் பல கடந்து வந்துள்ள பாலத்தைத் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, “பிரதமர் அவர்களே… பலர் பிரிட்டிஷார் முதற்கொண்டு. காஷ்மீரை ஜம்முவுடன் ரயில்பாதை மூலம் இணைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தார்கள். ஆனால்.. அந்தக் கனவை நனவாக்கியது உங்களுடைய தலைமையிலான ஆட்சிக் காலத்தில்தான்” என்று பாராட்டு தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது, சீனாப் நதியின் மேல் 295 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள ஆர்ச் வடிவ ரயில் பாலக் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சிலருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்தக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உலகின் உயரமான ரயில் பாலம்; திறந்து வைத்த பிரதமர் மோடி!

chenab bridge opened by pm modiji - 2026

பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை இன்று, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான ரயில்வே பாலத்தை திறந்து வைத்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான ரயில்வே பாலத்தைத் திறந்து வைத்து, மக்களுக்கான நலத் திட்டப் பணிகளை அர்ப்பணிக்க இன்று காஷ்மீர் மாநிலத்துக்குச் சென்றார்.  

முன்னதாக, அம்மாநிலத்தில் உள்ள பெஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரு தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்வதாக இருந்தது. ஆனால் அப்போது சில காரணங்களால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின்னர், ஜம்மு காஷ்மீரில் தற்போது இயல்பு நிலை திரும்பியிருக்கிறது. இந்நிலையில் பிரதமர் மோடி காஷ்மீர் செல்ல திட்டமிடப்பட்டதன் அடிப்படையில் இன்று சென்றார்.

செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது பெரும் சாதனை. இரும்பால் கட்டப்பட்ட இந்தப் பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது. இது உலகின் மிக உயரமான ரயில்வே பாலம். நில அதிர்வு மற்றும் பலத்த காற்று சூழலை தாங்கும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது. ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்துவதில் இப்பாலம் முக்கியப் பங்கு வகிக்கும். இந்தப் பாலத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. 

எதையும் தாங்கும் கம்பீரப் பாலத்தின் சிறப்புகள் :

செனாப் நதியின் குறுக்கே 359 மீ உயரத்தில் வளைவான அமைப்பில், இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம், 1,315 மீட்டர் நீளம் கொண்டது.
பாரிசில் உள்ள ஈபிள் கோபுரத்தைவிட 35 மீட்டர் அதிக உயரம் கொண்ட இப்பாலத்தின் சராசரி ஆயுள்காலம் 120 ஆண்டுகள்.  

டெல்லியையும் காஷ்மீரையும் அருகருகே கொண்டு வருவதுபோல், 7 முதல் 8 மணி நேரப் பயண நேரத்தை வெறும் 3 மணி நேரமாகக் குறைக்கும் இந்த பாலம்.

மணிக்கு 266 கி.மீ., வேகத்தில் காற்று வீசினாலும் இது தாக்குப் > பிடிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. ஒருவேளை காற்றின் வேகமும், அடர்த்தியும் அதிகரித்திருந்தால், ஸ்டேசன் மாஸ்டருக்கு ரெட் சிக்னல் செல்லும் வகையில் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. அச்சமயம், பாலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்படும்.

பாலத்தில் 780 மீட்டருக்கு பிளாஸ்ட் புரொடக்சன் ப்ளாட்ஃபார்ம் (BLAST PROTECTION PLATFORM) அமைக்கப்பட்டுள்ளது… இது ரயில் இயக்கப்படும்போது 40 டன் வெடிகுண்டு வெடித்தால்கூட பாலத்தில் ஏற்படும் தாக்கத்தைக் குறைத்து, அப்சர்வ் செய்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.. 

பாலம் முழுக்க ஆங்காங்கே 120 சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.. ஒரு சிறிய நடமாட்டம் கூட கண்காணிக்கும் வகையில் 150 சர்வர்களைக் கொண்ட கன்ட்ரோல் ரூம்கள் உருவாக்கப்பட்டுள்ளன.. 

மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் இதன் மீது ரயிலை இயக்கலாம்.. ஒரு வேளை ஒரு கரையின் இரும்புத்தூண் உடைந்து, சேதமானாலும்கூட… மறு கரையின் தூணுடைய சப்போர்டிலேயே மணிக்கு 30 கி.மீ., என ரயில் வேகத்தைக் குறைத்து இயக்கி பாலத்தைக் கடக்கும் வகையில் இந்த நெடுங்கனவு இன்று பல சவால்களைக் கடந்து சாத்தியமாகியிருக்கிறது…

பாலத்தைத் திறந்துவைத்து பயணித்த மோடி!

இந்தப் பாலத்தை காலை 11 மணிக்கு பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து கம்பி வழி ரயில் பாலமான அஞ்சி பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் பகல் 12 மணியளவில் ஸ்ரீமாதா வைஷ்ணவி தேவி கோவில் அமைந்துள்ள கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும் இரண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

பின்னர் கத்ராவில் சுமார் ரூ.46 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், அங்கே ஏற்கெனவே நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

வந்தே பாரத் ரயில் முன்பதிவு தொடக்கம்!

பிரதமர் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயிலுக்கான முன்பதிவு நேற்றே தொடங்கி விட்டது. கத்ரா – ஸ்ரீநகர் இடையே தினமும் இரண்டு வந்தே பாரத் ரயில்களை பகல் நேரத்தில் 4 முறை இயக்க வடக்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இருக்கை வசதி, எக்சிகியூட்டிவ் இருக்கை வசதி வந்தே பாரத் ரயிலில் உள்ளது. இருக்கை வசதிக்கு ரூ.715 என்றும், எக்சிகியூட்டிவ் இருக்கைக்கு ரூ.1,320 என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல் வந்தே பாரத் ரயில் (வண்டி எண் 26401) நாளை காலை 8.10க்கு கட்ராவில் இருந்து புறப்படுகிறது. இந்த ரயில் 11.08க்கு ஸ்ரீநகரை சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் ஸ்ரீநகரில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மாலை 4.58க்கு கத்ராவை வந்தடைகிறது. பராமரிப்புப் பணிக்காக, வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் இந்த சேவை ரத்து செய்யப்படுகிறது. 

மற்றொரு வந்தே பாரத் ரயில் (26403) தினமும் கத்ராவில் இருந்து மதியம் 2.55க்கு புறப்பட்டு மாலை 5.53க்கு ஸ்ரீநகரை அடைகிறது. பிறகு, மறுநாள் காலை ஸ்ரீநகரில் இருந்து காலை 8 மணிக்கு கத்ரா நோக்கிப் புறப்படுகிறது. பராமரிப்புப் பணிக்காக, இந்த ரயில் சேவை புதன்கிழமைகளில் ரத்து செய்யப்படுகிறது.

நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்டது இந்த ரயில்கள். குறிப்பாக, பனி பொழியும் குளிர்ச்சியான பகுதி என்பதால், கடுங்குளிரில் தண்ணீர் மற்றும் பயோ-டாய்லெட்டுகள் உறைவதைத் தடுக்க, உறைபனி எதிர்ப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வந்தே பாரத் ரயில்களில் மிதவெப்ப சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. அதனால், வெளியே கடுங்குளிர் இருந்தாலும், ரயிலின் உள்ளே வெதுவெதுப்பாக இருக்கும். 

இந்த ரயில் வழித்தடத்தில்தான் கீர் பவானி கோவில், மார்தாண்ட சூரிய கோவில் மற்றும் அமர்நாத் யாத்திரைக்கான பகுதிகளும் வருவதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்கிறது வடக்கு ரயில்வே. அதற்கேற்ப, இந்த இரு வந்தே பாரத் ரயில்களிலும் சனிக்கிழமை நாளைய பயணத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. தொடர்ந்து வரும் நாட்களுக்கும் குறைவான டிக்கெட்டுகளே உள்ளன.

இந்த இரு ரயில்களும் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் பாலத்தில் 1,315 மீட்டர் தொலைவு பயணிக்கும். இந்த ரயில்கள் 100 கி.மீ. வேகத்தில் செல்லும் வசதி கொண்டவை என்பதால் மலைகளுக்கு இடையே பறப்பது போன்ற உணர்வைப் பயணிகள் பெறலாம் என்கிறது வடக்கு ரயில்வே. 

ஜூன் 8ல் மதுரை வருகிறார் அமித் ஷா; பாதுகாப்பு தீவிரம்!

amit sha madurai visit security arrangement - 2026

வருகிற 8-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வருகிறார். தென்மாவட்ட அளவிலான பாஜக., கூட்டத்தில் பங்கேற்கும் அவர், 2026 தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கவுள்ளார்.

அதிமுக., அலை வீசும் மதுரையைக் கைப்பற்றும் முனைப்பில் பொதுக்குழுக் கூட்டத்தை அங்கு நடத்தியது திமுக. இதனிடையே, படப்பிடிப்பிற்காக மதுரை சென்ற விஜய் அரசியல் களத்தில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தினார். இதனால் மதுரைக்கு அரசியல் மவுசு அதிகரித்துவிட்டது. இந்நிலையில், பாஜக.,,வும் மதுரையை நோக்கி பார்வையைத் திருப்பியுள்ளது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வருகை ஒட்டி, மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மதுரை விமான நிலையத்தில், நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசனைக்
கூட்டத்தில், மாநகர காவல் துணை ஆணையர்கள் வனிதா இனிகோ திவ்யன்,
மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் , விமான நிலைய மத்திய தொழிலில் பாதுகாப்பு படை கமாண்டன்ட் விஸ்வநாதன், மற்றும் விமான நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மதுரை ஒத்தக்கடையில், நடைபெறும் பாஜக தென்மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகைகையை யொட்டி, பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் நாளை இரவு 8.30 மணி அளவில் அமித்ஷா மதுரை வருகிறார். பின்னர், சிந்தாமணி சுற்றுச்சாலையில் உள்ள தனியார் ஓய்வு விடுதியில் இரவு தங்குகிறார்.

(08.06.25) எட்டாம் தேதி காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனத்தை முடித்து பின்பு, ஒத்தக்கடையில் நடைபெறும் பாஜக தென்மாவட்ட நிர்வாகிகள்
கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

பகுத்தறிவற்ற அநாகரிகமே அடையாளம்!

mano thangaraj - 2026

“பல்வேறு பகுத்தறிவு பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறோம். பகுத்தறிவின் அடிப்படையில் சமூகத்தை கட்டமைக்க பார்க்கின்றோம். கோவில் திருவிழாவிற்கு அதிகளவில் கூட்டம் செல்வது உண்மையிலேயே நாகரீக சமூகத்திற்கு நல்ல அடையாளமாக என்னால் பார்க்க முடியாது. ‘நீ பார்வையாளராக இருக்காதே, பங்கேற்பாளராக இரு’ என்ற பழமொழி உண்டு” என்பதை பின்பற்ற வேண்டும்” – இவ்வாறெல்லாம் பேசியிருப்பவர் யாரோ ஒரு தெருவோர மதப் பிரசாரகரோ அல்லது நான்கு அறைக்குள் வீராவேசம் பேசும் ஏதோ ஓர் இயக்கத்தவரோ இல்லை; தமிழகத்தின் ஆளும் கட்சியின் முக்கியப் பொறுப்பில் உள்ள ஓர் அமைச்சர், அதுவும் வெளியேற்றப்பட்டு மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட அமைச்சர் மனோ தங்கராஜ்.

பெங்களூருவில் உள்ளூர் அணியான ஆர்சிபி அணி, ஐபிஎல் 2025 போட்டியின் கோப்பையைக் கைப்பற்றிய வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட திடீர் நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்த பரிதாபச் சூழல் ஏற்பட்டது குறித்த கேள்விக்கு, தமிழகத்தைச் சேர்ந்த ஓர் அமைச்சரின் விளக்கம் தான் இது.

அவரது இந்தக் கருத்து பெரும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதே நேரம் இக்கருத்தை வெளிப்படுத்திய அமைச்சர் மனோ தங்கராஜ், ஊடகத்தினர் தனது கருத்தைப் புரிந்து கொண்டு மேலும் கிளறாமல் மலிவு அரசியல் செய்ய வேண்டாம் என்றும் சமூகத் தளப் பக்கத்தில் வேண்டுகோள் வைக்கிறார். கேட்டது ஒரு கேள்வி, சொன்னது ஒரு பதில், இதில் சம்பந்தப் பட்ட நபரின் மனத்தில் உறைந்துள்ள மத ரீதியான விஷம் வெளிப்பட்டிருக்கிறது. எனினும் இதை கேட்டு சகித்துக் கொண்டு, எல்லோரும் அமைதியாகிப் போய் விடவேண்டுமாம்! என்ன ஒரு கோரிக்கை!?

இவரது அர்சியல் கருத்துக்கு அரசியல் ரீதியாக பதிலடி கொடுத்திருக்கிறது பாஜக.,! அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர், பகுத்தறிவு, வெங்காயம் என்று பதில் அளித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.

இதை அடுத்து, பாஜக., மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட பதிவில், “கோவிலுக்கு செல்வது அநாகரீகம், ஆனால், சர்ச்சுகளுக்கு செல்வது நாகரீகமா? இவர் சர்ச்சுகளுக்கு செல்வார், ஆனால் மக்களை கோவிலுக்கு செல்லக்கூடாது என்று சொல்வார். தைரியமிருந்தால் இனி யாரும் ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுகளுக்கு செல்லாதீர்கள், வேளாங்கன்னி திருவிழாவுக்கு செல்லாதீர்கள் என்று கூற முடியுமா? குருத்தோலை ஞாயிறு திருவிழாவுக்கு கிருஸ்துவர்கள் செல்ல வேண்டாம் என்று கூற துணிவு உண்டா? ஹிந்து விரோத எண்ணமும், கிருஸ்துவ மதவாதமும் ஒருங்கே கொண்டிருக்கும் இவரை அமைச்சராக்கியது தான் பிரச்சினையே! மனோ தங்கராஜ் ஒரு மதவாதி என்பதற்கு இந்த பேச்சே சாட்சி. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே, மதவாதி யார் என்று இப்போது தெரிந்து விட்டது. அமைச்சர் பதவியை விட்டு விலக்கி பார்வையாளர் யாரையாவது அமைச்சரவையில் பங்கேற்பாளராக்குவீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மனோ தங்கராஜின் இந்தக் கருத்துக்கு சமூகத் தளங்களிலும் கடும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. அமைச்சரின் இந்தக் கருத்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் புனிதமாகக் கருதப்படும் மக்களின் மத நம்பிக்கைகள் மற்றும் உரிமைகளை மறைமுகமாக அவமதிக்கும் வகையில் இருக்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25, மக்களுக்கு மதச் சுதந்திரத்தை வழங்குகிறது, இதில் மத வழிபாடு மற்றும் மத நிகழ்வுகளில் பங்கேற்கும் உரிமையும் அடங்கும். அரசு அமைப்புகளின் கீழ் இயங்கும் கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களில் மக்கள் கூடுவது அவர்களின் அடிப்படை உரிமை.

அமைச்சரின் கருத்து, மக்களின் மத நம்பிக்கைகளை “நாகரீகமற்ற” செயலாகச் சித்திரிப்பதாகவும், அது மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும், அரசின் ஹிந்து சமய அறநிலையத் துறையின் பணிகளை மறைமுகமாகக் குறைத்து மதிப்பிடுவதாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். இது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14 (சமத்துவ உரிமை) மற்றும் பிரிவு 51A(e) (பிறர் மத உணர்வுகளை மதிக்க வேண்டும் என்ற கடமை) ஆகியவற்றிற்கு முரண்.

இவரது பேச்சு நீதிமன்றம் சென்றால், அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் மதச் சுதந்திரம் மற்றும் பேச்சுரிமை (பிரிவு 19) ஆகியவற்றுக்கு இடையேயான நுட்பமான சமநிலை பரிசீலிக்கப்படக் கூடும்!

இதில் உயிரிழந்தவர்கள், இந்த அமைச்சரின் கூற்றுப்படி, வெறும் பார்வையாளராகவே இருந்திருந்தால் வீட்டில் அமர்ந்து கொண்டு டி.வி. பெட்டிகளில் மொபைல் போன்களில் பார்த்துவிட்டு சந்தோஷமாக இருந்திருப்பார்கள். ஆனால் இவர்களைப் போன்றோர் சொல்லும் பங்கேற்பாளனாக இரு என்ற சொல் பேச்சைக் கேட்டுத்தான், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக இருக்க ஆசைப்பட்டு, நேரில் சென்று இந்தத் துன்பத்துக்குக் காரணமானார்கள். அதற்கான போதனைகளைச் செய்தது இவர்களைப் போன்ற பகுத்தறிவாளர்கள் தான் என்று சொல்லவே தோன்றுகிறது.

விடுமுறைகள் முடிந்து தங்கள் ஊர்களுக்குத் திரும்பும் மக்கள் இப்போது திமுக., அரசால் ஊருக்கு வெளியே திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிகிறார்கள். அவர்களுக்கு ஊர் திரும்புவதற்கு வசதி செய்து தரவேண்டியது மாநில அரசு. அதன் கையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகம். அந்தக் கடமையில் இருந்து அரசு தவறி, பேருந்துகள் இயங்காமல் மிகச் சில மணி நேரங்களில் கூட்டம் கூடுகிறது. கூடியது மக்கள் தவறல்ல! கூட்டம் சேர்த்தது அரசின் தவறு. அவர்களிடம் போய், நீங்கள் இப்படி ஒன்றுபோல் ஒரே நேரத்தில் கூட்டமாக வரக்கூடாது, இது பகுத்தறிவா என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பீர்களா என்ன?

மொத்தத்தில், இது ஓர் அநாகரிகக் கூட்டம்! பிறர் மனத்தைப் புண்படுத்தும் அரக்கத்தனமே தெரிகிறது! இவர்களுக்கு பகுத்தறிவு என்பது திருடனே மற்றனைப் பார்த்து திருடன் திருடன் என்று கத்திக் கொண்டு கூட்டத்தில் கலந்து தப்பிக்கும் சங்கேத வார்த்தை!

பரன்குன்றம் வைகாசி விசாகம்; வசந்த உத்ஸவம் ஊஞ்சல் சேவை!

thirupparankundram murugan emple vaikasi visakam - 2026

திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு வசந்த உற்சவ விழா-சுப்ரமணியசாமி தெய்வானை வசந்த மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வசந்த உற்சவ விழா வைகாசி விசாகத் திருவிழா கடந்த மாதம் 31 ஆம் தேதி முதல் தொடங்கி வெகு விமர்சனம் நடைபெற்று வருகிறது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் வசந்த உற்சவ விழா 10 நாட்கள் நடைபெறும் இந்த ஆண்டுக்கான கடந்த மாதம் 31ஆம் தேதி தொடங்கியது விழாவினை முன்னிட்டு, உற்சவர் சன்னதியில் சுப்ரமணிய சுவாமி தெய்வானை, சண்முகர் வள்ளி தெய்வானைக்கு பால் பன்னீர் இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

தொடர்ந்து, உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார் அங்கு வசந்த மண்டபத்தில் நீர் நிரப்பப்பட்ட தொட்டியில் பூக்கள் பரப்பப்பட்டு விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார் .

அரை மணி நேரம் அங்கு சுவாமி தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் . இதேபோல ,வருகின்ற எட்டாம் தேதி வரை சுவாமி தினமும் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் அளிப்பார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வருகின்ற ஒன்பதாம் தேதி விசாகத்தன்று சண்முகர் வள்ளி தெய்வானைக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பக்தர்கள் பால்குடமாக கொண்டு வரும் பால் கொண்டு காலை முதல் மதியம் வரை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகின்ற 10ஆம் தேதி மொட்டை அரசு திருவிழா நடைபெறும்.

விழாவினை ஒட்டி அதிகாலையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி தியாகராஜர் பொறியியல் கல்லூரி அருகே உள்ள மொட்டை அரசு திடலில் எழுந்தருளுவார். காலை முதல் மாலை வரை அங்கு பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் சுப்பிரமணிய சுவாமி இரவு பூ பல்லாக்கில் திருப்பரங்குன்றம் கோயிலை வந்து அடைவார். விழாவிற்கான ஏற்பாடுகளை,
கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

விசாகத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் கூட்டம்

மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் – கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.

வரும் ஜூன் ஒன்பதாம் தேதி வைகாசி விசாகத்தை முன்னிட்டு, அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் உள்ள கந்தசஷ்டி மண்டபத்தில் நடைபெற்றது .
கூட்டத்திற்கு, திருமங்கலம் கோட்டாட்சியர் ஷாலினி தலைமை வைத்தார். கோவில் இணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள் என்பதால் அவர்களுக்கான குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி,பாதுகாப்பு வசதி உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.பக்தர்கள் பாதுகாப்பாக சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள், தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டது.

வைகாசி விசாகத்தன்று பாதுகாப்புக்காக 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.அசம்பாவிதத்தை தடுக்கும் விதமாக தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளது,வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் கிரிவலப் பாதை, நான்கு ரத வீதிகளில் போக்குவரத்திற்கு தடை விதித்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கோவில் அறங்காவலர் குழுவினர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.