Home Blog Page 95

யார் அந்த சார்? மீண்டும் அண்ணாமலை எழுப்பிய கேள்விகள்!

annamalai sattaiyadi - 2026

தான் முன்னர் சாட்டையால் அடித்துக் கொண்ட சம்பவத்துக்கும், தற்போது ‘யார் அந்த சார்?’ கேள்வியே அமுங்கிப் போயிருப்பதற்கும் விளக்கம் சொல்லி, அண்ணாமலை சில கேள்விகளை இன்று சமூகத் தளங்களில் முன்வைத்துள்ளார்.

முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் முறைகேட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய திமுக.,வைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவருக்கு இது தொடர்பில் குற்றவாளி என்று கூறி, 30 வருட சிறைத் தண்டனை அறிவித்தது மகளிர் நீதிமன்றம். மேலும், அது தொடர்பில் பேசிய அரசு வழக்குரைஞர், குற்றவாளி ஞானசேகரன் ஒருவர் மட்டும் தான் என்றும், இனி எவரும் யார் அந்த சார் என்பதைக் கேள்வியாக எழுப்பக் கூடாது என்றும், அவ்வாறு எழுப்பினால் அது நீதிமன்ற அவமதிப்பில் சேரும் என்று ஊடகங்களில் கூறினார். இதுவே பலரது சந்தேகத்தைக் கிளறியது .

இந்நிலையில் பாஜக., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று சமூகத் தளங்களில் கேள்விகளை எழுப்பி பரபரப்பை ஏறபடுத்தியுள்ளார். அதில் அவர் எழுப்பியுள்ள சில கேள்விகள், இந்த வழக்கின் முக்கியத்துவத்தையும், முறைகேடுகளையும் மீண்டும் மக்கள் மத்தியில் கேள்விகளாக எழுப்பியுள்ளது.

இது தொடர்பில் சிடிஆர் எனப்படும் தொலைபேசி அழைப்பு விவரங்களைக் குறிப்பிட்டு, இந்த வழக்கு சம்பந்தமாக 24.12.2024 அன்று இரவு ஞானசேகரன் காவல்துறையால் விடுவிக்கப்பட்ட பிறகு யார் யாரிடம் எல்லாம் ஞானசேகரன் பேசி இருக்கிறார் என்ற விவரங்களை ஆதாரத்துடன் தெரிவித்து இருக்கிறார்.

24ம் தேதி ஆதாரத்தை அழித்துள்ளார்கள்! கோட்டூர் சண்முகத்தையும், அமைச்சர் மா.சு.வையும் ஏன் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கவில்லை? 24ம் தேதி இரவு 2 காவல்துறை அதிகாரிகள் FIR போடவேண்டாம் என மாணவியிடம் கெஞ்சியுள்ளனர் ஏன்? இது பற்றியெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின் வாய் திறக்காதது ஏன்?

அண்ணா பல்கலையில் அதிகாரியாக வேலை பார்க்கும் நடராஜனும், தி.மு.க., வட்டச் செயலாளர் கோட்டூர்புரம் சண்முகமும், யாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த டிச.,23ம் தேதியுடன் தொடங்கும் 4 நாட்களில் மட்டும் 13 முறை பேசியுள்ளனர். டிச.,24ம் தேதி இரவு தான் முக்கியமான தினம். அன்று தான் ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன என்று தனது வீடியோவில் அண்ணாமலை கூறுகிறார்.

மேலும், இந்த விஷயமாக அண்ணாமலை எழுப்பியிருக்கும் கேள்விகள் வழக்கோடு மிகவும் நெருக்கமாக சம்பந்தபட்டு இருக்கிறது என்பதால், எளிதில் கடந்து போக முடியாதபடி பின்னிப் பிணைந்து இருக்கின்றன என்று கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

சம்பவம் நடந்ந 24.12.2024 அன்று இரவு ஞானசேகரனின் மொபைல் போன், ஏரோப்பிளேன் மோடில் இருந்து வெளியே வந்த பிறகு, ஞானசேகரன் பேசியிருக்கும் முதல் போன் ஒரு போலீஸ் அதிகாரியுடன் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று இரவு திமுக வட்டச் செயலாளர் கோட்டூர் ஷண்முகத்தோடு பல முறை பேசி இருக்கிறார். மறுநாள் ஷண்முகம் சுகாதாரத்துறை அமைச்சரோடு பேசி இருக்கிறார்.

இந்த போன் உரையாடல்கள் பலமுறை நடந்த பிறகு 25.12.2024 இரவு அன்று ஞானசேகரன் மீண்டும் கைது செய்யப்படுகிறார். 24.12.2024 அன்று விடுவிக்கப்பட்ட பிறகு மீண்டும் 25.12.2024 வரை கைது செய்யப்படும் வரை இடைப்பட்ட 24 மணி நேரத்தில் நடந்தது என்ன?

வழக்கின் முதுகெலும்பான சம்பவம் நடந்த 24.12.2024 அன்று இரவு நடந்த நிகழ்வுகள் எல்லாம் முறையாக விசாரிக்கப்பட்டதா? ஞானசேகரனோடு சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டார்களா?

இந்த நிகழ்வுகளை எல்லாம் தேதி, நேரம் வாரியாக ஆதாரத்துடன் விரிவாக சொல்லி கேள்விகள் கேட்கிறார் அண்ணாமலை.

மேலும், தான் இந்த வழக்கின் முக்கியத்துவத்தைச் சொல்லியே, அன்றைய நாளில் சாட்டையால் அடித்துக் கொண்டதாகவும், இப்போதும் அந்தக் கேள்விகள் பதிலெதுவும் தரப்படாமல் அப்படியே உள்ளதாகவும் குறிப்பிடும் அண்ணாமலை, மேலும் இரு நாட்கள் நேரம் கொடுப்பதாகவும், அதுவரை இதில் தொடர்புடைய காவல் அதிகாரிகளின் அடையாளங்களை வெளியிடப் போவதில்லை என்றும் குறிப்பிடுகிறார்.

பத்து வருடங்களுக்கு மேல் காவல் உயரதிகாரியாக பணி செய்த அனுபவம் இருப்பதால், ஒரு சாமான்யனின் பார்வையாகப் பார்க்காமல் ஒரு காவல் உயரதிகாரியின் பார்வையாகப் பார்த்து இந்தக் கேள்விகளை முன் வைக்கிறார்.

ஒரு நேர்மையான அரசாக இருந்தால் அண்ணாமலையின் நியாயமான கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய தார்மீக கடைமை அரசுக்கு இருக்கிறது என்றும், இது அண்ணாமலையின் கேள்விகள் மட்டும் அல்ல. தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த தமிழ் மக்களின் மனதில் இருக்கும் கேள்விகள் என்றும் சமூகத் தளங்களில் பலரும் பதிவு செய்து வருகிறார்கள்.

அண்ணாமலையின் சமூகத் தளப் பதிவு:

https://twitter.com/annamalai_k/status/1929762481758728514

அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதல் வழக்கில், திமுக நிர்வாகி ஞானசேகரனுக்கு, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. #SaveOurGirls_NotYourSir எனினும், இந்த வழக்கு தொடர்பான பல விடை தெரியாத கேள்விகள், இன்னமும் எஞ்சியிருக்கின்றன. யாரை காப்பாற்றத் துடிக்கிறது இந்த திமுக அரசு? சில விடைகளும், பல கேள்விகளும்!

https://twitter.com/i/status/1929762481758728514

புளிய மரத்தில் பேய்கள் தாண்டவம் ஆடுமா?

roadside puliyamaram - 2026

— கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்,
ஆசிரியர் கலைமகள்

காஞ்சிபுரம் பக்கத்தில் சாலையில் நடந்து கொண்டு வருகையில் புளிய மரம் ஒன்று கண்ணில் தட்டுப் பட்டது! புளிய மரம் பக்கம் போகாதே!! பேய் இருக்கும் என்றான் எனது நண்பன்.

உலகம் முழுவதும் பேய் பற்றிய ஆராய்ச்சிகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இயற்கையான மரணம் தவிர மற்ற மரணங்கள் மனிதனுக்கு சம்பவிக்கும் பொழுது (விபத்து மற்றும் தற்கொலை) அந்த மனிதனுடைய ஆவி நேரடியாக சொர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோச் செல்லாமல் பூமியிலேயே சுழன்று கொண்டிருக்கும். இதைத்தான் பேய் பிசாசு என்கிறார்கள். இயற்கையான மரண காலம் வரை இந்த நிகழ்வு நடைபெறும் என்பது பொதுவாக மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது!

விஞ்ஞானப் பூர்வமாக இதுவரை பேய் சம்பந்தமாக நடத்தப்பட்ட ஆய்வுகள் பேய் என்கின்ற ஒன்று இல்லை என்று தான் சொல்கின்றன. பாழடைந்த வீடுகளிலோ அல்லது சில வீதிகளிலோ அளவுக்கு அதிகமான காந்த ஈர்ப்பு இருக்கும்பொழுது புதிய ஒலி, ஓசைகளும், நம் மீது ஏதோ ஒன்று தொடுவது போன்ற உணர்வுகளும் ஏற்படுவதுண்டு! இதைக் கூட மக்கள் பேய் என்று எண்ணி இருக்கலாம் என்று மேலைநாட்டு அறிஞர்கள் சொல்கிறார்கள்.

புளிய மரத்தில் பேய்கள் குடி கொண்டிருக்கும் என்பதில் துளி கூட உண்மை இல்லை! புளிய மரத்தின் அடியில் அதிகம் செல்லக்கூடாது என்பதற்கு என்ன காரணம்? என்றால் புளிய மரம் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகமாக இருக்கும். அதன் அடியில் அதிக நேரம் நின்றால் உஷ்ணம் ஏற்படும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அறிவியலும் இதை ஒப்புக்கொள்கிறது!

உண்மையைச் சொல்லப் போனால் புளியமரம் புனிதமானதும் கூட!

தெய்வக் குழந்தை அது! அந்தக் குழந்தை பால் குடிக்காமல் எத்தனை நாள் இருக்கும்? பெற்றோர்களுக்கு கவலை வந்தது. ஆனால் குழந்தை மாறனுக்கோ எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. எப்போதும் கண்ணை மூடிக்கொண்டு பகவத் நாமாவை மனதில் இறுத்திக் கொண்டு அப்படியே வளர்ந்து வந்தது. திருக்குருகூர் கோயிலுக்குக் கொண்டுசெல்ல பெற்றோர்கள் முடிவு செய்தார்கள். அந்தக் குழந்தை அங்கு சென்றது, ஆனால் அங்கு இருக்கக்கூடிய ஒரு புளிய மரத்தடிக்குச் சென்று அங்கேயே பதினாறு ஆண்டுகள் தவம் செய்யத் தொடங்கிவிட்டது!

ஞானம் வளர்ந்தது. தத்துவங்கள், சாத்திரங்கள் என அனைத்தையும் அங்கேயே கற்றுக்கொண்ட மாறனிடமிருந்து வீசிய தெய்வீக ஒளி எல்லோரையும் கவர்ந்தது. ‘இந்தப் பிள்ளையிடம் ஏதோ சிறப்பு இருக்கிறது’ என்று ஊரில் உள்ளோர் வியப்போடுப் பேசிக்கொண்டார்கள்.

அந்த ஞான ஒளியை, அயோத்தியில் ஒருவர் கண்டார். அவர் தான் மதுரகவி ஆழ்வார்! இந்த ஒளியைப் பார்த்ததும் மதுரகவி ஆழ்வார் திகைத்துப்போனார். இது எங்கிருந்து வருகிறது? என்று யோசித்தார். அதைத் தேடிச் செல்லத் தீர்மானித்தார். அயோத்தியிலிருந்து திருக்குருகூருக்கு வந்தார்.

சரயு நதியிலிருந்து தாமிரபரணி நோக்கி அவருடைய புனித பாதங்கள் பயணித்தன! தவத்தில் இருந்த மாறனை, மதுரகவி ஆழ்வார்தான் விழிக்கச் செய்தார். அவரிடம் ஒரு கேள்வி கேட்டார் அவர் “செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால்”

“எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?

தியானத்திலிருந்த அந்த குழந்தை சொன்ன பதில் “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்”.

மதுரகவி ஆழ்வார் ‘செத்தது’ என்று சொல்வது உடம்பைதான். அது அறிவற்ற பொருள் அல்லவா?அந்த உடம்பில் சிறியது, அதாவது உயிர் பிறக்கிறது. அந்த உடலை இயக்குகிறது.உடம்பில் உயிர் சென்று சேர்கிறது என்றால், அது பிறக்கிறது என்று அர்த்தம். அப்போது அது எதை அனுபவித்துக்கொண்டு எங்கே இருக்கும் என்பதுதான் மதுரகவியாரின் கேள்வி.

ஒருவன் ஜனிக்கிறான் என்றால், அதன் காரணம் அவன் செய்த பாவ புண்ணியத்தைப் பொறுத்து அமைகிறது! பூமியில் பிறந்த வினைகள் தீரும் வரை அந்த ஆத்மா அந்த உடலிலேயே கிடக்கவேண்டியதுதான்.

இந்தப் பதிலைக் கேட்டதும் மதுரகவி ஆழ்வார் மகிழ்ந்தார். இப்படி பதில் சொன்ன அந்தக் குழந்தைதான் நம்மாழ்வார்.

நம்மாழ்வாருடைய கூர்மையான சூட்சமமான அறிவையும் பக்தியையும் கண்டு வியந்து, அவரையே தனது குருவாக ஏற்றுக்கொண்டார். புளிய மரத்தடியில் தான் நம்மாழ்வாருக்கு சகலமும் கிட்டியது!!

பாண்டி நாட்டில் தன் கணவர் பரமதத்தன் இருக்கும் இடம் தேடி போனார் காரைக்கால் அம்மையார். ஆனால் கணவரோ அவரைத் தெய்வப் பெண்மணி என எண்ணி தனது இரண்டாவது மனைவியிடம் சொல்லி அவர் பாதம் தொட்டு குழந்தைகளுடன் வணங்கினார்!!

தன் கணவர் நிலை உணர்ந்து தன் உடல் நீக்கி பூத வடிவம் கொண்டு பேய் உருவில் தலைகீழாக நடந்து கைலாயம் புறப்பட்டார் காரைக்கால் அம்மையார். அம்மையின் உருவைப் பார்த்து மனம் இறங்கி சிவபெருமான் “அம்மையே” என அழைத்து அவருக்குத் தன் திருத்தாண்டவம் காட்டி திருவாலங்காட்டிற்கு வரப்பணித்து அங்கு அருளிய இறைவன் தன் திருவடிக் கீழ் என்றும் இருக்க அருளினார்.

பேய் வடிவம் பூத வடிவம் கொண்டும் இறைவனை அடையலாம். பேய் என்னும் பூதம் கண்டு பயப்பட வேண்டாம் என்பதுதான் இக்கதை நமக்குச் சொல்லும் பாடம்! புளிய மரத்தடியில் இருந்தாலும் ஞானம் கிடைக்கும் பேய் பயம் கொள்ள வேண்டாம் என்பதை நமது மகான்களின் வாழ்க்கையும் அறிவுறுத்துகிறது!!

புளியை உணவில் அளவோடு சேர்த்துக் கொள்வது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. உணவுச் செரிமானத்தில் பெரும் பங்காற்றுவது வயிற்றில் உள்ள ஹைட்றோ க்ளோரிக் அமிலம். அமிலத் தன்மை செரித்தலுக்குச் செரிவூட்டுகிறது என்பதை உணர்ந்து அமிலத்தன்மை மிக்க புளியினை உணவில் பயன்படுத்தத் துவங்கியது மனித சமூகம்.

புளியில் உள்ள சைலோ க்ளூக்கன் ஓட்டும் தன்மையற்ற செல்லுலோஸ் மீது படரும் திறன் கொண்டது. எனவே சோற்றுப் பருக்கையில் எளிதில் படர்ந்து ஒட்டிக் கொள்வதால் இதனை உடைத்து பாக்டீரியாக்களால் பருக்கைகளை அணுக இயலாது. இதனால்தான் புளியம் சாதம் நீண்ட நாள் கெடுவதில்லை. புளியோதரை இறைவனுக்கு நேவேத்தியம் ஆகவும் படைக்கப்படுகிறது!

அதே சமயத்தில் புளி கொஞ்சம் அதிகமாக உணவில் சேர்க்கப்பட்டு அதனை நாம் ருசி பார்த்தால் நமது முகம் அஷ்ட கோணலுக்குப் போகும்!! அப்போது நம்மை நாம் கண்ணாடியில் பார்த்தால் “பேய் போல் தான் தெரிவோம்” என்கிறார் என்னுடைய பால்ய நண்பர் டபுள். யு. கே. சுப்பிரமணியம்!

புளியோதரை பிரசாதம் செய்முறை:கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, நிலக் கடலைப்பருப்பு ஆகியவற்றை எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும் பின்னர்

கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்க வேண்டும். ஏற்கனவே ஊற வைத்த புளித் தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த பருப்பு, தாளிப்பு இவைகளுடன் புளித்தண்ணீர், உப்பு, பெருங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் பொடி சேர்த்து அந்தக் கலவையை

வடித்த சாதத்தின் மீது கொட்டி நல்லெண்ணெய் சேர்த்து கலக்க வேண்டும். சாதம் ரொம்ப குழையாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். பகவானுக்கு படைக்கப்படும் இந்த பிரசாதத்தின் பெயரேபுளியோதரை தான்! புளிய மரத்தில் பேய்கள் வாசம் செய்தால் அந்தப் புளியினை நாம் பிரசாதத்தில் சேர்த்துக் கொள்வோமா? எனவே பேய் என்பது நமது மனதில் எழுகிற ஒரு அச்ச உணர்வு தான்!

மலையேற்றம் உயிருக்கு ஆபத்தா? முன்னேற்பாடுகள் என்ன?

sathuragiri - 2026

மலையேற்றம் ஆபத்தானதா?

டாக்டர் B.R.J. கண்ணன், மதுரை

மலையேற்றம் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வு கொடுக்கும் விஷயம்தானே?

கண்டிப்பாக. அதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். நம் முன்னோர்கள் எங்காவது குன்றோ, சிறிய மலையோ இருந்தால் அங்கெல்லாம் கோவிலைக் கட்டி வைத்துள்ளார்கள். கடவுளை வழிபடும் நோக்கத்திலாவது மக்கள் மலை ஏற வேண்டும் என்பதற்காகத்தான் அவ்வாறு செய்தார்கள்.

மலை உச்சிக்குச் செல்லும் போது ஆக்சிஜன் அளவு குறையும் என்கிறார்களே?

இது உண்மையல்ல. நாம் ட்ரெக்கிங் (trekking) செல்லத்தக்க பெரும்பாலான மலைகளின் உச்சி கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டருக்கும் குறைவான உயரத்தில்தான் உள்ளன. உதாரணத்திற்கு, வெள்ளியங்கிரி மலையின் உயரம் 1800 மீட்டர். ஆக்சிஜன் தட்டுப்பாடு ஒரு பிரச்சனை அல்ல.

சமீபத்தில் மலையேற்றம் செய்து பலர் உயிரிழந்திருக்கிறார்களே?

மலையேற்றத்தால் உயிர் இழப்பது என்பது அசாதாரண நிகழ்வு. ஆயிரக்கணக்கானோர் பல வருடங்களாகச் இது போன்ற மலைகளுக்குச் சென்று வந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் மனமும் உடலும் மேம்பட்டிருக்கிறது. அவைகள் எல்லாம் செய்திகள் ஆகாது. இதுபோன்ற விதிவிலக்காக நடப்பவைகள் தான் செய்திகளாக வெளி வருகின்றன. அவ்வப்பொழுது நடக்கும் விபத்துகளைக் காரணம் காட்டி பேருந்து பயணமோ இரயில் பயணமோ ஆபத்தானது, தவிர்க்கப்பட வேண்டியவை என்று கூறுவது அபத்தம் அல்லவா?

மலையேற்றம் அல்லது உடற்பயிற்சி விஷயங்களில் மக்கள் செய்யவேண்டியது என்ன?

முதலாவது, நம்மைத் தயார்படுத்திக் கொள்ளுதல். சிறிய மலைகளுக்கு, உதாரணமாக அழகர்மலையில் இருக்கும் பழமுதிர்சோலைக்குச் செல்ல தனியாகப் பயிற்சி எதுவும் தேவையில்லை. அதில் ஏற்றமும் குறைவு, தூரமும் குறைவு. ஆனால் சதுரகிரி, வெள்ளியங்கிரி போன்ற மலைகளுக்குச் செல்லும் முன் நம்மைத் தயார்படுத்திக் கொள்வது அவசியம். குறைந்தது ஒரு மாதமாவது நடைப்பயிற்சி, சிறிய ஓட்ட பயிற்சி போன்றவற்றைச் செய்து இதயத்தையும் கால் தசைநார்களையும் பழக்கப்படுத்த வேண்டும். ஐயப்பனுக்குப் பெரியப்பாதையில் செல்பவர்கள், அதிலும் முதல் முறையாக (கன்னிச் சாமியாக) செல்பவர்கள், ஒரு மண்டலம் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார்கள் அல்லவா?

இரண்டாவது, நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்று அறிந்து செயல்படுதல். மலை ஏறும் பொழுது நிதானமும் சீரும் ( ‘slow and steady’ ) என்பதே மந்திரமாக இருக்க வேண்டும். சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட தூரத்தை பலர் 20 நிமிடங்களில் கடப்பார்களானால் ஒரு சிலருக்கு 30 நிமிடங்கள் தேவை. திடீர் மரணம் என்று பேசப்பட்டாலும், அதற்குப் பல மணி நேரங்கள் முன்பாகவே நம் உடல் தன் இயலாமையைப் பல சமிக்ஞைகள் மூலம் தெரிவிக்கும். அதை உணர்ந்து போதிய ஓய்வு எடுத்து, அதன் பின்னரே பயணத்தைத் தொடர வேண்டியது அவசியம். அந்த உணர்வுகளைப் புறந்தள்ளிவிட்டு நானும் செய்து காண்பிக்கிறேன் பார் என்று உடலை வருத்துபவர்கள்தான் ஆபத்தில் மாட்டிக் கொள்கிறார்கள்.

மூன்றாவது உணவும் நீரும். நம் உடம்பிற்கு சக்தி தேவைப்படும் என்பதால் தின்பண்டங்களை அவ்வப்பொழுது எடுத்துக் கொள்ளலாம். அதைவிட முக்கியம் நம் உடம்பில் நீர்நிலை குறையாமல் பார்த்துக் கொள்வது. உப்பு கலந்த நீரையோ, மோரையோ, வேறு பழ ரசங்களையோ அவ்வப்பொழுது குடித்துக்கொண்டே செல்வது மிகவும் அவசியம்.

என்னென்ன நோய் உள்ளவர்கள் மலையேற்றத்தைத் தவிர்க்க வேண்டும்?

இதயம், நுரையீரல், நரம்பு மண்டலம், கால்களின் எலும்புகள் தசைகள் என்று எல்லாமும் நலமாக இருந்தால்தான் வெற்றிகரமாக மலையேறித் திரும்ப முடியும். இதில் ஏதேனும் பிரச்சனை இருக்கும் பட்சத்தில் அதற்கான மருத்துவரிடம் முறையாகக் கலந்தாலோசித்து மலையேற்றம் பாதுகாப்பானதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அப்படியானால் எல்லோரும் மருத்துவரிடம் சென்று சான்றிதழ் பெற வேண்டுமோ?

தேவையில்லை. ஒன்றிரண்டு மாதங்கள் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது அல்லவா? அந்தச் சமயத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றால், இளைஞர்கள் (40 வயதுக்குட்பட்டவர்கள்) எந்த ஒரு பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அந்தச் சமயத்தில் ஏதேனும் பிரச்சனை தோன்றும் பட்சத்தில் மருத்துவரைக் கண்டிப்பாக அணுக வேண்டும். நாற்பது வயதிற்கு மேல் முதல் முறையாக உடற்பயிற்சி செய்யத் தொடங்குபவர்கள் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்ற அடிப்படைப் பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டும். இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு நாங்கள் இதய ஒலிப்படம் (ECHO), டி எம் டி (TMT) போன்ற பரிசோதனைகளைச் செய்து அறிவுரை வழங்குவோம்.

மலையேற்றத்தில் உங்கள் அனுபவம் என்ன?

மதுரையிலும் அதனைச் சுற்றியுள்ள ஏறக்குறைய எல்லா மலைகளிலும் ஏறி இருக்கிறேன். திருப்பரங்குன்ற மலையில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு ஏறும் பாதை சீனப் பெருஞ்சுவரை விட அருமையாகக் கட்டப்பட்டுள்ளது. கீழக்குயில்குடியில் இருக்கும் சமணர் மலையும் நான் அடிக்கடி சென்று வரும் ஓர் இடம். யானைமலை ஏற்றம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. வால் வழியாக ஏறினால் சிறிய ஏற்றம், பின்னர் மூன்றரை கிலோமீட்டர் ஏற்றமான நடையாக யானையின் தலை உச்சிவரை சென்று திரும்பலாம். தும்பிக்கை வழியாக ஏறினால், யானையின் கண் பகுதிவரை எளிதாகச் செல்லலாம். அதற்குமேல் தலைப் பகுதிக்குச் செல்வது சற்றுக் கடினம், ஆபத்தானது கூட.

மதுரையிலிருந்து 30 கி.மீ தொலைவில் செல்லம்பட்டியில் இருக்கும் திடியன் மலை 215 மீட்டர் உயரம் கொண்டது. வெள்ளியங்கிரி செல்ல நினைப்பவர்கள் இந்த மலையில் நான்கு முறையாவது ஏறி பயிற்சியும் அனுபவமும் பெறலாம். அதேபோல், 610 மீட்டர் உயரம் கொண்ட பிரான்மலையும் நாம் சென்றுவரலாம். இது மதுரையிலிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ளது. சதுரகிரிக்குச் சென்று சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசித்துள்ளேன்.

நானும் இன்னும் சில நண்பர்களும் நண்பர் மருத்துவர் கல்யாணசுந்தரம் தலைமையில் கொடைக்கானல், குரங்கணி, கொழுக்குமலை, என்று பல இடங்களுக்கு மலையேறியிருக்கிறோம். தென்னிந்தியாவிலேயே அதிக உயரம்கொண்ட ஆனைமுடியும் (2700 மீட்டர்) இதில் அடங்கும். இரண்டு நாட்கள் நடந்து, இரவில் மின்சார வசதியும் இல்லாத ஒரு மலையில் உறங்கி நாங்கள் சென்றுவந்த மீசப்புலிமலை (2640 மீட்டர்) பயணத்தை என்றென்றும் மறக்க முடியாது.

ஆக, மலை ஏற்றம் மனதிற்கும் உடலுக்கும் ஓர் இதமான அனுபவம். ஏன் நாம் எல்லோரும் இதை அனுபவிக்கக்கூடாது?

IPL 2025: பஞ்சாப் ஷ்ரேயாஸ் ஐயரின் தனிப்பட்ட வெற்றி!

ipl 2025 games - 2026

ஐபிஎல் 2025 – தகுதி ஆட்டம்-2 – 01.06.2025 – அகமதாபாத் – மும்பை vs பஞ்சாப்

ஐயரின் தனிப்பட்ட வெற்றி

— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

மும்பை இந்தியன்ஸ் அணியை (203/6, சூர்யகுமார் யாதவ் 44, திலக் வர்மா 44, ஜானி பெயிர்ஸ்டோ 38, நமன் திர் 37, ஹார்திக் பாண்ட்யா 15, ரோஹித் ஷர்மா 8, அஸ்மத்துல்லா ஒமர்சாய் 2/43, கைல் ஜேமிசன், மார்கஸ் ஸ்டோயினிஸ், விஜயகுமார் வைஷாக், சாஹல் தலா ஒரு விக்கட்) பஞ்சாப் கிங்க்ஸ் அணி (207/5, ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 87, நெஹல் வதேரா 48, ஜோஷ் இங்கிலீஷ் 38, பிரியான்ஷ் ஆர்யா 20, அஷ்வினி குமார் 2/55, போல்ட், ஹார்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கட்) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற பஞ்சாப் கிங்க்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மும்பை அணி முதலில் மட்டையாட வந்தது. ஆட்டம் தொடங்குவதற்கு சற்று நேரம் முன்னதாக அகமதாபாத்தில் மழை பெய்தது. அதனால் ஆட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.

மழை காரணமாக ஆட்டக்களத்தின் தன்மை மாறியிருக்குமோ என்ற அச்சத்தோடு பஞ்சாப் அணி களமிறங்க, மும்பை அணியின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்து பஞ்சாப் அணிக்கு நிம்மதியளித்தார்.

மற்றொரு தொடக்க வீரர் ஜானி பெயர்ஸ்டோ (24 பந்துகளில் 38 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் திலக் வர்மா (29 பந்துகளில் 44 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.

பெயர்ஸ்டோ ஏழாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பின் வந்த சூர்யகுமார் யாதவ் (26 பந்துகளில் 44 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்), ஹார்திக் பாண்ட்யா (13 பந்துகளில் 15 ரன், 1 ஃபோர்), நமன் திர் (18 பந்துகளில் 37 ரன், 7 ஃபோர்) ஆகியோர் மிகச் சிறப்பாக ஆடினர். இதனால் மும்பை அணி 20 ஓவர்களில் ஆறு விக்கட் இழப்பிற்கு 203 ரன் எடுத்தது.

          204 ரன் என்ற இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் (6 ரன்) மூன்றாவது ஓவர் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்கிலீஷ் (21 பந்துகளில் 38 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் மற்றொரு தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா (10 பந்துகளில் 20 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர்.

இவர்களுக்குப் பின்னர் வந்த ஷ்ரேயாஸ் ஐயர் (41 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 87 ரன், 5 ஃபோர், 8 சிக்சர்) இன்றைய ஆட்டத்தின் கதாநாயகன். பும்ரா வீசிய மிகச் சிறப்பான யார்க்கர்களைச் சமாளித்து, அவற்றை பவுண்டரிக்கு ஷ்ரேயாஸ் அனுப்பினார். அவருடன் இணைந்து நெஹல் வதேரா (29 பந்துகளில் 48 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்), சிறப்பாக ஆடினார். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 207 ரன் எடுத்து, வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணியின் ஷ்ரேயாஸ் ஐயர்  ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி, பெங்களூரு அணியுடன் நாளை மறுநாள் அகமதாபாத்தில் விளையாடும்.

ஆபரேஷன் சிந்தூரில் இந்திய விமானம் வீழ்த்தப் பட்டதா?

operation sindoor contrinue - 2026

பாகிஸ்தான் உடனான மோதலில் நமது  விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக இந்திய ராணுவ அதிகாரி தெரிவித்ததாக ஒரு செய்தி வருகிறது. திரு அணில் சவுகான் ப்ளூம்பெர்க் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியை மேற்கோள்காட்டி பலர் செய்தி வெளியிட்டு வருகிறார்கள்.   

“ஜெட் down ஆனதா என்பது முக்கியமில்லை, எதனால் அந்த நிலை ஏற்பட்டது என்பது.  அதை சரிசெய்து அடுத்த 2 நாட்களில் அனைத்து விமானங்களையும் மீண்டும் இயக்கினோம்”   

அடுத்த கேள்வி – 6 விமானங்கள் வீழ்த்தப்பட்டதா ?

இல்லை என்று திட்டவட்டமாக குறிப்பிடுகிறார்.

Down என்றால் வீழ்த்தப்பட்டது என்று பொருள் இல்லை. விமானம் Down என்றால் தரையில் நிற்கிறது (இயக்கப்பட முடியாமல் உள்ளது என்று பொருள்). பல காரணங்கள் இருக்கலாம், பறக்கும் உயரம், வேகம், கொண்டு செல்லும் ஏவுகணையின் எடை அல்லது வேறு காரணம் கூட இருக்கலாம்.  சேதம் ஏற்பட்டிருக்கலாம், ஆனால் அது சரி செய்யப்பட்டது என்பது தான் நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது.

இதற்கு முன்னரே கூட ‘எங்கள் விமானிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர்’ என்று நமது ராணுவம் அறிவித்தது, பாகிஸ்தான் கூட ‘இந்திய விமானி யாரும் எங்கள் பிடியில் இல்லை’ என்று கூறியது. 

அடுத்த 2 நாட்களில், அதை சரி செய்து ‘அனைத்து விமானங்களையும்’ இயங்கினோம் என்கிறார்.  அப்படியானால் விமானங்களை இழக்கவில்லை என்பதே பொருள் .

கார், பஸ் பிரேக் டவுன் என்றால் எதோ பிரச்சனை என்று தான் பொருள்,  வண்டியே போய்விட்டது என்று பொருள் இல்லை. 

தற்போது வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது இது தான்.

ஒருவேளை ஒன்றிரண்டு விமானங்கள் இழந்திருந்தாலும் கூட அது ஒரு பொருட்டு இல்லை. சண்டை என்றால் இழப்புகள் இருக்கவே செய்யும். இறுதி இலக்கை அடைந்தோமா என்பதே முக்கியம்.

இந்தியா விமானம் வீழ்த்தப் பட்டதா ஆப்பரேஷன் சிந்தூரில்?

இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து எழுதி வரும் ப்ளூம்பெர்க் chief of defense staff / பாதுகாப்புப் பணியாளர்களின் தலைவர் அனில் சௌஹானை நேர்காணல் கண்டிருக்கிறது சிங்கப்பூரில். அவரிடம், “இந்திய விமானங்களை பாக் வீழ்த்தியதா?” என்று கேட்க அவரும், “இதில் எது முக்கியம் என்றால், விமானம் வீழ்த்தப்பட்டதா இல்லையா என்பதில்லை. எதனால் அவை down (இயக்கப்படவில்லை? வீழ்த்தப்பட்டது?) என்பதே. நாங்கள் எங்கு தவறிழைத்தோம் என்பதை புரிந்து கொண்டு, அதை சரி செய்து, அதன் பிறகு மீண்டும் தாக்கினோம். அத்தனை விமானங்களையும் இயக்கினோம்.” என்று பதிலளித்திருக்கிறார். (கமெண்டில் வீடியோ).

மீண்டும் ப்ளூம்பெர்க், “பாக் 6 விமானங்களை வீழ்த்தியதாகச் சொல்கிறது” என்று கூற, அதற்கு சௌஹான், “முற்றிலும் தவறான தகவல்” என்கிறார்.

அதை விளக்கி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஹர்ஷா (Harsha Kakar) தன் பதிவில், “இதை ஏன் விமான இழப்பு என்று அழைக்கிறோம்? சௌஹான் தெளிவாகச் சொல்கிறார், ‘நாங்கள் தாக்குதல்களை சந்தித்தோம் (We had hits), எங்கள் தந்திரோபாயங்களை சரிசெய்து மீண்டும் இரண்டு நாட்களில் >அத்தனை< விமானங்களையும் பறக்கவிட்டோம்’ என்கிறார். அதாவது, சில தாக்குதல்கள் ஏற்பட்டன, ஆனால் அவை அவையும் அபாயகரமானவை அல்ல, வீழ்த்தப்படவில்லை.”

*** CDS சௌஹான் சொன்னதைத் தான் முன்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விமானப்படை தளபதியும் சொன்னார். அலுவல் பாஷை (official communication) என்பது பல நுணுக்கங்களைக் கொண்டது. ‘எந்த விமானமும் வீழ்த்தப்படவில்லை’ என்பதும், ‘அனைத்து விமானங்களும் மீண்டும் பறந்தன’ என்பதும், ‘சில தாக்குதல்களை சந்தித்தோம்’ என்பதும் கணக்கில் கொள்ள வேண்டியது.

*** அரசு அனுமதி இல்லாமல் CDS பேசியிருக்க வாய்ப்பில்லை. சிங்கப்பூர் கூட்டத்தில் CDS பங்கெடுப்பது இதுவே முதல் முறை. எனவே…. இதன் மூலம் மெசேஜ் கொடுக்கப் பட்டிருக்கிறது.

*** CDS தன் பேச்சில், ‘பயங்கரவாதம் ஒடுக்கப்படும்’ என மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.

Why do we term this as loss of aircraft. The CDS’s words were clear. We had hits, rectified our tactics and flew all our aircraft again after two days. It means, some hits, none fatal, none which led to a crash. Denied Pak reports of six aircraft, indirectly terming @CMShehbaz @OfficialDGISPR and some Indian political handles claiming so as liars.

India’s military confirmed for the first time that it lost an unspecified number of fighter jets in clashes with Pakistan in May.

Anil Chauhan, chief of defense staff of the Indian Armed Forces, spoke to Bloomberg TV on Saturday, while attending the Shangri-La Dialogue in Singapore: https://bloomberg.com/…/india-confirms-it-lost-fighter…

தற்காலிகமாவே நிர்வாகத்தை ஓட்டிடலாம்னு நினைப்பா?: தினகரன் கேள்வி!

ops ttv in a function - 2026
#File Picture

காலி பணியிடங்களை நிரப்பாமல், தற்காலிக பணியாளர்களை வைத்தே நிர்வாகத்தை ஒட்டிவிடலாம் என்று திமுக., அரசு நினைக்கிறதா என்று, டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூகத் தளப் பக்கத்தில் எழுதியிருப்பதாவது…

தமிழக அரசுப் பணிகளில் இருந்து இன்று ஒரே நாளில் 8,144 ஊழியர்கள் ஓய்வு – காலிப்பணியிடங்களை நிரப்பாமல் தற்காலிக ஊழியர்களையும், ஆலோசகர்களையும் வைத்தே அரசு நிர்வாகத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறதா திமுக அரசு ?

தமிழக அரசின் குரூப் ஏ, குரூப் பி, குரூப் டி உள்ளிட்ட பணியிடங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 144 அரசுப் பணியாளர்கள் இன்று ஒரே நாளில் ஓய்வுபெறுவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள 3.5 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், ஆண்டுதோறும் பத்து லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும், அந்த வாக்குறுதியில் 25 சதவிகிதத்தை கூட நிறைவேற்றவில்லை என்பதற்கு அரசுத்துறைகளில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையே சாட்சியாக அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெறுவார்கள் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தும், அதற்கு ஏற்ப அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போதுமான எண்ணிக்கையில் அரசு ஊழியர்களை நியமிக்கத் தவறிய அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கிற்கு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார் ?

அரசுப்பணி கனவில் லட்சக்கணகான இளைஞர்கள் இரவு, பகலாக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், ஓய்வுபெற்ற ஊழியர்களையும், ஆலோசகர்களையும் மறைமுகமாக நியமித்து இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை சீரழிப்பது தான் திராவிட மாடல் அரசின் சமூக நீதியா ? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

கோடை விடுமுறை முடிந்து அரசுப்பள்ளிகள் நாளை மறுநாள் திறக்கப்பட உள்ள நிலையில், இன்று ஒரே நாளில் ஏராளமான ஆசிரியர்கள் ஓய்வுபெறுவது பள்ளி மாணவ, மாணவியர்களின் கல்வித்திறனுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, அரசுப்பணியாளர்களின் காலிப்பணியிடங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு நலத்திட்டங்களும் உரிய நேரத்தில் சென்றடைவதும் கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அரசுத்துறைகளில் நிலவும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, திமுக ஆட்சிக்கு வந்த பின் அரசுத் துறைகளில் இதுவரை நிரப்பப்பட்ட காலிப்பணியிடங்களின் விவரங்களை வெளிப்படைத் தன்மையோடு வெளியிட வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

ராகுலால் POKஐ மீட்க முடியுமா? ஏன் இந்தக் கதை?

jugalbandi rahul yatra - 2026
  • பாலாஜி வெங்கட்ராமன்

காங்கிரஸ் கட்சி 2008-2014 காலகட்டத்தில் ஆறு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகள் நடத்தியதாகக் கூறியுள்ளது. அவர்கள் குறிப்பிடும் ஆறு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகளில், 6 ஜனவரி 2013 அன்று நடந்த ஒரு நிகழ்வுக்கு மட்டுமே சில ஆதாரங்கள் உள்ளன, ஆனால் அது கூட முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. மற்ற ஐந்து நிகழ்வுகளுக்கு (19 ஜூன் 2008, 30 ஆகஸ்ட்-1 செப்டம்பர் 2011, 27-28 ஜூலை 2013, 6 செப்டம்பர் 2013, 14 ஜனவரி 2014) தெளிவான ஆதாரங்கள் இல்லை.

ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் (MoD) RTI அறிக்கைகள், 2016-க்கு முன்பு இதுபோன்ற சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகள் நடந்ததற்கு ஆதாரம் இல்லை என்று கூறுகின்றன.

பொய்யே உன் பெயர் காங்கிரஸ் என்பது போல இருக்கு,.

இதுல தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, “ராகுல் காந்தி பிரதமராக இருந்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) இந்தியாவால் திரும்பப் பெறப்பட்டிருக்கும்” என்று அடிச்சி விடுறார்.

ஆனால், உண்மையில் அது சாத்தியமா என்றால் வரலாற்று பின்னணி பார்த்தால் PoK 1947-ல் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது உருவானது. இந்தியாவும் பாகிஸ்தானும் இப்பகுதியை தங்கள் பகுதியாகக் கருதுவதால், இது ஒரு நீண்டகால மோதல் பிரச்சனையாக உள்ளது.

இராணுவ மற்றும் அரசியல் சவால்கள்: PoK-ஐ மீட்பது என்பது இராணுவ நடவடிக்கைகள், பன்னாட்டு உறவுகள், மற்றும் உள்நாட்டு அரசியல் ஆதரவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சிக்கலான செயல்முறை. இதற்கு வலுவான தலைமை, துல்லியமான உத்தி, மற்றும் பன்னாட்டு ஆதரவு தேவை. இந்த நிலையில் தற்போதைய காங்கிரஸ் கட்சியின் நிலை, மற்றும் அதன் தலைவர்கள் யாரும் வலுவானவர்கள் இல்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

இதில் பாகிஸ்தான் PoK-ஐ தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது, மேலும் இது சீனாவின் செல்வாக்கு உள்ள பகுதியாகவும் உள்ளது (சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம்). இதனால், PoK-ஐ மீட்பது இராணுவ ரீதியாக மட்டுமல்லாமல், பன்னாட்டு அரசியல் ரீதியாகவும் சவாலானது என்பது நிதர்சனம்.

இந்த நிலையில் ராகுல் காந்தி , அவரது தலைமையில் இந்தியா PoK-ஐ மீட்கும் திறன் இருக்குமா என்பது விவாதத்திற்குரியது. மேலே காங்கிரஸ் கட்சி கூறிய உண்மைக்கு மாறான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகளில் அதாவது மன்மோகன் சிங் முந்தைய ஆட்சி காலமான 2004-2014 காலகட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, PoK-ஐ மீட்பதற்கு எந்தவொரு தீவிர முயற்சியும் மேற்கொள்ளப் படவில்லை. என்பது புலனாகிறது, தற்போது ராகுல் காந்தியின் தலைமையில் இதற்கு வாய்ப்பு இருந்திருக்குமா என்ற கேள்விக்கு பதில் , நிச்சயமாக இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

PoK-ஐ மீட்பது என்பது ஒரு தனி நபரின் தலைமைத்துவத்தை மட்டும் சார்ந்தது அல்ல. இது இராணுவ, பொருளாதார, மற்றும் பன்னாட்டு உறவுகளை உள்ளடக்கிய ஒரு பன்முகப் பிரச்சனை. தற்போதைய சூழல் மற்றும் பாஜக அரசின் நிலைப்பாடு மத்திய இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், PoK மக்கள் தாமாக இந்தியாவுடன் இணையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கூறியுள்ளார். இது, தற்போதைய அரசு PoK பிரச்சனையை தீர்க்க பிரச்சனையை கவனமாக கையாளுகிறது.

2025 மே மாதம் நடந்த இந்தியா-பாகிஸ்தான் மோதல் (Operation Sindoor) PoK-இல் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை இலக்காகக் கொண்டது, ஆனால் அது PoK-ஐ முழுமையாக மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லை. இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது இப்பிரச்சனையின் சிக்கலையும், இராணுவ நடவடிக்கைகளின் வரம்புகளையும் மட்டுமே.

PoK-ஐ மீட்பது என்பது இராணுவ, இராஜதந்திர, மற்றும் உள்நாட்டு ஆதரவு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியைப் பொறுத்தது, மேலும் இரண்டு நாடுகளிலும் ஆணு ஆயுதம் உள்ள நிலையில் இது எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் பெரும் சவாலாக இருக்கும்.

ஆக, இவர்கள் கூறிய உண்மைக்கு மாறான ஆறு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகளில் மீட்க முடியாத PoK-ஐ மீட்பது என்பது ராகுல் காந்தி பிரதமராக இருந்திருந்தாலும், இதை சாதிக்க முடியுமா என்பது நிச்சயமற்றது.

மு.க.ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியுமா..?!

mkstalin chess.jpeg - 2026

திமுகவுக்கு 1971 இல் உதவிய அன்றைய ஜன சங்கம் இருந்த இன்றைய பாரதிய ஜனதா.

மறைந்த முன்னாள் மேயர் மதுரை முத்து அவர்களின் சிலையைத் திறந்து வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் செல்ல இருக்கிறார் என்கிற செய்தியைப் பார்த்தேன்.

கலைஞர் காலத்தில் சென்னை மாநகராட்சி போலவே தமிழகத்தின் இரண்டாவது மாநகராட்சியாக 1971 மே மாதம் மதுரையை ஆக்கினார். மதுரையில் மிகப்பெரிய அந்த மாநகராட்சி கட்டிடம் ஏறக்குறைய மேயர் முத்துவின் அலுவலக அறைக்கு அருகே வரை தனது காரைக் கொண்டு செல்லும்படியான விதத்தில் அமைக்கப்பட்டிருந்தது.1970 களில் இந்தக் கட்டிடம் சிறப்பாகப் பேசப்பட்டது அதேபோல் திருநெல்வேலி மேம்பாலத்தையும் மிகச் சிறப்பாக கலைஞர் கட்டினார்.

அன்றைக்கு ஜன சங்கமாக இருந்த இன்றைய பாரதிய ஜனதாவின் வேட்பாளர் மதுரை மக்களால் மாநகராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சேஷாத்திரி என்பவர் தனது ஒற்றை வாக்கை மதுரை முத்துவிற்கு அளிக்காவிட்டால் அன்றைக்கு முத்து மேயராகவே ஆகியிருக்க முடியாது.

அந்த ஒற்றை வாக்கை வாங்குவதற்குக் கலைஞர் வாஜ்பாயிடம் பேசினார். ஜனா கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினார். அப்போது நாங்களெல்லாம் ஸ்தாபனக் காங்கிரஸில் இருந்த நேரம். நெடுமாறன் மதுரை மாவட்டத்தின் தலைவர். ஸ்தாபன காங்கிரசின் பொதுச் செயலாளரும் கூட.

எப்படியாவது மாநகராட்சித் தேர்தலில் மதுரை முத்துவைத் தோற்கடித்தாக வேண்டும் என்று நெடுமாறன் நினைத்தார். மதுரை முத்துவிற்கும் நெடுமாறனுக்கும் தொடர்ந்து அரசியல் ரீதியான போட்டிகளும் முரண்பாடுகளும் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. .

நெடுமாறன் ஏற்கனவே திமுக.,வில் இருந்தவர்தான். அண்ணாவுடனான முரண்பாடுகளால் சம்பத் வெளியே வந்த போது அவருடன் வெளியேறி வந்தவர். மதுரையின் உள்ளூர் அரசியலில் நெடுமாறனும் மதுரை முத்துவும் அடிக்கடி மோதிக் கொள்வார்கள்.

இப்படியான சூழ்நிலையில் எப்படியாவது மதுரை முத்துவை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று முயன்ற கலைஞர், ஜனா கிருஷ்ணமூர்த்தியை அழைத்து உங்க ஜனசங்க சேஷாத்திரி என்பவரை நீங்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். ஏனெனில் அந்த சேஷாத்திரி என்பவர் அளித்த ஒரு வாக்கைத்தான் கூடுதலாகப் பெற்று மதுரை முத்து ஜெயித்தார்.

இன்றைய திமுகவில் இதெல்லாம் எத்தனை பேருக்கு தெரியும்? அன்றைக்கு ஜன சங்கமாக இருந்து இன்றைக்கு பாரதிய ஜனதாவாக மாறி உள்ள அரசியல் அமைப்பைத் தொடர்ந்து எதிர்த்து பேசுபவர்கள் அன்றைக்கு மதுரை முத்து மேயர் ஆவதற்கு இவர்கள்தான் அடித்தளமாக இருந்தார்கள் என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.

இன்றைக்கு மதுரை முத்துவின் சிலையை திறக்கச் செல்லும் முதல்வர் இதையெல்லாம் மேடையில் குறிப்பிட்டுப் பேசுவாரா? பார்க்கலாம்! அவருக்கு இது எங்கே தெரியப் போகிறது!

  • கே.எஸ். இராதாகிருஷ்ணன்

IPL 2025: தான் யார் என்று கெத்து காட்டிய ரோஹித் சர்மா!

ipl 2025 games - 2026

ஐபிஎல் 2025 – எலிமினேட்டர் ஆட்டம் 30.05.2025 – சண்டிகர் – மும்பை vs குஜராத்

ரோஹித் ஷர்மாவின் கலக்கல் ஆட்டம்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

மும்பை இந்தியன்ஸ் அணி (228/5, ரோஹித் ஷர்மா 81, ஜானி பெயிர்ஸ்டோ 47, சூர்யகுமார் யாதவ் 33, திலக் வர்மா 25, ஹார்திக் பாண்ட்யா 22, நமன் திர் 9, பிரசித் கிருஷ்ணா 2/53, சாய் கிஷோர் 2/42, சிராஜ் 1/37) குஜராத் டைடன்ஸ் அணியை (208/6, சாய் சுதர்ஷன் 80, வாஷிங்க்டன் சுந்தர் 48, ரூதர்ஃபோர்ட் 24, குசல் மெண்டிஸ் 20, ராகுல் திவாத்தியா ஷாருக் கான் 13, போல்ட் 2/56, பும்ரா, கிளீசன், சாண்ட்னர், அஷ்வினி குமார் தலா ஒரு விக்கட்) 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற மும்பை இந்தியன் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜானி பெயர்ஸ்டோ (22 பந்துகளில் 47 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ரோஹித் ஷர்மா (50 பந்துகளில் 81 ரன், 9 ஃபோர், 4 சிக்சர்) ஆகியொர் சிறப்பான தொடக்கம் தந்தனர். முதல் 6 பவர்பிளே ஓவர்களில் அந்த அணி விக்கட் இழப்பின்றி 79 ரன் எடுத்தது. பெயர்ஸ்டோ எட்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

அவருக்குப் பின் வந்த சூர்யகுமார் யாதவ் (20 பந்துகளில் 33 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்), திலக் வர்மா (11 பந்துகளில் 25 ரன், 3 சிக்சர்), ஹார்திக பாண்ட்யா (9 பந்துகளில் 22 ரன், 3 சிக்சர்), நமன் திர் (6 பந்துகளில் 9 ரன், 1 சிக்சர்) ஆகியோர் மிகச் சிறப்பாக ஆடினர். இதனால் மும்பை அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 228 ரன் எடுத்தது.

229 ரன் என்ற கடினமான இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் (1 ரன்) முதல் ஓவர் நாலாவது பந்தில் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் (10 பந்துகளில் 20 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் வாஷிங்க்டன் சுந்தர் (24பந்துகளில் 48 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) இருவரும் மற்றொரு தொடக்க வீரரான சாய் சுதர்ஷன் (49 பந்துகளில் 80 ரன், 10 ஃபோர், 1 சிக்சர்) உடன் இணைந்து ஆடி 56 பந்துகளில் அணிக்கு 100 ரன்கள் சேர்த்தனர்.

இருப்பினும் இவர்களுக்குப் பின்னர் வந்த ரூதர்ஃபோர்ட் (15 பந்துகளில் 24 ரன், 4 ஃபோர்), ராகுல் திவாத்தியா (11 பந்துகளில் 16 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்), ஷாருக் கான் (7 பந்துகளில் 13 ரன்) ரஷீத் கான் (பூஜ்யம் ரன்) ஆகியோரால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 208 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.  

மும்பை அணியின் ரோஹித் ஷர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி பஞ்சாப் அணியுடன் மற்றொரு தகுதி ஆட்டத்தில் ஆடும்.

கம்யூனிஸ்ட்களின் ‘இந்த’ ஆர்பாட்டம்… தமிழகத்துக்கு பெரும் ஆபத்து!

kadeswara subramaniam hindu munnani - 2026

ஜனநாயகத்திற்கு எதிரான, மக்கள் விரோத நக்சல் பயங்கரவாத ஒழிப்பிற்கு
எதிராக கம்யூனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது, தமிழகத்திற்கு ஆபத்து… என்று, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

1967-ல் ஆரம்பிக்கப்பட்ட நக்சல்பாரி அமைப்புகள் நமது நாட்டின் வளர்ச்சியை முடக்கி வந்தது. ஆயுத புரட்சி எனும் வன்முறை மூலமாக இளைஞர்களை மூளைச்சலவை செய்து வன்முறையில் ஈடுபட வைத்தது.

கடந்த காலங்களில் நக்சல்கள் முழுவதுமாக அழிக்கப்படுவார்களா எனும் கேள்வி மக்களிடையே எழுந்தது. மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் 2026 மார்ச் 31-க்குள் நக்சல்கள் வேரோடும் வேரடி மண்ணோடும் களை எடுக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் அறிவித்தார்.

அதன்படி செயல்பட்டு நக்சல் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தர் பகுதியில் மே மாதம் 21 ஆம் தேதி, நமது பாதுகாப்பு படையினர் நக்சல் இயக்கத்தின் முதுகெலும்பாக செயல்பட்டு வந்த நம்பாலா கேசவராவ் என்கின்ற பரசவராசு உள்ளிட்ட 27 பயங்கரவாதிகளை
சுட்டுக் கொன்றனர்.

நக்சல் தாக்குதல்களால் கடந்த 25 ஆண்டுகளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதைப்பற்றி கவலைப்படாத கம்யூனிஸ்டுகள் நக்சல்களுக்கு ஆதரவாக ‘போலி என்கவுண்டர்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி மக்களை குழப்ப தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடுகின்றனர். நக்சல் பயங்கரவாத அமைப்புகளால் அந்தந்த மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் வராமல் தடுக்கின்றனர்.

நக்சல்கள் ஆக்கிரமித்த பகுதிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, பள்ளிக்கூடம் போன்ற அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்த விடாமல் தடுத்து, பொதுமக்களை மிகுந்த கஷ்டத்தில் தள்ளுகின்றனர். உள் கட்டமைப்பு இல்லாததால் வளர்ச்சி ஏற்படாமல் அப்பகுதி மக்கள் ஏழ்மையில் வாடுகின்றனர். நக்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் கல்வி கற்போர் எண்ணிக்கையும் குறைவாக இருந்து வந்தது. வளர்ச்சித் திட்டங்களை முடக்கி மக்களை ஏழ்மையாகவே வைத்திருக்கும் நக்சல் அமைப்புகளை முற்றிலும் ஒழித்திட மத்திய அரசு முனைந்து செயல்பட்டு வருகிறது.

நக்சல் தலைவன் பசவராசு சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அவன் பிறந்த கிராமத்தில் தற்போது மின்சார வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதே கிராமத்தில் தார் சாலை போடும்போது கன்னிவெடி வைத்து நக்சல்கள் அதை தகர்த்தனர். ஆனால் தற்போது நிலைமை சீராகி வருகிறது. இந்த ஆண்டு இதுவரை 25 நக்சல்கள் சரணடைந்துள்ளனர்.

அதே வேளையில் மொபைல் இணைப்பு மத்திய அரசு உதவி திட்டம், சிறப்பு உட்கட்டமைப்பு திட்டம், ஊரக வேலை வாய்ப்பு திட்டம் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வேலைகளையும் மத்திய மாநில அரசுகள் இணைந்து விரைவாக செயல்படுத்தி வருகின்றன.

106 மாவட்டங்கள் நக்சல்களின் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கருதப்பட்ட நிலையில் தற்போது அது 16 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையால் விரைவில் நக்சல்கள் இல்லாத தேசமாக பாரதம் உருவெடுக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

தமிழகத்திலும் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது காவல்துறை அதிகாரி வால்டர் தேவாரம் தலைமையில் ஒட்டுமொத்தமாக நக்சல் பயங்கரவாதத்தை ஒழித்தார். தெலுங்கானா பகுதியில் பெருகி வந்த நக்சல் இயக்கம் ஒழிக்கப்பட்டது. இப்போது மீண்டும் கேரள மாநில எல்லைப் பகுதியான தேனி மலைப் பகுதிகளில் நக்சல் பயிற்சிகள் நடப்பதாக உளவு துறை எச்சரிக்கை செய்துள்ளது.

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் அமைப்புகள் நக்சல்களை ஆதரித்தும் ‘போலி என்கவுண்டர்’ என்ற பிம்பத்தை உருவாக்கி மக்களை குழப்பவும் ஜூன் இரண்டாம் தேதி ராஜரத்தினம் திடலில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரியுள்ளனர்.

நக்சல் இயக்கம் என்பது கம்யூனிஸ்ட்களின் துணை அமைப்புதான் என்பதை இதன்மூலம் தெள்ளத் தெளிவாக அறிய முடியும். தேசத்திற்கு எதிரான வன்முறையாளர்களை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட்கள் குறித்து மாநில அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் மக்கள் கலை இலக்கிய கழகம், மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகள் நகர்புற நக்சல்ளாக மாறி தமிழகத்தில் குழப்பத்தை விளைவித்து வருகின்றன. இதனுடன் விடுதலை சிறுத்தைகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கைகோர்த்துள்ளது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் எந்த தொழிற்சாலைகள் வந்தாலும் அதை ஏதோ ஒரு காரணம் காட்டி முடக்கி வருகிறது கம்யூனிஸ்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நக்சல் வன்முறை இல்லாத நாடாக பாரதம் உருவாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் இந்த வேளையில், கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் நக்சல் ஆதரவு நிலையை ஏற்படுத்தும். தமிழகத்தில் நக்சலைட்கள் பரவ தமிழக அரசே துணைபோகும் ஆபத்தையும் சுட்டிக்காட்டுகிறோம்.

நக்சல்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை மத்திய, மாநில உளவுத்துறை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.