இன்று குருபெயர்ச்சியை முன்னிட்டு பெரும்பாலான ஆலயங்களில் பக்தர்கள் குறைந்த அளவில் நெருக்கடி இன்றி குருபகவானை தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முகக்கவசம் அணிந்து, கூட்டம் ஒன்று போல் நெருக்கடியாக அமைந்துவிடாதபடி, எண்ணிக்கைக்கு ஏற்ப பிரித்து ஆலயத்தினுள் அனுப்பப் படுவார்கள் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.
குருபெயர்ச்சி விழாவினை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் ராஜ குரு பகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு இன்று காட்சியளித்தார்
தஞ்சாவூர் அருகே குரு பரிகார தலமான திட்டை என்று புகழ்பெற்ற வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இங்கே தனிச் சந்நிதியில் குரு பகவான் ராஜ குருவாக எழுந்தருளி உள்ளார்
குரு பெயர்ச்சி விழாவினை முன்னிட்டு அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் நடைபெற்றன. குருபகவானுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன. ராஜ குரு பகவான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார்.
குரு பரிகார தலமான ஆலங்குடியில் எழுந்தருளியிருக்கும் குருபெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற புளியரை தட்சிணாமூர்த்தி ஆலயத்தில் கடந்த ஆண்டுகளைப் போல் இல்லாமல், பக்தர்கள் குறைந்த அளவில் பிரித்து அனுப்பப் படுவர் என்று கூறப்பட்டது.
குரு பெயர்ச்சி பலன்கள் – பரிகாரங்கள்!
குருபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 15.11.2020 இரவு 09.48 மணிக்கு சஞ்சரிக்கிறார். ஏப்ரல் 6, 2021 வரை மகரத்தில் சஞ்சரிக்கிறார்.
திருக்கணிதப்பஞ்சாங்கப்படி 19.11.2020 இரவு 09.15 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். 05.04.2021 காலை 09.11 வரை மகரத்தில் இருக்கிறார்.
லஹரி அயனாம்ஸப்படி வருகிற 20.11.2020 பகல் 12.36.27 மணிக்கு தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 05.04.2021 இரவு 11.37.26 மணி வரை மகரத்தில் சஞ்சரிக்கிறார்.
உங்கள் ராசிக்கான குருபெயர்ச்சி பலன்களையும் எளிய பரிகாரங்களையும் நம் ‘தமிழ் தினசரி’ இணையதள வாசகர்களுக்காக கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் லட்சுமி நரசிம்மன். தளத்தில் அவரவர் ராசிக்கான சுட்டியில் படித்து அறிந்து கொள்ளலாம்…!
https://dhinasari.com/astrology/guru-peyarchchi