வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகள், கட்டடக்கலை உள்ள இடங்களை தமிழக தொல்லியல் துறை பாரம்பரிய நினைவுச் சின்னங்களாக அறிவித்து, பாதுகாத்து வருகிறது.
அந்த வகையில் மதுரையில் 16, காஞ்சிபுரத்தில் 12, விழுப்புரத்தில் 11, திருச்சியில் 7, வேலூரில் 6, தஞ்சை மற்றும் திருவண்ணாமலையில் தலா 5 இடங்கள் பாரம்பரிய நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல, துாத்துக்குடியில் 4, நெல்லை மற்றும் திருவள்ளூரில் தலா 3, அரியலூரில் 3, கடலூர், திண்டுக்கல், கரூர், நாகை, ராமநாதபுரம், சிவகங்கை, கரூரில் தலா இரண்டு மற்றும் சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், விருதுநகர் ஆகிய இடங்களில் தலா ஒன்று என, மொத்தம் 89 இடங்கள் பாரம்பரிய நினைவுச் சின்னங்களாக பாதுகாக்கப்படுகின்றன.
இந்நிலையில், மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி, முதலைக்குளம்; விழுப்புரம் மாவட்டம் முதுண்டூர்; தர்மபுரி மாவட்டம் நகனம்பட்டி; சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி ஆகிய 5 இடங்களில் உள்ள பழமையான கல்வெட்டுகளை தமிழக தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வலியுறுத்தி அறிக்கை அனுப்பியுள்ளனர்.
இவை, விரைவில் பாரம்பரிய நினைவுச் சின்னங்களின் பட்டியலில் இடம் பிடிக்க உள்ளன.