சேலம் வந்த முதல்வரிடம், ‘வளர்க தி.மு.க.,’ என, கட்சி சின்னத்துடன், அரசு பள்ளி இடைநிலை ஆசிரியை வாழ்த்து மடல் கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இடைநிலை ஆசிரியையாக பணிபுரிபவர் சித்ரா, 50. தமிழ் துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர், அரசு, பொது நிகழ்ச்சிகளில் இலக்கிய சொற்பொழிவு நடத்திவருகிறார்
நேற்று முன்தினம், ஆத்தூர் வந்த, தமிழக முதல்வர் ஸ்டாலினிடம், ஆசிரியை சித்ரா, அடையாள அட்டை அணிந்து சென்று வாழ்த்து மடல் வழங்கினார்.
அதில், முதல்வர் குறித்த புகழாரம் செய்து, கடைசியாக, ‘வாழ்க கருணாநிதி புகழ். வளர்க தி.மு.க.,’ என்ற வாசகம், அக்கட்சியின் சின்னம் உதயசூரியன், கொடி இடம் பெற்றிருந்தன.
வாழ்த்து மடல் தகவல் குறித்தும், முதல்வர் ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன், நாமக்கல் எம்.பி., சின்ராஜ் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும், ‘வாட்ஸ் ஆப்’பில் ஆசிரியை பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த சிலர், அரசு பள்ளி ஆசிரியரான இவர், முதல்வருக்கு கட்சி சார்ந்து வாழ்த்து மடல் வழங்கியதாக கூறியதால் சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து, சித்ரா கூறுகையில், ”கவிதை தொகுப்பில், வளர்க தி.மு.க., என குறிப்பிட்டது தவறு தான்; கட்சி சின்னம், கொடியை, ‘பிரேம்’ செய்து வந்த பின் பார்த்தேன். சரியாக கவனிக்காமல் முதல்வரிடம் கொடுத்துவிட்டேன். முதல்வர் சார்ந்த கட்சியை குறிப்பிட்டேன். நான் எந்த கட்சியும் சாராத அரசு ஊழியர்; இனி இதுபோன்ற தவறு நடக்காது,” என்றார்.
ஆத்தூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகர் கூறுகையில், ”ஆசிரியை விடுமுறை எடுத்துச்சென்றார். வாழ்த்து மடல் தகவல் குறித்து விசாரிக்கப்படும்,” என்றார்.
ஆத்தூர் கல்வி மாவட்ட அலுவலர் கணேசன் கூறுகையில், ”அரசு ஊழியர் கட்சி சார்ந்து செயல்படக்கூடாது. ஆசிரியை, கட்சியை குறிப்பிட்டு முதல்வரிடம் வாழ்த்துமடல் கொடுத்தது தொடர்பாக விசாரித்து, அனைத்து ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கப்படும்,” என்றார்.