ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்ஸவம் வரும் 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மலையப்பசாமி வாகன வீதி உலா ரத்து செய்யப்படுவதாகவும் கோயிலுக்குள்ளேயே காலையும், மாலையும் அந்தந்த வாகனங்களில் எழுந்தருளும் ஏகாந்த சேவை நடைபெறும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்ஸவம் நடத்தப்படும். திருமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவைக் காண லட்சக்கணக்காக பக்தர்கள் வருகை தருவார்கள்.
பிரம்மாவும் சிவனும் இணைந்து திருமலை ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவ விழா நடத்தினர் என்பது புராண கதை.
திருப்பதியில் பல ஆண்டுகாலமாக பிரம்மோற்ஸவம் பிரம்மாண்டமாகவே நடைபெற்று வந்துள்ளது. மன்னர் ஆட்சி, நவாப், ஆங்கிலேயர்கள் ஆட்சி, சுதந்திரத்திற்குப் பின் என எப்போதுமே வழக்கமான பிரம்மாண்டத்துடன் பிரம்மோற்சவம் நடைபெற்றுள்ளது.
பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோற்ஸவ விழாவில் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
மூலவர் ஏழுமலையானையும் உற்சவர் மலையப்பசுவாமி மாட வீதிகளில் உலா வருவதையும் பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.
கொரோனா வைரஸ் பரவல் அனைத்தையும் முடக்கி போட்டு விட்டது. கடந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவில் மலையப்பசுவாமி மாட வீதிகளில் வலம் வரவில்லை மாறாக ஏகாந்தமாக பிரம்மோற்ஸவம் நடைபெற்றது.
இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக, மத்திய, மாநில அரசுகளின் நிபந்தனைகளின்படி பிரம்மோற்ஸவ விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகன சேவைகளை ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரம்மோற்ஸவத்தை பக்தர்கள் இன்றி ஏகாந்தமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரம்மோற்சவ விழா வரும் 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றிரவு பெரிய வாகன சேவையும் நடைபெறும். இதில் முக்கிய வாகன சேவைகளான கருட வாகன சேவை அக்டோபர் மாதம் 11ஆம் தேதி நடைபெற உள்ளது.
12ஆம் தேதி தங்க தேர்த்திருவிழாவும், 14ஆம் தேதி தேர்திருவிழாவும், நிறைவு நாளான 15ஆம் தேதி காலை சக்கர ஸ்நானமும் அன்று மாலை கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாவிஷ்ணுவின் வாகனம் கருடன். இந்த கருடவாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளுவது சிறப்பம்சம். பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான திங்கட்கிழமை காலை மோகினி அலங்காரத்தில் இறைவன் எழுந்தருகிறார் அன்றிரவு கருடவாகன சேவை நடைபெறுகிறது.
நாக தோஷம் மற்றும் களத்திர தோஷம் உடையவர்கள் கருட வாகனத்தில் வலம் வரும் பெருமாளை தரிசிப்பதால், அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி சகலசெல்வங்களும் பெறுவார்கள் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
கருட சேவையை தரிசிப்பதற்கு , மறைந்த முன்னோர்களான பித்ருக்களும் வருவார்கள் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி பிரம்மோற்ஸவ விழாவின் 5ஆம் நாளன்று கருட வாகன சேவையில் பெருமாள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.