
ஒவ்வொரு மாதமும் ஸ்மார்ட்போன் பிரியர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு எண்ணற்ற ஸ்மார்ட்ஃபோன்கள் அறிமுகம் ஆகி வருகிறது.
இவற்றில் சிறப்பு அம்சங்கள் கொண்ட ஃபோன்கள் மட்டுமே அதிக அளவில் விற்பனையாகும். துல்லியமாக படம் பிடிக்கும் கேமிரா, நீண்ட நேர பேட்டரி வசதி, சிறப்பான ப்ராசெஸ்ஸார் போன்ற முக்கிய அம்சங்களை ஸ்மார்ட்போன் வாங்குவோர் கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள்.
அந்த வகையில் மோட்டோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் பலருக்கும் விருப்பமானவை. பல வருடங்களாக சந்தையில் அமோகமாக விற்பனையான மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள், சில காலமாக சரிவை சந்தித்து வருகின்றன.
இதை ஈடுகட்ட அவ்வப்போது சிறந்த அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.
தற்போது மோட்டோரோலா எட்ஜ் X என்கிற புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்யப்போவதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த ஸ்மார்ட்போன் அதன் பிறகு கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் ஆகலாம் என கூறுப்படுகிறது.
மோட்டோ எட்ஜ் எஸ் ப்ரோ, மோட்டோ எட்ஜ் லைட், மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 20 ஸ்மார்ட்போன்களின் வரிசையில் இந்த மோட்டோ எட்ஜ் X அறிமுகமாக உள்ளது.
புதிதாக அறிமுகம் ஆகவுள்ள இந்த எட்ஜ் X ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெளிவாக வெளிவரவில்லை என்றாலும், சில முக்கிய அம்சங்கள் அதற்கு முன்பு அறிமுகமான மோட்டோ ஸ்மார்ட்போன் சீரிஸ் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோரோலா எட்ஜ் எஸ் ப்ரோ மற்றும் மோட்டோ எட்ஜ் லைட் ஆகிய ஸ்மார்ட்போன்களில் 6.7 இன்ச் முழு HD + OLED டிஸ்பிளே தரப்பட்டது.
மேலும் இந்த ப்ரோ மாடலில் 144 Hz ரெஃபிரஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 SoC சிப்செட் வசதி உள்ளது. இந்த லைட் வெர்ஷன் ஸ்மார்ட்போனில் குவால்காம் 778G SoC சிப்செட், 8GB LPDDR4 RAM வசதி கொடுக்கப்படுகிறது.
எனவே இந்த மோட்டோரோலா எட்ஜ் X ஸ்மார்ட்போனிலும் குவால்காம் ஸ்நாப்டிராகன் 888 SoC. சிப்செட் தரப்படலாம். மேலும் 108 மெகா பிக்சல் பிரைமரி கேமிரா மற்றும் 2 முன்புற கேமிரா வசதியுடன் இது அறிமுகம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் X ஸ்மார்ட்போனில் சிறப்பான பேட்டரி வசதி தரப்படலாம். முன்பாக மோட்டோ எட்ஜ் எஸ் ப்ரோவில் 4,250mAh பேட்டரி மற்றும் 30W விரைவான சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டு இருந்தது.
அதே போன்று மோட்டோ எட்ஜ் லைட் மாடல் 4,020mAh பேட்டரி மற்றும் 33W விரைவான சார்ஜிங் வசதியுடன் வந்தது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth 5.1, GPS, NFC, மற்றும் USB டைப்-C போர்ட் ஆகிய அம்சங்களுடன் வெளியாகின.
இதே போன்ற அம்சங்கள் மோட்டோ எட்ஜ் X போனிலும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் விலை ரூ.28,700 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.