
வித்யானந்த போஸ்லே என்ற பண்டிதர் பண்டரீபுரத்தில் வசித்து வந்தார். அவருக்கு தன் கல்வி குறித்து கர்வம் நிறைய இருந்தது.
சீடர்களே, கல்வியிலும் அறிவிலும் எனக்குச் சமமானவர் எவரேனும் இவ்வுலகில் உண்டோ? என்று கர்வம் கொண்டு கேட்டார். சீடர்களோ, . நாங்கள் உங்கள் முன் அற்பமான புழுக்கள் சுவாமி என்று கூறினர் சீடர்கள்.
ஆனாலும் வித்யானந்தருக்கு பாண்டுரங்கனிடம் மிகுந்த பக்தி இருந்தது. தினமும் காலையில் நதியில் நீராடி, ஆசார அனுஷ்டானங்களுடன் பாண்டுரங்கனைத் தரிசித்த பிறகே மற்ற வேலைகளை ஆரம்பிப்பார்.
அப்போது அவர் நீராடிகையில், அந்த நதிக்கரையில் இருந்த குடிசை ஒன்றில் ஒரு தொழு நோயாளி வசித்து வந்தார். அவர் தினமும் நீராடி நதிக் கரையிலேயே கோயிலை நோக்கி வீழ்ந்து வணங்குவார்.
பாண்டுரங்கா! இந்த நோயினால் என்னை யாரும் கோயிலுக்குள் நுழைய விடுவதில்லை. ஒருமுறையாவது உன்னைத் தரிசிக்கத் திருவருள் செய்வாய் என்று கையேந்தி வேண்டிக் கொண்டார்.
சீடர்களே, வரும் கார்த்திகை ஏகாதசி மகத்தான சக்தி பெற்றது. அன்று உபவாசமிருந்து, மறுநாள் துவாதசி சூரிய உதயத்திற்கு முன் துளசி தீர்த்தத்தை அருந்தி, அதிதிக்கு உணவிட்டு, விரதம் முடிப்பது புண்ணியம், பாண்டுரங்கனே இந்த ஏகாதசிக்கு விரதமிருந்து மறுநாள் ஒவ்வொருவரிடமிருந்தும் உணவு ஏற்பதாக பக்தி நூல்கள் கூறும் என்று கூறினார்.
கார்த்திகை ஏகாதசி நாளில் தொழுநோயாளி நதியில் நீராடி கோயிலுக்குச் செல்ல முயன்றார். அப்போது கோயில் தரிசனம் முடிந்து வந்த வித்யானந்த போஸ்லே தன் சீடர்களிடம். தொழுநோயாளியை கை காட்டினார்.
ஐயோ, இந்த நன்னாளில் அருவருக்கத்தக்க இவன் கோயிலுக்கு வருகிறானே. அவனைத் துரத்துங்கள் என்று கத்தினார். அந்தப் பக்தர் நடந்ததை நினைத்து மனம் வருந்தி இரவெல்லாம் அழுதார்.
விட்டலா என்னை உள்ளே விட மறுக்கிறார்களே? உன் தரிசனம் எனக்கு எப்போது கிடைக்கும்? இறைவா, இந்த கதியற்றவனிடம் கருணை கொள் என்று மனதில் பகவானை வேண்டிக் கொண்டே அழுதார். நீயின்றி நான் எப்படி வாழ்வேன் அவ்வாழ்வினாழ்தான் பயன் உண்டோ என கதறினார்
மறுநாள், துவாதசியன்று அதிதிகளுக்கு உணவளிக்க வித்யானந்தர் முயன்றார். ஆனால்… என்ன இது! என்னிடமிருந்து உணவை ஏற்க யாருமே வரவில்லையே? ஏற்கெனவே உட்கொண்டதாகவும் வேறு பல காரணங்களையும் சொல்கிறார்களே.
நாமேதான் விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டுமா? என்று யோசித்துக் கொண்டே புலம்பினார். வித்யானந்தர் விரதம் முடிந்து வீடு திரும்பும்போது… ம்…. அந்தத் தொழுநோயாளிக்குக்கூட, அதிதி கிடைத்தான். எனக்கு மட்டும் கிடைக்கவில்லையே? என்று வித்யானந்த போஸ்லே மனதுக்குள் பேசிக்கொண்டான்.
சற்று பக்கத்தில் சென்று வித்யானந்தர் வெறுப்புடன் அந்த அதிதி யார் என்று உற்றுப் பார்த்தார். ஆ.. இது என்ன? பாண்டுரங்க விட்டலன் அல்லவா அந்தத் தொழுநோயாளிடமிருந்து உணவை ஏற்கிறார்! என்று அதிர்ந்து போய் நின்றார்.
மனம் வருந்தியபடி வீடு திரும்பினார் போஸ்லே.. ஹே பிரபு, என்னை விட அந்தத் தொழுநோயாளி எவ்விதம் உயர்ந்தவன்? எதற்காக என்னைப் புறக்கணித்தீர்கள்? என்று புலம்பியபடியே வேண்டினார்.
அன்றிரவு வித்யானந்தரின் கனவில் பாண்டுரங்கன் தோன்றினார். வித்யானந்தா, உன் அகங்காரத்தால் உனது ஆழ்ந்த கல்வியறிவு, பக்தி போன்ற யாவும் பலனற்று விட்டன. ஆனால் அந்த பக்தனிடமோ நான் விரும்பும் தூய பக்தி மட்டுமே இருந்தது.
எனவே அவனது பக்திக்கு அடிமையாகி அவனது அதிதியாகவும் சென்றேன் என்று பகவான் கூறினார். பாண்டுரங்கா, கருணைக் கடலே! உனது அருளால் ஆசார, அனுஷ்டானங்களைக் காட்டிலும் அந்தரங்கப் பக்தியே உண்மை என்பதை உணர்ந்துவிட்டேன்; எனது ஆணவமும் தொலைந்தது என்று வித்யானந்தர் கண்கலங்கி மனதார கைக்கூப்பி வேண்டினார்.
வித்யானந்தர் உடனே நோயாளியின் குடிசைக்கு ஓடோடிச் சென்றார். ஐயா, உங்களது உண்மையான பக்தியை பாண்டுரங்கனே மெச்சுகிறார், பக்திக் குறைவான நாங்கள் பாண்டுரங்கனைத் தேடிப் போகிறோம். ஆனால் அந்த விட்டலனே உங்களைத் தேடி வந்தார் என்னை மன்னித்துவிடுங்கள் நான் உங்களை அவமதித்ததுகாக மிகவும் வருந்துகிறேன் என கைகூப்பி கேட்டார்.
கடைசியில், இருவரும் ஜெய் ஜெய் விட்டலா! ஜெய ஹரி விட்டல பாண்டுரங்க விட்டலா! என்று சரணகோஷம் பாடி அந்த தொழு நோயாளியின் திருவடியில் வித்யானந்த போஸ்லே தன் கர்வத்தை தொலைத்தார்