கோவை மாவட்டம் மருமதலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி பக்தர்கள் பங்கேற்பின்றி நேற்று எளிமையாக நடைபெற்றது.
கோவை அருகே உள்ள மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து, நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் வேள்வி பூஜைகள் நடைபெற்றன. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நேற்று நடைபெற்றது.
இதனையொட்டி, மருதமலை கோவிலில் அதிகாலை 5 மணிக்கு கோ பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, மூலவருக்கு பால், பன்னீர், மஞ்சள், ஜவ்வாது, இளநீர் உள்ளிட்ட16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறுற்றது. தொடர்ந்து, முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர், சண்முகார்ச்சனை நடைபெற்றது.
இதனை அடுத்து, மதியம் அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், மாலை 3 மணிக்கு முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படாத நிலையில், கோயில் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். எனினும் சூரசம்ஹார நிகழ்ச்சியை ஒட்டி வந்திருந்த ஏராளமான பக்தர்கள் மலை அடிவாரத்தில் விளக்கேற்றி முருக பெருமானை வழிபட்டு சென்றனர்.
இதனை தொடர்ந்து, இன்று காலை சுப்பிரமணிய சுவாமி, வள்ளி -தெய்வானை திருக்கல்யாணம் வைபவம், திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.