
கீழ்வானம் வெள்ளென்(று) எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்(று) ஆராய்ந்(து) அருளேலோர் எம்பாவாய்! (8)
பொருள்
எப்போதும் மகிழ்ச்சியுடன் விளங்கும் பெண்ணே! கிழக்கே சூரியன் எழுந்துவிட்டான். பனி படர்ந்த புல்வெளிகளில் எருமைகள் மேயத் தொடங்கி விட்டன. நோன்பு நோற்கும் எல்லோரும் வந்து விட்டனர். அவர்களில் பலர், உடனே நீராடச் செல்ல வேண்டும் என்று அவசரப்படுத்துகின்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்தி, உன்னையும் அழைத்துச் செல்வதற்காக உன் வீட்டு வாசலில் வந்து நிற்கிறோம். பெண்ணே! உடனே எழுந்திரு. குதிரை வடிவம் கொண்ட கேசி என்ற அரக்கனின் வாயைப் பிளந்து கொன்றவனும், சாணூரன், முஷ்டிகன் முதலிய மல்லர்களை மாய்த்தவனும், தேவர்களுக்கெல்லாம் தலைவனுமான கண்ணனின் மகிமையைப் பாடி அவனை நாம் வணங்கினால், அவன் உடனடியாக நமக்கு அருள் தருவான்.

அருஞ்சொற்பொருள்
கீழ்வானம் – வானத்தின் கிழக்குப் பகுதி
வெள்ளென்று – வெளுத்தது
வீடு – விடுதலை
எருமை சிறு வீடு – எருமைகளைச் சற்று நேரம் அவிழ்த்து விடுதல்
மேய்வான் பரந்தன – (மாடுகள் கூட்டம் கூட்டமாகப் புல்வெளிகளில்) பரந்து நின்று மேய்கின்றன
மிக்குள்ள பிள்ளைகள் – மிகுந்த (ஏராளமான) பெண்கள்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து – (நீராடப்) போகும் பெண்களை ‘சற்று நேரம் பொறுங்கள்’ என்று சொல்லிக் காத்திருக்க வைத்து
கூவுவான் – அழைக்கும் பொருட்டு
பறை – கொட்டு, மேளம்
கோதுகலமுடைய – குதூகலமுடைய
பாடிப் பறைகொண்டு = பறை கொண்டு பாடி –
மேளதாளத்துடன் (பகவந் நாமாக்களை) பாடி
மா – குதிரை
மாவாய் பிளந்தான் – குதிரை வடிவில் வந்த கேசி அரக்கனை வாய் பிளந்து கொன்ற கண்ணன்
மல்லரை மாட்டியது – சாணூரன், முஷ்டிகன் ஆகிய அரக்கர்களை மற்போர் செய்து மாய்த்த லீலை (கிருஷ்ணாவதாரம்)
தேவாதி தேவன் – தேவர்களுக்குத் தலைவன்
ஆ ஆ என்று ஆராய்ந்து – நமது கோரிக்கைகளைப் பிரியமுடன் செவிமடுத்து
எருமை சிறு வீடு மேய்வான் பரந்தன – அதிகாலையில் பால் கறப்பதற்கு முன்னே சிறிது நேரம் மாடுகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடுவார்கள். அவை வயலில் பனிப்புல் (அதிகாலையில் பனி படர்ந்திருக்கும் புல்) மேயும். இதனால் பால் சுரப்பு அதிகரிக்கும். ‘மாடுகள் வயலெங்கும் பனிப்புல் மேய்கின்றன’ என்று சொல்வதன் மூலம் ‘பொழுது புலர்ந்து விட்டது’ என்பது உணர்த்தப்படுகிறது.
கோதுகலமுடைய பாவாய், கீழ்வானம் வெள்ளென்று, சிறுவீடு எருமை மேய்வான் பரந்தன காண், மிக்குள்ள பிள்ளைகள், போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக் கூவுவான் வந்து நின்றோம். எழுந்திராய், பறை கொண்டு பாடி, மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆ ஆ என்று ஆராய்ந்து (அவன்) அருள் (செய்வான்) என்று பதம் பிரித்துப் பொருள் கொள்ளலாம்.
மொழி அழகு
கிழக்கு வெளுத்ததை வெள்ளென்று என்ற பதத்தின் மூலம் சுட்டிக் காட்டுதல்.
தோழியைப் பாவாய் என்று விளித்து மா வாய் பிளந்த கண்ணனைப் போற்ற எழுந்திராய் என்று துயிலெழுப்பும் நயம். திருப்பாவை முழுவதும் இத்தகைய எதுகைகள் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன.
ஆன்மிகம், தத்துவம்
கலியுகத்தில் தர்மம் நலியும் என்பதை நம் முன்னோர்கள் ஸ்பஷ்டமாகத் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், கலியின் பாதிப்புகளில் இருந்து நாம் தப்பிக்கும் வழியையும் அவர்கள் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளனர். கூட்டமாகச் சேர்ந்து பகவந் நாமாக்களைப் பாடுவதுதான் கலியுகத்தில் நாம் இறைவனை அடைவதற்கான வழி என்பது அவர்கள் வரையறுக்கும் பாதை. ஸத்ஸங்கம் அல்லது நல்லோர் சேர்க்கை என்பதும் இதுவேதான்.
சில நண்பர்கள் சேர்ந்து கோயிலுக்குப் போகும்போது யாராவது ஒருவர் வருவதற்குத் தாமதமானால் மற்றவர்கள் அவருக்காகக் காத்திருப்போம் அல்லவா? இதையேதான் ஆண்டாளும் அவள் தோழியரும் செய்கின்றனர். கூட்டமாகச் சேர்ந்து நீராடுவதற்காகப் பெண்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள். ஒருத்தி மட்டும் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கிறாள். அவளை எழுப்புவதற்காகச் சிலர் செல்கிறார்கள். அவர்கள் வரும் வரை இதர தோழிகளும் காத்திருக்கிறார்கள்.
நாம் பின்தங்கி இருந்தாலும் நல்லோர் சேர்க்கை நம்மை மேம்படுத்தும். ஒருவர் பின்தங்கினாலும், மற்றவர்கள் அவரை விட்டுவிடாமல் தங்களுடன் சேர்த்துக் கொண்டு பகவத் விஷயத்தில் ஈடுபடுத்துவார்கள்.
***
”என்னைச் சரணடைந்தவனை ஒருபோதும் கைவிட மாட்டேன்” என்று விபீஷண சரணாகதியின்போது ஸ்ரீராமன் கூறுகிறான். இறைவனை நாம் சென்று சேவித்தால் நமக்கு அருள் தருவதைத் தவிர அவனுக்கு வேறு வழியே இல்லை. இதையே ‘ஆ, ஆ என்று ஓடிவந்து நமக்கு அருள்தருவான்’ என்று ஆண்டாள் பாடுகிறாள்.