
ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவை பாடலும் விளக்கமும்!
விளக்கம்: வேதா டி.ஸ்ரீதரன்
மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்(டு) இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய். (26)
பொருள்
திருமாலே! நீலவண்ணக் கண்ணா! உன்னை நோக்கி மார்கழி விரதம் இருக்கும் கோபிகைகளாகிய நாங்கள் இனிவரும் காலத்திலும் உன் புகழைப் பாடிக்கொண்டே இருக்க விரும்புகிறோம். இதற்கு நீ அருள்புரிய வேண்டும். எங்கள் வழிபாட்டில் நாங்கள் சங்குகளை ஊதும்போது, அதில் உன் வெண்சங்கான பாஞ்சஜன்யத்தின் ஓசைதான் நிறைந்திருக்க வேண்டும். இறைசிந்தனைக்கு ஒவ்வாத அமங்கல ஓசைகளைத் தொலைத்து, உலகம் முழுவதும் அந்தப் புனிதமான ஒலி நிறைய வேண்டும். முரசுகள் முழங்க உனக்குத் திருமஞ்சனம் நடக்கும்போது, ஏராளமான அடியார்கள் பாசுரங்கள் பாடவேண்டும். உனக்கு தூப தீபாராதனைகள் செய்து, அலங்காரம் செய்வித்து நாங்கள் மகிழ வேண்டும். எப்போதும் உன் குடைக்கீழ் இருக்கும் பாக்கியம் எங்களுக்கு வேண்டும். மாயையை அழித்த பரம்பொருளே, நீதான் இவையனைத்தையும் எங்களுக்கு அருள வேண்டும்.
(இந்தப் பாசுரத்துக்கு, மேலே தரப்பட்டுள்ள பொருள் உரைகளில் இல்லை. ஆண்டாள் சங்குகள், மத்தளங்கள், பல்லாண்டு பாடுவோர், விளக்குகள், தோரணங்கள், ஊர்வலங்களில் பந்தல் போல் பிடித்து வரப்படும் மேல்துணி ஆகியவற்றை யாசிப்பதாகத்தான் உரையாசிரியர்கள் பொருள் தந்துள்ளனர்.)
அருஞ்சொற்பொருள்
மால் – பக்தர்களை மிகவும் விரும்புபவன்
மணிவண்ணன் – நீலமணி நிறத்தை உடையவன்
மார்கழி நீராடுவான் – பாவை நோன்புக்காக
மேலையார் செய்வனகள் – பெரியோர் காட்டிய வழிகள்
கேட்டியேல் – கேட்பாயானால்
ஞாலம் – உலகம்
முரல்வன – ஒலிக்கும் சக்தி படைத்தவை
பால் அன்ன வண்ணத்து – பால் போன்ற வெண்மை நிறம் உடைய
போல்வன – போன்ற
போய்ப்பாடு – சப்தம் எழுப்புகிற
சால – பெரிய
விதானம் – பந்தல்
போய்ப்பாடு என்பது சப்தத்தையும் குறிக்கும். கீர்த்தியையும் குறிக்கும்.
ஆலின் இலையாய் –
படைப்பு என்பது அவனுக்குள் இருந்து வெளிப்பட்ட நிலை. அதை மீண்டும் தனக்குள் ஒடுக்கிக் கொள்கிறான். இதுவே சம்ஹாரம். சம்ஹாரம் முடிந்ததும் அவன் ஆலிலையின் மேல் குழந்தையாகத் திகழ்கிறானாம். எனவேதான், ஆலின் இலையாய் என்று அவனை விளிக்கிறாள் ஆண்டாள். இவளது அவதாரத் தலத்தில் இவளது மாலைக்கு ஏங்கிய ஸ்ரீவில்லிபுத்தூர்ப் பெருமாளும் ஆலின் இலையோன் தான். அவன் பெயர் வடபத்ரஸாயீ. (வட = ஆலமரம்; பத்ரம் = இலை; ஸாயீ = சயனிப்பவன்)
மொழி அழகு
இந்தப் பாசுரத்தை மால் என்ற நாமாவில் தொடங்கி ஆலின் இலையாய் என்ற நாமாவில் முடிப்பது கொள்ளை அழகுடன் கூடிய முரண். மால் என்றால் பக்தர்களை மோகிப்பவன். பக்தர்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களை நாடிச் செல்லும் எளிமையைக் குறிப்பது இது. ஆலின் இலையோன் இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் தனக்குள் அடக்கிக் கொண்ட ஆற்றல் மிக்கவன். பிரபஞ்சத்தின் ஆற்றல்கள் அனைத்தையும் தனக்குள் ஒடுக்கிக் கொள்ளும் ஆற்றல் மிக்க அவன் பக்தர்களுக்கு ஒடுங்கியவனாக இருப்பதுதான் அவனது மேன்மை.

ஆன்மிகம், தத்துவம்
செய்வனகள் –
செய்வன என்பதே பன்மைச் சொல்தான். செய்யுளின் சந்தத்துக்காக ‘கள்’ விகுதி சேர்க்கப்பட்டதாகக் கொள்வது எளிது. ஆனால், மேலையார் செய்வன என்பது மேலோர் செய்யும் செயல்கள் என்பதை மட்டுமே குறிக்கிறது. ‘கள்’ விகுதி சேர்த்து அதன் பன்மைத் தன்மையை ஆண்டாள் தனக்கே உரிய பாணியில் நீட்டி இருப்பது கவனிக்கத் தக்கது. செய்வன என்பது செயல்களைக் குறிக்கும். செய்வனகள் என்பது நெடுங்காலமாகத் தொடர்ந்து செய்து வரப்படும் செயல்களைக் குறிக்கும் என்று கொள்வது பொருந்தும். எனவே, வழிவழியாக வந்த பாரம்பரியப் பழக்கங்களைத்தான் அவள் இவ்வாறு குறிக்கிறாள் என்று கொள்வதே சரி.
இதையே உரையாசிரியர்கள் சிஷ்டாசாரம் என்று குறிப்பிடுகிறார்கள். (சிஷ்டர் = வேதத்தின் பொருளை உணர்ந்து தங்கள் வாழ்வில் கடைப்பிடிப்பவர்; ஆசாரம் = நடத்தை, செயலில் கடைப்பிடிப்பது. குருவானவர் தனது செய்கைகளின் மூலம் வழிகாட்டுவதாலேயே ஆசார்யர் என்று அழைக்கப்படுகிறார்.)
சனாதன தர்மம் என்பதே நமது மதத்தைக் குறிக்கும் பெயர். சனாதன என்றால் என்றும் இருப்பது, எல்லாக் காலத்துக்கும் பொதுவானது என்று பொருள். இது வேதங்களைக் குறிக்கும் சொல். காரணம், அவை எல்லாக் காலத்துக்கும் பொதுவானவை. வேதங்களின் அடிப்படையில் உருவானதால் நமது மதமும் சனாதனமானதே. எனினும், வேதங்கள் காட்டும் வழிகளைப் புரிந்து கொள்வது நம் போன்ற சாமானியர்களுக்கு சாத்தியப்படுவதில்லை. மேலும், நம்மைச் சுற்றியுள்ள சூழல் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. இத்தகைய நிலையில் நாம் எவ்வாறு வேத வழிகளைக் கடைப்பிடிக்க முடியும்? இதற்கான ஒரே தீர்வு, வேத தர்மத்தில் நிலைபெற்ற மேலோரின் வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்து, அவர்கள் வாழ்க்கையைப் போன்றே நமது வாழ்க்கையையும் அமைத்துக் கொள்வதுதான்.