
ஐ.பி.எல் 2022 – மும்பை vs கொல்கொத்தா
-K.V. பாலசுப்பிரமணியன்-
நேற்று, ஐபிஎல்லின் 56ஆவது ஆட்டம் மும்பை டி.ஒய். பட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் மும்பை, கொல்கொத்தா அணிகளுக்கிடையே நடந்தது. கொல்கொத்தா அணி (165/9, வெங்கடேஷ் ஐயர் 43, நித்தீஷ் ராணா 43, அஜிங்க்யா ரஹானே 25, ரிங்கு சிங் 23, பும்ரா 5/10) மும்பை அணியை (இஷான் கிஷன் 51, கம்மின்ஸ் 3/22, ரசல் 2/22) 52 ரங்கள் வித்தியாசத்தில் வென்றது.
மும்பை அணி எத்தனை திறமையான வீரர்களைக் கொண்ட அணி. இருப்பினும் தங்களது ஒன்பதாவது தோல்வியை இன்று சந்தித்தது. ரோஹித் ஷர்மா (2 ரன்) முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் ஒருபுறம் நிலைத்து ஆடிக்கொண்டிருந்தார். அவரும் சற்று மெதுவாகத்தான் ஆடிகொண்டிருந்தார்.
அதன் பின்னர் வந்த திலக் வர்மா (6 ரன்), ரமன்தீப் சிங் (12 ரன்), டிம் டேவிட் (13 ரன்), பொலார்ட் (15 ரன்) என வரிசையாக ஆட்டமிழந்து கொண்டிருந்தார்கள். ஒரு ஓவரில் ஆறு பந்துகளிலும் ஆறு சிக்சர் அடித்த பெருமைக்குரிய பொலார்ட் சிங்கிள் எடுத்து மறுபுறம் ஓடுகிறார்.
இந்த நிலையில் இருந்தால் மும்பை அணி தோற்பதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கக்கூடாது. முன்னதாக டாஸ் வென்று மும்பை அணி கொல்கொத்தாவை மட்டையாடச் சொன்னது. முதல் மூன்று பேட்டர்கள் மொத்தம் 121 ரன் எடுத்தனர்; உதிரிகள் 11; மிச்சமுள்ள வீரர்கள் மீதமுள்ள 33 ரன்களை எடுத்தனர்.
மும்பை பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்து வீசினார்கள். குறிப்பாக பும்ரா நான்கு ஓவர் பந்து வீசி அதில் ஒரு மெய்டன் கொடுத்து, 10 ரன்களுக்கு ஐந்து விக்கட் எடுத்தார். இதனால் கொல்கொத்தா அணியை 165 ரன்களுக்கு மும்பை அணி பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினார்கள்.
மும்பை அணி புள்ளிப்பட்டியலில் கடைசியில் இருக்கிறது. கொல்கொத்தா அணி ஏழாவது இடத்தில் உள்ளது. பும்ரா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.