
22 ஏப்ரல் உலக பூமி தினம்!
உலக பூமி தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது?
அசையும் உயிரினங்கள், அசையாத ஸ்தாவர ஜங்கமங்கள் அனைத்தையும் சுமப்பது பூமி. பூமியில் வசிப்பதை மனிதன் தன் உரிமையாகக் கருதுகிறான். இயற்கை வளத்தை தன் விருப்பத்திற்கு ஏற்ப உறிஞ்சி வாழ முயற்சிக்கிறான்.
பூமி மற்றும் இயற்கையை பாதுகாப்பதற்கு நாம் என்ன செய்கிறோம் என்ற கேள்விக்கு நம்மால் விடை கூற இயலுவதில்லை. பூமியை பாதுகாப்பதற்கு எதுவும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. தீங்கு செய்யாமலாவது இருக்கவேண்டும் அல்லவா?
இது குறித்த புரிதலை ஏற்படுத்தி மானுடனின் கடமையை நினைவுபடுத்துவதற்காகவே எர்த் டே எனப்படும் பூமி தினத்தை 1970 முதல் ஏப்ரல் 22 ஆம் தேதி கொண்டாட தீர்மானித்தார்கள்.
1970ம் ஆண்டு பூமி தினத்தில் அமெரிக்க வீதிகளில் தொழிற் புரட்சிக்கு எதிராக முழக்கமிட்டார்கள்.
பூமி மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டுமானால் மனிதனின் வாழ்வு முறையில் மாற்றம் தேவைப்படுகிறது. பூமி மாசு நிறைந்து காணப்படுவதற்கான காரணங்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
தொழிற்சாலைக் கழிவுகளை வெளியேற்றுவதில் நமக்குள்ள அலட்சியம் இதற்கு முதற்காரணம்.
பூமியின்மேல் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது.
கடந்த பல லட்சம் ஆண்டு பூமியின் வரலாற்றில் தற்போது பதிவாகி வரும் வெப்ப அளவே மிக அதிகமாக உள்ளது. 420 கோடி ஆண்டுகளில் முன்னூறு ஆண்டுகளாக முன்னேற்றம் என்ற பெயரில் கண்மூடித்தனமாக செய்துவரும் அனர்த்தங்களால் பூமி வெப்பமேறி வருகிறது. இதனை குளோபல் வார்மிங் என்று பெயரிட்டு அழைக்கிறோம்.
அடுத்த தலைமுறையினருக்கு எப்படிப்பட்ட பூமியை தந்து செல்லப் போகிறோம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஏப்ரல் 22-ஆம் தேதி பூமி தினம் இது குறித்து நமக்கு நினைவுறுத்துகிறது.
மற்ற நாடுகளை விட பாரத தேசத்திற்கு பூமியோடு உள்ள தொடர்பு மிக அதிகமானது, ஆன்மீகமானது. பாரதிய கலாச்சாரம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முக்கியமாகக் கருதி போதிக்கிறது. நம் பங்காக நாம் செய்யக்கூடிய எளிமையான பொறுப்புகள் சில உள்ளன.
பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது, மீள் சுழற்சி வாய்ப்புள்ள பொருட்களை மட்டுமே பயன்படுத்துவது, குப்பைகளை வீதிகளில் வீசி எறியாமல் இருப்பது, மரம் செடி கொடிகளை வளர்ப்பது, பெட்ரோல் பயன்பாட்டைக் குறைப்பது, மின்சார பயன்பாட்டையும் குறைப்பது, உள்ளூர் மார்க்கெட்டிலேயே பொருட்களை வாங்குவது… போன்ற எளிய செயல் முறைகளை நாம் முயற்சிக்க லாம்.
நம் பூமியை நாமே பாதுகாக்கும் செயல்களில் ஈடுபடுவோம்! மகிழ்ச்சியாக வாழ்வோம்! அன்பான பூமி தின வாழ்த்துக்கள்!!