டி 20 உலகக் கோப்பை – அரையிறுதி ஆட்டங்கள் – 27.06.2024
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
தென் ஆப்பிரிக்கா vs ஆஃப்கானிஸ்தான்
இந்த அரையிறுதிக்கு முன்னர் ஆஃப்கானிஸ்தான் மிகச் சிறப்பாக விளையாடி வருவதாலும், தென் ஆப்பிரிக்கா அணி ஆங்கிலத்தில் ச்சோக்கர்ஸ் என அழைக்கப்படுவதாலும் – அதாவது கடைசி நேரத்தில் சொதப்புவர்கள் என்பதாலும் ஆஃப்கானிஸ்தான் அணி அரையிறுதியில் வெற்றிபெற்று இறுதி ஆட்டத்திற்கு வந்து, இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை தோற்கடித்து, டி20 கோப்பையை வெல்லப்போவதாக கனவு கண்டு கொண்டிருந்ததாக சிலர் எழுதிவந்தனர். ஆனால் இன்று நடந்தது அதற்கு நேர்மாறானது.
ஒரு பிள்ளைப்பூச்சியை காலில் போட்டு நசுக்குவதுபோல தென் ஆப்பிரிக்க அணி ஆஃப்கானிஸ்தான் அணியைத் தோற்கடித்தது. டாஸ்வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் மட்டையாட முடிவு செய்தது. 11.5 ஓவரில் 56 ரன் எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.
அதிகபட்ச் ஸ்கோர் அஸ்மத்துல்லா உமர்சாய் (10 ரன்) உதிரி ரன்கள் அதைவிட அதிகம் (13 ரன்). டி காக் ரோஹித் ஷர்மா போல அதிரடியாக ஆடக்கூடியவர் என்பதால் 3 ஓவர் அல்லது அதிகபட்சமாக 5 ஓவரில் மேட்ச் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் டி காக் இரண்டாவது ஓவர் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் ஹெண்ட்ரிக்ஸும் மர்க்ரமும் சற்று நிதானமாக ஆடி 8.5 ஓவரில் 60 ரன் எடுத்து அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தனர்.
இந்தியா vs இங்கிலாந்து
தென் ஆப்பிரிக்கா – ஆஃப்கானிஸ்தான் ஆட்டம் இந்திய நேரப்படி காலையில் நடந்தது என்றால் இந்தியா இங்கிலாந்து அணிகளின் ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்குத் தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழைக்கான முன்னறிவிப்பு இருந்தது. எனவே ஆட்டம் நடக்குமா? நடக்காதா என்ற பதட்டமும் இருந்தது. மழையால் ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. ரோஹித் ஷர்மா சென்ற ஆட்டத்தைப் போலவே வெறியாட்டம் ஆடத் தயாராக இருந்தார். ஆனால் விராட் கோலி மீண்டும் ஒருமுறை குறைவான ஸ்கோரில் அட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து ரிஷப் பந்தும் சொற்ப ரன்னுக்கு அவுட்டானார். பின்னர் ரோஹித் ஷர்மாவுடன் (39 பந்துகளில் 57 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்) சூர்யகுமார் யாதவ் (36 பந்துகளில் 47 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
ஹார்திக் பாண்ட்யா (13 பந்துகளில் 23 ரன்), ஜதேஜா (9 பந்துகளில் 17 ரன்), அக்சர் படேல் (6 பந்துகளில் 10 ரன்) ஆகியோரின் ஆட்டத்தினால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 171 ரன் எடுத்தது. இங்கிலாந்து அணியின் கிரிஸ் ஜோர்டன் மூன்று விக்கட்டுகளை எடுத்தார்.
இரண்டாவதாக ஆடவந்த இங்கிலாந்து அணியின் ஆட்டத்தின்போது முதல் சேஞ்ச் பவுலராக களமிறங்கிய அக்சர் படேல் நாலாவது ஓவரில் பட்லரையும் (23 ரன்), ஆறாவது ஓவரில் ஜானி பெயர்ஸ்டோவையும் (பூஜ்யம் ரன்), எட்டாவது ஓவரில் மொயின் அலியையும் (8 ரன்) வீழ்த்தினார்.
இதற்கிடையில் பும்ரா, பில் சால்டை (5 ரன்) ஐந்தாவது ஓவரில் அவுட்டாக்கினார். இதற்கு அடுத்து பந்துவீச வந்த குல்தீப் யாதவ், ஹாரி ப்ரூக் (25 ரன்), சாம் கரன் (2 ரன்), கிரிஸ் ஜோர்டன் (1 ரன்) ஆகியோரை தனது பந்துவீச்சில் ஆட்டமிழக்கசெய்ததுடன், லியம் லிவிங்க்ஸ்டோன் ரன் அவுட் ஆகவும் காரணமாக இருந்தார்.
ஆட்டத்தின் எந்த நிலையிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெறக்கூடிய நிலையில் இல்லை. 16.4 ஓவரில் 103 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 68 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வியுற்றது.
இந்திய அணி ஜூன் 29 அன்று தென் ஆப்பிரிக்க அணியுடன் தனது இரண்டாவது முறை கோப்பையை வெல்வதற்கான இறுதி ஆட்டத்தில் விளையாடும்.
தென் ஆப்பிரிக்க அணி முதன் முறையாக டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆடுகிறது.
இரண்டு அணிகளும் இந்தப். போட்டியில் தாங்கள் ஆடிய அனைத்து ஆட்டங்களையும் வெற்றி பெற்றிருக்கின்றன.
இந்திய அணி கோப்பையை வெல்ல வாழ்த்துவோம்.