யூரோ கால்பந்துக்கோப்பை 2024
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஜெர்மனியில் யூரோ கோப்பைப் போட்டி
டி20 உலகக் கொப்பை கிரிக்கட் போட்டி நடந்துகொண்டிருக்கும்போது யூரோ கால்பந்துக் கோப்பை போட்டி 14 ஜூன் 2024 முதல் 14 ஜூலை 2024 வரை ஜெர்மனியில் நடந்தது. 24 அணிகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் ஜியார்ஜியா அணி முதன் முறையாகக் கலந்துகொண்டது. யூரோ கோப்பை ஜெர்மனியில் நடப்பது இது மூன்றாவது முறையாகும். ஆனால் ஒருங்கிணைந்த ஜெர்மனியில் நடப்பது முதல் முறை. 1988ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனியில் நடந்தது.
இத்தாலி சென்ற முறை கோப்பை வென்றது நினைவிருக்கலாம். ஆனால் இந்த முறை இத்தாலி காலிறுதிச் சுற்றிற்கு முந்தைய சுற்றில் வெளியேறியது. போட்டியை நடத்துகின்ற ஜெர்மனி, இந்த முறை காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயினிடம் தோற்று வெளியேறியது. இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.
ஆட்டம் நடந்த முறை
விளையாடிய 24 அணிகளும் ஆறு குரூப்புகளாகப் பிரிக்கப்பட்டன. குரூப் A பிரிவில் ஜெர்மனி, ஸ்காட்லாந்து, ஹங்கேரி, சுவிட்சர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றன. குரூப் B பிரிவில் ஸ்பெயின், க்ரோஷியா, இத்தாலி, அல்பேனியா ஆகிய அணிகள் இடம்பெற்றன. குரூப் C பிரிவில் ஸ்லோவினியா, டென்மார்க், செர்பியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றன. குரூப் D பிரிவில் போலந்து, நெதர்லாந்து, ஆஸ்திரியா, ஃப்ரான்சு ஆகிய அணிகள் இடம்பெற்றன. குரூப் E பிரிவில் பெல்ஜியம், ஸ்லோவாகியா, ரோமானியா, உக்ரேன் ஆகிய அணிகள் இடம்பெற்றன. குரூப் F பிரிவில் துருக்கி, ஜியார்ஜியா, போர்ச்சுகல், செக் குடியரசு ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்தன.
முதல் சுற்று – லீக் சுற்று
முதல் சுற்று ஆட்டங்கள் ஜூன் 14 முதல் 26ஆம் தேதி வரை நடந்தன. இதன் முடிவில் குரூப் A பிரிவில் ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. குரூப் B பிரிவில் ஸ்பெயின் மற்றும் இத்தாலி அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. குரூப் C பிரிவில் மூன்று அணிகள் தேர்வாயின. அவை இங்கிலாந்து (5 புள்ளிகள்), டென்மார்க் (3 புள்ளிகள்), ஸ்லோவினியா (3 புள்ளிகள்) அணிகளாகும். குரூப் D பிரிவிலும் மூன்று அணிகள் தேர்வாயின. அவையாவன ஆஸ்திரியா (6 புள்ளிகள்), ஃபிரான்சு (5 புள்ளிகள்), நெதர்லாந்து (4 புள்ளிகள்).
குரூப் E பிரிவிலும் குரூப் F பிரிவிலும் மூன்று அணிகள் தேர்வாயின. குரூப் E பிரிவில் ரோமானியா (4 புள்ளிகள்), பெல்ஜியம் (4 புள்ளிகள்), ஸ்லோவாகியா (4 புள்ளிகள்) குரூப் F பிரிவில் போர்ச்சுகல் (6 புள்ளிகள்), துருக்கி (6 புள்ளிகள்) ஜியார்ஜியா (4 புள்ளிகள்) ஆகிய அணிகள் தேர்வாயின.
நாக்-அவுட் சுற்று ரவுண்ட் ஆஃப் 16
இந்தச் சுற்று 29 ஜூன் முதல் ஜூலை ஒன்று வரை நடந்தது. இந்தச் சுற்றின் மிகப்பெரிய அப்செட் சுவிட்சர்லாந்து அணியிடம் நடப்பு சாம்பியன் இத்தாலி அணி தோற்றதுதான். காலிறுதிச் சுற்றிற்கு ஸ்பெயின், ஜெர்மனி, போர்ச்சுகல், ஃபிரான்சு, நெதர்லாந்து, துருக்கி, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து அணிகள் தேர்வாயின.
காலிறுதிச் சுற்று
காலிறுதி ஆட்டங்கள் ஜூலை 5 மற்று 6 தேதிகளில் நடந்தன. முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் அணி ஜெர்மனி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி ஃபிரான்சு அணியிடம் பெனால்டி கார்னர் முறையில் 5-3 என்ற கோல்கணக்கில் தோற்றாது. மூன்றாவது ஆட்டத்தில் நெதர்லாந்து அணி துருக்கி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி சுவிட்சர்லாந்து அணியை பெனால்டி கார்னர் முறையில் 5-3 என்ற கோல் கணக்கில் வென்றது.
அரையிறுதி ஆட்டங்கள்
அரையிறுதி ஆட்டங்கள் ஜூலை 9 மற்று 10 தேதிகளில் நடந்தன. முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் அணி ஃபிரான்சு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி நெதர்லாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
இறுதி ஆட்டம்
இறுதி ஆட்டம் பெர்லினில் ஜூலை 14ஆம் தேதி அன்று நடந்தது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாத்யில் 47ஆவது நிமிடத்தில் ஸ்பெயினின் நிகோ வில்லியம்ஸ் முதல் கோல் அடித்தார். இங்கிலாந்தின் கோல் பாமர் 73ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஆனால் ஸ்பெயினின் மிகேல் ஒயர்ஸபால் 86ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
ஸ்பெயின் நான்காவது முறையாக யூரோ கோப்பையைக் கைப்பற்றியுள்ளது, இதற்கு முன்னர் 1964, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றது. கோப்பையை வென்ற அணிக்கு ஏறத்தாழ 2575 மில்லியன் ரூபாய் பரிசாகக் கிடைத்திருக்கிறது.