இங்கிதம் பழகுவோம்(26) -பெயர் சொல்லி அழைப்பதில் என்ன இருக்கிறது?

என் நிறுவனத்தில் பணி புரிந்து அனுபவம் பெற்று இப்போது வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் எப்போதெல்லாம் வேறு பணி மாறுகிறார்களோ அப்போதெல்லாம் ‘அவர்கள் என் நிறுவனத்தில் பணி புரிந்ததற்கான Employee Verification’ கேட்டு அந்த நிறுவனங்களில் இருந்து இமெயிலும், போனும் வரும்.

அவர்கள் என் நிறுவனத்தில் வேலை செய்தபோது அவர்களின் வேலை, திறமை, பண்பு எல்லாவற்றையும் விலாவரியாக கேட்கும் சம்பிரதாய விசாரிப்பு தான் அந்த Employee Verification. நான் எதிர்மறையாக பதில் சொன்னால் அவர்களுக்கு அந்த புதிய பணி கிடைக்காமலும் போகலாம். 

நேற்று இதுபோன்ற ஒரு Employee Verification க்கு இமெயில் செய்துகொண்டிருந்தபோது சில நினைவுகள் எட்டிப் பார்த்தன.

2000-ம் வருடம், கம்ப்யூட்டர் துறைக்கு சோதனைக் காலகட்டம் அது. Y2K பிரச்சனை வாட்டி எடுத்தது. Y2K பிரச்சனை பற்றி சுருக்கமாக விளக்கி விடுகிறேன்.

டிசம்பர் 31 1999. போன நூற்றாண்டின் கடைசி நாள். அடுத்த நாளான ஜனவரி 01 2000-லிருந்து உலகமே செயல்படாது, உலகில் உள்ள தகவல்கள் எல்லாமே  அழிந்து விடும், உலகமே செயலிழந்து போகும் என்றெல்லாம் பெரும்பாலானோர் நினைத்து பயந்து கொண்டிருந்தார்கள். அந்த பயத்திற்குப் பெயர் தான் Y2K.

சென்ற நூற்றாண்டில் செயல்பட்டுக் கொண்டிருந்த கம்ப்யூட்டர்களில் வருடம் 97,98,99…இப்படித்தான் காட்டிக் கொண்டே வந்திருக்கிறது. 2000 வருடம் பிறந்ததும் அது 00 என்று தானே காண்பிக்கும்.

இதன் காரணமாய் உலகளாவிய அளவில் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு வைத்திருக்கின்ற தகவல்கள் அனைத்தும் அழிந்து விடும் என்று வதந்திகள் பரவிக் கொண்டிருந்தன.

சீசன் பிசினஸ் போல பல நிறுவனங்கள் Y2K பிரச்சனைக்குத் தீர்வாக நாங்கள் சாஃப்ட்வேர் தயாரித்துள்ளோம் என்று தங்கள் பங்கிற்கு மக்களின் பயத்தை வியாபாரமாக்கிக் கொண்டிருந்தன. இதன் பொருட்டு வேலைவாய்ப்புகள் பெருகின.

கோபால் லாங்குவேஜ்தான் Y2K பிரச்சனைக்கு தீர்வைக் கொடுக்கும் சாஃப்ட்வேர்கள் தயாரிக்க உதவும் லாங்குவேஜ் என்பதால், என் நிறுவனத்தில் கோபால் (COBOL) லேங்குவேஜில் சாஃப்ட்வேர் தயாரிப்பில் பணிபுரிந்து அனுபவம் பெற்ற ஓரிருவருக்கு அமெரிக்க நிறுவனங்களில் வேலை கிடைத்தது.

ஊருக்குக் கிளம்புவதற்கு முன் ஏதோ ஒரு சர்டிஃபிகேட் தேவை என எனக்கு போன் செய்தார்கள். 

அவர்கள் தொனியே மாறி இருந்தது. அமெரிக்க நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளதே. பின் பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டியதுதானே.

என் நிறுவனத்தில் பணிபுரிந்த 2 வருடங்கள் ‘மேடம் மேடம்…’ என்றழைத்தவர்கள் அமெரிக்க நிறுவனத்தில் அப்பாயின்மென்ட் கிடைத்த பிறகு எனக்கு போன் செய்த போது  ‘என் பெயரை’ எந்த தடுமாற்றமும் இல்லாமல் பளிச் என அழைத்தார்கள்.

எனக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான்.

நாம் காலம் காலமாக பழகும் விதம், மரியாதை செலுத்தும் பண்பு இவற்றை எல்லாம் ஒரு அமெரிக்க நிறுவனத்தின் ‘அப்பாயின்மென்ட் ஆர்டர்’  எப்படி மறக்கடித்து விடுகிறது.

இதையெல்லாம் பேசுபவர்களுக்கும்,  நம் நாட்டின் பழக்க வழக்கங்கள் மறைந்து வருவதை நினைத்து வருத்தப்படுபவர்களுக்கும் ‘பழமைவாதிகள்’ என்ற பட்டத்தையும் இலவசமாகக் கொடுக்கிறார்கள்.

நான் சுதாகரித்துக்கொண்டு ‘என்ன பேச்சின் தொனியே மாறிவிட்டது? பெயர் சொல்லி எல்லாம் அழைக்கிறீர்கள்’ என்றேன்.

அவர்கள் வேலையில் சேர இருக்கும் அமெரிக்க நிறுவனத்தின் சென்னை கிளையில் அவர்களுக்கு சில அடிப்படைப் பயிற்சியைக் கொடுத்தார்களாம். அங்கு வயதில் எத்தனை பெரியவராக இருந்தாலும் பெயர் சொல்லித்தான் அழைக்க வேண்டுமாம். சார், மேடம் போட்டு பேசக் கூடாதாம்…. அந்தப் பயிற்சியில் இருந்து  அப்போதுதான் வெளியில் வந்ததாகவும் அதனால் அந்த ஃப்ளோவில் அப்படியே பேசி விட்டதாகவும் விளக்கம் சொன்னார்கள்.

காலம் காலமாக சார், மேடம் என்று அலுவலகங்களிலும், குடும்பத்துக்குள் அத்தை, பாட்டி, மாமா, மாமி, அண்ணா எனவும் உறவுமுறை சொல்லி அழைக்கும் நம் பழக்கத்தை ஒரு சில மணிநேர பயிற்சியில் எப்படி மாற்றிக்கொள்ள முடிகிறது?

தவிர மேலைநாடுகளில் அவர்கள் பின்பற்றும் பழக்க வழக்கங்களுக்குப் பின் ஒரு நேர்மையான காரணம் இருக்கிறது. அது குறித்து இப்போது பேச வேண்டாம். பிறகு விரிவாகப் பேசுவோம்.

இங்கு நாம் பேசுவது… நம் நாட்டின் பழக்க வழக்கங்களை அத்தனை சுலபமாக எப்படி விட்டுக்கொடுக்க முடிகிறது என்பதே.

சரி… நாம் திரும்பவும் என்னுடைய ஸ்டாஃப்களுடன் பேசிய உரையாடலுக்கு வருவோம்.

“சரிப்பா… வீட்டுக்குப் போய் அம்மாவையும், அப்பாவையும் ‘அம்மா, அப்பா’ என்று அழைக்கப் போகிறீர்களா… இல்லை அவர்களையும் பெயர் சொல்லி அழைக்கப் போகிறீர்களா?” என்று ஒரு கேள்வியை முன் வைத்தேன்.

அவர்கள் எதுவும் பேசவில்லை.

– காம்கேர் கே. புவனேஸ்வரி

கட்டுரையாளர் குறித்து…

This image has an empty alt attribute; its file name is bhuvaneswari-compcare.jpg

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்

ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர் என பல்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MD ஆக கடந்த 25 ஆண்டுகளாக  செயல்பட்டு வருகிறார். 100-க்கும் மேற்பட்ட தொழில் நுட்பம் மற்றும் வாழ்வியல் புத்தகங்கள் எழுதியுள்ள இவரது சாஃப்ட்வேர்  மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளும், தொழில்நுட்பப் புத்தகங்களும் பல பல்கலைக்கழகம் சார்ந்த கல்லூரிகளில் பாடத் திட்டமாக உள்ளன. For More Info.. http://compcarebhuvaneswari.com/ http://compcaresoftware.com/

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...