
திருப்புகழ் கதைகள் பகுதி 29
கருவடைந்து (திருப்பரங்குன்றம்) திருப்புகழ்
– முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –
“பன்னிருகைக் கோலப்பா, வானோர் கொடிய வினை தீர்த்தருளும் வேலப்பா, எனையாளும் முருகா! அப்பா! இந்தப் பிறவியில் உழன்றது போதும்; உனது திருவருள் பெற அருள்வாய்” என அருணகிரியார் திருப்பரங்குன்றம் திருத்தலத்திலே பாடியருளிய திருப்புகழ் இது. பாடலை முதலில் பார்க்கலாம்.
கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப்ப யின்று
கடையில்வந்து தித்துக்கு ழந்தை …… வடிவாகிக்
கழுவியங்கெ டுத்துச்சு ரந்த
முலையருந்து விக்கக்கி டந்து
கதறியங்கை கொட்டித்த வழ்ந்து …… நடமாடி
அரைவடங்கள் கட்டிச்ச தங்கை
இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து …… வயதேறி
அரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்து
பிணியுழன்று சுற்றித்தி ரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று …..பெறுவேனோ
இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி
னரசரென்றும் ஒப்பற்ற உந்தி
யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும் …..நெடுநீலன்
எரியதென்றும் ருத்ரற்சி றந்த
அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்
எவரும்இந்த வர்க்கத்தில் வந்து …… புனமேவ
அரியதன்ப டைக்கர்த்த ரென்று
அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் …… மருகோனே
அயனையும்பு டைத்துச்சி னந்து
உலகமும்ப டைத்துப்ப ரிந்து
அருள்பரங்கி ரிக்குட்சி றந்த …… பெருமாளே.
இந்தத் திருப்புகழின் முதல் ஐந்து பத்திகள் மனித வாழ்வின் படிநிலைகள் பற்றி அருணகிரியார் பாடுகிறார். இதே கருத்தினை ஆங்கில நாடக அறிஞர் ஷேக்ஸ்பியர் ஒரு கவிதையில் சொல்லுவார்.
All the world’s a stage,
And all the men and women merely players.
They have their exits and their entrances,
And one man in his time plays many parts, – என்று அந்த ஆங்கிலக் கவிதை தொடங்கும்.
இதன் பொருளாவது – முழு உலகமும் ஒரு நாடக மேடை. அதில் ஆண்களும் பெண்களும் வெறும் நடிகர்கள். அந்த நாடக மேடையில் அவர்கள் தோன்றி மறைபவர்கள். ஒருவர் தனது வாழ்நாளில் பல பாத்திரங்களை ஏற்று நடிப்பார். அவர் வாழ்வு ஏழு காட்சிகள் கொண்டது. முதலாவது காட்சியில் அவர் தேம்பியழுது செவிலியின் கைகளில் வாந்தியெடுக்கும் குழந்தை. இரண்டாவது காட்சியில் அவர் சிணுங்கியழும் பள்ளிச் சிறுவர். ஒளிவீசும் தளிர்முகத்துடன் ஏட்டுப்பொதி சுமந்து தனது விருப்பத்துக்கு மாறாக நத்தைபோல் நகர்ந்து பள்ளிசெல்பவர். மூன்றாவது காட்சியில் அவர் காதலர். தன் காதலியின் புருவங்களை நினைந்துருகி கவிதை எழுதுந்தோறும் வெஞ்சூளை போல் கனன்று புகைக்கும் காதலர். நாலாவது காட்சியில் அவர் படைவீரர். அந்நிய வசவுகள், ஆட்டுத்தாடி, தன்மானம் காக்கும் வேட்கை, சண்டைக்கு முந்தும் சுபாவம், களம்புகுந்து அஞ்சாநெஞ்சுடன் பீரங்கிமுன் பாய்ந்து
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
[அறத்துப்பால், துறவறவியல், நிலையாமை, குறள் 339]
என நினைத்து புகழுக்கு ஏங்கும் ஆசை மிகுந்தவர். ஐந்தாவது காட்சியில் அவர் நீதிமான். இலஞ்சம் வாங்கி இதம்படக் கொழுத்த வயிறு, கண்டிப்பு மிகுந்த கண்கள், பிறர் மதிக்கும் வண்ணம் கத்தரித்த தாடி, மதிநுட்பமான வாய்ச்சொற்கள், சமயோசிதமான குறுங்கதைகளின் உறைவிடம். ஆறாவது காட்சியில் அவர் முதிர்ந்து மெலிந்த பேர்வழி. காலில் செருப்பு, மூக்கில் கண்ணாடி, அரையில் காசுமுடிச்சு, இளமையில் அணிந்த காலுறை இப்பொழுது இளகிவழுக்கும் வண்ணம் வாடிவறண்ட கால். அன்று ஓங்கி முழங்கிய குரல் இன்று அற்பசொற்ப கீச்சொலியாய் மங்கி அமுங்கிய நிலை. ஏழாவது காட்சியில், அதாவது இந்நூதன நிகழ்வுகளுடன் கூடிய வரலாற்றின் இறுதிக் கட்டத்தில் எங்கள் காவியநாயகர் பற்களும், பார்வையும், நாட்டமும் இழந்தவராய், அனைத்தையும் களைந்தவராய், அசதி மிகுந்தவராய் தனது இரண்டாவது பிள்ளைப் பராயத்துள் நுழைவதையே நாம் காண்கிறோம். – இதுஷேக்ஸ்பியர்கூறுவது.
இந்திய இலக்கியங்கள், குறிப்பாக தமிழ் இலக்கியங்கள் என்ன சொல்லுகின்றன என்பதை நாளை காணலாம்.