தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பொறுப்பிற்கு அறிவிக்கப்பட்டவர்களை அந்தந்த கட்சி கவுன்சிலர்கள் ஓட்டளித்து தேர்வு செய்ய ப்பட்டவர்கள் இன்று உற்சாகத்துடன் பதவியேற்றனர்.
தமிழகத்தில் 21 மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள்; 138 நகராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள்; 489 பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் பதவிகளுக்கான மறைமுக தேர்தல், இன்று துவங்கியது. ஒட்டுமொத்தமாக 1,296 பதவிகள், மறைமுக தேர்தல் வாயிலாக நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 21 மாநகராட்சியில் 20 மாநகரட்சியில் திமுக மேயர் பொறுப்பை பெற்றுள்ளது.காங்கிரசுக்கு ஒரு மேயர், இரு துணை மேயர் பதவிகளும், இ.கம்யூ., மா.கம்யூ., வி.சி.க., மதிமுக., உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ஒரு துணை மேயர் பதவிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.இன்று காலை தமிழகம் முழுவதும் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடந்தது. பல பகுதிகளில் போட்டி இல்லாமல் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.பிற்பகலில் துணை மேயர் துணை தலைவர் தேர்தல் நடக்கும்.
சென்னை மாநகராட்சியில் பட்டியலின பெண் மேயராக முதன் முதலாக பிரியா பதவி ஏற்றுள்ளார்.
மேயராக தேர்வு செய்யப்பட்ட அவரை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி மேயரின் சிம்மாசனத்திற்கு அழைத்து வந்து அமர வைத்தார். மேயருக்கான அங்கியை வழங்கினார். அதன்பின்னர் செங்கோல் வழங்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து மேயர் அணியக்கூடிய 105 பவுன் தங்க சங்கிலியை, மேயர் பிரியாவுக்கு கமிஷனர் அணிவித்தார். சென்னை மேயராக பணியாற்றக்கூடிய மேயர்களுக்கு தங்க சங்கிலி அணிவது வழக்கம் அவருக்கு தங்க சங்கிலி, செங்கோலுடன் மேயர் பிரியா மேயர் இருக்கையை அலங்கரித்தார்.



சென்னை மாநகராட்சியின் புதிய மேயர் பிரியா பதவியேற்று அந்த இருக்கையில் அமர்ந்தவுடன் அனைத்து கவுன்சிலர்களும் கைத்தட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
360 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த சென்னை மாநகராட்சியில் இதுவரை 46 மேயர்கள் பதவி வகித்துள்ளனர். ஆங்கிலேயர் கால மேயர்களை தொடர்ந்து தமிழர்கள் மேயராக பதவி வகித்த சிறப்பும் உள்ளது. இந்த வரிசையில் சென்னை மாநகராட்சியில் பட்டியலின பெண் மேயராக முதன் முதலாக பிரியா பதவி ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.