திமுகவுக்கு 1971 இல் உதவிய அன்றைய ஜன சங்கம் இருந்த இன்றைய பாரதிய ஜனதா.
மறைந்த முன்னாள் மேயர் மதுரை முத்து அவர்களின் சிலையைத் திறந்து வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் செல்ல இருக்கிறார் என்கிற செய்தியைப் பார்த்தேன்.
கலைஞர் காலத்தில் சென்னை மாநகராட்சி போலவே தமிழகத்தின் இரண்டாவது மாநகராட்சியாக 1971 மே மாதம் மதுரையை ஆக்கினார். மதுரையில் மிகப்பெரிய அந்த மாநகராட்சி கட்டிடம் ஏறக்குறைய மேயர் முத்துவின் அலுவலக அறைக்கு அருகே வரை தனது காரைக் கொண்டு செல்லும்படியான விதத்தில் அமைக்கப்பட்டிருந்தது.1970 களில் இந்தக் கட்டிடம் சிறப்பாகப் பேசப்பட்டது அதேபோல் திருநெல்வேலி மேம்பாலத்தையும் மிகச் சிறப்பாக கலைஞர் கட்டினார்.
அன்றைக்கு ஜன சங்கமாக இருந்த இன்றைய பாரதிய ஜனதாவின் வேட்பாளர் மதுரை மக்களால் மாநகராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சேஷாத்திரி என்பவர் தனது ஒற்றை வாக்கை மதுரை முத்துவிற்கு அளிக்காவிட்டால் அன்றைக்கு முத்து மேயராகவே ஆகியிருக்க முடியாது.
அந்த ஒற்றை வாக்கை வாங்குவதற்குக் கலைஞர் வாஜ்பாயிடம் பேசினார். ஜனா கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினார். அப்போது நாங்களெல்லாம் ஸ்தாபனக் காங்கிரஸில் இருந்த நேரம். நெடுமாறன் மதுரை மாவட்டத்தின் தலைவர். ஸ்தாபன காங்கிரசின் பொதுச் செயலாளரும் கூட.
எப்படியாவது மாநகராட்சித் தேர்தலில் மதுரை முத்துவைத் தோற்கடித்தாக வேண்டும் என்று நெடுமாறன் நினைத்தார். மதுரை முத்துவிற்கும் நெடுமாறனுக்கும் தொடர்ந்து அரசியல் ரீதியான போட்டிகளும் முரண்பாடுகளும் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. .
நெடுமாறன் ஏற்கனவே திமுக.,வில் இருந்தவர்தான். அண்ணாவுடனான முரண்பாடுகளால் சம்பத் வெளியே வந்த போது அவருடன் வெளியேறி வந்தவர். மதுரையின் உள்ளூர் அரசியலில் நெடுமாறனும் மதுரை முத்துவும் அடிக்கடி மோதிக் கொள்வார்கள்.
இப்படியான சூழ்நிலையில் எப்படியாவது மதுரை முத்துவை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று முயன்ற கலைஞர், ஜனா கிருஷ்ணமூர்த்தியை அழைத்து உங்க ஜனசங்க சேஷாத்திரி என்பவரை நீங்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். ஏனெனில் அந்த சேஷாத்திரி என்பவர் அளித்த ஒரு வாக்கைத்தான் கூடுதலாகப் பெற்று மதுரை முத்து ஜெயித்தார்.
இன்றைய திமுகவில் இதெல்லாம் எத்தனை பேருக்கு தெரியும்? அன்றைக்கு ஜன சங்கமாக இருந்து இன்றைக்கு பாரதிய ஜனதாவாக மாறி உள்ள அரசியல் அமைப்பைத் தொடர்ந்து எதிர்த்து பேசுபவர்கள் அன்றைக்கு மதுரை முத்து மேயர் ஆவதற்கு இவர்கள்தான் அடித்தளமாக இருந்தார்கள் என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.
இன்றைக்கு மதுரை முத்துவின் சிலையை திறக்கச் செல்லும் முதல்வர் இதையெல்லாம் மேடையில் குறிப்பிட்டுப் பேசுவாரா? பார்க்கலாம்! அவருக்கு இது எங்கே தெரியப் போகிறது!
ஐபிஎல் 2025 – எலிமினேட்டர் ஆட்டம் 30.05.2025 – சண்டிகர் – மும்பை vs குஜராத்
ரோஹித் ஷர்மாவின் கலக்கல் ஆட்டம்
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
மும்பை இந்தியன்ஸ் அணி (228/5, ரோஹித் ஷர்மா 81, ஜானி பெயிர்ஸ்டோ 47, சூர்யகுமார் யாதவ் 33, திலக் வர்மா 25, ஹார்திக் பாண்ட்யா 22, நமன் திர் 9, பிரசித் கிருஷ்ணா 2/53, சாய் கிஷோர் 2/42, சிராஜ் 1/37) குஜராத் டைடன்ஸ் அணியை (208/6, சாய் சுதர்ஷன் 80, வாஷிங்க்டன் சுந்தர் 48, ரூதர்ஃபோர்ட் 24, குசல் மெண்டிஸ் 20, ராகுல் திவாத்தியா ஷாருக் கான் 13, போல்ட் 2/56, பும்ரா, கிளீசன், சாண்ட்னர், அஷ்வினி குமார் தலா ஒரு விக்கட்) 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற மும்பை இந்தியன் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜானி பெயர்ஸ்டோ (22 பந்துகளில் 47 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ரோஹித் ஷர்மா (50 பந்துகளில் 81 ரன், 9 ஃபோர், 4 சிக்சர்) ஆகியொர் சிறப்பான தொடக்கம் தந்தனர். முதல் 6 பவர்பிளே ஓவர்களில் அந்த அணி விக்கட் இழப்பின்றி 79 ரன் எடுத்தது. பெயர்ஸ்டோ எட்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.
அவருக்குப் பின் வந்த சூர்யகுமார் யாதவ் (20 பந்துகளில் 33 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்), திலக் வர்மா (11 பந்துகளில் 25 ரன், 3 சிக்சர்), ஹார்திக பாண்ட்யா (9 பந்துகளில் 22 ரன், 3 சிக்சர்), நமன் திர் (6 பந்துகளில் 9 ரன், 1 சிக்சர்) ஆகியோர் மிகச் சிறப்பாக ஆடினர். இதனால் மும்பை அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 228 ரன் எடுத்தது.
229 ரன் என்ற கடினமான இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் (1 ரன்) முதல் ஓவர் நாலாவது பந்தில் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் (10 பந்துகளில் 20 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் வாஷிங்க்டன் சுந்தர் (24பந்துகளில் 48 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) இருவரும் மற்றொரு தொடக்க வீரரான சாய் சுதர்ஷன் (49 பந்துகளில் 80 ரன், 10 ஃபோர், 1 சிக்சர்) உடன் இணைந்து ஆடி 56 பந்துகளில் அணிக்கு 100 ரன்கள் சேர்த்தனர்.
இருப்பினும் இவர்களுக்குப் பின்னர் வந்த ரூதர்ஃபோர்ட் (15 பந்துகளில் 24 ரன், 4 ஃபோர்), ராகுல் திவாத்தியா (11 பந்துகளில் 16 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்), ஷாருக் கான் (7 பந்துகளில் 13 ரன்) ரஷீத் கான் (பூஜ்யம் ரன்) ஆகியோரால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 208 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
மும்பை அணியின் ரோஹித் ஷர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி பஞ்சாப் அணியுடன் மற்றொரு தகுதி ஆட்டத்தில் ஆடும்.
ஜனநாயகத்திற்கு எதிரான, மக்கள் விரோத நக்சல் பயங்கரவாத ஒழிப்பிற்கு எதிராக கம்யூனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது, தமிழகத்திற்கு ஆபத்து… என்று, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
1967-ல் ஆரம்பிக்கப்பட்ட நக்சல்பாரி அமைப்புகள் நமது நாட்டின் வளர்ச்சியை முடக்கி வந்தது. ஆயுத புரட்சி எனும் வன்முறை மூலமாக இளைஞர்களை மூளைச்சலவை செய்து வன்முறையில் ஈடுபட வைத்தது.
கடந்த காலங்களில் நக்சல்கள் முழுவதுமாக அழிக்கப்படுவார்களா எனும் கேள்வி மக்களிடையே எழுந்தது. மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் 2026 மார்ச் 31-க்குள் நக்சல்கள் வேரோடும் வேரடி மண்ணோடும் களை எடுக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் அறிவித்தார்.
அதன்படி செயல்பட்டு நக்சல் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தர் பகுதியில் மே மாதம் 21 ஆம் தேதி, நமது பாதுகாப்பு படையினர் நக்சல் இயக்கத்தின் முதுகெலும்பாக செயல்பட்டு வந்த நம்பாலா கேசவராவ் என்கின்ற பரசவராசு உள்ளிட்ட 27 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.
நக்சல் தாக்குதல்களால் கடந்த 25 ஆண்டுகளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதைப்பற்றி கவலைப்படாத கம்யூனிஸ்டுகள் நக்சல்களுக்கு ஆதரவாக ‘போலி என்கவுண்டர்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி மக்களை குழப்ப தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடுகின்றனர். நக்சல் பயங்கரவாத அமைப்புகளால் அந்தந்த மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் வராமல் தடுக்கின்றனர்.
நக்சல்கள் ஆக்கிரமித்த பகுதிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, பள்ளிக்கூடம் போன்ற அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்த விடாமல் தடுத்து, பொதுமக்களை மிகுந்த கஷ்டத்தில் தள்ளுகின்றனர். உள் கட்டமைப்பு இல்லாததால் வளர்ச்சி ஏற்படாமல் அப்பகுதி மக்கள் ஏழ்மையில் வாடுகின்றனர். நக்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் கல்வி கற்போர் எண்ணிக்கையும் குறைவாக இருந்து வந்தது. வளர்ச்சித் திட்டங்களை முடக்கி மக்களை ஏழ்மையாகவே வைத்திருக்கும் நக்சல் அமைப்புகளை முற்றிலும் ஒழித்திட மத்திய அரசு முனைந்து செயல்பட்டு வருகிறது.
நக்சல் தலைவன் பசவராசு சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அவன் பிறந்த கிராமத்தில் தற்போது மின்சார வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதே கிராமத்தில் தார் சாலை போடும்போது கன்னிவெடி வைத்து நக்சல்கள் அதை தகர்த்தனர். ஆனால் தற்போது நிலைமை சீராகி வருகிறது. இந்த ஆண்டு இதுவரை 25 நக்சல்கள் சரணடைந்துள்ளனர்.
அதே வேளையில் மொபைல் இணைப்பு மத்திய அரசு உதவி திட்டம், சிறப்பு உட்கட்டமைப்பு திட்டம், ஊரக வேலை வாய்ப்பு திட்டம் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வேலைகளையும் மத்திய மாநில அரசுகள் இணைந்து விரைவாக செயல்படுத்தி வருகின்றன.
106 மாவட்டங்கள் நக்சல்களின் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கருதப்பட்ட நிலையில் தற்போது அது 16 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையால் விரைவில் நக்சல்கள் இல்லாத தேசமாக பாரதம் உருவெடுக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
தமிழகத்திலும் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது காவல்துறை அதிகாரி வால்டர் தேவாரம் தலைமையில் ஒட்டுமொத்தமாக நக்சல் பயங்கரவாதத்தை ஒழித்தார். தெலுங்கானா பகுதியில் பெருகி வந்த நக்சல் இயக்கம் ஒழிக்கப்பட்டது. இப்போது மீண்டும் கேரள மாநில எல்லைப் பகுதியான தேனி மலைப் பகுதிகளில் நக்சல் பயிற்சிகள் நடப்பதாக உளவு துறை எச்சரிக்கை செய்துள்ளது.
தமிழகத்தில் கம்யூனிஸ்ட் அமைப்புகள் நக்சல்களை ஆதரித்தும் ‘போலி என்கவுண்டர்’ என்ற பிம்பத்தை உருவாக்கி மக்களை குழப்பவும் ஜூன் இரண்டாம் தேதி ராஜரத்தினம் திடலில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரியுள்ளனர்.
நக்சல் இயக்கம் என்பது கம்யூனிஸ்ட்களின் துணை அமைப்புதான் என்பதை இதன்மூலம் தெள்ளத் தெளிவாக அறிய முடியும். தேசத்திற்கு எதிரான வன்முறையாளர்களை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட்கள் குறித்து மாநில அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் மக்கள் கலை இலக்கிய கழகம், மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகள் நகர்புற நக்சல்ளாக மாறி தமிழகத்தில் குழப்பத்தை விளைவித்து வருகின்றன. இதனுடன் விடுதலை சிறுத்தைகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கைகோர்த்துள்ளது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் எந்த தொழிற்சாலைகள் வந்தாலும் அதை ஏதோ ஒரு காரணம் காட்டி முடக்கி வருகிறது கம்யூனிஸ்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நக்சல் வன்முறை இல்லாத நாடாக பாரதம் உருவாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் இந்த வேளையில், கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் நக்சல் ஆதரவு நிலையை ஏற்படுத்தும். தமிழகத்தில் நக்சலைட்கள் பரவ தமிழக அரசே துணைபோகும் ஆபத்தையும் சுட்டிக்காட்டுகிறோம்.
நக்சல்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை மத்திய, மாநில உளவுத்துறை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
மதுரை சிம்மக்கல், ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் ஸ்ரீ சாரதா வித்யாவனம் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை, சோழவந்தான், திருநெல்வேலி பள்ளிகள் சார்பில் 186 ஆசிரியர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்பட்டது. ஆசிரியர்களின் ஓரங்க நாடகம், குழுச் சிந்தனை, அது தொடர்பான அமர்வு, தியானப் பயிற்சி ஆகியவை நடைபெற்றன.
தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர், சுவாமி விமூர்த்தானந்தர் ‘உயிரோட்டம் உள்ள ஆசிரியர்களாக விளங்கி, மாணவர்களுக்கு உயிரூட்ட வாருங்கள்’ என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
பிற்பகலில் இளம் ஆசிரியர்கள் மூத்த ஆசிரியர்களின் சிறப்பு குணங்கள் மற்றும் அவர்களிடம் கற்றவை குறித்தும் பாராட்டிப் பேசினார்கள். மொத்தத்தில் அனைத்து ஆசிரியர்களும் ஆனந்தமும் ஆற்றலும் பெற்று விரைவில் ஒரு நல்ல சமுதாயத்தை நோக்கிப் புறப்பட்டனர்.
இதயத்தின் மேல்புறத்தில் ஓடும் ரத்தக்குழாய்களில் (கொரோனரி தமனிகள்) உண்டாகும் அடைப்புகளால்தான் இதயம் தொடர்பான நெஞ்சு வலியும் மாரடைப்பும் ஏற்படுகின்றன. அடைப்பு உள்ளதா என்பதை ஈ.சி.ஜி, எக்கோகார்டியோகிராம் போன்றவை உறுதியாகச் சொல்லாது. அதற்காகச் செய்யப்படும் ஒரு சிறப்புப் பரிசோதனைக்குப் பெயர் தான் ஆஞ்சியோகிராம். அதில் அடைப்பு கண்டறியப்பட்டால் அந்த அடைப்பை நீக்குவதற்குப் பெயர் ஆஞ்சியோபிளாஸ்டி என்பதாகும். பெரும்பாலான சமயங்களில் அந்த இடத்தில் மெல்லிய கம்பிகளாலான ஒரு ஸ்பிரிங் போன்ற சாதனத்தைப் (ஸ்டென்ட்) பொருத்துவோம். சில சமயம் பலூன் கொண்டு அடைப்பை நீக்கிய பின் ஸ்டென்ட் பொருத்த வேண்டிய அவசியம் வருவதில்லை.
ஆக, யாராவது “நான் ஆஞ்சியோ செய்து கொண்டேன்” என்று கூறினால் அந்த வாக்கியத்தில் முழுமையான செய்தி இல்லை. பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் ‘ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்’ என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் ‘ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்’ என்றும் சொல்ல வேண்டும்.
ஸ்டென்ட் பொருத்தப்பட்ட நபர் அது உள்ளே இருப்பதை உணர முடியுமா?
இல்லை. உணர முடியாது.
உடம்பு அசையும் பொழுதோ, ஏதேனும் ஒரு பக்கம் திரும்பிப் படுக்கும் பொழுதோ, உடற்பயிற்சி செய்யும் பொழுதோ ஸ்டென்ட் நகன்று விட வாய்ப்புள்ளதா?
இல்லை. தமனியில் சிறிதளவும் நகல முடியாது.
அவர்கள் ஏதேனும் தனிப்பட்ட முறையில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டுமா?
பெரிதாக ஒன்றும் இல்லை. பரிந்துரைக்கப்பட்ட மாத்திரை மருந்துகளைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். ரத்தம் கட்டி பிடிக்காமல் இருக்கத் தட்டை அணுக்களின் செயல்பாடுகளைக் குறைக்கும் ஆன்ட்டி பிளேட்லெட்ஸ் (anti platelets) எனப்படும் மருந்துகளை மறக்கும் பட்சத்தில் ஸ்டென்ட்டின் உள்ளேயே ரத்தக்கட்டி உருவாகி உயிருக்கே ஆபத்தாக முடியும் வாய்ப்பு உண்டு.
ஸ்டென்ட் கரைந்து விடுமா?
இல்லை. அது தமனியுடன் ஐக்கியமாகிவிடும்.
கரையும் ஸ்டென்ட் என்று ஏதேனும் உள்ளதா?
உண்டு. ஆனால் தற்சமயம் மிகவும் வெறுசிலருக்கே அம்மாதிரியான ஸ்டென்ட் பொருத்துகிறோம்.
ஒன்றோ இரண்டோ அடைப்புகள் இருந்தால் ஆஞ்சியோபிளாஸ்டி என்றும் மூன்று அல்லது மேற்பட்ட அடைப்புகளோ இருந்தால் பைபாஸ் சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்களே, உண்மையா?
பெரும்பாலான சமயங்களில் இது உண்மைதான். ஆனால் சில சமயங்களில் நான்கு அடைப்பு உள்ள நபருக்கும் ஆஞ்சியோபிளாஸ்ட்டி மூலமாகச் சரி செய்திருக்கிறோம். ஒரே அடைப்பு உள்ள நபருக்குப் பைபாஸ் சிகிச்சையும் செய்திருக்கிறோம். அடைப்பின் தன்மையைப் பொறுத்து நாங்கள் இவ்வாறு முடிவு எடுக்கிறோம்
ஸ்டென்ட் வைத்த இடத்தில் மறுபடியும் அடைப்பு வர வாய்ப்புள்ளதா?
உண்டு. ஸ்டென்ட் வைத்த இடத்திலும் அதற்கு மேலும் கீழும் மற்ற எந்த இடத்திலும் மீண்டும் அடைப்பு வரலாம். பைபாஸ் செய்தாலும் செய்த இடத்திலும் அதற்கு மேலும் கீழும் மீண்டும் அடைப்பு வரலாம்.
பைபாஸ் செய்து கொண்டால் அடைப்பு பின்னர் வராது என்று கூறுகிறார்களே?
அது உண்மையல்ல. ஆஞ்சியோ பிளாஸ்டியோ பைபாஸ் சிகிச்சையோ ஏற்கனவே உள்ள அடைப்பு எனும் பிரச்சனைக்கு ஒரு தீர்வு. அவ்வளவுதான். அந்த அடைப்பை உருவாக்கிய நோய் அவர்கள் உடலில் அப்படியேதான் இருக்கும். அதனால் புகைப் பழக்கத்தை விடுதல், இரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு போன்றவற்றிற்கான சிகிச்சைகளை வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும். அவைகளை முழுமையாக கட்டுக்குள் வைத்தால்தான் மீண்டும் மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும்.
ஆஞ்சியோ பற்றிய சந்தேகங்கள்
1. இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால் நம் உடல் தானாகச் சரி செய்து கொள்ள வாய்ப்பு உள்ளதா?
இல்லை. முறையான மருத்துவத்தால் அடைப்புகள் மேற்கொண்டு கூடாமல் ஓரளவு தடுக்க முடியும். ஏற்கனவே ஏற்பட்டு விட்ட அடைப்பை கரைக்க முடியாது.
2. எனக்கு எட்டு வருடங்களுக்கு முன் ஸ்டென்ட் வைக்கப்பட்டது. நன்றாக இருக்கிறேன். மறுபடியும் ஆஞ்சியோ எடுத்துப் பார்க்க வேண்டுமா?
அவசியம் இல்லை. 20 – 22 வருடங்களுக்கு முன் ஸ்டென்ட் வைத்துக் கொண்ட பலரும் நலமாக இருக்கிறார்கள். இரத்த அழுத்தம் சர்க்கரை போன்றவற்றைச் சீராக வைத்துக் கொண்டு, மாத்திரைகளைத் தவறாமல் உட்கொண்டாலே போதும். சில காலம் கழித்து ஒரு சிலருக்கு ஏற்படும் நெஞ்சுவலி அல்லது மற்ற தொந்தரவுகளைப் பொறுத்தே மறுபடியும் ஆஞ்சியோ பரிசோதனையைப் பரிந்துரைப்போம்.
3. ஸ்டென்டுக்கு காலாவதி என்று ஏதேனும் உண்டா? (expiry date)
அப்படி எதுவும் இல்லை. கொரோனித் தமனிகளில் பொருத்தப்பட்ட பின் ஸ்டென்ட்டில் பூசப்பட்டிருந்த மருந்து மெதுவாக வெளிவரும். ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் அந்த மருந்து தீர்ந்துவிடும். பின்னர் ஸ்டென்ட்டின் மேல் நம் உடம்பு செல்களால் ஆன ஒரு மெல்லிய போர்வையைப் போர்த்தி விடும் (endothelialization). ஸ்டென்ட் அந்த இரத்தக்குழாயுடன் ஐக்கியமாகிவிடும்.
வயிற்றில் பித்தப்பைக் கல் மற்றும் சிறுநீரகக் கல் இருந்தாலும் மருத்துவர்கள் ஸ்டென்ட் வைப்பார்கள். அது வேறு விதமானது தற்காலிகமானது. ஒரு சில வாரங்கள் கழித்தோ மாதங்கள் கழித்தோ அதனை வெளியே எடுத்து விடுவார்கள்.
கொரோனரி தமனிகளில் ஸ்டென்ட் நிரந்தரமானது. பொருத்தப்பட்ட பின் நாம் நினைத்தாலும் அதனை வெளியே எடுக்க முடியாது.
4. இது உலோகத்தால் ஆனது என்று சொல்கிறீர்களே, உள்ளே துருப்பிடித்துவிடாதா?
(இது உண்மையிலேயே ஐடியில் படித்து அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பெண் எழுப்பிய கேள்வி)
இரும்பு தான் துருப்பிடிக்கும். ஸ்டென்ட் கோபால்ட் குரோமியம் (Cobalt Chromium) அல்லது அது போன்ற உலோகக் கலவைகளால் ஆனது. இது ரத்தத்துடனோ நம் உடம்பின் திசுக்களுடனோ வினைபுரியும் தன்மையற்றது.
5. ஸ்டென்ட் வைத்தால் ஏன் வாழ்க்கை முழுவதும் மாத்திரை எடுக்கச் சொல்கிறீர்கள்?
அது ஸ்டென்ட்டிற்காக அல்ல. மேற்கொண்டு அடைப்பு வராமல் தடுக்கவும் உடலில் உள்ள மற்ற நோய்களைக் கட்டுப்படுத்தவும் தான்.
6. மாத்திரைகளைத் தவறாமல் எடுக்கிறேன், நன்றாக இருக்கிறேன். மருத்துவரை சென்று பார்க்க வேண்டிய அவசியம் என்ன?
வேறு பிரச்சனை இல்லாத பட்சத்தில் வருடத்தில் ஒரு முறையாவது மருத்துவரை சென்று பரிசோதித்துக் கொள்வது நல்லது. உடம்பின் திசுக்களோ, இரத்த அழுத்தமோ, சர்க்கரையோ நிலையானது அல்ல, கூடக் குறைய ஆகும். அதற்கேற்றவாறும், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட உப்புகளையும் கொழுப்புகளையும் பரிசோதித்து, அதைப் பொருத்தும் மருத்துவர் மருந்துகளில் மாற்றங்கள் செய்வார்.
7. மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்தால் சிறுநீரகப் பிரச்சினை வரும் என்கிறார்களே, உண்மையா?
அப்பட்டமான பொய். சர்க்கரை அல்லது மற்ற பிரச்சினையால் சிறுநீரகப் பிரச்சனை வருவதைத் தடுக்கும் வல்லமை கொண்டவை மாத்திரைகள். எனக்குத் தெரிந்து 25 வருடங்களுக்கு மேலாக இந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டு பலரும் நலமாக இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக்கொண்டதால்தான் இதய நோய் தாக்கியும் 25 வருடங்களாக நலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.
மே மாத அக்னி நட்சத்திர வெயில் காலம் முடிந்து வழக்கம் போல் ஜூன் மாத முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். அதன்படி, வரும் ஜூன் 2 திங்கள் கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில் கன மழையும் மிக கன மழையும் பெய்து வருகிறது. இதன் முன்னோட்டமாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் ஆரஞ்ச் அலர்ட், ரெட் அலர்ட் என்று விடப்பட்டிருந்தது.
இதனால் பள்ளித் திறப்பு ஜூன் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படும் என்று சமூகத் தளங்களில் செய்தி பரவியது. இதற்கு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
பள்ளிகள் வருகிற 2-ம் தேதி திறக்கப்பட இருப்பதாக மாநில அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், கனமழை தொடர்வதால், பள்ளித் திறப்பு ஜூன் 9-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
இதுகுறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ஜூன் 2-ம் தேதி பள்ளித் திறப்பு உறுதி, ஜூன் 9 திறப்பு என்பது வதந்தி என்று தகவல் சரிபார்ப்பகம் கூறியுள்ளது.
இதனிடையே, சென்னை மற்றும் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்து சேவைகளை அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. கோடைக்கால விடுமுறை முடிந்து ஊர்களுக்குத் திரும்ப வசதியாக, பல்வேறு இடங்களில் இருந்தும் வார இறுதி நாட்களான இன்றும், சனிக்கிழமை நாளை மற்றும், ஞாயிற்றுக் கிழமையிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இதய நோய்களுக்காக தட்டணு எதிர்மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகளில் பெரிய சிறுநீரக கற்களை அகற்றும் சிகிச்சையளிப்பதில் திறன்மிக்க ஒரே மருத்துவமனையாக திகழ்கிறது மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை என்று கூறினர்.
2 செ.மீ. வரையிலான அளவு கொண்ட சிறுநீரகக் கற்களை குணப்படுத்த ஆர்.ஐ.ஆர்.எஸ் எனப்படும் குறைவான ஊடுருவல் உள்ள சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், இரத்தத் தட்டு உறைதல் தொடர்பான மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகளுக்கு ஆர்.ஐ.ஆர்.எஸ் சிகிச்சை மூலம் பெரிய அளவிலான சிறுநீரகக் கற்களை நீக்க அதிநவீன வசதிகளும் உயர் நிபுணத்துவமும் தேவைப்படும்.
மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், ரெட்ரோகிரேட் இண்ட்ரா-ரீனல் சர்ஜரி எனப்படும் சிகிச்சை மூலம் 62 வயதுப் பெண் நோயாளி ஒருவருக்கு சிறுநீரகத்தில் இருந்த இரண்டு பெரிய கற்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளன. அவர், இரத்தக் கட்டி ஏற்படுவதைத் தடுப்பதற்கான இரு வெவ்வேறு வகையான மருந்துகளை உட்கொண்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக, ஆர்.ஐ.ஆர்.எஸ் என்பது, 2 செ.மீ வரையிலான அளவுள்ள சிறுநீரகக் கற்களை அகற்றப் பயன்படுத்தப்படும் குறைவான ஊடுருவல் சிகிச்சையாகும். பெரிய அளவிலான கற்களை நீக்க இம்முறை பயன்படுத்தப் பட்டாலும், இரத்தக் கட்டி ஏற்படுவதைத் தடுப்பதற்கான மருந்துகளை உட்கொண்டுவரும் நோயாளிகள் விஷயத்தில் அதிநவீன வசதிகளும் நிபுணத்துவமும் இருந்தால் மட்டுமே இம்முறையைப் பயன்படுத்த இயலும்.
இந்நோயாளிக்கு இதய நோய்க்கான சிகிச்சையில் ஒரு மாதத்துக்கு முன்பு ஸ்டென்ட் பொருத்தப்பட்டிருந்தது. அவரது வலது சிறுநீரகத்தில் 3.5 x 2.5 செ.மீ அளவுள்ள கல்லும், இடது சிறுநீரகத்தில் 2×1.5 செ.மீ கல்லும் இருந்தன. தற்போது, அவையிரண்டுமே அகற்றப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு நோயாளி நலத்துடன் இருக்கிறார்.
இன்றைய நிலையில், இரத்தக் கட்டிக்கான மருந்துகள், இரத்த உறைதலைத் தடுக்கும் மருந்துகள் உட்கொள்வோர், கல்லீரல் நோயாளிகள், இயற்கையிலேயே பெரிய அளவிலான அசாதாரணமான சிறுநீரகங்கள் கொண்டோர் (அதிக இடர் கொண்ட அல்லது எவ்விதமான சிகிச்சையும் செய்ய முடியாது என்று கருதப்பட்டவர்கள்) ஆகியோருக்குக்கூட பெரிய அளவிலான சிறுநீரகக் கற்களை அகற்றுவதில் ஆர்.ஐ.ஆர்.எஸ் முறையில் சிகிச்சை தருவதில் மதுரை மாநகரிலேயே ஒரே மருத்துவமனையாக மீனாட்சி மிஷன் திகழ்கிறது. நாட்டில் செயல்முறைகளில் 90%-க்கும் அதிகமான வெற்றிகரமான சிகிச்சை விகிதங்களை கொண்டிருக்கும் பெருமை மிக்க மருத்துவமனைகளுள் மீனாட்சி மிஷனும் ஒன்று.
மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் யூராலஜி, ஆண்கள் நோயியல் பிரிவின் முதுநிலை மருத்துவ நிபுணர் மற்றும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர்.டி.பால் வின்சென்ட் தலைமையில் இந்த சமீபத்திய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அவர் இதுகுறித்துப் பேசுகையில், ”ஆர்.ஐ.ஆர்.எஸ் சிகிச்சையில் பல படிநிலைகள் உண்டு. அதன்படி, நோயாளியின் சிறுநீரகத்தை நோக்கி யூரிட்டராச்கோப் எனும் நுண்ணிய-நெகிழ்தன்மையுடைய கருவி செலுத்தப்படும். இது சிறிய கேமரா, சிறு விளக்கு ஆகியவற்றை உள்ளடக்கிய மெலிதான சாதனம். இது, சிறுநீர்ப்பாதை, சிறுநீர்ப்பை வழியாக சிறுநீரகத்துக்கு செலுத்தப்படுகிறது.
அடுத்தபடியாக, ஒரு லேசர் மூலம் சிறுநீரகக் கல், சிறு துகள்களாக உடைக்கப்பட்டு, ஒரு சிறிய பை போன்ற அமைப்பின்மூலம் கவரப்பட்டு பின்னோக்கி இழுக்கப்பட்டு அகற்றப்படும். அல்லது துகள்கள் அனைத்தும் சிறுநீரின் வழியாகவே வெளியேறுமாறு செய்யலாம். வழக்கமாக ஆர்.ஐ.ஆர்.எஸ் முறையில் 2 செ.மீ வரை அளவுள்ள சிறுநீரகக் கற்களே அகற்றப்படும். ஆனால், சரியான நிபுணத்துவம் கொண்ட மருத்துவரால் பெரிய கற்களைக்கூட படிப்படியாக இம்முறையைப் பயன்படுத்தி அகற்ற முடியும். பொதுவாக இதய நோய், பக்கவாத நோயாளிகள் இரத்தத்தின் அடர்த்தியைக் குறைப்பதற்காக மருந்துகளை உட்கொள்வர்.
இவர்களுக்கும் கல்லீரல் செயல் இழந்த நிலையில் இருப்போர், மேலும், அசாதாரண நிலை சிறுநீரகங்களுடன் இருப்போர், இரத்த உறைதல் பிரச்சனையால் இரத்தக் கசிவு தொந்தரவைச் சந்திப்போர் ஆகியோருக்கு இந்த சிகிச்சை அளிக்கும்போது உயர்தர நிபுணத்துவம் தேவைப்படும்” என்றார்.
மேலும் அவர் பேசும்போது, ”ஆர்.ஐ.ஆர்.எஸ் முறையின் சிறப்பு என்னவென்றால், இதில் உடலைக்கீறி சிகிச்சை செய்யப்படுவதில்லை என்பதுதான். மேலும் இரத்தக் கசிவு, சிறிய தொந்தரவுகளுக்கான வாய்ப்பு இதில் மிகவும் குறைவு. இச்சிகிச்சை பெற்றவர், சிகிச்சை முடிந்த மறுநாளே பணிக்கு சென்றுவிடலாம். எனவே, இது வசதியான அதே நேரத்தில் உடலில் மிகக்குறைவான ஊடுருவலைச் செய்யக்கூடிய சிகிச்சை முறையாக இருக்கிறது” என்றார்.
சிறுநீரகக் கற்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது குறித்துப் பேசிய மருத்துவர் பால் வின்சென்ட் , ”சிறுநீரில் உள்ள சில அம்சங்கள் அடர்த்தியாக ஆகி, சிறு சில்லுகளாக மாறிவிடும். அவை, நாளடைவில் சிறுநீரகக் கற்களாக ஆகிவிடுகின்றன. இதனைத் தடுக்க வேண்டுமென்றால் தினசரி 2 லிட்டர் சிறுநீர் வெளியேற்றப்பட வேண்டும். அந்த அளவிற்கு சிறுநீர் கழிக்க வேண்டுமென்றால் குறைந்தது 3 லிட்டர் நீர் பருக வேண்டும். அசைவ உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்” என்றார்.
இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் சிறுநீரகவியல் துறையின் தலைவரும் முதுநிலை மருத்துவர் ஆர்.ரவிச்சந்திரன், முதுநிலை நிபுணர், யூராலஜி துறை, ஆண்ட்ரோலாஜிஸ்ட் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டி.பால் வின்சென்ட், சிறுநீரகவியல் துறையின் முதுநிலை மருத்துவர் வேணுகோபால் கொனங்கி, மற்றும் மார்க்கெட்டிங் துறையின் பொது மேலாளர் சிவகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
சோழவந்தானில் இயங்கும் பேருந்துகள் அரசு பேருந்துகளா அல்லது அலங்கார ஊர்திகளா என்று, பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சோழவந்தான் பகுதியில் இயங்கும் பேருந்துகளில் குறிப்பிட்ட சில பேருந்துகள் முழுவதும் தனியார் விளம்பரம் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு தகவல் பலகை முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் செல்வதால் பொதுமக்கள் பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக சோழவந்தானிலிருந்து மதுரை மாட்டுத்தாவணிக்கு செல்லும் பேருந்தானது தனியார் விளம்பரங்கள் மூலம் பேருந்தின் முன் பகுதி தவிர அனைத்து பகுதிகளிலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அலங்கார உறுதி செல்வது போல் வந்து செல்கிறது ஏற்கனவே பேருந்துகளின் தகவல்கள் பொதுமக்களின் பார்வைக்கு தெரியாத வண்ணம் இருப்பதாகவும் வேறு பகுதிகளில் இயங்கும் பேருந்துகளை சோழவந்தான் பகுதியில் இயக்குவதால் பின்புறம் உள்ள தகவல் பலகையில் ஒரு ஊரும் முன்னாள் உள்ள தகவல் போர்டில் ஒரு ஊருமாக பயணிகளை குழப்பும் வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உச்சகட்டமாக பேருந்து முழுவதும் தனியார் விளம்பரங்கள் மூலம் தகவல்கள் மறைக்கப்பட்டு பொதுமக்களை உச்சகட்ட குழப்பத்திற்கு ஆளாக்கி வருகின்றனர் அரசு பேருந்துகளில் தனியார் விளம்பரங்களை தவிர்த்து பொதுமக்கள் மற்றும் வயதானவர்கள் பேருந்துகளை பார்த்தவுடன் செல்ல வேண்டிய ஊர்களுக்கு சொல்லும் வகையில் ஊர்களின் பெயர்கள் சரியாக தெரியும்மாறும் பேருந்தின் தடம் எண் சரியாக இருக்குமாறு அறிவிப்பு செய்ய வேண்டும் என போக்குவரத்துக் கழகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது போன்ற பேருந்துகளால் வயதானவர்கள் பேருந்து புறப்படும் போது அருகில் இருப்பவர்களிடம் கேட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளதால் பேருந்து செல்லும்போது வயதானவர்கள் சென்று ஏற வேண்டிய நிலை ஏற்பட்டு அடிக்கடி விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது.
ஆகையால் போக்குவரத்து கழக அதிகாரிகள் அரசின் வருமானத்தை மட்டும் குறிக்கோளாக எண்ணாமல் பொதுமக்களின் நலன் மற்றும் உயிர் சார்ந்த விஷயங்களை கருத்தில் கொண்டு அரசு பேருந்துகளில் உள்ள விளம்பரங்களை உடனடியாக மறைத்து ஆரோக்கியமான தகவல்கள் மற்றும் அரசின் அறிவிப்புகளை பேருந்தில் அச்சிட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஊத்துக்குளி முதல் நாராயணபுரம் வரை சாலையை சீரமைக்கவும்
சோழவந்தான் அருகே ஊத்துக்குளி முதல் நாராயணபுரம் வரை சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி முதல் நாராயணபுரம் வரை சாலை பழுதடைந்த நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் விவசாய பணிகளுக்கு செல்வோர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் குறிப்பாக ஊத்துக்குளி கிராமத்தில் அரசு பள்ளி மற்றும் அங்கன்வாடி இருக்கும் பகுதியில் சாலை மிகவும் சேதம் அடைந்த நிலையில் முழங்கால் அளவு பள்ளங்கள் உள்ளது.
இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக தண்ணீர் தேங்கி சேரும் சகதியமாக காணப்படுகிறது இதன் காரணமாக இந்தப் பகுதியில் விவசாய பணிகளுக்கு செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி மருத்துவமனை செல்லும் நிலை ஏற்படுவதாக கூறுகின்றனர்.
மேலும் அருகில் அங்கன்வாடி மையம் மற்றும் அரசு தொடக்கப்பள்ளி உள்ளதால் பள்ளிகளை திறக்கும் முன்பு சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சரி செய்ய வேண்டும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு விருந்தில், நண்பர் ஒருவர் என்னை அணுகி, சிறுநீரகக் கற்கள் தன் குடும்பத்தில் பலருக்கும் இருப்பதால் தனக்கு வராதிருக்கக் கால்சியம் நிரம்பிய உணவுகள் மற்றும் கால்சியம் மாத்திரைகளைத் தவிர்ப்பதாகக் கூறினார். அவருடைய அணுகுமுறை சரியானதா என்பது குறித்து என்னிடம் கருத்து கேட்டார்.
ஒன்று சொன்னால் நம்புவீர்களா? கால்சியம் நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது சிறுநீரகக் கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது. இது என்ன முரண்பாடாக இருக்கிறது என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள்?
சிறுநீரகக் கற்கள் பலவகைப்படும் என்றாலும் பெரும்பாலானவற்றில் உள்ளது கால்சியம் ஆக்ஸலேட் (calcium oxalate) ஆகும். சிறுநீரில் ஆக்ஸலேட் வெளியேற்றத்தைக் குறைப்பதே அவற்றைத் தடுப்பதற்கான முக்கிய வழி. அதற்கு உணவில் உள்ள ஆக்ஸலேட் குடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்க வேண்டும்.
உணவில் உள்ள கால்சியம், குடலில் செரிமானம் ஆகிக்கொண்டிருக்கும் உணவில் உள்ள ஆக்ஸலேட்டுடன் பிணைக்கப்பட்டு, கரையாத கால்சியம் ஆக்ஸலேட்டை உருவாக்குகிறது. பின்னர் அது மலத்தில் வெளியேற்றப்படுகிறது. உணவில் கால்சியம் சத்து குறைவாக இருக்கும் பட்சத்தில், அதிக ஆக்ஸலேட் உறிஞ்சுதலுக்கு வழிவகுக்கிறது, இது சிறுநீரில் வெளியேற்றப்பட்டு, சிறுநீரகக் கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆக, உணவில் தேவையான அளவு கால்சியம் இருத்தல் அவசியம்.
பச்சைக் கீரை வகைகள், விதைகள், பழங்கள், பீட்ரூட், தேனீர், சாக்லேட் என அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளில் நம் உடலுக்குத் தேவையான பல நல்ல தாதுப் பொருட்கள் உள்ளன. கூடவே ஆக்ஸலேட்டும் உண்டு. காய்கறிகள், பருப்பு வகைகள், பாதாம், பால், தயிர், சீஸ், சில வகை மீன்கள் போன்ற பலவும் கால்சியம் நிறைந்த உணவுகள். இந்த உணவுகளில் உள்ள கால்சியம், ஆக்ஸலேட் உறிஞ்சுதலைத் தடுக்க உதவுகிறது. அதன் மூலம் சிறுநீரில் அதிகப்படியான ஆக்ஸலேட் வெளியேறாமல் தடுக்கிறது. கல் உருவாகும் அபாயத்தைக் குறைக்கிறது.
எனவே, சிறுநீரகக்கல் வராதிருக்கவும், ஏற்கனவே இந்த நோய் பாதிப்பு உள்ள நபர்களும் கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
சிலருக்கு யூரிக் அமிலம் (uric acid) கொண்ட கல் உருவாகும். அவர்கள் அசைவு உணவுகளைக் குறைக்க வேண்டும். குறிப்பாகச் சிவப்பு இறைச்சியைத் (ஆடு, மாடு – red meat) தவிர்க்க வேண்டும்.
கல் உருவாவதைத் தடுக்க சற்று அதிகப்படியான நீர் அருந்துவதும் அவசியமான ஒன்று.
உங்களுக்குச் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மருத்துவர் எவ்வாறு சொல்வார்? ‘உப்புச் சத்துக் கூடியிருக்கிறது’. உடனே நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உணவில் எடுத்துக்கொள்ளும் உப்பைக் குறைத்து விடுகிறீர்கள். சிலர் சுத்தமாக உப்பே இல்லாமல் சாப்பிட்டுகிறேன் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வார்கள்.
நாம் உணவில் சேர்க்கும் உப்பு சோடியம் என்பதாகும். மருத்துவர் சொன்ன உப்புகள் யூரியா கிரியாட்டினின் போன்றவை. இவை உடலில் எல்லோருக்கும் சாதாரணமாகத் தினசரி உற்பத்தியாகும் கழிவுகள். இவைகளை வெளியேற்ற வேண்டியது சிறுநீரகங்கள். அதன் செயல்திறன் குறையும்பொழுது இந்த உப்புகள் இரத்தத்தில் கூடும். சாதாரணமாக யூரியாவின் அளவு 40க்கு கீழேயும், கிரியாட்டினின் 1.2க்குக் கீழேயும் இருக்கும். எந்த அளவிற்கு இவைகள் கூடுகின்றனவோ அந்த அளவிற்குச் சிறுநீரகங்கள் பாதிப்பு அடைந்திருக்கின்றன என்று அர்த்தம்.
உணவில் உப்பைக் குறைப்பதன் மூலம் இரத்தத்தில் கூடியுள்ள யூரியாவைக் குறைத்துவிடலாம் என்று நம்புவது தவறு. மாறாக, உடல் பலகீனப்படும். சிலருக்கு சோடியம் மிகவும் குறைந்து நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு மயக்கமான நிலையில் வந்து மருத்துவமனையில் சேருவார்கள்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் வெளியேறும் சிறுநீரின் அளவு குறையும் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் ஆரம்பத்தில் ஒரு சிலருக்கு அளவுக்கு அதிகமாகச் சிறுநீர் வெளியேறும். அப்பொழுது நீர் மட்டும் வெளியே வருவதில்லை. அதனுடன் சோடியம் பொட்டாசியம் போன்ற நம் உடம்பின் அத்தியாவசிய உப்புகளும் சேர்ந்து வெளியேறும். உடலில் நீர் சத்து குறைந்து இரத்த அழுத்தமும் குறையும் பட்சத்ததில் உணவில் உப்பைக் கூட்ட வேண்டும். அவ்வாறில்லாமல் உடலில் நீர் சத்து அதிகரித்தாலோ (கால்கள் மற்றும் முகம் வீக்கம் அடைதல்) இரத்தஅழுத்தம் கூடினாலோ, அவர்களுக்குத்தான் உணவில் உப்பைக் குறைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அடுத்து, பொட்டசியம் என்று ஒரு உப்பு இருக்கிறது. இது இரத்தத்தில் அதிகப்படியாகச் சேர்ந்துவிடாதிருக்க நம் உடல் சிறுநீர் மூலமாகவும் குடல் (மலம்) மூலமாகவும் அதனை வெளியேற்றுகிறது. சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் இரத்தத்தில் பொட்டாசியம் அளவு கூடும். அதனால் இந்த உப்பை அதிகமாக் கொண்டுள்ள உணவுகளைக் குறைத்து உண்ணவேண்டும். முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. வாழை, ஆரஞ்சு போன்ற பழங்கள், கீரைகள், தக்காளி, மீன், மாமிசம் போன்ற நாம் அன்றாடம் உண்ணும் உணவுகள் எல்லாமே பொட்டாசியம் சத்து நிரம்பியவைகள். கேரட், முட்டைகோஸ், வெள்ளரி, கத்திரிக்காய், ஆப்பிள், திராட்சை, அன்னாசி போன்றவைகள் பொட்டாசியம் சத்து குறைவாக உள்ள உணவுகள்.
சிறுநீரகப் பாதிப்பு உள்ள ஒருவருக்கு மலம் சரியாக வெளியேறவில்லை என்று வைத்துக் கொள்வோம். அவர் என்ன செய்வார்? இரண்டு வாழைப்பழங்களைச் சாப்பிடுவார். ஏற்கனவே சிறுநீரகம் வெளியேற்ற வேண்டிய பொட்டாசியம் வெளியேறவில்லை. இப்பொழுது மலம் மூலமாக அவர் உடம்பிலிருந்து வெளியே போக வேண்டிய பொட்டாசியமும் போகவில்லை. அதனால் இரத்தத்தில் பொட்டாசியம் அளவு கூடத் துவங்கும். இப்பொழுது அவர் சாப்பிட்ட வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியமும் உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் அதன் அளவை மிகவும் அபாயகரமான அளவிற்குக் கூட்டிவிடும் வாய்ப்பு உண்டு. ஆகையால், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் மலம் கட்டிக்கொண்டால், அந்த நேரத்தில் பொட்டாசியம் நிரம்பிய உணவுகளை அறவே தவிர்த்தல் நலம்.
அடுத்து, புரதத்திற்கு வருவோம். உப்புச்சத்து கூடிவிட்டால் உணவில் புரதத்தை மிகவும் குறைத்துக் கொள்ளவேண்டும் என்ற ஒரு தவறான நம்பிக்கை பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் மருத்துவர்கள் மத்தியிலும் நிலவுகிறது. நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் புரதத்தின் அளவு தேவையைவிடக் குறைவாகவே உள்ளது. சராசரியாக நமக்கு ஒரு நாளைக்கு 1g /kg என்ற அளவிற்குப் புரதம் தேவை. அதாவது 60 கிலோ எடையுள்ள நபர் 60 கிராம் புரதங்கள் ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் நாம் 40 கிராம் தொடுவதே சிரமம். உணவு வகைகளில் மாமிசங்களில்தான் அதிகப் புரதம் உள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே. மேற்கத்திய நாடுகளில் மூன்று நேரமும் அசைவம் உட்கொள்ளும் பழக்கம் இருக்கிறது. அந்த அதிகப்படியான புரதம் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படபொழுது சிறுநீரகத்தையும் பாதிக்கும். ஆக, உணவில் புரதத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்னும் அறிவுரை அவர்களுக்குத்தான். நம் மக்களோ வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் சிறிதளவு அசைவம் எடுக்கின்றனர். மற்ற நாட்களில் பெரும்பாலும் சைவ உணவுகள்தான். பருப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டுமா? கண்டிப்பாக இல்லை. வேண்டிய அளவு எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால், பருப்புகளில் உள்ள புரதங்களின் அளவு குறைவே. ஏற்கனவே தேவையை விடக் குறைவாகப் புரதம் எடுக்கும் இவர்களிடம் மேலும் புரதத்தைக் குறைக்கச் சொல்வது மிகவும் தவறு.
ஒருவர் வாரத்தில் இரண்டு மூன்று முறை டயாலிசிஸ் செய்து கொள்ள வேண்டிய நிலைமையில் இருக்கிறார் என்றால் அவருக்குச் சாதாரண மக்களைக் காட்டிலும் அதிகமாகப் புரதம் தேவைப்படும். அதாவது 1.2g /kg தேவை. ஏனென்றால், டயாலிசிஸ் செய்யும் பொழுது நமக்குத் தேவையற்ற யூரியா கிரியாட்டினின் போன்ற கழிவுகள் மற்றும் வெளியேறுவதில்லை, அமினோ ஆசிட் (புரதங்கள்), கால்சியம் போன்ற சில அத்தியாவசியச் சத்துகளும் வெளியேறும். ஆகையால், டயாலிஸிஸில் உள்ள நபர்களுக்கு நிறையப் பருப்புகளையும், வேண்டிய அளவு மாமிசங்களையும் எடுத்துக் கொள்ள அனுமதிப்பதுதான் முறை.
உணவில் முக்கியப் பங்கு வகிப்பது தண்ணீர். சாதாரண மக்கள் எவ்வளவு நீர் குடித்தாலும் தேவைக்கு அதிகமான அளவை சிறுநீரகங்கள் வெளியேற்றிவிடும். ஆனால் அது பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும்பட்சத்தில் அந்த உபரி நீர் உடம்பில் தங்கிவிடும். அப்படியானால் அந்த நபர் தான் குடிக்க வேண்டிய நீரை எப்படிக் கணிக்க வேண்டும்? எவ்வளவு சிறுநீர் வெளியேறுகிறதோ அதனுடன் 300 அல்லது 400 மில்லி சேர்த்துக் கொள்ளவேண்டும். உதாரணமாக ஒருவருக்கு 24 மணி நேரத்தில் 800 மில்லி அளவு சிறுநீர் வெளியேறுகிறது என்று வைத்துக் கொள்வோம். அவர் 1200 மில்லி நீர் (800+400) எடுத்துக் கொள்ளலாம். இது ஒரு தோராயமான அளவே. எந்த அளவு எடுக்க வேண்டும் என்று உங்கள் சிறுநீரக மருத்துவர் அறிவுறுத்தி இருக்கிறாரோ அந்த அளவே எடுக்க வேண்டும்.
ஆக, சிறுநீரகப் பாதிப்பு உள்ளானவர்கள் பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளைக் குறைத்துக் கொள்வதும், வேண்டியளவு நீர், சோடியம் (உணவில் சேர்க்கும் உப்பு) மற்றும் புரதங்களை எடுத்துக் கொள்வதும்தான் அவர்கள் தங்கள் உணவில் செய்து கொள்ள வேண்டிய மாற்றங்கள்.