Home Blog Page 115

டெஸ்ட் போட்டிகளில் இருந்து… விடைபெற்ற விராட் கோலி! 

virat kohli retiring from test cricket - 2026

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். தாம் 14 ஆண்டு காலமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியதை சுட்டிக்காட்டி தனது ஓய்வு முடிவை அவர் அறிவித்துள்ளார்.  

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து அதிகாரபூர்வமாக ஓய்வு பெறுவதாக, ஓர் உணர்ச்சிபூர்வமான சமூக ஊடகப் பதிவு மூலம் உறுதிசெய்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்ட போது, இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது எப்போதுமே சிறப்பு வாய்ந்த ஒன்று  என்று குறிப்பிட்டுள்ளார். 

கிரிக்கெட்டில் அவரது தீவிர ஆர்வம், தலைமைத்துவம் மற்றும் பங்களிப்புகள் உடற்தகுதி மற்றும் விளையாட்டில் புதிய அளவுகோல்களை அமைத்தது மட்டுமல்லாமல், டி20 கிரிக்கெட் எழுச்சியின் மத்தியில் விளையாட்டின் நீண்ட வடிவத்தில் அவருக்கு இருந்த ஆர்வத்தை மீண்டும் உயிர்ப்பித்ததன் ஒரு சகாப்தத்தின் முடிவை அவரது விலகல் குறிக்கிறது. 

கோலியின் ஓய்வு, கவுதம் கம்பீர் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களிடமிருந்து மனமார்ந்த வாழ்த்துகளைப் பெற்றுள்ளது, இது விளையாட்டில் அவர் ஏற்படுத்திய தாக்கத்திற்கான பரவலான பாராட்டைப் பிரதிபலிக்கிறது. 

இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இங்கிலாந்து செல்ல உள்ள நிலையில் கோலி ஓய்வினை அறிவித்துள்ளது இப்போது பேசுபொருளாகியுள்ளது. 

விராட் கோலி, 2011ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வைத் தொடங்கினார். இந்திய அணிக்காக 123 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார் 123 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக 9,230 ரன்களைக் குவித்துள்ளார்

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 30 சதங்களையும், 31 அரை சதங்களையும் விளாசியுள்ளார்  இந்திய அணிக்காக ஒரு இன்னிங்சில் 254 ரன்கள் குவித்ததே கோலியின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர்.  இந்திய அணிக்காக 68 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட கோலி 40 போட்டிகளை வென்று கொடுத்தவர்

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அதிக முறை சதம் மற்றும் இரட்டை சதம் அடித்தவர் இவர். டெஸ்ட் கேப்டனாக இருந்த போது இந்திய அணிக்காக 7 முறை இரட்டை சதம் அடித்துள்ளார். இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்களில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற பெருமையும் விராட் கோலிக்கு உண்டு

விராட் கோலியின் டெஸ்ட் போட்டிகளிலான ஓய்வு முடிவு குறித்து இந்நாள் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் பலர் சமூகத் தளங்கள்ல் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். 

சச்சின் டெண்டுல்கர் தனது பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது : 

நீங்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும்போது ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறேன்.  ​​12 ஆண்டுகளுக்கு முன்பு, எனது கடைசி டெஸ்ட் போட்டியின் போது, ​​உங்கள் சிந்தனைமிக்க செயல் எனக்கு நினைவுக்கு வருகிறது. உங்கள் மறைந்த தந்தையிடமிருந்து ஒரு நூலை எனக்கு பரிசளிக்க முன்வந்தீர்கள். அது எனக்கு மிகவும் தனிப்பட்ட ஒன்று, அதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது, ஆனால் அந்தச் செயல் மனதைத் தொடும் விதமாக இருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை என்னுடன் இருந்து வருகிறது. பதிலுக்கு என்னிடம் ஒரு நூலும் இல்லை என்றாலும், நீங்கள் எனது ஆழ்ந்த பாராட்டையும் வாழ்த்துக்களையும் கொண்டுள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். விராட், உங்கள் உண்மையான மரபு, எண்ணற்ற இளம் கிரிக்கெட் வீரர்களை விளையாட்டை எடுக்க ஊக்குவிப்பதில் உள்ளது. என்ன ஒரு நம்பமுடியாத டெஸ்ட் வாழ்க்கை உங்களுக்கு இருந்தது! நீங்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு அதிகமான ரன்களை வழங்கியுள்ளீர்கள் – நீங்கள் அதற்கு ஆர்வமுள்ள ரசிகர்கள் மற்றும் வீரர்களை வழங்கியுள்ளீர்கள். மிகவும் சிறப்பு வாய்ந்த டெஸ்ட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். – என்று கூறியுள்ளார். 

விராட் கோலியின் ஓய்வு முடிவுக்கு பிசிசிஐயும் நன்றியும் வாழ்த்தும் வெளியிட்டுள்ளது.

மக்களிடம் விளக்குகிறார் மோடி… ஆபரேஷன் சிந்தூர் பற்றி … இன்று இரவு 8 மணிக்கு!

pm modi in bihar campaign - 2026

கடந்த ஏப். 22ம் தேதி  காஷ்மீர் மாநிலம் பஹல்காமில்  பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலா சென்றிருந்த 26 அப்பாவி ஆண்கள் உயிரிழந்தனர்.  அப்போது,  அங்கிருந்த பெண்களிடம், “போய் மோடியிடம் சொல்” என்று  பயங்கரவாதிகள் எச்சரித்துவிட்டு சென்றனர். 

 இந்த தகவல் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில்,  சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பிரதமர் மோடி தனது  சவுதி அரேபியா நாட்டு சுற்றுப்பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு அவசர அவசரமாக நாடு திரும்பி அன்று இரவே விமான நிலையத்தின் ஒரு பகுதியில் வைத்து பாதுகாப்பு ஆலோசனை மேற்கொண்டார். 

 தொடர்ந்து இரு வாரங்கள்  எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முப்படைகளுடன் ஆலோசனை நடத்தி ராணுவத்திற்கு முழு சுதந்திரத்தையும் அளித்தார்.  சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் கழித்து மே 6ஆம் தேதி நள்ளிரவு பாகிஸ்தானில் உள்ள  9 பயங்கரவாத முகாம்களைக்  குறி வைத்து துள்ளிய தாக்குதலை இந்திய விமான படை மேற்கொண்டது.  அதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் தாக்குதல்கள் நடைபெற்றன.  இதில் பாகிஸ்தான் தரப்பில் பலத்து சேதம் ஏற்பட்டது.

 இந்த நடவடிக்கைகள் குறித்து பாரத ராணுவ அதிகாரிகளே மக்களிடம் பத்திரிகையாளர் சந்திப்புகள் மூலம் விளக்கி வந்த நிலையில்,  முதல் முறையாக நாட்டு மக்களுக்கு விளக்குவதற்காக இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி  உரையாற்ற உள்ளார்.  அவரது உரையினை தூர்தர்ஷன் சேனல்கள் மற்றும் அனைத்து வானொலி நிலையங்களும் ஒலிபரப்புகின்றன.

 இருநாட்டு ராணுவ நடவடிக்கைகளும் இரு தினங்களுக்கு முன் பரஸ்பர பேச்சுவார்த்தை மற்றும் புரிந்துணர்வு அடிப்படையில் நிறுத்திக் கொள்ளப்பட்ட நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷஃபா ஷெரீப் பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் தோன்றி  இந்தியாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக அறிவித்தார். தொடர்ந்து  பாகிஸ்தான் ராணுவ தளபதிகள் டிவி பேட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக  அறிவிப்புகளை வெளியிட்டு வந்தனர் மேலும் இந்தியாவின் விமானங்களையும் விமானத்தளங்களையும் தாக்கி அழித்ததாகவும்  கூறி வருகின்றனர்.

 பாகிஸ்தான் கூறும் பொய்களை நம்பி இந்தியாவில் உள்ள சிலரும் அரசியல்வாதிகள் சிலரும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.  இந்நிலையில் இந்திய தரப்பின் நிலையை விளக்குவதற்காகவும் உண்மை நிலையை எடுத்துரைப்பதற்காகவும் நாட்டு மக்களிடையே நிலவும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையிலும் பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுத்த  பிறகு முதல் முறையாக சந்திக்கிறார்.  எனவே இந்த பிரதமரின் உரை குறித்து மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகம் எழுந்துள்ளது.

கள்ளழகர் திருவிழாவில் பக்தர் மரணம்; அமைச்சருக்கு இந்து முன்னணி கேள்வி!

hindumunnani
hindumunnani

மதுரை கள்ளழகர் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் மரணம் அடைந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், கோவில்களில் தொடர் மரணங்கள் ஏற்பட்டு வருவதாகவும், சம்பவங்களுக்கு பொறுப்பேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இந்துமுன்னணி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பின் சார்பில் வெளியான அறிக்கை:

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் விஐபிகள் வரிசையில் நின்ற திருநெல்வேலியை சார்ந்த சிவில் இன்ஜினியர் பூமிநாதன் என்பவர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சித்திரை திருவிழாவில் 5 பேர் கூட்ட நெரிசலில் பலியான சம்பவத்தை நினைவூட்டி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் வசதி செய்து கொடுக்குமாறு கடந்த 25 நாட்களுக்கு 16.4.2025 அன்று இந்துமுன்னணி செய்தி வெளியிட்டது.

பல அரசியல் கட்சியினரும் அறிவுறுத்தினர். ஆனாலும் அதை கண்டு கொள்ளாமல் தமிழக அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் மெத்தனமாகவும் அலட்சியப் போக்கிலும் செயல்பட்டதன் காரணமாகவே இந்த துயர சம்பவம் நடைபெற்று உள்ளது. இதற்கு தமிழக அரசு முழுபொறுப்பேற்க வேண்டும்.

விஐபி வரிசையிலேயே இவ்வளவு குளறுபடிகளும் கூட்ட நெரிசலும் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்திருக்கிறது என்றால் தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலைத்துறை எந்த அளவிற்கு அலட்சியமாக செயல்பட்டுள்ளது என்பதை காண முடிகிறது.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் திருச்செந்தூர் , பழனி , ராமேஸ்வரம் ஆகிய திருக்கோவில்களில் அடுத்தடுத்த நாட்களில் தரிசனத்திற்காக நின்ற 3பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி மரணம் அடைந்தனர்.

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கிய தமிழக அரசு கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை என்பது இந்து பக்தர்களை இந்த அரசு எவ்வளவு அலட்சியமாக நினைக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.

தொடர்ந்து கோவில்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது பக்தர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது ஆலயங்களில் நடைபெற்று வரும் தொடர் மரணங்களுக்கு பொறுப்பேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு சேகர்பாபு அவர்கள் அமைச்சர் பதவி ராஜினாமா செய்ய வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது.

மதுரையில் அழகர் திருவிழா விஐபி வரிசை கூட்ட நெரிசலில் மரணமடைந்த பூமிநாதன் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது

இனியாவது இந்துக்களை மாற்றாந்தாய் பிள்ளைகள் போல் கருதாமல் இந்து கோயில் விழாக்களில் உரிய பாதுகாப்பும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது

சீன ஏவுகணைகள், துருக்கியின் ட்ரோன்களை பயன்படுத்தியது பாகிஸ்தான்: உறுதி செய்த இந்திய ராணுவம்!

dgmo press meet - 2026

இந்தியாவின் மீதான தாக்குதலின் போது பாகிஸ்தான் துருக்கி நாட்டில் இருந்து பெற்ற ட்ரோன்களை கொண்டும் சீன நாட்டிலிருந்து பெற்ற ஏவுகணைகளைக் கொண்டும் தாக்கியதாக இந்திய ராணுவம் முறையாக உறுதிபட தெரிவித்தது.

ஆபரேஷன் சிந்தூர் எப்படி நடந்தது, என்ன நடந்தது என்பது குறித்து நாட்டுக்கு விளக்குவதற்காக, நேற்று மாலை ஊடக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் முப்படைகளின் சார்பில் அவற்றின் டிஜிஎம்ஓ.,க்கள் கலந்து கொண்டு, செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர். 

பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ராணுவம் மற்றும் விமானப்படை, கடற்படை டி.ஜி.எம்.ஓ.,க்கள் நேற்று மாலை விளக்கம் அளித்த நிலையில், அதே போன்று இன்று மதியம் 2.30க்கும், இந்திய முப்படைகள் தரப்பில் ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி, லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ், வைஸ் அட்மிரல் பிரமோத், மேஜர் ஜெனரல் ஷர்தா ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு விளக்கம் அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று மதியம் 230 க்கு ராணுவத்தின் சார்பில் ஊடகவியலாளர்களின் சந்திப்புக்கு ஏற்பாடானது.

செய்தியாளர்களுடனான இந்தக் கேள்வி – பதில் நிகழ்ச்சியின் போது, நேற்று தெரிவிக்கப்பட்டது போலவே சில ரகசியங்களை நாங்கள் இங்கே வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள முடியாது. எனவே அதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப வேண்டாம். காரணம், இப்போதும் போர்ப் பதற்றமான சூழல் நிலவுகிறது. ராணுவ நடவடிக்கை நிறைவடையவில்லை. ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் தரப்பு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, நாம் இப்போது ஒரு புரிந்துணர்வு அடிப்படையில் தற்காலிகமாக தாக்குதல்களை நிறுத்தியிருக்கிறோம் என்று ராணுவத்தின் தரப்பில் தெளிவாகச் சொல்லப்பட்டது.

பாகிஸ்தான் ஏவிய துருக்கி நாட்டு ட்ரோன்கள்அனைத்தையும் நம் உள்நாட்டுத் தயாரிப்பிலான ஆயுதங்களின் உதவியுடன் சுட்டு வீழ்த்தினோம் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

முன்னதாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையே  மே10ம் தேதி சமரசப் பேச்சு நட்நத நிலையில், ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாக இரு நாடுகளும் ஒப்புக் கொண்டு, அன்றே மாலை 5 மணிக்குப் பின்னர் தாக்குதல்கள் நடக்காது என்று புரிந்துணர்வு அடிப்படையில் ஒப்புக் கொள்ளப்பட்டதாகத் தெரிவித்த்னர். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து சமரசப் பேச்சு வரும் 12ம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இரு நாடுகளுக்கும் இடையே இன்று பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று பகல் 12 மணிக்கு நடப்பதாக இருந்த பேச்சுவார்த்தை, மாலை 5 மணிக்கு மேல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்தியாவின் முப்படைகள் சார்பில் செய்தியாளர் சந்திப்பு இன்று மதியம் 2.30 மணிக்குத் தொடங்கி அரைமணி நேரம் நடைபெற்றது. இதில்,  ராணுவ நடவடிக்கைக்கான டி.ஜி.எம்.ஓ., ராஜிவ் கய் பேசியபோது, “பஹல்காம் சம்பவத்துக்கு பதிலடியாக நாம் பயங்கரவாதிகளை மட்டுமே குறிவைத்தோம். ஆனால்,  பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் தலையீடு செய்தது பரிதாபத்திற்குரியது. அதனால்தான் நாங்கள் தக்க பதிலடி கொடுப்பது என்று முடிவு எடுத்தோம். கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாதிகளின் தாக்குதல் முறை வெகுவாக மாறியிருக்கிறது” என்றார். 

இந்நிகழ்வில் பேசிய ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி, “பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தினோம். பாகிஸ்தான் ராணுவம் மீது நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை. பயங்கரவாதிகளின் பிரச்னையை பாகிஸ்தான் ராணுவம் தங்களுடைய பிரச்னையாக மாற்றியுள்ளது. நமது வான்வழி அமைப்பு பாதுகாப்பானது சுவர் போன்ற அதை அகற்றுவது எளிதல்ல.பாகிஸ்தான் ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு, பதில் தாக்குதல் நடத்த வேண்டிய சூழல் எழுந்தது. 

“பாகிஸ்தான் அனுப்பிய அனைத்து ட்ரோன்களையும் அழித்தோம். இதில், நமது தயாரிப்புகளான நவீன ரக ஆயுதங்களைக் கொண்டு, அனைத்து ட்ரோன்களையும் அழித்தோம். எங்களது இந்த நடவடிக்கையில் மத்திய அரசு உறுதுணையாக இருந்தது. மத்திய அரசின் கொள்கையால் நாங்கள் வலிமை பெற்றோம். மத்திய அரசு நிதி ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் எங்களுக்கு துணை நின்றது. 

“பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்கள் அனைத்தும் துருக்கி நாட்டில் தயாரிக்கப்பட்டவை. ஏவுகணைகள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை. எந்த நாட்டில் தயாரிக்கப் பட்டவையாக இருந்தாலும் அவற்றை அழிக்கும் வல்லமையை நமது நவீன தொழில்நுட்ப திறன் கொண்டுள்ளது. பாகிஸ்தான் ஏவிய துருக்கியின் ட்ரொன்களும் சீனாவின் ஏவுகணைகள் மற்றும் அதிநவீன போர் விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன.

“வான்வழித் தாக்குதலின் போது, நமக்கு சிறிய அளவு பாதிப்பு ஏற்பட்டது. பாகிஸ்தானுக்கு பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. ரஹீம்யார் கான் விமானப்படை தளத்தில் இந்தியா நடத்திய தாக்குதலில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது.” என்றார்.

இந்நிகழ்வில் பேசிய வைஸ் அட்மிரல் பிரமோத், “கடற்படை அதிகாரிகள் இரவுபகல் பாராதுபணியாற்றி வருகின்றனர். எதிரிப் படைகளைத் தாக்கி நமது படை வல்லமையை நிலைநிறுத்தி உள்ளோம். முப்படைகளும் அணிவகுத்து ஒருங்கிணைந்து செயல்பட்டதால், எதிரிப் படைகள் நம் அருகில் நெருங்க முடியவில்லை. பாகிஸ்தானின் அத்துமீறலை எதிர்கொள்ள இந்தியாவின் அனைத்து ராணுவப் பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன.” என்றார்.

செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, பாகிஸ்தான் அணுஆயுதக் கிடங்கான கிரானா மலைப்பகுதியில் இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு வீசித் தாக்கியது என்று கூறப்படுவது குறித்து கேட்டபோது, கிரானா மலைப் பகுதியில் அணு ஆயுதங்கள் இருப்பது குறித்து எங்களுக்கு தெரியாது. நாங்கள் குண்டுகளை வீசவில்லை. இதுகுறித்து மேலும் எதுவும் கூறுவதற்கில்லை” என்று முடித்துக் கொண்டார் விமானப் படைப் பிரிவின் டிஜிஎம்ஒ பாரதி.

அமெரிக்காவின் பங்கு வெறும் பாராட்டு மட்டுமே!

modi in meeting operation sindoor - 2026

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்கா தலையீடு இல்லாத சமாதானம்!

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் இடைநிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு இருந்ததாகவும், அதிபர் டிரம்ப் எப்படி முதலில் முடிவை அறிவிக்கலாம் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. பாகிஸ்தான் விவகாரத்தில் மூன்றாம் நாட்டின் சமாதானத்திற்கு, இந்தியா ஏன் ஒப்புக் கொண்டது என்றும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. ANI-க்கு அமெரிக்க வெளியுறவு துறை வழங்கிய கருத்துகளை வார்த்தை வார்த்தையாக வாசித்தால் ஒன்று தெளிவாகப் புரிகிறது — இந்த சமாதானத்தில் அமெரிக்காவின் பங்கு வெறும் பாராட்டுகளுக்கு மட்டுமே.!

“மோடி, ஷெரீஃப் ஆகிய இரு பிரதமர்களின் ஞானம், அறிவு, மற்றும் அரசியல் முதிர்ச்சியை நாங்கள் பாராட்டுகிறோம். அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுத்தது அவர்களின் திறமையின் சான்று. அதிபர் ட்ரம்பும், வெளியுறவுத் துறை செயலாளர் ரூபியோவும், இரு நாடுகளும் முழுமையான சமாதான ஒப்பந்தத்தை நிலைநிறுத்தி நேரடி உரையாடல்களில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய மோதல்களை தவிர்க்க, பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்த அமெரிக்கா தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும்.” -என்று அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையில் “பாராட்டுகிறோம்”, “ஆதரிக்கின்றோம்”, “வலியுறுத்துகின்றோம்” “உறுதியளிக்கின்றோம்” என்ற சொற்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மத்தியஸ்தம், தலையீடு அல்லது உறுதி செய்தோம் போன்ற சொல்லாடல்கள் காணப்படவில்லை.

இது இந்தியாவின் நீண்டநாள் வெளிநடப்பு கொள்கையை மீண்டும் ஒருமுறை உறுதி செய்கிறது — “எந்தத் தீர்வும், மூன்றாம் தரப்பின் தலையீடு இல்லாமல், நேரடியாகவே தீர்க்கப்படும்” என்பது இந்தியாவின் வெளியுறவுத் துறையின் நிலைப்பாடு.

இந்த சமாதான வெற்றி, வெளிநாட்டுத் தூதுவர்களால் அல்ல… மோடியின் நேரடி உறுதி மற்றும் இந்தியாவின் உறுதியான கொள்கை என்பதால்தான் சாத்தியமானது.

  • செய்திக்கதிர் குழுவில் ஜி.எஸ். பாலமுருகன்

சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி: அன்னதானம், மருத்துவ முகாம்!

pathinen chithar peetam chithra pournami - 2026

சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி பெருவிழா: அன்னதானம் மருத்துவ முகாம்!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி சாணாம்பட்டியில் , இயற்கை எழில்சூழ்ந்த சிறுமலை அடிவாரத்தில் ஓடைகரையில் பதினெண்சித்தர் பீடஆலயத்தில் சித்ரா பௌர்ணமியையொட்டி சித்ரா பௌர்ணமி பெருவிழா யாகசாலை சிறப்பு பூஜையும், சித்தர்பீடத்திற்கு பதினெட்டாம்படி கருப்பனசாமி பீடத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனை கள் செய்யப்பட்டது. மதியம் அன்ன தானமும், இலவச அக்குபஞ்சர், சித்தா, ஆயுர்வேதிக் மற்றும் இயற் கை மருத்துவசிகிச்சை முகாமும் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு, தயாளன் சுவாமி தலைமை தாங்கி அன்னதானத்தை தொடக்கி வைத்தார். அறங்காவலர் மாமல்லன் கார்த்திக் முன்னாள் கூட்டுறவு சங்கத்
தலைவர் இரும்பாடி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.நிர்வாக அறங்காவலர் பெ.விஜயபாஸ்கர் வரவேற்று சிறப்பு பூஜைகள் செய்தார்.

இந்த மருத்துவ முகாமில், மருத்து வர்கள் லிங்குசெல்வி தலைமையில் மருத்துவக்
குழுவினர் மூட்டு வலி, முதுகுவலி, தலைவலி, கால் ஆணி, சொரியாசிஸ், சளி, ஆஸ்துமா, சர்க்கரை உள்பட அனை த்துவகை நோய்களுக்கும் மருத்து வசிகிச்சையளித்து மருந்து மாத்தி ரைகள் வழங்கினர். முடிவில், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் பொன் ராம் நன்றி கூறினார்.

வைகை ஆற்றில் கள்ளழகர் வேடத்தில் ஜனக நாராயண பெருமாள்!

janakai narayana perumal in vaigai river - 2026

சோழவந்தான் வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவிந்தா கோஷமிட்டு வரவேற்றனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு முதல் முறையாக தங்க குதிரை வாகனத்தில் இறங்கினார் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்தனர்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வருடம் தோரும் சித்ரா பௌர்ணமி அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது வழக்கம். இந்த ஆண்டு முதல் முறையாக ஜெனக நாராயண பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார்.

சோழவந்தான் காவல் நிலையத்திலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட மண்டகப் படிகளில் தரிசனம் முடித்து காலை சரியாக ஒன்பது முப்பது மணி அளவில் சோழவந்தான் வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு இறங்கினார்.

அப்போது கூடியிருந்த பொதுமக்கள் கோவிந்தா கோவிந்தா என கோசமிட்டும் வானவேடிக்கை மற்றும் அதிர் வேட்டுகள் முழங்க பக்தர்களின் கோவிந்தா கோசத்துடன் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.

முன் எப்போதும் இல்லாத அளவு இந்த ஆண்டு தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் இறங்கியதால் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சோழவந்தானில் குவிந்தனர். தொடர்ந்து வைகை ஆற்றில் கள்ளழகர் இன்று மாலை வரை பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.

காவிரித்தாயே பெருகி வா

adiperukku cauvery seer - 2026
#image_title
  • பத்மன்

காவிரித்தாயே பெருகி வா
கவலையெல்லாம் நீக்க வா
குடமுருட்டியாய் ஓடி வா
குற்றங்குறை போக்க வா (காவிரித் தாயே)

வெட்டாறாய் விரைந்து வா
வேண்டுகிற வரங்கள் தா
கொள்ளிடமாய் நிறைந்து வா
அள்ளியள்ளி வளங்கள் தா (காவிரித் தாயே)

காய்ந்துபோன நிலமெல்லாம்
களியாக நீரைத் தா
காயப்பட்ட மனங்களுக்கு
களிப்பூட்டும் வேரைத் தா (காவிரித் தாயே)

எல்லைதாண்டும் தொல்லைகளை
எதிர்த்துமோதி வெற்றி தா
நல்லதெல்லாம் துலங்கிடவே
நவநிதியாய் பெருகி வா (காவிரித் தாயே)

சித்திரா பௌர்ணமியில்
சிறப்பான பூசையிட்டோம்
இத்தரை மீதினிலே
எம்வாழ்வு செழிக்க வா (காவிரித் தாயே)

பத்மனிவன் பாடல்கேட்டு பலமடங்காய் பெருகி வா
பக்தர்களின் விருப்பமெல்லாம் பதமாக ஓங்க வா (காவிரித் தாயே)

(சித்ரா பௌர்ணமியான இன்று (12.05.25) மாலையில், ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபத்தில் உலக சித்தர்கள் சர்வசமய கூட்டமைப்பு மற்றும் சிவனடியார்கள் சார்பில் நடைபெறும் காவிரி ஆர்த்தி மற்றும் கூட்டு வழிபாட்டுக்காக இயற்றப்பட்டது.)

ராணுவத்தின் செய்தியாளர் சந்திப்பில்… ஊ(ட)கத்தனங்கள்!

dgmo press meet - 2026

ஆபரேஷன் சிந்தூர் எப்படி நடந்தது, என்ன நடந்தது என்பது குறித்து நாட்டுக்கு விளக்குவதற்காக, இன்று மாலை ஊடக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் முப்படைகளின் சார்பில் அவற்றின் டிஜிஎம்ஓ.,க்கள் கலந்து கொண்டு, செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர். 

பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ராணுவம் மற்றும் விமானப்படை, கடற்படை டி.ஜி.எம்.ஓ.,க்கள் மே. 11 அன்று மாலை  விளக்கம் அளித்தனர். இந்திய முப்படைகள் தரப்பில் நடந்த இந்த செய்தியாளர் சந்திப்பில், ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி, லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ், வைஸ் அட்மிரல் பிரமோத், மேஜர் ஜெனரல் ஷர்தா ஆகியோர் கலந்து கொண்டு, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தனர். 

செய்தியாளர்களுடனான இந்தக் கேள்வி – பதில் நிகழ்ச்சியின் போது, சில ரகசியங்களை நாங்கள் இங்கே வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள முடியாது. எனவே அதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப வேண்டாம். காரணம், இப்போதும் போர்ப் பதற்றமான சூழல் நிலவுகிறது. ராணுவ நடவடிக்கை நிறைவடையவில்லை. ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் தரப்பு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, நாம் இப்போது ஒரு புரிந்துணர்வு அடிப்படையில் தற்காலிகமாக தாக்குதல்களை நிறுத்தியிருக்கிறோம் என்று ராணுவத்தின் தரப்பில் தெளிவாகச் சொல்லப்பட்டது. இருந்த போதும், வழக்கம் போல் ஊடக செய்தியாளர்கள் ஊகத்துடன் கூடிய கேள்விகளை முன்வைத்தனர். அவற்றுக்கு அளிக்கப்பட்ட பதில்களில் இது இப்போது பேசுவதற்கு உகந்ததல்ல என்று சொல்லி முடித்துக் கொண்டனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கவனம் ஈர்த்த மூன்று விஷயங்கள்…

முதலாவது…

“மிஷன் வெற்றி… ஆனா அந்த பத்திரிகைக்கு தேவை ரபேல் டேமேஜ் ரிப்போர்ட்!”

ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியைப் பற்றிய முப்படை அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பு நேரலை… நாட்டின் ராணுவ அதிகாரிகள் மிஷன் வெற்றிகரமாக முடிந்தது என அறிவிக்கின்றனர். அப்படியிருக்க…

முன் வருகிறார் ஒரு ஊடக செய்தியாளர். ஆங்கில பத்திரிகை செய்தியாளர் அவர். கேள்வி:
“ரபேல் இழப்புகள் பற்றிய பேச்சு சமூக ஊடகங்களில் அதிகம்… எவ்வளவு இழந்திருக்கின்றோம்? தெளிவாக சொல்ல முடியுமா?” எனத் துணிந்து (!) கேட்டார்.

அதற்கு ராணுவ பதில் — “நாங்கள் திட்டமிட்ட இலக்கை வெற்றிகரமாக முடித்துள்ளோம். அதுதான் முக்கியமானது. இப்போதைய எந்தவொரு தகவலும் எதிரிகளின் புலனாய்வுக்கு ஆக்கமாக போகக்கூடும்.”

நாட்டு ரகசியங்களை நேரலையில் கேட்டால், அது பத்திரிகை உரிமை இல்லை — அது பைத்தியக்கார சுயநலம்! TRP-க்கும், தேச பாதுகாப்புக்கும் உள்ள வித்தியாசம் தெரியாம போச்சு போல!

முன்பே தெரிந்ததுதான்… எவ்வளவு ரபேல் வாங்கினோம் என்பது பப்ளிக் டொமைனில் இருக்கு. ஆனா மிச்சம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்கன்னு கேட்பது, “எதிரிக்கு டிப்ஸ் குடுங்க”ன்னு நேர்ல கேக்குற மாதிரியே! ஏன்? பாகிஸ்தான் கேட்க வேண்டிய கேள்வியை நாமே கேக்கணுமா?

ராணுவம் ரத்தம் சிந்தும் போது, சில ஊடகங்கள் ரகசியம் சிதறும் கேள்விகள் கேட்கிறது! இது பத்திரிகை அல்ல. இது பக்கவாதம். படையில் இரத்தம் சிந்தும் போது, சில ஊடகங்களில் “சிந்தனைகள்” மட்டும் கசிகிறது. அந்த சிந்தனைகள், நாட்டு எதிரிகளுக்கு பயனுள்ளதாக இருந்தால் மட்டும் போதும்.

இந்த மாதிரி கேள்விகளுக்கு ஒரு பதில் போதும்: “இந்திய ராணுவம் வென்றிருக்கிறது. அதுவே போதும். எதிரி எவ்வளவு இழந்திருக்கான்னு கவலைப்பட்டீங்கன்னா, அது தான் உண்மையான தேசபக்தி!”

இரண்டாவது…

கேள்வி : இந்தியாவின் ரபேல் மற்றும் சில போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறதே??

பதில் : நாம் போர் சூழ்நிலையில் இருக்கிறோம், இழப்புகள் நிச்சயமாக இருக்கும். ஆனால் நாம் நமது இலக்கை அடைந்துவிட்டோமா? இல்லையா என்பதுதான் கேள்வி. “Operation Sindoor” ல் ஈடுபட்ட நமது “விமானிகள்” அனைவரும் பத்திரமாக வீடு திரும்பிவிட்டார்கள் – டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஏர் ஆப்பரேசன்ஸ், ஏர் மார்ஷல் ஏ கே பார்தி.

நடுநிலைவாதி : அப்போ விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மைதானே? விமானிகள் மட்டும்தான் திரும்ப வந்திருக்காங்க?

தேசியவாதி : அட முட்டாப்பயலே வான்வழி தாக்குதல் நடத்திய விமானிகள் பத்திரமா வீடு திரும்பி விட்டார்கள்னு சொன்னால் விமானமும் பத்திரமாக வந்து சேர்ந்தது என்பதுதானே அர்த்தம்??? விமானம் இல்லாம விமானி மட்டும் பறந்தா இந்தியாவுக்குள் வந்தார்???

நடுநிலைவியாதி : – ???

மூன்றாவது…

வான் படை தளபதி ஏ கே பார்தி சொன்னது – எங்க வேலை எதிரியின் முக்கிய இடங்களை அழிப்பது மட்டுமே; இதில் ஏற்படும் சேதத்தைப் பொறுக்குவது எங்கள் வேலை அல்ல அது அவர்கள் வேலை!

சித்ரா பௌர்ணமி விழா; வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்!

azhagar in vaigai river chithra pournami - 2026

லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கோவிந்தா பக்தி கோஷம் விண்ணதிர பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர் – கைகளில் சர்க்கரை தீபம் ஏந்தி மனமுருக கள்ளழகரை தரிசித்த பக்தர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கும் பொருட்டு சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்தாண்டிற்கான கள்ளழகர் சித்திரை திருவிழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கிய நிலையில் 3வது நாள் நிகழ்வாக நேற்றைய முன் தினம் மதுரை மாவட்டம் அழகர்மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவிலில் இருந்து சுந்தராஜ
பெருமாள் தங்கப்பல்லக்கில் கள்ளழகர் வேடமிட்டு மதுரை நோக்கி புறப்பட்டாகினார்.

பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் முன்பு கண்டாங்கி பட்டுடுத்தி கள்ளழகர் வேடமிட்டு தங்க பல்லக்கில் மதுரை நோக்கி வந்த புறப்பாடாகி பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளினார்.

நேற்று அதிகாலை மதுரை நகருக்குள் வந்த கள்ளழகரை வரவேற்கும் வகையில் மூன்றுமாவடி எனுமிடத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, புதூர், ஆத்திகுளம், சொக்கிகுளம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சர்க்கரை தீபத்தை ஏந்தி கள்ளழகரை வரவேற்றனர்.

தொடர்ந்து நள்ளிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் திருமஞ்சணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து , ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிவித்து கொண்டு வெட்டிவேர் சப்பரத்திலும் அதன் பின்னர் ஆயிரம் பொன்சப்பரத்திலும் எழுந்தருளினார்.

இதனையடுத்து , மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள கருப்பணசாமி கோவிலில் இருந்து தங்கக்குதிரையில் எழுந்தருளி வைகையாறு நோக்கி புறப்பட்ட கள்ளழகரை தமுக்கம் பகுதி தொடங்கி கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் பகுதிகளில் வரவேற்கும் வகையில் கள்ளழகர் மற்றும் கருப்பணசாமி வேடமிட்ட பக்தர்கள் தண்ணீர் பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் உற்சாகமாக வரவேற்றனர்.
வைகையாற்று பகுதிக்குள் கள்ளழகர் தங்க குதிரையில் வருகை தரும்போது வெள்ளிக்குதிரையில் வீரராகவ பெருமாள் எழுந்தருளி கள்ளழகரை வரவேற்றார்.

வைகையாற்றில் எழுந்தருள வந்த கள்ளழகரை ராமர் பாதம் தாங்கிகள் முன்னே வர சக்கரை தீபம் ஏற்றி பெண்கள் வரவேற்றனர். அப்போது வைகை ஆற்றில் கூடியிருந்த லட்சக்கணக்காண பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், சர்க்கரைதீபம் ஏந்தியும் கோவிந்தா கோவிந்தா என விண்ணதிரும் வகையில் பக்தி கோஷங்களில் மத்தியில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் தாமரை இலைகள், மலர்களால் நிரப்பபட்டிருந்த வைகையாற்று பகுதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத்தொடர்ந்து தங்க குதிரையில் கள்ளழகர் மூன்று முறை வரை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து ஆற்றில் அமைக்கப் பட்டுள்ள இந்து அறநிலையத் துறை மற்றும் வீரராகவப்பெருமாள் மண்டகப்படிகளில் கள்ளழகர் மற்றும் வீரராகவ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டது.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.
இதனையடுத்து, இராமராயர் மண்டகப்படியில் நடைபெறும் தீர்த்தவாரி எனப்படும் நிகழ்ச்சிக்காக கள்ளழகர் புறப்பட்டார்.

முன்னதாக, வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக 2டன் வண்ண மலர்களால் மண்டகப்படி அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் , மேம்பாலம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு முதல் அதிகாலை வரை மின்னொளியில் ஜொலித்தது.

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியையொட்டி இரும்புவேலிகள் அமைக்கப்பட்டு மாநகர காவல். ஆணையர் லோகநாதன் தலைமையில் பலத்த காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியை காண்பதற்காக மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த பல லட்சக்கணக்கான பக்தர்களால் தல்லாகுளம் முதல் வைகை ஆறு வரை மக்கள் வெள்ளதால் நிரம்பி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.

மேம்பாலங்களிலும், கட்டிடங்களில் மேல் அமர்ந்து பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். வைகையாறு முழுவதும் பக்தர்களின் வெள்ளம்போல பக்தர்களின் தலையாக காட்சியளித்தது. கள்ளழகர் எழுந்தருளியபோது வைகையாற்று நீரை தெளித்து உற்சாகத்துடன் நடனமாடினர். வைகையாற்றை சுற்றிலும், தீயணைப்புத்துறையினர், மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அவசரகால மருத்துவ உதவிக்காக மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகையாற்றின் கரையோரங்கில் அமரந்து மொட்டையடித்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.

கள்ளழகரை தரிசிப்பதற்காக நள்ளிரவில் இருந்தே வெளியூர்களில் இருந்துவந்த பக்தர்கள் சாலைகளில் அமர்ந்திருந்து பின்னர் வைகை ஆற்று கரையோர பகுதிக்கு புறப்பட்டு சென்று கள்ளழகர் எழுந்தருளுவதை நேரில் கண்டு களித்தனர்.