மதுரை, எல்கேபி நகர் அரசுநடுநிலைப் பள்ளியில், சர்வதேச யோகா தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. உடற்கல்வி ஆசிரியர் சுகுமாறன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ராஜ வடிவேல் வரவேற்றார்.
யோகா பயிற்றுநர்கள் கௌஸ் பாட்ஷா, மீனாட்சி, சாந்தி, ஜெயப்பிரியா, செந்தில் ஆகியோர் யோகா செய்யும் முறை, வகைகள், கிடைக்கும் பலன் ஆகியவை குறித்து எடுத்துரைத்தனர். மேலும், தடாசனம், உட்கட்டாசனம், திரிகோண ஆசனம், பச்சிமுத்து ஆசனம், யோக முத்திரை ஆசனம், சூரிய நமஸ்காரம் முதலிய ஆசனங்களை செய்து காட்டி அதன் பலன்களை விளக்கினர்.
ஆசிரியை அனுசியா 2024 ஆம் ஆண்டின் கருப்பொருள் ‘சுய மற்றும் சமூகத்திற்கான யோகா’ எனக் கூறி நலவாழ்வு மற்றும் சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதில் யோகாவின் பங்கினை விளக்கி கூறினார்.
மாணவி பைரோஸ்பானு நன்றி கூறினார். விழாவில், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, ஆசிரியைகள் விஜயலட்சுமி, மனோன்மணி, சித்ரா, அகிலா, அம்பிகா, சாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.
காரியாபட்டியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு இலவச பயிற்சி முகாம்
உலக யோகா தினத்தை முன்னிட்டு காரியாபட்டியில் யோக பயிற்சி முகாம் நடை பெற்றது. உலக யோகா தினம் ஜூன் 21ந்தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சிவானந்தா யோகாலயம் சார்பில் ,உலக யோகா தினத்தை முன்னிட்டு, இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி முகாமினை, எஸ்.பி. எம். நிறுவன தலைவர் அழகர்சாமி தொடங்கி வைத்து பயிற்சி சாதனங்களை வழங்கினார்.
முகாமில், ஆசனம், பிரணாயாமம், தியானப் பயிற்சி போன்ற வகுப்புகள் நடைபெற்றது. முகாமில் , யோகா ஆசிரியர் ராமலிங்கம் பயிற்சி அளித்தார்.
நெல்லையப்பர் திருக்கோவில் தேரோட்டம் நான்கு வடங்களும் அறுந்து போன சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்து முன்னணி, இதற்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அலட்சியமே காரணம் என்று கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்துமுன்னணி அமைப்பின்ன்மாநில தலைவர் காடேஸ்வரா. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆசியாவில் மிகப்பெரிய தேர்களில் ஒன்றாக கருதப்படும் திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் ஆனி தேரோட்டம் இன்று காலை துவங்கியது. கலெக்டர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்கள் தேர் வடத்தை தூக்கி இழுக்க துவங்கிய அடுத்த நொடியே மூன்று தேர் வடங்களும் அறுந்து போய் உள்ளது. அடுத்த சில நிமிடங்களில் பெண்கள் இழுத்து வந்த நான்காவது வடமும் அறுந்து போயுள்ளது.
தேர் இருப்பிடத்தை விட்டு ஒரு அடி கூட நகரும் முன்பே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நெல்லையப்பர் கோவில் தேர் வடம் 20 வருடங்கள் பழமையானதாகும். இதனை மாற்ற சொல்லி பக்தர்களும் சிவனடியார்களும் இந்துமுன்னணியும் பல வருடங்களாக நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால் திருக்கோவில் நிர்வாகம் அதனை பொருட்படுத்தாமல் அலட்சியமாக செயல்பட்டுள்ளதே இந்த சம்பவத்திற்கு காரணம்.
தேர் வடம் அறுந்து விழுந்து பலர் சிறுசிறு காயங்களுடன் வீட்டுக்கு சென்றுள்ளனர். இறைவன் திருவருளால் தேர் நகரும் முன்பே வடம் அறுந்துள்ளது. தேர் ஓடிக்கொண்டிருக்கும் போது வடம் அறுந்து இருந்தால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு பல திருக்கோவில் தேரோட்டங்களில் பல்வேறு விபத்து சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதன் பின்பு தேரோட்டம் போன்ற நிகழ்ச்சிகள் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் நெல்லையப்பர் கோவில் தேரோட்ட நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை பொறியாளர்களின் ஆய்வு நடைபெற்றதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. நடந்த சம்பவத்தை பார்க்கும்போது மாவட்ட நிர்வாகம் இதில் மிகப்பெரிய கவனக்குறைவோடு செயல்பட்டுள்ளது தெரிய வருகிறது.
தேர் செல்லும் நான்கு ரத வீதிகளும் பூமிக்கு அடியில் மின் இணைப்பு பணிகளுக்காக தோண்டப்பட்டு ஒரு வாரத்திற்கு முன்பு தான் அந்த குழிகள் மூடப்பட்டு சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த சிமெண்ட் தளங்கள் உறுதியானதாக முறையானதாக அமைக்கப்படாததால் பல இடங்களில் தேர்ச்சக்கரம் பதிந்து நெல்லையப்பர் தேரோட்டம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் தேரோட்டத்தின் போது கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வுகூட்டம் என நடத்தி கூடி பேசி தேரோட்ட ஆலோசனை செய்ததாக கணக்கு காட்டி டீ சம்சாவோடு முடித்துக் கொள்கின்றனரா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பொதுமக்களிடமோ, பக்தர்களிடமோ, இந்து அமைப்புகளிடமோ எந்த கருத்துக்களையும் கேட்பதில்லை. அதன் விளைவே நெல்லையப்பர் தேரோட்டத்தில் இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளது.
கோயில் உண்டியல், வாடகை, குத்தகை, கட்டண தரிசன கட்டணம் என கோவிலிலிருந்து வருமானத்தை, பணத்தை கொண்டு செல்வதில் தான் தமிழக அரசும், இந்து சமய அறநிலைத்துறையும் முனைப்பாக உள்ளதே தவிர, கோவிலுக்குரிய எந்த வசதிகளும் பராமரிப்பு பணிகளும் செய்யாமல் அலட்சியப்படுத்தி உள்ளதே, இந்த சம்பவத்திற்கு காரணம்.
நெல்லையப்பர் திருத்தேர் வடம் அறுந்து பக்தர்கள் காயமான சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராஜினாமா செய்வதே மாண்புடையதாக இருக்கும்.
நெல்லையப்பர் தேர் திருவிழா ஏற்பாட்டில் அலட்சியமாக செயல்பட்ட நெல்லை மாவட்ட ஆட்சியர் உட்பட அத்தனை அதிகாரிகள் மீதும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து, இனி இதுபோல் சம்பவங்கள் நிகழாமல் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது.
யூனியன் பிரதேசமான ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார்.
அப்போது, ”10வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 2014ல், நான் ஐ.நா., சபையில் சர்வதேச யோகா தினத்தை முன்மொழிந்தேன். இந்தியாவின் இந்த முன்மொழிவை 177 நாடுகள் ஆதரித்தன; இதுவே சாதனையாக இருந்தது” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியபோது, யோகா மூலம் நாம் பெறும் ஆற்றலை இங்கே உணர முடியும். யோகா தினத்தில் நாட்டு மக்களுக்கும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் யோகா செய்து வரும் மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சர்வதேச யோகா தினம் 10 வருட வரலாற்று பயணத்தை நிறைவு செய்துள்ளது. 2014ல், நான் ஐ.நா., சபையில் சர்வதேச யோகா தினத்தை முன்மொழிந்தேன். இந்தியாவின் இந்த முன்மொழிவை 177 நாடுகள் ஆதரித்தன; இதுவே சாதனையாக இருந்தது.
அதன்பிறகு, யோகா தினம் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. இந்த ஆண்டு இந்தியாவில், பிரான்சை சேர்ந்த 101 வயது பெண் யோகா ஆசிரியைக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அவர் இந்தியாவுக்கு வரவில்லை, ஆனால் யோகா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார்.
இன்று, உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் யோகா பற்றிய ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன; ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன.. என்றார் அவர்.
ஸ்ரீநகரில் யோகா பயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோடி, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். அதைத் தன் சமூகத் தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
மதுரை -பெங்களூரு வந்தே பாரத் திருச்சியை சுற்றிச் செல்லும் ஆரஞ்ச் நிற வந்தே பாரத் ரயில் பயண நேரம், கட்டணம் அதிகம் என்பதால் தற்போது இந்த ரயிலுக்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பி வருகிறது.இந்த பதிய வந்தே பாரத் ரயிலை திருநெல்வேலி மில் இருந்து நேர்வழியில் பெங்களூர் க்கு இயக்க தென்மாவட்ட பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மதுரை – பெங்களூரு இடையே இயக்கப்படவுள்ள வந்தே பாரத் ரயில் திருச்சியை சுற்றிச் செல்வதால் பயண நேரம், கட்டணம் அதிகம் உள்ளதாக பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு ஆரஞ்ச் வண்ணத்தில் வந்தே பாரத் ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது. மதுரையில் அதிகாலை 5:15 மணிக்கு புறப்படும் வந்தேபாரத் ரயில் திருச்சிக்கு காலை 7:15க்கு செல்கிறது.
அங்கிருந்து 7:20 மணிக்கு புறப்பட்டு காலை 9:55 மணிக்கு சேலம் செல்கிறது. அங்கு 10:00 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:15 மணிக்கு பெங்களூரு எஸ்.எம்.வி., ஸ்டேஷனுக்கு சேருகிறது.
மறுமார்க்கத்தில் பெங்களூரு எஸ்.எம்.வி., ஸ்டேஷனில் மதியம் 1:45 மணிக்கு கிளம்பும் ரயில் இரவு 10:25 மணிக்கு மதுரை வருகிறது. இந்த ரயிலின் சோதனை ஓட்டம் ஜூன் 17 ல் நடைபெற்றது
இந்த வந்தே பாரத் ரயிலுக்கு திண்டுக்கல்லில்நிறுத்தம் இல்லை. மேலும் திருச்சியை சுற்றிச் செல்வதால் துாரம் 145 கி.மீ., அதிகரிக்கிறது. 2 மணி நேரம் பயணமும்,கட்டணமும் அதிகம் உள்ளது.
எனவே திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு தனியாக வந்தே பாரத் ரயிலை இயக்கலாம்.
மதுரை-பெங்களூரு வந்தேபாரத் ரயிலை திருநெல்வேலி யில் இருந்து மதுரை விருதுநகர் திண்டுக்கல், கரூர் வழியாக இயக்க வேண்டும்.
இத்தடத்தில் உள்ள முக்கிய வர்த்தக நகரங்களான விருதுநகர் திண்டுக்கல், வந்தே பாரத் ரயில் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மீட்டர் கேஜ் காலத்தில் பகலில் இயக்கப்பட்ட நெல்லை – கொல்லம் – நெல்லை ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
வியாழன் நேற்று (20/06/24) செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே வாரிய தலைவர், தெற்கு ரயில்வே பொது மேலாளர், பிற உயர் அதிகாரிகள், மதுரை கோட்ட மேலாளர் மற்றும் அதிகாரிகள் தென்காசி நெல்லை கொல்லம் மாவேலிக்கரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு இன்று அனுப்பிய ஈ-மெயில் கடிதத்தில் கூறியிருப்பதாவது-
*மீட்டர் கேஜ் ரயில்கள் ஓடிய நேரத்தில் நெல்லை – கொல்லம் இடையே அம்பை பாவூர்சத்திரம் தென்காசி செங்கோட்டை ஆரியங்காவு தென்மலை புனலூர் கொட்டாரக்கரை வழியாக காலையிலும் மாலையிலும் கொல்லம் நெல்லை இரு இடங்களிலிருந்தும் ரயில்கள் இயக்கப்பட்டன.இப்பாதை 2018ம் ஆண்டு பிராட் கேஜ் ஆன பிறகு இந்த ரயில்கள் இயக்கப்படவில்லை.
இதனால் திருநெல்வேலிக்கு மருத்துவ சிகிச்சைக்காக வரும் கேரள மக்கள், இரு மாநில மாணவர்கள்,வணிகர்கள் தனியார் மற்றும் அரசு , வங்கி ஊழியர்கள் ,பால் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் குற்றாலம் அருவிகள், குண்டாறு ,அடவிநயனார் அணைகள்,பாபனாசம் மணிமுத்தாறு அணைகள் மாஞ்சோலை எஸ்டேட் அகத்தியர் அருவி ஆரியங்காவு பாலருவி தென்மலை ஈக்கோ சுற்றுலா தலம், கல்லடா அணை ,அம்பநாடு எஸ்டேட் இவ்விடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் இந்த ரயில்களால் பயன் பெறுவர்.
மேலும் கோவில் தலங்களான திருநெல்வேலி பாபநாசம் தென்காசி திருமலைக்கோவில் ஆரியங்காவு அச்சன்கோவில் கொட்டாரக்கரை செல்வோரும் இந்த ரயில்களால் பயனடைவார்கள்.
எனவே இந்த ரயில்களை விரைவில் இயக்கிட ஆணை பிறப்பிக்க வேண்டுகிறோம். மேலும் இந்த ரயில்களில் பயணிகள் செங்கோட்டை – புனலூர் பாதையிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளின் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்திட மேற் கண்ணாடி கூரை வசதி உள்ள விஸ்டாடோம் பெட்டி ஒன்றும் இணைக்கப்பட வேண்டும்.
டி20 உலகக் கோப்பை -சூப்பர் 8 ஆட்டங்கள் – 19 ஜூன் மற்றும் 20 ஜூன் 2024
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
தென் ஆப்பிரிக்க vs அமெரிக்கா
முதல் சூப்பர் எட்டு ஆட்டம் 19ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா (194/4), அமெரிக்க (176/6) அணிகளுக்கிடையில் நார்த் சவுண்ட் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே முதலில் மட்டையாட வந்த தென் ஆப்பிர்க்க அணியின் க்விண்டன் டி காக் (40 பந்துகளில் 74 ரன், 7 ஃபோர், 5 சிக்சர்), எய்டன் மர்கரம் (32 பந்துகளில் 46 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்), கிளாசன் (22 பந்துகளில் 36 ரன், 3 சிக்சர்), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (16 பந்துகளில் 20 ரன், 2 ஃபோர்) ஆகியோர் சிறப்பாக ஆட அந்த அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கட் இழப்பிற்கு 194 ரன் எடுத்தது.
தொடர்ந்து ஆடிய அமெரிக்க அணியில் அன்றிஸ் கௌஸ் (47 பந்துகளில் 80 ரன், 5 ஃபோர், 5 சிக்சர்), ஹர்மீத் சிங் (22 பந்துகளில் 38 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்), ஸ்டீவன் டைலர் (14 பந்துகளில் 24 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) என சிறப்பாக ஆடியபோதும் 20 ஓவர்களில் அமெரிக்க அணியால் 6 விக்கட் இழப்பிற்கு 176 ரன் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 18 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேற்கு இந்தியத் தீவுகள் vs இங்கிலாந்து
நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் மேற்கு இந்தியத்தீவுகள், இங்கிலாந்து அணிகள் விளையாடின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே முதலில் மட்டையாடிய மேற்கு இந்தியத்தீவுகள் அணியின் ஜான்சன் சார்லஸ் (34 பந்துகளில் 38 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்), நிக்கோலஸ் பூரன் (32 பந்துகளில் 36 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்), ரோவ்மன் போவல் (17 பந்துகளில் 36 ரன், 5 சிக்சர்), ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் (15 பந்துகளில் 28 ரன்), ப்ராண்டன் கிங் (13 பந்துகளில் 23 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோர் சிறப்பாக ஆடியதால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கட் இழப்பிற்கு 180 ரன் எடுத்தது.
இரண்டாவதாக ஆடவந்த இங்கிலாந்து அணியில் பில் சால்ட் (47 பந்துகளில் 87 ரன், 7 ஃபோர், 5 சிக்சர்), ஜானி பெயர்ஸ்டோ (26 பந்துகளில் 48 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்), ஜாஸ் பட்லர் (22 பந்துகளில் 25 ரன், 2 ஃபோர்), மொயின் அலி (10 பந்துகளில் 13 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடி 17.3 ஓவரில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 181 ரன் அடித்து அணியை 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தனர்.
இந்தியா vs ஆஃப்கானிஸ்தான்
இன்று 20.06.2024 அன்று பிரிட்ஜ் டவுனில் நடந்த இந்தியா, ஆஃப்கானிஸ்தான் இடையேயான ஆட்டம் மிக முக்கியமாகப் பார்க்கப்பட்டது. ஏனென்றால் இந்திய மேற்கு இந்தியத்தீவுகளில் ஆடும் முதல் ஆட்டம் இது. டாஸ் வென்று முதலில் மட்டையாட இந்திய அணி தீர்மானித்தது.
மூன்றாவது ஓவர் முடிவில் ரோஹித் ஷர்மா (13 பந்துகளில் 8 ரன்) ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ரிஷப் பந்த் (11 பந்துகளில் 20 ரன், 4 ஃபோர்) விராட் கோலியுடன் (24 பந்துகளில் 24 ரன், 1 சிக்சர்) இணைந்து 7ஆவது ஓவர் வரை தாக்குப்பிடித்தார். அதன் பின்னர் சூர்யகுமார் யாதவ் (28 பந்துகளில் 53 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்), ஷிவம் துபே (7 பந்துகளில் 10 ரன், 1 சிக்சர்), ஹார்திக் பாண்ட்யா (24 பந்துகளில் 32 ரன், 3 ஃபொர், 2 சிக்சர்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 181 ரன் எடுத்தது. ஆஃப்கானிஸ்தான் அணியில் ரஷீத் கான் 3 விக்கட் எடுத்தார்.
இரண்டாவதாக ஆடவந்த ஆஃப்கானிஸ்தான் அணியில் எவரும் நிலைத்து ஆடவில்லை. முதல் ஐந்து ஓவருக்குள் மூன்று விக்கட் விழுந்துவிட்டது. பும்ரா இரண்டு விக்கட்டுகளையும் அக்சர் படேல் ஒரு விக்கட்டையும் எடுத்தார். இறுதியில் பும்ராவின் பந்து வீச்சு 4 ஓவர், ஒரு மெய்டன், 7 ரன் 3 விக்கட் என இருந்தது. தனது கடைசி இரண்டு ஓவர்களில் அர்ஷதீப் சிங் மூன்று விக்கட்டுகளை எடுத்தார். குல்தீப் யாதவ் 2 விக்கட்டுகளியும், ஜதேஜா, அக்சர் படேல் இருவரும் தலா ஒரு விக்கட் எடுத்தனர். இருப்பினும் ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர் வரை விளையாடியது; 134 ரன் களுக்கு அனைத்துவிக்கட்டுகளையும் இழந்து 47 ரன் களில் தோல்வியடைந்தது.
உயிர் வாங்கும் மெத்தனால்… குடித்தால் என்ன நடக்கும்?
மெத்தனால் என்றால் என்ன?
மெத்தில் ஆல்கஹால் என அழைக்கப்படும் மெத்தனால், எத்தனாலை விட அதிக நச்சுத்தன்மை கொண்டது.
எளிதில் ஆவியாகக் கூடிய, தீப்பற்றக் கூடிய, நிறமற்ற மெத்தனால் எரிபொருளாகவும் உபயோகப் படுத்தப் படுகிறது.
நீர் மற்றும் மெத்தனால் கலவை அதிக செயல்திறன் கொண்ட இயந்திரங்களில் உறைநிலையை குறைக்க பயன்படுத்தப்படுகிறது.
ஆடை தயாரிப்பு, பெயிண்ட் உற்பத்தி, பிளாஸ்டிக் உற்பத்தியில் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் முக்கிய மூலப் பொருளாக மெத்தனால் பயன்படுகிறது.
மை, பிசின்கள், பசைகள் மற்றும் சாயங்களை உருவாக்க உதவும் ஒரு தொழில்துறை கரைப்பானாக மெத்தனால் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பெட்ரோலில் கூட துணை பொருளாக மெத்தனால் கலக்கப்பட்டுள்ளது.
மெத்தனால் பயன்பாட்டிற்கு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. உரிமம் பெற்ற தொழில் நிறுவனங்கள் மட்டுமே இவற்றை பயன்படுத்த முடியும்.
மேலும் மெத்தனாலை வாங்குவது, பயன்படுத்துவது என அனைத்தையும் கண்காணிக்க தனி அமைப்புகள் உள்ளன.
தொழிற் காரணங்களை தவிர்த்து பிற வகையான பயன்பாட்டிற்கு மெத்தனாலை பயன்படுத்துவது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
மெத்தனால் உயிரைப் பறிப்பது எப்படி?
கள்ளச்சாராயத்திற்கும், விஷச்சாராயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது.
மதுவை அரசு அனுமதியில்லாமல், உரிமம் இல்லாமல் காய்ச்சி குடித்தால் அது கள்ளச்சாராயம்.
அதுவே, போதைக்காக மெத்தனால் கலக்கப்படும் போது விஷ சாராயமாகி விடும். எத்தனால் எனப்படும் எத்தில் ஆல்கஹால் தான் மது வகைகளில் இருக்கக் கூடியது.
மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய கொடிய விஷமாகும்.
தொழிற்துறையில் அதிகமாக பயன்படுத்தப்படும் மெத்தனால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு கொடிய விஷமாகும்.
குறிப்பிட்ட அளவுக்கு மேல் இவற்றை உட்கொள்ளும் மனிதர்களின் நியூரான்களில் கலக்கும் போது உயிரிழப்புகளுக்கான வாய்ப்புகள் அதிகம் என சொல்லப்படுகிறது.
மேலும், இவை மூளையின் செல்களை அழிப்பதால் மெத்தனாலை உட்கொள்ளும் போது நிரந்தரமாக கண்பார்வை பறிபோகும் ஆபத்து உள்ளது.
கள்ளச்சாராய உற்பத்தியில் அதிக போதை ஏற்படுத்தும் நோக்கில் இவை கலக்கப்படுகிறது.
மெத்தனால் அளவு அதிகமாக கலக்கப்படும் சாராயத்தை உட்கொள்ளுவதால் கண்பார்வை பறிபோவது, கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதுடன் அதிகபட்சமாக உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
மெத்தனால் கலக்கப்பட்ட சாராயத்தை உட்கொள்வதுடன் உணவு, நரம்பு மண்டலங்களை சீர்குலைக்கும். வயிறும், குடலும் வெந்துவிடும்.
நரம்பு மண்டலம் வழியாக மூளைக்கு விஷத்தன்மை பரவி மூளை செல்களை அழித்து கண்பார்வையையும், செவித்திறனையும் பறித்துவிடும்.
மேலும், நுரை நுரையாக வாந்தி வரும், இந்த வாந்தி நுரையீரலை சென்றடைந்து மூச்சு விடமுடியாமல் தடுத்து உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
TNPSC Group 2 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு. – இன்று முதல் விண்ணப்பிக்கலாம். குரூப்-2 தேர்வின் மூலம் 2 ஆயிரத்து 300 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தேர்வாளர்கள் இன்று தொடங்கி வரும் ஜுலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்துவதற்கும் ஜுலை 19ம் தேதியே கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, செப்டம்பர் 14ம் தேதி தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சியின் இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை அறிய https://www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.
குரூப் 2 தேர்வு மூலம் தமிழ்நாடு அரசில் உள்ள 2300 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி, குரூப் 2 பிரிவில் 507 இடங்களும், குரூப் 2 ஏ பிரிவில் 1820 பணியிடங்களும் உள்ளன.
தமிழ்நாடு தொழிலாளர் சேவை துறையில் உள்ள உதவி ஆய்வாளர் தொடங்கி, கீழ் நிலை கிளெர்க் வரை மொத்தம் 48 பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளை எழுத ஆன்லைனில் விண்ணப்பிக்க, ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷனை தொடர்ந்து பிரிலிம்ஸ் மற்றும் மெயின்ஸ் தேர்வுகளுக்கு முறையே ரூ.150, ரூ.100 மற்றும் ரூ.150 செலுத்த வேண்டும்.
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது யுபிஐ மூலம் கட்டண தொகையை காலக்கெடுவிற்குள் செலுத்த வேண்டும்.
குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு 2024க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, தேர்வாளர் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அவரது வயது 18, 20, 22 அல்லது 26 வயதுக்குக் குறைவாகவோ அல்லது 30 அல்லது 40 வயதுக்கு மேல் மிகாமல் இருக்க வேண்டும்.
செங்கோட்டை முத்துசாமி பூங்காவிற்கு வரும் பொதுமக்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை கைவிடக் கோரி அதிமுக., பாஜக., கவுன்சிலா்கள் மனு அளித்தனர்.
செங்கோட்டை முத்துசாமி பூங்காவில் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்க தடை கோரி அதிமுக, பாஜக கவுன்சிலா்கள் நகராட்சி மேலாளா் கண்ணனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
செங்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான முத்துசாமி பூங்காவிற்கு செங்கோட்டை தீர்மான எண் 200 நாள் 05.10.2023இன்படி நகராட்சி வருவாயினை அதிகப்படுத்தும் நோக்கில் முத்துசாமி பூங்காவிற்கு வரும் பொதுமக்களிடமிருந்து நுழைவுக் கட்டணத் தொகை வசூலிக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட 30 தினங்களுக்குள் ஆட்சேபணை முரண்பாடுகள் இருந்தால் ஆணையாளா் செங்கோட்டை நகராட்சியில் எழுத்து மூலமாக தெரிவிக்கலாம் தெரிவிக்கலாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. மேற்படி தீர்மானமானது பெரும்பான்மையான உறுப்பினா்களால் ஆரம்ப கட்ட நிலைலேயே நிராகரிக்கப்பட்ட தீரமானம் ஆகும்.
அவ்வாறு நிராகரிக்கப்பட்ட தீர்மானத்தினை நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என பொய்யாக நாளிதழில் செய்தி வெளியிட்டு இருப்பது மிகவும் கண்டத்திற்குரியது ஆகும். இதற்கு எங்களது கண்டனத்தினை மிக கடுமையாக தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் பூங்காவில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வருவாயை விட அதிகமான அளவு வணிக வளாகங்களின் மூலம் பெறலாம். நகராட்சி வருவாயை பெருக்குவதற்கு பல்வேறு வழிமுறைகள் இருக்கும்பட்சத்தில் பொதுமக்களிடம் ரூ.5ஐ வசூலிப்பது பொதுமக்களை மேலும் சிரமத்திற்குள்ளாக்குவது போன்ற செயலாகும்.
மேலும் சொத்துவரி, உயர்வு மின்கட்டண உயர்வு போன்ற பல்வேறு கட்டண உயர்வுகளினால் பொதுமக்கள் அவதிபட்டு வரும் இந்நேரத்தில் பூங்காவிற்கு நுழைவு கட்டணம் வசூலிப்பது பொதுமக்கள் மற்றும் சிறுவா், சிறுமியா், மாணவ, மாணவியர், முதியோர் பெரும் சிரமத்திற்குள்ளாக்குவது போன்றது ஆகும்.
மேலும் மாணவர்கள், வயதானவர்கள், குழந்தைகள் பொதுமக்கள் என அனைவரும் சிலமணி நேரம் பூங்காவில் செலவிடுவார்கள் அதற்கும் நுழைவு கட்டணம் என்ற பெயரில் கட்டணம் வசூலிப்பது ஒரு கொடிய செயலாக கருதுகிறோம்.
ஏற்கெனவே தமிழக அரசு மக்களை பல்வேறு வரி உயர்வுகள் செய்து மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வரும் நிலையில் இந்நகராட்சியின் பூங்காவிற்கு வரும் மாணவர்கள், முதியோர்கள், குழந்தைகளையும் மிகுந்த இன்னல்களுக்கும் சிரமத்திற்குள்ளாக்க வேண்டாம் என பொதுமக்களின் நலன் கருதி மேற்படி பூங்காவிற்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் நடைமுறைப்படுத்த வேண்டாம் என மிக கடுமையான ஆட்சேபனை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் முத்துசாமி பூங்கா தோற்றுவிக்கப்பட்ட நாளிலிருந்து நாளது தேதிவரையில் எந்த ஒரு கட்டணமும் வசூலிக்காமல் இலவச பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் திடீரென நுழைவு கட்டணம் வசூலிக்கும் நடைமுறையினை உருவாக்கி பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டாம் எனவே மேற்படி பூங்காவிற்கு நுழைவு கட்டணம் வசூலிக்க இருக்கும் திட்டத்தினை உடனடியாக கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில், நகர்மன்ற துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், சுப்பிரமணி, ஜெகன், முத்துப்பாண்டி, சரஸ்வதி, சுடர்ஒளி, பாஜக கவுன்சிலா்கள் வேம்புராஜ், செண்பகராஜன், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவா் கணேசன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினா் தங்கவேலு ஆகியோர் கலந்து கொண்டனா்.
தெய்வீகத் தமிழகத்தில் மாணவர்கள் திலகமிட தடையா, நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் கமிஷனின் இந்து விரோத அறிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே சாதி வன்முறைகளை தடுக்க ஆலோசனை வழங்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒருநபர் கமிஷனை தமிழக அரசு அமைத்தது. அந்த கமிஷன் அறிக்கை நேற்று 18/06/2024 அன்று முதல்வர் அவர்களிடம் அளிக்கபட்டுள்ளது.
அந்த அறிக்கையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் பெயர்களில் உள்ள ஜாதி பெயர்களை நீக்கவேண்டும் என்றும் நீக்க மறுக்கும் தனியார் பாடசாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
பெரும்பான்மையாக ஒரு ஜாதியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் அந்த ஜாதி சாராத தலைமை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் நடத்தை குறித்து வருடாந்திர ரகசிய ஆய்வறிக்கை தயாரிக்கவேண்டும் என்றும் மாநில அரசின் ஆசிரியர் பயிற்சி பாடதிட்டம் மாற்றபடவேண்டும் என்பது போன்ற பல அபத்த ஆலோசனைகளை ஆய்வு என்ற பெயரில் அறிக்கையாக அளித்துள்ளார்.
அபத்தங்களுக்கு முத்தாய்ப்பாக மாணவ மாணவியர்கள் மணிகட்டில் கயிறு கட்டகூடாது. நெற்றியில் திலகமிடகூடாது, மிதிவண்டிகளுக்கு வண்ணம் பூக்கூடாது மீறும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அறிக்கை அளித்துள்ளது.
மணிக்கட்டில் காப்பு கயிறு கட்டக்கூடாது நெற்றியில் திலகமிடக்கூடாது என்று சொன்ன கமிஷன் மறந்தும் கூட சிலுவை அணியக்கூடாது, முகத்தை மறைக்கும் பர்தா அணியக்கூடாது என்று ஆலோசனை அளிக்கவில்லை என்பதில் இருந்தே கமிஷனின் நோக்கம் வெட்ட வெளிச்சம் ஆகிறது.
நடுநிலை பாடசாலை முதலாக கல்லூரிகள் வரை மாணவர்கள் சேர்க்கை முதலாக தங்கும் விடுதிகள் உட்பட அணித்திலும் பின் தங்கியவர்கள், மிகவும் பின் தங்கியவர்கள், பட்டியல் சமூகத்தினர் என்று ஜாதி அடிப்படையிலேயே தனிதனியாக நடத்தி சாதி அடையாளத்தை திணிப்பதே அரசுதான். ஜாதி அடிப்படையில் பாடசாலைகளையும் அரசுதான் நடத்தி வருகிறது. மத அடிப்படையிலும் அரசு பள்ளிகள் நடத்துகிறது என்பது திரு. சந்துரு அவர்களுக்கு தெரியுமா? தெரியாதா? இஸ்லாமிய பாடசாலை, அரசு உருது பாடசாலை, கிறித்துவ பள்ளிகள், அரசின் உதவி பெரும் சிறுபான்மையினர் பள்ளிகள் என அனைத்து வித மதப் பள்ளிகளும் செயல்பட்டுவருகின்றன. அந்த வகையில் சமூகத்தில் ஜாதி, மத அடிப்படையில் பிளவை ஏற்படுத்தி பாடசாலைகளையும் நடத்தி வருவது சமூகநீதி பேசும், ஜாதி ஒழிப்பு பேசும் திராவிட மாடல் திமுக அரசுதான் என்பதை மறந்துவிடக்கூடாது.
கடந்த 60 ஆண்டுகளாக இங்கே திராவிட அரசுகள்தான் ஆட்சியில் இருந்திருக்கிறது, இப்போதும் இருக்கிறது. ஊரெங்கும் மேடை போட்டு ஜாதியை ஒழித்தது நாங்கள்தான் என்று மார்தட்டி கொள்ளுகிற திமுக அரசுதான் இப்போது பாடசாலைகள் கல்லூரிகளில் ஜாதி அடிப்படையில் வன்முறை நடக்கிறது என்று கமிஷன் அமைத்து அறிக்கை வாங்கியுள்ளது. அந்தவகையில் எந்த ஜாதியைத் தான் திமுக அரசு ஒழித்தது? என்பதை அறிய மக்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
அந்த கமிஷன் அறிக்கையில் மாணவர்கள் நெற்றித் திலகமும், காப்புக் கயிறையும் அணிவதை தடை செய்துவிட்டால் ஜாதியை ஒழித்துவிடலாம் அன்று அரிய கண்டுபிடிப்பை கமிஷன் தெரிவித்துள்ளது வேடிக்கை.
பெரும்பான்மை சமூகம் வசிக்கும் பகுதியில் உள்ள பாடசாலையில் அதே சமூகத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர் நியமிக்க கூடாது என்ற ஆலோசனையை திமுக என்றாவது கடைப்பிடித்ததுண்டா? ஒவ்வொரு தேர்தலின் போதும் எந்த தொகுதியில் எந்த சமூகத்தினர் பெரும்பான்மை என்று ஆய்வு செய்து வேட்பாளரை தேர்வு செய்யுது வெற்றிபெற திட்டமிடும் திமுக ஆட்சியில் தான் இதுபோன்ற கண்துடைப்பு ஆலோசனையை ஒருநபர் கமிஷன் அளிக்கிறது என்பதை மக்கள் தெளிவாகத் தெரிந்துதான் வைத்திருக்கிறார்கள்.
தமிழ் இலக்கியங்களில் இல்லாத நீதி நூல்கள் உலகில் எங்கும் இல்லை எனலாம் அதுபோன்ற நீதி நூல்களை பாடசாலைகளில் நீதிபோதனை வகுப்புகள் என்ற பெயரில் நீண்ட காலமாக நடத்தி வந்ததை, பகுத்தறிவுக்கு சோதனை என்று தடை செய்த திமுக அரசிடம் அறநெறி வகுப்புகளை நடத்தவேண்டும் என்று கமிஷன் அறிக்கை கொடுத்துள்ளது. அதிலும் அறநெறி கற்பிக்க வெளியில் இருந்து ஆசிரியர் அல்லாதவர்களை அழைக்கலாம் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளது. அதாவது திமுக ஆட்சியை பிச்சையிட்ட பாதிரியார்களை, கடவுள் மறுப்பு பேசும் நாத்திகவாதிகளை அறநெறி போதனையாளர்கள் என்ற பெயரில் மதமாற்ற பாடம் நடத்தவும், திராவிட மாடலை வளர்க்கவும் அனுமதிக்கலாம் என்ற உள்நோக்கத்தை அறிக்கையை படிக்கும் அனைவராலும் உணரமுடியும்.
திருக்குறள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஆசாரக்கோவை என அறத்தையும் நீதியையும் நெறியையும் போதிக்கும் நீதி நூல்களை பாடதிட்டத்தில் இருந்து நீக்கிய திராவிட அரசு இப்போது கமிஷன் அமைத்து அறநெறி வகுப்புகளுக்கு பரிந்துரை வாங்கியுள்ளது.
ஆங்கிலேய அடக்குமுறை காலத்தில் ஒவ்வொரு இந்து சமூக தனவந்தர்களும் அனைத்து இந்துக்களும் கல்வி பெறவேண்டும் என்று தங்கள் சொத்துகளை, பொன்னை பொருளை கல்வி வழங்க தானமாக கொடுத்து பாடசாலைகளை உருவாக்கியுள்ளார்கள். அந்த வள்ளல்களின் நினைவாக அந்த பாடசாலைகள் அவர்களின் பெயர் தாங்கி பல லட்சக் கணக்கானோருக்கு அன்றும், இன்றும், என்றும் கல்வி அளித்து வருகிறது. ஆனால் அவர்கள் பெயரோடு இணைந்துள்ள ஜாதி பெயரால் ஜாதிய பாகுபாடு வருகிறது என்று 60 ஆண்டுகால திராவிட ஆட்சி கமிஷன் அமைத்து கண்டுபிடித்துள்ளது.
ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு, பேருந்து நிலையம் வணிக வளாகம், அரசு கட்டிடம் அரசு பாடசாலை என கண்ணில் படுபவற்றுகெல்லாம் ஈ.வெ.ரா, அண்ணா, கலைஞர் பெயர் சூட்டும் திமுக அரசு அவர்கள் பணத்தில் அவர்கள் சொத்தில் உருவாக்கிய ஒரே ஒரு பாடசாலையை காட்ட முடியுமா? பின் எதற்கு பாடசாலை கல்லூரிக்கு இவர்கள் பெயர்?
ஏற்கனவே திராவிடத்தின் பெயரால் தமிழ் இலக்கியங்கள், மன்னர்கள், ஆன்மீக பெரியோர்களை, விடுதலை போராட்ட வீரர்களின் பெயர்களை முடி மறைத்தது திராவிட அரசு. இப்போது கல்வி வள்ளல்களின் பெயர்களை நீக்கினால் ஜாதி மோதல் ஒழியும் என்ற பெயரில் மிச்சம் உள்ள முன்னோர்களின் வரலாற்றையும் அழிக்க துடிக்கிறது.
உண்மையில் எந்த தனியார் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்கள் சாதி சண்டை இல்லை. அரசு கல்வி நிறுவனங்களில் தான் இந்த சமூக சீர்கேதுகளைப் பார்க்க முடிகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் அரசும், அரசு ஊழியர்கள் ஆகிய சில அரசுப் பள்ளி ஆசிரியர்களும். என்பதை மறுக்க முடியாது. இவர்கள் அரசியல் சார்பு உடையவர்களாகவே செயல்படுகிறார்கள் என்பதும் உண்மை தானே.
அதே போல, தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க தயங்குவதில்லை. ஆனால் அரசு கல்வி நிறுவனங்களில் அது நடக்கிறதா? இதனை கடந்து செல்ல நீதியரசர் சந்துரு எதாவது அளவுகோல் வைத்திருந்தாரா? சாதி பெயர் கொண்ட வள்ளல்களின் பள்ளியில் இதுபோன்ற பேச்சு கூட எழுந்தது இல்லை. காரணம் அரசு பள்ளி எல்லாம் இலவசமாக கிடைக்கிறது பண்பும், படிப்பும் தவிர என்ற நிலை மாற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.
SJSF என்னும் சமூக நீதி மாணவர் படையை மாநில அரசு உருவாக்க வேண்டும் என்றும், அதை மாநில அரசே தனிகட்டுபாட்டில் வைத்துகொள்ள வேண்டும் என்றும் சமூக கேடுகளை தடுக்க அந்த படையை பயன்படுத்தவேண்டும் என்றும் அதற்கு நிதி திரட்ட குழு அமைக்க வேண்டும் என்றும் கமிஷன் அறிக்கை அளித்துள்ளது,
நாம் அனைவருக்கும் அறிந்த NCC என்னும் தேசிய மாணவர் படை, NSS என்னும் தேசிய நாட்டு நலப்பணித் திட்டம் போன்ற மாணவர் அமைப்புகள் பிற மாநிலங்களில் அனைத்து மாணவர்களும் பங்குபெறும் சீரிய அமைப்பாக இருந்து வருகிறது. அதன்மூலம் மாணவர்களிடையே நல்லிணக்கமும் நல்லோழுக்கமும் தேசியமும் வளர்க்கும் மாணவர் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் அதற்கெல்லாம் இடமில்லை என்ற ரீதியில் அந்த அமைப்புகள் பெரும்பாலான அரசு பாடசாலைகளில் இல்லவே இல்லை என்னும் நிலை உள்ளது.
ஆனால் ஆளும் திமுக அரசும் கூட்டணி கட்சி ஆதரவாளரும் காம்ரேட் செயற்பாட்டாளரும் ஆன சந்துரு அவர்கள் அவர் விரும்பும் DYFI போன்ற அமைப்பை அரசு நிதியில் அமைக்க சமூகநீதிப்படை என்று முலாம் பூசி ஆலோசனை வழங்கி உள்ளதை அந்த ஆலோசனையை படிக்கும் எவரும் புரிந்துகொள்ள முடியும்.
கல்வி காவி மயமாதலையும், கல்வி நிலையங்களில் காவிமயம் நுழைவதை தடுக்கவும் விசாரிக்கவும் நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்று கமிஷன் ஆலோசனை வழங்கியுள்ளார். திராவிடமும், கம்யூனிசமும், மிஷனரிகளும் ஒன்றிணைந்து உருவாக்கிய திட்டமிட்ட அறிக்கை என்பதை இந்த ஒரு ஆலோசனை அப்பட்டமாக காட்டியிருக்கிறது.
ஆகவே எந்த வகையில் பார்த்தாலும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்களின் அறிக்கை முழுக்க முழுக்க முன்கூட்டியே திட்டமிட்டு திராவிட கம்யூனிச பிரச்சாரத்தை பாடசாலைகளில் புகுத்த உருவாக்கபட்ட அறிக்கை என்றே கருத வேண்டியுள்ளது.
மேலும் மணிக்கட்டு காப்பு கயிறும், நெற்றி திலகமும் ஒரு குறிப்பிட்ட இந்து சமுதாயத்திற்கு சொந்தமானதல்ல. அவை ஒட்டுமொத்த இந்து மக்களின் அடையாளங்கள். பண்டைய தமிழ் இலக்கியம் புறநானூற்றிலேயே வெற்றிதிலகம் இட்டு போருக்கு செல்வதை காட்டியுள்ளது. அப்படியான பழம்பெரும் வழக்கத்தை தடை செய்யவேண்டும் என்று அறிக்கை அளிப்பது அப்பட்டமாக மத சுதந்திரத்தில் தலையிடும் செயல் மட்டுமல்ல, அரசியல் சாசனம் அளித்துள்ள மத சுதந்திரத்தை தடை செய்யும் செயலாகும். அந்த வகையில் திராவிடமும் கம்யூனிசமும் மிஷனரிகளும் கூட்டு சேர்ந்து திட்டமிட்டு இந்த அறிக்கையை உருவாக்கியுள்ளார்கள் என்ற சந்தேகத்தை தவிர்க்க முடியவில்லை.
எனவே மாணவர் பிரச்சனைக்கு சிறிதும் பொருத்தமில்லாத ஆலோசனைகளையும், இந்து மத பழக்கவழக்கங்களை தடை செய்யும் நோக்கத்துடனும், சமூக பெரியோர்களின் வரலாற்றை சிதைக்கும் வகையிலும், மத மாற்றத்திற்கு துணை போகும் வகையிலும், திராவிட கம்யூனிஸ மிஷநரி கும்பலின் பின்புலத்தில் உருவாக்கபட்டுள்ள அறிக்கைக்கு இந்துமுன்னணி கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன் ஆளும் திமுக அரசு அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள கூடாது, நடைமுறைபடுத்த கூடாது என்றும் இதன்மூலம் வலியுறுத்துகிறது.
ஒரு நபர் கமிஷன் அறிக்கையை அரசு ஏற்கும் என்றால் இந்து முன்னணி அதனை எதிர்த்து மக்களைத் திரட்டி ஜனநாயக ரீதியில் பேரியக்கம் தொடர் போராட்டம் நடத்தும் என்பதையும் இவ்வறிக்கை வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் இந்து ஆன்மிக பெரியோர்கள், சமுதாயத் தலைவர்கள், தேசபக்தர்கள் நீதிபதி சந்துரு அவர்களின் ஒருதலைப்பட்சமான அறிக்கை கண்டித்து தமிழக அரசு அதன் வழிகாட்டுதலை கைவிட வலியுறுத்த வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.