Home Blog Page 257

நம்ம நாட்டு சுற்றுலா: புரி ஜகந்நாதர் கோயில்

puri jagannadh temple - 2026
#image_title

11. பூரி ஜெகன்னாதர் கோவில்

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          நாங்கள் காரில்தான் பயணித்தோம் என்றாலும் காலை 0630 மணியிலிருந்து பல்வேறு இடங்களுக்குப் போய்க் கொண்டிருந்தோம். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து லிங்கராஜா கோயில். கோயிலில் ஒரு மணி நேரம் செலவு செய்தோம். பின்னர் தொஹிலி செல்ல ஒரு 20 நிமிடம். அங்கு 0945 வரை சாந்தி ஸ்தூபி மற்றும் அசோகரின் கல்வெட்டுகளைப் பார்வையிட்டோம்.

பின்னர் காலைச் சிற்றுண்டி அருந்திய பின்னர் கொனார்க் நோக்கிப் புறப்பட்டோம். கொனார்க் வந்தடையும்போது சுமார் பன்னிரண்டரை மணி ஆகிவிட்டது. அந்த நேரத்திலும் கொனார்க் கோயிலைப் பார்த்துவிட்டு, ஆளுக்கு ஒரு இளநீர் பருகிய பின்னர் பூரி நோக்கிப் பயணமானோம். பூரி வரும்போது மூன்று மணி ஆகிவிட்டது. நேரடியாக ஜெகன்னாதர் கோவிலுக்குச் சென்றுவிட்டு பின்னர் கடற்கரைக்குச் சென்றோம்.

          பூரி ஜெகன்னாதர் கோயிலுக்குச் செல்லுபோது நாங்கள் மிகவும் சோர்வாக இருந்தோம். கோயிலுக்குச் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் நாங்கள் வந்த கார் நின்றுவிட்டது. அங்கிருந்து கோயிலுக்கு நடந்து செல்ல வேண்டும் என்று சொன்னார்கள். நடக்க முடியாதவர்கள் செல்ல கோயிலுக்குச் சொந்தமான ஒரு பேட்டரி கார் இருந்தது. அந்த நேரத்தில் கூட்டம் குறைவாக இருந்ததால் விரைவாகப் பார்த்துவிட்டு வந்துவிட்டோம்.

          ஜெகன்னாதர் கோயில் என்பது விஷ்ணுவின் வடிவமான ஜகன்னாதர்-ஸ்ரீ கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முக்கியமான இந்துக் கோயில். அவந்தியின் மன்னன் இந்திரத்யும்னன் பூரியில் ஜெகநாதரின் பிரதான கோயிலைக் கட்டினான். தற்போதைய கோயில் பத்தாம் நூற்றாண்டில் மீண்டும் கட்டப்பட்டது. கிழக்கு கங்க வம்சத்தின் முதல் அரசரான அனந்தவர்மன் சோடகங்காவால் கோயில் கட்டுமானம் தொடங்கப்பட்டது. கோயிலைப் பற்றி பல வதந்திகள் பரப்பப்படுகின்றன ஆனால் அதற்கு உறுதியான ஆதாரம் இல்லை. இக்கோயில் வைஷ்ணவ பாரம்பரியத்தின் 108 திவ்ய க்ஷேத்திரங்களில் ஒன்றாகும்.

          பூரி கோயில் அதன் வருடாந்திர ரத யாத்திரை அல்லது தேர் திருவிழாவிற்கு பிரபலமானது, இதில் மூன்று முக்கிய தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்ட கோயில் ரதங்களில் இழுக்கப்படுகின்றன. பில் சவர் பழங்குடி பூசாரிகள் மற்றும் ஜகந்நாதத்தில் உள்ள பிற சமூகங்களின் பூசாரிகளால் வழிபாடு செய்யப்படுகிறது. கோவில். பெரும்பாலான இந்துக் கோயில்களில் காணப்படும் கல் மற்றும் உலோகச் சிலைகளைப் போலல்லாமல், ஜகன்னாதரின் சிலை  மரத்தால் ஆனது மற்றும் ஒவ்வொரு பன்னிரெண்டு அல்லது 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை இது மீண்டும் செய்யப்படுகிறது.

          இந்த கோவில் அனைத்து இந்துக்களுக்கும் குறிப்பாக வைணவ மரபுகளில் புனிதமானது. இராமானுஜாச்சாரியார், மத்வாச்சாரியார், நிம்பர்காச்சாரியார், வல்லபாச்சாரியார் மற்றும் இராமானந்தா போன்ற பல பெரிய வைஷ்ணவத் துறவிகள் கோயிலுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.  இராமானுஜர் கோயிலுக்கு அருகில் எமர் மடத்தையும், ஆதி சங்கராச்சாரியார் நான்கு சங்கர மடங்களில் ஒன்றான கோவர்தன் மடத்தையும் நிறுவினார்.

          ஜகன்னாதர், பலதேவர் மற்றும் சுபத்ரா ஆகிய மூன்று தெய்வங்களும் கோயிலில் வழிபடப்படுகின்றன. கோயிலின் உள் கருவறையில் சுதர்சன சக்ரா, மதன்மோகன், ஸ்ரீதேவி மற்றும் விஸ்வதாத்ரி ஆகிய தெய்வங்களுடன், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் இந்தத் தெய்வங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. புனிதமான வேம்பு மரக்கட்டைகளால் செதுக்கப்பட்ட இத்தெய்வங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

கட்டமைப்பு

          பிரமாண்டமான கோயில் வளாகம் 4,00,000 சதுர அடி  பரப்பளவைக் கொண்டுள்ளது. மேலும் இது உயரமான கோட்டைச் சுவரால் சூழப்பட்டுள்ளது. இந்த 20 அடி  உயரமுள்ள சுவர் மேகநாதா பச்சேரி என்று அழைக்கப்படுகிறது. குர்ம பேதா என்று அழைக்கப்படும் மற்றொரு மதில் பிரதான கோயிலைச் சுற்றி உள்ளது. இது குறைந்தது 120 கோவில்களைக் கொண்டுள்ளது. கோயிலில் நான்கு தனித்தனி பிரிவு கட்டமைப்புகள் உள்ளன, அவையாவன: (1) தேயுலா, விமானம் அல்லது கர்ப க்ரஹம். ரத்னபீடத்தில் (முத்து சிம்மாசனம்) வீற்றிருக்கின்ற மூன்று தெய்வங்கள். (2) முகஷாலா எனப்படும் முன் தாழ்வாரம், (3) நாத மந்திர் எனப்படும் நாதமண்டபம், (4) போக மண்டபம் எனப்படும் பிரசாத மண்டபம்.

பூரி ஜெகநாதர் கோவில் அதிசயங்கள்

          ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு அதிசயம் மற்றும் மர்மங்கள்  அடங்கி இருக்கும். அந்த வகையில் பூரி ஆலயத்தில் ஒரு தனி சிறப்பு இருக்கிறது.

 கருவறை விக்ரக மர்மம்

          உலகிலேயே மூலவரின் சிலை மரத்தாலான ஒரே கோயில் இதுதான் இந்த ஆலயத்தில் ஜெகநாதர் (Jagannath), பலதேவர், சுபத்திரா தேவி (கிருஷ்ணர், பலராமர் மற்றும் சுபத்திரை) ஆகியோர் ஒரே கருவறையில் இருந்து அருள் பாலிக்கின்றனர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூலவரின் சிலை உரிய சடங்குகளுடன் அதே மரத்தினால் மறு உருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

முழுமையடையா கடவுள் சிலைகள்

          இக்கோவிலின் மூலவர் சிலைகள் முகம்  மற்றும் கைகள் மட்டுமே காணும் வகையில் முழுமையடையாமல் இருக்கின்றன.

எதிராக பறக்கும் கொடி

          இந்தக் கோவில் கோபுரத்தில் அமைந்துள்ள சுதர்சன சக்கரம் நகரின் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் நம்மை பார்ப்பது போலவே காட்சியளிக்கும். அதேபோல் அந்த சக்கரத்தின் மேலே ஒரு கொடி பறந்து கொண்டு இருக்கும் இது சாதாரண கொடி அல்ல ஏனென்றால் இந்த கொடியானது காற்றில் எந்த பக்கம் வீசுகிறதோ அதற்கு எதிர் திசையில் பறக்கும்

          பொதுவாக காலையில் இருந்து மாலை வரையிலான நேரங்களில் காற்று கடலிலிருந்து நிலத்தை நோக்கியும் மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் ஆனால் பூரியில் இதற்கு நேர் எதிரே நடக்கும்

கோபுரத்தின் நிழல்

          இந்த கோவில் கோபுரத்தின் நிழல் ஒருபோதும் கீழே விழுவதில்லை சூரியன் சுட்டெரித்தாலும்  கோபுரத்தின் நிழலை பார்க்க முடியாது. இந்த கோவிலின் மேல் விமானங்களோ அல்லது பறவைகள் பறப்பதில்லை.

சமைக்கும் உணவின் அதிசயம்

          இந்த கோவிலில் சமைக்கப்படும் பிரசாதத்தின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாக இருக்கும் ஆனால் பக்தர்களின் எண்ணிக்கை கூடினாலும் குறைந்தாலும் தயாராகும் பிரசாதம் ஒருபோதும் பக்தர்களுக்கு பற்றாமல் போனதில்லை அதுபோல மீதாமும் ஆவதில்லை.

          மடப்பள்ளியில் இன்றுவரை விரகு அடுப்பு வைத்து மண்பானைகளை கொண்டுதான் சமைக்கிறார்கள் இந்த மண் பானைகளை ஒன்றின் மேல் ஒன்றாக ஏழு அடுக்குகள் வைத்து சமையல் செய்யப்படுகிறது. அப்படி சமைக்கும் போது அடியில்லுள்ள பானையின் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்துவிடும் அதிசயம் நடக்கிறது .

          கடற்கரை ஒட்டி ஜெகன்நாதர் இருந்தாலும் சிங்க வாசலின் முதல் படியில் கோவிலின் உட்புறமாக காலெடுத்துவைத்து உள்நுழையும் போது கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்கு கேட்காது. ஆனால் அதே சிங்கத்துவாராவின்  முதல் படியில் கோவிலின் வெளிப் புறமாக நுழையும் பொழுது கடலிலிருந்து வரும் சப்தம் நமக்கு கேட்கும் இதையும் மாலை நேரங்களில் தெளிவாக உணரமுடியும்.

          அவசரப்படாமல் கோவிலைச் சுற்றிப் பார்க்க குறைந்தது மூன்று மணி நேரமாவது ஆகும். ஆயினும் மக்கள் கூட்டம், பாதுகாவலர் கெடுபிடி, நமக்குள்ள நேரம் ஆகியவற்றால் நம்மால் மூல்வர்களை மட்டுமே பார்க்க இயலும்.

          கோயிலைச் சுற்றிப் பார்த்த பின்னர், நாங்கள் பூரியின் கடற்கரைக்குச் சென்றோம். மெரினா கடற்கரையைப் பார்த்தவர்களுக்கு எந்த ஒரு கடற்கரையும் அழகாகத் தெரியாது. பின்னர் ஒரு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கினோம். இரவும் நல்ல உணவு சாப்பிட்டோம். அடுத்த நாள் சில்கா ஏரிக்குப் போவதாக திட்டமிட்டோம்.

ஆவுடையார்கோயில் மார்கழி திருவாதிரை விழா; மாணிக்கவாசகர் வீதிஉலா!

avudaiyarkoil thiruvembavai vizha - 2026
#image_title

ஆவுடையார்கோயில்: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை முதல்நாள் திருவிழாவில் மாணிக்கவாசகர் வீதி உலாவில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆவுடையார்கோயிலில் உலக பிரசித்தி பெற்ற ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது இக்கோயில் பாண்டிய மன்னரிடம் முதலமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயிலாகும் திருவாசகம் பிறந்த திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழா நடந்து வருகிறது

முதல்நாள் விழாவை முன்னிட்டு திருவாவடுதுறை 24வது குருமகாசன்னிதானம் அம்பலவாண தேசிகபரமாச்சாரிய சுவாமிகள் அருள் ஆணைப்படி திருவாவடுதுறை கட்டளை தம்பிரான் வேலப்பதேசிகர் முன்னிலையில் கோயிலில் உள்ள ஆத்மநாதர் யோகாம்பிகா உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்த நிலையில் மாணிக்கவாசகருக்கு சிறப்பு தீப ஆராதனை செய்து மேளதாளம் முழங்க வீதி உலா நடந்தது.வீதி உலாவில் பக்தர்கள் வீடுதோறும் அர்ச்சனை செய்து வழிபட்டனர்

வான வேடிக்கைகளுடன் மாணிக்கவாசகர் வெள்ளிசிவிகை வாகனத்தில் அரிமர்த்தனபாண்டியனாக காட்சி கொடுத்தார்.விழா மண்டகப்படி நெல்வேலி நவக்குடி பிள்ளைமார் வகையறா மற்றும் திருக்கோயில் சார்பில் நடந்தது.

அபிஷேக அரச்சனைகளை ஆத்மநாதருக்கு நம்பியார்களும் மாணிக்கவாசகருக்கு சிவாச்சாரியார்களும் செய்தனர்.வேதமந்திரங்கள் வேதபாராயணம் அத்தியானபட்டர் முன்னிலையில் நடந்தது.விழா ஏற்பாடுகளை தென்டலமேற்பார்வையாளர் முத்துகிருஷ்ணன், கண்காணிப்பாளர் சுப்ரமணியன் மணியம் ராமன் ஆகியோர் செய்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆவுடையார்கோயில் இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி செய்தார்.விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வைகைக் கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு!

school students going in rain - 2026
#image_title

மதுரை: தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையயில், வைகை அணையில் இருந்து பத்தாயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் விடுக்கப்பட்ட நிலையில் சோழவந்தான் பகுதிகளில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு அந்தந்த பகுதி ஊராட்சியின் சார்பாக ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சோழவந்தான் அருகே உள்ள முள்ளி பள்ளம் ஊராட்சியில், ஊராட்சி சார்பாக வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது .

அதில், வைகை அணையில் தண்ணீர் அதிகமாக திறந்து விடப்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும், ஆற்றில் குளிக்கவும் மற்ற காரணங்களுக்காக இறங்க வேண்டாம் எனவும் கால்நடைகளை ஆற்றின் கரையோரங்களில் அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் படியும் ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

மதுரை கோரிப்பாளையம் வைகை ஆற்றுப் பகுதிகளில் வைகை நதியில் நீர் அதிகளவில் பெருக்கெடுத்து செல்வதால், போலீஸார் தரைப்பாலம் பகுதியில் நடந்து செல்ல வேண்டாம் எனவும், ஆற்றுக்குள் குளிக்க இறங்க வேண்டாம் என எச்சரிக்கின்றனர்.

சோழவந்தானில் மழையில் நனைந்தவாறு பள்ளி சென்ற மாணவிகள்!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம்,
சோழவந்தான் பகுதியில், தொடர் மழை காரணமாக மழையில் நனைந்தும் குடை பிடித்தும் பள்ளி சென்ற மாணவிகள் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களிலும் பள்ளிக்கு வந்தனர்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் கன மழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவு முதல் மதுரையின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தவண்ணம் உள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி பகுதிகளிலும் நேற்று இரவு முதல் தற்போது வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுத்த நிலையில், மதுரை மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கவில்லை இதன் காரணமாக இன்று காலை முதல் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மழையில் நனைந்த படியும் குடை பிடித்த படியம் பள்ளிக்கு சென்றனர்.

மேலும், தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால், ஒரு சில இடங்களில் ஆட்டோ களிலும் இருசக்கர வாகனங்களில் மாணவ மாணவிகளை அவர்களின் பெற்றோர்கள்பள்ளிக்கு அழைத்து வந்து விட்டுச் சென்றனர் பல்வேறு சங்கங்கள் மதுரை மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மழையில் நனைந்தவாறு சென்றனர்.

மதுரை நகரில் சிம்மக்கல்,கோரிப்பாளையம், புதூர், அழகர்கோவில், திருப்பாலை, அண்ணாநகர், கருப்பாயூரணி, வண்டியூர், யாகப்ப நகர் உள்ளிட்ட பகுதிகளிலிலும், காலை முதலே மழை தொடர்ந்து பெயர்ந்து கொண்டிருந்தது.

சேத்தூர் அருகே சாலை துண்டிப்பு; சபரிமலை பயணிகள் கவனத்துக்கு!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் – செங்கோட்டை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சேத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெயத பலத்த மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணை மற்றும் குளங்களில் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ள நீர் அதிகரித்து சாலையில் செல்வதால், வாகனங்கள் சாலையைக் கடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மழை ஓயும் வரை ராஜபாளையம் – சேத்தூர் வழி சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் செங்கோட்டை கொல்லம் வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் இந்த வழியைத் தவிர்ப்பது நல்லது.

ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் மதுரையில் இருந்து வரும் வழியில் ராஜபாளையம் – சங்கரன்கோவில் வழியாக செல்லலாம். தென்காசியில் இருந்து வரும் வாகனங்கள் புளியங்குடி – சங்கரன்கோவில் வழியாக ராஜபாளையம், மதுரை செல்லலாம்.

இதுபோல் தேனி மாவட்டத்தில் இருந்து குமுளி வழியாக சபரிமலை செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்ததின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த வழியாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் சாலையில் வாகனங்கள் செல்ல முடியுமா என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, குமுளி கம்பம் வண்டிப்பெரியார் வழியாக சபரிமலைக்குச் செல்ல வேண்டும்.

இந்த நிலையில் இன்றும் தென்காசி – நெல்லை – குமரி – தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மீண்டும் 24 மணி நேரத்திற்கு சிகப்பு வண்ண எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்து உள்ளது. எனவே இந்தப் பகுதிகளில் வாகனங்களில் செல்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

கடும் சேதமடைந்த திருச்செந்தூர் ரயில் வழித்தடம்!

nellai thiruchendur rail track - 2026
#image_title

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முதல் பெய்து வரும் கனமழையால் பெரும் பாதிப்பு உள்ளான நிலையில், திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில் வழித்தடம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

திருநெல்வேலி – திருச்செந்தூர் வழித்தடத்தில் ஸ்ரீவைகுண்டம் – செய்துங்கநல்லூர் இடையே தண்டவாளத்தில் அடிப்பகுதி முழுவதும் நீரில் அடிச்சென்று விட்டது. இந்த வழித்தடத்தில் பெரும்பாலான பகுதிகளில் மின்சார ரயில்வழித்தடம் பெரும் பாதிப்பு உள்ளாகியுள்ளது.

மின் எலக்ட்ரிக் போல் வயர்கள் பல இடங்களில் அறுந்து விழுந்து உள்ளது. இதனால் திருச்செந்தூர் – திருநெல்வேலி ரயில் வழித்தடத்தில் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுபோல் திருநெல்வேலி – தென்காசி – செங்கோட்டை ரயில் வழித்தடத்திலும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே தாமிரபரணி ஆற்றில் அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், திருநெல்வேலி நகரில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் தண்டவாளங்கள் அனைத்தும் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. பழைய பேருந்து நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பிற்பகுதியில் உள்ள பிரதான ஸ்வீட் ஸ்டால் ஹோட்டல்களில் தண்ணீர் புகுந்துள்ளது.

பஸ் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு பெய்த மழை தற்போது வரை இப்பகுதியில் தொடர்ந்து பெய்து வருவதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். குழந்தைகள் வயதானவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரவி வருவதால் சுகாதாரத்துறை முடுக்கி விடப் பட்டுள்ளது.

இந்த நிலையில் ஞாயிறு நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்ட அந்தியோதயா ரயில் திருச்சியிலும், மும்பை நாகர்கோவில் ரயில் திண்டுக்கல்லிலும், தாம்பரம் நாகர்கோவில் ரயில் கொடை ரோட்டிலும், பெங்களூர் நாகர்கோவில் மதுரையிலும், அனந்தபுரி ரயில் விருதுநகரிலும், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் கோவில்பட்டியிலும் நிறுத்தப்பட்டு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது‌.

18-12-2023 இன்று காலை 20683 தாம்பரம் செங்கோட்டை ரயில் விருதுநகரில் இருந்து ரயில் மாற்று பாதையில் சிவகாசி – ராஜபாளையம் – சங்கரன்கோவில் – தென்காசி வழியாக இயக்கப்பட்டது.

திருநெல்வேலி கன்னியாகுமரி தென்காசி தூத்துக்குடி மாவட்டத்தில் மிக அதிக அளவில் மழை பெய்தாலும் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் ஓர் ஆண்டு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் அதாவது நேற்று மட்டும் 96 செ.மீ பெய்துள்ளது.

வெள்ளக்காடான நெல்லை ஜங்ஷன்: ரயில்கள் ரத்து

nellai junction - 2026
#image_title

தென் தமிழகத்தில் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக, நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் நீரில் தத்தளிப்பதால், 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை – நெல்லை, நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் – குருவாயூர் விரைவு ரயில், திருச்சி – திருவனந்தபுரம் விரைவு ரயில், திருச்செந்தூர் – பாலக்காடு விரைவு ரயில், நெல்லை – ஜாம்நகர் விரைவு ரயில் சேவைகள் டிச.18 இன்று ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

திருநெல்வேலி – செங்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படும்
1) 06685 திருநெல்வேலி – செங்கோட்டை – காலை 7 மணி
2) 06682 செங்கோட்டை – திருநெல்வேலி – காலை – 6:40
3) 06681 திருநெல்வேலி – செங்கோட்டை – காலை – 9:45
4) 06684 செங்கோட்டை – திருநெல்வேலி – காலை 10:00
5) 06687 திருநெல்வேலி – செங்கோட்டை – மதியம் 1:50 ஆகிய ரயில்கள் அனைத்தும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் அதன் செயலர் கே.எச். கிருஷ்ணன் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு எழுதிய மின்னஞ்சல் கடிதத்தில், செங்கோட்டை – புனலூர் இடையிலான வழித் தடத்தில் 24 பெட்டிகளுடன் ரயில்கள் செல்ல ஏதுவாக பாதையை மேம்படுத்தக் கோரியுள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில், எங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். தயவுசெய்து சாதகமாக ஏற்பாடு செய்யுங்கள். கொல்லம்- புனலூர் – செங்கோட்டை அகலப்பாதை வழித்தடம் மேம்படுத்தப்பட வேண்டும்.

உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் சிறந்த பொறியாளர்களைக் கொண்ட இந்திய ரயில்வே 24 பெட்டிகள் கொண்ட பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களை கொங்கன் மற்றும் பிற மண்டல ரயில்வேயின் மலைப்பகுதிகள் வழியாக இயக்கும் போது, அழகான கொல்லம் – புனலூர் – செங்கோட்டை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை நோக்கி அதிக கவனம் செலுத்தவில்லை. மிகவும் தேவையான அபிவிருத்திகளுடன் கூடிய ரயில் பாதை இது.

திருவனந்தபுரம் – நாகர்கோவில் – திருநெல்வேலி – விருதுநகர் வழித்தடத்துக்கு மாற்று வழித்தடமாகத் திகழ்கிறது, திருவனந்தபுரம் – கொல்லம் – புனலூர் – செங்கோட்டை – தென்காசி – ராஜபாளையம் – சிவகாசி – விருதுநகர் அகலப்பாதை வழித்தடம். இது, இன்றுவரை 98% மின்மயமாக்கப்பட்ட பிரிவாக உள்ளது.

கொல்லம் – செங்கோட்டை – தென்காசி- ராஜபாளையம் – சிவகாசி – விருதுநகர் வழித்தடம் மற்றும் தென்காசி – திருநெல்வேலி வழித்தடம் ஆகியவற்றை இந்திய அரசு கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து அகலப்பாதை மற்றும் மின்மயமாக்கல் பணிகளை நடத்தி தடத்தை மாற்றியமைத்துள்ளது.

மார்ச் 2024க்குள் புனலூர் – செங்கோட்டை வழியும் மின்மயமாக்கப்படும். ஏற்கெனவே கொல்லத்தில் இருந்து புனலூர் வரையிலும், செங்கோட்டையிலிருந்து விருதுநகர் வரையிலும், தென்காசியிலிருந்து திருநெல்வேலி வரையிலும் மின்மயமாக்கல் முடிந்துவிட்டது.

திருநெல்வேலி பகுதியில் நேற்று 17.12.23 கனமழை பெய்து வருவதால், திருநெல்வேலி வழியாக கேரளா/ தமிழகம் செல்லும் பல ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரம் – கொல்லம் – புனலூர் – செங்கோட்டை வழித்தடத்தை 24 பெட்டிகள் கொண்ட பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களை ஆர்.டி.எஸ்.ஓ.வின் விரைவான பரிந்துரைகளுடன் இயக்குவதற்கு போதுமானதாக ரயில்வே அமைத்தால் அது அனைவருக்கும் குறிப்பிடத்தக்க சாதனையாக இருக்கும். இது போன்ற நெருக்கடியான நேரங்களில் மாற்று ரயில்பாதையாக இயக்க சாத்தியமானதாகவும் இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தென்காசி, சிவகாசி, பராக்கிரம பாண்டியன்… என காசி தமிழ்ச் சங்கமம்-2ல் பிரதமர் மோடியின் சிறப்புரை!

kasi tamil sangam 2 - 2026
#image_title

காசி தமிழ்ச் சங்கமம் -02ல் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய சிறப்புரை
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

மேடையில் வீற்றிருக்கும் உத்திர பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சரவையின் எனது சகாக்களே, காசி மற்றும் தமிழ்நாட்டின் சான்றோர்களே, தமிழ்நாட்டிலிருந்து காசிக்கு வந்திருக்கும் சகோதர சகோதரிகளே, பிற பெருமக்களே, பெரியோர்களே-தாய்மார்களே,

நீங்கள் அனைவரும் இத்தனை பெரிய எண்ணிக்கையில் பலநூறு கிலோமீட்டர் பயணித்து காசிக்கு வந்திருக்கிறீர்கள்.   காசியிலே, நீங்கள் அனைவரும் விருந்தினர்கள் என்பதையெல்லாம் தாண்டி, என்னுடைய குடும்ப உறவுகள் என்ற முறையிலே இங்கே வந்திருக்கிறீர்கள்.  உங்கள் அனைவரையும் நான் காசி தமிழ் சங்கமத்திலே வாய் நிறைய, மனம் நிறைய வரவேற்கிறேன்.


என் குடும்பச் சொந்தங்களே,

தமிழ்நாட்டிலிருந்து காசிக்கு வருவது என்பதன் பொருள், மகாதேவரின் ஒரு வீட்டிலிருந்து அவருடைய மற்றொரு வீட்டிற்கு வருவது என்பதாகும்.  

தமிழ்நாட்டிலிருந்து காசிக்கு வருவது என்பதன் பொருள், மீனாட்சி அம்மை கோலோச்சும் மதுரையம்பதிலிருந்து இங்கே விசாலாட்சி அம்மை கொலுவீற்றிருக்கும் காசிக்கு வருவதே ஆகும்.

ஆகையினாலே, தமிழ்நாடுவாசிகளுக்கும் காசிவாசிகளுக்கும் இடையே, இதயத்திலே பூரிக்கின்ற அன்பு, உறவு என்பது உள்ளபடியே அலாதியானது, அபூர்வமானது.

உங்களுக்கு புரியப்படும் சேவையில் காசிவாழ் மக்கள் எந்தக் குறையும் வைக்க மாட்டார்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு உண்டு.

நீங்கள் இங்கிருந்து விடை பெற்றுச் செல்லும் வேளையிலே, பாபா விஸ்வநாதருடைய நல்லாசிகளுடன் கூடவே, காசியின் சுகந்தத்தையும், காசியின் கலாச்சாரத்தையும், காசிதரும் கனிவான நினைவுகளையும் கண்டிப்பாகக் கொண்டு செல்வீர்கள்.


என் குடும்ப உறவுகளே,

இன்று இங்கே கன்னியாகுமரி-வாராணசி தமிழ் சங்கமம் ரயிலுக்குப் பச்சைக் கொடி காட்டப்பட்டுத் தொடங்கப்பட்டு இருக்கிறது.

மேலும் திருக்குறள், மணிமேகலை மற்றும் பல தமிழ் நூல்கள், பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு, இவற்றை அர்ப்பணிக்கும் பெரும்பேறும் கிடைத்திருக்கிறது.

காசியிலே மாணவராகக் கல்வி பயின்ற மகாகவி சுப்பிரமணிய பாரதி என்ன எழுதியிருக்கிறார்  தெரியுமா –

காசி நகர் புலவர் பேசும் உரைதாம், காஞ்சியில் கேட்பதற்கு ஓர் கருவி செய்வோம்.

அவர் கூற விரும்பியது என்ன தெரியுமா?  காசியிலே புரியப்படும் மந்திர உச்சாடனங்கள் எல்லாம், தமிழ்நாட்டின் காஞ்சி மாநகரிலே கேட்கப்படக்கூடிய ஒரு அமைப்பு, ஒரு கருவி ஏற்படுத்தப்படுமானால், எத்தனை அருமையாக இருக்கும் என்பதே அவருடைய தொலைநோக்காக இருந்தது.   மகாகவி சுப்பிரமணிய பாரதி அவர்களின் நல்விருப்பம் இன்று நிறைவேறி வருகிறது.  காசி தமிழ் சங்கமத்தின் குரல் தேசமெங்கிலும், உலமெங்கிலும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.

இந்த அருமையான ஏற்பாட்டினைச் செய்தமைக்காக, அனைத்துத் தொடர்புடைய அமைச்சகங்கள், உத்திர பிரதேச அரசு, தமிழ்நாட்டின் என்னுடைய அனைத்துத் தமிழ்ச் சொந்தங்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


என் குடும்ப உறுப்பினர்களே,

கடந்த ஆண்டு காசி தமிழ் சங்கமம் தொடங்கப்பட்ட பிறகிலிருந்தே, இந்த யாத்திரையோடு வெகு சில நாட்களிலேயே இலட்சக்கணக்கான பேர்கள் தங்களை இணைத்துக் கொண்டே வருகின்றார்கள்.

பல்வேறு மடங்களின் குருமார்கள், மாணவர்கள், அனைத்துக் கலைஞர்கள், இலக்கியகர்த்தாக்கள், கைவினைஞர்கள், பேராசிரியர்கள் என, பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்கள், பரஸ்பர உரையாடலிலும், ஊடாடலிலும் ஈடுபட, இந்தச் சங்கமம்  ஒரு வளமான தளமைத்துக் கொடுத்திருக்கிறது.

இந்தச் சங்கமத்தை ஒரு வெற்றிச் சங்கமமாக ஆக்க, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகமும், மதராஸ் இந்திய தொழில்நுட்பக் கழகமும் ஒருங்கிணைந்து செயல்பட்டிருக்கின்றன.

மதராஸ் இந்திய தொழில்நுட்பக் கழகமானது, பனாரஸின் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதத்தையும் இணையவழியிலே கற்பிக்கும் பொருட்டு, வித்யாசக்தி முன்னெடுப்பைத் தொடங்கியிருக்கிறது.

காசி-தமிழ்நாட்டிற்கு இடையேயான உறவுப்பாலம் என்பது எத்தனை உணர்வுபூர்வமானது, எத்தனை ஆக்கப்பூர்வமானதும் கூட என்பதற்கு ஓராண்டிற்கு உள்ளாக அரங்கேறிய அனைத்துச் செயல்பாடுகளும் சான்றாக விளங்குகின்றது.


அன்புநிறை என் குடும்பச் சொந்தங்களே,

காசி தமிழ் சங்கமம் என்பது இடையறாத, தடையிலாத ஒரு பிரவாகம், இது ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வினுக்குத் தொடர்ந்து வலுகூட்டி வருகிறது.

இந்த எண்ணத்தை அடியொற்றியே சில காலம் முன்பாக காசியிலே, கங்கா-புஷ்கராலு உற்சவம், அதாவது காசி-தெலுகு சங்கமும் நடந்தேறியது.

குஜராத்திலே நாம் சௌராஷ்டிர-தமிழ் சங்கமத்தை வெற்றிகரமாக அரங்கேற்றினோம்.

ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதை முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு, நமது ஆளுநர் மாளிகைகளும் கூட பெரிய அளவிலே முன்னெடுப்பைச் செய்திருக்கின்றன.

இப்போதெல்லாம் ஆளுநர் மாளிகைகளில் பிற மாநிலங்களின் நிறுவன நாள் கொண்டாடப்படுகிறது, பிற மாநில மக்களை அழைத்து, சிறப்பான ஏற்பாடுகளும், நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் இந்த உணர்வு, நாம் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நுழையும் வேளையிலே கூட பளிச்சிட்டது.   புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் புனிதமான செங்கோல் ஸ்தாபிக்கப்பட்டது.   புனிதமிகு ஆதீனங்களின் வழிகாட்டுலின் பேரில், இந்தச் செங்கோல் தான் 1947ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தின் அடையாளமாக அமைந்தது.

ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வின் இந்தப் பெருக்குத் தான், இன்று நமது தேசத்தின் ஆன்மாவிற்கு நீரூற்றி, உரம் சேர்த்து வருகின்றது.


என் பிரியமான குடும்ப பந்தங்களே,

பாரத நாட்டவர்களான நாம், ஒன்றானவர்கள் என்ற அதே வேளையில், பேச்சு வழக்குகள், மொழிகள், ஆடையணிகள், உணவுப் பழக்கங்கள், இருப்பிட அமைப்புகள் என, பன்முகத்தன்மை பல நிறைந்தவர்கள்.

பாரதத்தின் இந்தப் பன்முகத்தன்மை வாசம் செய்து வளம் கொழிக்கும் ஆன்மீகப் பெருஞ்சுடரைத் தான், நீரெல்லாம் கங்கை, நிலமெல்லாம் காசி என்று அழகு தமிழ் மொழியிலே போற்றிப் பேசுவார்கள்.

இது பாண்டிய அரசன் பராக்கிரம பாண்டியனின் வாக்காகும்.

அதாவது பாரத நாட்டின் அனைத்து நீரும் புனிதமான கங்கையே, பாரத நாட்டின் நிலப்பரப்பு அனைத்தும் பவித்திரமான காசிப்பெரும்பதியே.

வடக்கிலே கொடூரமான படையெடுப்பாளர்களால் நமது நம்பிக்கையின் மையங்கள் மீது, காசியின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட வேளையிலே, அரசன் பராக்கிரம பாண்டியன், தென்காசி மற்றும் சிவகாசியிலே இந்த வாக்கித்தை உரைத்து, காசினியில் காசியினை அழிக்க முடியாது என்ற உணர்வோடு ஆலயங்களை நிர்மாணம் செய்தான்.

உலகின் எந்த நாகரீகத்தை வேண்டுமானாலும் நீங்கள் பாருங்கள், பன்முகத்தன்மை மற்றும் ஆன்மீகம் – இவற்றின் இத்தனை இயல்பான, உன்னதமான வடிவத்தை உங்களால் வேறு எங்குமே காண இயலாது.

இப்போது தான் ஜி 20 உச்சிமாநாட்டின் போது கூட, பாரதத்தின் இந்தப் பன்முகத்தன்மையக் கண்டு உலகமே வியந்து போனது, மலைப்பில் ஆழ்ந்தது.


எனதருமை குடும்ப உறவுகளே,

உலகின் பிற நாடுகளில் தேசம் என்பது அரசியல்ரீதியான புரிதலோடு அணுகப்பட்டு வந்திருக்கிறது.  ஆனால் பாரதம், ஒரு தேசம் என்ற வகையிலே, ஆன்மீக நம்பிக்கையை ஆணிவேராகக் கொண்டு அமைந்து வந்துள்ளது.

ஆதி சங்கரர், இராமானுஜாச்சாரியார் போன்ற புனிதர்கள் தாம் பாரதத்தை ஒருங்கிணைத்தவர்கள்,  இவர்கள் எல்லாம் தங்கள் யாத்திரைகளின் போது பாரதத்தின் தேசிய விழிப்பினை, தேசிய ஆன்மாவை, தேசியத்தைத் தட்டி எழுப்பினார்கள்.

தமிழ்நாட்டின் ஆதீனத் துறவிகளும் கூட பல நூற்றாண்டுக்காலமாக, காசி போன்ற சிவபதிகளுக்குப் புனிதப் பயணங்களை மேற்கொண்டு வந்திருக்கின்றார்கள்.

திருப்பணந்தாள் ஆதீனத்தைக் காசியிலே குமரகுருபர ஸ்வாமிகள் நிறுவினார்.  இன்றும் கூட, திருப்பணந்தாள் ஆதீனகர்த்தர்கள் தங்களது பெயருக்கு முன்பாக, காசிவாசி என்று எழுதுகிறார்கள்.

இதைப் போலவே, தமிழின் ஆன்மீக நூல்களிலே, பாடல் பெற்ற தலம் எனும் போது, இவற்றை தரிசனம் செய்யும் மனிதர், திருக்கேதாரம் முதல் திருநெல்வேலி வரை யாத்திரை மேற்கொண்டவராகிறார்.

இந்த யாத்திரைகள்-புனிதப்பயணங்கள் வாயிலாக, பல்லாயிரம் ஆண்டுக்காலமாக, பாரதம் ஒரு தேசம் என்ற வகையில், நீடித்து, அமரத்துவம் பெற்றதாக விளங்கி வந்திருக்கிறது.


காசி தமிழ் சங்கமத்தின் வாயிலாக தங்களுடைய இந்தப் பண்டைய பாரம்பரியம் குறித்து தேசத்தின் இளைஞர்களிடத்திலே உற்சாகம் அதிகரித்திருக்கிறது என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

தமிழ்நாட்டிலிருந்து அதிக எண்ணிக்கையில் மக்கள், அங்கிருக்கும் இளைஞர்கள் காசிக்கு வருகிறார்கள்.  இங்கிருந்து பிரயாகை, அயோத்தி என பிற புனித இடங்களுக்கும் சென்று வருகிறார்கள்.

காசி தமிழ் சங்கமத்திற்கு வரும் மக்கள் அயோத்திக்குப் புனித யாத்திரை மேற்கொள்ளவும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மகாதேவரோடு சேர்த்து ராமேஸ்வரத்தை ஸ்தாபித்த பகவான் ஸ்ரீ இராமனையும் தரிசிக்கும் பெரும்பேறு அலாதியானது, அற்புதமானது.


என் நெஞ்சம்நிறை குடும்ப பந்தங்களே,

நம் நாட்டிலே ஒன்று கூறப்படுவதுண்டு –

जानें बिनु होइ परतीती। बिनु परतीति होइ नहि प्रीती॥

அதாவது, அறிந்து கொள்வதால் நம்பிக்கை அதிகரிக்கிறது, நம்பிக்கை அதிகரிப்பதால் அன்பு அதிகரிக்கிறது, என்பார்கள்.

அந்த வகையிலே, நாம் பரஸ்பரம் ஒருவருக்கொருவர், ஒருவர் மற்றவரது பாரம்பரியங்களைப் பற்றியும், நம்முடைய தொன்மையான மரபுகள் குறித்தும் தெரிந்து கொள்வது முக்கியமானது.

தென்னகத்திலும், வடநிலத்திலும், காசி மற்றும் மதுரை என்ற எடுத்துக்காட்டுகள் நம் கண் முன்னே இருக்கின்றன.   இரண்டுமே மகத்தான, மகோன்னதமான ஆலய நகரங்கள், இரண்டுமே மிகச் சிறப்பான புனிதயாத்திரைத் தீர்த்தங்கள்.   மதுரையம்பதி வைகையாற்றின் கரையினிலே அமைந்திருக்கிறது என்றால், காசியோ கங்கை அன்னையின் மடியினிலே.

நாம் இந்த மரபினை அறிந்து கொள்ளும் போது, நமது உறவுகளின் ஆழத்தை நம்மால் நன்றாக உணர முடியும்.


என் நெஞ்சம்நிறை குடும்பச் சொந்தங்களே,

எனக்கு நம்பிக்கை இருக்கிறது, காசி தமிழ் சங்கமத்தின் இந்தக் கூடல், இதே போன்று நமது மரபுகள்-பாரம்பரியங்களுக்கு வலுசேர்த்துக் கொண்டே இருக்கும், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வினுக்கு மேலும் வளம் சேர்த்துக் கொண்டே இருக்கும்.

உங்கள் அனைவரின் காசிவாசம் இன்பமானதாக இருக்கட்டும், இந்த நல்விருப்பத்தோடு நான் என் உரையை நிறைவு செய்கிறேன்.   உங்கள் அனைவருக்கும் பலப்பல நன்றிகள்.

முழுமையான வீடியோ: (டிடி தமிழ்)

10 மணி நேரத்தில் தூத்துக்குடியில் 40 செமீ., மழை! மீட்புப் பணிக்கு அதிகாரிகள் நியமிப்பு!

tn secretariat - 2026
#image_title

தூத்துக்குடி மாவட்டத்தில், 10 மணிநேரத்தில் 39.4 செ.மீ. மழை பதிவானது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை பெய்துவரும் நிலையில், அதிகபட்சமாக ஸ்ரீவைகுண்டத்தில் 39.4 செ.மீ மழையும் சாத்தான்குளத்தில் 30.6 செ.மீ மழையும் பதிவு. காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலான மழைப்பொழிவின் அளவை வெளியிட்டுள்ளது வானிலை மையம்.

அரையாண்டுத் தேர்வு – 4 மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்!

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகளை ஒத்திவைப்பது மற்றும் மறு தேதியில் நடத்துவது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் முடிவு செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

கனமழை காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு-அண்ணா பல்கலைக்கழகம். தொலைதூர கல்வி திட்டத்தின் கீழ் நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைப்பு.

ஏற்கெனவே நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் நாளை (டிச.18) நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.

விருதுநகர், ராமநாதபுரத்திலும் நாளை பள்ளி விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் நாளை (டிச.18) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதாலும், கனமழைக்கான முன்னெச்சரிக்கை இருப்பதாலும் அனைத்து வகை பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஒருநாள் திங்கட்கிழமை (18.12.2023) விடுமுறை அளித்து உத்தரவிடப்படுகிறது.

முன்னதாக, கன மழை காரணமாக தென்காசி தூத்துக்குடி கன்னியாகுமரி திருநெல்வேலி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.18) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

அதிகாரிகள் நியமிப்பு

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை, வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காகவும், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும் சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

  1. கன்னியாகுமரி – சு. நாகராஜன், நில நிர்வாக ஆணையர்.
  2. திருநெல்வேலி – இரா. செல்வராஜ், அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை
  3. தூத்துக்குடி – பா.ஜோதி நிர்மலா, அரசு செயலாளர், வணிகவரித் துறை
  4. தென்காசி – சுன்சோங்கம் ஜதக் சிரு, அரசு செயலாளர், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை

அவசரகால உதவி எண்கள்

மாநில அவசரகால செயல்பாட்டு மையம் 1070
வாட்ஸ் அப் எண். – 94458 69848
மாவட்ட அவரகால செயல்பாட்டு மையம் 1077

சென்னைல கோட்டை விட்ட மாதிரி நெல்லைலயும் இருந்துடாதீங்க!

1810330 annamalai - 2026

தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தினால், தகுந்த வகையில் போர்க்கால நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்து…

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டப் பகுதிகளில், சுமார் 200 மி.மீ. மழை இது வரை பொழிந்துள்ளது என்றும், அடுத்த இரண்டு நாட்களுக்கும் கடுமையான மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல், சென்னை மழை வெள்ளத்தின்போது பொதுமக்களைப் பாதிப்புக்குள்ளாக்கியது போல, செயலற்று இருக்காமல், உடனடியாக போர்க்கால நடவடிக்கைகளைத் தொடங்கி, தென்மாவட்டங்களில் பொதுமக்களுக்குத் தேவையான பொருள்களையும், பேரிடர் மீட்புக் குழுக்களையும் உடனடியாக அனுப்பி, மீட்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

தென்மாவட்ட பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன், கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நெல்லை, தென்காசி, குமரி உள்ளிட்ட தென் மாவட்ட @BJP4Tamilnadu சகோதரர்கள், மழை நின்ற பிறகு, பொதுமக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்றும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் – என்று, பாஜக., மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கோரியுள்ளார்.

தூத்துக்குடி செல்லும் பெங்களூர், சென்னை விமானங்கள் மதுரையில் இறக்கம்!

madurai airport - 2026

தூத்துக்குடியில் மோசமான வானிலை காரணமாக பெங்களூர் மற்றும் சென்னையில் இருந்து புறப்பட்ட இரண்டு இண்டிகோ விமானங்கள் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கியது:

கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய இடங்களில் கொட்டி தீர்க்கும் கனமழையினால் தூத்துக்குடியில் இறங்க வேண்டிய இரண்டு இண்டிகோ விமானங்கள் மதுரையில் தரை இறங்கியது.

இன்று காலை 10 மணி அளவில் சென்னையிலிருந்து இண்டிகோ விமானம் 66 பயணிகளுடன் புறப்பட்டது. சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, கன்னியாகுமரி நெல்லை தென்காசி தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மழை தொடர்ந்து பெய்து வருவதால், தூத்துக்குடி செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் 66 பயணிகளுடன் பகல் 12.30 மணியளவில் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கியது.

தொடர்ந்து, மோசமான வானிலை நீடித்து வருவதால் ஒரு சில பயணிகள் சாலை மார்க்கமாக தூத்துக்குடி செல்ல புறப்பட்டு சென்றனர். மீதமுள்ள பயணிகள் வானிலை சரியான பின் விமானம் இயக்கப்படும் என்று இண்டிகோ நிர்வாகம் அறிவித்துள்ளதால், ஒரு சில பயணிகள் காத்திருந்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, இரண்டாவதாக பெங்களூரிலிருந்து தூத்துக்குடி நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானமும் வானிலை மோசமாக உள்ளதால், மதுரையில் தரையிறங்கிஉள்ளது.

தூத்துக்குடியில் வானிலை சரியான உடன் இரண்டு விமானங்களும் மதுரையில் இருந்து தூத்துக்குடி புறப்படும் என, இண்டிகோ நிறுவன அதிகாரிகள் கூறினார்.

மதுரை மாவட்டத்தில், கடந்த இரு தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதுரை அருகே சோழவந்தான், சமயநல்லூர், திருமங்கலம், கள்ளிக்குடி, மேலூர், அழகர்கோவில், கருப்பாயூரணி, மதுரை நகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. காலை அதிக குளிர் இருந்தது!