Home Blog Page 263

370 நீக்கம் செல்லும்; மத்திய அரசின் முடிவுக்கு பெரும் வெற்றி: உறுதி செய்த உச்ச நீதிமன்றம்!

article 370 - 2026

ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. மேலும், 2024 செப்டம்பருக்குள் காஷ்மீரில் தேர்தல் நடத்தி, மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு, ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக தற்காலிகமாக உருவாக்கப்பட்டது. அதேபோல், அரசியல் சாசனத்தின் 35ஏ பிரிவு, நிரந்தர குடியுரிமை வழங்குவது தொடர்பாகவும் சில சிறப்பு உரிமைகள் சலுகைகள் அளிப்பதாகவும் இருந்தது. இந்த இரு சட்டப்பிரிவுகளையும் கடந்த ஆகஸ்ட் 5, 2019ல் மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் ஜம்மு – காஷ்மீர் மாநிலம், ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன.

இந்த நிலையில், ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், டிச.11 இன்று தீர்ப்பு வழங்குவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி தீர்ப்பை எதிர்பார்த்து, இன்று பரபரப்பு தொற்றிக் கொண்டது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழக்கு: 3 விதமான தீர்ப்புகள்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை எதிர்த்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.ஆர். கவாய், சூர்யா ஆகியோர் ஒரு தீர்ப்பை வழங்கினர். நீதிபதிகள் எஸ்.கே. கௌல், சஞ்சீவ் கன்னா வேறு தீர்ப்பை வழங்கினர். மூன்று தீர்ப்புகள் இருந்தாலும், ஒரே தீர்ப்பாகதான் கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதி கூறினார்.

1) ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்கும் போது, மத்திய அரசு எடுக்கும் முடிவை எதிர்த்து வழக்கு தொடர முடியாது

2) குடியரசு தலைவர் ஆட்சி இருக்கும்போது, மாற்ற முடியாத முடிவுகளை மத்திய அரசு எடுக்க முடியாது என்ற வாதங்கள் நிராகரிக்கப்படுகின்றன

3) குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்கும் போது மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு எடுக்கலாம் – என்றார் தலைமை நீதிபதி.

ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியின்போது மாநிலங்களில் மத்திய அரசால் அமல்படுத்தப்படும் ஒவ்வொரு முடிவையும் கேள்வி கேட்க முடியாது என்று தெளிவாகக் குறிப்பிட்டார் தலைமை நீதிபதி.

குடியரசுத் தலைவர் ஆட்சி

குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது செல்லுபடியாகுமா என்ற கேள்விக்கு தீர்ப்பளிக்க தேவையில்லை. குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கும்போது மாநிலங்கள் யூனியன் பிரதேச அதிகாரத்தில் வந்துவிடும். மாநிலத்தின் செயல்பாட்டுக்காக குடியரசுத் தலைவரின் அதிகாரத்தை பயன்படுத்துவதை மறு ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. சட்டப்பிரிவு 370 என்பது தற்காலிகமானதுதான் என்ற முடிவுக்கு வருகிறோம்.

அவசரச் சட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட ஆயுளையே கொண்டது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியது என்பது அரசியலமைப்பில் தெளிவாகிறது. ஜம்மு காஷ்மீர் மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்ட இறையாண்மையை கொண்டிருக்கவில்லை. இந்தியாவில் உள்ளடங்கியதுதான் காஷ்மீர்.

மத்திய அரசு எடுத்த நடவடிக்கையை ரத்து செய்ய இயலாது; அரசின் நடவடிக்கைகள் சட்டப்படி செல்லும். அதன்படி, ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து 370வது பிரிவை மத்திய அரசு நீக்கியது செல்லும். அடுத்த ஆண்டு 2024 – செப்டம்பருக்குள் காஷ்மீரில் தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தை அறிவுறுத்துகிறோம்.

தேர்தலை நடத்தி ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், லடாக்கை யூனியன் பிரதேசமாக உருவாக்கியது செல்லும் என்று தன் தீர்ப்பில் குறிப்பிட்டார்.

  • அரசியலமைப்புச் சட்டம் 370 வது பிரிவு நிரந்தரமானது அல்ல
  • 370 ஆவது சட்டப்பிரிவை நீக்க குடியரசு தலைவருக்கு அதிகாரம் உண்டு
  • ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்புச் சட்டம் 370 வது பிரிவு தற்காலிகமானது
  • ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றியது செல்லும்.
  • ஜம்மு காஷ்மீருக்கு விரைந்து மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கி, 2024 செப்டம்பருக்குள் அங்கு தேர்தல் நடத்த வேண்டும்
  • இந்தியாவுடன் இணைந்த பிறகு தனது முழுமையான இறையாண்மையை காஷ்மீர் இழந்து விடுகிறது
  • இந்திய அரசியலமைப்போடு இணைந்ததுதான் காஷ்மீர் அரசியலமைப்பு
  • ஜம்மு காஷ்மீருக்கு என்று தனி இறையாண்மையோ, ஆட்சி உரிமையோ இருக்க முடியாது
  • 370வது சட்டப்பிரிவை நீக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு.
  • அரசியலமைப்புச் சட்டம் 370வது பிரிவு நிரந்தரமானது அல்ல.
  • ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்புச் சட்டம் 370வது பிரிவு போர் சூழல் காரணமாக ஏற்படுத்தப்பட்ட தற்காலிக ஏற்பாடு

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து பல்வேறு தலைவர்களும் தங்கள் கருத்துகளை வெளியிட்டான்ர்.

பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீர் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. 2019 ஆகஸ்ட் 5ல் நாடாளுமன்றம் எடுத்த முடிவு அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தீர்ப்பானது நம்பிக்கையின் கலங்கரை விளக்கம். ஒன்றுபட்ட இந்தியாவை கட்டியெழுப்பும் உறுதிப்பாட்டின் சான்று. நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும் பிரகாசமான எதிர்காலத்திற்கான வாக்குறுதியாகவும் தீர்ப்பு திகழ்கிறது. வலிமையான ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற கூட்டு முயற்சிக்கு சாட்சியாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. 370 ஆவது சட்ட பிரிவால் வஞ்சிக்கப்பட்ட விளிம்பு நிலை சமூகத்திற்கு பயன்களை கொண்டு சேர்க்க உறுதி கொண்டுள்ளோம்.

மத்திய அமைச்சர் அமித்ஷா

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். பிரதமர் மோடி பிரிவு 370 ஐ ரத்து செய்து ஒரு தொலைநோக்கு முடிவை எடுத்தார். அதன் பின்னர் ஜம்மு காஷ்மீரில் அமைதியும் இயல்பு நிலையும் திரும்பியுள்ளது. 370 பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் ஏழை, எளியவர்களின் உரிமை மீட்கப்பட்டது. சுற்றுலா மற்றும் விவசாயத் துறைகளில் உள்ள செழிப்பு, ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு பகுதிகளிலும் வசிப்பவர்களின் வருமானத்தை உயர்த்தியுள்ளது. பிரிவு 370 ஐ ரத்து செய்யும் முடிவு முற்றிலும் அரசியலமைப்பிற்கு உட்பட்டது என்பதை நிரூபித்துள்ளது.

பாஜக., தேசிய தலைவர் நட்டா

சட்டப் பிரிவு 370 தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பாஜக., வரவேற்கிறது. ஜம்மு- காஷ்மீரை நாட்டின் முக்கிய சித்தாந்தத்தில் சேர்க்கும் வரலாற்றுப் பணியை பாஜக., செய்துள்ளது. இதற்காக பிரதமருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசிய மாநாடு கட்சி தலைவர் உமர் அப்துல்லா

தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. அதேநேரத்தில் மனம் தளரவில்லை. பாஜக.,வுக்கு இந்த நிலையை எட்ட பல ஆண்டுகள் ஆனது. நாங்களும் நீண்ட நாட்கள் போராட தயாராக இருக்கிறோம்.

புத்தூர் ஸ்ரீவைஷ்ணவ சுதர்ஸனம் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் நினைவாக!

puthur swami article - 2026
#image_title

1992. தென்காசி ஐ.சி.ஈஸ்வரன் பிள்ளை பள்ளியில் +2 படித்துவிட்டு, திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியில் கணிதம் பயில சேர்ந்திருந்தேன். தென்னூர் பழைய அக்ரஹாரத்தில் மாமா வசித்து வந்தார். அங்குள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் கைங்கர்யம் செய்து கொண்டு, சிம்கோ மீட்டரில் வேலையாயிருந்தார். அவருக்கு உதவியாக சந்நிதி கைங்கர்யமும் செய்து கொண்டு, கல்லூரிக்கு சைக்கிளில் சென்று வந்தேன். விடுமுறை, விசேஷ நாட்களுக்கு என அடிக்கடி, செங்கோட்டைக்கு பெற்றோருடன் இருக்க வந்து விடுவேன். 

செங்கோட்டையில் எங்கள் தெருவில் கிருஷ்ணன் கோயிலை ஒட்டிய வீட்டில் இருந்தார் மாதவன் ஸ்வாமி. வங்கியில் பணி. அமைதி தவழும் முகம். நிறுத்தி நிதானமாக, பொறுமையுடன் பேசுவார். சிறிது கூட பதட்டமோ, கோபமோ அவர் முகத்தில் இதுவரையிலும் கண்டதில்லை. அவர் மனைவி கல்யாணிக்கா குற்றாலம் கல்லூரியில் ஆசிரியப் பணி. தெருவில் எங்கள் இருவர் குடும்பம் மட்டுமே வைணவக் குடும்பம். அடியேனுக்கு அப்போது சமாஸ்ரயனமும் ஆகி, கோயில் நித்யாநுசந்தானமும் பாடமாகியிருந்தது. இருபதைக் கடக்காத அந்த வயதில், பெருமாள், கிருஷ்ணன் கோயிலில் சாத்துமுறை ஒத்தை ஆளாய் கணீர் என சொல்லுவேன். அதனால் அடியேன் மீது மாதவன் ஸ்வாமிக்கு கரிசனமும் ஈர்ப்பும் அதிகமிருந்தது. 

ஊருக்கு வந்திருந்த ஒரு நாள், ஒரு பட்டியலைக்  கொடுத்தார். “நீ காலேஜ் போகும் போது, புத்தூர் அக்ரஹாரத்துக்குப் போ. இந்தப் புத்தகங்களை வாங்கிக் கொள். அடுத்த முறை ஊருக்கு வரும்போது கொண்டு வா” என்றார். அவருக்காக, முதல் முறை புத்தூர் அக்ரஹாரத்துக்குச் சென்றேன். கொடுத்த முகவரியில் ‘வைஷ்ணவ சுதர்ஸனம்’ அச்சுக் கூடம் இருந்தது. பட்டியலைக்  கொடுத்தேன். அந்தப் புத்தகங்களை எடுத்துவரச் சென்ற கால இடைவெளியில், அச்சுக்கூடத்தை முழுதும் சுற்றிப் பார்த்தேன். கட் செய்த பேப்பர்கள் ஒவ்வொரு பாரம்களாக அடுக்கப் பட்டிருக்க, சிலர் ஒவ்வொரு மூலையில் அமர்ந்து கொண்டு, படுவேகமாக அடுக்கிக் கொண்டிருந்தார்கள். அச்சு இயந்திரத்தின் பணியையும், அச்சு மையின் வாசனையையும் முதல் முதலாக அனுபவித்தேன். ஆர்வம் பெருக்கெடுக்க, அங்கிருந்தவர்களிடம் விவரம் கேட்டேன். சலிப்புத் தட்டாமல், சொன்னார்கள். பாரம்களை அடுக்குவது, பின் செய்து பைண்ட் போடுவது வரை அந்த ஒரே நாளில் பார்த்துத் தெரிந்து கொண்டு, புத்தகங்களை வாங்கி வந்தேன்.

(இன்று நினைத்துப் பார்த்தால் சரியாக, முப்பது வருடங்கள் கடந்து விட்டன. பின்னாளில் பத்திரிகை உலகுக்கு வந்து, அச்சுக்கூடங்களுக்குச் செல்லும் போதும், விகடனின் பிரஸ்ஸிலும், தினமணி/எக்ஸ்பிரஸின் பிரிண்டிங் பிரஸ்ஸிலும் நின்று வேடிக்கை பார்க்கும் போதெல்லாம், அந்த ‘முதல் முதல்’ அனுபவமாய் ஸ்ரீவைஷ்ணவ சுதர்ஸனம் அச்சுக் கூடத்தில் நின்று சுவாசித்த அநுபவம் நினைவில் ஒட்டிக் கொள்ளும்!) 

அந்த புத்தகங்களுடன் புதுப்பிக்கப்பட்ட நூல் பட்டியலையும் வாங்கிக் கொண்டு, ஊருக்கு வந்தேன். மாதவன் ஸ்வாமி மீண்டும் ஒரு பட்டியல் கொடுத்தார். மறு முறை வாங்கி வர. இப்படியே நாலைந்து முறை புத்தூர் அக்ரஹாரத்துக்குப் போய் வந்ததில், அங்கிருந்தோருக்கு அடியேன் முகம் பரிச்சயமாகிவிட்டது. அப்படியே ஒரு நாள், “இந்த புத்தகத்தில் எழுதறாரே, இந்த ஸ்வாமி எங்கே இருக்கிறார்?  பார்க்க முடியுமா?” என்று விசாரித்தேன். இரு வீடு தள்ளி, கைகாட்டினார்கள். போனேன். மாடியில் இருந்தார். தண்டனிட்டேன். விவரம் சொன்னேன். தென்னூர் பழைய அக்ரஹாரத்தில் இருக்கிறேன் என்றதும், ஓரிருவரைப் பற்றி விசாரித்தார். கல்லூரிப் பருவம் என்பதால், கொஞ்சம் கலகலவென நகைச்சுவை தெறிக்கப் பேசுவேன் என்பதால் அச்சமின்றி உரையாடிக் கொண்டிருந்தேன். 

குறிப்பாக, ஆசார்யன் குறித்து விசாரித்தார். அடியேனது சிக்கல்  நிலையைச் சொன்னேன். சந்நிதி திருவாராதனக் கைங்கர்யம் செய்ய வேண்டிய தேவை இருந்ததால், என் மாமா, என் அப்பாவிடம் ஃபோனில் குடும்பத்து ஆசார்யன் குறித்து கேட்க, அவரும் ஸ்ரீரங்கம் அண்ணன் ஸ்வாமி என்று சொல்ல, அதை வைத்து எவரிடமோ விசாரித்து, ஸ்ரீரங்கம் கீழ உத்தர வீதி, கோயில் கந்தாடை அண்ணன் திருமாளிகைக்கு அழைத்துச் சென்று, ஒரு நன்னாளில் சமாஸ்ரயணம் (பஞ்ச சம்ஸ்காரம்) செய்து வைத்தார். ஆனால் பின்னாளில் குடும்ப ஆசார்யன் சிறுபுலியூர் சுத்தஸத்வம் திருவாழி அண்ணன் என்று தெரிந்தது. இப்போது என்ன செய்வது? அடியேன் எங்கே போய் ஆச்ரயிப்பது, இங்கா? அங்கா? 

இப்படி நகைச்சுவையாகக் கேட்டபோது ஸ்வாமி சொன்னார், “யாரிடம் முத்ராதிகளையும் உபதேசங்களையும் பெற்றுக் கொண்டாயோ, அங்கே தானே ஆச்ரயித்து ஆசார்யன் எனக் கொள்ள முடியும்!” என்றார். அப்போதே அடியேன் குடும்பத்தில் இருந்து தனித்து வந்துவிட்டதாய் ஓர் எண்ணம் எழுந்தது. 

இப்படி கல்லூரிக் காலம் முடிந்த 95 வரையிலும், பின் திருச்சி சேஷபுரத்தில் தங்கி ’மெடிக்கல் ரெப்’ பணி செய்த இரு வருட காலத்திலும் என அந்த நான்கு வருடங்களில் சில முறை ஸ்வாமியிடம் தண்டனிட்டு உரையாடும் பாக்கியம் அமைந்தது. சேமித்த பணத்தில், வார்த்தாமாலை, முமுக்ஷுப்படி வ்யாக்யானம், திருப்பல்லாண்டு, திருப்பாவை வியாக்யானங்கள், ஸுதர்ஸனர் பதில்கள் என சில புத்தகங்களை வாங்கிப் படித்தேன். பின் ஊர் திரும்பி, சென்னை சென்று, விஜயபாரதம், கலைமகள்/மஞ்சரி என இதழ்களில் பணி செய்துவிட்டு,  விகடன் பிரசுரத்தில் பொறுப்பாசிரியராக இருந்தபோது, சுமார் பத்து வருடங்கள் கழித்து 2007ல் மீண்டும் புத்தூர் அக்ரஹாரம் சென்றேன்.  

ஸ்வாமியை தண்டனிட்டேன். பழைய விருத்தாந்தங்கள், கலைமகள், விகடன் அனுபவங்கள் என்று பேசிக் கொண்டிருந்தேன். இரண்டு இதழ்களுக்கும் அவர் எழுதிய கண்டனங்கள், வைணவ உலகில் பிரசித்தம். குறிப்பாக காஞ்சி மடம் குறித்த பிரசார உத்திகள், திருமாலை இகழ்ச்சியாகக் காட்டும் கட்டுக் கதைகள், தல புராணங்கள் இவற்றுக்கு அவர் அளித்த பதில்களை எல்லாம் அவ்வப்போது படித்து வந்தேன். இன்று பலரும் சொல்வது போன்ற ‘சமரசமில்லாப் போராளி’ என்ற வாக்கியத்தின் ஒரே உண்மை உருவாக  அடியேன் கண்களில் புத்தூர் ஸ்வாமியே தெரிந்தார்!

அப்போது அடியேன் எழுதியிருந்த இரண்டு புத்தகங்களை அவரிடம் அளித்தேன். ஒன்று, ஸ்ரீ சுதர்ஸன வழிபாடு. அடுத்தது தமிழ் மறை தந்த பன்னிருவர். இரண்டையும் பார்த்துக் கொண்டே வந்தார். தயாரிப்பு நன்றாக இருக்கு. நல்ல அச்சு. வரைபடங்கள், எல்லாம் தேவைதான். வெகுஜனங்களுக்கு ஆர்வமாயிருக்கும். ஆனால் முக்யமான அர்த்த விசேஷத்தில் கோட்டை விட்டுவிட்டாய். இதுபோன்ற வழிபாடுகளை எல்லாம் ப்ரபன்னர்கள், முமுட்சுகள் என ஸாதனை செய்வோர் விலக்குதல் நலம். ஆழ்வார் பாசுரங்களில் சுஜாதா டைப் விளக்கங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. நீ ஸ்ரீவைஷ்ணவன். நம் சம்பிரதாயத்தை ஒட்டி எழுத வேண்டும். அதை பிறகு சொல்கிறேன்” என்றார்.  அப்போதே அவர் உடல் தளர்ந்து ஓய்வில் இருந்தார். மேற்கொண்டு தொந்தரவு செய்யக் கூடாதென விடைபெற்றுத் திரும்பினேன். 

பின்னர் வெளிவந்த இரு இதழ்களில் (பிப்.2008, மே 2008) நூலுக்கான மதிப்புரைகளை எழுதியிருந்தார். அவருக்கேயுரிய பாணியிலான விமர்சனம். எங்கே குட்ட வேண்டுமோ அங்கே குட்டி, என்ன அடியேனுக்குப் படிப்பிக்க வேண்டுமோ அதைத் தெளிய வைத்து தம்மை ஆசான் என்ற நிலையில் அழகாகப் பொருத்திக் கொண்டார். 

வைணவனாயிருந்தாலும், அடியேன் பள்ளிப் பிராயத்திலேயே சங்கத்தின் ஷாகாக்களுக்கு அதிகம் சென்றதனாலும், ராம ஜன்ம பூமி இயக்கத்தில் பெரிதும் ஈடுபாட்டுடன் கரைத்துக் கொண்டதாலும், சமரச மனப்பான்மை உள்ளளவில் ஊறியிருந்தது. ஆனால், அதனை சமய அர்த்த விசேஷங்களுக்குள் புகுத்திப் பார்க்கக் கூடாது என்ற பிரக்ஞை, ஸ்வாமியின் ‘மெல்லக் கடிதோச்சி’ மிளிர்ந்த சொற்களால் அடியேனுக்கு மீண்டு வந்தது. 

தற்போது ஒரு புத்தகம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அதற்காக மீண்டும் ஸ்வாமியின் எழுத்துகளைப் படித்தேன். சங்கரரும் வைஷ்ணவமும் என்ற அவர் தொகுப்பு, அவர் அளித்த அர்த்தபஞ்சகமாகிய ஐம்பொருள் அறிவு விளக்கம் இவற்றை மீண்டும் சம்ப்ரதாய நோக்கில் ஊன்றிப் படித்தேன்.  அடியேன் எழுதும் நூலில், ஓர் அத்யாயத்தில் ஸ்வாமியின் விளக்கத்தை பிழையில்லாமல்  குறைதலின்றி பயன்படுத்திக் கொண்டேன். 

இப்போது புத்தூர் ஸ்வாமியின் நூற்றண்டு விழா நிகழ்ச்சிகள் குறித்த செய்திகள், படங்களைப் பார்த்த போது, கலந்து கொள்ள ஆசையாகத்தான் இருக்கிறது. ஸ்வாமியின் கருத்துகளை கற்றறிந்தோர் வாயிலாகக் காதாரக் கேட்கும் பாக்கியம் மிகப் பெரிது. காலச் சூழல் அதனைக் கிட்டாது கடத்திக் கொண்டிருக்கிறது.   


 அடியேனின் இரு நூல்களுக்கும் ஸ்வாமி, சுதர்ஸனத்தில் எழுதிய விமர்சனத்தை அடிக்கடி படித்து ஸ்வாமியை நினைவில் கொள்வேன். அவை… 


தமிழ்மறை தந்த பன்னிருவர்
பக்கங்கள்: 192 விலை ரூ.55,
நூலாசிரியர்: செங்கோட்டை ஸ்ரீராம்
விகடன் பிரசுரம் 757, அண்ணா சாலை, சென்னை 2

விசதவாக் சிகாமணிகளான மணவாளமாமுனிகள் அருளிய உபதேச ரத்னமாலையை அனுசரித்து ஆழ்வார்கள் அவதாரம் ஏன் ஏற்பட்டது? பொய்கையாழ்வார் தொடக்கமாக திருமங்கையாழ்வார் ஈறாக ஆழ்வார்கள் வரலாறு, ஆழ்வார்கள் பாசுரங்களைத் தொகுத்துத் தந்த நாதமுனிகள் முதலிய பதினான்கு தலைப்புகளில் ஆழ்வார்களின் வரலாறும் அவர்கள் அருளிய பாடல்களின் பொருட்செறிவும் மிகவும் எளிய இனிய தமிழில் இந்நூலில் தரப்பட்டுள்ளது. ஆழ்வார்களின் திருவுருவப்படங்களைக் கொண்ட வண்ண அட்டைப்படம், ஒவ்வொரு ஆழ்வாரின் வரலாற்றை விளக்கும் அத்தியாயத்தில் அவரது திருவுருவப் படம் ஆகியவற்றோடு உயர்ந்த தாளில் சிறப்பாக அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

நூலாசிரியரின் முகவுரையில், “திருச்சியில் கல்லூரியில் படித்த காலத்தே என்னுள் எழுந்த ஐயங்களைத் தீர்க்கும் அருமருந்தாக விளங்கியவர் வைணவப் பெரியவர் புத்தூர் ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார்” (ஸுதர்ஸனர்) என்று எழுதியுள்ளதும் குறிக்கொள்ளத் தக்கது. விகடன் போன்ற பிரபல பதிப்பகத்தின் ஆதரவில் இந்த நூல் வெளிவந்துள்ளது ஆயிரக்கணக்கான வாசகர்கள் வைணவ ஆழ்வார்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை. நூலாசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியது.

இருப்பினும் ஒரு விஷயத்தை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. பக்கம் 25ல் பொய்கையாழ்வாரை “சைவ வைணவ ஒற்றுமை பேசியவர்” என்று குறிப்பிட்டுள்ளதும், அதற்குச் சான்றாக அவர் அருளிய முதல் திருவந்தாதியில் அரன் நாரணன் நாமம்(5) என்னும் பாட்டுக்கு ஒரே தெய்வத்துக்கு (அரன் நாரணன் ஆகியவை உனது) பெயர்கள், எருது கருடன் உமது வாகனங்கள், ஆகமமும் வேதமும் உன் பெருமை பறை சாற்றும் நூல்கள், கைலாய மலையும் திருப்பாற்கடலும் உன் இருப்பிடங்கள் என்று பொருள் உரைத்திருப்பது பொருந்தாது.

இப்பாசுரம் சிவனின் தாழ்ச்சியையும் அவனோடு ஒப்பிடும்போது ஸ்ரீமந் நாராயணனின் மேன்மையையும் விளக்குகிறது. அதாவது ஒருவனுக்கு அரன் என்று பெயர், அவனுக்கு ஞானமற்ற எருது வாஹனம், அவனைச் சொல்லும் நூல் வேத விருத்தமான அர்த்தங்களையும் சொல்லும் சைவாகமம். அவன் வசிக்கும் இடம் கடினத் தன்மையுடைய கைலாய மலை. அவனது தொழிலோ அழிப்பது. ஆயுதமோ வேல், அவனுடைய வடிவு எரிக்கும் நெருப்பு போன்றது என்று சிவனுடைய தாழ்ச்சியை வர்ணிக்கிறார்.

பொய்கையாழ்வார் அதுபோல் சிவனுள்ளிட்ட அனைத்துலகையும் படைத்த பரம்பொருளுக்குப் பெயர் நாராயணன், அவனுக்கு வாஹனம் வேதமயமான கருடன். அவனைப் பேசுவது அநாதியான வேதம். அவன் வசிக்கும் இடம் குளிர்ந்த கடல், அவனுக்குத் தொழிலோ அனைவரையும் ரட்சிப்பது, அவனுடைய ஆயுதம் அருளார் திருச்சக்கரம். அவனது வடிவு களைப்புகளை ஆற்றும் கார்மேகம் போன்றது.

இப்படிப்பட்ட இருவரில் அனைத்துலகையும் போலே சிவனும் எம்பெருமானுக்கு சரீரம் என்பதே இப்பாசுரத்தின் உண்மைப் பொருள். “வியவேன் திருமாலையல்லாது தெய்வம் என்றேத்தேன் வருமாறென் நம்மேல் வினை” (64) என்று பாடிய ஆழ்வார் மீது தற்காலத்தில் பிரசாரம் செய்யப்பட்டு வரும் சமரசவாதத்தை ஏறிடுவது தகாது.

நூலாசிரியர் ஆழ்வார் சமரசம் பேசுவதாக எடுத்துக்காட்டியிருக்கும் மற்ற பாடல்களுக்கும் எம்பெருமான் சரீரத்தையுடையவன் (சரீரி) ஏனைய உலகமனைத்தும் அவனுக்கு சரீரம் என்ற விசிஷ்டாத்வைத வேதாந்தக் கருத்துக்கு இணங்கப் பொருள் கொள்ள வேண்டும். அடுத்த பதிப்பில் இக்குறைகள் நீக்கப் பட்டு, ஆழ்வார் பாசுரங்களுக்கு முன்னோர் மொழிந்த முறையில் உண்மைப் பொருள் உரைப்பார் என்று நம்புகிறோம்.

– ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம் – பிப்ரவரி 2008


மகா சுதர்ஸன வழிபாடு:

உலகனைத்தையும் ஆக்கி அளித்து அழிக்கும் எம்பெருமானான ஸ்ரீமந்நாராயணனையே அடையும் பேறாகவும், அவனை அடைவதற்கு அவனையே உபாயமாகவும் எண்ணியிருக்கும் சரணாகதி நிஷ்டர்களுக்கு இம்மை மறுமை நலன்களை அவனே நல்குவான்.

இத்தகைய உறுதியான நிலையை எட்டாதவர்கள் தங்களது இம்மைப் பலன்களுக்காக அவனால் படைக்கப்பட்ட சிறு தெய்வங்களின் காலில் விழாது, அவனது கையார் திருச்சக்கரத்தை வழிபடும் பழக்கமும் பெருகியுள்ளது.

அத்தகையோருக்கு வழிகாட்டும் வண்ணம் வடிவார் சோதி வலத்துறையும் திருச்சக்கரத்தாழ்வாரின் மகிமை, அவரைப் பற்றிய புராண வரலாறுகள், தத்துவங்கள், ஸுதர்சனரைப் பிரதானமாகக் கொண்டு வழிபடும் ஸந்நிதிகள் அமையப் பெற்ற திருத்தலங்கள், ஆழ்வார்கள் தங்கள் பாசுரங்களில் ஸுதர்சனாழ்வானைப் பாடியுள்ள இடங்கள், ஸுதர்சன ஹோமம், பலன் தரும் ஸுதர்சன மந்திரங்கள், ஸுதர்சனரைப் பற்றிய துதி நூல்கள் ஆகியவை இந்நூலில் ஆசிரியரால் மிகவும் இனிய, எளிய தமிழில் விளக்கப்பட்டுள்ளன. இந்நூலைப் பெற்றுப் படித்து ஸுதர்சனரின் அருளுக்கு அன்பர்கள் இலக்காகலாம்.


நாளை நடக்க இருந்த அரையாண்டு தேர்வுகள் தள்ளிவைப்பு!

half yearly exams 2023 - 2026
#image_title

மழை வெள்ளத்தால் 4 மாவட்டங்களில் புத்தகங்கள் சேதமான நிலையில் மாணவர்கள் சிரமப்படுவார்கள் என்பதால், அனைத்து மாவட்டங்களிலும் அரையாண்டுத் தேர்வுகள் 2 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், நாளை மறுதினத்திற்குள் 4 மாவட்டங்களிலும் பாட புத்தகங்கள், நோட்டு புத்தகம் வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவு இட்டிருக்கிறார்.

இதை அடுத்து, மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக, நாளை தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகள் 2 நாட்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியானது. டிச.13ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. 1-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு புதிய அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் நாளை(டிச.,11) துவங்கவிருந்த அரையாண்டு தேர்வுகள் டிச.,13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நாளை துவங்க விருந்த அரையாண்டுத் தேர்வுகள் டிச.,13ம் தேதிக்கு தள்ளி வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அரையாண்டு தேர்வுக்கான புதிய கால அட்டவைணயை வெளியிடவும், 4 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளை தூய்மை செய்ய ரூ.1.90 கோடி ஒதுக்கீடு செய்தும், நாளை மறுநாளுக்குள் 4 மாவட்டங்களிலும் பாடப்புத்தகங்கள், பள்ளிச்சீருடைகள் ஆகியவற்றை வழங்கவும் உத்தரவிட்டு உள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இந்நிலையில் 6 முதல் 12ம் வகுப்புகளுக்கான புதிய அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. டிச.,13 முதல் 22ம் தேதி வரை தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது

சத்தீஸ்கர் முதல்வராக, விஷ்ணு தேவ் ஸாய் தேர்வு!

vishnu dev sai - 2026
#image_title

சத்தீஸ்கரின் அடுத்த முதல்வராக விஷ்ணு தேவ் ஸாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்; இதற்கான அறிவிப்பை பாஜக மேலிடம் வெளியிட்டுள்ளது!

சத்தீஸ்கரில், புதிய முதல்வராக பாஜக.,வைச் சேர்ந்த விஷ்ணு தேவ் ஸாய் தேர்வு செய்யப்பட்டார். இவர் முன்னாள் முதல்வர் ராமன் சிங்குக்கு நெருக்கமானவர்.

சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு நவ.7 மற்றும் 17ல், இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. இவை எண்ணப்பட்டு, கடந்த டிச.3ம் தேதி முடிவுகள் வெளியாகின. இதில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் 35 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வி அடைந்தது. பெரும்பான்மையைக் கடந்து 54 தொகுதிகளை வென்ற பாஜக., சத்தீஸ்கரில் ஆட்சி அமைக்க உள்ளது.

சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் சட்டசபைக்கு புதிதாக தேர்வாகியுள்ள பாஜக., – எம்எல்ஏ.,க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், மத்திய மேற்பார்வையாளர்களான மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, சர்பானந்த சோனவால், பாஜக., பொதுச்செயலர் துஷ்யந்த் குமார் கௌதம் ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் பாஜக., எம்எல்ஏ.,க்களிடம் தனித்தனியாகவும், கூட்டமாகவும் கேட்டறிந்தனர்.

இந்தக் கூட்டத்தில் புதிய முதல்வராக விஷ்ணு தேவ் ஸாய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மாநிலத்தில் இரண்டு துணை முதல்வர்களை நியமிக்க முடிவு செய்யப் பட்டது.

சத்தீஸ்கரில் புதிய முதல்வராகப் பொறுப்பேற்கும் விஷ்ணு தேவ் ஸாய் நடந்து முடிந்த தேர்தலில் குங்குரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் கடந்த ஆண்டு சத்தீஸ்கர் மாநில பாஜக., தலைவராக பதவி வகித்தார். பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்.

எஃகு, சுரங்கம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சராக பதவி வகித்தவர்.

கடந்த 1999, 2004, 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் ராய்கர் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 4 முறை எம்பி.,யாக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 1990 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளில் ஒருங்கிணைந்த மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள தப்காரா தொகுதியில் இருந்து தொடர்ந்து இரண்டு சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டார்.

அதிவேக பைக் ரேஸ் புள்ளிங்கோ; பதறும் அரசு பள்ளி மாணவிகள்!

vaigai dam water level - 2026
#image_title
  • அதிவேக பைக் ரேஸ் புள்ளிங்கோக்களால் பதறும் அலங்காநல்லூர் அரசு பள்ளி மாணவிகள்!
  • காவல்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியை சுற்றி சமூக விரோதிகள் அத்துமீறல் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. பள்ளி விட்டு வரும் மாணவிகளை அச்சுறுத்தும் விதமாகவும் தலைமுடியை பிடித்து இழப்பது, புத்தகப் பையை பிடுங்குவது போன்ற இடையூறான பாலியல் ரீதியாக சீண்டல்களைச் செய்து வருகிறார்களாம்.

பள்ளி விட்டு வெளியேறும் மாணவிகள் கூட்டத்திற்குள் அதிவேகமாகவும் பயங்கரமான ஒளி எழுப்பும் ஹாரன்கரில்
சத்தம் எழுப்பியவாறும், இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து கொண்டு வந்து துன்புறுத்துவதாக மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கண்காணிப்பு செய்து மாணவிகளை பாதுகாப்பாக அனுப்பி வைத்தாலும், அட்டகாச இளைஞர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இது குறித்த தகவல் காவல் நிலையத்தில் தெரிவித்து காவலர்கள் ரோந்து பணியில் உள்ள நேரத்தில் மட்டும் இது போன்ற அடாவடி சம்பவங்கள் தவிர்க்கப்படுகிறது .காவலர்கள் சென்றவுடன் பைக் ரேஸ் புல்லிங்கோக்களின் அத்துமீறல் தொடர்கதையாகி வருகிறது.

அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஊருக்கு ஒதுக்கப்புறமாகவும் மாணவிகள் நடந்து வரும் பாதையில் இருபுறமும் முல்லைப் பெரியாறு கால்வாய் அருகே சாலை அமைக்கப்பட்டுள்ளதால், எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாத ஒரு சூழ்நிலை உள்ளது. எனவே, பள்ளிக்கு வரும் சாலை பகுதிகளில் அதிவேக வாகன ஓட்டும் இளைஞர்களை கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுத்து அத்துமீறுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் .

பள்ளி வரும் பாதையில் காவல் தடுப்பு வேலி அமைத்து வாகன வேகத்தை கட்டுப்படுத்த தடைகள் ஏற்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அலங்காநல்லூர் காவல் நிலைய ஆய்வாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இது போன்ற அத்து மீறிய சம்பவங்களால் மாணவிகள் பலர் பள்ளிக்கு வருவது தவிர்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

நம்ம நாட்டு சுற்றுலா: கொனார்க் சூரியன் கோயில்

konark sun temple - 2026
#image_title

9. கொனார்க் சூரியன் கோயில்

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

தொஹிலி மலையில் இருந்து கொனார்க் சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. காரில் செல்வதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஆகும். கொனார்க் கோவிலில் இருந்து கடற்கரை சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. கொனார்க் கோயில் எப்போதும் வெளிநாட்டுப் பயணிகளால் நிரம்பி வழியும். நான் சென்றிருந்த  போதும் அப்படித்தான் கூட்டமாக இருந்தது. கோயில் வாசலில் சக்கர நாற்காலியும் அதைத் தள்ளுவதற்கு ஆட்களும் கிடைப்பார்கள்.

சூரிய வழிபாடு

நம் முன்னோர்கள் பண்டைக் காலத்தில் தெய்வமாக வழிபட்டார்கள். ஆதி சங்கரர் உருவாக்கிய ஷண்மதங்களில் ‘சௌரம்’ எனப்படும் சூரிய வழிபாட்டு மதமும் ஒன்று. மனுஸ்மிருதியில்

अग्नौ प्रास्ताहुतिः सम्यगादित्यं उपतिष्ठते ।
आदित्याज्जायते वृष्टिर्वृष्टेरन्नं ततः प्रजाः 3/76

அக்னோ ப்ரஸ்தாஹிதி: ஸம்யகாதித்யம் உபதிஷ்டதே
ஆதித்யாத் ஜாயதே விருஷ்டிர் அன்னம் தத: ப்ரஜா:
(மனுஸ்ம்ருதி, மூன்றாம் பாகம், 76ஆவது பாடல்)

என்று கூறப்பட்டிருக்கிறது. இதன் பொருள் என்னவெனில் – அக்னியில் சூரியனுக்கு ஆஹூதி தருகிறோம். இந்த ஆஹூதி சூரியனுக்குச் செல்கிறது. சூரியன் மழையைப் பொழிவிக்கிறான். அதனால் தானியங்கள் விளைகின்றன. இந்தத் தனியங்களால் மக்கள் வாழ்கிறார்கள். சுருக்கமாகச் சொல்வதானால் சூரியன் உலகை வாழ்விக்கிறான். சூரியனே இவ்வுலகைக் காக்கிறான்.

          கம்பர் தன்னுடைய இராமயணத்தில், பால காண்டத்தில், அரசியற்படலத்தில் ஓர் பாடலில் இக்கருத்தைக் குறிப்பிடுகிறார். பாடல் இதோ

குன்றென உயரிய குவவுத் தோளினான்.
வென்றிஅம் திகிரி. வெம் பருதியாம் என.
ஒன்றென உலகிடை உலாவி. மீமிசை
நின்று. நின்று. உயிர்தொறும் நெடிது காக்குமே.

பாடலின் பொருள் – மலைபோலும் வளர்ந்து ஓங்கிய திரண்ட தோள்கள் கொண்ட தயரதனுடைய வெற்றிமிக்க ஆணைச் சக்கரமானது வெம்மையுடைய சூரியனோ என்னும்படி மிக உயரமான வானிலே நின்றும் ஒன்றாகிய பரம்பொருளைப் போல உலகில் வாழும் சல, அசலங்களாகிய உயிர்கள் தோறும் உலாவி நின்று பெரிதும் காத்தல் தொழிலைச் செய்யும்.

          இதன் உட்பொருள் என்னவெனில் “சூரியனுடைய சக்தியே அசைகின்ற மற்றும் அசையாத உயிர்கள் இடத்தில் நின்று உலகைக் காக்கிறது. அதுபோல தசரதன் தன்னுடைய புஜபல பராக்கிரமத்தினால் அதாவது ஆற்றலினால் உலகைக் காக்கிறான்” என்பதாகும். இவ்வாறு சூரிய வழிபாடு மிகப் பழங்காலத்தில் இருந்தே இந்தியாவில் உள்ளது.

யுனஸ்கோ அங்கீகரித்த இடம்

          பலரையும் வியக்க வைத்த இந்த கொனார்க் சூரிய கோயிலை, 1984ஆம் ஆண்டு நடைபெற்ற 8ஆவது யுனெஸ்கோ மாநாட்டில் கலாசாரம், நாகரிகம், பாரம்பரியம், தனித்துவம் என்ற பட்டியலின் அடிப்படையில் யுனெஸ்கோவின் 1, 3 மற்றும் 4-வது விதியின் கீழ் உலக பாரம்பரிய இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் கொனார்க் சூரிய கோயில் சேர்க்கப்பட்டது.

வரலாறு

          13ஆம் நூற்றாண்டு காலம் அது. துருக்கி பழங்குடி மக்கள், ஹிந்துகுஷ் மலையைக் கடந்து இந்தியா வந்து, சிந்து – கங்கை நதிகளுக்கு இடைப்பட்ட நிலத்தில் தங்கள் ஆட்சியை ஓரளவு நிலைநிறுத்தி ஒரு நிலையான ஆட்சி புரிந்துக்கொண்டிருந்த காலம். மம்லுக் வம்சத்தைச் சேர்ந்த இல்துமிஷ்-ன் ஆட்சிக்குப் பிறகு, அவரது மகள் ரஸியா பேகம் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கப்பட, அவரது மகன்களுள் ஒருவரான ருகுன்-வுட்-டின் பெரோஸ் போன்ற சில திறனற்ற ஆட்சியாளர்கள் இருந்த காலம். 11ஆம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டு வரை இன்றைய ஒடிசா, வங்காளம், சத்தீஸ்கர், வட ஆந்திரா மாநிலங்களை உள்ளடக்கிய மகாநதி – கோதாவரி நதிகளுக்கிடையேயுள்ள நிலப்பகுதிகளைக் கீழைக் கங்கர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சி புரிந்துவந்தனர். இதிலுள்ள திரிகலிங்கர்கள் பிரிவைச் சேர்ந்தவர் முதலாம் நரசிம்ம தேவர். இவர், பீகார் மற்றும் வங்காளத்தை சுல்தானியர்களிடமிருந்து கைப்பற்றியதன் நினைவாக, ஒரு நினைவு கட்டடம் எழுப்ப நினைத்தார்.

          சூரிய பகவான் மேல் கொண்ட பக்தியினால், சூரிய கோயில் எழுப்ப முடிவு செய்தார். ஒடியா புராணக் கதையின்படி, கோயிலைக் கட்டும் பணிக்காக, சிறந்த கட்டிட நிபுணரான ‘பிஷு மஹாராணா‘வை நரசிம்ம தேவர் நியமித்தார். 12 ஏக்கர் நிலப்பரப்பில், சுமார் 1200 பணியாட்களோடு நடைபெற்ற கட்டுமான பணியானது சுமார் 12 ஆண்டுகள் நடைபெற்றது. நரசிம்ம தேவரின் கட்டளைப்படி 12 வருடங்களுக்குள் கோயிலைக் கட்டிமுடிக்க வேண்டும். ஆனால், கோயில் கட்டும் பணி, முடியும் நிலைக்கு வந்த பின்னரும், பணியாளர்களின் உடல் எடை காரணமாக கோயிலின் மேல் கலசத்தை வைக்க முடியவில்லை.

          கடைசி நாள் வந்துவிட்டதால், மறுநாள் காலைக்குள் பணியை முடிக்காவிடில், 1200 பேரையும் தூக்கிலிடுவதாக நரசிம்ம தேவர் உத்தரவிட்டார். கோயில் கட்டும் பணி தொடங்கியபோது, பிஷு மஹாராணாவுக்கு தர்மபாதர் என்ற குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்ததிலிருந்து 12 வருடங்களாக குழந்தையைப் பார்க்கவில்லை. 12 வருடங்களுக்குப் பிறகு தந்தையைப் பார்க்க வந்த மகன், 1200 பேரையும் மீட்க, கலசத்தை (கிரீடத்தை) கோயிலின் உச்சியில் வைத்து கட்டுமான பணியை நிறைவு செய்தான். அவர்களுக்கு பதிலாக ஒரு குழந்தை பணியை முடித்ததால், தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும், எனவே தர்மபாதரைக் கொல்லும்படி பிஷு மஹாராணாவை அனைவரும் கேட்டுக்கொண்டனர். இதற்கு அவர் கடுமையாக எதிர்த்தாலும், அவர்களின் சூழ்நிலையைப் புரிந்து கொண்ட தர்மபாதர், கலசம் வைக்கப்பட்ட இடத்திலிருந்து கடலில் குதித்து தன்னுயிரை நீத்து, தந்தையையும், பணியாளர்களின் உயிரையும் மீட்டார் என ஒடியா புராணக் கதையில் கூறப்படுகிறது.

          அதற்குப்பின், 1508இல் சுல்தான் சுலைமான் போர் தொடுத்து வந்தபோது முக்கிய கருவறையும் இதர இந்து கோயில்களும் சேதப்படுத்தப்பட்டது என்று சொல்லப்படுகிறது. 15ஆவது மற்றும் 17ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் பல முறை பல்வேறு படைகளால் இக்கோயில் சூறையாடப்பட்டதாக நூல்கள் கூறுகின்றன. இதையடுத்து, புயல், அரிப்பு காரணமாகவும், கலசத்தின் எடை அதிகமான காரணமாகவும் கட்டடம் சரிந்துள்ளது. புதர் மண்டிய நிலையிலிருந்த கோயில் 1,800களில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது மீட்டெடுக்கப்பட்டு, பாதுகாக்கத் தொடங்கினர். தற்போது, இந்திய அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

உள்நோக்கத்தோடு மத்திய அரசை விமர்சிப்பதா?

BJP Narayanan Thiruppathi - 2026
#image_title

உள்நோக்கத்தோடு மத்திய அரசை விமர்சிப்பதா?: பாஜக கேள்வி

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும் சேதங்களைச் சரிசெய்திட இடைக்கால நிவாரணமாக ரூ. 5060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்ததை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் நேற்று சென்னை வந்திருந்து பாதிப்புகளை பார்வையிட்ட நிலையில், முதற்கட்டமாக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.450 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

அத்துடன் சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூ.561.29 கோடி மத்திய அரசு விடுவித்துள்ளது. நாம் கேட்டது 5060 கோடி, ஆனால், மத்திய அரசு கொடுத்தது இவ்வளவு தானா என்றும், மத்திய அரசு, மாநில அரசை வஞ்சிக்கிறது என்றெல்லாம் எதிர்க்கட்சியினரும், சில அரசியல் வல்லுநர்களும்(?) வழக்கம் போல் தங்கள் விமர்சனத்தை முன் வைக்க துவங்கி விட்டனர்.

மாநில பேரிடர் மீட்பு நிதி, தேசிய பேரிடர் மீட்பு நிதி என்பது சுனாமிக்கு பிறகு 2005ல் தான் உருவாக்கப்பட்டது. இந்தியா முழுமைக்கும் இந்த நிதியானது முதலில் ரூபாய் 500 கோடியை கொண்டே துவங்கப்பட்டது. மாநில பேரிடர் மீட்பு நிதியில் மத்திய அரசின் பங்கு 75 விழுக்காடு. மீதி 25 விழுக்காடு மாநில அரசின் பங்கு. அனைத்து மாநிலங்களின் ஒத்திசைவோடு, ஆலோசனையோடு தான் மாநில பேரிடர் நிவாரண நிதி முடிவு செய்யப்படுகிறது. ஒரு வருடத்தில் செலவிடப்படாத நிதி மறுவருட கணக்கில் வைக்கப்படும். உடனடி நிவாரணத்தை தவிர்த்து வேறு எதற்கும் இந்த நிதியை பயன்படுத்தக்கூடாது என்பது விதி.

தேசிய பேரிடர் மேலாண்மை நிதி என்பது முழுமையாக மத்திய அரசு அளிக்கும் நிதி. பாஜக ஆட்சியில் தான் ரூபாய் 10,000 கோடியாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 15வது நிதி ஆணைய பரிந்துரைகளின் ஒதுக்கீட்டின் படி 2021-26 கால கட்டத்திற்கு ரூபாய் 68,463 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 80 விழுக்காடு (54770 கோடி, 5 வருடங்களுக்கு) தேசிய பேரிடர் மீட்பு நிதிக்கு ஒதுக்கப்படும்.

கடந்த 2021-22 நிதியாண்டில் ரூபாய்.6130 கோடியும், 2022-23ல் ரூபாய்.8000 கோடியும், நடப்பாண்டுக்கு ரூபாய் 8780 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒட்டு மொத்த இந்தியாவுக்குமே இந்த நிதியாண்டிற்கு ரூபாய் 8780 கோடி மட்டுமே ஒதுக்கீடு.

தேசிய மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதி என்றால் என்ன என்பது கூட தெரியாமால் சிலர் நீட்டி முழங்கி மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுகிறது என விமர்சிப்பது முறையல்ல. தேசிய, மாநில பேரிடர் நிவாரண நிதியானது, பாதிக்கப்பட்ட மக்களின் அவசர தேவைக்காக மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்பதும், உடனடி உதவி மற்றும் புனர்வாழ்வுக்காக மட்டுமே செலவிடப்பட வேண்டிய நிதி.

பயிர் இழப்பு, சொத்துக்கள் சேதம் போன்றவைகளுக்கு பொருந்தாது என்பது விதி. உதாரணத்திற்கு சாலைகள், கட்டுமானங்கள், கட்டமைப்புகளை மறு சீரமைத்தல் போன்றவைகளுக்கு பேரிடர் நிவாரண நிதியை செலவிட முடியாது. அதனடிப்படையில் தான் மாநில அரசுகள் இந்த நிதியிலிருந்து ஒதுக்கீட்டை கோர முடியும். செலவிட முடியும்.

கட்டமைப்புகள் உட்பட மற்ற சீரமைப்புகளுக்கான நிதியானது, அந்தந்த துறைகளின் நிதிநிலை மூலம் ஒதுக்கப்படும். உதாரணத்திற்கு, மின் துறை சார்ந்த செலவினங்கள் அந்த துறையின் ஆண்டுக்கான நிதி நிலை ஒதுக்கீட்டிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும். அதே போல் விவசாய துறையில் ஏற்படும் இழப்புகள், காப்பீடு தவிர்த்து மற்றவை வேளாண் துறையிலிருந்து ஒதுக்கப்படும்.

நிலை இவ்வாறிருக்க, மாநில.அரசுகள் மற்றும் எதிர்கட்சிகள் தொடர்ந்து தேசிய மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இடம்பெற முடியாத செலவினங்களை மத்திய அரசிடம் கேட்பது, அதன் பின் மத்திய அரசு வஞ்சித்து விட்டது என்று சொல்வது வாடிக்கையாகி விட்டது. சமீப காலங்களில் அரசியல் விமர்சகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிலர் கூட தெரியாமலோ அல்லது தெரிந்திருந்தும் உள்நோக்கத்தோடு மத்திய அரசை விமர்சிப்பது அல்லது குற்றம் சாட்டுவது அதிகரித்து வருகிறது.

மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் தேசிய பேரிடர் நிவாரண நிதி என்பது சட்டம். அதன் வரையறைக்குள் மட்டுமே பேரிடர் காலங்களில் மக்களின் அவசர உதவிக்காக ஏற்படுத்தப்பட்ட நிதியம் இது என்பதை உணரவேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் விதிகளை அனுசரித்தே நிதி ஒதுக்கப்படுகிறது.

தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பது உண்மை தான்.

ஆனால், அவை அனைத்தையும் உரிய துறைகளின் மூலம், காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் மாநில அரசு பெற்று தர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, இதில் அரசியல் கலப்பில்லாமல், ஏற்றுக்கொண்டுள்ள விதிகளின் படி இந்த நிதியிலிருந்து அளிக்கப்படவேண்டியவைகளை ‘தனித்து’ கோரி, மறுசீரமைப்பு, கட்டமைப்பு, இழப்பீடு கோரிக்கைகளை துறை ரீதியாக பெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய வகையில் வெளிப்படைத்தன்மையோடு மத்திய அரசை அணுக வேண்டியது முக்கியம்.

கடந்த 10 வருடங்களில் தான் மாநில அரசுகளுக்கு அதிக அளவிலான பேரிடர் நிதியையும், பல்வேறு துறைகளின் மூலமாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கும், சொத்துக்களை சீரமைக்கவும் அதிக அளவு நிதி மத்திய அரசால் அளிக்கப்பட்டிருக்கிறது என்பது மறுக்க, மறைக்க முடியாத உண்மை.

நாராயணன் திருப்பதி, பாஜக

கூகுளின் ஜெமினி ஏஐ அறிமுகம்!

google gemini - 2026
#image_title
  • கூகுளின் ஜெமினி ஏஐ அறிமுகம்!
  • சாட்ஜிபிடியை பின்னுக்கு தள்ளுமா?

ஜெமினி என்ற புதிய செயற்கை நுண்ணறிவு மாடல் ஒன்றை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகளில் புதிய உச்சமாக மாறியுள்ளது செயற்கை நுண்ணறிவு திறன்.

இதனை சாதாரண மக்களும் பயன்படுத்தும் விதமாக ஓப்பன் ஏஐ நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு சாட்ஜிபிடி எனும் செயலியை அறிமுகப்படுத்தியது. இது பயனாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தற்போது ஜெமினி என்ற புதிய செயற்கை நுண்ணறிவு மாடல் ஒன்றை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மூன்று வெர்ஷன்களில் கூகுள் நிறுவனம் ஜெமினி ஏஐ தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, அல்ட்ரா (Ultra), ப்ரோ (Pro), நானோ (Nano) என்ற மூன்று வெர்ஷன்களில் ஜெமினி ஏஐ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஜெமினி ஏஐ புகைப்படங்கள், ஆடியோ புரிந்துகொள்ளும் தன்மை கொண்டது. மேலும், சிக்கலான கணிதங்களை முடித்து வைக்கவும் உதவும். கணிதம், இயற்பியல், வரலாறு, சட்டம், மருத்துவம் என 57 பாடங்களின் சந்தேகங்களுக்கு தீர்வை கொடுக்கும். உலக அறிவு மற்றும் சிக்கலை தீர்க்கும் திறன் ஆகிய இரண்டுமே உள்ளது என்று கூகுள் கூறியுள்ளது.

மேலும், இந்த ஜெமினி ஏஐ-யால் கோடிங் (coding) எழுதவும் முடியும். மேலும், பைதான் (Python), ஜாவா (Java), சி++ (C++) மற்றும் கோ (G0) போன்ற கணினி மொழிகளை புரிந்து கொள்ளும் தன்மை கொண்டது. கேள்வி எந்த அளவிற்கு தெளிவாக உள்ளதோ ஜெமினி ஏஐ அளிக்கும் பதில்களும் அந்த அளவிற்கு தெளிவாக இருக்கும்.

இந்த ஜெமினி ஏஐ தொழில்நுட்பத்தை சேர்ச் (Search), ஆட்ஸ் (ADS), க்ரோம் (Chrome), டூயட் (Duet) போன்றவைகளில் கொண்டு வருவதே கூகுளில் திட்டமாகும். மேலும், இந்த அம்சம் இணையம் இல்லாத டிவைஸ்களில் வேலை செய்யும் என்று கூறப்படுகிறது.

17 ஆப்களை ப்ளேஸ்டோரில் இருந்து நீக்கிய கூகுள்!

google 1 - 2026
  • 17 ஆப்களுக்கு ஆப்பு வைத்த கூகுள்
  • போனில் உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு
  • பயனர்களுக்கு எச்சரிக்கை.

பயனர்களின் போனில் தனிப்பட்ட தகவல்களை உளவு பார்ப்பதாக 17 கடன் வழங்கும் ‘ஆப்’களை பிளேஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.
கூகுள் பிளேஸ்டோரில் பல்லாயிரக்கணக்கான ஆப்கள் இடம்பெற்றுள்ளன.

அதில், விதிகளை மீறும் ஆப்கள் மற்றும் சட்டவிரோதமான ஆப்களை கூகுள் நிறுவனம் நீக்குவது வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் தற்போது 17 ஆப்களை கூகுள், தனது பிளேஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.

இந்த ஆப்கள் அனைத்தும் பயனர்களுக்கு கடன் வழங்குவதாகும். மொத்தம் 18 கடன் ஆப்கள் குறித்து கூகுள் நிறுவனத்திற்கு புகார் வந்துள்ளது.

அதில் 17 ஆப்கள் பயனர்களுக்கு கடன் வழங்குவதுடன், போனில் உள்ள தகவல்கள், போட்டோக்கள், வீடியோக்கள் போன்றவற்றை உளவு பார்த்தது தெரியவந்தது.

உளவு பார்த்து சேகரித்து வைத்திருக்கும் தகவல்களை வைத்துக்கொண்டு பயனர்களுக்கு மிரட்டல் விடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக இந்த ஆப்கள் ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, வடகிழக்கு ஆசியா ஆகிய இடங்களில் வசிக்கும் மக்களை குறிவைத்து மிரட்டுகிறது. இதனையடுத்து 17 ஆப்களையும் பிளேஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.

மேலும், பயனர்களும் இந்த 17 ஆப்களை தங்கள் போனில் இருந்து நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

  • நீக்கப்பட்ட ஆப்கள்:
  1. AA Kredit
  2. Amor Cash
  3. GuayabaCash
  4. EasyCredit
  5. Cashwow
  6. CrediBus
  7. FlashLoan
  8. PréstamosCrédito
  9. Préstamos De Crédito-YumiCash
  10. Go Crédito
  11. Instantáneo Préstamo
  12. Cartera grande
  13. Rápido Crédito
  14. Finupp Lending
  15. 4S Cash
  16. TrueNaira
  17. EasyCash

யுபிஐ பண பரிவர்த்தனைக்கான உச்ச வரம்பு உயர்வு!

upi 1 - 2026

UPI பணப்பரிவர்த்தனைக்கான வரம்பை உயர்த்தி ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் மும்பையில் வெள்ளிக்கிழமை (டிச.8) இன்று நடைபெற்ற டிசம்பர் மாத நிதிக்கொள்கைக் குழுக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5-ஆவது முறையாக எந்தவித மாற்றமுமின்றி 6.5 சதவிகிதமாகத் தொடரும் என்றும், வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

2023-24 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.6 சதவிகிதம் வளர்ச்சி அடைந்து, வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது என்றும் ஆளுநர் சக்திகந்த தாஸ் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், மற்றொரு முக்கிய அறிவிப்பாக, கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகள் மூலமாக செய்யப்படும் சில குறிப்பிட்ட ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கான வரம்பு ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.  அதாவது மருத்துவமனைகள், கல்வி நிலையங்களில் தனிப்பட்ட நபர் ஒருவர் ரூ. 5 லட்சம் வரை யுபிஐ செயலி மூலமாக செலுத்தலாம் என்றும் இது யுபிஐ பயனர்களுக்கு பெரிதும் உதவும் என்றும் ஆர்பிஐ கூறியுள்ளது.